காதல் இதுதானா ? – காதல் 5
காதலாகும் 5:
தொலைக்காட்சியின் அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தி சக்ரவர்த்தி தான். விஷயத்தைக் கேள்விப்பட்டதும் அந்த நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பதைபதைத்து விட்டனர்.
கடந்த ஐந்து வருடங்களாகத்தான் அந்த சத்து மாத்திரைகள் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.எனவே,கடந்த ஐந்து வருடங்களாக சக்ரவர்த்தி கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் படித்த..படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் என அனைவருக்கும் அரசாங்கம் சார்பில் இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கிட்டத்தட்ட பாதிக்கு மேல் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள். கெட்டதிலும் ஒரு நல்லதாக அந்த மாத்திரையின் வீரியம் மிக மிக மெதுவாகத்தான் இரத்தத்தில் கலக்கும். நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்கும் மாணவர்கள் இதிலிருந்து தப்பியருந்தனர். உடனேயே மாற்று மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு செலுத்தப்பட்டது.
சக்ரவர்த்தி கல்வி நிறுவனங்களை இழுத்து மூட வேண்டும் என்று மக்கள் சார்பில் போராட்டம் நடந்தது.ஆனால், அங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசாங்கமே அதை எடுத்து நடத்தப் போவதாக முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலைமையில்தான் சக்ரவர்த்தியின் மகன் என்று சொல்லிக் கொண்டு வெளிநாட்டில் இருந்து ஒருவன் வந்தான்.
“நான் சக்ரவர்த்தியுடைய மகன் வேத வர்ஷன். வெளிநாட்டுல பிசினெஸ் பண்ணிட்டு இருந்தேன்…!முதல்ல அவர் செய்த செயலுக்காக நான் மக்கள்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்…!ஐ நோ..அவருடைய தவறு மன்னிப்புங்கிற ஒற்றை வார்த்தையிலே அடங்காதுதான்..!அவருடைய தவறுக்குப் பிராயச்சித்தமா சக்ரவர்த்தி கல்வி நிறுவனங்களை நான் எடுத்து நடத்தறேன்… அதுவும் குறைந்த கட்டணத்துல தரமான கல்வி அப்படிங்கற கொள்கையோடு…!ஆயிரக்கணக்கான மாணவர்களுடைய எதிர்காலத்தை பாழாக்க கூடாது..என்னை நம்பி ‘சக்ரவர்த்தி கல்வி நிறுவனங்களை’ என் கையில் கொடுங்க…!”. உருக்கமாக மக்களிடத்தில் அவன் விடுத்த வேண்டுகோளுக்கு சற்று மதிப்பு இருந்தது.
அரசாங்கம் கலந்தாலோசித்து சக்ரவர்த்தி கல்வி நிறுவனங்களை வேத வர்ஷனிடமே ஒப்படைப்பதாக முடிவு செய்யப்பட்டது.அமைச்சர் சக்கரவர்த்திக்கு பதவியும் பறிபோக அத்தோடு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் கிடைத்தது.
சக்ரவர்த்தி கல்வி நிறுவனங்கள் ‘வேதா பாடசாலை’ என்று பெயர் மாற்றம்செய்யப்பட்டு வேத வர்ஷனின் நிர்வாகத்தின் கீழ் சிறப்பாக செயல்பட ஆரம்பித்தது.அவன் கூறியது போலவே தரமான கல்வி அளிக்கப்பட்டது.
இந்தப் பிரச்சனை மக்கள் மத்தியில் தேய்ந்து மறைந்திருந்த நேரம் அது.சிறைச்சாலையில் தனது தந்தையைப் பார்பதற்காக சென்றிருந்தான் வேத வர்ஷன்.பல வருடங்களாக அரசியலில் மக்கள் மத்தியில் செல்வாக்காக வலம் வந்தவரல்லவா.. ஒரே நாளில் தனது அரசியல் சாம்ராஜ்யம் இடிந்து தரை மட்டமானதை தாங்கிக் கொள்ள முடியாமல் மனதளவில் பாதிக்கப்பட்டு..தோற்றம் மெலிந்து ஓய்ந்து போயிருந்தார்.
“அப்பா…!”,அவரைக் கண்ட வேத வர்ஷனின் குரல் தழுதழுத்தது.
