காதல் இல்லம் – AY 90.
அத்தியாயம் 5
********
திருமணம் முடிந்து ஜானகி, வெங்கடேசன் மற்றும் தந்தை கூட வர புகுந்த வீடு சென்றபொழுது அவளை ஆரத்தி எடுக்க வரவேற்கக் கூட ஒருவரும் வராதபொழுது, ஜானகியின் தந்தைக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.
புதிதாக திருமணம் ஆன மணமக்களை ஆரத்தி எடுத்துக் கூட வரவேற்காத ஒரு வீட்டில் தன் மகள் என்ன கஷ்டப்படப் போகிறாளோ என்று கலங்கிப் போய் விட்டார் ஜானகியின் தந்தை. ஆனால் ஜானகியோ சிரித்துக் கொண்டே,
“அப்பா ! என்னோட வீட்டுக்கு நான் நுழையறதுக்கு ஆர்த்தி எல்லாம் எதுக்கு? “
என்று அவரைத் தேற்றிவிட்டு வெங்கடேசனுடன் புகுந்த வீட்டிற்குள் நுழைந்தாள். அவர்கள் உள்ளே நுழைந்தபோது, அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்த ஹாலில் அமர்ந்திருந்தனர். யாரும் அவர்கள் உள்ளே வந்ததை பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
ஜானகியின் தந்தை எல்லோருக்கும் பொதுவாக ஒரு கும்பிடு போட்டதும், ஜானகியின் மாமனார் அப்பொழுதுதான் அவர்களைப் பார்த்தது போல் அவர்களை அமரச் சொன்னார்.
மூன்றாவது மருமகள் ரேணுகா யாரும் சொல்லாமலே அவர்களுக்கு காஃபி கொண்டு வந்துக் கொடுத்தாள். அதைக் குடித்துவிட்டு, கொஞ்ச நேரம் முள்மேல் இருப்பது போல் அங்கே இருந்துவிட்டு, ஜானகியின் தந்தை விடைபெற்றுச் சென்றார்.
ஜானகி உள்ளே வந்து தன் மாமியார் பக்கத்தில் நின்றாள்.மாமியார் அவளைப் பார்த்த பிறகும் கூட பேசவும் இல்லை – உட்காரச் சொல்லவும் இல்லை. வெங்கடேசன் அங்கே நிற்கக் கூட இல்லை. நேரே தன் அறைக்குள் சென்று விட்டான்.
ஜானகி தன் மனைவி ஆச்சே – அவள் தன் வீட்டிற்கு புதிதாக வாழ வந்திருக்கிறாளே – அவளுக்கு வேண்டிய சௌகர்யங்களைப் பண்ணிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் தன் அறைக்குச் சென்றவன் கொஞ்ச நேரத்தில் உடையை மாற்றிக் கொண்டு யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் வெளியே கிளம்பிச் சென்று விட்டான்.
ஜானகி தன் மாமியாரிடம் ‘அம்மா! நான் இங்கே வந்தவுடன் ஸ்வாமிக்கு விளக்கேற்றி வைக்க வேண்டும் என்று என் அத்தை சொன்னாள். நீங்களும் என் கூட வந்து எனக்கு ஆசிர்வாதம் செய்ய வேண்டும்” என்று கூறினாள். அதைக் கேட்ட மாமியார் கொஞ்ச நேரம் அவளை அப்படியே பார்த்துக் கொண்டிருந்து விட்டு, பக்கத்திலிருந்த மூன்றாம் மருமகளிடம்,
“ ரேணுகா அவளை பூஜை அறைக்கு கூட்டிண்டு போ. அங்கே நம்ம பெரிய விளக்கை ஏற்ற சொல். அதன் பிறகு சமையல் அறையில் ராத்திரிக்கு என்ன பண்ணனும்னு பார்த்து அதன் பிரகாரம் செய்ய வை” என்று சொல்லிவிட்டு எழுந்து தன் அறைக்குச் சென்று விட்டாள்.
ஜானகி விளக்கேற்றி விட்டு அன்று சமையல் அறையில் நுழைந்தவள் தான். புகுந்தவீட்டில் இருந்த நாட்களில் முக்காவாசி நேரமும் அவள் வாசம் சயையல் அறையில் தான் என்று ஆகி விட்டது.
