காதல் இதுதானா ? – காதல் 20

காதலாகும் 20:

யாழ்வி கூறியதைப் போல் ஞாயிற்றுக்கிழமை கிளம்பி விட்டாள்.கணவனை எல்லாம் அவள் எதிர்பார்க்கவே இல்லை.தாய் வீடு செல்லப் போகும் குஷி அவள் கண்ணை மறைத்திருந்தது.

அவள் இல்லாத வீட்டின் வெறுமை அவனுக்கு என்னவோ போல் இருந்தது. படுக்கையறையில் நுழைந்தாலும் அவளது வாசனைகள்தான். உடற்பயிற்சி செய்யும் போது கூட தன்னை வைத்த கண் வாங்காமல் ரசித்த அவளது பார்வை நினைவுக்கு வர அவனால் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்த முடியவில்லை.படுக்கையில் படுத்தால் அதற்கு மேல் அவளது நினைவுகள் வந்து அவனைக் கொன்றது.

தினமும் அவன் மேல் தானே பாதி உடம்பை சரித்துக் கொண்டு உறங்குவாள்…தினமும் காலை எழும் போது அவன் மனம் அவளது அருகாமையைத் தேடி ஏமாற்றமடைந்தது.

கிளம்பி ஹாலுக்கு வந்தால்..டைனிங் டேபிளிலும்.. சமையலறையிலும் அவள் ஞாபகம்.அவனால் இந்த உணர்வுகளை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.வேலை முடிந்து வீட்டிற்கு வரவும் மனம் விரும்பவில்லை.அவளில்லாத வீடு..அதை அவன் விரும்பவில்லை.

‘இது தான்தானா…?’,அவனுக்கே ஒரு சந்தேகம். ஒரு பெண்ணின் அருகாமையை இவ்வளவு நாடுவோம் என்று அவன் எண்ணியிருக்கவே இல்லை.தான் உணரும் உணர்வு அவளுக்கு இல்லையா..அவன் மனம் கோபம் கூட கொண்டது.

அவள்தான் அவனுக்கு அழைத்து பேசவே இல்லையே…? வந்து சேர்ந்து விட்டேன் என்று கூறியதோடு சரி..அதற்கு பிறகு அவள் அவனுக்கு அழைக்கவே இல்லை.அப்படி அழைத்தும் அவளுக்குப் பழக்கமில்லை.

அவர்கள் என்ன அன்னியோனியமான கணவன் மனைவி போலவா குடும்பம் நடத்திக் கொண்டிருந்தார்கள்… பட்டும் படாமலும் அல்லவா அவர்களது வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.

ஆனால்,இந்தப் பிரிவு இருவருக்குள்ளுமே மற்றவர்களுக்கானத் தேடலை விதைத்திருந்தது. தாய் வீட்டில் சீராடினாலும்.. திருவிழாவில் கலந்து கொண்டாலும் அவள் மனதின் ஓரம் அவ்வப்போது விடாமல் எட்டிப் பார்க்கும் தன்னவனது நினைவுகளை அவளால் தவிர்க்க முடியவில்லை.அவ்வப்போது அவனை நினைத்தபடி தனியாக அமர்ந்து விடுவாள்.

இரண்டு நாட்கள் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்தவன்.. மூன்றாம் நாள் மதுரைக்கு கிளம்பி விட்டான்.

‘என்ன நினைத்தாலும் சரி..அவளை அழைத்து வந்து விட வேண்டியதுதான்…!’,மனதிற்குள் முடிவெடுத்த படிதான் கிளம்பியிருந்தான்.

அரை நாள் பயணத்திற்குப் பிறகு கார் அவர்களது கிராமத்தை அடைந்தது.

காரை நிறுத்தி விட்டு இவன் உள்ளே நுழையும் போது அவள் வீட்டின் பக்கவாட்டில் இருந்த தோப்பில் இருப்பது தெரிந்தது.

ஏனோ டீனேஜ் பையன் போல மனதிற்குள் ஒரு குறுகுறுப்பு.என்னவோ வெகு நாட்களுக்குப் பிறகு அவளை சந்திப்பது போல் கால்களில் அவ்வளவு வேகம்.

“அடடே..மாப்பிள்ளை..வாங்க வாங்க…!”,அவனை அந்த நேரத்தில் அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பதை ஆச்சரியத்தில் மலர்ந்த யாழ்வியின் பெற்றவர்களின் முகமே கூறியது.

