காதல் இல்லம் – அத்தியாயம் 2

                                      காதல் இல்லம் – AY 90

அத்தியாயம் 2

ஜானகி பிறந்து வளர்ந்தது எல்லாம் கிராமமும் நகரமும் இல்லாத முல்லையூரில் தான். முல்லையூர்  ஒரு அழகான கிராமம். எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென்று நிலங்கள். அதில் வேலை செய்யும்  வெள்ளந்தியான மக்கள் . கிராமத்தின்  நடுவில்  ஒரு பழங்காலத்து கோவில். காலையும் மாலையும் அங்கு அலை மோதும் பெண்கள் கூட்டம் என்று மனதிற்கு ரம்மியமான ஒரு சூழல். எல்லாவற்றையும் மிஞ்சும் கிராமத்தின் வடக்காக ஓடும் முல்லையாறு. 

பள்ளிக்கூடம் லீவு என்றால் அந்தக் குளத்தில் கும்மாளமடிக்கும்  விடலை பசங்கள். பெண்கள் குளிக்கும் பகுதியிலும் ஒருவரை ஒருவர் கேலி செய்துக் கொண்டு ஆற்றில் குளிக்கும் கன்னிப் பெண்கள். அவர்களை ஓரக்கண்ணால் பார்க்கும் கிராமத்து வாலிபர்கள் என்பது ஒரு பக்கம் இருக்க, பெரியவர்களுக்கு தெரியாமல் இருக்க காதலர்கள் தேர்ந்தெடுக்கும் இடம் முல்லையாறும் கோவிலும் தான் என்பதை சொல்லவும் வேண்டுமா?  

கிராமத்தைப் போலவே நாட்டாமை, பெரியதனக்காரர் எல்லாம் இருந்தாலும் நகரத்தில் இருப்பது போலவே ஒரு நல்ல பள்ளிகூடம், நல்ல ஆஸ்பிடல் ஏன்  ஒரு நல்ல சினிமா தியேட்டர் கூட இருந்தது. ஆனால் ஜானகிக்கு தியேட்டர் எல்லாம் போய் சினிமா சினிமா எல்லாம் பார்ப்பதற்கு நேரம் கொஞ்சம் கூட கிடையாது. ஏனென்றால் வீட்டை கவனிப்பதற்கும் தம்பியைக் கவனிப்பதற்குமே அவளுக்கு நேரம் போதவில்லை. 

ஜானகியின்  குடும்பம் சின்னதுதான். அவள்தான் மூத்த பெண். அவள் தந்தை அந்த ஊர் பள்ளியில் கணக்கு வாத்தியார். ஜானகிக்கு  ஒரே  தம்பி. ஆனால் துரதிருஷ்டவசமாக தம்பி மூளை சரியில்லாத குழந்தையாகப் பிறந்துவிட, அந்த வருத்தத்திலேயே  ஜானகியின்  தாயார் நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி விட்டாள். 

தம்பி பிறக்கும் வரை வீட்டின் இளவரசியாக வாழ்ந்து வந்த ஜானகிக்கு தம்பி பிறந்த பிறகு வாழ்க்கையே மாறிவிட்டது. தாய் நோய் வாய் பட்டதால் வீட்டை கவனிக்கும் வேலை மட்டுமல்ல தம்பியையும் கவனிக்கும் வேலையும் சேர்ந்து விட்டது. இருந்தாலும் அவள் படிப்பதை விடவில்லை. பாதி நாள் பள்ளிக்கு போக முடியாவிட்டாலும் கடைசியில் எப்படியோ படித்து நல்ல மார்க் வாங்கிவிடுவாள்.

தந்தை வேலை செய்யும் பள்ளியிலேயே படித்ததால் ஃபீஸ் கட்ட வேண்டியிருக்க வில்லை, அதனால் கஷ்டஜீவனமாக இருந்தாலும் அவளை படிக்கட்டும் என்று விட்டு விட்டார் அவள் தந்தை. இருந்தாலும் வீட்டு வேலை அது இது என்று ஜானகியால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலைதான். ஆனால் எப்படியோ நேரம் எடுத்துக் கொண்டு தன் படிப்பில் கவனம் செலுத்தி வருடாவருடம் தேர்வு எழுதி பாஸ் செய்து கொண்டு வந்தாள் ஜானகி. முதல் மார்க் வாங்காவிட்டாலும் மோசமான மார்க் இல்லை என்று மனதை தேற்றிக் கொள்ளும் நிலைதான். . 

ஏழ்மையான குடும்பத்தில்  பிறந்திருந்த ஜானகிக்கு கடவுள் வளமையான வாழ்க்கையை கொடுக்க மறந்திருந்தாலும், அவள் அழகிற்கு மட்டும்  குறை வைக்கவில்லை. விலை கூடிய உடை அலங்காரங்களுக்கு வழி இல்லை என்றாலும்,  எளிமையான உடையில் அவள் எங்கு சென்றாலும் அவளை ஒருமுறை திரும்பிப் பார்க்காதவர் கிடையாது என்பது போல் அழகாக இருந்தாள்  ஜானகி, ஒரு தேவதை போன்ற அழகி என்று பார்த்தவர் அனவரும் சொல்லுவது போல் சுண்டி இழுக்கும் அழகியாக இல்லாமல் நின்று வணங்கும் அழகியாக இருந்தாள் ஜானகி.

