காதலாகும் 25:
“இன்னைக்கு வரட்டும்…என் கையால சமைச்ச சாப்பாடை சாப்பிட வைக்காமல் நான் விடப் போறதா இல்லை…!அவருக்கு மட்டும்தான் பிடிவாதம் பிடிக்கத் தெரியுமா…? எனக்கு அதைவிட அதிகமாகவே பிடிவாதம் பிடிக்கத் தெரியும்…!”,தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தவள் அடுப்பில் இருந்த வாணலியில் நறுக்கி வைத்த வெங்காயத்தைப் போட்டாள்.
அவள் மனதைப் போலவே சடபுடவென்று பொரிந்தது.
“ஒரு மனுஷனுக்கு கோபம் இருக்கலாம்.. தப்பில்லை… அதுக்காக கோபம் மட்டுமே இருக்க கூடாது…! ஏதோ அப்படி பேசிட்டேன் தான்..நான் ஒண்ணும் மனசார அந்த வார்த்தையை சொல்லலையே…!ஏதோ என்னை அறியாமல் வந்திடுச்சு…!அதுக்குன்னு இப்படியா ஒரு மாசம் ஆகியும் கோபத்தை இழுத்துப் பிடிச்சிட்டு வைச்சிருப்பாரு…”,கரண்டியை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருந்தவள் யாரிடம் பேசினாளோ..அவளுக்கு முன்னால் சுவர்தான் இருந்தது.
“பார்க்கிறேன்..அவரா.. நானான்னு…”, பேசிக் கொண்டே திரும்பியவள் பேயறைந்ததைப் போல் அப்படியே நின்றாள்.
சமையலறை நிலவில் சாய்ந்தபடி இரு கைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் அவளது மணவாளன்.
“ஹி…ஹி..வாங்க..எப்போ வந்தீங்க…?” அபத்தமாய் அவள் அசடு வழிய..
அவளையும் அவள் சமைத்துக் கொண்டிருக்கும் பாத்திரங்களையும் ஒரு பார்வை பார்த்தவன்,” ஆனாலும்.. உனக்கு தன்னம்பிக்கை அதிகம் தான்…!”,உதட்டைப் பிதுக்கி கூறிவிட்டு சென்று விட்டான்.
‘ஹைய்யோ..எல்லாத்தையும் கேட்டுட்டார் போலவே..எப்பவும் வர்றதுக்கு எட்டு மணி ஆகுமே.. இன்னைக்கு என்ன ஏழு மணிக்கே வந்துட்டாரு…’,யோசித்துக் கொண்டிருந்தவள் சமைப்பதை மட்டும் நிறுத்தவில்லை.
இன்று எப்படியாவது அவனை சாப்பிட வைத்துவிட வேண்டும் என்று அவள் அவ்வளவு உறுதியாக இருந்தாள்.அந்த முரட்டுக்காரனின் பிடிவாதத்தைப் பற்றி அவள் இன்னும் முழுதாக அறிந்திருக்கவில்லை.
குளித்து உடைமாற்றி வந்தவன் தான் வாங்கி வந்த உணவை பிரித்தபடி டைனிங் டேபிளில் அமர..அவள் அவனைத் தடுத்து தான் சமைத்ததை பரிமாறினாள்.
“ம்ப்ச் …”,எரிச்சலுடன் அவளை முறைத்தவன் அவள் தள்ளி வைத்திருந்த தான் வாங்கி வந்த உணவை எட்டி எடுத்தான்.
“ப்ளீஸ் விஷ்வா…!இன்னும் எவ்வளவு நாள்தான் எனக்கு தண்டனை தருவீங்க…?போதும்…!”,அவள் அதை பறிக்க முயல,அவளது கரம் அவனது கரத்தின் மீது படிந்தது.
ஒரு நொடி தன் கரத்தின் மேல் இருக்கும் அவளது கையை பார்த்தவன்,அவளை சுட்டெரித்தான்.கண்களாலேயே அவளது கரத்தை சுட்டிக்காட்டி அவன் கடுமையாய் எச்சரிக்க..அவளுக்கும் பயம்தான்.
