காதலாகும் 15:
படுக்கையறையின் பால்கனி வழியாக சூரியனின் மென் கிரணங்கள் உள்ளே வந்து கொண்டிருந்தன. விஸ்வேஸ்வரன் உடற்பயிற்சியில் மூழ்கியிருக்க..அவனது மனையாளோ தலையணையை கட்டிப் பிடித்துக் கொண்டு உறக்கத்தில் மூழ்கியிருந்தாள்.
அன்று கிராமத்தில் அவன் மேல் படுத்து ஜம்பமாக தூங்கிய சம்பவத்திற்குப் பிறகு அவள் உஷாராகி விட்டாள். இருவருக்கும் நடுவில் நீளமாக தலையணையை அடுக்கி வைத்து விடுவாள்.
‘இது எதுக்கு…?’,என்பதைப் போல் பார்த்தவனிடம்,”இதைத் தாண்டி நான் வர மாட்டேன்…!நீங்க நிம்மதியா தூங்கலாம்…!”,என்று வேறு வாக்கு கொடுத்து வைத்தாள்.
ஆனால்,அடுத்த நாள் காலை அவன் எழுந்திருக்கும் போது அவள் படுத்திருந்தது என்னவோ அவனது மார்பில் தான்.
‘சேஃப்டிக்கு தலையணை எல்லாம் வைத்து இருந்தாளே..’,அவன் யோசனையுடன் சுற்றும் முற்றும் பார்க்க தலையணைகள் ஆளுக்கொரு பக்கமாய் சிதறிக் கிடந்தன.
‘இதுக்கு இவ வைக்காமலே இருந்திருக்கலாம்…’,சலிப்பாக நினைத்துக் கொண்டாலும் அவன் மனதில் சலிப்பு இல்லை.அவளை எழுப்ப வேண்டும் என்றுதான் முதலில் நினைத்தான்.பிறகு அவளை சங்கடப்படுத்த வேண்டாம் என்று எண்ணியவனாய் அவளது இடையைப் பற்றி அலேக்காககத் தூக்கி பக்கத்தில் படுக்க வைத்து விட்டான்.கவனமாக தலையணைகளையும் எடுத்து அவள் அடுக்கியதைப் போலவே அடுக்கியும் விட்டான்.
இதுவே தொடர்கதை ஆகியும் போனது.அவனுக்கும் அவளது அருகாமை பழக்கமாகியும் போனது.
அன்றும் அதே போல் அவளைத் தள்ளிப் படுக்க வைத்து விட்டு எழுந்தவன் காலைக்கடன்களை முடித்து விட்டு உடற்பயிற்சி செய்து கொண்டிருக்க..அவளது மொபைலில் அலாரம் அடித்தது.
‘அலாரம் வைச்சு இவ எழுந்திருக்க மாட்டாளே.. கும்பகர்ணி மாதிரி எட்டு மணி வரைக்கும் இழுத்து போர்த்திட்டு தூங்கற ஆளாச்சே இவ..’,அவன் எண்ணிக் கொண்டே தண்டால் எடுத்துக் கொண்டிருக்க..அலாரம் எழுப்பிய சத்தத்தில் கண்களைத் திறக்காமலேயே கைகளால் துழாவி மொபைலை எடுத்தாள் அவள்.
“ஹாவ்…”,கொட்டாவியை வெளியிட்டபடியே அலாரத்தை நிறுத்தியவள்..மெல்ல கண் விழித்தாள்.
விழித்தவளின் பார்வையில் முதலில் விழுந்தது தண்டால் எடுத்துக் கொண்டிருந்த அவளது மணவாளன் தான்.
படிக்கட்டு தேகத்துடனும்.. முறுக்கேறிய புஜங்களுடனும் வியர்வை சொட்ட சொட்ட தண்டால் எடுத்துக் கொண்டிருந்தவனின் கம்பீரம் அவளை வாயை பிளக்க வைத்தது.
