காதல் இதுதானா ? – காதல் 16

காதலாகும் 16:

அடுத்த நாள் காலை. வழக்கம் போல் கிளம்பி கீழே வந்த விஸ்வேஷ்வரனை வரவேற்றது என்னவோ சோபாவில் சாய்ந்து படுத்திருந்த அவனது மனையாள் தான்.அழுதிருப்பாள் போல.. கன்னங்களில் கண்ணீர் தடம் வற்றியிருந்தது.

ஒரு நொடி கால்கள் தயங்கினாலும், ‘நல்லா ஃபீல் பண்ணட்டும்…அப்போதான் இனி ஜாக்கிரதையா இருப்பாள்…’,நினைத்துக் கொண்டவன் உணவு மேசையை நோக்கி நகர..அவனது அரவத்தில் எழுந்து கொண்டாள் அவள்.

கிளம்பி வந்திருக்கும் கணவனைப் பார்த்தவள்,’அய்யோ..அவருக்கு சமைக்கணுமே..’,யோசித்தபடியே சமையலறைக்குள் விரைந்தாள்.

“ஒரு அரைமணி நேரம் வெயிட் பண்ண முடியுமா…?சமைச்சிடறேன்…!”,அவள் கூற,

“ம்ம்…”தலையாட்டியபடி சோபாவில் சென்று அமர்ந்தவன் தொலைக்காட்சியை உயிர்பித்தான்.

கூறியது போலவே அரைமணி நேரத்தில் அவனுக்கு காலை உணவையும் மதிய சாப்பாட்டையும் தயார் செய்திருந்தாள்.சாப்பிட்டு விட்டு அவன் கிளம்பி விட அவள் மீண்டும் சோபாவில் தஞ்சமடைந்தாள்.

அவளால் நடந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.தன்னுடைய சிறு தவறினால் எவ்வளவு பெரிய விபரீதம் நேர்ந்திருக்கிறது.. மனம் உறுத்த அன்று வேலைக்குச் செல்ல முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை.

மொபைலை எடுத்து விடுமுறை சொன்னவள் அமைதியாக படுத்து விட்டாள்.

இங்கு அலுவலகம் வந்தவனுக்கு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. ஏதாவது ஆறுதல் கூறிவிட்டு வந்திருக்கலாமோ..அவனது மனம் அவள் நினைவிலேயே உழன்றது.அதிலும் இடிந்து போய் அவள் அமர்ந்திருந்த தோற்றம் அவனை என்னவோ செய்ய முயன்று தன் கவனத்தை வேலையில் திருப்பினான்.

அன்று கமிஷனர் அலுவலகத்தில் ஒரு மீட்டிங் இருக்க..அவனது நாள் முழுவதும் அங்கேயே ஓடிவிட்டது.அதற்குப் பிறகும் ஒரு கேஸ் விஷயமாக வெளியே செல்ல வேண்டிய வேலை வர..அவன் அது சம்பந்தமாக அலைய ஆரம்பித்ததில் மனைவியின் நினைவை சற்று மறந்திருந்தான்.

அனைத்து வேலைகளும் முடிந்து அவன் வீடு திரும்பும் போது இரவு வெகு நேரமாகி விட்டது. உள்ளே நுழைந்தவனுக்கு மனைவி சோபாவிலேயே சாய்ந்து படுத்திருப்பது தெரிய.. ஒரு பெருமூச்சுடன் தங்களது அறைக்கு குளிக்க சென்றான்.

குளித்து உடைமாற்றி வந்தவன் உணவு மேசையில் இருக்கும் பாத்திரங்களைத் திறந்து பார்க்க..மதியம் அவள் சாப்பிடவில்லை என்பது தெரிந்தது.இரவு இவனுக்காக என்று சமைத்து வைத்திருந்தாள்.

‘அவளிடம் பேச வேண்டும்’,மனதிற்குள் நினைத்தவன் அவளருகே சென்று அமர்ந்தான்.

“யாழ்வி…!”,அவன் அழைக்கவும்தான் அவளுக்கு அவன் வந்ததே உரைத்தது. ‘விசுக்’கென்று எழுந்து அமர்ந்தாள்.

“இன்னைக்கு ஆபிஸ்க்கு போகலையா…?”,

‘இல்லை’ என்று தலையாட்டினாள் அவள்.

