காதல் இதுதானா ? – காதல் 8
காதலாகும் 8:
போக்குவரத்து அவ்வளவாக இல்லாத ஆளரவமற்ற சாலையில் விஸ்வேஷ்வரனின் கார் ஓரம் கட்டி நின்றது.
இரு கைகளாலும் தலையைப் பிடித்தபடி காருக்குள் அமர்ந்திருந்தான் விஷ்வா.அவனருகில் இன்னும் அதிர்ச்சி விலகா முகத்துடன் சாலையையே வெறித்தபடி அமர்ந்திருந்தாள் யாழ்வி.
ஒரு சீறலான மூச்சுடன் அவளை நோக்கியவன்,”உன்னை யாரு கோர்ட்டுக்கு வர சொன்னது…?வந்ததும் இல்லாம அவரு என்கூடத்தான் இருந்தாருன்னு என் மானத்தோட சேர்ந்து உன் மானத்தையும் ஏலம் விட்டுட்ட..?”,அவனது குரல் அடக்கப்பட்ட கோபத்துடன் வந்தது.
“என் கண்ணு முன்னாடி ஒரு நிரபராதி தண்டிக்கப்படறதை பார்த்துட்டு சும்மா இருக்க சொல்றீங்களா…?என்னால அப்படி இருக்க முடியாது…!”,தன் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்தவளாய் அவளும் சீறினாள்.
“முட்டாள்..! நான் போலீஸ் காரன் டி… இதை எப்படி டீல் பண்ணனும்னு எனக்குத் தெரியும்…!என்னைக் காப்பாத்தறேன்னு இந்த விஸ்வேஷ்வரனுக்குன்னு இந்த சொசைட்டில இருந்த பெயரை குழி தோண்டி புதைச்சிருக்க…”,
“அதுதான்..கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுன்னு சொல்லிடீங்களே..யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க…”,முணுமுணுப்பாக கூறினாள் அவள்.
ஏனோ இந்த வார்த்தையில் அவன் அமைதியாகி விட்டான்.கோர்ட்டில் ஒரு வேகத்தில் அப்படி சொல்லி விட்டானே தவிர..அவனும் அவளைத் திருமணம் செய்வது என்பதை பற்றியெல்லாம் யோசித்திருந்திருக்கவில்லை.இவ்வளவு ஏன்..திருமணம் என்பதையே அவன் இதுநாள் வரை சிந்தித்ததில்லை.
“இதை எப்படி ஹேண்டில் பண்ண போறோம்ன்னு தெரியல…”முதல் முறையாக ஒரு விஷயத்தைக் கையாள தெரியாமல் திகைத்து நின்றான் அவன்.
அவளுக்கும் அவன் நிலை புரிந்ததோ என்னவோ..அமைதியாக அவனை ஏறிட்டவள்,”ஒரு பொண்ணு நான்..நானே அமைதியா இருக்கிறேன்..உங்களுக்கு என்ன…? அதெல்லாம் வேற விஷயம் வந்தால்.. நம்ம விஷயத்தை மறந்திடுவாங்க…! நீங்களும் இதை மறந்திட்டு..குற்றவாளியை கண்டுபிடிக்க பாருங்க…!”,என்றாள்.
“பின்ன..மறக்காம உன்னையா பிடிச்சுத் தொங்கிட்டு இருக்கப் போகிறேன்… இனிமேலும் இப்படி அவசரப்பட்டு எந்த விஷயத்தையும் செய்யாதே…!”,இந்த விஷயத்தை அவள் இலகுவாக எடுத்துக் கொண்டது அவனையும் சகஜமாக்கியது. எனவே,நக்கலாக கூறியபடியே காரை எடுத்தான்.
இவர்கள் இருவரும் இலகுவாக எடுத்துக் கொண்டதை போல் விதி இந்த விஷயத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை.அவர்கள் இருவரையும் இணைத்து வைப்பதற்காக காதல் தனது விளையாட்டை ஆட ஆரம்பித்தது.