“வாவ்…!”,அவளையும் அறியாமல் அவளது இதழ்கள் குவிந்து ஆச்சரியத்தை வெளிப்படுத்த..அவளது விழிகளோ ரசனையுடன் அவனைத் தழுவியிருந்தது.
எழுந்து வாகாக தலையணையில் சாய்ந்து அமர்ந்தவள் அவனைப் பார்வையிட ஆரம்பித்தாள். அவனுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.
‘என்ன இவ இப்படி பார்க்கிறா…’,அவளை பார்க்க கூடாது என்று அவன் தன் பாட்டிற்கு தண்டால் எடுத்துக் கொண்டிருந்தாலும்.. விழிகள் அகல ரசனைப் புன்னகையுடன் திறந்த வாய் மூடாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பவளின் செய்கையில் அவனுக்கு என்னவோ போல் இருந்தது.
தண்டால் எடுப்பதை நிறுத்தி விட்டு எழுந்தவன் டம்பிள்ஸை தூக்க..அவளது விழிகள் இன்னும் அகலமாக விரிந்தன.முதலிலாவது அவன் படுத்திருந்தான்..அவனது மேனியழகு அவளுக்கு அவ்வளவாக தெரியவில்லை.இப்பொழுது எழுந்து நின்று அவன் டம்பிள்ஸை எடுத்துக் கொண்டிருக்க..அவனது சிக்ஸ் பேக் உடற்கட்டு அவள் கண்களுக்கு விருந்தாகியது.ஒவ்வொரு முறை அவன் டம்பிள்ஸை தூக்கும் போதும் புஜங்கள் இறுகி நரம்புகள் புடைக்கும் விதம் அவளை ஈர்க்க.. மீண்டும் அவளது இதழ்கள், “வாவ்வ்…!”,என ஆர்பரித்தன.
இப்படி ஒருவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பது எல்லாம் அவளுக்கு உரைக்கவில்லை போலும். அவள் பாட்டிற்கு அவனையே ‘ஆ’வென்று வாயைப் பிளந்தபடி ரசித்துக் கொண்டிருந்தாள்.
‘உஃப்’ உதட்டைக் குவித்து மூச்சு விட்டவன் டம்பிள்ஸை கீழே வைத்து விட்டு சிறு தலையசைப்புடன் அவளருகே வந்து நின்றான்.அவன் அருகில் வந்ததும் அவளுக்கு உரைக்கவில்லை.அவனது கம்பீரமான மேனியை பார்த்த பிரமிப்பில் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் அப்பொழுதும் கவனம் சிதையாமல் இருக்கவும் தன் நெற்றியில் வழிந்த வியர்வையை வழித்து அவள் முகத்தில் விசிறியடிக்க.. பட்டென்று தன் உணர்வுக்கு மீண்டாள் அவள்.
மேனியில் படிந்திருந்த அவளது பார்வை தடுமாறி அவன் விழிகளில் பாய்ந்து நிதர்சனத்தை உணர்ந்து தரை நோக்க.. அவள் கன்னங்களோ மருதாணி வைத்தது போல் சிவந்து போனது.
‘ச்சே..யாழ்வி…!இப்படியா மிட்டாய் கடையை கண்டது போல ‘ஆ’ன்னு பார்ப்ப… மண்டு..மண்டு…!’,மானசீகமாய் அவள் தன் தலையிலேயே கொட்டிக் கொள்ள..அவனோ அவளது முகச்சிவப்பை இப்பொழுது வைத்த கண் வாங்காமல் பார்க்க ஆரம்பித்தான்.
நிமிர்ந்து அவனைப் பார்க்க..அவனோ குறுகுறு பார்வையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க ‘ஆத்தி..’அவள் அரண்டு போய் தலைகுனிந்து கொண்டாள்.