அவள் புகுந்த வீட்டுக்கு வந்த அன்றுதான் அவர்களுக்கு முதல் இரவு. ஜானகியின் தந்தையும் அத்தையும், ஜானகி வெங்கடேசன் முதலிரவு ஏற்பாடுகளைப் பற்றிக் கேட்டதற்கு, ஜானகியின் மாமியார் அவர்கள் குடும்ப வழக்கப்படி, அது தங்கள் வீட்டில்தான் நடக்க வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைத் தாங்களே செய்து கொள்வதாகக் கூறிவிட்டதால், ஜானகியின் வீட்டிலிருந்து யாரும் வரவில்லை.
ஆனால் ஜானகி எதிர்பார்த்தபடி எந்த ஏற்பாடுகளும் நடக்கவில்லை. இரவு உணவிற்கு முதலில் ஆண்களும் குழந்தைகளும் அமர, ஜானகியும் மற்ற மருமகள்களும் பரிமாறினார்கள். அந்த நேரமும் வெங்கடேசன் வெளியில் போனவன் திரும்பி வரவில்லை.
அதன் பின் ஜானகியின் மாமியாரும், மூத்த மருமகள்கள் இருவரும் உட்கார, மூன்றாவது மருமகள் ரேணுகாவும் ஜானகியும் பரிமாறினார்கள். சாப்பிட்டுவிட்டு, ஒரு வார்த்தை கூட “நாங்கள் உங்களுக்கு பரிமாறட்டுமா?” என்று கூட கேட்காமல் படுக்கச் சென்று விட்டார்கள்.
ஜானகி ரேணுகாவை சாப்பிட உட்காரும்படி சொல்ல, அவள் இருவரும் சேர்ந்து சாப்பிடலாம் என்றுக் கூற, இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டார்கள், எல்லொரும் சாப்பிட்டபின் அவர்களுக்கு பொரியல் கூட மிஞ்சவில்லை. சாம்பாரில் போட்டிருந்த மிளகாயைத் தொட்டுக் கொண்டு இருவரும் மோர் சாதம் மட்டுமே சாப்பிட்டார்கள்.
அந்த நேரம் ஜானகி தெரிந்துக் கொண்டது என்னவென்றால், தன்னைப் போலவே ரேணுகாவும் அந்த வீட்டில் ஒரு பிடிக்காத மருமகள்தான் என்பதுதான். அதன் பிறகு இருவரும் சேர்ந்து சமையல் அறையை சுத்தம் செய்து விட்டு வெளியே வந்தார்கள்.
இன்னும் வெங்கடேசன் வராத நிலையில் ஜானகிக்கு என்ன செய்வது என்றுத் தெரியாமல் அப்படியே கண் கலங்கி நின்றாள். அந்த நேரம் அவள் தன் தாயின் அண்மையை மிகவும் விரும்பினாள் என்பதுதான் உண்மை.
அவள் கண்கலங்குவதைப் பார்த்த, ரேணுகா அவள் முதுகைத் தடவிக் கொடுத்து “ஜானகி ! அழ வேண்டாம். என் கணவரும் முதலில் இப்படித்தான் இருந்தார், ஆனால் போகப் போக எங்கள் மகள் பிறந்ததும் திருந்திவிட்டார்.
ஆனால் நான் ஏழைக் குடும்பத்திலிருந்து வந்ததால், எனக்கு இங்கு மதிப்பு கிடையாது, அண்ணிகள் இருவரும் பெரிய குடும்பத்து பெண்கள். அதனால் அவர்கள் நிலமை வேறு இங்கே.
நான் இதுமட்டும் என்னை ரொம்பத் தனிமையாக உணர்ந்தேன். இப்ப நீ வந்தப்புறம் எனக்கு ஒரு தங்கை கிடைச்சா மாதிரி தோணறது. நீ கவலையே படாதே –
இந்த வீட்டு ஆண்கள் முதலில் கோவில் காளை போல் எங்கே வேண்டுமானாலும் போய் மேய்வார்கள். ஏனென்றால் வளர்ப்பு அப்படி, ஆனால் மூக்கணாங்கயிறு அதாவது கல்யாணம் ஆனபிறகு வழிக்கு வந்துவிடுவார்கள். வெங்கடேசன் தம்பியும் கொஞ்ச நாளில் உன் முந்தானையை பிடிச்சுண்டு சுத்த ஆரம்பித்து விடுவார். கவலைப்படாதே.
