காதலாகும் 12:
திருமண நாள் அழகாக விடிந்தது…!
அதிகாலை முகூர்த்தம் என்பதால் மணமக்கள் இருவரும் நேரமே எழுந்து கிளம்பிக் கொண்டிருந்தனர்.அவர்களது குடும்ப வழக்கப்படி அனைத்து திருமணங்களும் அவர்களது வீட்டிலேயேதான் நடைபெறும்.பரந்து விரிந்து அரண்மனை போல் இருந்த வீட்டில் தாராளமாக ஒரு கல்யாணம் நடத்தலாம்.பரம்பரை பரம்பரையாக பல தலைமுறைகள் கண்ட வீடு அது.அதில் திருமணம் நடத்தினால் மணமக்கள் நீண்ட ஆயுளுடன் மக்கள் செல்வங்களுடன் குறைவில்லாமல் வாழ்வார்கள் என்பது அவர்களது நம்பிக்கை.
மேள வாத்தியங்களின் இன்னிசைக் கச்சேரி ஒருபுறம்..பட்டுப் புடவை சரசரக்க ஆளுக்கொரு வேலையாக அலைந்து கொண்டிருந்த பெண்களின் சலசலப்பு ஒருபக்கம். இதற்கிடையில் பந்தி போடப்படும் இடத்தில் சமையல் வேலைகளை கவனித்துக் கொண்டிருக்கும் ஆண்கள் என திருமணத்திற்குரிய அனைத்து விஷயங்களும் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.
கூடை கூடையாக கொட்டப்பட்டு வீடே பூக்களின் அலங்காரத்தில் ஜொலித்தது.
தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் பட்டு வேட்டி சட்டையில் மிக கம்பீரமாகத் தயாராகியிருந்தான் விஸ்வேஷ்வரன்.
‘பரவாயில்ல..வேட்டி சட்டை நமக்கு நல்லாத்தான் இருக்குது…’,கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தைப் பார்த்து எண்ணிக் கொண்டான்.
அவனை அழைத்துச் செல்வதற்க்காக ரகுவரனும் அவரது தம்பியும் வந்திருந்தனர்.
“போகலாமா மாப்பிள்ளை…?”,மேள தாளங்களுடன் வான வேடிக்கையும் சேர்ந்து கொள்ள மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு திருமணம் நடக்கும் வீட்டிற்குச் சென்றனர். யாழ்விக்குத் தங்கை முறையாகும் பெண் வந்து ஆரத்தி எடுக்க..ராஜ மரியாதையுடன் உள்ளே நுழைந்தான் விஷ்வா.
அவன் மணமேடையில் அமர்த்தப்பட அவனுக்குத் துணையாக யாழ்விக்கு தம்பி முறையாகும் ஒருவன் வந்து அருகில் அமர்ந்து கொண்டான்.ஐயர் கூறும் மந்திரங்களைத் திருப்பி உச்சரித்தபடி.. அவர் கூறும் சடங்குகளை செய்து கொண்டிருந்தான்.
சில நிமிடங்கள் கடந்திருக்கும். “அதோ..அக்காவும் வந்திட்டா..”தன்னருகில் அமர்ந்திருந்த பையனின் குரலில் அவனையும் அறியாமல் நிமிர்ந்து பார்த்தான் விஸ்வேஷ்வரன்.
பச்சை நிறத்தில் ஆரஞ்சு வண்ண பார்டர் வைத்த காஞ்சிபுரம் பட்டுப்புடவை அவள் மேனியை மிக அழகாய் தழுவியிருந்தது. சாதாரணமாக நகைகள் அணியாமல் முத்துக்கள் பதித்த குந்தன் செட் அணிந்திருந்தாள். மணப்பெண்ணுக்குரிய சர்வ அலங்காரம்.. இடையைத் தாண்டி நீண்ட கூந்தலில் சரம் சரமாய் மல்லிகைப்பூ அலங்கரித்திருந்தது.
உச்சி வகிட்டில் நெற்றிச் சூடியில் ஆரம்பித்த அவனது கண்களின் பயணம் வெண் பிஞ்சுப் பாதங்களைத் தழுவியிருந்த கொலுசில் வந்து நின்றது.முதல் முறையாக சர்வ அலங்காரங்களுடன் பட்டுப்புடவையில் அவளைக் காண்கிறான் அல்லவா..அந்த மயக்கம் அப்பட்டமாய் அவனது விழிகளில் தெரிந்தது.