“இப்படியே இருந்தால் நடந்தது மாறிடுமா என்ன…?நடந்தது நடந்து போச்சு..இனி மூவ் ஆன் பண்ணி போக வேண்டியதுதான்… !நம்ம சைட்ல இருந்து இனி எந்தவொரு தப்பும் நடந்திடாத மாதிரி கவனமா இருந்துக்க வேண்டியதுதான்..!”,அவன் பேச அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

”இப்படி ஆகும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை…!என்னால மூவ் ஆன் பண்ணி போக முடியுமான்னு தோணல …!மனசு முழுக்க குற்றவுணர்வா இருக்குது…!”,

இவளிடம் விஷயத்தை சொல்லியிருக்கவே கூடாதோ..,முதல் முறையாக யோசித்தான்.

“இந்த விஷயத்துல உன்னை மட்டும் ப்ளேம் பண்ணிட முடியாது இல்லையா…நீ நியூஸ்ல எழுதாம போயிருந்தாலும் நானும் திவ்யாவும் மீட் பண்றதை அவனுங்க ஊகிச்சிருப்பாங்க…!”,

அவள் அப்பொழுதும் தெளியாமல் அமர்ந்திருக்கவும்,”நீ செய்த தவறை மட்டும் யோசிக்காதே…!உன் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் சக்ரவர்த்தி ஆளுங்களை பாலோ பண்ணி எவ்வளவு பெரிய விஷயங்கள் வெளியில வர்றதுக்கு உதவியா இருந்த.. அத்தனை மாணவர்களோட ஆரோக்கியத்தை நாம திருப்பிக் கொடுத்ததுக்கு ஒருவகையில் நீயும்தானே காரணம்…!அந்த மருந்து விஷயம் மட்டும் வெளியில வரலைன்னா இந்நேரம் எவ்வளவு பேரோட வாழ்க்கை கெட்டு சீரழஞ்சிருக்கும் தெரியுமா…?”,அவன் எடுத்துரைக்க உரைக்க அவள் சற்று தன் வேதனையில் இருந்து வெளிவர ஆரம்பித்தாள்.

“நம்மள மீறி நடக்கற விஷயத்தை கண்ட்ரோல் பண்ணனும்ன்னு நாம நினைக்க கூடாது… நம்ம கையில எதுவுமே இல்லை..!போ..போய் குளிச்சிட்டு வா..சாப்பிடலாம்…எனக்கு பசிக்குது…!”,அவனுக்கு பசிக்கிறது என்று கூறவும் அவள் சட்டென்று எழுந்து விட்டாள்.

“ஒரு பத்து நிமிஷம்..குளிச்சிட்டு வந்திடறேன்…!”,மேலே விரைந்தவளைப் பார்த்தவன் தலையாட்டி சிரித்துக் கொண்டான்.

‘மனம் வேதனைப்படும் படியான விஷயங்களை இனி அவளிடம் சொல்லக் கூடாது’,மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை…!இருவருக்குமே விடுமுறை.காலையில் எழும் போதே யாழ்விக்கு அடிவயிற்றில் இழுத்துப் பிடித்துக் கொண்டு வலித்தது. எழுந்து அமர்ந்தவளின் பார்வை நாட்காட்டியில் விழ,வீட்டிற்கு விலக்காகி விட்டோம் என்பது புரிந்தது.

சோபாவில் அமர்ந்து விஷ்வா போனை பார்த்துக் கொண்டிருக்க..இவள் அவசரமாக எழுந்து குளியலறைக்குள் நுழைந்தாள்.தன்னை சுத்தப்படுத்திக் கொண்ட பிறகுதான் தெரிந்தது.. நாப்கின் இல்லை என்று.எப்பொழுதுமே அவள் இருப்பு வைத்திருப்பாள்.வீட்டில் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு அதை எடுத்துப் பார்த்த பிறகுதான் தெரிந்தது அது காலியாகி விட்டது என்று.

‘இப்பொழுது என்ன செய்வது..?’,யோசித்தபடியே வெளியே வந்தவள் குளியலறைக்கு முன்னாடியே நின்று விட்டாள். இப்பொழுது இருக்கும் நிலைமையில் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு சென்று நாப்கின் வாங்கி வரவும் முடியாது.கணவனிடம் சொல்வதற்கும் சிறு தயக்கம்.