ஆனால் இந்த வீட்டில் நம் நிலமை மாறுவது கஷ்டம் பணம் புழங்கும் வீட்டிலிருந்து வரும் மருமகளுக்குத்தான் இங்கு உரிமை அதிகம். நீ போகப் போகத் தெரிந்துகொள்வாய்.
இப்போ வா! கடவுளை கும்பிட்டு நன்னா வேண்டிக்கோ. வெங்கடேசன் சீக்கிரம் திருந்தி நீங்க ரெண்டு பேரும் பிறக்கப் போகிற குழந்தையும் நன்னா இருக்கணும்னு.”
இதையெல்லாம் சொல்லிவிட்டு அவளை ஸ்வாமி ரூமுக்குக் கூட்டிண்டு போனாள் ரேணுகா. அங்கு அவள் நெற்றியில் குங்குமமும் வீபூதியும் வைத்து, ஸ்வாமி படத்திலிருந்து ஒரு மல்லிகை சரத்தை எடுத்து அவள் தலையில் வைத்தாள்.
பிறகு ஒரு சின்ன சொம்பில் கொஞ்சம் பால் மற்றும் ஒரு தட்டில் கல்யாண பக்ஷணங்கள் பழங்கள் வைத்து ஜானகியை கூட்டிப் போய் வெங்கடேசனின் அறையில் கொண்டு போய் விட்டாள்.
ஜானகி தன்னுடன் கொண்டு வந்திருந்த அவளுடைய் உடமைகள் மற்றும் உடைகளையும் அந்த அறையிலேயே கொண்டு வைத்துவிட்டு, பிறகு ஜானகியிடம்வெங்கடேசன் வந்தவுடன் அவனுக்கு பால் பழம் கொடுத்து சந்தோஷப்படுத்துமாறு கூறி விட்டு ரேணுகா தன் அறைக்கு சென்று விட்டாள்.
வெங்கடேசனின் அந்த அறையில் இருந்த கட்டில் முழுக்க அவன் உடுத்திய ஆடைகள் ஒரு பக்கம், தினசரி பேப்பர் பக்கம் பக்கமாய் பிரிந்து கிடந்தன. அந்த அறை இருந்த கோலத்தைப் பார்த்து ஜானகி அரண்டு போய் விட்டாள்.
பிறகு மனதைத் தேற்றிக் கொண்டு அறையை சுத்தம் செய்யத் தொடங்கினாள். ஒரு மாதிரி சரி செய்து விட்டு வெங்கடேசன் எப்பொழுது வருவானோ என்ற நினைப்பில் கட்டிலில் உட்கார்ந்தாள் ஜானகி.
நாள் பூரா செய்த வேலையின் களைப்பில் அவளையும் அறியாமல் கண் உறங்கி விட்டாள் போலும். திடுமென்று தன்னை யாரோ பிடித்து உலுக்குவதை உணர்ந்து திடுக்கிட்டு விழித்தாள், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஜானகிக்கு, முதலில் தான் எங்கு இருக்கிறோம் என்று கூடப் புரிபடவில்லை.
பிறகு சுதாரித்துக் கொண்டு எழுந்து நின்று, தன்னை யார் உலுக்குவது என்று பார்த்தபோதுதான் தெரிந்தது அது அவளுடைய கணவன் வெங்கடேசன் என்று. முழுக் குடிவெறியில் இருந்த அவன், கோபத்துடன் அவளை முறைத்தான்.
அவள் பயத்துடன் “மன்னிக்கணும் – என்னை அறியாமல் கொஞ்சம் கண் அசந்து விட்டேன் போலிருக்கிறது” என்று சொல்லி சொம்பிலிருந்த பாலை ஒரு டம்ப்ளரில் ஊற்றி அவனிடம் கொடுத்துக் கொண்டே “சாப்பாடு கூட இருக்கிறது “ என்று மெதுவாகக் சொன்னாள்.