ஒரு மனிதன் வாயைத் திறக்காமல் கண்களாலேயே கோபத்தை வெளிப்படுத்த முடியுமா…அவன் செய்து கொண்டிருந்தான்.
இருந்தாலும் மனதில் எடுத்த முடிவு அவளுக்கு உறுதியை கொடுக்க அவள் தன் கரத்தை எடுக்கவில்லை.அவன் கையிலிருக்கும் பார்சலை கைப்பற்றுவதிலேயே குறியாய் இருந்தாள்.
“மரியாதையா கையை எடுத்திடு…!இல்லைன்னா..என்ன நடக்கும்ன்னு எனக்கே தெரியாது…!”,அவன் வார்த்தைகளை கடித்துத் துப்ப,அவன் முகத்தில் தெரிந்த கடுமையில் அவளது கரம் தானாய் விலகி கொண்டது.
உணவு பொட்டலத்தைப் பிரித்து அவன் சாப்பிட ஆரம்பிக்க..அவளுக்கு அழுகையே வந்து விட்டது.
‘இல்லை…!இன்னைக்கு நான் விட்டுத் தர்றதா இல்லை.. என்ன நடந்தாலும் சரி.. இவருடைய கோபத்துக்கு இன்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன்…’,மனதிற்குள் உறுதியுடன் நிமிர்ந்தவள் கோபத்துடன் அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவைப் பிடுங்கி கீழே எறிந்து விட்டாள்.
அவனுக்கு சுள்ளென்று கோபம் வந்து விட்டது.
“ஏய்ய்ய்…”,வேகமாக எழுந்தவன் அவள் கன்னத்திலேயே ஓங்கி ஒரு அறை விட்டு விட்டான்.
போலீஸ்காரனின் அடி..கேட்கவா வேண்டும்…?கன்னம் தீயாய் எரிய உதட்டோரத்தில் இருந்து மெலிதாக இரத்தம் கூட எட்டிப் பார்த்து விட்டது.
அடித்த பிறகுதான் அவளை அறைந்து விட்டோம் என்பதே அவனுக்கு உறைத்தது.
“அடிங்க…!அடித்தாலாவது உங்க கோபம் குறையுதான்னு நான் பார்க்கிறேன்…!”,பயங்கரமாய் வலித்த கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அந்த நிலையிலும் அவள் பேசினாள்.
“ச்சே…”,கோபத்துடன் கையை உதறியவன் மேலே சென்று விட்டான்.
சிறு வயதில் இருந்து ஒருவேளை உணவுக்காக கஷ்டப்பட்டு வளர்ந்தவனுக்கு.. இப்பொழுது அவள் உணவைத் தூக்கி எறியவும் கோபம் வந்து விட்டது.அந்த கோபத்தில் தான் அடித்து விட்டான்.
தேம்பலுடன் நாற்காலியில் சாய்ந்தவளுக்கு உடலை விட மனம் வலித்தது. பிறந்ததில் இருந்து செல்லச் சீமாட்டியாக வளர்க்கப்பட்டவள்..தாய் தந்தையிடம் இருந்து ஒரு சின்ன அதட்டலைக் கூட வாங்கியிராதவள்..இன்று கணவனின் கையால் அடி வாங்கியிருந்தாள்.
அது கூட அவளுக்குப் பெரிய விஷயமாக இல்லை.இன்னும் கணவனது கோபம் குறையவில்லையே என்பதுதான் மலையளவு வேதனையைத் தந்தது.
அழுது கொண்டே டைனிங் டேபிளில் தலை வைத்துப் படுத்தவள் எப்பொழுது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.
மேலே அறையில் தஞ்சமடைந்தவனுக்கோ அதற்கு மேல் மனம் வலித்தது.அவளை அடித்து விட்டு வந்து விட்டான்தான்.ஆனால், அவளுக்கு வலித்ததை விட ஆயிரம் மடங்கு அதிகமாய் அவனுக்கு வலித்தது.
‘பாவம்… எனக்காக ஆசை ஆசையா சமைத்திருப்பாள்…’,மனம் அவள் நிலையில் நின்று சிந்திக்க ஆரம்பித்தது.
