காதல் இதுதானா ? – காதல் 14

காதலாகும் 14:

விஸ்வேஷ்வரன் எப்பொழுதும் போல் பணிக்கு கிளம்ப ஆரம்பித்திருந்தான்.அந்த வீட்டில் மூன்று அறைகள் இருந்தாலும் அவள் அவனுடன் தான் தங்கியிருந்தாள்.தனி அறையில் தங்க வேண்டும் என்று அவளும் எண்ணவில்லை.அவனும் அவளிடம் எதைப் பற்றியும் கூறவும் இல்லை.

காலை நேரம்.காக்கி உடையுடன் கம்பீரமாக கீழே இறங்கி வந்தவனை சோபாவில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள்.எப்பொழுதும் காலை உணவை துரைதான் அவனுக்கு வாங்கி வந்து கொடுப்பார். ‘அதுதான் திருமணம் ஆகி விட்டதே..இனி வீட்டில் சாப்பிட்டுக் கொள்வார்..’,என எண்ணியபடி அன்று அவர் காலை உணவு வாங்கி வந்திருக்கவில்லை.

உணவு மேசையை பார்த்தவனுக்கு அவர் உணவு வாங்கி வராதது தெரிய..யாழ்வியை பார்த்தான். வேலைக்குச் செல்லும் கணவனுக்கு சமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் அவளுக்கு இல்லை போலும்.ரசித்து ருசித்து காபியை உறிஞ்சிக் கொண்டிருந்தாள்.

அவன் அப்பொழுதுதான் கவனித்தான்..அவள் இரவு உடையுடன் அமர்ந்திருப்பதை.

“யாழ்வி…நீ ஆபிஸ்க்கு போகலையா…?”,

“இல்ல…நான் ஒரு வாரம் லீவ் போட்டிருக்கிறேன்…!”,

“இங்கே இருந்து என்ன பண்ண போற…ஆபிஸ்க்கு கிளம்ப வேண்டியதுதானே…?”,

“வீட்டைக் கொஞ்சம் ஒழுங்குபடுத்தணும்…”,

“ஏன்…நல்லாத்தானே இருக்குது…!”,அவனது பார்வை சுற்றும் முற்றும் வீட்டை அலசியது.

அவனது பார்வையில் அது நன்றாகத்தான் இருந்தது. ஆனால்,பெண்ணவளின் பார்வையில் அது சற்று அலங்கோலமாக இருந்தது. வீட்டைப் பொறுத்தவரை பெண் என்பவள் பார்க்கும் பார்வை வேறு..ஆண் பார்க்கும் பார்வை வேறு…!

“இல்ல..எனக்குப் பிடித்த மாதிரி கொஞ்சம் மாற்றியமைக்கணும்…! உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லையே…?”,காபியை குடித்து முடித்து டீ பாய் மேல் வைத்தவள் எழுந்து அவனருகே சென்றாள்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல..நீ என்னமோ பண்ணு…!நான் கிளம்பறேன்…!”,அவன் வெளியேறப் போக,

“ஒரு நிமிஷம்…”,அவனைத் தடுத்தாள் அவள்.

“அது.. ஹெல்ப்புக்கு ஆள் வேணும்…யாராவது கிடைப்பாங்களா…?”,ஏனோ தன் தேவையை அவனிடம் கேட்பதற்கு அவளுக்குத் தயக்கமாக இருந்தது.

“ம்..துரைகிட்ட சொல்லி ரெடி பண்ண சொல்றேன்…!”, என்றவன் வெளியேறி விட்டான்.

அவனை சாப்பிட வைத்து அனுப்ப வேண்டும் என்று இவளும் நினைக்கவில்லை.அவனும் அவளிடம் அதை எதிர்பார்க்கவில்லை.

அவன் கிளம்பியவுடன் இவள் தனது வேலையை ஆரம்பித்து விட..சில மணி நேரங்களிலேயே நடுத்தர வயது பெண்மணி ஒருவர் துரை அனுப்பியதாக கூறிக் கொண்டு வந்தார்.