வெங்கடேசன் அவளைப் பார்த்து முறைத்த முறைப்பில் அவள் அப்படியே பயந்து நடுங்கிவிட்டாள். அவள் கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர் வழிய ஆரம்பித்தது
அவன் அவளிடமிருந்து அந்த டம்ப்ளரை வாங்கி பாலை கொஞ்சம் போல் குடித்தான்.. பாதிப் பாலை சினிமாவில் நடப்பது போல் தன்னிடம் கொடுப்பான் என்ற ஜானகியின் நினைப்பில் மண்ணைத் தூவுவது போல், மீதி பால் இருந்த டம்ப்ளரை அங்கிருந்த முக்காலியின் மேல் வைத்தான்.
பிறகு அவள் அங்கு இருப்பதையே உணராதவன் போல் தன் உடையை மாற்றிக் கொண்டு படுக்கையில் வீழ்ந்தான். ஜானகிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கொஞ்ச நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தாள்.
அதற்குள் வெங்கடேசன் குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்துவிட்டான். “எனக்கு மட்டும் ஏன் எல்லாமே இப்படி நடக்கிறது?” என்று நொந்துக் கொண்டே, ஜானகி ஒரு தலையணையும் பெட்சீட்டையும் மட்டும் கட்டிலிருந்து எடுத்துக் கொண்டு கீழேயே ஒரு பக்கத்தில் படுத்துக் கொண்டாள்.
கண்களில் நீர் வழிய கொஞ்ச நேரம் சிந்தனையில் ஆழ்ந்தவள் அப்படியே அசந்து தூங்கி விட்டாள். ஆனால் இதே நிலை தினமும் தொடர்ந்த போழுதுதான் அவள் சோர்ந்து போய்விட்டாள்.
வெங்கடேசன் அவள் பக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை. காலையில் லேட்டாக எழுந்திருப்பது பிறகு காலை உணவிற்கு பிறகு வெளியே செல்பவன், பாதி ராத்திரி முழுக் குடிப் போதையில் வீடு திரும்புவது என்று திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தானோ அதே மாதிரி கொஞ்சம் கூட மாறாமல் இருப்பவனிடம் ஜானகியால் பேசக் கூட முடியவில்லை.
காலையில் கொஞ்சம் தெளிவாக இருக்கும்போது பேசலாம் என்றால் அவள் மாமியார் ஜானகியை அவனிடம் நெருங்கக்கூட விடாமல், அவளை ஏதாவது வேலை வாங்கி விட்டு தான் உட்கார்ந்து மகனிடம் பேசிக் கொண்டிருப்பாள். அதன் பிறகு தன் மகனை சரியாகக் கவனித்துத் திருத்தவில்லை என்று குற்றம் கூறுவதை வழக்கமாகக் கொண்டுவிட்டாள்.
இந்த நிலையில் ஜானகியின் மாமனார் காசிநாதன் திடுமென்று மாரடைப்பில் காலமாக, அப்பொழுதுதான் அவர்கள் எல்லோருக்கும் தெரிந்தது அவர் ஒரு பெருங்காய டப்பா என்று. கடன் கொடுப்பதற்காக கடன் வாங்கி, கொடுத்த கடன் திரும்ப வராமலும், வீட்டு செல்வைக் கட்டுப் படுத்தாமலும் இருந்ததால், அவர் இறந்த பிறகு, அவர் இறப்புக்கு துக்கம் கேட்க வந்தவர்களைவிட கடனைத் திருப்பிக் கேட்க வந்தவர்கள்தான் அதிகம் என்ற நிலைமை.
அவர்கள் இருந்த வீடு, நிலபுலன் எல்லாம் விற்று கடனை அடைத்து விட்டு அவர்களுக்கு மிஞ்சியது ஒரு சின்ன கூரை வீடு தான். பெரிய வீட்டு மருமகள்கள் அங்கு இருக்க முடியாது என்று தங்கள் வீட்டுக்கு தங்கள் கணவன் மார்களை கூட்டிக் கொண்டு சென்றுவிட்டார்கள். ரேணுகாவின் கணவனுக்கு வேறு ஊரில் வேலை கிடைத்துவிட அவன் தன் தாயாரையும் அழைத்துக் கொண்டு அந்த ஊருக்கு சென்று விட்டான்.
இனியாவது ஜானகிக்கு விடிவுகாலம் வருமா? ராகவின் நிலை என்ன? பல கேள்விகள் – அடுத்த அத்தியாயத்தியல் பதில் கிடைக்குமா – பார்ப்போமே !
*********
