காதல் இதுதானா ? – காதல் 17

காதலாகும் 17:

நாட்கள் தெளிந்த நீரோடையாய் சென்று கொண்டிருந்தன…!

இருவருக்குமே மற்றவரின் மேல் ஒரு மெல்லிய உணர்வு தோன்ற ஆரம்பித்திருந்தது.அதற்காக அது காதல் என்று சொல்லிவிட முடியாது.இருவருமே மற்றவரின் அருகாமையை விரும்ப ஆரம்பித்திருந்தனர்.ஆனால், இருவருக்குமே தாம்பத்தியம் எனும் பாடத்திற்குள் அடியெடுத்து வைக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றியிருக்கவில்லை.

ஒரே அறையில்..ஒரே கட்டிலில்தான் படுத்திருந்தார்கள். சொல்லப் போனால்,தன் மீது காலைப் போட்டுக் கொண்டு தன் மார்பின் மீது தலை வைத்துத் தூங்கும் மனைவியின் நெருக்கத்தை அவனே அறியாமல் அவன் விரும்ப ஆரம்பித்திருந்தான்.. எதிர்பார்க்க ஆரம்பித்திருந்தான்…!

ஆனால்..அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று அவன் ஒருபோதும் நினைத்ததே இல்லை.சொல்லப் போனால்..அந்த உணர்வு அவனுக்குத் தோன்றவே இல்லை என்பதுதான் உண்மை.

யாழ்வியை பற்றி சொல்லவே வேண்டியதில்லை.கணவனுக்குப் பிடித்ததை சமைத்துக் கொடுத்து அவன் வயிறு வாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் அவள் மிக மிக கவனமாக இருந்தாள்.

ஒரு நாள் இரவு,இவள் பன்னீர் சப்பாத்தியும்.. மஷ்ரூம் க்ரேவியும் தயார் செய்திருந்தாள்.யூ டியூபை பார்த்து பார்த்து செய்து முடித்தவள் ஆசையாக அவனுக்கு சென்று பரிமாற,அதை சாப்பிட்டவன் ஒன்றும் சொல்லவில்லை.

“எப்படி இருக்குது…?”,ஆர்வத்துடன் இவள் வினவ,

“ம்..நல்லாயிருக்குது…!” என்றவன் மேலே எதுவும் சொல்லவில்லை.

இவளும் சாப்பிட அமர்ந்தாள்.சப்பாத்தியைப் பிட்டு வாயில் வைத்த பிறகுதான் தெரிந்தது.. உப்பு போதவில்லை..காரம் மிகவும் அதிகம் என்று.

தண்ணீரை எடுத்துக் குடித்தவள்,”அய்யோ..காரம்… உப்பு வேற பத்தல…இது உங்களுக்கு நல்லாயிருக்குதா…?” அவள் வினவ..அவன் அப்பொழுதும் ஒன்றும் கூறாமல் இன்னொரு சப்பாத்தியை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தான்.

“ஏ.சி.பி சார்…!ரொம்பவும் காரம்…!இது வேண்டாம்..நான் வேற ஏதாவது சமைச்சு தர்றேன்…!”,அவன் கையைப் பிடித்து அவள் தடுக்க,

“ஹேய்..இதுக்கென்ன… நல்லாத்தானே இருக்குது…!”,கூறியவன் அஷ்ட கோணலாய் முகத்தை வைத்துக் கொண்டு தன்னையும் சாப்பாத்தியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த மனையாளைக் கண்டு புன்னகைத்தான்.