“வர்றேன் மாமா…!”,கலா அவசரமாக உள்ளே சென்று அவன் குடிப்பதற்காக மோர் எடுத்து வந்து கொடுத்தார்.

‘வர முடியாது’ என்று கூறிய மாப்பிள்ளை திடீரென வந்து நின்றதில் அவர்களுக்கு கையும் ஓடவில்லை.காலும் ஓடவில்லை. ஆனால்,மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இருவரிடமும் நலம் விசாரித்தவன் வீட்டிற்குள் கூட செல்லவில்லை.’யாழ்வியை பார்த்து விட்டு வருகிறேன்..’,என்றபடி தோப்பு பக்கம் சென்று விட்டான்.

ரகுவரனும் கலாவதியும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.அந்த வயதைக் கடந்து வந்தவர்கள்தானே அவர்களும்..

மருமகன் வந்திருக்கிறான் என்று கோழி அடிப்பதற்காக ரகுவரன் சென்றுவிட,கலாவதி சமையலை கவனிப்பதற்காக அவசரமாக உள்ளே விரைந்தார்.

மாமரத்தின் இலை ஒன்றை கையில் வைத்தபடி மாமரத்தின் மேல் சாய்ந்திருந்தாள் யாழ்வி.அவளை கண்டுவிட்டவன் அவளை நெருங்காமல் இன்னொரு மரத்தின் மேல் சாய்ந்தபடி கைகட்டி நின்றான். இவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் பாட ஆரம்பித்தாள்.

“தலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன்…

தலைவனைப் பிரிகையிலே

தலையணை துணையறிந்தேன்…!”,

ஏக்கத்துடன் வெளிப்பட்ட அவளது குரல் அவனை அசைத்துப் பார்த்தது. தன்னைப் போல பிரிவு அவளையும் வாட்டியிருக்கிறது என்பதை அவன் புரிந்து கொண்டான். இல்லையென்றால் பிரிவில் தோய்ந்து இப்படியொரு பாடல் அவள் வாயிலிருந்து வருமா…?

அவன் மனம் ஒருபக்கம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது.

‘நான் அவளைத் தேடியதைப் போல அவளும் என்னைத் தேடியிருக்கிறாள்…’,அவன் மனம் சந்தோஷமாய் நினைத்துக் கொண்டது.

“அப்படியா…?”,அமைதியான தோப்பில் திடீரென்று ஒலித்த அவனது குரலில் அவள் விசுக்கென்று நிமிர்ந்தாள்.

எதிரே மரத்தில் சாய்ந்தபடி கைகட்டி அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் அவளது கணவன்.அவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.தனக்காக அவன் வேலையை விட்டு விட்டு வருவான் என்றெல்லாம் அவள் எதிர்பார்த்திருந்திருக்கவில்லை.

அதிர்ச்சியில் பிரம்மை பிடித்தவள் போல் அவள் அப்படியே நிற்க..அவன் அவளை நெருங்கினான்.

“என்ன இன்னும் நம்ப முடியலையா…?”, புருவங்களை உயர்த்தியவன் இதழை குவித்து அவள் முகத்தில் ஊத..அவள் பட்டென்று இவ்வுலகத்திற்கு வந்தாள்.

“ஏ.சி.பி சார்…?”,திடீரென்று அவனைப் பார்க்க நேர்ந்த இன்ப அதிர்ச்சியில் அவள் முகம் பிரகாசமாய் மின்னியது.

ஒரு கணம் அவளை இமைக்காமல் நோக்கியவன் பிறகு என்ன நினைத்தானோ தலையை இருபுறமும் ஆட்டிக் கொண்டான்.

“நீங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை…!”,

“ஹ்ம்ம்…ஆபிஸ்ல வொர்க் இல்லை..சரி இங்கேயாவது கிளம்பி வருவோமேன்னு வந்துட்டேன்…!”,

‘உன்னைத் தேடித்தான் வந்தேன்’ என்று அவளிடம் கூற அவனது ஈகோ தடுத்தது.’தனக்காக அவன் வரவில்லையா…?’,அவள் மனம் செல்லமாய் சிணுங்கியது.

மதிய உணவு தடபுடலாய் தயாராகி இருந்தது.மட்டன் குழம்பு,மட்டன் வறுவல்,ஈரல் பொரியல் என உணவு வகைகள் களை கட்டியிருக்க..கலாவதி பார்த்து பார்த்து பரிமாறிக் கொண்டிருந்தார்.