‘அழகிதான்…’அவனது மனது சான்றிதழ் வழங்க..அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் தன் நிலைமையை உணர்ந்தவனாய் திரும்பிக் கொண்டான்.
தோழிகள் புடைசூழ குனிந்த தலை நிமிராமல் அடி மேல் அடியெடுத்து வைத்து நடந்து வந்தவள் அவனருகே அமர்ந்தாள்.இருவரும்
ஒருவரையொருவர் நிமிர்ந்து பார்த்துக் கொள்ளவில்லை.ஆனால்,மற்றவர்களின் அருகாமையை உணர்ந்தார்கள்.
“கெட்டி மேளம்…கெட்டி மேளம்…!!!”,
மேள வாத்தியங்கள் முழங்க..சுற்றியிருந்த அத்தனை பேரும் மனம் நிறைந்த ஆசியோடு அட்சதைகளைத் தூவ..பொன் மாங்கல்யத்துடன் கோர்க்கப்பட்ட மஞ்சள் கயிறை அவளது தந்தக் கழுத்தில் அணிவித்து மூன்று முடிச்சிட்டான் விஸ்வேஷ்வரன். தலை குனிந்து அவன் கட்டும் மாங்கல்யத்தை வாங்கிக் கொண்டாள் அந்த மங்கை.
இருவர் மனதிலும் காதல் இல்லை.ஆனால்,சொல்லவொண்ணா உணர்வுகள் நிரம்பியிருந்தன.அவளது தோளைச் சுற்றிக் கைகளை கொண்டு சென்று அவளது நெற்றியிலும்..உச்சி வகிட்டிலும் குங்குமம் வைக்கும் போதும் சரி..தான் கட்டிய மாங்கல்யத்தில் குங்குமம் வைக்கும் போதும் சரி..அந்த ஆண்மகனின் மனதில் பெரும் நிறைவு தோன்றியது.
பிறந்ததில் இருந்து தனியாகவே வளர்ந்தவன் அல்லவா..அப்படிப்பட்டவனுக்கு முதல் முறையாக கிடைத்த பந்தம் அவள்.தனக்கென ஒரு சொந்தம் இந்த உலகில் இருக்கிறது என்ற உணர்வே அவனுக்கு மகிழ்ச்சியுடன் கலந்த நிறைவைத் தந்தது.
அடுத்தடுத்த சடங்குகளை ஐயர் கூற கூற இருவரும் அமைதியாகவே செய்தனர்.மணமக்கள் சகிதமாக ரகுவரன் – காலாவதி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் போது பெற்றவர்களின் கண்கள் கலங்கி விட்டன.தங்களது ஒரே செல்ல மகளின் கல்யாணம் வெகு திருப்தியாக நடந்து விட்ட சந்தோஷம் அவர்களுக்கு.
காலை உணவை உண்டு விட்டு கோவில் கோவிலாக சென்று வந்ததிலேயே மணமக்கள் இருவரும் களைத்து விட்டனர். அது போக.. ஓயாமல் வந்து
கொண்டிருந்த உறவினர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி வாங்கியே ஒருவழியாகி விட்டனர்.
யாழ்விக்கோ எப்பொழுதடா தன்னை சிறிது நேரம் தனியாக விடுவார்கள்’ என்றாகி விட்டது.எப்படியோ நேரம் விரைய மாலை மங்கி இரவும் வந்தது.
குளித்து விட்டு வந்தவளை அலங்காரம் செய்கிறேன் பேர்வழி என்று பெண்கள் அணி அவளை சூழ்ந்து கொண்டது.அலங்காரம் செய்ததை விட அவர்கள் அவளை கிண்டல் செய்து ஒருவழியாக்கியதுதான் அதிகம்.
அவளுக்கு அப்படி எந்த உணர்வும் இல்லை போலும்…திருமணத்தைப் பற்றியே யோசிக்காதவள்.. முதலிரவைப் பற்றியா யோசித்திருக்கப் போகிறாள்..எனவே,அவள் சகஜமாகத்தான் இருந்தாள்.
விஸ்வேஷ்வரனோ அலங்காரம் செய்யப்பட்ட அறையில் தனித்து விடப்பட்டிருந்தான். மாடியில் இருந்த அந்த அறையின் தாழ்வரையின் முடிவில் மொட்டை மாடி இருந்தது.அவனும் முதலிரவைப் பற்றியெல்லாம் சிந்தித்திருக்கவில்லை.சொல்லப்போனால் அறையில் இருந்த அலங்காரங்கள் கூட அவனை பாதிக்கவில்லை.