“வர்ஷன்…என்னால இந்த அவமானத்தைத் தாங்க முடியலை டா…!என்னுடைய அரசியல் வாழ்க்கையை வேரோடு அழித்தவனை சும்மா விடக் கூடாது…!நீ அடுத்த முறை என்னைப் பார்க்க வரும் போது அவன் செத்துட்டாங்கிற வார்த்தைதான் என் காதுல விழணும்…!”,அடிபட்டாலும் அவரது திமிர் அடங்கவில்லை.
“நான் உங்க மகன் டாடி.. உங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவனை சும்மாவா விடுவேன்னு நினைத்தீங்க…? சைலண்ட்டா என்னுடைய விசாரணையை எப்பவோ ஆரம்பித்துட்டேன்…!யாழ்விங்கிற ரிப்போர்ட்டர் தான் நம்ம குடோன் பத்தின தகவலை அந்த விஸ்வேஷ்வரனுக்கு தெரிவித்திருக்கிறாள்… முதல்ல அவளை அழிக்கணும்…!”,அவனது குரலில் அவ்வளவு ஆத்திரம்.
“அந்த போலீஸ்கரனை போட்டுத் தள்ள ஆட்களை ரெடி பண்ணு…!கொலை மாதிரி இல்லாமல் ஆக்சிடெண்ட் மாதிரி செட் பண்ணனும்…!”,
“இல்லை டாடி…!அவன் சாகறதுக்கு முன்னாடி அவமானப்படணும்…!உங்களை உயர்வா பார்த்துக்கிட்டு இருந்த மக்களுடைய மனசுல உங்களை கீழ்த்தரமா இறக்கினானல்ல..அதே வலியை அவனுக்குத் திருப்பிக் கொடுக்கணும்…!அவனைக் கொண்டாடற காவல் துறையே அவனைக் காறித் துப்பணும்…!”,கூறியவனின் கண்கள் வன்மத்தில் ஜொலித்தன.
“புலிக்குப் பிறந்தது பூனையாகுமா…? நீ என் மகன் டா…!”,குரூர சிரிப்புடன் மகனை அணைத்துக் கொண்டார் அந்தத் தந்தை.
**********
ஆளரவமற்ற.. வீடுகள் இல்லாத அந்த சாலையை கும்மிருட்டு கவ்வியிருந்தது. நிலா வெளிச்சத்தைத் தவிர வேறு மின் விளக்குகள் எதுவும் அங்கில்லை.
வேலை முடிந்து தனது ஸ்கூட்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் யாழ்வி,அவள் வழக்கமாக செல்லும் பாதை என்பதால் அவளுக்குப் பயம் இல்லை. ஆனால், அவள் அலுவலகத்தில் கிளம்பியதில் இருந்து ஒரு சுமோ அவளைத் தொடர்ந்து கொண்டே வந்தது.ஆரம்பத்தில் அவள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லைதான். ஆனால்.. விடாமல் துரத்திக் கொண்டு வந்த அந்தக் கார்..மக்கள் நடமாட்டம் இல்லாத சாலைக்கு வந்த பிறகு வேகமெடுத்தது.
மனதிற்குள் சிறு பயம் எழ அவளும் தன் ஸ்கூட்டியில் வேகத்தைக் கூட்டினாள். ஒரு கட்டத்தில் அந்த சுமோ ‘விர்’ரென்று அவளைத் தாண்டிச் சென்று அவளுக்கு முன் வழிமறித்தார் போல் நிற்க..அவள் தன் ஸ்கூட்டியை சடன் பிரேக் அடித்து நிறுத்தினாள்.
என்னதான் பத்திரிக்கைத் துறையில் இருந்தாலும் அவளும் சாதாரண பெண்தானே.. சுமோவில் இருந்து இறங்கிய ஆறேழு அடியாட்களை பார்த்தவுடன்..பயம் அடிவயிற்றைக் கவ்விக் கொள்ள வண்டியை விட்டு மெல்ல இறங்கினாள்.
அவர்கள் தன்னை நெருங்கவும் பக்கவாட்டில் இருந்த வெட்ட வெளி போன்ற இடத்தில் இறங்கி ஓட ஆரம்பித்தாள்.
“டேய்..அவளைப் பிடிங்க டா…!” கத்தியபடியே அடியாட்கள் அவளைத் துரத்த கல்லும் குழியும் நிறைந்த அந்தப் பாதையில் அவளால் மட்டும் எவ்வளவு தூரம் ஓட முடியும்…?
