இந்தர் தன் மனைவியின் செயலை நினைத்து சிரித்துக் கொண்டான். அவளின் அந்த அசட்டுத் தனமான பிடிவாதம், திடீரென வெடிக்கும் கோபம், அதுக்குப் பிறகு ஒன்றுமே நடக்காத மாதிரி முகத்தைச் சீர்செய்துக்கொள்ளும் பழக்கம் எல்லாமே அவன் நினைவில் ஒவ்வொன்றாக வந்து போனது.
‘வாழ்க்கை சீரியஸா இருக்க வேண்டியதுதான்; ஆனா அந்த சீரியஸ்னஸ்ஸுக்கு நடுவில், இப்படி அவள் மாதிரி ஒருத்தி இருந்தா தான் அது வாழ்க்கையா இருக்கும்!’ என்பதையும் இந்தர் உணர்ந்தான்.
இந்த எண்ணம், அவன் மனசை லேசாக்கி, நாளை என்ன நடந்தாலும் சமாளிக்கலாம் என்ற நம்பிக்கையை அவனுக்குள் மெதுவாக விதைத்தது.
பிரதீப் குறும்புத்தனமான குரலில், “ஆனா நீ கூலா இருக்கும் போதே நினைச்சேன் மச்சான்… அந்த குட்டி பிசாச சமாளிக்க ஏதோ பிளான் பண்ணிட்டன்னு” என்றதும் நகைத்துக் கொண்டான் இவன்.
“சரிடா! நான் சாப்பிட்டு ஆஃபிஸ்க்கு கிளம்பி வரேன்.”
“ஏன்டா?”
“இல்ல இங்க மேடம் ஏதோ அவங்க பெருசா சாதிச்சிட்டாங்கனு ரொம்ப சந்தோச படுறாங்க. நான் வேல இருக்குன்னு சொல்லிட்டு இப்போ வந்தா இன்னும் சந்தோச படுவாங்கள்ல? இன்னும் அவங்க அந்த தானியங்கள கொட்டுன விஷயம் எனக்கு தெரியாதுன்னு வேற நினைச்சிட்டு இருக்காங்க. அத சொல்லி போய் பாத்துட்டு வரேன்னு கிளம்புறேன்.”
“நல்ல புருஷன்! நல்ல பொண்டாட்டி! நல்லா வருவீங்க மச்சான் ரெண்டு பேரும்” என்றான் பிரதீப்.
சிரித்துக் கொண்டே அழைப்பை துண்டித்து விட்டு தன் வீட்டிற்குள் நுழைந்தான் இந்தர்.
“என்னப்பா அந்த புள்ளய நாளைக்கும் ஆஃபிஸ்க்கு வர சொல்லிருக்கீயாமே? அவளுக்கு ஒரே சந்தோஷம்ப்பா. எப்டியோ நீங்க ரெண்டு பேரும் நல்லா இருந்தா சரி” என மனதார கூறினார் அந்த பெரிய மனுஷி.
எதுவும் பேசாமல் முகம், கை, கால் மட்டும் கழுவிக் கொண்டு அதே உடையிலே சாப்பிட அமர்ந்த இந்தரை பார்த்து, “டிரஸ் சேஞ் பண்ணலையா?” என்று கேட்டாள் ஆத்வி.
“இல்ல டி! இப்போ தான் பிரதீப் போன் பண்ணுனான்” என்றதும், “ஐயோ என்னாச்சு இந்தர்?” என்று பதறுவது போல் நடித்தாள் ஆத்வி.
“நீ இவ்ளோ டென்ஷன் ஆகுற அளவுக்கு ஒண்ணும் நடக்கல அங்க. பேக்கிங்கு வச்சி இருந்த தானியங்கள் எல்லாம் கீழ கொட்டி கிடக்குதாம். என்ன பண்றதுன்னு தெரியல. சீக்கிரம் வான்னு கூப்ட்டான். சாப்டுட்டு ஆபிஸ் போகணும். அதான் டிரஸ் சேஞ்சு பண்ணல” என்றான் இந்தர் சாதாரணமாக.
மனதிற்குள் மகிழ்ந்த ஆத்வி வெளியில் காட்டி கொள்ளாமல், “ஐயையோ எப்டி இது நடந்துருக்கும்?” என்று ஏதுமறியாதவளாய் கேட்டாள்.
“தெரியல போய் பாத்து தான் விசாரிக்கணும். அப்போ தான் தெரியும்.”
“பாவிங்க, சாப்பிடுற பொருளையா இப்படி நாசம் பண்ணுவாங்க. என்ன வேணும்னாலும் வாய திறந்து கேட்ருக்கலாம்லப்பா. அத விட்டுட்டு பொருள்ல அலட்சியத்த காட்றதா? அவங்கல்லாம் சாப்பிடாமலா இருக்காங்க. ஒரு வேள சாப்பாட்டோட அருமை தெரிஞ்சி இருந்தா… இப்படிலாம் பண்ணி இருப்பாங்களா?” என்று பாட்டி புலம்ப ஆரம்பித்தார். அதில் தன்னவள் முகம் சுருங்குவதை கவனித்தான் இந்தர்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல பாட்டி. ஏதாவது கவனமில்லாம பண்ணி இருப்பாங்க. நான் ஏதாவது மாத்து ஏற்பாடு பண்ணிட்டு வரேன்” என்று கூறியவாறே உணவை முடித்து விட்டு சென்றான் இந்தர்.
