செஞ்சூரியன் தனது பகல் பொழுது பயணம் முடித்துவிட்டு மேற்கு வானில் மறைய தொடங்கிய அழகிய மாலை நேரம்… பறவைகள் கீச் கீச்சென்ற ஒலியுடன் தங்களின் கூடுகளை தேடி வேகமாய் பறந்திட, இதுவரை பொழிந்து கொண்டிருந்த மெல்லிய தூரல் குணம் மாறி சிறிது சிறிதாக வலுவாகத் தொடங்கியது.
அந்த நெடுஞ்சாலை அதிக வாகனங்கள் இன்றி சற்று வெறிச்சோடி கிடக்க, ஒரு டேங்கர் லாரி மத்திரம் அனைத்து தடைகளையும் தாண்டி சர்ரென்று… சென்று அதி வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
அதனுள் அடைத்து வைக்க பட்டிருக்கிறான் நம் ஆட்ட நாயகன்.
ஆம், இந்திய மட்டை பந்து அணி தலைவன் ஆரவ் -27…
ஆறடி உயரம், அளவான உடல் (தற்சமயம் சற்று மெலிந்திருந்தது). ஒரு வாரம் வளர்ந்த தாடி, அவன் கடத்த பட்டு ஒரு வாரம் ஆகி இருக்கும் என சொல்லாமல் சொல்லியது. கை கால்கள் கட்டி வைத்து கிடக்க, அவனருகில் இரண்டு காலி வாட்டர் பாட்டில் மட்டுமே கிடக்கிறது.
அவனுக்கு பசி வயிற்றை கிழித்து கொண்டு வருவது போல் ஒரு உணர்வு. ஏற்கனவே தப்பிக்க முயன்று தோற்று விட்டான், அதன் பலனாய்தான் இந்த பட்டினிப் பயணம். எதிர்பாராத விதமாக திடீரென அந்த டேங்கர் லாரி கவிழத் தொடங்கியது.
ஏதோ விபத்து ஏற்பட்டு உள்ளது என ஆரவ் புரிந்து கொண்டான். இரண்டு முறை உருண்ட பிறகு, லாரி எதிலோ மோதி நின்றிட, சற்று நேரத்திற்குப் பிறகு யாரோ இருவர் வந்து அவனை மெதுவாக வெளியே இழுத்து போட்டார்கள்.
எதற்கும் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமென அவன் மயங்கி கிடப்பதை போல் நடித்தது, சமயத்திற்கு நன்றாகவே உதவியது.
முதல் ஆள், “என்னய்யா மயங்கி கெடக்கான்? இனிமே இவன எப்புடியா கொண்டு போய் சேக்குறது?”
இரண்டாவது ஆள், “கொஞ்சம் பொறுடா. இவன எல்லாருக்கும் தெரியும். யாருக்கும் தெரியாம சொன்ன இடத்துக்கு நாம தனியா கொண்டு போய் சேக்குரது கஷ்டம். நம்ம ஆளுக எல்லாரும் நம்ம போற பாதைல நம்மள கண்காணிக்க காத்து கிட்டு இருப்பாக. வண்டி வரலன்னா நம்மளத் தேடி வருவாக. இப்போதைக்கி இவன ஒதுக்கு புறமா கட்டி போடுவோம், வேற யாரும் பாத்திர கூடாது.”
இதற்காவே காத்துக் கொண்டு இருக்கும் அவன் இந்த வாய்ப்பை விடுவானா? விடு ஜுட்…
புயல் வேகத்தில் அவர்கள் இருவரையும் தாக்கி விட்டு அடுத்த ஐந்து நிமிடதில் அந்த சாலையில் தூரத்தில் ஓடிக் கொண்டு இருக்கிறான். யாராவது ஒருவர் தன்னை பார்த்தாலும் போதும், தப்பிக்க முடியும். அவ்வளவு பெரிய பிரபலம், ஆனால் பசி அவனை முன்னேறி செல்ல விடாமல் சோர்வடையச் செய்கின்றது.