அதன் விளைவு..அடுத்தநாள் அலுவலகத்தில் வேலையில் ஆழ்ந்திருந்தவனுக்கு அழைப்பு வந்தது யாழ்வியிடம் இருந்து.
‘இவ எதுக்கு போன் பண்ணறா…?’,யோசனையுடன் மொபைலை உயிர்ப்பித்து காதில் வைத்தான்.
“ஹலோ…நான் யாழ்வியுடைய அப்பா பேசறேன்…! உங்களைத் தொந்தரவு பண்ணினதுக்கு மன்னிக்கணும் தம்பி…!உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…யாழ்வியுடைய வீடு வரைக்கும் வர முடியுமா…?”,எதிர் முனையில் யாழ்வியின் தந்தை ரகுவரன் வினவ, ஏனோ அவனால் மறுக்க முடியவில்லை.
“ஓகே..நான் வர்றேன்…!”,என்றான்.
“நன்றி தம்பி…!வீட்டு அட்ரெஸ் சொல்றேன்..நோட் பண்ணிக்கோங்க…!”,
“தேவையில்லை.. எனக்குத் தெரியும்…!”,அவன் கூற மறுமுனையில் ஒரு நொடி அமைதி நிலவியது.
“சரி தம்பி… நீங்க வாங்க…!”,என்றபடி அவர் வைத்து விட்டார்.
யோசனையாய் நெற்றியை நீவியவன்..எழுந்து கிளம்பி விட்டான்.ஜீப்பை எடுக்க வந்த துரையையும் தடுத்து விட்டு அவனே ஜீப்பைக் கிளப்பினான்.இப்படியெல்லாம் வேலை நேரத்தில் வெளியேசெல்பவன் அல்ல அவன்.அப்படிப்பட்டவன் கிளம்பிச் செல்லவும் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
‘அவசரப்பட்டு வீட்டு அட்ரெஸ் தெரியும்ன்னு சொல்லிட்டோமே..தப்பா எடுத்துக்குவாரோ..’, வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவனின் மனதில் யோசனை எழுந்தது.
‘ஹ்ம்ம்..நினைச்சா நினைச்சுக்கட்டும்…முழுசா நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு…?’, ஏதேதோ எண்ணிக் கொண்டவன் அவளது அப்பார்ட்மெண்டுக்குள் ஜீப்பை விட்டான்.
லிப்டில் ஏறி அவளது தளத்திற்கு செல்லும் எண்ணை அழுத்தியவன்..அவளது வீட்டு வாசலின் முன் நின்று காலிங் பெல் அடித்தான்.
ஒரு அம்மா வந்து கதவைத் திறந்தார்.
“வாங்க…”,கண்ணுக்கு எட்டாத முறுவலுடன் அவனை வரவேற்றார்.
உள்ளே நுழைந்தவன் ஸ்தம்பித்து போய் அப்படியே நின்று விட்டான்.பின்னே.. உள்ளே ஒரு கிராமமே குழுமியிருந்தது.
யாழ்வியின் சொந்த ஊர் மதுரை பக்கம் ஒரு கிராமம். ஜர்னலிசம் அவளது பேஷன் என்றே சொல்லலாம்.விரும்பி படித்தாள். அவர்களது ஊரில் பெண்களை வேலைக்கு எல்லாம் அனுப்ப மாட்டார்கள். இவள்தான் கெஞ்சி கூத்தாடி எப்படியோ சென்னை வரை வேலைக்கும் வந்து விட்டாள்.இப்பொழுது இப்படியொரு பிரச்சனை கிளம்பி தொலைக்காட்சி ஊடகங்களிலும் இவர்களது பெயர் அடிபட.. ஊருக்குள் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டனர்.