பார்ப்பவர்கள் ஒரு நிமிடம் நின்று பார்த்து விட்டு செல்லும் களையான முகம். நீண்ட கூந்தலில் இருவாட்சி மலர் சூடி மையிட்ட மருண்ட கண்களால் அவள் பார்க்கும் பொழுது இந்த அழகுப் பெட்டகத்தை அடைய எவன் கொடுத்து வைத்திருக்கிறானோ என்று பெருமூச்சு விடாதவர் இல்லை.

ஆனால் கிராமத்து திருவிழா வந்து எல்லாவற்றையும் மாற்றி விட்டது. வருடாவருடம் வரும் அந்த திருவிழாவிற்கு அந்த கிராமமே காத்துக் கொண்டிருக்கும்.பக்கத்து நகரங்களிலிருந்து சொந்தக்காரர்கள் எல்லாம் வர, ராட்டினம், புதிதாக முளைத்த கடைகள் என்று ஊரே புதுக்கோலம் பூண்டிருக்கும்.

பள்ளிக்கூடம், கல்லூரி எல்லாவற்றிருக்கும் விடுமுறைதான், ஊர் முழுவதுமே திருவிழாவில் கலந்து கொள்ள, வீட்டில் பெண்டிர் சமைக்க வேண்டாம் என்று தினமும் அன்னதானம், மூன்று வித பாயசங்களுடன் எல்லோருக்கும் உண்டு . அதனால் அந்த ஒரு வாரமும் ஊரில் உள்ள எல்லாப் பெண்களும் திருவிழா அரங்கில் தான் வாசம்.

எல்லாப் பெண்களையும் போலவே ஜானகியும்  அவள் சினேகிதிகளும்  தங்களிடமிருந்ததிலேயே நல்லதாக இருந்த  உடைகளை அணிந்துக் கொண்டு திருவிழா கோலாகலத்தில் சேர்ந்துக் கொண்டார்கள்.

பெண்கள் இருக்கும் இடத்தில் ஆண்கள் கூட்டமும் தான் இருக்குமே ! ஜானகி  போகும் இடமெல்லாம் ஆண்கள் கூட்டமும் கூடவே தொடர்ந்தது.  இத்தனைக்கும் அவளிடம் மற்ற பெண்களைப்போல் அலங்காரம் செய்து கொள்வதற்கு பணமும் இல்லை – மனமும் இல்லை. அப்படியும் அவள் அழகு எல்லோரையும் கவர்ந்து இழுத்தது.

அழகான நீண்ட கூந்தலை ஒற்றை பின்னலாக பின்னி விட்டிருந்தாள்.  யாரோ சினேகிதி கொடுத்த மல்லிகைச் சரத்தை அலட்சியமாக தலையில் சொருகியிருந்தாள். அது பாதி நேரம் அவள் கழுத்தின் முன்பக்கம் வந்து விழுந்துக் கொண்டே இருக்க, அவள் கை அதை பின்னே தள்ளி விட்டுக் கொண்டே இருந்தது. அதுவே அவள் அழகுக்கு அழகு சேர்த்தது.

ஒற்றை பின்னல் அவள் நடக்கும் போது அவள் பின்னால் ஒரு அழகான நாடகத்தை நடத்திக் கொண்டிருக்க, அதைப் பார்க்க பல கண்கள் ஆர்வமாக இருந்தன. அவள் பின்னால் நடந்த ஆட்களில்  ராகவும் இருந்தான் . ஜானகியை ஆஸ்பத்திரியில் பார்த்தவுடனேயே அவனுக்கு அவளை ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. இருந்தாலும் டாக்டர் சீட்டில் உட்கார்ந்துக் கொண்டு விட்டதனால் ஜானகியிடம் அவள் தம்பியின் சிகிச்சை பற்றி பேசுவது மட்டுமே செய்தான்.

ஆனால் ஆஸ்பத்திரி டியூட்டியில் இல்லாத நேரம் அவளைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து, ‘இவள்தான் எனக்கு உரிய பெண் ‘ என்று அவனே நிர்ணயித்துக் கொண்டான். அதன்  பின், டியூட்டி இல்லாத நேரத்தில் அவளை பின்தொடர்ந்து அவளிடம் எப்படியாவது தன் மனதில் இருப்பதை சொல்லிவிட வேண்டும் என்பது ஒன்றே அவன் எண்ணமாக இருந்தது.

திருவிழாவின் போதும் இதே நினைப்புடன் தான் ஜானகியைப் பின் தொடர்ந்தான் ராகவ். ஜானகிக்கும் பெண்களுக்கே உரிய சூட்சும அறிவால் ராகவ் அவளைப் பின் தொடர்வது தெரிந்தாலும் அதைக் கண்டுக் கொள்ளாமல் இருந்தாள்.

