காதல் இல்லம் – AY 90.
அத்தியாயம் 3
********
அவள் மயங்கி சாய்ந்ததைப் பார்த்து அவள் சினேகிதி பயந்து அழத் தொடங்கி விட்டாள். ஆனால் இதெல்லாம் நடந்தது ராட்டினத்தில் வேறே யாருக்கும் தெரியாது. ராட்டினம் ஓட்டுபவனும், ராட்டினத்தை அதும் பாட்டில் ஓடவிட்டு விட்டு , அடுத்து ராட்டினத்தில் ஏற க்யூவில் நின்றுக் கொண்டிருந்தவர்களிடம் இருந்து டிக்கட்டை வாங்கத் தொடங்கி இருந்தான்.
கீழே நின்றுக்கொண்டிருந்த ராகவ் கண்களுக்கு ஜானகி தவிர வேறே யாருமே தெரியவில்லை என்பதால் அவன்தான் ஜானகி மயங்கி இருக்கையில் சாய்வதையும், அவள் சினேகிதி பயந்துப் போய் கத்துவதையும் முதலில் பார்த்தான்.
உடனே ஓடிப்போய் ராட்டினம் ஓட்டுபவனை ராட்டினத்தை மெள்ளமாக ஓட்டி நிறுத்தச் செய்தான் அப்படியும் ஜானகி இருந்த இருக்கை கொஞ்சம் மேலாகவே இருக்க, கையாலேயே அதைக் கீழே கொண்டு வந்தான்.
இருக்கை கீழே வந்ததும், அப்படியெ கம்பியை தூக்கி ஜானகியை அவள் சினேகிதியின் உதவியுடன் கீழ் இறக்கினான். இன்னும் பாதி மயக்கத்தில் இருந்த ஜானகியை அவர்கள் இருவரும் மெதுவாக தங்கியவாறு நடத்தி வந்து வெளியில் ஒரு இருக்கையில் அமர்த்தினார்கள்.
ராகவ் ஓடிப்போய் ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கிண்டு வந்தான், அதை அவள் முகத்தில் தெளித்து வாயிலும் கொஞ்சமாக ஊற்றியதும் ஜானகி கண் திறந்தாள். கண் திறந்ததும் அவள் கண்ணில் பட்டது ராகவின் கவலை நிறைந்த முகம் தான்.
சிறிது நேரத்தில் அவளுக்கு முழு நினைவு வந்ததும் அவள் சினேகிதிதான் நடந்த விவரம் எல்லாம் கூறினாள். ராகவ் மட்டும் அவளை கவனிக்காமல் இருந்தால் ராட்டினம் நிற்காமல் ஓடி, ஜானகிக்கு பெரும் ஆபத்தாக முடிந்திருக்கும் என்று அவள் சினேகிதி கூறினாள்.
ராகவ் ராட்டினம் ஓட்டுபவனைக் கூப்பிட்டு ராட்டினத்தை நிறுத்தியதால் தான் ஜானகி தப்பித்தாள் என்று அவள் சொன்ன நேரம்தான் ராகவ் ஜானகியின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த நேரம் என்றும் கூறலாம்.
அவள் சினேகிதிகள் மற்றும் பொதுமக்கள் இவ்வளவு பேர் இருந்தபோதும் ராகவ் மட்டுமே அவள் மயங்கியதைக் கவனித்து, அவளை காப்பாற்றியது அவளை என்னவோ செய்தது. அதே சமயம் “ இவன்தான் என்னுடையவன்” என்ற எண்ணமும் அவள் மனசு முழுக்க நிறைந்து அவள் முகத்தையும் சிவக்க செய்தது.
அந்த நேரம் அவள் உணர்ந்தது ஒன்றே ஒன்றுதான். ராகவிடத்தில் அவள் தன்னை மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தாள் என்பதுதான் அது, அதுவரை அவளை அவளே பார்த்துக் கொள்வது தான் நடந்தது. தன்னைப் பார்த்துக் கொள்ளுவதை விட மற்றவர்களைப் பார்த்துக் கொள்ளுவது தான் அவள் வாழ்க்கையாக இருந்தது.
