காதல் இதுதானா ? – காதல் 4
காதலாகும் 4:
தனது அலுவலக அறையில் வேலையில் ஆழ்ந்திருந்தான் விஸ்வேஷ்வரன்.
அப்பொழுது உள்ளே நுழைந்த துரை,”சார்.. உங்களைப் பார்க்க அந்தப் பொண்ணு வந்திருக்குது…”,என்றார் மொட்டையாக.
“எந்தப் பொண்ணு…?”,
“அதுதான் சார்..அந்த ரிப்போர்ட்டர் பொண்ணு யாழ்வி…!”,அவர் கூறவும் அவனது புருவங்கள் இரண்டும் முடிச்சிட்டன.
‘இவள் எதுக்கு இங்கே வந்திருக்கிறாள்…?, யோசித்தவன் “வர சொல்லுங்க…”,என்றான்.
சிறிது நேரத்தில் அவள் உள்ளே நுழைந்தாள்.
“குட் மார்னிங் சார்…!”,என்றபடியே அவள் உள்ளே நுழைய,
அவளை பார்த்து,”ம்…”, என்பதாய் தலையாட்டியவன் தனக்கு எதிரே இருந்த இருக்கையை கண்களால் சுட்டிக் காட்டினான்.
‘வாயைத் திறந்து சொன்னால் குறைந்தா போயிடுவார்…’,அவள் மனம் கடுப்புடன் நினைத்துக் கொண்டது.
அவனது பார்வை அவள் மேல் படிந்தது.கருப்பு நிற ஜீன்சும் சிகப்பு வண்ண குர்த்தாவும் அணிந்திருந்தாள்.அன்று போல் இன்றும் கூந்தலை விரிய விட்டிருந்தாள்.
‘எப்பவும் ஜீன்ஸ்தான் போடுவாள் போல..’அவன் மனம் தேவையே இல்லாமல் நினைத்துக் கொண்டது.
“க்கும்…”,தனது தொண்டையை செருமிக் கொண்டவன் அவளை பார்த்து,”என்ன விஷயம்…?”,என்று வினவினான்.
“ஒரு முக்கியமான விஷயம் சார்…! நேற்று வேலை விஷயமா சிட்டிக்கு அவுட்சைட் போயிருந்தேன்..! வேலையை முடிச்சிட்டு நைட் திரும்பி வரும் போது மூணு லாரி சைட்ல இருந்த காட்டுக்குள்ள போறத பார்த்தேன்…!அது ஒரு காட்டு வழி…லாரி போகிற அளவுக்குத் தடம் இருக்குதான்னு எனக்கு ஒரு சந்தேகம் வந்துச்சு…!அதோட,அந்தக் காட்டுக்குள்ள மூணு லாரி எதுக்குப் போகணும்ங்கிற சந்தேகத்துல அந்த லாரிகளை பாலோவ் பண்ணினேன்…!
இன்னும் நான் பார்த்ததை என்னால நம்ப முடியலை சார்…!அந்தக் காட்டுக்குள்ள ஒரு பில்டிங் இருந்துச்சு..வெளியே பார்க்கிறதுக்கு பாழடைந்த கட்டிடம் மாதிரி தெரிந்தாலும்.. உள்ளே பக்காவா லைட் போட்டு ரெடி பண்ணியிருந்தாங்க…!அந்த மூணு லாரியும் அங்கேதான் போய் நின்னுச்சு..லாரியில் இருந்து பெட்டிபெட்டியா எடுத்துட்டு உள்ளே போனாங்க. அதுல என்ன இருந்ததுன்னு எனக்குத் தெரியல..பட். ஏதோ தப்பா நடக்குதோன்னு எனக்கு ஒரு சந்தேகம்…!சரி..இதுக்கு மேல அங்கே இருந்தால் ஆபத்துன்னு திரும்பி வரும் போது என் காலடியில இந்த மாத்திரை அட்டை தட்டுப்பட்டுச்சு…!”,என்றபடி ஒரு மாத்திரை அட்டையை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
அதை வாங்கிப் பார்த்தவனுக்கு நேற்று அந்த மாணவன் கொடுத்த மாத்திரையும் இதுவும் ஒன்றுதான் என்பது புரிந்தது.
