காதல் இதுதானா ? – காதல் 6

காதலாகும் 6:

சிறிது தூரம் நடந்தவர்களுக்கு ஒரு ஹோட்டல் தென்பட இருவரும் உள்ளே நுழைந்தனர்.

”ரெண்டு ரூம் வேணும்…!”,வரவேற்பில் நின்ற ஆளிடம் விஸ்வேஸ்வரன் விசாரிக்க,

”ஸாரி சார்…!ஒரு ரூம்தான் அவைலபிலா இருக்குது…!”,என்றான் அவன்.

”ஓ…”,ஒரு நிமிடம் சுற்றி ஹோட்டலை ஆராய்ந்தவன் யாழ்வியிடம் திரும்பி, “நான் வெளியிலேயே அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.. நீ ரூமை யூஸ் பண்ணிக்கோ…!”.என்றான்.

அந்த அறைக்கான சாவியை வாங்கிக் கொண்டு அவளை அறை வரை விட்டு விட்டு வரும் பொருட்டு அவன் அவளுடன் நடக்க,அவளோ எந்த வசதியும் இல்லாத அந்த ஹோட்டலை சுற்றி சுற்றி பார்த்தபடியே வந்தாள்.

கொசுத் தொல்லையோடு குளிரும் சேர்ந்து கொள்ள ‘இவர் எப்படி வெளியே சமாளிப்பார்..?’,என்ற எண்ணம்தான் ஓடியது.

”இட்ஸ் ஓகே சார்..!நாம ரூமை ஷேர் பண்ணிக்கலாம்.. நோ ப்ராப்ளம்..!”,என்று சொல்லியும் விட்டாள்.

”என்னோட நடந்து வர தயங்குன..இப்போ ரூமை ஷேர் பண்ண பயமா இல்லையா…?”,அவன் உதடுகளில் சிறு புன்னகை.

”ஐ நோ..யூ ஆர் எ ஜென்டில்மேன்…!”,அவன் கண்களைப் பார்த்தபடி கூறியவள் இதழ்களிலும் இளநகை ஒட்டியிருந்தது.

‘’ஓ…”,உதட்டைப் பிதுக்கியவன் ‘’தேங்க்ஸ் ஃபார் யுவர் ஹோப்..”, என்றான்.

“பட்.இட்ஸ் ஓகே யாழ்வி…! நான் இங்கேயே மேனேஜ் பண்ணிக்கிறேன்..யூ கோ …!”,

அதற்குள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையும் வந்து விட்டது.

”இந்த குளிர் உங்களுக்கு ஒரு பெரிய விஷயம் இல்லைதான்…பட்.இந்த கொசு.. உங்களை பிச்சு எடுத்திடும்…!அதோட,நீங்களும் டயர்டா இருக்கிற மாதிரி தெரியுது…! நோ பிராப்ளம் ஏ.சி.பி சார்..என்னை நம்பி ரூமை ஷேர் பண்ணிக்கலாம்…!”,குறும்புப் புன்னகையுடன் அவள் கூற.. அவனுக்குள்ளும் மெலிதாக சிரிப்பு எட்டிப் பார்த்தது.

அத்தோடு.. அறை வேண்டாம் என்று மறுக்கும் நிலையிலும் அவன் இல்லை.காலையில் இருந்து வேலை செய்த அலுப்பு..அத்தோடு சற்று முன் சண்டை போட்டதும் சேர்ந்து கொள்ள எப்பொழுதடா படுப்போம் என்றுதான் இருந்தது. எனவே,மறுக்காமல் அவளுடன் உள்ளே நுழைந்து விட்டான்.

அளவான அறைதான். கட்டிலோடு ஒரு ஓரத்தில் சோபாவும் போடப்பட்டிருக்க..அதில் சென்று சரிந்தவன்,”நான் இங்கே படுத்துக்கிறேன்…நீ பெட்ல படுத்துக்கோ..குட் நைட்….!”,அவள் பதிலைக் கூட எதிரபாராமல் படுத்து விட்டான்.