கூட்டத்தில் மற்ற ஆண்கள்  ஜானகியின்  அழகைப் பற்றிப் பேசும் பொழுது,  ராகவுக்கும் அவர்களை அடித்துக் கொன்று விடலாம் போல் கோபம் வரும். “இவள் என்னத்துக்கு இந்த மாதிரி அழகா அலங்காரம் பண்ணிண்டு மற்ற ஆண்கள் கண்ணில் படறாமாதிரி நிக்கறா?” என்றெல்லாம் கோபமாக தனக்குள்ளேயே பொருமிக் கொண்டே இருந்தான்.

வளையல் கடையில் அவள் நின்று வளையல்களைப் பார்த்து “இது அதிக விலை – அது நன்றாக இல்லை” என்று ஒதுக்கி விட்டு அங்கிருந்து சென்ற பிறகு, அதே கடையில் அவள் விலை அதிகம் என்று ஒதுக்கிய வளையல்களை வாங்கி, எப்பொழுதாவது கொடுக்கும் சந்தர்ப்பம் வரும் என்று நினைத்து தன்னிடம் வைத்துக் கொண்டான்.

அதேமாதிரி   ஜானகி  எதையெல்லாம் வாங்க ஆசைப்பட்டு வாங்காமல்  சென்றாளோ, அதையெல்லாம்  வாங்கி  தன்னிடம் வைத்துக் கொண்டான்.   அவன்மனதில் பல எண்ணங்கள் – ஆசைகள் –

கடைசியாக ஜானகி, அவள் சினேகிதிகள் எல்லோரும்  ராட்டினம் இருக்கும் இடத்திற்கு சென்றார்கள். எல்லோரும் ராட்டினத்தில் ஏறலாம் என்று சொல்ல, ஜானகி  மட்டும் தனக்கு பயமாக இருக்கிறது – தலைசுற்றல் வரும் என்று ஏற மறுத்தாள்.

கடைசியாக ஒரு பணக்கார சினேகிதி எல்லோருக்கும் சேர்த்து தான் டிக்கட் வாங்கி விட்டதாகச் சொல்லி, ஜானகி  மறுத்துப் பேசியும், அவளை எப்படியோ சமாதானப் படுத்தி, எல்லோரையும் ராட்டினத்தில் ஏற்றிவிட்டு விட்டாள்.

அவர்கள் எல்லாம் ஏறியதும், தானும் ஏற முயற்சி செய்தான் ராகவ். ஆனால் அவனுக்கு  முன்பே க்யூவில் நின்றவர்கள் நிறைய பேர் இருந்ததால் அவனுக்கு இடம் கிடைக்கவில்லை. அதனால் ஏமாற்றத்துடன்  கீழேயே நின்றுக்கொண்டு ஜானகியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால் ராட்டினத்தில் ஏற இடம் கிடைக்காதது அவனுக்கு எவ்வளவு பெரிய நன்மை செய்யப் போகிறது என்று அப்பொழுது அவனுக்குத் தெரியாது.அவன் ஏக்கமாக அவளைப் பார்ப்பதை ஜானகியும்  பார்த்து மனதுக்குள்ளேயே  சிரித்துக் கொண்டாள். அவனைப் பார்த்தால் அவளுக்கு பாவமாகத்தான் இருந்தது.

ராட்டினம் முதலில் மெதுவாகச் சுத்த தொடங்கியது. அப்பொழுது சுகமாகத்தான் இருந்தது ஜானகிக்கு. ஆனால் மெதுவாக வேகம் பிடித்து அவள் உட்கார்ந்திருந்த இருவர் உட்காரும் இருக்கை மேலே வந்ததும்  ஒரு பயம் வந்து பக்கத்திலிருந்த தன் சினேகிதியின்  கையை கெட்டியாகப் பற்றிக்கொண்டாள்.

ராட்டினம் மேலே வந்ததும் வேகமும் அதிகரித்தது. அவள் இருக்கை கீழே இறங்கும் போது எற்பட்ட ஒரு அதிர்வு அவள் வயிற்றைக் கலக்கியது, அவளையும் அறியாமல் அவள் கீழே பார்த்தவுடன், இவ்வளவு உயரத்தில் இருக்கிறோமே என்ற பயம் வந்து ரத்தம் அவள் தலைக்கு ஏறியது.

ராட்டினம் கீழே வேகமாக இறங்கியது ஜானகியை இன்னும் பயமுறுத்த , அவள் ‘ஓ’ வென்று கத்தி விட்டு அப்படியே மயங்கி சாய்த்துவிட்டாள். நல்லவேளையாக இருக்கையில் கம்பி இடப்பட்டிருந்ததால்  ஜானகி  கீழே விழாமல்   தடுத்து விட்டது.

ஆம் ! ஆம்! வாசகர்களான நீங்கள் தான் புத்திசாலி ஆச்சே ! அடுத்து என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும் தானே? 

அடுத்த அத்தியாயத்தில்  சந்திப்போம்

************

 

********

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
காதல் இல்லம்
157 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page