சிறிது நேரம் மொட்டை மாடியில் உலாவலாம் என்ற எண்ணத்துடன் அங்கு சென்றான்.
மாடியில் நடை பயின்று கொண்டிருந்தவன் காதில் பெண்களின் சிரிப்பொலியும்..மெல்லிய கொலுசொலியும் வந்து விழுந்தது.
“செம அழகா இருக்கே டி… நேற்று நலங்கு வைக்கும் போதே மாப்பிள்ளை அந்தப் பார்வை பார்த்தாரு…!இன்னைக்கு உன்னை கடிச்சு திங்கப் போறாரு…”,யாழ்வியை அழைத்துக் கொண்டு வந்த பெண்களின் கூட்டத்தில் இருந்து ஒரு பெண் கூற, அங்கு கலகலவென்ற சிரிப்பொலி எழுந்தது.
‘அட போடி பைத்தியங்களா… நாங்க என்னமோ காதல்ல கசிந்து உருகி கல்யாணம் பண்ணிக்கற மாதிரி இப்படி கிண்டல் பண்றாளுங்க…’,மனதிற்குள்தான் நினைத்துக் கொண்டாள்.பின்னே..வெளியேவா சொல்ல முடியும்…?
“இங்கே பாருடி யாழ்வி…! மாப்பிள்ளை சொல்றதை கேட்டு நடந்துக்கோ..இது ஏன் இப்படி..அது ஏன் அப்படின்னு சும்மா நை நைன்னு இருக்க கூடாது…புரியுதா…?”,அவளுக்கு அத்தை முறையில் இருக்கும் நடுத்தர வயது பெண்மணி ஒருவர் அந்தரங்க ஆலோசனை கூற,
“அய்யோ அத்தை… இதோட ஆறாவது முறையா சொல்லிட்டீங்க..!உங்க மாப்பிள்ளை என்ன சொன்னாலும் கேட்டு நடந்துக்கிறேன்.. போதுமா…?”,என்றாள் வெடுக்கென்று.
அவளைக் கூறியும் குற்றமில்லை.கிராமத்தில் இந்த அந்தரங்க பேச்சு எல்லாம் சகஜம்தான். அப்பொழுது வரை அனைவரும் அள்ளி வீசிய ஆலோசனைகளுக்கு உம்..உம்’ என்று தலையாட்டிக் கொண்டுதான் இருந்தாள். விடாமல் ஆளாளுக்கு அதைப் பற்றியே அவளிடம் பேசவும் பொறுமை இழந்து கத்தி விட்டாள்.
மாடியில் நின்று கொண்டிருந்த விஸ்வேஷ்வரனுக்கு அனைத்தும் கேட்டது.அவன் இதழ்கடையோராம் புன்னகை வந்தமர்ந்தது.
“இதோ..இந்த துடுக்குத்தனம் தான் வேண்டாம்ங்கிறது…!எங்ககிட்டேயே இப்படி மல்லுக்கு நிற்கிற… மாப்பிள்ளையை எவ்வளவு பாடு படுத்துவியோ தெரியல…”,அந்த அத்தை முறையுள்ளவர் மீண்டும் புலம்ப ஆரம்பிக்க,
“வேணும்ன்னா ரூம்ல ஓரமா இடம் ரெடி பண்ணித் தர்றேன்…மறைஞ்சு நின்னு பார்க்கிறியா…?”,இவள் கூற கேட்டுக் கொண்டிருந்தவனின் புன்னகை விரிந்தது.
‘இவ பண்ணினாலும் பண்ணுவாள்…’,அவன் ரகசியமாய் நினைத்துக் கொண்டான்.
“நீ பண்ணினாலும் பண்ணுவ டி…!கொஞ்சம் வாயை அடக்கிட்டு செயல்ல உன் வீரத்தைக் காட்டு…!”,அந்தப் பெண்மணிகள் கடைசி முறையாக அவள் காதில் ஓதி விட்டு அறை வாசலில் அவளை விட்டு விட்டு சென்று விட்டனர்.
‘ஷப்பா..ஒருவழியா கிளம்புனாங்களே…’ஆசுவாசப் பெருமூச்சுடன் அறைக்குள் அடியெடுத்து வைத்தாள் யாழ்வி.
சரம் சரமாய் தொங்க விடப்பட்ட பூக்களுக்கு மத்தியில் மஞ்சத்தை தேட வேண்டியிருந்தது. உள்ளே நுழைந்து டீ பாயில் பால் சொம்பை வைத்தவள் ‘இவர் எங்கே?’, என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.