இருவருக்கும் மாலை வரை வேலை நெட்டி முறித்தது.சோபாவை தனக்குப் பிடித்த விதத்தில் மாற்றிப் போட்டவள்..சுவரில் மாட்டியிருந்த ஓவியங்களையும் எடுத்து துடைத்து மாட்டினாள். இவளுக்கு சீர் வரிசையாக வந்த பொருட்களில் உபயோகப்படுத்துவதை மட்டும் வெளியே வைத்தவள் மற்ற அனைத்தையும் கீழே இருந்த ஒரு அறையில் ஒழுங்குபடுத்தி வைத்து விட்டாள்.

வெளியே தோட்டத்திலும் சிறு சிறு மாற்றங்களை செய்தவள் மாலை ஆகவும் அந்தப் பெண்மணியை அனுப்பி விட்டு வீட்டிற்குள் வந்தாள். இப்பொழுதுதான் ஏனோ வீடே வீடாகத் தெரிந்தது அவளுக்குத் தெரிந்தது.

‘சூப்பர் யாழ்வி…’ தன்னைத் தானே மெச்சிக் கொண்டவள் மேலே தங்களது அறைக்கு வந்து ஒரு குளியலை போட்டு விட்டு ஆகாய வண்ணத்திலான பேண்ட் சர்ட் மாடல் இரவு உடையை அணிந்தபடி கீழே வந்தாள்.

பசி வேறு வயிற்றைக் கிள்ளியது.சமையலறைக்குள் நுழைந்து பிரிட்ஜை திறந்து துளாவியவளின் கண்களில் மேகி பாக்கெட் தென்பட.. அதை எடுத்து சமைக்க ஆரம்பித்தாள்.

சுட சுட மேகியை ஒரு கப்பில் போட்டு எடுத்துக் கொண்டு அவள் வந்து சோபாவில் அமரவும்..அவளது கணவன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

“வந்துட்டீங்களா…?”,சோபாவில் அமர்ந்தபடியே அவனிடம் வினவியவள் தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள்.

வீட்டை சுற்றி நோட்டமிட்டவனின் புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்ந்தன.அவனது இதழ்கள் மெச்சுதலாய் புன்னகையை சிந்தின.

அதைக் கண்டு கொண்டவள்,”இப்போ எப்படி இருக்குது வீடு…?”,என்று கேள்வியெழுப்பினாள்.

“சூப்பர்…!”,அவளைப் பாராட்டியவன், “நான் போய் குளிச்சிட்டு வர்றேன்…!”,என்றபடி மேலே விரைந்தான்.

குளித்துவிட்டு வந்தவனுக்கும் பசி தன் இருப்பைத் தெரியப்படுத்த..உணவு மேசைக்கு சென்று ஆராய்ந்தான்.மதியம் சாப்பிட்டதோடு சரி..அதற்கு பிறகு காபி கூட குடிக்கவில்லை. ஏதோ பரவாயில்லை..அவனது சகதர்மிணி அவனுக்கும் சேர்த்து மேகியை கிளறி வைத்திருந்தாள்.

‘இது நமக்குமா…? இல்ல..அவளுக்கு மட்டும் ப்ரிப்பேர் பண்ணிகிட்டாளா…?’,அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் குரல் கொடுத்தாள்.

“மேகி செஞ்சு வைச்சிருக்கிறேன்..சாப்பிடுங்க…!”,

அவனும் ஒரு கப்பில் போட்டு எடுத்து வந்து அவளருகில் சோபாவில் அமர்ந்தான்.

இருவருமே தொலைக்காட்சியில் மூழ்கியிருந்தனர்.

‘வேதா பாட சாலை’ பற்றிய விளம்பரம் வர..இருவருக்குமே சக்ரவர்த்தியின் நினைவு வந்தது.

“வேத வர்ஷன் நல்லபடியாகத்தான் இன்ஸ்டிடூயூஷன்ஸ்சை நடத்துவார் போல…! நல்லவேளை..அப்பாவை போல மகன் இல்லை…!”,யாழ்வி பேச்சை ஆரம்பிக்க,

“ம்..நல்லபடியா நடத்தற மாதிரிதான் தெரியுது…!பட்..எந்த புற்றுல எந்த பாம்பு இருக்குன்னு சொல்ல முடியாது இல்லையா…?”,ரிமோட்டை எடுத்து நியூஸ் சேனலை மாற்றியபடி கூறினான் விஷ்வா.

