காதல் இதுதானா ? – காதல் 3
காதலாகும் 3:
ஜீப்பை துரை ஓட்டிக் கொண்டிருந்தார்.அதில் அமர்ந்திருந்த விஸ்வேஷ்வரனின் கழுகு கண்கள் சுற்றுப்புறத்தை ஆராய்ந்து கொண்டிருந்தன.அந்த நகரம் அவனது ஆளுகைக்கு கீழ் வந்த பிறகு சாலையோரங்களில் நடக்கும் பல திருட்டு வேலைகள் குறைந்திருந்தன. எந்தவொரு மூலை முடுக்கிலும் அவன் அறியாமல் எந்தவொரு விஷயமும் நடந்து விட முடியாது.
சிறிய திருட்டில் ஆரம்பித்து..பெரிய கொலை கொள்ளை செய்பவர்களையெல்லாம் அவன் அறிந்து வைத்திருந்தான்.அவனது கண்டிப்பிற்கும்.. இரக்கமில்லாமல் அவன் அடிக்கும் அடிக்கும் பயந்து அவர்கள் சற்று அடக்கி வாசித்தனர்.
சுற்றுப்புறத்தை ஆராய்ந்தபடி வந்தவனின் கண்களில் வந்து விழுந்தன ‘சக்ரவர்த்தி கல்வி குழுமங்கள்’. எங்கு திரும்பினாலும் சக்ரவர்த்தி ஸ்கூல்,காலேஜ்,கோச்சிங் சென்டர் பற்றின விளம்பரங்கள்தான்.அந்தக் கல்வி நிறுவனத்தில் படித்த மாணவர்களை பாராட்டி பல விளம்பர பேனர்கள்.
“எங்கே பார்த்தாலும் ‘சக்ரவர்த்தி இன்ஸ்டிடுயூஷன்ஸ்’ பற்றின விளம்பரங்கள்தான்…!ஏன்.. சென்னையில வேற ஸ்கூல்..காலேஜஸ் இல்லையா…?”,திடீரென்று விஸ்வேஷ்வரனின் குரல் ஒலிக்க அவனைத் திரும்பிப் பார்த்தார் துரை.
“அது நிறைய இருக்குது சார்…!ஆனால்,இந்த நிறுவனத்துல படிக்கற மாணவர்கள்தான் எப்பவும் முதல் இடம் வாங்கறாங்க…என்னுடைய பையன் கூட இவர்களுடைய கோச்சிங் சென்டர்ல தான் நீட் எக்ஸாமுக்கு படிச்சிட்டு இருக்கிறான்…!”,
“ஓ…”,என்றவனின் புருவங்கள் சுருங்கின.அவனது முகம் ஏதோ தீவிர யோசனையில் ஆழ்ந்தது.
சுற்றியிருந்த ‘சக்ரவர்த்தி கல்வி குழுமங்கள்’ பற்றிய விளம்பரங்கள்.. தொடர்ந்து முதல் மதிப்பெண் வாங்கும் மாணவர்கள்..இரண்டு பெண்கள் காணாமல் போனது.. நேற்றைய திவ்யாவின் மயக்கம்..அவனது மூளைக்குள் அடுத்தடுத்து காட்சிகள் விரிய ஆரம்பித்தன.
அதற்குள் அவனது அலுவலகம் வந்து விட,இறங்கி நடந்தவன் தனது அறைக்குள் நுழையும் போதே,”கபிலன்..கம் டூ மை ரூம்…!”,என்ற கட்டளையோடு நுழைந்திருந்தான்.
“சார்…”, ஒரு சல்யூட்டுடன் அவன் முன் வந்து நின்றான் கபிலன்.
“கபிலன்…!கடந்த ஐந்து வருடங்களா பொதுத் தேர்வுல முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுடைய ரிப்போர்ட் வேணும்…!அவங்க படித்த ஸ்கூல்ஸ் பற்றின ரிப்போர்ட்..”,அவன் கூறி முடிப்பதற்க்குள்ளேயே இடை புகுந்த கபிலன்,
“இதுக்கு ரிப்போர்ட் தேவையில்லை சார்…!நானே சொல்லிடுவேன்..கடந்த ஐந்து வருஷங்களா தொடர்ந்து முன்னிலையில் வர்றது சக்ரவர்த்தி கல்வி குழுமங்களை சேர்ந்த மாணவர்கள்தான்.