“அந்தக் காட்டுக்குள்ள அப்படியொரு கட்டிடம் இருக்கிறது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை சார்…!சம்திங் ஏதோ இல்லீகல் பிஸினெஸ் நடக்குதுன்னு எனக்குத் தோணுது..!”,
“எந்த இடம்ன்னு வழி காட்ட முடியுமா…?”,அவன் பட்டென்று கேட்டான்.
“ஷ்யூர் .!”,
“ஓகே..அப்போ கிளம்புங்க…! இப்பவே உங்க பத்திரிக்கை ஆபிஸ்க்கு கால் பண்ணி ஒரு டீமை இங்கே வரச் சொல்லுங்க…! ரிப்போர்ட்டர்ஸோட போய் அங்கே என்ன நடக்குதுன்னு பார்ப்போம்…!அப்போத்தான் அவங்க தப்பிக்க முடியாது…!”,யாழ்வியிடம் கூறியவன் கபிலனை அழைத்தான்.
“கபிலன்…! நம்ம போலீஸ் ஃபோர்ஸை ரெடியாக சொல்லுங்க…!ஒரு இடத்துக்கு சோதனைக்குப் போகணும்.. கமான்.. குவிக்…!”,அவனுக்கு உத்தரவிட்டவன் தனது தொப்பியை அணிந்து கொண்டு நிமிர்வாக எழுந்தான்.
அடுத்த அரை மணி நேரத்தில் போலீஸ் படையோடு பத்திரிக்கையாளர்கள் அடங்கிய குழுவும் சேர்ந்து யாழ்வி காட்டிய வழியில் பயணித்தன.அந்தக் காட்டு வழியில் லாரி செல்லும் அளவிற்குத் தடம் இருக்கிறது என்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நிச்சயமாகத் தெரியாது.அனைத்தையும் யோசித்து கச்சிதமாக.. மறைமுகமாகத் தடம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
அடுத்த அரை மணி நேரத்தில் போலீஸ் படையோடு பத்திரிக்கையாளர்கள் அடங்கிய குழுவும் சேர்ந்து யாழ்வி காட்டிய வழியில் பயணித்தன.அந்தக் காட்டு வழியில் லாரி செல்லும் அளவிற்குத் தடம் இருக்கிறது எனபது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நிச்சயமாகத் தெரியாது.அனைத்தையும் யோசித்து கச்சிதமாக.. மறைமுகமாகத் தடம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
அந்தக் கட்டிடத்தை காவல் துறையினர் சுற்றி வளைத்து விட்டனர்.காவலுக்கு இருந்த அடியாட்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை.வேறு யாராக இருந்தாலும் எதிர்க்கலாம். காவல் துறையினரை எதிர்த்து என்ன செய்ய முடியும்…?
“கமான்…உள்ளே என்ன நடக்குதுன்னு பாருங்க…!”,சிம்மக் குரலில் விஸ்வேஷ்வரன் கட்டளையிட தடதடவென்று காவல் துறையினர் உள்ளே ஓடினர்.
வெளியேதான் பார்க்க பாழடைந்த கட்டிடம்.ஆனால், உள்ளே ஒரு பெரிய ஆய்வகமே இருந்தது.பல குடுவைகளில் ரசாயன திரவங்களும் ஏதேதோ மருந்துகளும் இருந்தன. ஒரு பக்கத்தில் பெட்டி பெட்டியாக ஏதோ அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. விஸ்வேஷ்வரன் அங்கு சென்று பார்த்தான்.அத்தனையும் அன்று அவன் பறிமுதல் செய்த தடை செய்யப்பட்ட மருந்துகள்.
அன்று பறிமுதல் செய்ததை அவன் அன்றே அழித்து விட்டான். இவை அனைத்தும் புதிதாக எங்கிருந்தோ கொண்டு வரப்பட்டிருக்கிறது.
“ஸ்கவுண்ட்ரல்ஸ்… ”ஆத்திரத்தில் அவன் பல்லைக் கடித்துக் கொண்டான்.தனக்குத் தெரியாமல் தன்னுடைய ஆளுகைக்கு கீழ் இருக்கும் இடத்தில் என்னென்னவோ நடக்கிறது என்பதை அறிந்து கொண்டவனுக்கு கோபம் சுர்ரென்று ஏறியது.