தன் முதுகுக்குப் பின்னால் அறைக்கதவை அழுந்த மூடித் தாளிடும் சத்தம் கேட்டது.திரும்பிப் பார்த்தவள்,”மொட்டை மாடியில இருந்தீங்களா…?”,என்றாள்.
‘ஒருவேளை..பேசினது எல்லாம் கேட்டு இருக்குமோ…?’, மனம் படபடவென அடித்துக் கொள்ள,
நமட்டுச் சிரிப்புடன் அவளை நெருங்கியவனின் முகமே கூறியது, ‘நான் அனைத்தையும் கேட்டு விட்டேன்…’ என்று.
“அட்வைஸ் பலமோ…?”,அவளருகே நெருங்கியவன் புருவங்களை உயர்த்த..அவளுக்குத்தான் வெட்கம் பிடுங்கித் தின்றது.
“ஹி..ஹி…!கிராமத்துல இதெல்லாம் சகஜம் தான்…!”,என்றாள் அசடு வழிந்தபடியே.
“அது சரி…”,அவன் திடீரென்று அவன் பின்னால் யாரையோ தேடுவதைப் போல எட்டி எட்டி பார்க்க,
“யாரைத் தேடறீங்க…?’, பின்னால் திரும்பி பார்த்தபடி அவனிடம் வினவினாள்.
“இல்ல..உங்க கிராமத்துல எந்த சடங்கையும் தனியா செய்யக்கூடாது… எல்லோரையும் கூப்பிட்டுத்தான் செய்யணும்ன்னு சொன்னியே…அதுதான் இங்கேயும் எல்லோரையும் கூட்டிட்டு வந்தாயோன்னு பார்த்தேன்…!”,என்றான் சிரிக்காமல்.
அவனையே இமைக்காது முறைத்தவள்,”உங்க ஸ்டாமினா மேல அவ்வளவு நம்பிக்கையா…?”, பட்டென்று கேட்டு விட்டாள்.
முதலில் அவன் வினவியது அவனுக்குப் புரியவில்லை.பிறகுதான் அவள் கூறியதன் அர்த்தம் புரிபட..அதிர்ந்து போய் ‘ங்கே’ என விழித்தான்.
அதிர்ச்சியுடன் அவன் விழிப்பதை பார்த்த பிறகுதான் அவளுக்கு தான் என்ன சொன்னோம் என்பதே நினைவுக்கு வந்தது.இவ்வளவு நேரம் தோழிகளிடம் துடுக்குத்தனமாக வாயாடிய நினைவில் அவனிடமும் வாய் விட்டு விட்டாள்.
அவனுக்கு அதிர்ச்சிதான்.இப்படி வெளிப்படையாக பேசுவாள் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.
‘சரி..யாழ்வி…சமாளிப்போம்…!’, தலையை சொரிந்தபடி திரும்பியவளின் பார்வையில் பால் சொம்பு வந்து விழ, “பால்.. பால் குடிக்கறீங்களா…?”,என்று அபத்தமாக கேட்டு வைத்தாள்.
“வாட்….?கம் அகெய்ன்…?” அவன் மேலும் அதிர்ச்சி அடைந்தவனாய் வினவ,
“அது..பால்…”அவள் திணறியபடியே பால் சொம்பை சுட்டிக் காட்டினாள்.
‘உஃப்’ உதட்டைக் குவித்து தலையை ஆட்டிக் கொண்டவன்..அவளைக் கடந்து சென்று கட்டிலில் அமர்ந்தான்.
கையைப் பிசைந்து கொண்டு அவஸ்தையாய் நின்றிருந்தவளை நிமிர்ந்து பார்த்தான் அவன்.சந்தன நிறப் புடவையில் கரும்பச்சை வண்ண பார்டர் வைத்த பட்டுப்புடவை அணிந்திருந்தாள்.எளிமையான அலங்காரம்தான்.கழுத்தில் கூட உறுத்தாத வகையில் மெல்லிய நகைகள்தான் இடம் பிடித்திருந்தன.தலை நிறைய மல்லிகைப்பூ…!
மோகத்தைத் தூண்டுவதற்கு தேவையான அலங்காரம்தான்.ஆனால், அவனுக்குத்தான் அப்படி எந்த உணர்வும் தூண்டப்படவில்லை.
அவளது பார்வை மீண்டும் பால் சொம்பின் மீது விழ, “ஏன் அதையே பார்த்துட்டு இருக்கிற…?”,அவன் கேள்வியெழுப்பினான்.