“உனக்கு ஒண்ணு தெரியுமா யாழ்வி…? இதைவிட மோசமான சாப்பாட்டையெல்லாம் நான் சாப்பிட்டிருக்கிறேன்…! சொல்லப்போனால்..ஒரு காலத்துல ஒரு வேளை சாப்பாடு கிடைக்கிறதே பெரிய விஷயம்தான்…!அதுவும் மூணு வேளையும் சாப்பாடு கிடைச்சுட்டா..அந்த நாள் எங்களுக்கு தீபாவளிதான்…!சாப்பாடு நல்லாயிருக்கு.. நல்லாயில்லைன்னு ஒதுக்கற நிலையில நான் வளர்ந்து வரலை…!சாப்பாடு கிடைச்சா போதும்ங்கிற சூழ்நிலையைத்தான் இந்த வாழ்க்கை எனக்கு கொடுத்திருக்கு…! இப்போ ஏதோ படிச்சு..நல்ல நிலைமையில இருக்கிறேன்.. அதுக்காக நான் கடந்து வந்த பாதையை மறக்க விரும்பல…!”,அவன் கூற அவளுக்கு என்னவோ போல் ஆகி விட்டது.

‘எவ்வளவு வேதனைப்பட்டிருப்பான்…’,அவள் மனம் தன்னவனுக்காய் பதறித் துடித்தது.

“உண்மையா சொல்லணும்ன்னா..எனக்காக ஒருத்தர் பார்த்து பார்த்து சமைச்சு தர்றது இதுதான் பர்ஸ்ட் டைம்…!நீ வந்த பிறகுதான் பார்த்து பார்த்து பரிமாறும் போது கிடைக்கற சுகத்தையே நான் அனுபவிச்சிருக்கிறேன்…!”,சிறு புன்னகையுடன் கூறியவன் சாப்பிட்டு விட்டு எழுந்து சென்று விட்டான்.

அவன் என்னவோ இயல்பாகத்தான் கூறினான்.அவளுக்குத்தான் இதயத்தை யாரோ கசக்கி பிழியும் உணர்வு.அப்பொழுது முடிவெடுத்தவள்தான்..அவனுக்கு வித விதமாக சமைத்து கொடுத்து அவனது வயிறு வாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று.இன்று வரை அதை செயல்படுத்திக் கொண்டும் இருக்கிறாள்.

அவனுக்காக.. அவனுக்காக மட்டுமே மெனெக்கெட்டு சமையலை கற்றுக் கொண்டாள்.ஞாயிற்றுக்கிழமை என்றால் சொல்லவே வேண்டியதில்லை.வித விதாமான உணவு வகைகள் டைனிங் டேபிளை அலங்கரித்திருக்கும்.

காலை வேளையில் சமையலையும் செய்து கொண்டு வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொண்டு இதற்கிடையில் அவளும் அவசர அவசரமாக கிளம்பி அலுவலகத்திற்கு ஓடுவதை கவனித்துக் கொண்டிருந்தவன் ஒருமுறை அவளிடம் கேட்டான்.

“சமையலுக்கு ஆள் வைச்சுக்கலாமா…? நீயும் ரொம்ப சிரமப்படற…?” அவன் வினவ,அவளுக்கு ஏனோ அது பிடிக்கவில்லை.

தன் கையால் சமைத்து அவனுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தாள்.எனவே,மறுத்து விட்டாள்.

“நோ ப்ராப்ளம்…ஐ கேன் மேனேஜ்…!”,அவள் உறுதியாய் கூறிவிட அவனும் விட்டு விட்டான்.

தன்னவன் வயிறு வாட கூடாது என்று பார்த்து பார்த்து கவனித்துக் கொள்பளுக்குத் தெரியவில்லை. பசியில் அவன் வாட கூடாது என்று நினைப்பவள்..விரக தாபத்தில் அவனை மூழ்கடித்து தன்னவனின் உணர்வுகளை வெடிக்க வைக்க போகிறோம் என்று அவள் அப்பொழுது அறிந்திருக்கவில்லை.

தொட்டும் தொடாமலும் இருந்த அவர்களது நெருக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் பொருட்டு..காதல் ஒரு சம்பவத்தை நடத்தி வைத்தது.