அதற்குள் கபிலன் சில மருந்து அட்டைகளை எடுத்துக் கொண்டு அவனிடம் வந்தான்.
“சார்…!இங்கே பாருங்க.. அன்னைக்கு அந்த ஸ்டூடண்ட் சரவணன் கொடுத்த மாத்திரைதானே இது…?”,அதை வாங்கிப் பார்த்தவன் அங்கு நின்று கொண்டிருந்த வெள்ளை கோட் அணிந்த மருத்துவ உதவியாளர்களைநிமிர்ந்து பார்த்தான்.
“இங்கே என்ன நடக்குது…?” ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தம் திருத்தமாக வெளிவந்தன.
“உங்க கையில இருக்கிறது சத்து மாத்திரைகள் தான் சார்…சக்ரவர்த்தி கல்வி குழுமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கொடுக்கிறதுக்காக தயாரிக்கிறோம்…!”,அனைவருக்கும் தலைவன் போல் இருந்த ஒருவன் முன் வந்து கூற,
அவனை அழுத்தமாக முறைத்தவன் ஓங்கி ஒரு அறை விட்டான்.
“சார்…பேசிட்டு இருக்கும் போது கை வைக்கறீங்க…?”,அறை வாங்கியவன் எகிற..அவ்வளவுதான்..அவனுக்கு மீண்டும் ஒரு அறை. உதடு கிழிந்து இரத்தமே வந்துவிட்டது.
“ஒரு பக்கம் தடை செய்யப்பட்ட மருந்துகள்.. இன்னொரு பக்கம் மாணவர்களுக்கு கொடுக்கிற சத்து மாத்திரைகள்…!என்ன நடக்குது இங்கே…?”,அவன் சிம்மமாய் கர்ஜிக்க அங்கிருந்தவர்கள் உடல் வெடவெடக்க நின்றிருந்தனர்.
அறை வாங்கியவன் மீது அவன் பார்வை அழுத்தமாக படிந்தது.அந்தப் பார்வையிலேயே அவன் அரண்டு விட்டான்.
“எல்லா உண்மையையும் சொல்லிடறேன் சார்..!தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்திதான் இந்த சத்து மாத்திரைகளைத் தயாரிக்கிறோம்…!”,
“அதிகளவு போதை மருந்து கலந்திருக்கிறதுன்னுதானே அந்த மருந்துகளைத் தடை செய்தாங்க..! இப்போ அதை பயன்படுத்தி இந்த மாத்திரைகளைத் தயாரித்தால்.. அதை சாப்பிடற மாணவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படாதா…?”,அவனது குரலில் அத்தனை ஆத்திரம்.
“ஏற்படும் சார்…!தடை செய்யப்பட்ட மருந்துகள்ல இருக்கிற ஒரு விதமான போதை மருந்து மாணவர்களுடைய உடம்புக்குள்ள போகும் போது அது வேறு விதமான எஃபெக்ட்டை கொடுக்கும்…!அதாவது..இந்த மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கும் போது அந்த போதை மருந்து நம்ம இரத்தத்துல கலந்து அது நம்ம மூளையோட செயல்பாட்டைத் தூண்டி விடும்…!அதன் விளைவா.. மாணவர்களுடைய கற்றுக் கொள்ளும் திறன் அதிகமாகும்..கிட்டத்தட்ட விளையாட்டுல யூஸ் பண்ணற ட்ரக்ஸ் மாதிரிதான்…!”,அந்த மருத்துவர் கூற அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போய் நின்றிருந்தனர்.
சரியாக அந்த நேரம் அந்த நேரம் வாசலில் பரபரப்பு.அமைச்சர் சக்ரவர்த்திதான் வந்து கொண்டிருந்தார்.விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்தவருக்கு பத்திரிக்கையாளர்களும் அங்கிருப்பது தெரியாது. எப்படியாவது காவல் துறையினரை சரிகட்டி விடலாம் என்ற எண்ணத்தில்தான் வந்திருந்தார்.
ஆனால், அந்த நினைவில் மண்ணை அள்ளிப் போடுவதைப் போல் பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர்.