‘இவளுக்கு மட்டும் எப்படி இப்படி முகம் சிவக்குது…?’,அவன் ஆராச்சியில் இறங்க,அவன் பார்வையின் வீரியம் தாங்காமல் அவள் இன்னும் அதிகமாக முகம் சிவந்தாள்.
‘இது என்ன இப்படி பார்க்கிறான்…?’,அவள் மனம் அரள..’இவ்வளவு நேரம் நீ பார்த்தியே..அதை விடவா அவன் பார்க்கிறான்…?’,இன்னொரு மனம் சண்டைக்கு வந்தது.
இது சரிவராது…கட்டிலை விட்டு இறங்கியவள் அந்தப் பக்கமாவது இறங்கியிருக்கலாம்..இவன் நின்ற பக்கம் இறங்கித் தொலைத்தாள்.கட்டிலை ஒட்டி நின்றிருந்தவன் அவள் இறங்குகிறாள் என்பதற்காக கூட தள்ளி நிற்காமல் அப்படியே நின்றிருந்தான். கிடைத்த சின்ன இடைவெளியில் கட்டிலை விட்டு இறங்கி நின்றவள் மோதிக் கொண்டது என்னவோ அவன் மீதுதான்.
இவளது மூச்சுக்காற்று அவன் மார்பில் பட்டது.குனிந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் அனல் மூச்சு அவள் கழுத்தில் இறங்கியது.இருவருக்குள்ளும் நூலிழை நெருக்கம். தள்ளி நிற்க வேண்டிய அவனோ இம்மியளவு கூட நகராமல் அப்படியே நின்றான்.அவளோ..சற்று நகர்ந்தாலும் வெறும் ஷார்ட்ஸுடன் நின்ற அவன் மேனியின் மீது இவளது மேனி மோதி விடும்.எனவே,மூச்சை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அப்படியே நின்றாள்.
“எதுக்கு அப்படி பார்த்த…?” அவன் குரல் கரகரத்து வெளி வந்ததோ…
“நா..நான் போகணும்…!”, நிமிர்ந்து அவனை பார்க்க முயன்றவள் முடியாமல் போகவும் அவன் மார்பில் விழி பதித்துக் கூறினாள்.
“எதுக்கு அப்படி பார்த்த…?” அவன் மீண்டும் அதையே வினவ..அவனது பார்வையோ அவளையே துளைத்தெடுத்தது.
‘ஹய்யோ..’,மனம் இதமாய் சிணுங்க.. “நாங்க எல்லாம் பார்க்கணும்ன்னுதானே இப்படி உடம்பை மெயின்டெய்ன் பண்ணி வைச்சிருக்கீங்க… பார்த்தால் என்ன தப்பாம்…?”,இயல்பாய் தன் துடுக்குத்தனம் வெளிவர முணுமுணுத்தாள் அவள்.
“அப்படியா…?”,புருவங்களை உயர்த்தியவன் அவள் காதோரம் குனிந்து,”இதையே நான் சொன்னால்…?”, கேட்டவனின் உதடுகள் அவளது செவி மடல்களைத் தீண்டிச் சென்றதைப் போல் ஒரு உணர்வு அவளுக்கு.
“என்ன…?”,விழிகளை விரித்து அதிர்ந்தவளைக் கண்டவன் என்ன நினைத்தானோ, “ச்சும்மா…”,கண் சிமிட்டி சிரித்து விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
உள்ளே ஷவரைத் திறந்து அடியில் நின்றவனுக்கு அவனே புதிதாகத் தெரிந்தான்.இபப்டியெல்லாம் ஒரு பெண்ணிடம் தான் பேசுவோமா அவனுக்கே சிரிப்பு வந்தது. தலையை உலுக்கி அந்த நினைவுகளில் இருந்து மீண்டவன் குளித்து விட்டு வந்தான்.
அவளைக் கண்டு கொள்ளாமல் அவன் இயல்பாய் தன் வேலைகளை செய்ய ஆரம்பிக்க..அவளும் தன்னை மீட்டுக் கொண்டவளாய் குளிக்கச் சென்றாள்.