அன்று ஒரு கேஸை வெற்றிகரமாக முடித்ததற்காக கமிஷனர் வீட்டில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“கண்டிப்பா உன் வொய்ஃபையும் கூட்டிட்டு கட்டளை இட்டிருந்தார் கமிஷ்னர் ராஜன். !”,விஷ்வாவுக்கு அன்பு

மாலை நடக்கும் அந்த பார்ட்டிக்காகத்தான் இருவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர். வெள்ளை நிற ஷர்ட்..ஜீன்ஸ் பேண்ட் சகிதம் தயாராகியிருந்தவன் தன் மனையாளின் வருகைக்காக ஹால் சோபாவில் அமர்ந்திருந்தான்.

அரைமணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தவன் பொறுமையிழந்து மாடியறையை பார்த்து கத்தினான்.

“யாழ்வி…!ரெடியாகிட்டாயா.. இல்லையா…?”,

“இதோ..பத்து நிமிஷம்…!”,மேலே இருந்து குரல் மட்டும் வந்தது.

‘இந்தப் பொண்ணுங்க ஏன்தான் கிளம்பறதுக்கு இவ்வளவு லேட் பண்றங்களோ…?’, மனத்திற்குள் புலம்பியவன் சலிப்பாக சென்று சோபாவில் அமர்ந்தான்.

போனை நோண்டிக் கொண்டு அமர்ந்திருந்தவன் மெல்லிய கொலுசின் ஒலியில் நிமிர்ந்து பார்த்தான்.பார்த்தவனுக்குள் மின்சாரம் பாய்ந்த உணர்வு.அவனது கால்கள் அவனையும் அறியாமல் பிரமிப்பில் எழுந்து நின்றன.

வைன் ரெட் என்பார்களே..அதன் நிறத்தில் புடவை.ஆங்காங்கு தங்க நிற கற்கள் பதிக்கப்பட்டிருக்க அந்தப் புடவையை சிங்கிள் ப்ளீட் விட்டிருந்தாள். நடு முதுகு வரை அடர்ந்திருந்த கூந்தல் சுருள் சுருளாக கர்லிங் செய்யப்பட்டு விரித்து விடப்பட்டிருந்தது.அழகாக மை தீட்டிய புருவங்களுக்கு மத்தியில் சிவப்புக்கல் பொட்டொன்று இடம் பிடித்திருந்தது.இயற்கையாகவே சிவந்த இதழ்களுக்கு லிப் பாம் போன்று எதையோ தடவியிருந்திருப்பாள் போலும்.. நீரோட்டத்தில் கண்ணாடியாய் பளபளத்தது.அதைக் கண்டவன் அவனையும் அறியாமல் தன் நாவை நீட்டி உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டான்.

மாடியில் இருந்து இறங்கி வந்தவளை அங்குலம் அங்குலமாக ரசித்துக் கொண்டிருந்தான் அவன். சங்கு கழுத்தை வெள்ளைக்கற்கள் பதித்த நெக்லஸ் ஒன்று அலங்கரித்திருக்க..காதுகளில் அதற்கு தோதாக வெள்ளைக்கல் பதித்த காதணிகள் இடம் பிடித்திருந்தன.

ஆக மொத்தம்..இதுவரை அவளிடம் அவன் காணாத அழகு அவன் கண்களுக்கு விருந்தாக அந்த ஆறடி ஆண்மகன் பித்தாகித்தான் போனான். உடலில் சரசரவென்று ஏதோ மாற்றம் நிகழ..முதல் முறையாக அவனது உணர்வுகள் அவளைக் கண்டு எழுச்சி பெற்றன.இவ்வளவு வருட பிரம்மச்சரிய வாழ்க்கையில் அவனது உணர்வுகள் ஒருமுறை கூட அவனை இம்சித்ததில்லை.முதல் முறையாக பெண்ணவள் அவனது ஆண்மையின் உணர்ச்சிகளை அவனுக்கு அறிமுகப்படுத்த அந்த உணர்வுகளின் தாக்கத்தில் அவன் சற்று தடுமாறித்தான் போனான்.