“திவ்யா கொலை சம்பந்தமா ஏதாவது எவிடென்ஸ் கிடைச்சுதா…?”,

“இல்ல…!சக்ரவர்த்தி மேலதான் சந்தேகம் இருக்குது..பட் அவரும் ஜெயில்ல இருக்கிறாரு…!வேத வர்ஷன்.. நான் பார்த்த வரைக்கும் அவன் மேல எந்த சந்தேகமும் வரல…!அன்னைக்கு உன்னை கடத்திட்டுப் போக ட்ரை பண்ணினது யாரு…உனக்கு யார் மேலேயாவது சந்தேகம் இருக்குதா…?”,

“நான் அவனுகளை பார்த்தது கூட கிடையாது…!என்னைப் பழி வாங்கற அளவுக்கு எனக்கு எதிரி யாரும் இல்லையே…”,அவள் உதட்டைப் பிதுக்கினாள்.

“நம்ம ரெண்டு பேருடைய எதிரியும் ஒருத்தனாகத்தான் இருக்கும்ங்கிறது என்னுடைய கெஸ்…!நீ தப்பிச்ச உடனே..மிஸ்ஸான என் மொபைலை வைச்சு எனக்கு ஸ்கெட்ச் போட்டு இருக்காங்க…!ஐ ஆம் டேம் ஷ்யூர்…அவனுகளுடைய குறி நாம ரெண்டு பேரும் தான்…!”,

இலகுவாக அவன் கூற அவளுக்குத்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த மேகி தொண்டைக்குள் அடைத்த உணர்வு.

“என்னங்க சொல்றீங்க…?அப்போ..மறுபடியும் என்னை கடத்த ட்ரை பண்ணுவாங்களா…?”,

“மே பி…பண்ணலாம்…!எதுக்கும் ஜாக்கிரதையா இரு…!”,அவள் பயப்படுவதை பார்த்தபடியே அவன் மேலும் பீதியை கிளப்ப,அவள் திருதிருவென விழித்தாள்.

“அப்போ..நாளையில் இருந்து நான் ஆபிஸ்க்கு போகணும்..என் பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணுங்க…!”,என்றாளே பார்க்கலாம்.

“வாட்…?”,

“என்னுடைய உயிருக்கு யாரு கேரண்டி கொடுக்கிறது…ஒழுங்கா பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணுங்க…!”,அவள் தன் பிடியிலேயே நின்றாள்.

“உனக்காக எல்லாம் போலீஸ் அரேஞ் பண்ண முடியாது…”,

“அப்போ..என் சேஃப்டி..?”,

“அதுதான் உனக்கு தற்காப்பு கலையெல்லாம் தெரியுமே..அப்புறம் ஏன் பயப்படற…?’,அவன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மேகியை மொக்குவதிலேயே குறியாய் இருந்தான்.

“அதுதான்.. அன்னைக்கு யூஸ் ஆகாம போயிடுச்சே…”,அவள் முணுமுணுக்க,

“எதுவுமே யூஸ் ஆகாம போகாது யாழ்வி…!முறையா உனக்கு அதை உபயோகப்படுத்த தெரியலைன்னு சொல்லு…!”,

“எப்படி உபயோகப்படுத்தணும்…?”,

“எதிராளி நம்மைத் தாக்கறதுக்கு முன்னாடியே நாம அவனைத் தாக்கிடணும்…!ஒருவேளை, ஒரு இக்கட்டான சூழ்நிலையில நாம எதிரிகிட்ட மாட்டிக்கிட்டால் கூட..அவனுடைய சென்சிடிவ் பார்ட்ஸை தாக்கியாவது நாம தப்பிக்க பார்க்கணும்…டூ யூ அண்டர்ஸ்டாண்ட்…?”,அவன் பாட்டிற்கு பாடம் நடத்தி விட்டான்.

“வாட்…?”,அவளுக்குத்தான் ஒரு மாதிரியாகி விட்டது.