சோபாவில் அமர்ந்து செய்தித்தாளில் மூழ்கியிருந்த விஷ்வாவின் காதில் சமையலறையில் பாத்திரங்களை உருட்டும் சத்தம் வந்து விழுந்தது.
‘என்னைக்கும் இல்லாத திருநாளா இவ கிச்சன்ல என்ன பண்றா…?’,யோசித்தவன் எழுந்து சமையலறையை நோக்கி நடந்தான்.
உள்ளே பரபரப்பாக அடுப்பில் எதையோ கிளறுவதும்..திரும்பி வந்து காயை நறுக்குவதுமாக அவசர அவசரமாக வேலை செய்து கொண்டிருந்தாள் யாழ்வி.
“என்ன பண்ற…?”,
“சமைக்கிறேன்…!இனிமேல் நீங்க லன்ச் எடுத்துட்டுப் போய்டுங்க…நானே சமைச்சு கொடுக்கிறேன்…!”,அவள் கூற அவன் புருவங்களை உயர்த்தினான்.
“ஏன் திடீர் மாற்றம்…?”,
“சும்மாதான்…எவ்ளோ நாள்தான் கடையிலேயே சாப்பிடறது..எனக்கும் போர் அடிக்குது…!”,அவன் முகம் பார்க்காமல் அவள் கூற அவன் தோளை குலுக்கி கொண்டான்.
பரபரவென்று அவள் வேலை செய்வதைப் பார்க்க அவனுக்குப் பாவமாக இருக்கவும்,”நீ ஏன் இவ்ளோ சிரமப்படற…?வேண்டாம் விடு..நான் கடையிலேயே பார்த்துக்கிறேன்…!”, வாய் வார்த்தையாக கூறினாலும் அவனுக்கும் உள்ளுக்குள் வீட்டு சாப்பாடை சாப்பிட வேண்டும் போல்தான் இருந்தது.
“உங்களுக்காக மட்டும் இல்லை..எனக்காகவும் தான்…!” அவள் அழுத்திக் கூறவும் அவன் அமைதியாகி விட்டான்.
அவளும் ஒன்றும் சமையல் காலையில் கை தேர்ந்தவள் எல்லாம் இல்லை.யூ டியூப் பார்த்து கற்றுக் கொள்ளும் கத்துக்குட்டி. எப்படியோ யூ டியூபை பார்த்து பார்த்து மதியத்திற்கு சாம்பாரும் வெண்டைக்காய் பொரியலும் செய்து விட்டாள்.காலை உணவிற்கு சேமியா கிளறியிருந்தாள்.
அம்மாவிடம் கேட்டு மாவு ஆட்ட கற்றுக்கொள்ள வேண்டும் மனதில் நினைத்துக் கொண்டே சமையலை முடித்து அவனுக்கும் தனக்கும் பேக் செய்தவள் கிளம்புவதற்காக மேலே ஓடினாள்.
எப்பொழுதும் போல் கம்பீரமாக காக்கி உடையில் தயாராகி வந்தவனுக்கு சேமியா பரிமாறி விட்டு அவளும் தட்டில் போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.
“இன்னைக்கு ஒண்ணும் சேமியாவை அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க…!ஈவ்னிங் அம்மாகிட்ட கேட்டு மாவு ஆட்ட கத்துக்கிறேன்…!”,அவள் கூற,
“ம்…”,என்று தலையாட்டி விட்டு சாப்பிட ஆரம்பித்தான் அவன்.
பார்த்துப் பார்த்து பரிமாறினாள் அவனுக்கு ஏனோ இதமாக இருந்தது. சும்மாவா சொன்னர்கள்.. உணர்வுப்பூர்வமாக ஆண்களின் மனதை அடையும் வழி..உணவு என்று…!