அவனது உயரத்திற்கு அந்த சோபா நிச்சயம் போதாதுதான். எப்படியோ கால்களை குறுக்கி அதில் படுத்தவன் சில நிமிடங்களில் உறங்கியும் போனான்.

அன்று நடந்ததை எண்ணிப் பார்த்தவள் ஒரு பெருமூச்சுடன் படுக்கையில் சாய்ந்தாள்.’இவர் மட்டும் வரலைன்னா என்னுடைய நிலைமை…?’,அவளது விழிகள் நன்றியுடன் அவனைத் தழுவி மீண்டது.

எண்ணங்களின் பிடியில் சிக்கியிருந்தவளை நித்திரா தேவி வந்து கட்டியணைத்துக் கொள்ள மெல்ல மெல்ல உறக்கத்தைத் தழுவினாள் அவள்.

ஒரு ஆடவனுடன் தனித்து ஒரு அறையில் இருக்கிறோம் என்ற நினைவு அவளுக்கும் இல்லை. ஒரு பெண்ணுடன் ஒரு இரவைக் கழிக்கிறோம் என்ற எண்ணம் அவனுக்கும் இல்லை.இருவரும் நிச்சலனமான மனத்துடன் உறக்கத்தை தழுவியிருந்தனர்.

எப்பொழுதும் போல் காலை ஆறு மணிக்கு கண் விழித்து விட்டான் விஷ்வா.காலை எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்பவன் அவன்.காவல் துறை அதிகாரியல்லவா.. நேரம் தவறாமல் அனைத்தையும் ஒருவித நேர்த்தியுடன் கடைபிடிப்பவன்.எனவே,அலாரம் இல்லாமலேயே அவனால் வழக்கான நேரத்திற்கு எழ முடிந்திருந்தது.

எழுந்தவன் அயர்ந்து உறங்கும் யாழ்வியை ஒரு பார்வை பார்த்து விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான். அவன் வெளியே வந்த பிறகும் அவள் எழுந்த பாடாக இல்லை. அவளை எழுப்பலாம் என்ற எண்ணத்துடன் கட்டிலருகே சென்றவன் என்ன நினைத்தானோ..தலையை ஆட்டிக் கொண்டு சோபாவில் சென்று அமர்ந்து கொண்டான்.

ஒரு பெண்ணை எப்படி எழுப்புவது என்ற தயக்கம் அவனுக்கு அவளே விழிக்கட்டும் என்று அமைதியாய் அமர்ந்திருந்தான். நேரம் கடந்ததே ஒழிய அவள் விழித்த பாடாக இல்லை.

‘ம்ஹீம்.. இது சரிப்பட்டு வராது..’,மனதிற்குள் முடிவெடுத்தவன் எழுந்து கட்டிலருகே சென்றான்.

“யாழ்வி…”அவன் அழைக்க..அவளிடம் எந்தவொரு அசைவும் இல்லை. அப்படியே உறங்கிக் கொண்டிருந்தாள்.

பக்கத்தில் ஒரு தலையணையை கட்டிக் கொண்டு அவள் தூங்கிய விதம்..அவனையும் அறியாமல் அவனது பார்வை சற்று அழுத்தத்துடன் அவளது மாசு மருவற்ற முகத்தில் படிந்தது.

‘’ம்க்கும்..”,தொண்டையை செருமிக் கொண்டவன், ‘’யாழ்வி…!”.இம்முறை சற்று குரலை உயர்த்தி அழைக்க..

ஒரு நிமிடம் தூக்கத்திலேயே விழிகளை சுருக்கி புரண்டு படுத்தாள்.அடுத்த நிமிடமே..தான் எங்கு இருக்கிறோம்.. நேற்று நடந்தது என அனைத்தும் உறக்கத்திலேயே நினைவுக்கு வர..அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தாள்.