ரகுவரனும் விஸ்வேஷ்வரனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். தன் தாயுடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொள்வதாக கூறிவிட்டு யாழ்வி அவர்கள் அருகில் அப்பளத்தைக் கடித்தபடி அமர்ந்திருந்தாள்.

“நாளைக்கு நாங்க கிளம்பறோம் மாமா…!”,விஷ்வா ஆரம்பிக்க, ரகுவரன் பதில் கூறுவதற்குள் யாழ்வி முந்திக் கொண்டு பதில் கூறினாள்.

“நான் வரலைங்க…! நீங்க மட்டும் போயிட்டு வாங்க… நான் ஒரு வாரம் அம்மா கூட இருந்துட்டு வர்றேன்…!”,அவள் கூற அவன் அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான்.

“எனக்கு சாப்பாட்டுக்கு பிரச்சனையா இருக்குது யாழ்வி…!கடை சாப்பாடு எனக்கு ஒத்துக்கல…! நேத்து கூட வயிறு வலி வந்திடுச்சு…!”,இதைக் கூறும் போது அவன் ஈரல் பொரியலை ஒரு கட்டு கட்டிக் கொண்டிருந்தான்.

‘வயிறு வலி’ என்றதும் அவள் பதறத்தான் செய்தாள்.ஆனால்,அவன் எதிர்பார்த்தது போல் ‘வீட்டிற்கு வருகிறேன்’ என்றெல்லாம் கூறவில்லை.

“அப்போ.. நீங்க கடையில சாப்பிட வேண்டாம்…!அன்னைக்கு வீட்டு வேலைக்கு ஒரு அக்கா வந்தாங்கல்ல.. அவங்க போன் நம்பர் என்கிட்டேதான் இருக்குது…!நான் வர்ற வரைக்கும் அவங்களை வந்து சமைச்சு தர சொல்றேன்…!”,அவனிடம் உரைத்தபடியே அவள் போனை எடுக்க அவன் கடுப்பாகிப் போனான்.

‘இடியட்…!கொஞ்சமாவது மனுஷன் அவஸ்தையை புரிஞ்சுக்கறாளா பாரு..’,அவன் மனம் அவளை தாளித்துக் கொண்டிருந்தது.

“எனக்கு அவங்க சமையல் பிடிக்காது…!”,

“அது எப்படிங்க..சாப்பிடாமலே பிடிக்காதுன்னு சொல்றீங்க…?”,அவள் விடாமல் வாதாடினாள்.

ரகுவரனுக்கும் கலாவதிக்கும் மாப்பிள்ளை பெண்ணை அழைத்துச் செல்ல விரும்புகிறார் என்பது புரிந்து விட்டது.அது புரியாமல் மகள் இப்படி அடம் பிடிக்கிறாளே என்று இருந்தது அவர்களுக்கு.

அனைவரின் முன்னிலையிலும் எப்படி அவளை ‘வீட்டுக்கு வா’ என்று அழைப்பது என்று தெரியாமல் அவன் அமைதி காத்தான்.தனியாக இருந்திருந்தாலும் அவளை அப்படி அழைத்திருக்க மாட்டான் என்பது வேறு விஷயம்.

அவன் அமைதியாக நிமிர்ந்து கலாவதியை பார்த்தான். பாவமாக தன்னை நோக்கிய மருமகனின் பார்வையிலிருந்து அவர் என்ன புரிந்து கொண்டாரோ… மகளிடம் பேசினார்.

“யாழ்வி…!மாப்பிள்ளை தான் கூப்பிடறாரல்ல.. போயிட்டு வா..!”,என்றார்.

“அம்மா…!நான் ஒரு வாரம் ஆபிஸ்க்கு லீவ் போட்டுட்டு இங்கே இருக்கலாம்ன்னு தான் வந்தேன்…!அவரு சாப்பாட்டுக்கு நான் அரேன்ஞ் பண்றேன்… நீங்க அமைதியா இருங்க…!”,என்றாள்.

இப்பொழுது கலாவதி அவஸ்தையுடன் நிமிர்ந்து தனது கணவரை நோக்கினார்.

‘உன் புள்ளைதானே..எப்படியோ சமாளி…’நமட்டு சிரிப்புடன் குனிந்து கொண்டார் அவர்.