கிளம்பியவனின் பின்னோடு வந்தவள் பேக் செய்யப்பட்டிருந்த லன்ச்சை ஜீப்பில் வைத்தாள்.திருப்தியுடன் அவளைப் பார்த்து புன்னகைத்தார் துரை.கண்களை மூடித் திறந்து பதிலுக்கு புன்னகைத்தவள் தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
ஜீப்..சாலையில் இறங்கி போக்குவரத்தில் கலந்தது.
“துரை…! நேத்து நைட் யாழ்விகிட்ட என்ன பேசிட்டு இருந்தீங்க…?”,அவன் நேரடியாக வினவ அவருக்கு சற்று அதிர்ச்சிதான்.
“சும்மா…அவங்க குடும்பத்தைப் பத்தி பேசிட்டு இருந்தோம் சார்…!”,மழுப்பினார் அவர்.
“ஓ…”,என்றவன் திரும்பி லன்ச் பேக்கையும் பார்த்து விட்டு அவரையும் பார்த்தான்.
“நீங்க எதுவும் சொல்லாமலா இது வந்திருக்கு…?”,
“அது..வந்து..சார்…”,அவர் திக்கித் திணற,
“எனிவே..நல்லதுதான் செய்திருக்கீங்க துரை…! இதுவும் நல்லாதான் இருக்குது…வீட்டுல இருந்து சாப்பாடு கொண்டு வந்து ஆபிஸ்ல சாப்பிடறது…”,அவன் இதழ் கடையோராம் மெல்லிய புன்னகை.
இப்படியெல்லாம் உணர்வுகளை வெளிப்படுத்துபவன் அல்ல அவன்.எப்பொழுதும் இறுகிய முகத்துடனே வலம் வருபவன்.அவன் முகத்திலிருந்து என்ன நினைக்கிறான் என்பதை கண்டறியவே முடியாது.அப்படிப்பட்டவன் இன்று சிரிப்பதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டார் துரை.
‘எப்படியோ சந்தோஷமாக இருந்தால் சரி..’அவர் மனதில் ஒரு தந்தையின் கனிவு எழுந்தது.
ஜீப் விரைந்து கொண்டிருக்க..சட்டென்று விஸ்வேஷ்வரனின் பார்வை கூர்மையானது.அவனது விழிகள் பக்கவாட்டில் இருந்த பெட்டிக்கடையில் நின்று கொண்டிருந்த ஒருவனின் மீது யோசனையுடன் படிந்தது.
“துரை…ஸ்டாப்…!”,சடன் பிரேக் அடித்து அவர் ஜீப்பை நிறுத்துவதற்கு முன்பாகவே குதித்து இறங்கியவன் பெட்டிக்கடையில் நின்றிருந்த அந்த ஆளை நோக்கி ஓடினான்.
இவன் வருவதை அவனும் கவனித்து விட்டான்.வாங்கிய பொருட்களை கீழே போட்டு விட்டு ஓட ஆரம்பித்தான் அந்த ஆள். விஸ்வேஷ்வரனின் பார்வை அவனை விட்டு வேறு எங்கும் அகலவில்லை. வேட்டையை குறி வைத்த வேங்கை போல் அவனைத் துரத்திக் கொண்டு ஓடினான்.
ஓடியவனுக்கு இனி இவனிடம் தப்பிக்க முடியாது என்று தெரிந்து விட்டது போலும். உடனே நின்றவன் அருகில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணை இழுத்துக் கழுத்தில் கத்தியை வைத்தான்.அங்கு ஓர் கூட்டமே கூடி விட்டது.
“ஐயோ..விடுடா…!”,அந்தப் பெண் பயத்தில் அழ ஆரம்பிக்க, விஸ்வேஷ்வரன் அமைதியாய் நின்றான்.