இத்தனைக்கும் தொட்டுக் கொள்ளவில்லை..கட்டிக் கொள்ளவில்லை… !ஆனால், உணர்ச்சிகள் கடும் வேகத்தில் பாய்ந்து தன் இருப்பை அவனுக்குத் தெரியப்படுத்தின.

‘ஹோ காட்…!’,தலையை அழுந்தக் கோதியவன் அவளிடமிருந்து தன் பார்வையை அகற்றினான்.

”போகலாமா ஏ.சி.பி சார்…?”,வினவியபடி வந்தவளின் கண்களும் அவனைத்தான் மையலுடன் ரசித்துக் கொண்டிருந்தன.

முறுக்கேறிய அவனது புஜங்களிடம் அவளுக்கு எப்பொழுதுமே ஒரு மயக்கம்தான். நரம்புகள் புடைத்திருந்த புஜங்களை எடுத்துக் காட்டும் விதமாக இறுக்கிப் பிடித்திருந்த அரைக்கை சட்டை..மேல் பட்டன் போடாமல் விட்டிருந்ததினால் அதன் ஊடே தெரிந்த அவனது மார்பின் திண்மை..அவளது விழிகள் கண நேரத்தில் அவற்றில் படிந்து தடுமாற்றத்துடன் மீண்டன.

பக்கவாட்டில் திரும்பி உதட்டைக் குவித்து ஊதியவன் ஒருவாறாகத் தன் உணர்வுகளை சமாளித்துக் கொண்டு,”லெட்ஸ் கோ…!”,அவள் முகத்தைப் பார்க்காமல் விடு விடுவென்று நடந்தான்.

அவனது ஜாஸ் காரை கிளப்பினான். முன் சீட்டில் ஏறி அமர்ந்தவளுக்கு அவன் தன் சொந்த விஷயங்களுக்காக போலீஸ் ஜீப்பை பயன்படுத்துவது இல்லை என்ற எண்ணம் வந்து போனது.

வண்டியை கீர் போட்டு ரிவர்ஸ் எடுத்தவனுக்குள் சிறு பதட்டம்தான்.காரில் கமிழ்ந்திருந்த அவளுக்கே அவளுக்கான பிரத்யேக நறுமணம் மீண்டும் அவனுக்குள் உணர்வுகளின் போராட்டத்தை தூண்டி விட பார்த்தது.

‘இது சரி வராது…’,தலையை குலுக்கி கொண்டவன் காரை சாலையில் விட்டவாறு சிடி பிளேயரை ஆன் செய்தான்.

பாடலாவது அவன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வரும் என்று ஒரு எண்ணம்.ஆனால்,அவனது நிலையை மேலும் அவஸ்தைக்குள்ளாக்குவது போல் பாடல் ஒளிபரப்பாக ஆரம்பித்தது.

“குளிருது..குளிருது..

இரு உயிர் குளிருது..காதல் உறவாடி…!

நகருது.. நகருது..

ஒரு விரல் நகருது.. மோட்ச வழி தேடி…!”,

பாடல் ஒலிக்க..அவன் பட்டென்று திரும்பி அவளைப் பார்த்தான்.அவளும் பாடல் ஏற்படுத்திய அதிர்வுடன் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மாலைக் கதிரவன் அந்தியில் சாய்ந்து நிலா மகள் பவனி வர ஆரம்பித்திருந்த முன்னிரவு நேரம். போக்குவரத்து அவ்வளவாக இல்லாத வெறிச்சோடிய சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.

“இதயத்தில் வலி ஒன்று வருது..

 உன் இமைகளின் முடி கொண்டு தடவு…! 

நெஞ்சுக்குள்ளும் எரியுது நெருப்பு..

 இதை நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு..!”,

பாடல் மேலும் தொடர..அவனது மோகத்தின் தாபத்தை உணர்த்துவது போல் வரிகள் இருக்க..அவன் சட்டென்று சிடி பிளேயரை நிறுத்தி விட்டான்.