“ஆர் யூ ஷ்யூர்…?”,
“யெஸ் சார்…!நோ டவுட்ஸ்…”,
“ஓகே..அப்படின்னா சக்ரவர்த்தி கல்வி குழுமங்கள் அண்ட் அதற்கு அடுத்த நிலையில இருக்கிற கல்வி நிறுவனங்கள் இரண்டையும் கம்ப்பேர் பண்ணி ஒரு ரிப்போர்ட் கொண்டு வாங்க…!கமான்..குவிக்…!அப்புறம் இன்னொரு விஷயம் சக்ரவர்த்தி இன்ஸ்டிடூயூஷன்ஸ் பத்தின A to Z விபரம் எனக்கு வேணும் ….!”,
“யெஸ் சார்…!”,கபிலன் வெளியேறி விட்டான்.
அடுத்த இரண்டு மணி நேரங்களில் அவன் கேட்ட ரிப்போர்ட் அவனுடைய டேபிளில் இருந்தது. அதை அலசி ஆராய்ந்தவனின் முகம் யோசனையில் ஆழ்ந்தது.
கபிலன் சொன்னது போல் கடந்த ஐந்து வருடங்களாகத் தொடர்ந்து முதல் மூன்று இடங்களைப் பிடித்திருந்தது சக்ரவர்த்தி கல்வி குழுமங்களை சேர்ந்த மாணவர்கள்தான். அதுவும் மற்ற கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்களுடன் ஒப்பிடும் போது இந்த மாணவர்கள் அனைவரும் மிகப் பெரும் வித்தியாசத்தில் மதிப்பெண்களை ஈட்டியிருந்தனர்.
அதே போல்,சக்ரவர்த்தி கோச்சிங் சென்டரில் படித்த அத்தனை மாணவர்களும் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றிருந்தனர்.
‘என்னதான் கோச்சிங் கொடுத்தாலும் இவ்வளவு பெரிய வித்தியாசத்துல ஸ்டூடண்ட்ஸால ஸ்கோர் பண்ண முடியுமா…? அதுவும் தொடர்ந்து ஐந்து வருடங்களாக…?’,
விஸ்வேஷ்வரனுக்கு எதுவோ தவறு என்று பட்டது.
‘ஒருவேளை.இரத்தத்துல கலந்திருக்கிற போதை மருந்துக்கும்.. மாணவர்களுடைய வெற்றிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ…?திவ்யாவும் இந்தக் காலேஜ்லதான் படிக்கிறாள்…’அவனது போலீஸ் மூளை அவசர அவசரமாய் கணக்கிட,
அடுத்த நொடி,”துரை…!”,என்று அழைத்திருந்தான்.
“சார்…!”தன் முன்னால் நின்றிருந்தவரை நோக்கியவன்,
“துரை…!உங்க பையன் ஸ்கூல்..காலேஜ் எல்லாம் எங்கே படித்தான்…?”,
“எல்லாம் சக்ரவர்த்தி இன்ஸ்டிடூயூஷன்ஸ்லதான் சார்…”,
“வெல்…இப்பவே உங்க பையனை கூட்டிட்டு நான் சொல்ற ஹாஸ்ப்பிட்டலுக்கு போங்க…!நான் சொன்னேன்னு டாக்டர்.சிவம் கிட்ட சொல்லி உங்க பையனுக்கு ப்ளெட் டெஸ்ட் எடுக்க சொல்லுங்க…!”,
“ப்ளெட் டெஸ்ட்டா…என் பையனுக்கா…?ஏதாவது ப்ராப்ளமா சார்…”,அவரது குரல் பதட்டத்துடன் வந்தது.
“நத்திங் டூ வொரி துரை…!நான் சொன்ன மாதிரி செய்யுங்க… ரிப்போர்ட் என்னன்னு எனக்கு கால் பண்ணுங்க…!”,விடுவிடுவென்று உரைத்தவன் தனது அலுவலில் மூழ்கினான்.