சில நிமிடங்களிலேயே அவர்களது கையில் அவள் மாட்டிக்கொண்டாள்.கற்றிருந்த தற்காப்புக் கலைகளை உபயோகப்படுத்த நினைத்தாள் தான்.அவளது கைகளை விலக விடாமல் இறுக்கிப்
பிடித்திருந்த அந்த தடிமாடுகளின் முன் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
மனதில் அந்நேரம் விஸ்வேஷ்வரன் கூறியதுதான் ஞாபகத்திற்கு வந்தது.
‘கடவுளே..எப்படி தப்பிப்பது…?’,கண்களில் இருந்து அவளையும் அறியாமல் கண்ணீர் வடிந்தது.அவளை இழுத்துச் சென்று காரில் ஏற்றியவர்கள் காரைக் கிளப்பினர்.
“டேய்…!விடுங்கடா என்னை…”திமிறியவளின் கைகளைக் கட்டிப் போட்டார்கள்.
அந்த இரவு நேரத்தில் கார் எங்கோ சென்று கொண்டிருந்தது.எங்கு செல்கிறார்கள் என்று தெரியவில்லை..ஆனால்,நகரத்தை விட்டு வெகு தூரம் வந்து விட்டார்கள் என்பது மட்டும் புரிந்தது.
பயத்தில் பதட்டமடைந்திருந்த மனதை மெல்ல மெல்ல சமன்படுத்தினாள் யாழ்வி. பத்திரிகைத்துறையில் இருப்பதால் வந்த தைரியமும்..அவள் பின்பற்றும் தியானமும் அவளுக்கு கை கொடுத்தன.அமைதியாக சூழ்நிலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
“டேய்..வண்டியை நிறுத்து டா.. அவசரம்…!”,அவளுக்கு அருகில் அமர்ந்திருந்தவன் சுண்டு விரலை உயர்த்திக் காட்ட,வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவன் ஓரமாக நிறுத்தினான்.
யாழ்விக்கு ஒருபுறம் அமர்ந்திருந்தவன் அவசரமாக இறங்கி இயற்கை உபாதையை கழிக்க சென்று விட,மற்றொரு புறம் அமர்ந்திருந்தவனோ காரை விட்டு இறங்கி ஆசுவாசமாகிக் கொண்டிருந்தான்.இரு பக்க கார்க்கதவும் திறந்திருக்க..இதுதான் சமயம் என்று யோசித்தவள் பட்டென்று இறங்கி ஓடினாள்.
அவளது கை கட்டப்பட்டிருக்கிறது என்று சற்று அசால்ட்டாக இருந்தவர்கள்..அவள் இறங்கி ஓடவும் தங்களை சுதாரித்துக் கொண்டு அவளைத் துரத்தினர்.
“ஏய்.. நில்லு…”,கத்தியபடி அவர்கள் பின்னால் ஓடி வர,யாழ்விக்கு எங்கிருந்துதான் அத்தனை வேகம் வந்ததோ தெரியவில்லை..கண்மண் தெரியாமல் ஓட ஆரம்பித்தாள். அவளுக்கு அவளது உயிரைக் காப்பதை விட கற்பை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றுதான் இருந்தது.
இப்படிப்பட்ட தடியர்கள் கையில் அழகான யுவதி மாட்டினால் அவளது கதி என்னவாகும்…?
வேகமாக ஓடியவள் யார் மீதோ மோதி நின்றாள்.திம்மென்ற அவனது வலிய மார்பில் மோதி நின்றவளை இரு வலிய கரங்கள் ஆறுதலாக அணைத்தன.
“என்னை விடுடா…பொறுக்கி…!லீவ் மீ…”,மாட்டிக் கொண்டோம் என்ற உணர்வில் கத்தியவள் அவனது நெஞ்சில் சரமாரியாக அடிக்க ஆரம்பித்தாள்.
“ஷ்..யாழ்வி…நான்தான்…!”,காதோரம் ஒலித்த பழக்கமான குரலில் அவளுக்குப் போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது.
“சா..சார்…!”,சிறு தேம்பலுடன் கதறியவள் அவனை இறுக கட்டிக் கொண்டாள்.