“இல்ல..உங்களுக்குப் பால் வேண்டாம்ன்னா நான் குடிக்கட்டுமா…?பாதாம், பிஸ்தா..குங்குமப்பூ.. பனங்கற்கண்டுன்னு அதைக் காய்ச்சும் போதே எனக்கு நாக்குல எச்சில் ஊறுச்சு…!”,அவளது இதழ்கள் சப்புக் கொட்டின.
அவள் விவரித்ததில் அவனுக்கே குடிக்க வேண்டும் போல் ஆகிவிட்டது போலும்…கை நீட்டி சொம்பை எடுத்தவன் மடமடவென்று தன் வாயில் சரித்துக் கொள்ள,
‘விட்டால் எல்லாத்தையும் குடிச்சிடுவான் போல..’,மனதிற்குள் எண்ணியவள் அவனிடமிருந்து பால் சொம்பை பறித்தாள்.
“போதும்.. போதும்…!எனக்கும் கொஞ்சம் வையுங்க…!”,கத்தியபடியே அவனிடமிருந்து பிடுங்கியவள் அதை தன் வாயில் ஊற்றிக் கொண்டாள்.
“செம டேஸ்ட்டல்ல…!”.என்ற புகழாரம் வேறு.
“ம்ம்…”அவளை ஒரு மார்க்கமாக பார்த்தபடி தலையாட்டியவன்,”சரி…நான் தூங்கறேன்…குட் நைட்…!”,என்றபடி படுக்கையில் சாய்ந்தான்.
“எனக்கும்தான் செம டயர்ட்…!குட் நைட்…!” கூறியவள் அவனுக்கு மறுபுறம் வந்து படுத்துக் கொண்டாள்.
அவன் படுக்கவும் இவன் எழுந்து கட்டிலை விட்டு இறங்க,”இட்ஸ் ஓகே…! நீங்க என் பக்கத்துலேயே படுத்துக்கலாம்….இந்த சினிமாவுல எல்லாம் காண்பிக்கிற மாதிரி நீங்க கீழேயெல்லாம் படுக்க வேண்டிய அவசியமில்லை…!” என்றாள் எழுந்து அமர்ந்தவாறு.
அவளைத் திரும்பிப் பார்த்தவன் ஒன்றும் பேசாமல் நடக்க,”உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்குது ஏ.சி.பி சார்…!ஐ நோ யூ ஆர் அ ஜென்டில்மேன்…!”,அவள் பாட்டுக்கு மீண்டும் பேச,
திரும்பிப் பார்த்து தனக்குத் தானே தலையாட்டிக் கொண்டவன்..நடந்து சென்று விளக்கின் சுவிட்சை நிறுத்தி விட்டு வந்து கட்டிலில் படுத்துக் கொண்டான்.
‘ஓ.. சுவிட்ச் ஆஃப் பண்ணத்தான் போனாறா…நாமதான் தேவையில்லாம பேசிட்டோமோ…’, அசடு வழிந்தபடியே அவள் அமர்ந்திருக்க,
“என்னால் கீழேயெல்லாம் படுக்க முடியாது…!உனக்கு வேணும்ன்னா நீ போய் கீழே படுத்துக்கோ…!”,அவளுக்கு முதுகு காட்டி படுத்திருந்தவன் உரைக்க,
“என்னாலேயும் முடியாது… பெட்ல படுத்தால்தான் எனக்குத் தூக்கம் வரும்…!”,என்றாள்.
“அப்போ..உன் திருவாயை கொஞ்சம் மூடிட்டு படுத்து தூங்கறையா…?”,
‘ம்க்கும்..ரொம்பவும்தான்…!’, வாயைக் கோணி சலித்துக் கொண்டவள் ‘தொப்’பென்று படுத்த விதத்தில் கட்டிலே ஆடியது.
திரும்பிப் படுத்திருந்தவன் மெலிதாக சிரித்துக் கொண்டான்.
இருவரும் அருகருகில் படுத்திருந்தாலும்..அது அவர்களுக்கான முதலிரவு என்ற எண்ணமோ.. ஒருவரது உடலை மற்றவர் அறிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையோ இல்லாமல் நிச்சலனமாய் நித்திரை கொள்ள ஆரம்பித்தனர்.
இவர்கள் இருவரையும் இணைத்து வைத்த காதலோ.. ஒரு மூலையில் தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தது.
‘இதுக ரெண்டும் எப்போ காதலிச்சு..எப்போ குடும்பம் நடத்தி…ஹ்ம்ம்..விளங்கிடும்…!’, சலிப்பாய் முணுமுணுத்தும் கொண்டது.
தொடரும்…