“ஒழுங்கா அந்தப் பொண்ணை விடு…!”,அடி மேல் அடியெடுத்து வைத்து அவன் நெருங்க,
“கிட்ட வராதீங்க ஏ.சி.பி சார்…!சும்மா மிரட்டறதுக்காக கத்தியை கழுத்துல வைச்சிருக்கேன்னு நினைக்காதீங்க…”,வெளியே தைரியமாக பேசுவதைப் போல் காட்டிக் கொண்டாலும் அவனுக்கும் உள்ளுக்குள் உதறல் தான்.
“ஓ..அப்போ போடுடா…” அந்த ஆளின் கண்களையே பார்த்தபடி அவன் மெதுவாக நெருங்க,
“என்ன…?”,பயத்துடன் அந்தப் பெண்ணை இழுத்த வாக்கிலேயே பின் வாங்கினான் அவன்.
“அந்தப் பொண்ணை போடுன்னு சொன்னேன்…”,விஷ்வா கர்ஜிக்க..அவன் பயத்தில் அப்படியே நின்று விட்டான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் சுழன்று திரும்பி அந்த ஆளை எட்டி உதைத்தவன்..கீழே விழுந்த பெண்ணை எழுப்பி பத்திரமாக அவளது தோழிகளிடம் ஒப்படைத்தான்.
அதற்குள் துரை வந்து அந்த ஆளை பிடித்து விட.. ஓங்கி அந்த ரௌடியின் மூக்கிலேயே ஒன்று விட்டான் விஷ்வா.
“நாயே..யாருகிட்ட… துரை…! இவனை ஜீப்புல ஏத்துங்க…!” மூவரையும் ஏற்றிக் கொண்டு அந்த ஜீப் பறந்தது.
அந்த ஆளை அடித்து துவைத்துக் கொண்டிருந்தான் விஸ்வேஷ்வரன்.அவனருகில் கை கட்டி அமைதியாய் நின்றிருந்தான் கபிலன்.அவனுக்குத் தெரியும்.. இந்த சமயத்தில் குறுக்கிட்டால் அவன் ருத்ர தாண்டவம் ஆடி விடுவான் என்று. என்னதான் போலீஸ்காரனாக இருந்தாலும் அடி வாங்கியவனைப் பார்ப்பவனுக்கு பாவமாக இருந்தது.
இத்தனைக்கும் விஸ்வேஷ்வரன் லத்தி எல்லாம் உபயோகிக்க மாட்டான்.கை முஷ்டியை இறுக்கி குத்துவதிலேயே எதிராளியின் மூக்கு உடைந்து இரத்தம் வந்து விடும்.அந்த நேரத்தில் பயங்கரமாய் மாறி விடும் அவன் முகத்தைப் பார்ப்பதற்கே அனைவருக்கும் பயமாகத்தான் இருக்கும்.
“சொல்லு டா…!யாரு நீங்க…?யார் அனுப்பி அன்னைக்கு யாழ்வியை கடத்த வந்தீங்க…?”,இரத்தம் சொட்ட சொட்ட மண்டியிட்டு அமர்ந்திருந்தவனின் முடியைப் பற்றித் தன்னை காணச் செய்தவன் ஆக்ரோஷத்துடன் வினவினான்.
‘ஓ..மேடமை கடத்துனவனுங்களா…அப்போ செத்தான்…!’,கபிலன் நினைத்துக் கொண்டான்.
“சொல்லு…!”,அவன் மீண்டும் அடிக்க கை ஓங்க,
“அய்யோ.. வேண்டாம் சார்…சொல்லிடறேன்…!”,பயந்து கத்தினான் அவன்.
“சபாபதி ஐயா சொல்லித்தான் இதெல்லாம் செய்தேன்…!எங்க சக்ரவர்த்தி ஐயாவுக்குப் பிறகு அவருதான் எங்களுக்கு எல்லாம்…!எங்க ஐயா ஜெயிலுக்கு போக காரணம் அந்த ரிப்போர்ட்டர் பொண்ணு தான்…!அதனாலதான் அந்தப் பொண்ணைத் தூக்கச் சொல்லி சபாபதி ஐயா சொன்னாரு…!” கடகடவென ஒப்பித்தான் அவன்.