‘இதற்கு மேல் என்ன கேட்டாலும் பதில் வராது…’,என்பது துரைக்குத் தெரியும்.எனவே,அவன் சொன்னதை செய்வதற்காக அமைதியாக வெளியேறினார்.
அடுத்து அவன் அழைத்தது யாழ்விக்குத்தான்.அவளது தோழியின் தங்கை எங்கே படிக்கிறாள் என்று கேட்பதற்காக அழைத்திருந்தான்.அவன் எதிர்பார்த்த பதில்தான் அவளிடமிருந்து வந்தது.
சிறிது நேரத்திலேயே டாக்டர்.சிவம் அழைத்தார்.
“நீங்க அனுப்புன பையனோட இரத்தத்திலேயும் போதை மருந்து கலந்திருக்கிறது…!”,அவரிடமிருந்து பதில் வந்தது.
‘ஆக.. இரத்தத்துல போதை மருந்து கலந்திருந்த மூணு பேருமே சக்ரவர்த்தி இன்ஸ்ட்டிடூயூஷனை சேர்ந்தவங்க…!அதோட.. தொடர்ந்து ஐந்து வருஷங்களா இந்த நிறுவனத்தை சேர்ந்த மாணவர்கள்தான் முதல்ல வர்றாங்க…!ஏதோ தவறு நடக்கிறது…!’,அவன் கண்டுபிடித்து விட்டான்.
‘ஆனால்..எப்படி..?’, நெற்றிப் பொட்டில் ஆள்காட்டி விரலால் தட்டியபடி அவன் யோசித்துக் கொண்டிருக்க, துரை அவரது மகனுடன் உள்ளே நுழைந்தார்.
“சார்…!இங்கே என்ன நடக்குது…?என் மகனுக்குப் போதை பழக்கமெல்லாம் இல்லை…”,பதறியவரை அமைதிப்படுத்தியவன் கபிலனையும் உள்ளே அழைத்தான்.
துரையின் மகனை நோக்கிய விஸ்வேஷ்வரன்,”உன் பெயர் என்ன…?”,என்று வினவினான்.
“சரவணன் சார்…!”,
“வெல் சரவணன்..நான் கேட்கிற கேள்விக்கு நல்லா யோசித்துப் பதில் சொல்லணும்..ரைட்…?”,
“ஓகே சார்…!”,
“உன்னுடைய ஸ்கூல், காலேஜ் எல்லாம் எங்க முடிச்ச…?”,
“சக்ரவர்த்தி இன்ஸ்டிடூயூஷன்ஸ்ல தான் சார்…”,
“நீ படிக்கும் போது அங்கே சந்தேகப்படற மாதிரி ஏதாவது விஷயம் நடந்ததா…லைக் ஸ்டூடண்ட்ஸ் காணாம போறது..அந்த மாதிரி…?”,
“இல்லையே சார்..அப்படி எதுவும் நடந்ததா எனக்கு ஞாபகம் இல்லையே…”,
“ஓகே…!நீ பர்டிகுலரா ஏதாவது ப்ராண்டோட புட் ப்ராடக்ட்ஸை விரும்பி சாப்பிடுவியா…?”,அவன் வினவ அந்த மாணவன் ‘இல்லை’ என்பதாய் தலையசைத்தான்.
“நல்லா யோசிச்சு சொல்லு சரவணன்… உனக்கு போதை பழக்கம் இல்லை..ஆனால், உன்னுடைய இரத்தத்துல போதை மருந்து கலந்திருக்குது…!ஒண்ணா புட் இல்லைன்னா ட்ரக்ஸ் மூலமாகத்தான் உன் உடம்புக்குள்ள போதை மருந்து போயிருக்கணும்….!கொஞ்சம் யோசி…”,இப்பொழுது அந்த மாணவனின் முகம் யோசனைக்கு மாறியது.