என்னதான் முன்னேறினாலும் ஊருடன் ஒத்து வாழ்ந்துதானே ஆக வேண்டும்.அதிலும் யாழ்வியின் தந்தை அந்த ஊர்த்தலைவர் வேறு.தவறான எடுத்துக்காட்டோடு தன் மகள் வாழ்ந்து விடக் கூடாது.. இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு காண வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்களது குடும்பம் கிளப்பி இங்கு வந்து விட்டது.அப்பா,பெரியப்பா,சித்தப்பா,மாமா,அத்தை,பெரியம்மா என அனைவரும் அங்கு குழுமியிருந்தனர்.
‘என்னடா இது..கட்டப்பஞ்சாயத்து எதாவது நடத்தப் போறாங்களா…’,மலைப்புடன் அவனது பார்வை யாழ்வியைத்தான் தேடிக் கொண்டிருந்தது. தொலைக்காட்சி வைக்கப்பட்டிருந்த டேபிளின் மீது சாய்ந்தபடி கை கட்டி நின்றிருந்தவள் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் முகத்தில் மாறி மாறி வந்து போன உணர்வுகள் அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது.இவ்வளவு பெரிய கூட்டத்தை அவன் எதிர்பார்த்திருந்திருக்கவில்லை என்பதை அவன் முகமே கூறியது.வாயை மூடி சிரிப்பை அடக்கப் போராடியவளை அவன் பார்த்து விட்டான்.
‘எல்லா காரியத்தையும் இவ பண்ணிட்டு.. இப்போ இவ பேமிலி முன்னாடி குற்றவாளி மாதிரி என்னை நிற்க வைச்சிருக்கிறா..ராட்சசி…!’,அவன் மனதுக்குள் திட்டிக் கொண்டிருக்கும் போதே அவளது தந்தை ரகுவரன் அழைத்தார்.
“வாங்க தம்பி…!உட்காருங்க.. உங்களுக்கு எவ்வளவோ வேலை இருக்கும்…எங்க அழைப்பை மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றி…!”அவன் அமருவதற்கு சோபாவை சுட்டிக் காட்டினார்.
ஒன்றும் பேசாமல் சென்று அதில் அமர்ந்தான் அவன்.
“தம்பி..உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை..டிவியில வர்ற நியூஸ்…”,எப்படி சொல்வது என்று தெரியாமல் அவர் தடுமாறிக் கொண்டிருக்க,
தலையை பக்கவாட்டில் திருப்பி உதட்டைக் குவித்து ‘உஃப்’ என மூச்சை விட்டவன் நிமிர்ந்து அவரைப் பார்த்து பேச ஆரம்பித்தான்.
“அன்னைக்கு நடந்ததை யாழ்வியே உங்ககிட்ட சொல்லியிருப்பாள்ன்னு நினைக்கிறேன்..!”,கூறியவனின் பார்வை யாழ்வியின் மீது படிய,அவள் ‘ஆம்’ என்பதாய் தலையசைத்தாள்.
“அவள் சொன்னது நூறு சதவீதம் உண்மை… !அந்த பூட்டுன ரூமுக்குள்ள எங்களுக்குள்ள எதுவுமே நடக்கல…! கோர்ட்ல நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுன்னு சொன்னதுக்கு காரணம்.. எங்களுடைய மானம் அங்கே கேள்விக்குறி ஆகறதை நான் விரும்பல… அத்தோட. இந்த விஷயத்தை நானே எப்படியாவது ஹேண்டில் பண்ணியிருப்பேன்… அதுக்குள்ள உங்க பொண்ணு வந்து எல்லாத்தையும் போட்டு உடைச்சிட்டாள்…!எனக்கும் வேற வழி தெரியல…ஒரு பொண்ணை தப்பா பேசறதுக்கு நான் காரணமா இருக்க கூடாதுன்னு நினைச்சேன்…!அதனாலதான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுன்னு சொன்னேன்..!இந்த விஷயத்தை நீங்க சீரியஸா எடுக்க வேண்டாம்..நாளைக்கே பத்திரிக்கைகாரங்களுக்கு இன்னொரு நியூஸ் கிடைத்தால்.. இதை மறந்துட்டு அந்தப் பக்கம் தாவிடுவாங்க… மக்களும் இதை காலப்போக்கில மறந்திடுவாங்க…!”,நீளமாக விளக்கம் கூறி முடித்தான் விஷ்வா.