எதையோ எடுப்பதை போல் சமையலறைக்குள் விரைந்தவர்..யாழ்வியையும் அழைத்தார்.

“யாழ்வி…!கொஞ்சம் இங்கே வந்துட்டு போம்மா…!”,அவர் அழைக்க அவள் எழுந்து சென்றாள்.

சமையல் கட்டுக்குள் வந்தவளை பிடித்துக் கொண்டார் கலாவதி.

“உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்குதா…?மாப்பிள்ளை உன்னை அவர்கூட கூட்டிட்டு போக விரும்பறாரு…!எப்படி கூப்பிடறதுன்னு தெரியாமல் தயங்கிட்டு இருக்கிறாரு…!நீ மேலும் மேலும் ஏன் அவரை சங்கடப்படுத்தற…?”,அன்னை கூறவும்தான் அவள் அந்தக் கோணத்தில் யோசிக்க ஆரம்பித்தாள்.

அவன் தன்னை அழைத்துச் செல்ல விரும்புகிறான் என்ற எண்ணமே அவளுக்குள் சில்லென்ற ஒரு உணர்ச்சியைத் தோற்றுவித்தது.

“கிளம்பி போம்மா…! உன்னைப் பிரிஞ்சு அவரால இருக்க முடியல..அதனாலதான் நீ ஊருக்கு வந்து இரண்டு நாளிலேயே ஓடி வந்துட்டாரு…!உனக்கு என்ன..அம்மா அப்பா கூட இருக்கணும்..அவ்வளவுதானே…?அடுத்த மாசம் நானும் உன் அப்பாவும் உன் வீட்டுக்கு வந்து ஒரு வாரம் தங்கிட்டு போறோம்…!சரிதானே…?”,இதமாய் அவர் வினவ அவள் தலையாட்டினாள்.

கணவனின் நிலையை அன்னை எடுத்துக் கூறவும் அவளுக்கு வானில் பறக்கும் உணர்வு. தனக்காகத்தான் இங்கே வந்திருக்கிறான்.. என்னைப் பிரிந்து அவராலும் இருக்க முடியவில்லை..அவள் மனம் மத்தாப்பூவாய் மலர்ந்தது.

வெளியே வந்தவள் ஒன்றும் பேசாமல் மாடியில் இருக்கும் தங்களது அறைக்குள் புகுந்து கொண்டாள்.

‘நீயும் வா..’ன்னு என்னைப் பார்த்து கூப்பிட்டால் தான் என்னவாம்…?’,அவள் மனம் செல்லமாய் கோபித்துக் கொண்டது.

அவளுக்குத் தெரியாதல்லவா…? தன் மணாளனுக்கு எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தி பழக்கம் இல்லையென்று…!அவளுக்கான அவனது தேடலும்..அவன் தவிக்கும் தவிப்பும்..அவளால் ..அவளால் அறிமுகப்படுத்தும் உணர்வுகளில் வெந்து உருகும் விரக தாபமும் காதல்தான் என்று அவன் அறிந்திருக்கவில்லை.அப்படியே அறிந்திருந்தாலும் அவன் அதை வெளிப்படுத்த மாட்டான்.ஏனென்றால் அவனுக்குத்தான் உணர்ச்சிகளை வெளிக்காட்டி பழக்கம் இல்லையே…?

ஆனால்.. யாழ்வியோ அப்படியே அவனுக்கு எதிரானவள்.அவளைப் பொறுத்தவரை எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டி விட வேண்டும். ‘நான் உன்னைத் தேடினேன் ’என்பதைக் கூட வாய் வார்த்தையாய் சொல்லிவிட வேண்டும் என்று நினைப்பவள். காதல் என்றால் உணர்ந்து கொள்வதையும் தாண்டி ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை உடையவள்.

எல்லாம் சரிதான்…!ஆனால், இந்தக் காதலில் இலக்கணம் வேறு வகையானது.பொத்தி பொத்தி வைக்கும் உணர்ச்சிகள் அவர்களையும் அறியாமல் பொங்கி வெடிக்கத்தான் செய்யும். உணர்ந்து கொள்வதும் காதல்தான்..வெளிக்காட்டிக் கொள்வதும் காதல்தான்…!அவன் எப்படி அவளுக்குத் தன் காதலை உணர்த்துவான்..அவள் எப்படி அவனது காதலை கண்டு கொள்வாள்..பார்ப்போம்…!