“யெஸ்…இதுல வெட்கப்பட எல்லாம் ஒண்ணும் இல்லை…!நாம தப்பிக்கணும்..அவ்வளவுதான்…!”,போலீஸ்காரன் அல்லவா..அவனது அணுகுமுறை அப்படித்தான் முரட்டுத்தனமாக இருந்தது.

அவள் முகம் அப்பொழுதும் தெளியாமல் இருக்கவும்,”வேணும்ன்னா ட்ரையல் காண்பிக்கட்டுமா…?”,என்று வேறு கேட்டு வைத்தான்.

“வாட்…?”,அவள் அதிர்ந்து விழிக்க,

“தெரியாததை கேட்டு தெரிஞ்சுக்கலாம். தப்பில்லை…!”,என்றான்.

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்…!”,அவன் சாப்பிட்டு வைத்த கிண்ணத்தையும் எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் விரைந்து விட்டாள் அவள்.

நாட்கள் ஓட..இருவரும் அலுவலகத்திற்கு கிளம்பி செல்ல ஆரம்பித்திருந்தனர்.திருமணத்திற்கு முன்பு அவள் இருந்த அப்பார்ட்மென்ட்டை காலி செய்திருந்தாள். அங்கிருந்த பொருட்களை அவளது தோழி ஒருத்தி கேட்கவும் அவளுக்கு கொடுத்து விட்டாள்.

முன்பே அவள் காலை உணவை மட்டும்தான் வீட்டில் சமைத்து சாப்பிடுவாள். அதுவும் என்ன..ப்ரெட் டோஸ்ட்..சாலட்..ஆம்லெட் என்று சாப்பிட்டு விட்டு ஓடி விடுவாள். மதியம் அலுவலக கேன்டீனில் சாப்பிட்டு விடுவாள்.பெரும்பாலும் இரவு வீட்டில் சமைத்துக் கொள்வாள். ஓரிரு நாட்கள் அலுவலகத்தில் இருந்து வரும் போதே ஹோட்டலில் வாங்கி வந்து விடுவாள்.

திருமணத்திற்குப் பிறகும் அதே வாழ்க்கை முறையை பின்பற்றினாள்.காலையில் தாமதமாக எழுந்து எதையாவது உண்டு விட்டு அரக்கப் பறக்க ஓடி விடுவாள். தனக்கு கணவன் என்று ஒருவன் இருக்கிறான்..அவனையும் தான்தான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது எல்லாம் அவள் மண்டையில் உரைக்கவே இல்லை.என்னவொரு மாற்றம் என்றால்..இரவு மட்டும் இருவருக்கும் சேர்த்து சமைத்து வைத்தாள்.

அவனும் எதையும் கண்டு கொள்ளவில்லை. முதலில் துரை அவனுக்கு காலை உணவை வாங்கி வந்து தருவார். இப்பொழுது செல்லும் வழியில் ஒரு ஹோட்டலில் அவன் உண்டு விட்டு சென்று விடுகிறான். மதிய உணவை துரை வாங்கி வந்து கொடுத்து விடுவார்.அதுவும் சில சமயங்களில் வேலைப்பளு காரணமாக அவன் உண்ணாமல் இருந்து விடுவதும் நடக்கும்.

திருமணத்திற்குப் பிறகும் அவன் இதே வாழ்க்கை முறையை பின்பற்ற துரைதான் குழம்பிப் போனார். திருமணம் முடிந்து விட்டது..அவரை கவனிக்க ஆள் வந்து விட்டது.. இனியாவது வீட்டு சாப்பாடை சாப்பிடட்டும்…,என்று எண்ணியிருந்தவருக்கு யாழ்வியின் இந்த மேம்போக்கு தன்மை வருத்தத்தைத்தான் கொடுத்தது.

அவனது நலனின் மீது அக்கறை கொண்டவரால் அமைதியாக இருக்கவும் முடியவில்லை.அவனிடம் ஏன் வீட்டில் சமைக்கவில்லையா…?’ என்று கேட்கவும் பயம்.எனவே,அமைதியாக நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அன்றும் அப்படித்தான்…!அவனுக்கான மதிய உணவை வாங்கி வந்தவர் அவனது அறையில் வைக்க போக,ஏதோ அலுவலில் மூழ்கியிருந்தவன் நிமிர்ந்து பார்த்தான்.