சில நிமிடங்களுக்குப் பிறகு, “சார்…!போதை மருந்து கலந்திருக்கிற அளவுக்கு நான் எந்த அவுட்சைட் ஃபுட்டும் எடுத்துகிறது இல்லை…!ஆனால்,நான் ஸ்கூல் படிக்கும் போதிலிருந்தே ஒரு டேப்லெட் எடுத்துக்கிட்டு இருக்கிறேன்…!”,
“என்ன மாத்திரை.. எந்த டாக்டர் ப்ரிஸ்க்ரைப் பண்ணுனாங்க…?”,
“எந்த டாக்டரும் ப்ரிஸ்க்ரைப் பண்ணல..எங்க ஸ்கூல்ல கொடுப்பாங்க…!மாசத்துக்கு ரெண்டு டேப்லெட்.பதினைந்து நாளைக்கு ஒருமுறை கொடுப்பாங்க…!எல்லா ஸ்டூடண்ட்ஸும் கட்டாயம் சாப்பிடணும்…!”,
“வாட்…?”,விஸ்வேஷ்வரனின் குரலில் அதிர்ச்சி தெரிந்தது.
“இவன் என்ன சொல்றான் துரை…?அந்த டேப்லெட் பற்றி உங்களுக்குத் தெரியுமா…?”,
“தெரியும் சார்…அது சத்து மாத்திரை தான்…! படிக்கற பசங்க ஆரோக்கியமா இருக்கணும்ன்னு கொடுக்கிறதா சொன்னாங்க..சக்ரவர்த்தி சுகாதாரத்துறை அமைச்சர் தானே..அதனால அவங்க நிறுவனத்துல படிக்கிற மாணவர்களுக்கு இலவசமா கொடுக்கிறதா சொன்னாங்க…!”,துரை கூறவும் விஷ்வா நிமிர்ந்து கபிலனைப் பார்த்தான்.
“உனக்கு ஏதாவது தோணுதா கபிலன்…?”, என்று வினவினான்.
“இவ்வளவு வெளிப்படையா மாணவர்களுக்கு கொடுக்கிற மாத்திரை மேல தவறு இருக்காது சார்…!அதோட..சக்ரவர்த்தி அரசியல்ல பெரும் புள்ளி…! மாணவர்கள் விஷயத்துல சின்ன தவறு செய்தாலும்..அது அவரோட அரசியல் வாழ்க்கையையே பாதிக்கும்…!ஸோ..மாத்திரை மேல தவறு இருக்கிறதா எனக்குத் தோணல…!”,கபிலன் தன் மனதில் தோன்றியதைக் கூறினான்.
“சரவணன்…!அந்த டேப்லெட் இப்போ உன்கிட்ட இருக்குதா…?”,
“இருக்குது சார்… நேற்றுதான் கொடுத்தாங்க…”,என்றபடி தனது பையிலிருந்து ஒரு மாத்திரையை எடுத்து விஸ்வேஷ்வரனிடம் நீட்டியவன்,”இப்படி வீட்டுக்கு எடுத்துட்டுப் போகவெல்லாம் அலோவ் பண்ண மாட்டாங்க…!அங்கேயே சாப்பிட சொல்லி வாட்ச் பண்ணுவாங்க… நான்தான் நேற்று எனக்கு உடம்பு சரியில்லைன்னு அவங்களுக்குத் தெரியாமல் எடுத்துட்டு வந்துட்டேன்…!”,என்றான்.
அந்த மாத்திரையை வாங்கிக் கொண்டவன்,”சரிப்பா..நீ கிளம்பு…!இப்படி இங்கே விசாரித்ததை பற்றியோ..உன்னுடைய மெடிக்கல் ரிப்போர்ட் பற்றியோ யார்கிட்டேயும் சொல்ல வேண்டாம்…!துரை…”,என்றபடி அவருக்கு கண்காட்ட அவர் மகனை அழைத்துக் கொண்டு வெளியேறினார்.
“சார்..!”,தன்னை அழைத்த கபிலனை நிமிர்ந்து நோக்கியவன்,
“என்னமோ நடக்குது கபிலன்… மாத்திரைக்கும் இரத்தத்துல கலந்திருக்கிற போதை மருந்துக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும்ன்னு எனக்குத் தோணுது…! இந்த மாத்திரையை டாக்டர்.சிவம்கிட்ட கொடுத்து அவங்க லேப்ல டெஸ்ட் பண்ண சொல்லுங்க…!”,அவன் கூறவும் அந்த மாத்திரையை எடுத்துக் கொண்டு வெளியேறினான் கபிலன்
தொடரும்…