சாப்பிட்டு விட்டு மேலே அறைக்குச் சென்றவன்,”நீ சாப்பிடலையா…?” கட்டிலில் அமர்ந்திருந்தவளிடம் வினவினான்.

“இதோ போறேன்…!”,என்றவள் ஒன்றும் பேசவில்லை.

“நீயும் என்கூட வர்றதானே…?”,

“உங்களுக்கு சமையல் தானே பிரச்சனை..அதுக்கு நான் அரேன்ஜ் பண்றேன்…!”,கையில் மொபைலை வைத்துக் கொண்டு அவள் வேண்டுமென்றே வெறுப்பேற்றினாள்.

அவனுக்கு சுள்ளென்று கோபம் வந்து விட்டது.’இவ்வளவு தூரம் சொல்றேன்..புரிஞ்சுக்கிறாளா பாரு..’,கோபத்துடன் அவளை உறுத்து விழித்தவன்,

அவள் கையிலிருந்த மொபைலை பிடுங்கி கீழே விட்டெறிந்தான்.

“சாப்பாடுதான் பிரச்சனைன்னா..இவ்வளவு காலம் சமாளிச்சவனுக்கு இந்த ஒரு வாரம் சமாளிக்க தெரியாதா…? பெருசா பேச வந்துட்டாள்…! நீ ஒண்ணும் வர வேண்டாம்..போடி…!”,பல்லைக் கடித்துக் கொண்டு எரிந்து விழுந்தவன் படுக்கையில் படுத்து கண்களை மூடிக் கொண்டான்.

ஸ்தம்பித்துப் போய் நின்றது அவள்தான். ஏதோ அவனை வெறுப்பேற்றத்தான் இவ்வாறெல்லாம் செய்தாள். இந்த அளவிற்கு கோபப்படுவான் என்று அவள் எண்ணியிருக்கவில்லை. முதல் முறையாக நேரில் கண்ட அவனது கோபம் மனதுக்குள் பயப்பந்தை கிளப்பி விட்டாலும்..அதையும் மீறி அவளது வீம்பு மேலே எழுந்தது.

‘வாயைத் திறந்து நான் உன்னைத் தேடினேன்.. நீயும் கூட வான்னு கூப்பிட்டால் தான் என்னவாம்…? வர வேண்டாம்ன்னு சொல்லிட்டாரல்ல.. இருக்கட்டும்..நானும் போக போறதா இல்லை…!’,மனதிற்குள் பொரிந்து தள்ளியவள் உடைந்து கிடந்த மொபைலை எடுத்து மீண்டும் பொருத்தி உயிர்ப்பித்தாள்.

டிஸ்பிளே தான் உடைந்திருந்தது.மற்றபடி போன் வேலை செய்தது.

“இது என்ன நீங்க வாங்கி கொடுத்த போனுன்னு நினைச்சீங்களா…என் அப்பா வாங்கி கொடுத்தது…!எந்த உரிமையில இதை கீழே போட்டு உடைச்சீங்க…?”,கோபத்துடன் அவள் வினவ அவனிடம் பதிலில்லை.கண்களை மூடி அப்படியே படுத்திருந்தாள்.

“நாளைக்கு நீங்க மட்டும் கிளம்பி போங்க…இன்னும் பத்து நாள் நான் இங்கேதான் இருக்கப் போகிறேன்…!”,ஆத்திரத்துடன் உரைத்தவள் கீழே இறங்கி சென்று விட்டாள்.

”சரிதான்..போடி…”,அவன் முணுமுணுத்துக் கொண்டான்.

‘வர மாட்டேன்’ என்று கூறினாலும் அடுத்த நாள் அவன் கிளம்பும் போது அவளும் தயாராகித்தான் இருந்தாள்.தன்னுடன் காரில் ஏறியவளைப் பார்த்து புருவம் உயர்த்தினான் அவன்.

”நான் ஒண்ணும் உங்களுக்காக வரல.. ஆபிஸ்ல இருந்து எனக்கு கால் வந்துச்சு…!”,அவனது புருவ உயர்த்துதலுக்கு அவளிடம் இருந்து பதில் வந்தது.

தலையை ஆட்டி மெலிதாக சிரித்துக் கொண்டவன் அனைவரிடமும் கூறிவிட்டு காரை கிளப்பினான்.