பாட்டி புலம்பிய பிறகு தான் ஆத்விக்கு தோன்றியது. சாப்பிடும் பொருளை தான் இப்படி வீண் செய்தது தவறு என்று.
‘ச்ச அவனை பழி வாங்கணும்ன்னு நினைச்சி தப்பு தப்பா யோசிச்சி ஏதேதோ செய்றோமே தவிர உருப்படியா அவன ஹர்ட் பண்ற மாதிரி எதுவும் பண்ணல…’ என்று தன்னை தானே நொந்து கொண்டாள்.
நேரே அலுவலகத்திற்கு சென்றவன் ஆத்வி தள்ளி விட்ட டாக்குமெண்ட்ஸ் எல்லாவற்றையும் அடுக்கி வைக்க பிரதீப்க்கு உதவி செய்தான்.
“மச்சான் பியூச்சர்ல கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா ஏதாவது இருக்கா?”
“அதெல்லாம் கிராண்ட்டா பண்ணனும் மச்சான். ஆமா அதை இப்போ ஏன்டா கேக்குற?”
“லவ் மேரேஜ்ஜோ, அரேன்ஜ்ச் மேரேஜோ? எதுவா இருந்தாலும் அந்த நினைப்ப குழி தோண்டி பொதச்சிரு மச்சான்.”
“டேய் நீயும் பண்ணாம என்னையும் பண்ணாதன்னு சொல்லிருந்தா கூட லாஜிக் இருக்கு. ஆனா நீ பண்ணிட்டு என்ன பண்ணாதன்னு சொல்றதுல என்னடா நியாயம் இருக்கு?”
“அனுபவசாலி சொன்னா கேளுங்கடா. அத விட்டுட்டு எதிர்த்து கேள்வி கேக்காதீங்க. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். அதுக்கு அப்புறம் உன் விருப்பம். நாளபின்ன நான் எதுவும் சொல்லலன்னு என் மேல வருத்த பட கூடாது.”
“அடேங்கப்பா! ரொம்ப தான் அக்கறை.” என்ற பிரதீப், “சரி, கேரளாக்கு சரக்கு ஏத்த லாரி வந்துடுச்சு. போய் செக் பண்ணுவோம்” என்று கூற இருவருமாக கிளம்பி சென்று விட்டனர்.
அனைத்து பேக்கிங்கையும் செக் செய்து சீல் வைத்து லாரியில் ஏற்றி அனுப்பி வைத்த பின்னரே வீடு திரும்பினான் இந்தர். அதற்கே மணி ஏழாகி விட்டது.
“என்னாச்சு இந்தர்? யாரு அப்படி பண்ணுனதுன்னு கண்டு பிடிச்சிட்டியா? பொருள் எல்லாம் ரொம்ப வேஸ்ட் ஆகிடுச்சா?” என்றாள் ஆத்வி.
அவன் பதில் எதுவும் பேசாது அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஃப்ரஷ் ஆக சென்று விட்டான்.
ப்ரெஷ் ஆகி ஹாலுக்கு வந்தவன், “பாட்டி ஒரு டீ! ரொம்ப தல வலிக்குது” என்றபடியே சோஃபாவில் அமர்ந்தான்.
“இதோ! நீ வந்ததுமே போட்டு வச்சிட்டேன் பா” என்றபடியே கப்பை அவனிடம் நீட்டினார் பாட்டி.
அதை அவன் வாங்கி பருகி முடிக்கும் வரை காத்திருந்தவர், “என்னப்பா செய்ய போற அந்த கீழ கொட்டுன தானியங்களலாம்?” என்று அதீத கவலையுடன் வினவினார். ஒரு நேரத்தில் சாப்பாட்டிற்கே கஷ்ட பட்டவர் ஆதலால் அந்த வலி அவரின் கண்களில் தெரிந்தது.
“உங்க பேரன பத்தி தெரிஞ்சி வச்சிருக்குறது அவ்ளோ தானா பாட்டி? சாப்பாட்டு பொருள நான் வீணாக விடுவேனா.”
“என்னப்பா செஞ்ச?” என்றார் பாட்டி பூரிப்புடன்.
“இப்போல்லாம் இந்த மாதிரி எல்லா தானியமும் கலந்து தான் ஹெல்த் மிக்ஸ், சப்பாத்தி மாவுலாம் செய்றாங்க பாட்டி. அதை தயாரிக்கிற ஒரு நிறுவனத்துல கேட்ருக்கேன். சாம்பிள் கொஞ்சம் எடுத்துகிட்டு நேர்ல வந்து பேச சொல்லி இருக்காங்க. நாளைக்கு போய் பார்க்கணும்.”