தன்னைப் பற்றி நினைக்கவும் தன்னையும் ஒரு மனுஷியாக பார்த்து பாதுகாக்கவும் ஒருத்தன் இருக்கிறான் என்ற உணர்வே அவளுக்கு புதிதாக இருந்தது. இந்த உணர்வுடன் ராகவைப் பார்க்க பார்க்க அவன் மேல் அவள் காதல் அதிகமாகியது,
ராகவும், ஜானகி எதுவும் சொல்லாமலேயே அந்த நேரம் அவள் மனதின் உணர்வுகளை புரிந்துக் கொண்டான். அந்த நேரம் அவன் நினைத்தது –“ நல்ல வேளை எனக்கு ராட்டினத்தில் இடம் கிடைக்கவில்லை. அதனால்தான் என் ஜானகி என்னைப் புரிந்துக் கொண்டாள். ராட்டினத்தில் இடம் கிடைக்காவிட்டாலும் ஜானகியின் மனதில் இடம் கிடைத்து விட்டதே” என்று நினைத்து நினைத்து மனம் மகிழ்ந்தான்.
அதன் பிறகு அவர்கள் இருவருக்கும் நாட்கள் நகரவில்லை. ஓடின. ஜானகி எப்படியோ எல்லா வேலைகளயும் முடித்துக்கொண்டு ராகவை சந்திக்க நேரம் உண்டாக்கிக் கொண்டாள் . ராகவும் திருவிழாவில் அவள் வாங்க விரும்பி வாங்க முடியாமல் போனதை தான் வாங்கி வைத்திருந்ததாகக் கூறி அவள் கையில் கொடுத்தபொழுது உணர்ச்சி வசப்பட்டு ஜானகி அழுது விட்டாள்.
“இவனுக்குத்தான் என் மேல எத்தனை அன்பு. இந்த அன்புக்கு நான் தகுதியா?” என்ற எண்ணமேல்லாம் கூட வந்து, அவள் அதையே ராகவிடமும் கேட்டாள். அதற்கு அவன்
“காதல் என்பது வெறும் கொடுக்கல் வாங்கல் இல்லை. நமக்குள் கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்திதான் காதலை உண்டாக்குகிறது. அதே சக்திதான் காதலர்களைப் பிரிக்கவும் செய்கிறது. அதனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.
இணைந்தாலும் பிரிந்தாலும் அதற்கு காதலர்கள் காரணம் கிடையாது. அவர்களை மீறிய ஒரு சக்திதான் அவர்களை இயக்குகிறது, அதனால் நீ எனக்கு தகுதியா – நான் உனக்கு தகுதியா என்ற கேள்விக்கே நம் இடையில் இடமில்லை” என்று நீளமாகப் பேசி நிறுத்தினான்,
அவன் எந்த வேளையில் பிரிவைப் பற்றி பேசினானோ – விதி அவர்களைப் பிரிக்கும் வேலையைத் தொடங்கி விட்டது என்றே சொல்லலாம். விதி அந்த ஊர் பெரியதனக்காரர் ரூபத்தில் வந்தது.
அந்த ஊர் பெரியதனக்காரர் ஊரில் பணம் வேண்டுபவருக்கு கடன் கொடுத்து அதற்கு வட்டி வாங்கியே பணக்காரர் ஆனவர். காசிநாதன் என்ற அவர் பெயரை ஊரில் பலரும் அவர் இல்லாதபோது கஞ்சநாதன் என்று குறிப்பிடும் அளவுக்கு கஞ்சத்தனம் படைத்தவர்.
ஆனால் எல்லா இடங்களிலும் நாம் பார்ப்பது போலவே அவருக்கு பிறந்த நான்கு பிள்ளைகளும் தறுதலைகள். முதல் மூன்றாவது பரவாயில்லை. கல்யாணத்திற்கு முன்பு எப்படி இருந்தாலும், கல்யாணம் ஆனபின்பு ஏதோ சின்ன சின்ன வேலையில் அமர்ந்து, தன் மனைவியை கவனித்துக் கொள்ளும் அளவிற்கு பணம் சம்பாதிக்கிறார்கள்.