“என்ன நடக்குது சார் இங்கே…?”,
“ஒரு சுகதாரத் துறை அமைச்சரா இருந்துக்கிட்டு நீங்க பண்ணியிருக்கிற இந்தக் காரியம் எவ்வளவு பெரிய குற்றம்ன்னு தெரியுமா…?”,
சரமாரியாய் அவரை நோக்கி கேள்விக்கணைகள் பாய்ந்தன.அவர் எதற்கும் பதில் சொல்லவில்லை.தனது உதவியாளர்களை நோக்கி கண்காட்ட அவர்கள் ஓடி வந்து பத்திரிக்கையாளர்களை அப்புறப்படுத்தினர்.
அவர் நேரே சென்று நின்றது விஸ்வேஷ்வரனின் முன்தான்.இருவரது கண்களும் நேரெதிரே சந்தித்துக் கொண்டன.இருவரது முகங்களிலும் அவ்வளவு ஆத்திரம்.
“என்ன ஏ.சி.பி சார்.. உயிர் மேல பயம் இல்லையா…?அன்னைக்கு லாரியை பிடிச்சப்பவே உன்னைத் தூக்கியிருக்கணும்.. விட்டு வைத்தது என் தப்புதான்…!”,
“அதே தப்பைத்தான் நானும் பண்ணிட்டேன் மினிஸ்டர் சார்..!அன்னைக்கே நீ மாட்டியிருக்கணும்..திருட்டுத்தனம் பண்ணித் தப்பிட்ட…”,
“ஏய்ய்..மரியாதை…!” அவர் சுட்டு விரலை உயர்த்திக் கத்த,
“இத்தனை மாணவர்களுடைய உயிரோட விளையாடியிருக்க.. உனக்கென்னடா மரியாதை..பொறுக்கி…! பணத்துக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டுத்தானே இப்படியொரு காரியம் செய்த…? இப்போ அந்த அஸ்திவாரமே தரைமட்டமாக போகுது…!”,
“அரசியல் உனக்கு ஒரு துறை..அவ்வளவுதான்..!ஆனால், எனக்கு அது வாழ்க்கை. இந்த விஷயத்திலிருந்து எப்படி வெளியே வரணும்ன்னு எனக்குத் தெரியும் தம்பி…!”,
“உன்னை வெளியே வர விடாமல் உள்ளேயே எப்படி போட்டுத் தள்ளறதுன்னு இந்த விஸ்வேஷ்வரனுக்குத் தெரியும்..!”,ஏளனமாக உரைத்தவன் காவலர்களிடம் திரும்பி,
“அரெஸ்ட் ஹிம்…!”,என்று உத்தரவிட்டான்.
“நான் ஒரு மினிஸ்டர்.முறையான அரெஸ்ட் வாரண்ட் இல்லாம..ஒரு அமைச்சரை கைது செய்யறது சட்டப்படி குற்றம்…!”,முழுதாக மாட்டினாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கணக்கில் அவர் எகிற,
அவரை நோக்கி ஒரு இளக்காரமான பார்வையை வீசியவன்,”கொஞ்சம் அப்படி திரும்பி பாருங்க சார்..லைவ் டெலிகேஸ்ட் ஓடிக்கிட்டு இருக்குது.. மேலிடத்தில் இருந்து எப்பவோ தகவல் வந்திடுச்சு.. உங்களைக் கைது செய்யும்படி…!”,போலி பணிவுடன் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
“கமான்…!ஒருத்தன் கூட தப்பிக்க கூடாது…!எல்லோரையும் அரெஸ்ட் பண்ணி வண்டியில ஏத்துங்க… இந்தக் கட்டிடத்தை இழுத்து மூடி சீல் வையுங்க…!”,அடுத்தடுத்து அவன் உத்தரவிட அந்த இடமே அல்லோலகல்லோலப்பட்டது.
தனது ஜீப்பில் சாய்ந்தபடி கை கட்டி நின்றிருந்தான் விஸ்வேஷ்வரன்.அவன் தனியே நிற்பதை பார்த்தபடி அவனருகே வந்தாள் யாழ்வி.
“சூப்பர் சார்…!மினிஸ்டர்ன்னு தெரிந்தும் கொஞ்சம் கூட தயங்காமல் ஆக்க்ஷன் எடுத்துருக்கீங்க…”இவ்வளவு நேரம் அவனது ஆளுமையையும் கம்பீரத்தையும் பார்த்தவள் அல்லவா..அவளது குரலில் சிறு வியப்பு தொக்கி நின்றது.