அதே நேரத்தில் கல்லூரிக்குள் இருந்த பிள்ளையார் கோவிலில், இறுதியாக பிள்ளையாரை பார்க்க, பிரியா விடைகளுடன் இறுதி ஆண்டு மாணவிகள் நான்கு பேர். சிறிய வட்ட முகம் ஐந்து அடி உயரம், உயரத்தில் பாதியளவு வளர்ந்திருந்த வளமான கூந்தல்.
அவள் அணிந்திருந்த அந்த அடர் பச்சை வண்ண சுடிதார் அவளை இன்னும் கொஞ்சம் சிகப்பாக காட்டியது. இந்தி நடிகை ஆலியா பட் சாயலில் நம் நாயகி. தோழிகளை பிரிந்து செல்வது ஒரு கவலை என்றால் வீட்டில் அவசர அவசரமாக நடக்கும் திருமண ஏற்பாடுகள் இன்னொரு கவலை.
தங்களுக்கு தாங்களே ஆறுதல் சொல்லிவிட்டு ஆறு மணி வாக்கில் அனைவரும் மனமின்றி அவரவர் இல்லங்களைத் தேடி கலைந்து சென்றனர்.
“சே…. இன்னிக்குன்னு பார்த்து ஒரு பஸ்ஸக் கூட காணும். எனக்கு டைம் மே சரி இல்லை” நம்ம ஆளு தான்.
அவளால் கன்னத்தில் கை வைத்து புலம்பக் கூட முடியவில்லை. பாவம்… கை நிறைய பை நிறைய நொறுக்கு தீனி. அருமை தங்கைக்கு நாளை பிறந்த நாள்.
இனி இந்த பக்கமே வர முடியாது என்று தங்கைக்கு பிடித்த தின்பண்டங்களை நான்கு பை நிறைய வாங்கி குவித்து இருக்கிறாள். கல்லூரி ஊருக்கு வெளியே, வீடு அதனுக்கு நேர் எதிர் பக்கத்தில் ஊரைத்தாண்டி உள்ள ஒரு சிறு கிராமம்.
வீடு போய்ச்சேர அவளுக்கு குறைந்தது இரவு எட்டு மணிக்கு மேல் ஆகும்.
அவள், “ஹலோ அம்மா, பஸ் இன்னும் வரல… ம்… ம்… வாங்கி கொண்டு வாரேன். சரி… ம். வந்திடுவேன். ஒரு கவர்மென்ட் பஸ் வர்ர மாதிரி இருக்கு. வச்சிடுறேன்மா…” இதுதான் அவள் தன் தாயிடம்பேசிய கடைசி வார்த்தைகள்.
அந்த பஸ் வந்தது, அதனுள்ளே நான்கைந்து ஆட்களே இருந்தனர். இவளுடன் இன்னும் ஒரு மாணவி ஏறியதும் ஊர்ந்து செல்லத் தொடங்கியது அந்த பேருந்து.
‘இப்படி போனா ஒன்பது மணி ஆகிடும் போல…’ என்று அலுத்து கொண்டாள்.
அடுத்தடுத்த நிறுத்தங்களில் ஆட்கள் இறங்க, இப்போது பேருந்துக்குள் மூன்று பேர் தான் இருக்கிறார்கள்.
கன்டெக்டர் டிரைவரிடம், “அண்ணே, வண்டிய ஷெட்டுல தானே போடுவ? நான் இங்கேயே என் ஊரு பக்கமா இறங்கிகிடவா?” ன்னு கெஞ்சிக் கொண்டு இருந்தார்.
“சரிடா காத்தால நேரமே வா” என்ற பதிலுக்கு அங்கு அவர் இல்லை. கன்டெக்டர் புதுசா கல்யாணம் ஆனவர், அவருக்கு அவரு பிரச்சனை பெரிதாய் இருந்ததனால் விட்டால் போதுமென ஓடிவிட்டார். மழை வலுத்துப் பொழிய ஆரம்பித்தது.