கடைசி பிள்ளை வெங்கடேசனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவனிடம் இல்லாத கெட்ட குணங்களெ கிடையாது. அவனைத் திருத்த காசிநாதன் எவ்வளவோ முயன்றும் பலனில்லை. ஊரில் வெங்கடேசனால் அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் ரொம்பக் கெட்ட பெயர்.
தன் மனவி கூறியதுபோல வெங்கடேசனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைத்தால் அவனும் மற்ற பிள்ளைகளைப் போல் திருந்தி வாழ்வான் என்றும் அவரும் நம்பி, அவனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார், ஆனால் வெங்கடேசனின் புகழ் பக்கத்து கிராமங்கள் வரை பரவி இருந்ததால், யாரும் அவனுக்குப் பெண் கொடுக்க முன் வரவில்லை.
இந்த சமயத்தில் தான், ஜானகியின் தாயின் உடல்நிலமை மிகவும் மோசமாகி விட, டாக்டர் அவளுக்கு இதய அறுவை சிகிச்சை பண்ணாவிட்டால் அவள் உயிர் பிழைக்க முடியாது என்று கூறி விட்டார். அதுவும் தவிர அறுவை சிகிச்சைக்கு குறைந்தது 3 லட்சம் ரூபாயாவது சிலவாகும் என்று சொல்லிவிட, ஜானகியின் தந்தை அரண்டு விட்டார்.
மாச சம்பள கணக்கு வாத்தியாருக்கு முப்பது ஆயிரமே பெரிய விஷயம். இதில் 3 லட்சம் எங்கேயிருந்து. அதற்காக என்ன வேண்டுமானாலும் ஆகட்டும் என்று அறுவை சிகிச்சை பண்ணாமல் விட முடியுமா?
அதனால் அந்த நேரத்தில் ஜானகியின் தந்தைக்கு பெரியதனக்காரர் காசிநாதனிடம் கடன் வாங்குவது தவிர வேறு வழியே தெரியவில்லை. காசிநாதனிடம் கடன் வாங்குவது உரலுக்குள் தலையை விடுவது போலத்தான் என்பது ஜானகியின் தந்தைக்கு நன்றாகவே தெரியும்தான். உரலையும் உபயோகிக்க முடியாது தலையையும் எடுக்க முடியாது என்ற இக்கட்டான நிலமைதான் அவருடையதும். இதுவரை அவர் கடன் எதுவும் வாங்காமல், தனக்கு வரும் சம்பளத்திலேயே சிக்கனமாக குடும்பம் நடத்தி வந்தார்.
சிலசமயம் வாழ்க்கையில் நாம் எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும், நாம விரும்பாததையும் பண்ண வேண்டி வருகிறது இல்லையா? அதேமாதிரி தான், தன் மனைவியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற இக்கட்டில் ஜானகியின் தந்தையும் பெரியதனக்காரர் காசிநாதனிடம் கடன் வாங்க வேண்டி வந்தது.
கடன் வாங்குவதைப் பற்றி அவள் ஜானகியிடமும் கலந்து பேசினார். அந்த நேரம் அவர்களுக்கு வேறே வழியும் தெரியவில்லை. அதனால் எவ்வளவு குறைவாகக் கடன் வாங்க வேண்டுமோ அவ்வளவு வாங்கிக் கொள்வது என்று யோஜித்து கடனும் வாங்கினார்கள்.
கடன் வாங்க ஜானகியும் தன் தந்தையுடன் கூட சென்றிருந்தாள். கொஞ்சம் அதிகப் பணம் என்பதால், அவர் இருக்கும் மனநிலையில் அவரைத் தனியாக அனுப்ப வேண்டாம் என்றுதான் அவளும் கூடச் சென்றாள்.
அங்கு சென்றபோது காசிநாதனும் அவளிடம் ரொம்ப நன்றாகப் பேசினார். கடன் கொடுக்கும் பொழுது காசிநாதன் தேனொழுக பேசுவது வழக்கம்தான் என்பதால், ஜானகி எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.