“யாரா இருந்தால் என்ன…? தப்பு செய்தால் தண்டனை கிடைக்கணும்…!”,
“இந்த மாத்திரையால் நிறைய மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்களே..இப்போ என்ன செய்யறது சார்..?சினிமாவுல தான் இந்த மாதிரியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்.. இப்போத்தான் நேர்ல பார்க்கிறேன்..அதுவும் நம்ம ஊர்ல…”,அவள் வினவ அவனுக்கும் அந்த மாணவர்களை பற்றிய கவலை மனதுக்குள் எழுந்தது.
“பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மாற்று மருந்து ஏற்பாடு செய்யணும்…முதல்ல எவ்வளவு மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருக்காங்கன்னு தெரியணும்.. இடியட்…!பணத்துக்காக இப்படியொரு கேடு கெட்ட காரியத்தைப் பண்ணியிருக்கிறான்.. இதனால எத்தனை மாணவர்களுடைய எதிர்காலம் பாதிக்கப்பட போகுதுன்னு தெரியல…!பார்ப்போம்..முதல்ல மருத்துவத் துறைக்கு இந்த விஷயத்தைத் தெரியப்படுத்தி மாற்று மருந்து கண்டுபிடிக்க சொல்லணும்…!”, ஒரு பெருமூச்சோடு கூறியவன் அவளது முகத்தை நோக்கியபடி,
“இவ்வளவு பெரிய விஷயம் வெளியே வர்றதுக்கு நீதான் காரணம்…!எனக்கென்னன்னு போகாமல் சந்தேகம் வந்த உடனே துணிந்து அது என்னன்னு ஆராய்ந்திருக்கிற… வெரிகுட்..!”,அவன் பாராட்ட,
“எங்களுடைய தொழிலே இதுதானே சார்…”,அவளிடம் சிறு புன்னகை.
“ஓகே சார்.. நான் கிளம்பறேன்…!”,அவனிடம் விடைபெற்றபடி அவள் திரும்பி நடக்க,
“யாழ்வி…!”,அவளை அழைத்திருந்தான் அவன்.
திரும்பியவள்,என்ன’ என்பதாய் அவன் முகம் நோக்க,
“நீ செய்த காரியம் பாராட்டக்கூடியதுதான்..!ஆனால்..ஆபத்து நிறைந்ததும் கூட..ஸோ..பீ கேர்ஃபுல்..! இப்படி ஏதாவது சந்தேகம் வந்தால் உடனே போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு இன்பார்ம் பண்ணு…!நீயே தனியா போய் ஆபத்துல மாட்டிக்காதே…!”,திடீரென்று அவனது குரலில் அவ்வளவு மென்மை.
அவனைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தவள்,” ஒரு ரிப்போர்ட்டரா இருந்துட்டு ஆபத்தைக் கண்டு பயந்துக்கிட்டு இருக்க முடியாது சார்…!அத்தோட.. எனக்கு கராத்தே..சிலம்பம் எல்லாம் தெரியும்.. என்னை என்னால தற்காத்துக்க முடியும்…!”, உறுதியாகக் கூறினாள்.
“ஓ…”தனது தாடையைத் தடவிக் கொண்டவன்,சற்றும் அவள் எதிர்பாராத நேரத்தில் பக்கத்தில் மரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த மரப்பல்லியை எடுத்து அவள் மீது எறிந்து விட்டான்.
‘தட்’ என்று தன் மீது விழுந்த மரப்பல்லியை பார்த்து வியர்த்து விறுவிறுத்துப் போனவள், “அய்யோ…அம்மா…!”,என்று பயத்தில் குதிக்க ஆரம்பித்து விட்டாள்.
அவளது செய்கையைப் பார்த்து அவன் வாய்விட்டு சிரித்து விட்டான்.
“உனக்குத்தான் கராத்தே..சிலம்பம் எல்லாம் தெரியுமே. அந்தப் பல்லி கூட சண்டை போட்டு உன்னைக் காப்பாத்திக்க…!”அவனது இதழ்க்கடையில் சிரிப்பு விரிந்தது.