“ஸா..ஸாரி…”,பதட்டத்துடன் எழுந்து அமர்ந்தவளைப் பார்த்தவன்,

”ஹே..ரிலாக்ஸ்…!பதட்டப்படாதே…”,என்று சமாதானப்படுத்தி விட்டு மீண்டும் சோபாவில் சென்று அமர்ந்து கொண்டான்.

மணியை பார்க்க 7.30 என்றது.’யாழ்வி.. இப்படியா தூங்குவ..?’,மனதிற்குள் திட்டிக் கொண்டவள் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அவள் வெளியே வர.. இருவரும் கிளம்பி ரிசப்ஷனுக்கு வந்தனர்.நேற்று இரவு இருந்த அதே நபர்தான் அங்கு அமர்ந்திருந்தார்.அவருக்கு அவன் ஐ.பி.எஸ் அதிகாரி என்றெல்லாம் தெரியவில்லை.இருவரையும் மாறி மாறி பார்த்து விட்டு பில்லை எடுத்து நீட்டினான்.

விஷ்வா தன் பர்சில் இருந்து பணம் எடுத்துக் கொண்டிருந்ததால் பில்லை யாழ்வி வாங்கி வைத்துக் கொண்டாள்.அவன் பணம் கட்டி முடிக்க இருவரும் வெளியே வந்தனர்.

இருவரும் சாலையைக் கடந்து அந்தப் பக்கம் வரவும் ஒரு ஆட்டோ வரவும் சரியாக இருந்தது.இருவரும் அதில் ஏறி அமர்ந்தனர்.

‘’உங்க கார்…?”,அவள் கேள்வியெழுப்ப,

”வீட்டுக்கு போயிட்டு மெக்கானிக்கை அனுப்பி எடுத்துக்கிறேன்…!”,என்று முடித்து விட்டான் அவன்.

முதலில் அவள் தங்கியிருக்கும் அப்பார்ட்மென்டில் அவளை இறக்கி விட்டு விட்டு தன் வீட்டிற்கு வழி சொன்னான். வீட்டை நெருங்கும் போதுதான் அந்த வித்தியாசம் அவனுக்கு உரைத்தது.அவனது வீட்டின் முன் ஒரு கூட்டமே கூடியிருந்தது.

போலீஸ் ஜீப். பொதுமக்கள்..ஆம்புலன்ஸ் என வரிசை கட்டி நிற்க.. புருவ சுளிப்புடன் ஆட்டோவில் இருந்து இறங்கியவன் பணத்தை கட்டி விட்டு மெயின் கேட்டைத் தாண்டி வீட்டிற்குள் நுழைந்தான்.

இவனைக் கண்டதும் துரை ஓடி வந்தார். “சார்…!ஒரு பெரிய பிரச்சனை..எங்கே சார் போயிருந்தீங்க…?”,பதட்டத்துடன் அவனிடம் கேள்வியெழுப்பினார்.

”துரை..என்னாச்சு…? என்ன நடக்குது இங்கே…?”,சுற்றும் முற்றும் பார்வையால் அலசியவனின் கண்கள் ஓரிடத்தில் நிலைகுத்தி நின்றது.

‘’ஓ மை காட்…!”,அதிர்ச்சியுடன் அவனது உதடுகள் முணுமுணுத்தன.

அவனது பார்வை சென்ற திசையில் திவ்யா இறந்து கிடந்தாள்.வெள்ளைத் துணியால் அவளது உயிரற்ற உடல் மூடப்பட்டிருக்க..முகத்திலும் உதட்டிலும் அவ்வளவு காயம். எத்தனை கேஸை பார்த்திருப்பான்.. பார்த்தவுடனேயே தெரிந்தது..கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாள் என்று.

மனதிற்குள் பெரும் பாரமேறிய உணர்வு. இவ்வளவு காலம் பார்த்து பழகிய பெண் அல்லவா.. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ‘அண்ணா.. அண்ணா..’ என்று பாசத்துடன் அழைப்பவள். இன்று இப்படி கிடப்பது அவனுக்கு சொல்லவொண்ணா வருத்தத்தை தந்தது.