பேருந்தில் வலது முன் புறமாக அவள் இருந்தால் பின் புறம் இருப்பவர்கள் பற்றி கவனிக்கவில்லை. முப்பது நிமிடங்கள் கழிந்து இருக்கும் போது ஓடி வந்து ஏறினான் ஒருவன்.
முழுவதும் நனையாமல் அவன் அணிந்திருந்த லெதர் ஜாக்கெட் ஓரளவுக்கு அவனை காப்பாற்றி இருந்தது. அவளுக்கு இடது வரிசை சீட்டில் போய் அமர்ந்தான்.
மணி 6.45 இருக்கும். அவளுக்கு பசி எடுக்க, பையில் இருந்து ஒரு ஸ்வீட் பன் எடுத்து தின்னத் தொடங்கினாள். ஏதோ தோன்ற அவன் புறம் திரும்பி பார்த்தாள், அவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.
‘யாருகிட்ட?…’ என்று கோபமாக முறைத்து விட்டு, திரும்பி தன் வேலையை பார்க்கும்போது, அவன் அவளுக்கு மிக அருகில் வந்து நின்றான்.
“உங்ககிட்ட சாப்பிட ஏதாவது இருக்கா? ரொம்ப பசிக்குது” என்றான் ஆரவ்.
“யார் நீங்க?” அவள்.
“என்னங்க? உண்மையிலே என்ன தெரியாதா?!”
“தெரியாது”
“ஐ ஏம் ஆரவ். கேப்டன் ஆப் இன்டியன் கிரிக்கெட் டீம்.”
அதைக் கேட்டதும் டிரைவர் படாரென திரும்பி, “தம்பி நீங்க எப்படி இங்க?” என்றார்.
“வழியில ஒரு போலீஸ் ஸ்டேஷன் இருந்தா நிறுத்துங்க, அப்புறமா சொல்றேன்” என்றான்.
“சரி தம்பி” என்றவர் மீண்டும் பாதையில் தனது கவனத்தை பதித்தார்.
“ஓ! சாரிங்க… கிரிக்கெட் பார்த்ததில்ல. உங்கள தான எல்லாரும் தேடிகிட்டு இருக்காங்க, கேள்வி பட்டேன்” என்றாள் அவள்.
“ஆமாங்க. என்னை கடத்திருந்தாங்க. தண்ணியாவது குடுங்களேன். ப்ளீஸ்” என்றதும், அவள் தன் நாக்கை கடித்துவிட்டு சில நொறுக்கு தீணிகளை எடுத்து தந்தாள்.
ஏழெட்டு தின்பண்டங்கள் தின்று முடித்ததும், சற்றே அமைதியானவன், “உன் பேர் என்ன?” என்றான்.
“முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட பேர் சொல்றதில்ல…”
தன்னை ஒருமையாக அழைத்தது பிடிக்க வில்லை என அவளின் கோப கண்கள் அவனுக்கு சொல்லாமல் சொல்லியது.
அவளது கையிலிருந்த பேக் கல்லூரியில் படிக்கும் பெண் என்று காட்டி கொடுக்க, ஒரு சின்ன கீ செயின் அவன் கவனத்தை ஈர்த்தது. அது ஒரு பார்பி பொம்மை.…
“உனக்கு பார்பி பிடிக்குமா. நான் உன்னை பார்பின்னு கூப்பிடவா?”
“நான் திரும்ப உங்களை டார்சான்னு கூப்பிடவா?” அவள் கண்கள் மனதின் கோபத்தை படம்பிடித்து காட்டியதும் அவனின் தன்மானம் தலைதூக்கிற்று.
இருவரும் சில நிமிடங்கள் வரை எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அந்த அமைதியை குலைக்க புயலென வந்தது ஒரு கூட்டம். மூன்று சுமோ நிறைய அடியாட்கள், அந்த பஸ் முற்றிலுமாய் சுற்றி வளைக்கபட்டது.