தடுமாற்றத்துடன் அவள் ஜன்னலின் புறம் திரும்பிக் கொள்ள..அவன் முயன்று சாலையில் கவனமானான். இருவருக்கும் இடையில் மௌனம் மட்டுமே ஆட்சி செய்தது.சில மணி நேரப் பயணங்களில் கமிஷ்னரின் வீடு வந்து விட..ஒரு மாதிரி தப்பித்த மன நிலையுடன் காரை விட்டு இறங்கினான் விஷ்வா.

“அடடே..வா விஷ்வா…!வாம்மா யாழ்வி…!” ஆர்பாட்டமாய் வரவேற்றார் ராஜன்.அவரருகில் புடவை கட்டிக் கொண்டு அமைதியான அழகுடன் நின்றிருந்தார் அவரது மனைவி லதா.

விஸ்வேஷ்வரனைக் கண்டவுடன் மற்ற அதிகாரிகளும் வந்து அவனை வரவேற்க..நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பாயும் என்பதைப் போல் அவளுக்கும் அப்படியொரு மரியாதை.

மற்ற அதிகாரிகளின் மனைவிகள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு யாழ்வியை சூழ்ந்து கொள்ள.. விஷ்வா தனது ஆண்கள் கூட்டணியுடன் ஐக்கியமானான்.

யாழ்வி இயல்பாகவே சட்டென்று பழகி விடுவாள் என்பதால் அனைவரிடமும் நட்பு பாராட்டுவது அவளுக்கு ஒன்றும் கடினமாக இருக்கவில்லை.

“பரவாயில்லையே..விஷ்வா சாருக்கு அப்படியே ஆப்போசிட் நீங்க..அவரு பேச கூலி கேட்பாரு… நீங்க நல்லா பேசறீங்க…உங்களுக்குள்ள எப்படி செட்டாச்சு…?”, ஒருத்தி வினவ அவள் எப்படி பதில் சொல்வாள்.

வெளியுலகை பொறுத்தவரை அவர்கள் காதலித்து மணம் புரிந்தவர்கள் அல்லவா…?

அவள் சிரித்து மழுப்ப,”உனக்குத் தெரியாதா மாலினி… ரெண்டு பேருடைய காதலும் மோதல்ல ஆரம்பிச்சு காதல்ல முடிஞ்சிருக்கு…!”,இன்னொருத்தி கூறினாள்.

“ஹி..ஹி..ஆமா…!”,எப்படியோ சமாளித்தாள் யாழ்வி.

“அப்புறம்..பெர்சனல் லைப் எப்படி இருக்குது மிஸஸ்.விஷ்வா…? வெளியிலதான் சிரிக்க மாட்டாரு..உங்ககிட்டேயாவது சிரித்து பேசுவாரா…?”,ஒரு பெண் வினவ,மாதவிடாய் நாட்களில் அவன் தன்னை கவனித்துக் கொண்டதுதான் அவளுக்கு நினைவுக்கு வந்தது.

அவளது பார்வை அவளையும் அறியாமல் ஓடிச் சென்று அவனைத் தேட..மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலும் அவனது பார்வை அவளைத்தான் தொட்டு மீண்டு கொண்டிருந்தது.

‘என்ன…?’,என்று புருவம் உயர்த்தியவன் ஒரு கையில் மது கிளாஸை வைத்திருக்க..இன்னொரு கரத்தை பேண்ட் பாக்கெட்டில் விட்டிருந்தான்.சுற்றி நின்றவர்களுடன் பேசியபடியே இவளைப் பார்த்தவன்..பெண்ணவளின் பார்வையை உணர்ந்து ‘என்ன…?’,என்று ஒற்றைப் புருவத்தை மட்டும் உயர்த்தினான்.