அனைத்தும் ஒரு கணம்தான்.அடுத்த கணமே விரைப்பாய் நிமிர்ந்தவன், “என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க துரை…?”,என்றான் கூர்மையான பார்வையோடு.

‘’தெரியலை சார்…!காலையில எப்பவும் போல நான் உங்க வீட்டுக்கு வந்தேன்..வீடு திறந்துதான் இருந்துச்சு…! உள்ளே வந்து பார்த்தால்..ஹால்ல இந்தப் பொண்ணு இறந்து கிடக்குது…!எனக்கு கையும் ஓடல..காலும் ஓடல… நீங்களும் வீட்டுல இல்லைன்னு தெரிய வந்துச்சு…!உங்களுக்கு போன் பண்ணினால்.. அந்த பொண்ணோட பாடி பக்கத்துல உங்க போன் அடிக்கற சத்தம் கேட்டுச்சு…! நான் உடனே நம்ம டிபார்ட்மெண்ட்டுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லிட்டேன்…!”,அவசரமாக விளக்கினார் அவர்.

அதற்குள் திவ்யாவின் உடலை ஆம்புலன்சில் ஏற்றி விட்டு கபிலன் அவர்கள் அருகில் வந்தான்.

‘’சார்…!கமிஷனர் உடனே உங்களை பார்க்கணும்னு சொன்னார்…!”,கூறிய கபிலன்,”சார்..பொதுமக்களோட சந்தேகம் உங்க பக்கம் திரும்பியிருக்குது…”தயங்கித் தயங்கி உரைத்தான்.

“எனக்கும் புரியுது கபிலன்…!நான் கமிஷனர்கிட்ட பேசறேன்…!”,மூவரும் கிளம்பி கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர்.

“வாங்க மிஸ்டர்.விஸ்வேஷ்வரன்…!’,அவனை வரவேற்ற கமிஷ்னர் இருக்கையை சுட்டிக் காட்டி அவனை அமர சொன்னார்.

அவர் முகத்திலும் குழப்பம் மண்டிக் கிடந்தது.

“உங்க மேல விசாரணை நடத்த சொல்லி மேலிடத்துல இருந்து உத்தரவு வந்திருக்கு விஷ்வா…! பட்..எனக்கு உன்னை பத்தி தெரியும்.. நீ எதுவும் தப்பா எடுத்துக்காதே…!இருக்கிற ஆதாரம் எல்லாம் உன்னைத்தான் கை காட்டுது…! இட்ஸ் ஜஸ்ட் அ பார்மாலிட்டி…! ஸோ..விசாரணையை தவிர்க்க முடியாது…!”,அதிகாரி என்பதை தாண்டி அவருக்கும் அவனுக்கு இடையில் நல்ல உறவு இருந்தது.

அத்தோடு அவனைப் பற்றி அவருக்குத் தெரியாதா…?பொறுப்பை கையிலெடுத்த நாளிலிருந்து இன்று வரை..பணியில் அவன் காட்டிய நேர்மை அப்படிப்பட்டது.இன்று இந்த நகரம் அராஜகக்காரர்களின் தொல்லை இல்லாமல் சுத்தமாக இருக்கிறது என்றால் அதற்கு முழு முதல் காரணம் அவன் எடுத்த அதிரடியான நடவடிக்கைகள்தான்.

எனவே,இவ்வளவு பெரிய குற்றம் அவன் மேல் சுமத்தப்பட்டிருப்பது அவருக்கும் வேதனையைத்தான் தந்தது.

‘’இட்ஸ் ஓகே சார்…! உங்க விசாரணைக்கு நான் முழுமையா ஒத்துழைப்பேன்..!”,கம்பீரமாகவே ஒத்துக் கொண்டான் அவன்.

தொடரும்…

 

 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
காதல் இதுதானா?
617 62 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page