கடந்த சில நாட்களாக அவளது கண்ணீரையும் அவள் படும் வேதனையையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறான்… ஒவ்வொரு முறை அவள் முகம் சுருங்கும் போதும் அவன் இதயம் சுருங்கி விடுகிறது அல்லவா…?
மனதில் இருக்கும் வேதனை அவனை இரவு தூங்க விடவில்லை.கீழே சென்று மனையாளை பார்க்கவும் ஏதோ ஒன்று தடுத்தது.
காலையும் விடிந்து விட..கிளம்பி கீழே சென்றவனின் பார்வையில் விழுந்தது யாழ்வி தான்.டைனிங் டேபிளிலேயே கவிழ்ந்து தூங்கியிருந்தாள். கன்னத்தில் வேறு இவன் அடித்த விரல் தடங்கள் சிவந்து பதிந்திருந்தன.உதட்டோரம் வந்த இரத்தம் கூட காய்ந்து போயிருந்தது.
‘ஆனாலும் உனக்கு இவ்வளவு கோபம் ஆகாது விஷ்வா…’,மனம் அவனைத் திட்டியது.
இனிமேலும் அவளை கண்டு கொள்ளாமல் செல்ல அவனுக்கு மனம் வரவில்லை.உதட்டைக் குவித்து ஊதியவன்..தன் சிகையை கோதிக் கொண்டு அவளருகே நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.
“யாழ்வி…!”,மென்மையாய் அவன் அழைக்க அவள் எழவில்லை.
அவனது கரம் மெல்ல உயர்ந்து அவளது தலையை வருடி விட்டது.அவனது அழைப்பிற்கு எழாதவள்..அவனது வருடலில் கண் விழித்து விட்டாள்.தன்னருகே அமர்ந்திருந்தவனைக் கண்டதும் பட்டென்று எழுந்து அமர்ந்தாள்.
கைகளை விலக்கி கொண்டவனால் அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை.அவளை கை நீட்டி அடித்த குற்றவுணர்வு மனதை உறுத்தியது.
தொண்டையை செருமிக் கொண்டவன்,”ஸாரி…”,என்றான் மெல்லிய குரலில்.
அவளால் நம்பவே முடியவில்லை.தன்னவனா மன்னிப்பு கேட்கிறான்..விழிகளை விரித்து அவனை நோக்கினாள்.
“சரி வா…காயத்துக்கு மருந்து போட்டு விடறேன்…!” அவன் பார்வை வருத்தத்துடன் அவளது கன்னம் மற்றும் உதட்டு காயத்தில் படிந்தது.
அவன் கூறவும்தான் அவளுக்கு காயமே நினைவுக்கு வந்தது. ஒரு பக்கம் கன்னம் முழுவதும் ஏதோ பாறாங்கல்லை வைத்து அழுத்தியது போல் வலித்தது.மெல்ல அவள் விழிகளை சுருக்க,
“மருந்து போடணும் யாழ்வி… இல்லைன்னா..இரத்தம் கட்டிடும்..!”,கைப்பிடித்து அவளை எழுப்பியவன் மேலே தங்களது அறைக்கு அழைத்துச் சென்றான்.
அவனது முதலுதவி பெட்டியில் வைத்திருந்த மருந்தை எடுத்து வந்தவன் கட்டிலில் அமர்ந்திருந்தவளின் அருகே அமர்ந்தான்.
“கொடுங்க..நானே போட்டுக்கிறேன்…”,அவள் மருந்தை வாங்க கை நீட்ட,
“நானே போட்டு விடறேன்…!”அவளிடம் கொடுக்க மறுத்தவன் மென்மையாய் அவளது கன்னத்தில் மருந்தை தடவி விட்டான்.
மருந்தை போட்ட பிறகும் அவன் கரங்கள் அங்கேயே தஞ்சம் இருக்க அவனது விரல்களோ இதமாய் அவளது இதழ்களை வருடியது.
‘பூ மாதிரி இருக்கிறாள்.. இவளை போய் அடிச்சிட்டோமே…அதுவும் என் அடியை எப்படித் தாங்கினாளோ…?’, மனம் வேதனையுடன் நினைத்துக் கொண்டது.