அவளும் உடன் வருவது அவனது கோபத்தை போக்கியிருந்தது. ஒரு மாதிரி துள்ளலான மன நிலையுடன் காரை ஓட்டினான்.அவனது சக தர்மிணிதான் புசு புசுவென்று கோபத்துடனேயே அமர்ந்திருந்தாள்.

அவன் தன் நிலையிலிருந்து கீழிறங்கி வாவென்று அழைக்கவில்லை.ஆனால்,நாம் அவனைப் பிரிந்து இருக்க முடியாமல் கிளம்பி விட்டோம் என்ற எண்ணம் அவள் மீதே அவளுக்கு கோபத்தை வரவழைத்திருந்தது.

அவனோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஏதோ ஒரு பாடலை ஹம் செய்தவாறே வந்தான். பாடலை விசிலடித்தபடியே அவ்வப்போது அவளை நோக்கி ஒரு மார்க்கமான பார்வையையும் வீசி வைத்தான்.

‘என்ன பாட்டு பாடறான்…?’ அவள்தான் மண்டையை பிய்த்துக் கொண்டாள்.

உற்று உற்று கவனித்தாலும் அவன் ஹம் செய்யும் பாடலை கண்டுபிடிக்க முடியவில்லை.’சரி.. கண்டுபிடிக்க முடியாவிட்டால் போய் தொலையட்டும்…’,என்று அமைதியாகவும் இருக்க முடியவில்லை.அவன்தான் ஒரு மார்க்கமாக அவளைப் பார்த்தபடி அந்தப் பாடலை விசிலடித்துக் கொண்டே வந்தானே…?

“நீ எப்பவும் ஜீன்ஸ் குர்தி தான் போடுவியா…?”,என்று வேறு கேட்டு வைத்தான்.

“ஏன்..இதுக்கென்ன குறைச்சல்…?”,போட்டிருந்த நீல வண்ண குர்தியை இழுத்துக் காட்டி அவள் வினவ,

மேலிருந்து கீழாக அவளை மேய்ந்தவன்,”குறைச்சலே இல்லை…!அதுதானே பிரச்சனை…!”,என்று முணுமுணுத்தான்.

நல்லவேளை..அவளுக்குப் புரியவில்லை.

“வாட்…?”,

“ஒண்ணுமில்ல…”,கண்ணைச் சிமிட்டியவன் சாலையில் கவனமானான்.

பயணம் தொடர்ந்தது.இடையில் ஓரிடத்தில் நிறுத்தி தேநீர் அருந்தினர்.காரிலேயே அமர்ந்து விட்டவளுக்கு வாங்கி வந்து கொடுத்தான்.மீண்டும் பயணம் ஆரம்பமாக..அவளுக்குத் தூக்கம் கண்களை சுழற்றியது.

“சீட்டை பின்னாடி இழுத்து விட்டுட்டு படுத்து தூங்கு…!”,தான் கூறாமலேயே தன் கண்களைப் பார்த்து புரிந்து கொண்டு அவன் காட்டிய அக்கறை அவளுக்குப் பிடித்திருந்தது.

எப்படியோ கார் நீண்ட பயணத்திற்குப் பிறகு சென்னையை அடைந்த போது இரவாகி விட்டது.இரவு உணவை ஹோட்டலிலேயே சாப்பிட்டு விட்டு வந்து விட்டனர்.

குளித்து விட்டு வந்து அவன் படுக்க ஆயத்தமாக அவன் மனையாளோ கட்டிலில் தலையணைகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாள்.

அவளது அருகாமையை எதிர்ப்பார்த்து குஷியுடன் வந்தவனுக்கு அவள் தலையணையை அடுக்கி கொண்டிருந்தது கடுப்பைக் கிளப்பியது.

அடுக்கி முடித்தவள் ஒரு திருப்தியுடன் நிமிர்ந்து, “ஓகே..இப்போ தூங்கலாம்…!”,என்றபடி படுத்து விட்டாள்.

“ஆமா..இது பெரிய சீனப் பெருஞ்சுவர்…! இதைத் தாண்டி உன்னால வர முடியாது…”,கடுப்புடன் முணுமுணுத்தவன் அவளை ஒரு மாதிரியாக பார்த்து வைத்தான்.

‘எதுக்கு இப்படி பார்க்கிறான்…?’,அவளது கேள்விக்கான பதில் அடுத்த நாள் காலை கிடைத்தது.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page