நகத்தைக் கடித்துத் துப்பியபடி அங்கேயே நின்றிருந்தவளை வித்தியாசமாக பார்த்தபடி எழுந்து வந்தான் விஸ்வேஷ்வரன்.

“கொஞ்சம் தள்ளி நில்லு…நான் ரெஸ்ட் ரூம் போகணும்…!”,அவன் கூறவும் சற்று தள்ளி நின்றவள் மீண்டும் தன் நகத்தைக் கடித்துத் துப்பும் பணியைத் தொடர்ந்தாள்.

உள்ளே நுழைந்தவன் குளித்து விட்டு வெளியே வர..அவள் அப்பொழுதும் அதே நிலையில் அங்கேயே நின்றிருந்தாள்.

“யாழ்வி…!வாட் ஹேப்பண்ட்..?”,தலையை துவட்டியபடியே அவன் வினவ,

“ம்..ஒண்ணுமில்ல…!” அவளுக்கு அவனிடம் எப்படி கூறுவது என்ற தயக்கம்.

என்னதான் இருவரும் ஒரே வீட்டில்..ஒரே அறையில் தங்கியிருந்தாலும் கணவன் மனைவியாக இருவருமே முதல் அடியை எடுத்து வைத்திருக்கவில்லையே…பிறகு எப்படி அவளால் இயல்பாக அவனிடம் தனது தேவையைப் பகிர்ந்து கொள்ள முடியுமாம்…?

“அப்புறம் ஏன் இப்படியே நிற்கிற…?”,வினவியபடியே அலமாரியைத் திறந்து தனக்கான உடையை எடுத்தவன் அவளை நோக்கினான்.

அவளுக்கு முன்னால் உடைமாற்றி எல்லாம் அவனுக்குப் பழக்கமில்லை.வெளியே செல்வாளா…? என்ற எண்ணத்துடன் அவன் அவளை நோக்க..அவளோ சங்கடமான முகத்துடன் அப்படியே நின்றிருந்தாள்.

“யாழ்வி…!”,

“என்ன..?”,

“நான் ட்ரெஸ் மாத்தணும்…”,

“ம்ப்ச்..மாத்துங்க ஏ.சி.பி சார்…!இதையெல்லாமா என்கிட்ட கேட்பீங்க…?”அவள் எரிந்து விழுந்தாள்.

”நீ இப்படியே நின்னா..நான் எப்படி மாத்தறது…?” அவனும் குரலை உயர்த்த,

“ஓ..சாரி..சாரி…!”,அவள் வெளியே செல்வாள் என்று பார்த்தால்..மீண்டும் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் உள்ளிருந்து குரல் வேறு.. “ட்ரெஸ் மாத்தீட்டீங்களா இல்லையா..?”,என்று.

“ம்..வெளியே வா..!”,அவன் குரல் கொடுக்க வெளியே வந்தவள் மீண்டும் குளியலறை வாசலிலேயே நின்று கொண்டாள்.

ஓரக்கண்ணால் அவளை பார்த்தபடியே தலை வாரியவனுக்கு அவளுக்கு என்னவோ தேவை..அதை தன்னிடம் சொல்ல தயங்குகிறாள் என்பது புரிந்தது.’எதுவோ ஒன்று..அவளே சொல்லட்டும்… நினைத்தவன் கிளம்பி வெளியற போகும் போது, ஏக்கத்துடன் அவள் தன்னை பார்ப்பது தெரிய,சட்டென்று நின்று விட்டான்.

‘‘யாழ்வி…!ஏதாவது பிரச்சனையா…? உடம்பு சரியில்லையா…?”,அவன் அவளருகில் வர,

எங்கே தன்னைத் தொட்டு விடுவானோ என்ற என்ணத்தில் சட்டென்று பின்னால் நகர்ந்தவள்… ஒன்றும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்.

மனமோ, ‘சொல்லி விடு யாழ்வி.. உனக்கு வேற வழியில்லை…’உந்தித் தள்ள,

“எனக்கு நாப்கின் வேணும்…!”,பட்டென்று சொல்லியே விட்டாள்.

முதலில் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. பிறகுதான் மெல்ல மெல்ல அவள் தேவை புரிய,”ஓ..என்ன பிராண்ட்…?”,அவள் முகம் பார்க்காமல் வினவினான்.