“ஸாரி டி…!”,அவன் மீண்டும் மன்னிப்பு வேண்ட,
“என் மேல அப்படி என்ன கோபம் விஷ்வா…?நான் ஒண்ணும் அன்னைக்கு மனசார அந்த வார்த்தைகளை சொல்லல… ஏதோ..அப்போதைய சூழ்நிலையில என்னையறியாமல் வந்த வார்த்தைகள் அது…!”,கண்ணீர் மல்க அவள் தன் தரப்பு வாதத்தை வைக்க,
அன்றைய நினைவில் அவன் உடல் இறுகியது.அவள் கூறிய வார்த்தைகள் மீண்டும் காதில் அறைய..அவனது கரம் அவளது கன்னத்தை விட்டு அகன்றது.
“அப்புறம்..நீ சொன்ன வார்த்தைகளுக்கு வேற என்ன அர்த்தம் இருக்க முடியும்…?”
“உங்க தொடுகை எனக்கு அருவெறுப்பை ஏற்படுச்சுங்கிற அர்த்தத்துல நான் சொல்லலைங்க…!அன்னைக்கு உங்களோட ஒவ்வொரு தொடுகைக்கும் காதலோட உருகிக் குழைஞ்ச என் நிலைமை உங்களுக்குப் புரியலையா…?தெளிவா சொல்லணும்ன்னா.. நான் உங்களை காதலிக்கிறேன் விஷ்வா…!எப்போ..எப்படின்னு எனக்குத் தெரியாது…ஆனால்..நான் உங்களை காதலிக்கிறேன்…!” அவன் மார்பில் சாய்ந்து கதறினாள் அவள்.
மனம் வானவெளியில் பறப்பது போலொரு உணர்வு அவனுக்கு. இதயம் முழுவதும் சில்லென்று மத்தாப்பூ பூக்க..அவனது ஒவ்வொரு அணுவும் மகிழ்ச்சியில் கும்மாளமிட்டது.யாரும் இல்லாமல் தனியாய் வளர்ந்தவனுக்கு.. தன்னை மட்டுமே காதலிக்கும் ஒரு இதயம் கிடைத்ததில் அவன் அளப்பரிய மகிழ்ச்சி கொண்டான்.
“இதோ..இப்போ கூட உங்க அணைப்பிலதான் இருக்கிறேன்…!நீங்க அருவெறுப்புன்னு நினைக்கிறவள்தான் இப்படி உங்களை கட்டிப் பிடிச்சிட்டு இருப்பாளா…?”,அவன் மார்பில் இருந்தபடியே தலையை மட்டும் உயர்த்தி அவள் அவனை பார்த்து வினவ,
சிறு சிரிப்புடன் அவளை அணைத்துக் கொண்டான் அவன்.
“அப்புறம் எதுக்கு அந்த வார்த்தைகளை சொன்ன டி…? நாம இருந்த நிலைமையில அந்த வார்த்தைகள் என்னை ரொம்பவும் ஹர்ட் பண்ணுச்சு…”,
அவன் வினவவும் பட்டென்று நிமிர்ந்தவள் ஒரு வித வேகத்துடன் அவனை பார்த்தாள்.எதையோ சொல்ல அவளது இதழ்கள் துடிதுடித்தது.ஆனால்,அவளால் சொல்ல முடியவில்லை.
‘உன் மனதில் என்மீது காதல் இல்லை..அதனால்தான் விலகினேன்..’ என்று அவனை பார்த்து அவளால் சொல்ல முடியவில்லை.காதலை சொல்லிப் புரிய வைக்க கூடாது..அவனாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அவள் எண்ணினாள்.
தான் இப்போது இதைக் கூறினால் தன்னை காதலிக்கும் நிர்பந்தத்திற்கு அவன் தள்ளப்படுவானோ என்று எண்ணி அவள் அமைதி காத்தாள்.
நேற்று அவளை அடித்து விட்டு இன்று வேதனையில் தவிப்பவனின் தவிப்பு காதல்தான் என்பதை அவன்தான் உணரவில்லை.அவளாவது உணர்ந்திருக்க வேண்டும்…அவள்தான் அவனாக வாயைத் திறந்து ‘ஐ லவ் யூ’ என்று கூறினால்தான் காதல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாளே…?