குண்டூசி விழுந்தால் கூட அங்கு சத்தம் கேட்கும் அந்தளவிற்கு அமைதி நிலவியது.
ரகுவரன் பேச ஆரம்பித்தார்.
“உங்க சிட்டியில் எப்படியோ எனக்குத் தெரியாது தம்பி…!ஆனால்,எங்க ஊருக்குள்ள அவ்வளவு சீக்கிரம் இதை யாரும் மறக்க மாட்டாங்க…!இந்த விஷயம் நாளைக்கு நான் என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது பூதாகரமா வந்து நிற்கும்…!எங்க கிராமத்துல படிச்சிட்டு பட்டணம் வரைக்கும் வந்து வேலை பார்க்கறது என் பொண்ணு மட்டும் தான்…!பொண்ணுங்களும் நாலு பக்கம் போகணும்.. இந்த உலகத்தைப் பத்தி தெரிஞ்சுக்கணும்ன்னு நினைக்கிறவன் தான் நான்…அதனால்தான் என் பொண்ணை துணிஞ்சு இந்த வேலைக்கு அனுப்பினேன்…!என் பொண்ணு மேலே எனக்கு நம்பிக்கை இருக்குது…இந்த உலகமே அவளுக்கு எதிரா சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்… ஏன்னா..என் வளர்ப்பு அப்படி…!”,ஒரு கணம் நிறுத்தியவரின் குரலில் அப்படியொரு பெருமிதம்.
“ஆனால்…சுத்தியிருக்கறவங்க இந்த விஷயத்தை அப்படியே விட மாட்டாங்க…!கண்ணு காது மூக்கு வைத்து திரிச்சு பேசுவாங்க…!என் பொண்ணு ஊரான் வாயில அரைபட ஒரு தகப்பனா என்னால அனுமதிக்க முடியாது தம்பி…!”,இதைக் கூறும் போதே அவரது குரல் லேசாக கமறியது.
தொண்டையை செருமிக் கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தார்.
“அத்தோட… இவளை காரணம் காட்டி வெளியே போய் வேலை செய்ய விரும்பற பொண்ணுங்களையும் தடுப்பாங்க…! இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா எங்க ஊர் பொண்ணுங்க வெளியில காலேஜ் வரைக்கும் வந்து படிக்க ஆரம்பிச்சிருக்காங்க…!அது தடைபடறதை ஒரு ஊர்த்தலைவரா என்னால அனுமதிக்க முடியாது…!”,பேசி முடித்தவர் நிமிர்ந்து அவனைப் பார்த்தார்.
ஒரு முடிவுடன் சோபாவில் இருந்து எழுந்தவன்,”நான் உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன்…!கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க…!”,என்றான் உறுதியான குரலில்.
அனைவரும் எதிர்பார்த்ததும் அதைத்தானே. வந்திருந்தவர்கள் நிம்மதியுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“வாட்…?”,என அதிர்ந்தது யாழ்விதான்.