“சூப்பர் இந்தர்! நல்ல ஐடியா! குட் ஜாப்” என்று பாராட்டினாள் ஆத்வி முதல் ஆளாய் வந்து. அவளை சந்தேகமாக பார்த்த இந்தருக்கு தன்னவள் மகிழ்ச்சியில் பொய் இல்லை என்பதும் புரிந்தது.
“பாவம்பா இந்த பொண்ணு. சாப்பிடுற பொருள் வேஸ்ட் ஆகிடுச்சேன்னு ரொம்ப நேரமா பொலம்பிட்டே இருந்தா. இப்போ தான் நிம்மதியா இருக்கு” என்று கூறினார் பாட்டி .
‘ஐயோ என் பொண்டாட்டிக்கு பைத்தியம் பிடிச்சிட்டு போலயே. பழிவாங்குறேங்குற பேர்ல இவளே ஒன்னு பண்ணுறா. அப்றம் இவளே வருத்தமும்படுறா. என்ன பொண்ணுடா இவ?’ என்று உள்ளுக்குள் புலம்பி தீர்த்தான் இந்தர்.
“பாட்டி சாப்பிடுவோமா? ரொம்ப சோர்வா இருக்கு, சாப்ட்டுட்டு சீக்கிரம் கிளம்பனும்” என்றவன் உணவை முடித்து விட்டு கிளம்பிச் சென்றான்.
இரவிலும் பல சிந்தனைகளில் திரும்பி வந்தவன், சாப்பிட்டதும் தனது அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்தான். அப்படியே உறங்கியும் போனான்.
அதைக் கண்ட ஆத்வி, “என்னால இன்னைக்கு ரொம்ப கஷ்டப்பட்டுட்டான் போல, பாவம் உறங்கட்டும்” என்று முதல் முறையாக அவன் மேல் இரக்கம் கொண்டாள்.
பால்கனியில் இருந்த சோஃபாவை எடுத்து அறைக்குள் போட்டு அதில் படுத்து கொண்டாள். இருவருமே அந்த முத்த சமாச்சாரத்தை மறந்து விட்டனர்!
அதிகாலை தான் கட்டிலில் படுத்து இருப்பதை உணர்ந்து, ‘ஐயோ இங்கயே தூங்கிட்டேனா. இவ எங்க போனா? பாட்டி ரூம்க்கு போயிருப்பாளோ?’ என்று நினைத்தபடி எழுந்தவன் தன் கட்டிலுக்கு எதிரே கிடந்த சோஃபாவில் ஆத்வி உறங்குவதை கண்டு அதிர்ந்து போனான்.
எழுந்து லைட்டை போட்டவன் ஆத்வி தூங்கும் அழகை ரசித்து கொண்டிருந்தான். உள்ளுக்குள் அவள் மீதான உணர்வுகள் வேகமாக ஊற்றெடுத்தது. அதில் மூச்சு முட்டியது இந்தருக்கு. அவள் பாட்டி அறைக்கு சென்று உறங்காமல் தன் அறையிலேயே உறங்குவது சற்றே உரிமை தந்தது போலிருந்தது.
தன்னவளின் முகம் பார்த்து விழித்த அந்த அழகிய காலை இந்தருக்கு ஒருவித புது புத்துணர்வை கொடுத்தது. காலையில் வழக்கமாக செய்யும் பணிகளுக்கு ஓய்வு கொடுத்து மனையாளை ரசிக்கும் புது பணியில் ஈடுபட்டிருந்தான் அவன். கணினி திரையையே பார்த்து கிடந்த அவன் கண்களுக்கு இன்று தான் விமோட்சணம் கிடைத்தது போல் இமைக்க மறந்து ரசித்தான் ஆத்வியை. மழலை போல் உறங்குபவளின் பிறை நெற்றியின் மீது முத்தாட தோன்றியது அவளவனுக்கு.
“நீ இன்னும் குழந்தை தான்டி. உன்னோட பேட் வைப் எல்லாம் சீக்கிரம் வெளிய எடுத்து போட்டுட்டு, உண்மைய புரிஞ்சிகிட்டு என் கிட்ட வந்துரு டி ஆவி” என்று மானசீகமாக மனதிற்குள் பேசினான் அவளைப் பார்த்தவாறே.
‘ரொம்ப கனவு காணாத இந்தர். நீ பண்ணி வச்சி இருக்க வேலைக்கு எப்போவுமே அவளுக்கு துரோகி தான். ஏதோ அவ அப்பாவின்றதால பெருசா எதுவும் யோசிக்க தெரியல’ என்று உண்மையை அவன் மனசாட்சி உரக்க கூற, நொடியில் அவன் முகம் மாறிவிட்டது. விருட்டென குளிக்க சென்றுவிட்டான்.