சுற்றி அத்தனை பேர் இருக்கும் போதும் தனக்காக அவன் பேசிய ரகசிய மொழி அவளை வெட்கத்துக்குளாக்க கன்னங்கள் இரண்டும் குப்பென்று சிவந்து போனது.

அவளைச் சுற்றியிருந்த பெண்கள் குழு இந்த நாடகத்தை கண்டு கொள்ள,”ஓஹோ…”,என்று ஆர்ப்பரித்தனர்.

அவர்களது கிண்டலில் அவள் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

பஃபே முறையில் உணவு பரிமாறப்பட்ட யாழ்வி தனக்கு வேண்டிய உணவு வகைகளை ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு அந்தப் பெண்கள் கூட்டத்துடன் நின்றாள். விஸ்வேஷ்வரனும் தனக்கான உணவு வகைகளுடன் அவளைத் தேடி வந்தான்.இவன் வரவும் பெண்கள் குழு அவ்விடத்தை விட்டு அகன்றது.

“இதுவே போதுமா…?”,குறைந்த அளவில் இருந்த அவ்னது தட்டைப் பார்த்து அவள் வினவ,

“ம்..போதும்…!வைன் சாப்பிட்டதே வயிறு ஃபுல்லான மாதிரி இருக்குது…!”,அவனுக்கு ஏனோ அவளிடம் பேசியபடி உணவருந்த வேண்டும் போல் இருந்தது.எனவே,மற்றவர்களிடம் சொல்லிவிட்டு இவளைத் தேடி வந்து விட்டான்.

இருவரும் அவ்வளவாக பேசிக் கொள்ளா விட்டாலும் பார்வைகளால் அவ்வப்போது தீண்டிக் கொண்டார்கள். அதிலும் அவனது பார்வை அர்த்தமே இல்லாமல் நொடிக்கொரு முறை அவளைத் தழுவித் தழுவி மீண்டது.

“ஸ்வீட் சாப்பிடலையா…?” இனிப்பைத் தொட்டுப் பார்க்காமல் அப்படியே வைத்திருந்தவளின் தட்டை சுட்டிக்காட்டி அவன் வினவ,

“ம்..கடைசியா சாப்பிடுவேன்…!”,என்றவள் குலோப் ஜாமூனை எடுத்து ஒரு கடி கடிக்க,சர்க்கரை பாகில் பளபளத்த அவளது இதழ்களில் அவனது பார்வை ஒரு கணம் அதிகமாகவே படிந்து மீண்டது.

‘அந்த ஜாமூனுக்கும் அவ லிப்சுக்கும் வித்தியாசமே இல்லை…!’,அவன் மனம் சம்பந்தமே இல்லாமல் நினைத்துக் கொள்ள..அவள் மீண்டும் குலோப் ஜாமூனை எடுத்து இன்னொரு கடி கடித்தாள்.

‘ஹோ காட்…!ஷீ இஸ் டெம்ப்ட்டிங் மீ…!’,அவனது உதடுகளும் தன்னை ஈரப்படுத்திக் கொள்ள.. பார்வையோ அவளது பளபளக்கும் இதழ்களையே மொய்த்தது.

அவன் பார்வை தன்னிடம் இருக்கவும்,”வேண்டுமா…?,என்று குலோப் ஜாமூனை காட்டி வேறு கேட்டு வைத்தாள்.

அவனுக்கு சட்டென்று புரையேறி விட்டது.தண்ணீரை குடித்து சமாளித்தவன் அவள் புறம் பார்வையைத் திருப்பாமல் சாப்பிட்டு முடித்தான்.

கை கழுவி விட்டு வந்தவனை மீண்டும் அதிகாரிகள் சூழ்ந்து கொள்ள..லதா வந்து யாழ்வியை அழைத்துச் சென்றாள்.

“அப்புறம்..என்ன சொல்றாரு விஷ்வா…?”,அவள் ஆரம்பிக்க பேச்சு திசை மாறியது.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page