அவளது தவிப்பை அவன் புரிந்து கொண்டான். எதையோ மனதில் போட்டு மறுகுகிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது.
இதமாய் அவளது தலையை கோதி விட்டவன்,”உன் மனசுல ஏதோ குழப்பம் இருக்குதுன்னு எனக்குப் புரியுது…!ஐ திங்க் யூ நீட் அ டைம்…!இட்ஸ் ஓகே…எதை போட்டும் குழப்பிக்காதே… உன்னுடைய இந்த குட்டி மூளைக்குள்ள இருக்கிற தவிப்பெல்லாம் தீர்ந்த பிறகு நம்ம லைஃபை ஸ்டார்ட் பண்ணிக்கலாம்…!”,மிக அழகாய் அவள் கூறாமலேயே அவளது நிலையை புரிந்து கொண்டான் அவன்.
“தேங்க்ஸ்…”உரைத்தபடி அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் அவள்.
இருவரும் ஒருவரது அணைப்பில் மூழ்கி இதமாய் தொலைந்திருக்க.. நேரமாவதை உணர்ந்து யாழ்வி விலகினாள்.
“அச்சோ..ஆபிஸ்க்கு டைம் ஆச்சு…”,கடிகாரத்தை பார்த்து பதறியவள் குளிக்க ஓட,
அவளை கைப்பிடித்து தடுத்தவன், “இந்த நிலைமையில ஆபிஸ்க்கு போறியா…?”,என்றான்.அவனது விழிகள் சங்கடத்துடன் அவள் முகத்தில் படிந்தது.
இவன் அடித்த கன்னம் வீங்கி ஐந்து விரல் தடங்கலும் சிகப்பாய் பதிந்திருந்தது.அவன் என்ன கேட்கிறான் என்பது அவளுக்கும் புரிந்தது.
“ஏற்கனவே ஆபிஸ்க்கு நிறைய லீவ் போட்டிருக்கிறேன்…! இன்னைக்கு கண்டிப்பா போய்த்தான் ஆகணும்…!டோன்ட் வொரி…இதை நான் சமாளிச்சுக்கிறேன்…!”,
“நோ யாழ்வி…!அடிச்ச வலியில காய்ச்சல் வந்தாலும் வரும்..நீ வீட்டுலேயே ரெஸ்ட் எடு…!”,
“ஐ கேன் மேனேஜ்…நான் நல்லாத்தான் இருக்கிறேன்…!”,
“அடிச்ச எனக்குத் தெரியாதா…? பேசாம ரெஸ்ட் எடு…!”அவன் முடிவாக கூறிவிட அவளால் மறுக்க முடியவில்லை.
“ஓகே..உங்களுக்கு லன்ச் ரெடி பண்ணிட்டு வந்து ரெஸ்ட் எடுக்கிறேன்…”அவள் கூற அவன் மறுத்தான்.
அவள் பயத்துடன் அவனை ஏறிட,சிறு புன்னகையுடன் அவள் கன்னத்தைத் தட்டியவன்,”இன்னைக்குத்தான் வேண்டாம்ன்னு சொன்னேன்.. நாளையில் இருந்து நீயே சமைச்சு கொடு…!”,அவன் கூற அவள் முகம் பூவாய் மலர்ந்தது.
அவனுடன் சண்டை போட்டு விட்டு பேசாமல் கூட அவள் இருந்து விடுவாள்..ஏனோ அவனுக்குத் தன் கையால் சமைத்துக் கொடுக்காமல் அவளால் இருக்கவே முடிவதில்லை. உணவு விஷயத்தில் அவளையும் மீறி ஒரு தாயின் வாஞ்சையோடு அவள் அவனைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள்..அதுதான் காரணம்.
அவன் அலுவலகத்திற்கு கிளம்பி விட..விஷ்வா கூறியதைப் போலவே மதியத்திற்கு மேல் அவளுக்கு காய்ச்சல் வந்து விட்டது.தயாராக மாத்திரையை எடுத்து வைத்துவிட்டுத்தான் சென்றிருந்தான்.