“டோன்ட் க்ரை…யூ ஆர் சேஃப்…!”,அவளை அணைத்த வாக்கிலேயே குனிந்து காதோரமாக மெல்லிய குரலில் கூறியவன்..நிமிர்ந்து அவளைத் துரத்திக் கொண்டு வந்த அடியாட்களை நோக்கினான்.
“டேய் ஏ.சி.பி சார் டா…!”, ஒருவன் கூற,
“தனியாகத்தான் இருக்கிறான்..அவனை அடிச்சுப் போட்டுட்டு அந்தப் பொண்ணைத் தூக்குவோம்…!”,அந்தக் குழுவிற்க்குத் தலைவன் போல் இருந்தவன் கூற,இரண்டு தடியர்கள் விஸ்வேஸ்வரனைத் தாக்குவதற்காக ஓடி வந்தனர்.
“ரிலாக்ஸ் யாழ்வி…!”,தன்னை அணைத்துக் கொண்டிருந்தவளை விலக்கி தனக்குப் பக்கவாட்டில் நிறுத்தியவன் தன்னைத் தாக்க வந்தவர்களை எதிர்கொண்டான்.
ஒன்றன் பின் ஒன்றாக தாக்கிய அந்த ஏழு அடியாட்களை அவன் ஒருவனாகவே சமாளித்தான்.தின்று தின்று தடிமாடுகள் போல் வளர்ந்திருந்தவர்களால். உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பாக உடலை வைத்திருந்தவனின் வலிமையான தாக்குதல்களை சமாளிக்க முடியவில்லை.ஏழு பேரும் அடி வாங்கி அவ்விடத்திலேயே சுருண்டு விழுந்தனர்.
நடப்பதை அதிர்ச்சி மாறா முகத்துடன் நெஞ்சில் கையை வைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகே வந்தவன்,”கிளம்பலாம் யாழ்வி…!”,என்றபடி அங்கு நின்று கொண்டிருந்த தனது காரில் ஏறிக்கொண்டான்.
அவனுக்கு மறுபக்க கதவைத் திறந்து ஏறிக் கொண்டவளுக்கு இன்னுமே அதிர்ச்சி விலகவில்லை.விஸ்வேஷ்வரன் மட்டும் வந்திருக்காவிட்டால் இந்நேரம் அந்தக் கயவர்களிடம் தன் கதி என்னவாகியிருக்கும்.. நினைக்கும் போதே அவளுக்கு உடல் நடுங்கியது.
‘ரொம்பவும் பயந்துட்டா போல…’,அவளை ஓரக்கண்ணால் அவதானித்தவன்,
“ரிப்போர்ட்டரா இருந்துட்டு இப்படி பயப்படலாமா…? உனக்குத்தான் தற்காப்பு கலையெல்லாம் கை வந்த கலையாச்சே…”,அவளை சககஜமாக்கும் பொருட்டு இயல்பாய் வினவினான்.
“ரிப்போர்ட்டரா இருந்தாலும் நானும் ஒரு பெண்தானே சார்…!அவனுங்க என்னைக் கொலை பண்ணினால் கூட எனக்கு கவலையில்லை…!ஆனால்,என் பெண்மைக்கு ஏதாவது களங்கம் நேர்ந்திருந்தால்..”,அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டைக்குழி அடைக்க மௌனமாகி விட்டாள்.
முதல் முறையாக ஒரு பெண்ணின் மன உணர்வுகளை அவளது வாயால் கேட்கிறான்.அவள் முகத்தில் கவிழ்ந்த கலக்கம்.. தவிப்பு அதை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.இதுநாள் வரை அவன் யாருடைய உணர்வுகளையும் உணர்ந்ததில்லை.அவன் நினைப்பதுதான் நடக்க வேண்டும் என்று முரட்டுத்தனமாகவே அனைத்தையும் நடத்திப் பழகியவன்.
சிறுவயதில் இருந்தே பெற்றவர்களின் அரவணைப்பு இல்லாமல் ஆசிரமத்தில் வளர்ந்தது..அதன் பிறகு தேர்ந்தெடுத்த போலீஸ் துறை இப்படி அனைத்துமே அவனை முரட்டுத்தனமாகத்தான் வளர்த்தி விட்டிருந்தது.
