காதல் – 2

  • அத்தியாயம்- 2

​இளம் மஞ்சள் சுடிதார் அணிந்துகொண்டு தேவதைபோல் மாடியிலிருந்து கீழே வந்தவளை மனம் நிறைவோடு பார்த்தார் ரவி.

​”என்ன மாமா அப்படிப் பார்க்கிறீங்க?” என்று கேட்டவளிடம்,

​”ஒன்னும் இல்லம்மா, என் தங்கை ஞாபகம் வந்துருச்சு” என்று வருந்தினார்.

​அவர் கூறியதைக் கேட்டுத் தன் தாயின் நினைவு அவளையும் வந்து ஒட்டிக்கொண்டது.

அவள் கண்களில் கண்ணீரைப் பார்த்தவர், தன் வேதனையை மறைத்துக்கொண்டு, “சாரிடா, உன்னை வேற கஷ்டப்படுத்திட்டேன்” என்று மீண்டும் வருந்தினார்.

​அவளோ, “அச்சோ! அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா” எனத் தனக்காகத் தன் மாமா வேதனைப்படுவதைப் பார்த்துத் தானும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.

​”சரிங்க மாமா, நான் இன்டர்வியூக்குப் போயிட்டு வரேன், நேரமாகுது” என்று புறப்படத் தயாரானாள்.

​ரவியோ, “ஏம்மா, நீ இப்ப வேலைக்குப் போய்த்தான் ஆகணுமா?” என்று கேட்டு நிறுத்தினார் ரவிசங்கர்.

​”ஏன், இப்ப அவ வேலைக்குப் போனா உங்களுக்கு என்ன வந்தது?” என்றவாறு சமையற்கட்டிலிருந்து வந்தாள் அவர் மனைவி விஜயம்.

​”ஏண்டி, கொஞ்சமாவது உனக்கு அறிவு இருக்கா? வயசுப் பொண்ணை வேலைக்கு அனுப்பணும்னு சொல்ற?” என்றார் சற்று கோபம் கொண்டு.

​அவரோ சலிக்காமல், “எனக்கெல்லாம் தெரியும், நீங்க சும்மா இருங்க. ஏண்டி ராசி கெட்டவளே! காலையிலேயே எங்களுக்குள்ள சண்டை மூட்டி விடுறியா?” என்று அவளிடம் எகிறிக்கொண்டு சென்றார்.

​அதைக் கேட்டவள் பதறிக்கொண்டு, “ஐயோ அத்தை! நான் எதுவும் மாமாகிட்ட சொல்லல. நான் வேலைக்குக் கிளம்புறேன்னுதான் சொல்லிக்கிட்டு இருந்தேன்” என்றாள்.

​ரவியோ, “ஏய்! இப்ப எதுக்குடி அந்தப் புள்ளைகிட்ட வம்புக்குப் போற?” என்று தன் மனைவியை அதட்டினார்.

​இருவரின் வாக்குவாதத்தைப் பார்த்தவள், “மாமா ப்ளீஸ், என்னால உங்களுக்குள்ள சண்டை வேண்டாம்” என்று கெஞ்சத் தொடங்கினாள்.

​ரவியோ, “அது இல்லம்மா, நீ…” எனப் பேச வந்தவரைத் தடுத்து,

“ப்ளீஸ் விடுங்க மாமா” என்றாள்.

இதற்கு மேல் அங்கு இருந்தால் தேவையற்ற பிரச்சனைதான் வரும் என நினைத்தவள், தான் கிளம்புவதுதான் நல்லது என்று யோசித்து,

“சரிங்க மாமா, நான் கிளம்புறேன்” என்று கூறிவிட்டு, அவர் பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் கிளம்பிவிட்டாள்.

​இன்னும் அங்கு நின்று கொண்டிருந்தால் அதற்கு மேல் என்னென்ன வார்த்தைகள் வந்து விழும் என்று அவளுக்குத் தெரியாதா என்ன?

இன்றா? நேற்றா? கடந்த ஆறு வருடங்களாக அத்தையைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தாள்.

அவள் நின்றால் குற்றம், நடந்தால் குற்றம் என்று ஒவ்வொரு விஷயத்திலும் பழி சுமத்திக்கொண்டே இருப்பார் விஜயம்.

​”விஜயா நில்லுடி” என்று குரல் கொடுத்தார் ரவி.

​”ம்ம் சொல்லுங்க” என்றவரிடம்,

“உனக்குக் கொஞ்சமாவது மனசாட்சி இருக்காடி? பாவம் அந்தப் புள்ள, அவ உசுர இப்படி வாங்குற” என்றார் ஆதங்கத்தோடு.