தீர்க்கமான பார்வையுடன் அவளை நெருங்கியவன்,”தெரிந்தோ தெரியாமலோ நாமளே ஆரம்பிச்சு வைச்சதை நாமளே முடித்தும் வைப்போம்…!எனக்கும் சொஸைட்டியில ஒரு பேர் இருக்குது…!அதை காப்பாத்த வேண்டிய நிலைமையில நான் இருக்கிறேன்…!உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு நாளைக்கு நமக்கு கல்யாணம் நடக்கலைன்னா நாலு பேர் நாலு விதமா பேச ஆரம்பிப்பாங்க…!அதுக்கு நான் அலோவ் பண்ண முடியாது…!உன்னைத் தப்பா பேசறதுனால உன் பேரண்ட்சுக்கும் தேவையில்லாத மன வருத்தம்…!இது அத்தனையும் நம்ம கல்யாணத்துனால சரியாகும்ன்னு சொன்னா…நாம ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாது…?”,சுற்றியிருக்கும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் அவள் கண்களை விட்டு இம்மியளவும் தன் பார்வையை அகற்றாமல் பேசினான் அவன்.
அவளால்தான் இதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.கல்யாணம் என்பதையே அவள் யோசிக்கவில்லை. இதில் விஸ்வேஷ்வரனுடன் கல்யாணம் எனபதை அவள் சுத்தமாக யோசித்தே இருந்திருக்கவில்லை.அப்பா பெரியப்பா என அனைவரும் வந்து இறங்கிய போது கூட அவள் தைரியமாகத்தான் இருந்தாள்.எப்படியாக இருந்தாலும் அவன் சம்மதிக்க மாட்டான் என்ற குருட்டு தைரியத்தில் இருந்தவளுக்கு..தன் தந்தை வாயைத் திறந்து கேட்காமலேயே ‘கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என்று அவன் சொன்னது அவளுக்கு அதிர்ச்சியை அளித்தது.
“டேக் யுவர் ஓன் டைம்ன்னு சொல்லக் கூடிய நிலையில கூட நாம இல்லை யாழ்வி…! ஹோப் யு கேன் அண்டர்ஸ்டாண்ட்..! ஓகே தானே…?” அவன் வினவ,தன்னையே பார்த்திருந்த அவன் கண்கள் என்ன மாயம் செய்ததோ..அவள் தலை தானாய் ‘சரி’ என்பதாய் ஆடியது.
இதழ் பிரிக்காமல் ஒரு சிரிப்பை அவளுக்கு உதிர்த்தவன்..அவள் தந்தையிடம் திரும்பி, ”கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க…! நான் விஸ்வேஷ்வரன்..அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆப் போலீஸ்…! சொந்தமா ஒரு வீடு இருக்குது.. கை நிறைய சாம்பாதிக்கிறேன்…!சொந்த பந்தம்ன்னு யாரும் இல்லை…பிறந்ததில் இருந்தே திருநெல்வேலி ஆசிரமத்தில்தான் வளர்ந்தேன்..!என்னை நம்பி உங்க பொண்ணை கொடுக்கலாம்.”,
நிமிர்ந்து கம்பீரத்துடன் கூறியவனை ரகுவரனுக்கு நிரம்ப பிடித்துப் போனது.
அவரும் அவனைப் பற்றி நிரம்ப கேள்விப்பட்டிருக்கிறார் அல்லவா…முழு திருப்தியுடன் புன்னகைத்தார்.
“எங்களுக்கு முழு சம்மதம் மாப்பிள்ளை…!”, மகளின் நடத்தையைப் பற்றியோ அவளது வாழ்க்கையைப் பற்றியோ இனி யாரும் தவறாக பேச முடியாது என்ற எண்ணம் அவருக்கு நிறைவைத் தந்தது.
“இவள்தான் என் மனைவி கலாவதி…!”,தன் மனைவியை அறிமுகப்படுத்தியவர் மற்ற உறவினர்களையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
“ஓகேங்க..நான் கிளம்பணும்…!டியூட்டில இருந்து அப்படியே வந்துட்டேன்…கல்யாண வேலைகளை நீங்களே பார்த்துக்கோங்க…!என் சைட்ல இருந்து என்கூட வொர்க் பண்றவங்க மட்டும்தான் வருவாங்க…! நீங்க யார் யாரை அழைக்க விரும்பறீங்களோ அழைச்சுக்கோங்க…!இப்போ நான் கிளம்பட்டுமா…?” அவன் வினவ,
“சரிங்க மாப்பிள்ளை…!எங்க முறைப்படி கல்யாணம் பெண்ணோட வீட்டுலதான் நடக்கணும்… நாங்களே எல்லாம் ஏற்பாடு பண்ணிடறோம்…!”,வீட்டின் மாப்பிள்ளை அல்லவா அனைவரும் எழுந்து நின்று வழியனுப்பி வைத்தனர்.