ஒரு காகிதத்தை எடுத்து தன் தேவையை எழுதிக் கொடுத்தவள்,”ஸாரி…எப்பவுமே ஸ்டாக் வைச்சிருப்பேன்…இப்போ எப்படி கவனிக்காம விட்டேன்னு தெரியல…!”இதை வாங்கி வரச் சொல்லி அவனை அனுப்புகிறோமே என்ற சங்கடம் அவள் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.

“இட்ஸ் ஓகே…!”,உரைத்தவன் அடுத்த பத்து நிமிடங்களில் அவள் கேட்டதை வாங்கி வந்து கொடுத்திருந்தான்.

“தேங்க்ஸ்…!”,அடுத்த அரைமணி நேரத்தில் குளித்து உடைமாற்றி கீழே வந்தவளுக்கு சமைக்கும் எண்ணமே இல்லை.வயிற்று வலி வேறு படுத்தி எடுக்க சூடாக காபி குடித்து விட்டு போய் படுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் சமையலறைக்குள் நுழைந்தாள்.

சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த விஷ்வா அவளைப் பார்த்தான்.

“யாழ்வி…!ரொம்ப பசிக்குது..டிபன் ரெடி பண்றியா…?”,அவன் கேட்கும் போது அவளால் மறுக்க முடியவில்லை.

அவளுக்கு மாத விலக்கு..அவளுக்கும் சில உடல் உபாதைகள் இருக்கும். அவளைத் தொந்தவரவு செய்யக் கூடாது என்பது எல்லாம் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. பெண்களுக்கு மாதா மாதம் இந்தப் பிரச்சனை வரும் என்பதை மட்டும்தான் அவன் அறிந்திருந்தான்.அந்த சமயத்தில் அவர்கள் அனுபவிக்கும் வலி.. வேதனை பற்றியெல்லாம் அவனுக்கு ஒன்றும் தெரியாது.

“சரி…!”,கணவனுக்கு தலையாட்டிவிட்டு உள்ளே நுழைந்தவளுக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது.

பொதுவாக அந்த சமயங்களில் மற்ற பெண்களை விடவே அதிக அளவு உதிரப்போக்கையும்..வலியையும் அவள் அனுபவிப்பாள்.அலுவலகத்திற்கு கூட செல்லாமல் இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்து விட்டு படுக்கையே கதியென்றுதான் கிடப்பாள். இன்று கணவன் ‘பசிக்கிறது’ எனவும் தன்னை மீறி எழுந்த தாய்மை உணர்வு அவன் பசியை போக்கத் தூண்ட சமைக்கத் தயாரானாள்.

எப்படியோ தேங்காய் சட்னியை அரைத்து வைத்தவள்.. தோசை ஊற்றுவதற்காக மாவை கரைக்க..அடிவயிற்றில் சுளீரென்று வலி இழுத்துப் பிடிக்க அப்படியே வயிற்றைப் பிடித்துக் கொண்டு நின்று விட்டாள்.

தண்ணீர் குடிப்பதற்காக உள்ளே நுழைந்த விஷ்வாவின் விழிகளில் மனைவி விழ, “ஹேய்..என்னாச்சு…?”, பதறியபடி ஓடிப் போய் அவளை பிடித்துக் கொண்டான்.

மெல்ல அவளை அணைத்துக் கொண்டு வெளியே வந்தவன் டைனிங் டேபிளில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அவளை அமர வைத்தான்.

“யாழ்வி..!ஆர் யூ ஆல்ரைட்..?”, குடிப்பதற்காக தண்ணீரை எடுத்துக் கொடுத்தவன் பதட்டத்துடன் வினவ,

“ம்ம்…”தலையாட்டியவள் டைனிங் டேபிளிலேயே தலை வைத்து படுத்து விட்டாள்.

“ஹே..இங்கே பார்…!என்ன பண்ணுது…?டாக்டர்கிட்ட போகலாமா…?”,

‘’இல்ல…!பீரியட்ஸ் டைம்ல இப்படித்தான் வயிறு வலிக்கும்…!கொஞ்ச நேரத்துல சரியாகிடும்…!”,வலியில் முகத்தை சுளித்துக் கொண்டே அவள் கூற..அவனுக்குத்தான் கஷ்டமாக போய்விட்டது.