அந்த முரட்டுத்தனத்தில் சிறிதே சிறிதாக மென்மை எட்டிப் பார்க்க ஆரம்பித்தது அவளால்தான்.அன்று.. மரப்பல்லிக்கு பயந்து அவனைக் கட்டிக்க கொண்ட போது அவன் மனதில் குட்டியாக ஏற்பட்ட ஏதோ ஒரு வகையாக மென்மையான உணர்வு. இதோ..இப்பொழுது அவள் முகத்தில் தெரியும் கலக்கம்..அதனால் அவன் மனதில் ஏற்படும் தவிப்பு இவை அனைத்துமே அவனுக்குப் புதிதுதான்.
“அதுதான் நான் வந்துட்டேனே.. இனி எந்தப் பிரச்சனையும் இல்ல…!”,கூறியபடியே காரைக் கிளப்பினான் விஷ்வா.
இருட்டிய வேளையில்.. ஆளரவமற்ற அந்த சாலையில் அவர்களை சுமந்து கொண்டு அந்தக் கார் சென்று கொண்டிருந்தது.
“நீங்க எப்படி இங்கே..?”,சிறிது தெளிந்திருந்தவள் அவனிடம் கேள்வியெழுப்பினாள்.
“இன்னைக்கு பயங்கரமான வொர்க் டென்சன்.. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாமேன்னு காரை எடுத்துட்டு லாங் ட்ரைவ் வந்தேன்…!பரவாயில்லை. வந்ததும் நல்லதா போச்சு…!”,அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே கார் ‘கிறீச் என்ற சத்தத்துடன் நின்றது.
“என்னாச்சு சார்…”,
“தெரியல..இறங்கி பார்ப்போம்…!”,இருவரும் காரை விட்டு இறங்கினர்.
காரின் முன் பக்க டயர் பஞ்சர் ஆகியிருந்தது.
“ஹோ..டயர் பஞ்சர்…!”,இடுப்பில் கை வைத்து அவன் உதட்டைக் குவித்து ‘உஃப்’ என்று ஊதிக் கொள்ள,
“ஓ காட்…!இப்போ என்ன செய்யறது…?”,அவளுக்கும் பதட்டமாக இருந்தது. சுற்றிலும் கும்மிருட்டு.. அவர்கள் இருவரும் வேறு சிட்டியை விட்டு வெகுதூரம் தள்ளி வந்திருந்தனர்.
“ஸ்டெப்னி வேற இல்லை…!யாருக்காவது கால் பண்ணி வர சொல்லுவோம்… “,தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைலைத் தேடஅது இல்லை.காருக்குள் சென்று பார்க்க அங்கும் அவனது மொபைல் இல்லை.
“சண்டை போடும் போது மொபைல் கீழே விழுந்திடுச்சு போல..உன் மொபைல் இருக்குதா..?” அவன் கேள்வியெழுப்ப அவள் உதட்டைப் பிதுக்கினாள்.
“சண்டை போட்ட இடத்திலிருந்து ரொம்ப தூரம் வந்திட்டோம்.. இந்த இருட்டுல இனி திரும்பி போய் எடுக்கறது எனக்கு சரியா பட… !சிட்டிக்கு அவுட்சைட் வேற..அவ்வளவு சீக்கிரம் வேற வண்டிகளும் வராது…!வா..இப்படியே நடப்போம்..ஏதாவது லாட்ஜ் இருந்தால் ரூம் புக் பண்ணிக்கலாம்…!”,கரை பூட்டி விட்டு அவன் நடக்க ஆயத்தமானான்.
“நாம நடந்தே சிட்டிக்கு போயிட முடியதா…?” அவளுள் சிறு தயக்கம்.
அவன் சட்டென்று நின்று அவளைத் திரும்பி பார்த்தான்.”என்னை நம்பி என்கூட வரலாம்…!”,அவனது குரலில் கடினம் எட்டிப் பார்த்தது.
“ஸா..ஸாரி…!”,தன் தயக்கத்தை விட்டொழித்து விட்டு அவனுடன் நடந்தாள்.
“இந்த நைட்ல அதுவும் சிட்டிக்கு அவுட்சைட் நீயும் நானும் தனியா நிற்கிறது அவ்வளவு நல்லதல்ல.. சொன்னால் புரிந்துக்கோ…!”,அவளுடன் இணைந்து நடந்தபடியே விளக்கம் கூறினான் அவன்.
அவளுக்கும் புரிந்தது,”ம்ம்..”,என்றாள் முணுமுணுப்பாக.
தொடரும்…