“சார்…ப்ளீஸ்..ஹெல்ப் மீ…!அய்யோ…”அதை தட்டி விட முயன்றவளுக்கு அதன் தோற்றம் பயத்தையும் அருவெறுப்பையும் கொடுக்க..’என்ன செய்கிறோம்’ என்று தெரியாமல் ஓடிப்போய் அவனை அணைத்திருந்தாள்.
அவ்வளவுதான்…!விஸ்வேஷ்வரனுக்கு சர்வமும் ஆடிப் போனது. முதல் முறை..முதல் முறையாக ஒரு பெண்ணின் தீண்டல்..!தான் என்ன மாதிரியாக உணர்கிறோம் என்பதே அவனுக்குத் தெரியவில்லை.சுற்றியிருந்த உலகம் தன் இயக்கத்தை நிறுத்த அவனது பார்வை தன்னைக் கட்டிக் கொண்டு நின்றவள் மேல் படிந்தது.
“அய்யோ…அந்த ப..பல்லியை எடுங்க…!”,அவளது கூச்சல் அவனை இவ்வுலகத்திற்கு இழுத்து வர,அவளது தோளின் மேல் ஒட்டிக் கொண்டிருந்த பல்லியை எடுத்து மரத்தில் விட்டான்.
அவன் பல்லியை எடுத்தது கூட தெரியாமல் பயத்தில் அவள் அவனை கட்டிக் கொண்டே நிற்க, “ம்க்கும்…”, என்று தனது தொண்டையை செருமிக் கொண்டவன்,”பல்லியை எடுத்தாச்சு…”,என்றான் கரகரத்த குரலில்.
தன் காதோரம் ஒலித்த அவனது கரகரத்த குரல் அவளைப் பட்டென்று சுய நினைவுக்கு கொண்டு வர,வேகமாக அவனிடமிருந்து விலகினாள்.
“சா..சாரி…!”,அவள் திக்கித் திணற,
அவன் பக்கவாட்டில் முகத்தைத் திருப்பி.. உதட்டைக் குவித்து உஃப்” என ஊதிக் கொண்டான்.
இவர்கள் இருவரும் நின்றது கட்டிடத்தை விட்டுத் தள்ளியிருந்த இடத்தில்.சுற்றியிருந்த மரங்கள் இவர்களை மறைத்திருக்க..மற்ற எவரும் இவர்களைப் பார்க்கும் வாய்ப்பு குறைவுதான்.
“உன்னை பலவீனமாக்கணும்ன்னு நான் இதை செய்யலை…!சிலம்பம்..கராத்தே எல்லா நேரங்களிலேயும் யூஸ் ஆகாது…!சுற்றி பத்து பேர் இருக்கும் போது.. ஒற்றை ஆளா நீ ஒண்ணும் செய்திட முடியாது…!அதோட,ஆபத்து எங்கேயிருந்து எப்படி வரும்ன்னு சொல்ல முடியாது.. மனுஷங்க உருவத்திலேயும் வரலாம்..இந்த மாதிரி பூச்சிகள் உருவத்திலேயும் வரலாம்…!”,முதல் முறையாக அவனது குரலில் சிறு தடுமாற்றம் ஏற்பட்டது.
”ம்ம்…”அவனது விழிகளை ஏறெடுத்து பார்க்க முடியாமல் ஏதோ ஒன்று அவளைத் தடுக்க அவள் திரும்பி நடந்தாள்.
அவள் தைரியமான பெண்தான்.அவளுடைய துறையில் எத்தனையோ ஆண்களுடன் வேலை விஷயமாக பழகி இருக்கிறாள்தான். ஆனால்..இப்படி தன்நிலை மறந்து ஒரு ஆண்மகனை கட்டிப்பிடிப்பது இதுதான் முதல்முறை.அதுவும் அவன் நெஞ்சில் சாய்ந்திருந்த போது அவள் உணர்ந்த அவனது வாசனை..’திம்’மென்ற உறுதியான அவனது மார்பு.. அதை விட அவனது கரகரத்த குரல் மீண்டும் மீண்டும் அவள் மனதில் வந்து அவளை இம்சித்தது என்னவோ உண்மைதான்…!
தொடரும்…