‘இது தெரியாமல் சமைக்க சொல்லி கஷ்டப்படுத்தி விட்டோமே’,மனதிற்குள் வருத்தப்பட்டவன், “என்கிட்டே சொல்லியிருக்கலாமே யாழ்வி…?சரி விடு..ஏதாவது ஆர்டர் பண்றேன்… சாப்பிட்டுட்டு போய் தூங்கு…!”,அவன் மொபைலை எடுத்து ஆர்டர் போட முயல,

“வேண்டாம்…!மாவு கரைச்சு வைச்சிருக்கிறேன்…தோசை மட்டும் ஊத்தினால் போதும்…!எனக்கு எதுவும் வேண்டாம்..!”,அவள் எழ முயற்சிக்க,

”ஒண்ணும் வேண்டாம்…!நானே தோசை சுடறேன்…!சாப்பிட்டுட்டு போய் தூங்கு…!”,கூறியவன் சமையலறைக்குள் விரைந்தான்.

“உங்களுக்கு தோசை ஊத்த தெரியுமா…?”

“அதென்ன பெரிய கம்ப சூத்திரமா…? மாவை எடுத்து கல்லுல ஊத்துனா தோசை வர போகுது…!”,எப்படியோ இரண்டு தோசைகளை ஊற்றி எடுத்தவன் தேங்காய் சட்னியுடன் அவளுக்குப் பரிமாற..அவள் மனதிற்கு இதமாக இருந்தது.

அவன் பார்க்கும் உத்தியோகம் என்ன…வெளியில் அவன் இருக்கும் நிலை என்ன..? இருந்தும் தனக்கு வலி என்றவுடன் பதறிப் போய் தன்னை கவனித்துக் கொள்வது அவளுக்குப் பிடித்திருந்தது.

அத்தனை வலியிலும் மெல்லிய புன்னகை இதழோரம் கசிய.. தோசையை பிய்த்து வாயில் வைத்தாள்.

அவளுக்கு கொடுத்து விட்டு தனக்கும் தோசை ஊற்றி எடுத்து வந்தவன் அவளுடனே அமர்ந்து சாப்பிட்டான்.

அவள் சாப்பிட்டு விட்டு படுப்பதற்காக எழுந்து செல்ல.. “ரொம்ப வலிச்சா சொல்லு…டாக்டர்கிட்ட போயிட்டு வரலாம்…!”,அவனது அக்கறை அவளுக்கு அடிக்கரும்பாய் இனித்தது.

‘ம்…”தலையாட்டியவள் ஒரு மாதிரி இதமான மனநிலையோடே தூங்கிப் போனாள்.

அவனது அக்கறை அன்று மட்டும் அல்ல..அடுத்த மூன்று நாட்களும் தொடர்ந்தது.அவளை சமைக்க விடாமல் கடையிலேயே வாங்கி வந்து விட்டான். இரண்டு முறை அவள் கேட்டாள் என்று தோசை சுட்டும் கொடுத்தான்.

“ஹாட் பேக் வைச்சா.. வலிக்கு கொஞ்சம் நல்லாயிருக்குமாம்…!”,வெளியே சென்று விட்டு வரும் போது கையில் ஒத்தடம் வைக்கும் பையோடு வந்தான். அத்தோடு நில்லாமல்..அதில் சுடு நீரை நிரப்பி வந்து படுத்திருந்தவளிடம் நீட்டினான்.

எந்தப் பெண்களுமே மாதவிடாய் சமயங்களில் தங்களது தாயை விட தந்தையை அதிகம் தேடுவார்களாம்.. என்றோ எதிலோ அவள் படித்தது அவளுக்கு நினைவிற்கு வந்தது.

முகம் சுளிக்காமல்..அவளே கேட்காமல் அவன் அவளுக்கு செய்த பணிவிடைகள் அவளுக்குத் தன் தந்தையை நினைவுபடுத்த..முதல் முறையாக தனது கணவனை எண்ணி அவள் மனதிற்குள் பெருமை தோன்றியது.

‘இவன் என் கணவன்…!’,மனம் மகிழ்ச்சியில் கூவ..அவளது உதடுகளில் ஒரு இளம்புன்னகை நிரந்தரமாய் குடியேறியது.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page