அதே ஹோட்டலின் சாப்பாடு எனவும் அவனுக்கு சற்று சலிப்பாக இருந்தது போலும்.

“துரை…! இன்னைக்கு எனக்கு சாப்பாடு வேண்டாம்…எடுத்துட்டுப் போங்க…!”,என்றான்.

“ஏன் சார்…?”,அவர் தயங்கி நிற்க,

“தினமும் ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு வயிறு ஒரு மாதிரி இருக்குது துரை…!இன்னைக்கு ஃபுரூட்ஸ் மட்டும் எடுத்துக்கிறேன்…!இந்த சாப்பாட்டை யாருக்காவது கொடுத்திடுங்க…!”,அவன் கூற அவருக்கு பாவமாக போய்விட்டது.

“ஓகே சார்…”தலையாட்டி விட்டு வந்தாலும் ‘என்ன நடந்தாலும் சரி..யாழ்வியிடம் இதைப் பற்றி பேசியே ஆக வேண்டும்…’,என்ற எண்ணம் எழுந்தது.

அதன்படி அன்று இரவே அவளிடம் பேசினார்.

விஸ்வேஷ்வரனை வீட்டில் இறக்கி விட்டு விட்டு அவர் கிளம்ப முனைந்த போது யாழ்வி வெளியே வந்தாள்.

“வாங்க துரை அண்ணா…!”,அவரைக் கண்டால் அவள் சிறிது நேரம் பேசிக் கொண்டு நிற்பாள்.எனவே,’அவர்கள் பேசட்டும்’ என்று விஷ்வா உள்ளே சென்று விட..’இதுதான் சரியான தருணம்’ என எண்ணிக் கொண்டவர்,

“எப்படி இருக்கீங்க ம்மா…?”,அவளிடம் பேசியபடியே தேங்கினார்.

“குழந்தைகளை அழைச்சிட்டு ஒருநாள் வீட்டுக்கு வாங்க அண்ணா…”,அவள் பேசிக் கொண்டிருக்க,

“கண்டிப்பா வர்றேன் ம்மா…!”,என்றவர் சற்றுத் தயங்கி,”யாழ்வி ம்மா..உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்…”,என்றார் மெதுவான குரலில்.

“சொல்லுங்க அண்ணா…!”,

“அது வந்து..உங்க அப்பா ஸ்தானத்துல இருந்து நான் இதை சொல்றதா நினைச்சுக்கோங்க ம்மா…!முதல்ல மாதிரி நீங்க தனி மனுஷி இல்லை…இப்போ உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு…!அவரையும் சேர்த்து நீங்கதான் கவனிச்சுக்கணும்…! முதல்லதான் அவரு தனி மனுஷன்..கவனிக்க ஆள் இல்லாம ஹோட்டல்ல வாங்கி சாப்பிட்டுட்டு இருந்தாரு… இப்போ நீங்க வந்த பிறகும் அவரு வெளியில சாப்பிட்டா அது நல்லாயிருக்காது…!

நாலு பேர் என்ன சொல்லுவாங்க அப்படிங்கறதை விட..நீங்களே யோசிச்சுப் பாருங்க ம்மா…! இன்னைக்கு கூட ‘ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு வயிறு ஒருமாதிரி இருக்குதுன்னு’ சாப்பாடே வேண்டாம்ன்னு சொல்லிட்டாரு…!நிறைய நாள் வேலைப்பளுவுக்கு நடுவுல சாப்பிடாமலேயே இருந்திடுவாரு…! இனிதான் நீங்க வந்துட்டீங்களே.. கொஞ்சம் அவரை கவனிக்கலாமே ம்மா…! பாவம் மனுஷன்.. பிறந்ததில் இருந்து தனியாவே வளர்ந்திட்டாரு.. இப்போ அவருக்குன்னு ஒரு உறவு கிடைச்சிருக்கு… இவ்வளவு நாள் அவரு இழந்ததையெல்லாம் மனைவிங்க மனைவிங்கற உறவு மூலமா திருப்பிக் கொடுக்க பாருங்கம்மா…!”,நீளமாக பேசி முடித்தார் அவர்.