“போய் அவன மட்டும் தூக்கிட்டு வாங்கடா. உள்ள இருக்குற மத்த யாரும் உயிரோட இருக்க கூடாது… ம்… சீக்கிரம்…” என ஒருவன் உத்தரவிட்டான்.
இப்போது நேரம் மாலை 7.10 இருக்கலாம். பேருந்தை அவர்கள் சுற்றி வளைத்ததும் ஆரவ் வேகமாக செயல் படத் தொடங்கினான். இப்போதைக்கு இறங்கி ஓட முடியாது, ஆதலால் பேருந்தை தன் கையில் எடுத்து ஓட்டத் தொடங்கினான்.
வேகமில்லை என்றாலும் யாரும் நெருங்காதபடி பஸ் சுமோக்களை இடித்துக் கொண்டே செல்லத் தொடங்கியது. பதினைந்து நிமிடங்கள் கழித்து ஒரு சுமோவை எங்கோ ஓரமாய் தள்ளி விட்டிருந்தான், இன்னும் இரண்டு மீதமிருக்கிறது.
மழை சாரலாக உரு மாறிட, பஸ்ஸின் பின் புறம் நெருப்பு படரத் துவங்கியது, நிச்சயமாக அந்த கடத்தல் கும்பல் வேலைதான். இப்போது அனைவரும் இறங்கியே ஆக வேண்டும். ஆனாலும் அவனுக்கு அவர்களை சும்மா விடக் கூடாதென்ற எண்ணம்.
வெறியோடு பஸ்ஸை ஓட்டத் தொடங்கினான், பஸ் அவன் இஷ்டப்படி ஆட ஆரம்பித்து விட்டது. ஒரே இடத்தில் வைத்து சுழற்றி சுழற்றி சாகசம் செய்து இரண்டு சுமோக்களை இடித்து தள்ளி விட்டு பஸ் விலகி ஓடியது.
சற்று தூரம் தள்ளி வந்ததும், ஓடும் பஸ்ஸிலிருந்து டிரைவரையும் அவளையும் இறங்கி வேறு திசையில் ஓடிவிட சொன்னான்.
“சரிங்க தம்பி…” என்று படியிலிருந்து குதித்து இறங்கி விட்டார் டிரைவர்.
அவளோ விழிகளை உருட்டி உருட்டி தன் பயத்தை சொல்லாமல் சொல்ல, தீ பேருந்தின் முன் பக்கத்தை நெருங்கியிருந்து.
இதற்கு மேல் பேருந்து உபயோகப்படாது, இறங்கி ஓடத்தான் வேண்டும். அவளையும் இழுத்து கொண்டு அவன் கீழே குதித்து இறங்கவும், கட்டுப்பாட்டை இழந்த பஸ் சற்று தள்ளி போய் சாலையோர மரத்தில் மோதி நின்றது.
பஸ் முழுவதும் தீ பரவி எரிந்து கொண்டிருக்கும் போது, அதன் உள்ளே யாருக்கும் தெரியாமல் போனது ஒரு உயிர்.
இறங்கியவர்கள் கால் போன பாதையில் ஓட தொடங்கினர். பத்து நிமிடங்கள் கழித்து ஒரு சுமோ இப்போது தான் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது.
தாமதத்திற்கு நன்றி சுமோ…
ஏதாவது ஊர் கண்ணில் படும் என்று ஓடி கொண்டிருந்தனர் இருவரும். தொடக்கத்தில் வெறும் பொட்டல் காடும், கருவேல மரங்களுமாய் இருந்த நிலம் இப்போது சில வயல் வெளியாக மாறிக்கொண்டு வந்தது.
அவர்கள் இருவரும் நம்பிக்கையோடு விடாமல் ஓடிக்கொண்டே இருக்க, இருபது நிமிடங்கள் கடந்த பின்பும் ஒரு வீடுகூட அவர்களின் கண்ணில் படவில்லை.