​விஜயமோ, “இப்போ நான் அவளை என்ன பண்ணிட்டேன்னு இப்படி எகிறிக்கிட்டு வரீங்க என்கிட்ட?” என்று கத்த ஆரம்பிக்க,

ரவியோ சற்று கோபத்துடன், “ஏய், ஏய் ச்சீ நிறுத்து! நீயும் ஒரு பொண்ணு தானே? அவ காலைல ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போடுவதிலிருந்து, நைட் உனக்குக் கால் அமுக்கி விடுற வரைக்கும் அந்தப் பொண்ணுதான் எல்லா வேலையும் செய்யுது” என்று திட்டியவர், தன் பேச்சை மீண்டும் தொடர்ந்தார்.

​”நீ குடிச்ச காபி டம்ளர் கூட உன்னால எடுத்து வைக்க முடியல, அவளை வேலை வாங்குற. இதுல அந்தச் சின்னப் பொண்ணை வேலைக்கு வேற போகச் சொல்ற. ஏன், எருமை மாடு மாதிரி உன் புள்ளை இருக்கானே, அவனை வேலைக்குப்போகச் சொல்ல வேண்டியதுதானே? நேத்து ராத்திரி என்ன கருமத்தைக் குடிச்சுட்டு வந்தான்னு தெரியல, பக்கத்துல நிக்கக்கூட முடியாத அளவுக்கு நாத்தம் பொறுக்கல” என்று மனைவியைத் திட்ட ஆரம்பித்தவர், தன் மகனையும் சேர்த்துத் திட்டி முடித்தார்.

​”உங்களுக்கு என் புள்ளையத் திட்டலைன்னா தூக்கம் வராதே! அவன் ஏன் வேலைக்குப் போகணும்? என் புள்ள மகாராஜா கணக்கா இருப்பான் பாருங்க” என்று தன் மகனைத் தலைக்கு மேல் தூக்கி வைத்துப் பேசினார் விஜயம்.

​”எப்படி அடுத்தவங்க வீட்டுக்கு வந்து தங்கிட்டு, அவங்க வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிட்டு இப்படி இருக்கீங்களோ தெரியலடி. இந்த வீடு என் தங்கச்சி, அவளோட பொண்ணு பேர்ல எழுதி வச்சுட்டு அவளும் அவ புருஷனும் கண்ணை மூடிட்டாங்க. இந்த வீடு மட்டும் இப்போ அந்தப் புள்ள பேர்ல இல்லைன்னா, நீ என்ன பண்ணிருப்பியோ தெரியலடி, பயமாயிருக்கு” என்று வேதனையோடு பேசினார்.

​’ம்ம்… சாகடிச்சிருப்பேன்! இந்த வீடு அவ பேர்ல இருக்கறதாலதான் அவ இன்னும் இந்த பூமில வாழுறா’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தார் விஜயா.

இவர்கள் பேசிய சத்தம் கேட்டு ஆத்திரத்துடன் வெளியே வந்தான் தினேஷ்.

​”அம்மா, ஏன் காலங்காத்தால இப்படி கத்திக்கிட்டு இருக்கீங்க? ஒரு மனுஷனை நிம்மதியா தூங்க விடுறீங்களா?” என்று நேற்று நைட் அடித்த போதை தெளியாமல் அறையிலிருந்து வந்து கேட்டவனைப் பார்த்து ரவி கோபத்தோடு,

“ஏண்டா சொல்ல மாட்ட! தண்டமா வீட்டுல இருந்துட்டு குடிப்போதையில சுத்திக்கிட்டு இருக்க. நீ இதையும் பேசுவ, இன்னும் பேசுவ. பாவம் அந்தச் சின்னப் பொண்ணு வேலையைத் தேடிப் போகுது. நீ என்னடான்னா இப்படி உருப்படாம இருக்க. இதற்கெல்லாம் யார் காரணம்னு எனக்குத் தெரியும், ஒரு நாள் கவனிச்சுக்கிறேன்” எனச் சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் சென்று விட்டார்.

​”என்ன, அவ இன்டர்வியூக்குப் போயிட்டாளா?” என்று அதிர்ந்து கேட்டான் தினேஷ்.

​”ஆமா, இப்பத்தான்டா போனா. ஏண்டா கேக்குற?” என்று விஜயா தன் மகனிடம் கேட்க,

“ஒண்ணுமில்லம்மா, சும்மா தான். சரி காபி கொடு, நான் போய் பல் விளக்கிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்கு வந்தவன், மொபைல் போனை எடுத்து அவள் நம்பருக்கு டயல் செய்தான்.

​எதிர்திசையில், “என் அன்பே எந்தன் ஆருயிரே… நீ இல்லாத வாழ்வும் வெறுமையடி… விழி மூடினால் நீயும் வருகிறாய்… விழி திறக்கையில் ஏனோ மறைக்கிறாய்…” என்ற ரிங்டோன் பாடல் கேட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

​தினேஷிற்கு ஆத்திரமாக வந்தது. “என்ன துணிச்சல் அவளுக்கு! என் போனையே கட் பண்றா? எத்தனை வாட்டி சொல்லிருப்பேன், என் நம்பரைப் பார்த்த அடுத்த வினாடியே போன் எடுக்கணும்னு. சொல்லியும் அவ எடுக்கல. எப்படியும் வீட்டுக்கு வந்துதானே ஆகணும், அப்போ வச்சுக்கிறேன்” என்று நினைத்துவிட்டுத் தயாராகி வெளியே கிளம்பிப்போனான்.