அவள்தான் அதிர்ந்து போய் நின்றாள்.இப்படியொரு கோணத்தில் அவள் சிந்திக்கவே இல்லை.அவர் கூறியது அனைத்தும் எவ்வளவு உண்மை என்பது அவளுக்குப் புரிந்தது. முதன் முதலாக அவள் மனதில் எதுவோ உடைந்து ஓடியது.கணவனின் பக்கம் நின்று சிந்திக்கும் போது தான் எவ்வளவு பெரிய தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பது புரிய வர..இதயத்தை கசக்கிப் பிழியும் உணர்வு.

‘இனி அவனை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்..’அவளுக்குள் இருக்கும் தாய்மை உணர்வு வெளிவர,கண்களிலும் இரு சொட்டுக் கண்ணீர்.

அவளது கண்கள் கலங்கி விட்டதைக் கண்டவருக்கு பதட்டம் வந்து ஒட்டிக் கொண்டது.

“அய்யோ..அழாதீங்க ம்மா…!நான் ஏதாவது தப்பா பேசியிருந்தால் மன்னிச்சிடுங்க…!உங்க அப்பா இங்கே இருந்திருந்தாலும் இதைத்தான் சொல்லியிருப்பாரு…!”,

“இல்லைண்ணா…!ரொம்ப சரியாகத்தான் சொல்லியிருக்கீங்க…!இனி அவரை பார்த்துக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது.. ரொம்ப தேங்க்ஸ் அண்ணா…!”,நெகிழ்ச்சியுடன் அவள் கூற ‘இனி அனைத்தும் சரியாகி விடும் ‘என்ற திருப்தியுடன் அவர் அகன்றார்.

இரவு உணவாக உப்புமா சமைத்திருந்தாள்.இவள் உள்ளே வரும் போது உணவு மேசையில் தான் துழாவிப் கொண்டிருந்தான்.’பசிக்கும் போல’ அதைப் பார்க்கும் போது இவளுக்குப் பாவமாக இருந்தது.

“உப்புமா சமைச்சிருக்கிறேன்…சாப்பிடறீங்களா…? இல்லை வேற ஏதாச்சும் சமைச்சு கொடுக்கட்டுமா…?”,முதல் முறையாக கணவனின் பசியறிந்து வினவினாள்.

அவனுக்கும் வித்தியாசமாக இருந்தது போலும். நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்தான்.

“இல்லல்ல… இதுவே போதும்…!”,தட்டில் உப்புமாவை எடுத்து போட்டவன், “உனக்கு…?”,என அவளை ஏறிட்டாள்.

ஏனோ அவளுக்கு உணவு இறங்கும் என்று தோன்றவில்லை.இவ்வளவு நாட்கள் தான் உண்டு..தனக்கு சாப்பாடு உண்டு என்று மேம்போக்காய் இருந்த தன் செய்கையை எண்ணி அவளுக்குள் குற்றவுணர்வு உண்டாயிற்று.அவள் கண் முன்னால் பார்த்து பார்த்து தன் தந்தைக்குப் பரிமாறும் அன்னை வந்து போனார்.

“எனக்கு எதுவும் வேண்டாம்…!”,உரைத்தவள் படுக்க சென்று விட்டாள்.

முதல் முறையாக கணவனின் நிலையிலிருந்து கணவனுக்காக யோசிக்க ஆரம்பித்திருந்தாள்.தாம்பத்திய வாழ்க்கையின் முதல் அடியை வெற்றிகரமாக எடுத்து வைத்திருந்தாள். தன் இணைக்காக தான் சிந்திப்பது தான் அதன் முதல் படி.பெண்ணவள் வெற்றிகரமாக அதை செயல்படுத்தியிருக்க.. பார்ப்போம் ஆணவன் எப்பொழுது தாம்பத்திய பாடத்தை படிக்க ஆரம்பிப்பான் என்று…!

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page