வெளியேறுவதற்கு முன்பு திரும்பி யாழ்வியை ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியேறினான் அவன்.
“எப்படியோ பேச்சுவார்த்தை நல்லபடியா முடிஞ்சுது… சொந்த பந்தம் இல்லைன்னாலும் மாப்பிள்ளை குணம் தங்கம் தான்…!”,கலாவதி மெச்சிக் கொண்டார்.
அன்று ஒருநாள் தங்கி விட்டு அனைவரும் அடுத்த நாளே கிளம்பிச் சென்று விட்டனர்.போகும் போது,’ ஜாக்கிரதையாக இரு…நீயாக எந்தப் பிரச்சனையிலும் போய் மாட்டிக் கொள்ளாதே…’,என்று எச்சரிக்கவும் தவறவில்லை.
விட்டத்தை வெறித்தபடி படுக்கையில் படுத்திருந்த யாழ்விக்கு இன்னும் நடந்ததை நம்ப முடியவில்லை.இருவருக்குமான முதல் சந்திப்பே மோதல்தான்.அதிலும் அப்பொழுது திமிராக அவன் பேசிய வார்த்தைகள்..எப்பொழுது நினைத்தாலும் அவளுக்கு கோபத்தைத்தான் ஏற்படுத்தும். ஆனால், இன்றோ முதல் சந்திப்பில் அவன் பேசிய வார்த்தைகள் சிறிதே சிறிதாக அவளுக்குள் வெட்கத்தை ஏற்படுத்தியது.
அதற்காகவெல்லாம் அவள் கல்யாணக் கனவுகளில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தாள் என்றெல்லாம் கூறி விட முடியாது. விதி என்பார்களே..அதைப் போல் ஒரே நாளில் மந்திரம் போட்டதைப் போல் அவள் வாழ்க்கையே மாறிவிட்டது.
திருமணம்..அதுவும் விஸ்வேஷ்வரனுடன்…!நினைக்கும் போதே உருத்தெரியாத உணர்வொன்று அடி வயிற்றில் எழுந்தது.பத்திரிக்கைக்காரி அல்லவா..அவனைப் பற்றி நிறைய விஷயங்கள் படுத்திருக்கிறாள்..அவன் செய்த நிறைய வீர செயல்களை கேள்விப்பட்டிருக்கிறாள்… அப்படிப்பட்டவன் தனக்கு கணவன் என்ற உணர்வே குறுகுறுப்பை மூட்டியது.
அவளையும் அறியாமல் அவளது இதழ்கள் புன்னகையில் விரிய.. ஒரு பெருமூச்சுடன் திரும்பி படுத்தாள். ஜன்னலின் வழியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தத முழு நிலவு இவளைப் பார்த்து கண் சிமிட்டியது.
‘சரி..எதுவோ ஒன்று.. வாழ்க்கை இழுத்துச் செல்லும் வழியில் பயணிப்போம்…!’,எண்ணியவளுக்குள் நிச்சயம் சலிப்பு தோன்றவில்லை.மாறாக ஒரு எதிர்பார்ப்பு தான் தோன்றியது.
‘எபப்டியாக இருந்தாலும் அம்மா அப்பா பார்த்து வைக்கிற பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறோம்..அது இவர்ன்னு நினைச்சிட்டு போக வேண்டியதுதான்…’,அதையும் இதையும் நினைத்து குழம்பிய மனதை சரி செய்தவள் உறங்கியும் போனாள்.
தொடரும்…