அவளின் கால்கள் ஓய்வைக் கெஞ்சுவதை உணர்ந்தவன், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் மோட்டார் ரூமுக்கு செல்ல முடிவெடுத்தான்.
ஏற்கனவே முப்பது நிமிடங்கள் கழிந்துவிட்டது, இதுவரை வராத சுமோக்கள் இனி தன் திசையில் வர வாய்ப்பே இல்லை என்று எண்ணியே இந்த முடிவுக்கு வந்திருந்தான்.
அவளையும் அழைத்து கொண்டு ஒரு மோட்டார் ரூமுக்கு சென்றவன், இருட்டில் தேடி கண்டு பிடித்து குண்டு பல்ப்பின் சுவிட்சை போட்டான். ஆரவ் ஏதோ கேட்க நினைத்து அவளை திரும்பி பார்த்த நொடி, அவனது இதயம் ஸ்தம்பித்து நின்றது.
அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தைக் கூட வரவில்லை. தன்னை பற்றியே எண்ணியதில் அவளது முகத்தினை இத்தனை நேரம் கவனிக்காமல் போன தன் மடமையினை எண்ணி தன்னை தானே திட்டி கொண்டான்.
அவளின் மருண்ட விழிகள் இரண்டும் லேசாக சிவந்து இருந்தது, பயத்தில் அழுதிருப்பாள் போல…
ஒப்பனை இன்றியும் புத்தம் புது மலராக அவள் நின்றிருந்தாள். பயத்தில் ரோஜாப்பூ போல சிவந்திருந்த முகத்தில் மழைச் சாரல் பனித்துளியாய்!!!
பச்சை வண்ண அம்பர்லா சுடிதார் அவளது உடலுடன் ஒட்டி கிடக்க, அப்பட்டமாய் வெளித்தெரிந்த வனப்பை கண்ட ஆரவ் கண்களுக்கு, அவள் இந்திரலோக கன்னியாகத் தெரிந்தாள்.
சற்றே தன்னை சுதாரித்து, “என்ன ஆச்சு… அடி ஏதாவது பட்டுச்சா?” என்றான்.
“பயம்மா இருக்கு. வீட்டுக்கு போகனும்” என்றாள் குளிரிலும் பயத்திலும் நடுங்கிக் கொண்டே.
“பயப்படாத, காலைல போயிடலாம், நீ இங்கேயே படுத்துக்கோ. நான் பக்கத்தில இருக்குற வேற ஒரு ரூமுக்கு போய் படுத்திருக்கிறேன்.”
“ப்ளீஸ், இங்கேயே இருங்க. தனியா இருக்க பயமா இருக்கு” என்றாள் அவனது கைகளை பற்றி கொண்டு.
ஜன்னலின் வழியே வெளியில் ஒரு முறை பார்த்து விட்டு, “சரி, நீ பயப்படாம தைரியமா இரு” என்றான்.
கோணிப் பைகளை உதறி படுக்கை அமைத்து அவளை உறங்க சொன்னதும், துப்பட்டாவை போர்வையாக்கி சுருண்டு படுத்து கொண்டாள்.
அவளெதிரில் தூரமாக அமர்ந்தவன், “உன் பேர் என்ன?” என்றான் மென்மையாய்.
“சொல்ல மாட்டேன்…”
“அப்போ இனிமே உன்ன பார்பின்னு தான் நான் எப்பவும் கூப்பிடுவேன். குட் நைட் பார்பி” என்றான் குறும்பாக.
அவனுக்கு பதில் சொல்ல விருப்பமின்றி, அவள் தன் கண்களை மூடிக்கொண்டு தூங்குவதாக நடிக்க, அசதியில் நிஜமாகவே தூங்கி விட்டாள்.
நொடிப்பொழுதில் நட்பாகவும் விரோதமாகவும் மாறி மாறி பேசுபவளை கண்டு குறுநகை பூத்த ஆரவ், தன்னையறியாமலே அவளை கண்களால் மனதினுள் நிறைக்கத் தொடங்கினான்.