ஒருவேளை போலீசில் மாட்டினால் இப்படித்தான் சொல்ல வேண்டும் என்று அந்த அடியாள்களுக்கு சொல்லி வைக்கப்பட்டிருந்தது.அதை அட்சரம் பிசகாமல் ஒப்பித்து விட்டான் அவன்.
“என்னை டார்கெட் பண்ணினது.. திவ்யாவை கொன்னது…?”,விஸ்வேஷ்வரன் கேள்வியுடன் நிறுத்த,
“நீங்க அந்தப் பொண்ணை காப்பாத்தின உடனே பிளானை மாத்தினது அவர்தான்…!உங்க மொபைல் கீழே கிடக்கவும் அதை எடுத்துட்டுப் போய் அந்தப் பொண்ணோட பாடி பக்கத்துல போட சொன்னவரும் அவர்தான்…!”.
“சம்பந்தமே இல்லாம திவ்யாவை எதுக்கு டா இதுல இழுத்தீங்க…?”,
“அந்தப் பொண்ணையும் உங்களையும் இணைச்சு ஏற்கனவே செய்தி வந்திருக்குதே சார்…!அதனால அந்தப் பொண்ண போட்டா உங்க மேல பழி விழும்ன்னு…”அவன் மென்று விழுங்க.. ஓங்கி எட்டி உதைத்தான் விஷ்வா.
“நாய்களா…ஒரு உயிரை அநியாயமா கொன்னு இருக்கீங்க…பா..***”,அவன் வாயில் இருந்து சரமாரியாய் கெட்ட வார்த்தைகள் வர அவனை அடி பின்னி எடுத்து விட்டான்.
கையை கழுவிக் கொண்டு வெளியே வந்த விஷ்வாவுக்கு ஆத்திரம் அடங்க மறுத்தது.
“பொறுக்கி…இவனுங்களை அணு அணுவா சித்ரவதை செய்து கொல்லணும்…”,வாய்க்குள் அவன் திட்டிக் கொண்டிருக்க, கபிலன் வந்து அவன் முன் நின்றான்.
“இப்போ என்ன பண்றது சார்…?”,
“இதுக்கு பின்னாடி அந்த சபாபதி மட்டும் இல்லை கபிலன்…!இன்னும் வேற யாரோ இருக்காங்க…! திவ்யா தங்கியிருந்தது ‘வேதா பாட சாலை’ கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஹாஸ்டல்ல…அங்கே இருந்து அவளை ஈஸியா வெளியே கொண்டு வர முடியுதுன்னா.. அங்க படிக்கிற எந்தப் பொண்ணுங்களுக்குமே பாதுகாப்பு இல்லை…!ரெண்டு பொண்ணுங்க காணாம போயிருக்கிறதா நமக்கு ஏற்கனவே கம்ப்ளெய்ன்ட் வந்திருக்கு…!என்னமோ நடக்குதுன்னு என் மனசு சொல்லுது…”,பிரச்சனையின் ஆணிவேரை அவன் கண்டறிந்து விட்டான்.
“அப்போ சபாபதி…?”,
“போய் அந்த நாயை அரெஸ்ட் பண்ணிட்டு வாங்க…! இப்போதைக்கு இவனுங்க மேல மட்டும் கேஸ் போடுவோம்… பெரிய திமிங்கலம் வலையில வந்து மாட்டற வரைக்கும் பொறுமையா காய் நகர்த்த வேண்டியதுதான்…!”,அவனது கண்கள் தீக்கங்குகளாய் ஜொலித்தன.
சபாபதிதான் திவ்யா கொலைக்கு காரணம் என்று கேஸ் எழுதப்பட்டு அவனுக்கும் அடியாள்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டது.அப்போதைக்கு அந்த கேஸ் முடிந்தாலும் ரகசியமாக விஸ்வேஸ்வரன் ‘வேதா பாட சாலை மீது கண் வைத்துக் கொண்டுதான் இருந்தான்.