‘எல்லாம் தெரியும் இவனுக்கு…’,செல்லமாக சலித்தபடி அந்த மாத்திரையை போட்டு விட்டு தூங்கி எழுந்த பிறகுதான் சற்று தெளிவாக இருந்தது அவளுக்கு.
இரவு அவன் வந்த உடனேயே கூறினாள், “நீங்க சொன்ன மாதிரியே காய்ச்சல் வந்திடுச்சு…”,
“அதுக்குத்தான் புருஷன் சொன்னா கேட்கணும்… அவனது கண்கள் அவளது காயத்தைத்தான் ஆராய்ந்தன.
“நாட் பேட்… இன்னைக்கும் மருந்து போட்டால் சரியாகிடும்…!”,உரைத்தபடியே மாடியேறி சென்று விட்டான்.
அவள் வெங்காய சட்னி அரைக்க இவன்தான் தோசை சுட்டுக் கொடுத்தான்.இருவரும் இரவு உணவை முடித்து விட்டு மேலேற..அவன் அவர்களது அறைக்குச் செல்லாமல்.. இவ்வளவு நாட்கள் தான் தங்கியிருந்த அறைக்குச் சென்றான்.
அவளுடன் சண்டையிட்டதில் இருந்து இருவரும் ஒரே அறையை பகிர்ந்து கொள்ளவில்லை.மாடியில் அவர்களது அறைக்கு எதிரே இருக்கும் இன்னொரு அறையில்தான் அவன் படுத்துக் கொள்வான். குளித்துக் கிளம்புவதற்காக மட்டும்தான் தங்களது அறைக்குள் நுழைவான்.
இன்றும் அவன் அந்த அறைக்கே செல்ல, “இன்னும் ஏன் அந்த ரூமை யூஸ் பண்றீங்க…? இங்கேயே தூங்கலாமே…?”,அவள் சிறு தயக்கத்துடன் வினவ,
அவளை அழுத்தமாக ஏறிட்டவன், ‘இல்லை’ என்பதாய் தலையசைத்தான்.
“ஏன் விஷ்வா…?”,அவள் வினவ..அப்பொழுதும் அழுத்தமாக அவளை பார்த்தவன் தனக்குத் தானே தலையாட்டி விட்டு அறைக்குள் நுழைய போனான்.
“அப்போ..இன்னும் என்மேல இருக்கற கோபம் போகல..அப்படித்தானே…?” அவள் குரல் அழுகைக்குத் தயாராக,
ஒரு சீறலான மூச்சுடன் அவளை நெருங்கியவன், “உன்கூட ஒரே ரூம்ல படுத்தால்..நான் சும்மா இருக்க மாட்டேன்…!எனக்கு நீ உன்னைத் தரணும்…சொல்லு.. தருவியா…?”,அவள் கண்களையே பார்த்தபடி அவன் வினவ,
அவளோ அவன் விழிகளைப் பார்ப்பதை தவிர்த்தவளாய் தடுமாறினாள்.
“என் கண்ணை பாரு டி…!”,மெதுவான அதே சமயம் அழுத்தமான அவனது குரலில் அவள் இமைகள் படபடக்க அவனை நோக்கினாள்.
“சொல்லு..தருவியா…?”,அவன் கண்ணைப் பார்த்து அவளால் எப்படி மறுப்பாக தலையசைக்க முடியுமாம்…
தன்னை மீறி தன்னை நழுவிச் சென்ற மேனியையும்.. மனதையும் முயன்று அடக்கியவள்,”அய்யா சாமி.. நீங்க அந்த ரூம்லேயே படுத்துக்கோங்க…!”,என்று விட்டு அறைக்குள் ஓடி விட்டாள்.
ஏனோ அவளது மறுப்பு இப்பொழுது அவனுக்கு கோபத்தை அளிக்கவில்லை.மனதில் ஒரு குறுகுறுப்பை மூட்ட..ரகசிய புன்னகையுடன் தனது அறைக்குள் நுழைந்தான்.
தொடரும்…