பணம் கிடைத்தவுடன் உடனே ஜானகியின் தாயாருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் அவர்கள் துரதிருஷ்டம் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாத காலத்திற்குள், திரும்பவும் மூக்சுத்திணறல் வந்து மருத்துவரைக் கூட்டி வருவதற்குள் உயிர் போய்விட்டது.
ஜானகியும் தாயைப் பிரிந்த துக்கம் என்றும் குறையாது என்றாலும், மெள்ள மெள்ள சகஜ நிலைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தாள். அவளுடன் தனியாகப் பேச ராகவ் மேற் கொள்ளும் முயற்சிகளைப் பார்த்து அவளுக்கு ஒருபுறம் சிரிப்பு வந்தாலும் மறுபக்கம் அவளுக்கு அவனைப் பார்த்தால் பாவமாகவும் இருந்தது.
தாயார் இறந்த நேரத்தில் உடலாலும், பணத்தாலும் பல உதவிகள் செய்த ராகவை தான் மிகவும் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மனதில் உறுதி செய்துகொண்டாள். ஆனால் அந்த தீர்மானம் நிறைவேறாமலே போய் விடும் என்று அவள் அறியவில்லையே !
அன்று ஜானகியின் தந்தையை காசிநாதன் தன் வீட்டுக்கு வந்து போகும்படி செய்தி அனுப்பியிருந்தார். வட்டி கொடுக்க இன்னும் நேரம் இருக்கிறதே – இன்று எதற்குக் கூப்பிட்டிருக்கிறார் என்று குழம்பிக் கொண்டே அவர் காசிநாதனின் வீட்டை அடைந்தார்.
காசிநாதனின் வீடா அது? மாளிகை போல் இருந்தது அது. அவர் உள்ளே நுழையும் முன்பே காசிநாதன் வெளி வந்து “வாங்க ! வாங்க! இங்கே உட்காருங்க. காஃபி சாப்பிட்டுட்டு பேசலாம் “ என்று சொல்லி விட்டு, உள்ளே நோக்கி, “யாரங்கே?” என்று குரல் கொடுத்தார்.
உள்ளேயிருந்து கொஞ்சம் தாட்டியான ஒரு மாது, வெளியே எட்டிப் பார்த்தாள். முகத்தில் கொஞ்சம் கூட சிரிப்பே இல்லாத முகம். யாரைப் பார்த்தாலும் அவரிடன் என்ன குற்றம் கண்டுபிடிக்கலாம் என்று பார்க்கும் கண்கள். பார்த்தாலே சில முகம் பிடிக்காமல் போகும் இல்லையா? அதுமாதிரி முகம் தான் அவளுக்கு,
காசிநாதன் அவளைப் பார்த்து “காஃபி கொண்டு வரச் சொல்லிட்டு இங்கே வந்து உட்காரு. இதுதான் நான் சொன்ன பெண்ணின் அப்பா” என்று சொல்ல, அந்த மாது அவரை நோக்கி கை கூப்பினாள்.
பின்னால் திரும்பி யாரிடமோ காஃபி கொண்டு வருமாறு சொல்லி விட்டு, அங்கே வந்து காசிநாதனின் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள். ஜானகியின் தந்தைக்கோ ரொம்ப வியப்பு. எதற்கு தன் பெயரை சொல்லி அறிமுகப் படுத்தாமல், ‘பெண்ணின் அப்பா” என்று சொல்லி அறிமுகப் படுத்துகிறார் என்று அவருக்கு ஒரே குழப்பம்.
ஆனால் சிறிது நேரத்திலேயே அந்தக் குழப்பம் எல்லாம் தீர்ந்து விட்டது. ஏனென்றால் காசிநாதனும் அவர் மனைவியும ஒரு பெரிய குண்டைத் தூக்கி அவர் தலையில் போட்டது போல் தான் தோன்றியது , அவர்கள் கூறிய செய்தியைக் கேட்ட ஜானகியின் தந்தைக்கு. ஏனென்றால் அவர்கள் கூறிய செய்தி அப்படி.
காசிநாதனும் அவர் மனைவியும் அப்படி என்னதான் செய்தி கூறினார்கள். அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போமா?
**********