இரவு…வீட்டை நோக்கி ஜீப்பில் வந்து கொண்டிருந்தவனுக்கு வேதனை..ஆத்திரம்.. கோபம்.. எரிச்சல்.திவ்யாவின் கொலைக்கு தெரிந்தோ தெரியாமலோ தானும் ஒரு காரணமாகி விட்டோம் என்று மனது உறுத்திக் கொண்டே இருந்தது.
யாழ்வி மட்டும் தன்னையும் திவ்யாவையும் இணைத்து இப்படி எழுதியிருக்காவிட்டால்..இந்தக் கொலையே நடந்திருக்காதோ என்று அவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. ஒரு தவறான செய்தி எங்கே கொண்டு போய் நிறுத்தி விட்டது.மனம் முழுதும் இருந்த வேதனை கோபமாக யாழ்வியின் மீது பாய்ந்தது.
துரை இறக்கி விட்டு விட்டு சென்று விட.. தொப்பியை கழட்டியபடியே வீட்டிற்குள் நுழைந்தான் விஷ்வா.
உள்ளே நுழைந்தவனின் விழிகள் சோபாவில் அமர்ந்து எதையோ செய்து கொண்டிருந்தவளையே அனலாய் முறைத்தது.
என்னவென்றே தெரியாமல் அனலாய் முறைத்தவனின் பார்வையில் முதுகுத்தண்டு ஜில்லிட,”எ..என்ன…?”, எழுந்து நின்றாள் அவள்.
அவளருகே வந்தவன் டீ பாயின் மீது கிடந்த அவளது ஐ.டி கார்டை எடுத்து கசக்கி தூக்கி எறிந்தான்.
“நீயெல்லாம் ரிப்போர்ட்டரா இருக்கவே தகுதியில்லாத ஆளு… !உண்மையை ஆராயாம பொய்யா அவசரப்பட்டு நீ எழுதின ஒரு செய்தியால ஒரு பொண்ணுடைய உயிர் போயிருக்குது… !அதுவும் சும்மா இல்ல..அவளை கற்பழிச்சு சித்ரவதை பண்ணி கொன்னு இருக்காங்க…!”,வார்த்தைகளை கடித்துத் துப்பியவனின் குரலும் சற்று கமறியது.
“எ..என்ன சொல்றீங்க…?”,
“மண்ணாங்கட்டி…”,வெடித்தவன் விசாரணையில் வெளிவந்த உண்மைகளைக் கூறினான்.
நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டாள் யாழ்வி.மனம் ரணமாய் வலித்தது. தான் தவறாய் எழுதிய ஒரு செய்தி ஒரு பெண்ணின் உயிரையே பறித்து விட்டதே…அவளால் மூச்சுக்கூட விட முடியவில்லை.
குற்றவுணர்வு ஒவ்வொரு அணுவிலும் பரவி ஊசியாய் அவளைக் குத்தியது.திவ்யாவை கொலை செய்ததற்கு பின்னணினியில் இப்படியொரு செய்தி இருக்கும் என்று அவள் எண்ணியிருக்கவில்லை.
‘தான் தவறு செய்து விட்டோம்’,மனசாட்சி உறுத்த வாய் விட்டு கதற வேண்டும் போல் இருந்தது. உச்சகட்ட அதிர்ச்சியில் அழுகை வரவில்லை.இடிந்து போய் சோபாவில் அமர்ந்து விட்டாள்.
“இனியாவது ஒரு வார்த்தை எழுதறதுக்கு முன்னாடி ஓராயிரம் முறை யோசிச்சிட்டு பேனாவைத் தொடு…!” அழுத்தத்துடன் கூறியவன் மேலே சென்று விட்டான். நடந்தததை ஜீரணிக்க முடியாமல் சிலையாய் சமைந்திருந்தாள் யாழ்வி.
தொடரும்…