​தினேஷ் – ரவிசங்கர், விஜயத்தின் ஒரே புதல்வன். கொஞ்சம் மாநிறம், எதற்கெடுத்தாலும் அடிதடி வம்பு என்று இருப்பவன். எப்பொழுது அவன் அத்தைப் பொண்ணைப் பார்த்தானோ, அப்போதிலிருந்தே அவள் பின்னாடி சுற்றித் திரிந்தான்.

ஆனால் அவளோ இதையெல்லாம் கவனிக்காதது மாதிரி, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாள்.

​பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டு பஸ்சுக்காகக் காத்திருந்தவள், தன் கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்து, “ஐயோ இப்பவே டைம் ஆச்சு, இன்னும் இந்த பஸ் வந்தபாடில்லையே” என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.

​அப்பொழுது, “ஹலோ மிஸ், வடபழனி பஸ் போயிடுச்சா?” என்று கேட்டான் ஒருவன்.

​’நானே பஸ் இன்னும் வரலன்னு கோபமா இருக்கேன், இதுல இவன் வேற வந்து கேள்வி கேட்டு எரிச்சலைக் கிளப்புறான்’ என்று மனதில் நினைத்து அவனை ஏறி இறங்கப் பார்த்தாள்.

​அவனோ அவளின் அவஸ்தையை அறியாமல், “ஹலோ மிஸ், நான் பஸ் போயிடுச்சான்னுதான் கேட்டேன், என்னைப் பிடிச்சிருக்கான்னு கேட்கல” என்று கிண்டலாகப் பேச,

அவளோ அவனைப் கோபமாக முறைத்துப் பார்த்துவிட்டு ஆட்டோவைப் பிடித்துக் கிளம்பிவிட்டாள்.

​ஆட்டோவில் ஏறியவள், “ஒரு பொண்ணுகிட்ட எப்படிப் பேசணும்னு கூடவா தெரியாது? என்ன ஜென்மங்களோ! எல்லா ஆம்பளையும் ஒரே மாதிரிதான், இதுல இவன் மட்டும் என்ன விதிவிலக்கா?” எனத் தான் பட்ட துன்பத்திலிருந்து அனைத்து ஆண்மகன்களையும் தவறாகவே நினைக்க ஆரம்பித்தாள்.

​அவளின் அத்தை, “இனிமேல் நீ வேலைக்குப் போய்த்தான் ஆகணும், அப்பதான் நம்ம வீட்டுச் செலவைச் சமாளிக்க முடியும்” என்று சொன்னவுடன் அவள் அதிர்ந்துதான் போனாள். அவள் அப்பா, அம்மா இருந்தவரை கஷ்டம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூடத் தெரியாமல் வளர்ந்தவள், இப்போது வேலைக்குப் போக வேண்டிய நிலைமையை நினைத்து நொந்து கொண்டாள்.

​தன் அம்மாவிடம் சத்தியம் செய்த ஒரே காரணத்தால் தான் இவ்வளவு பொறுமையாக இருந்தாள்.

“அம்மாவுக்கு ஒரு சத்தியம் பண்ணு… நான் சாகப் போறேன், இனிமேல் கஷ்டமோ நஷ்டமோ நீ மாமா கூடத் தான் இருக்கணும். உன் காதல் இப்போ உன்னை எந்த இடத்துல நிற்கவச்சுருக்குப் பார்த்தியா?” என்று சொல்லிவிட்டு அவர் இறைவனிடம் சென்றுவிட்டார்.

அம்மாவுக்குச் செய்த சத்தியத்திற்காகவே அத்தையின் கொடுமைகளையெல்லாம் தாங்கிக்கொண்டாள்.

​’இப்போ வேலைக்குப் போகச் சொல்றதும் நல்லதுக்குதான், அப்பதான் அந்தத் தினேஷ்கிட்ட இருந்து தப்பிக்க முடியும்’ என்று யோசித்தவள்,

“சரிங்க அத்தை, நான் போறேன்” என்று முடிவெடுத்தாள்.

​பாவம், இனி அவளுக்கு நடக்க இருக்கும் விபரீதத்தை அறியாமல் தன் பயணத்தைத் தொடர்ந்தாள்.

​இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
என் தீராத காதல் என்றும் உனக்காக
0 0 0
நின் காதல் சுடுவதேனோ
0 0 0
ரணமாய் கொல்லுதடி காதல்
0 0 0
என் அன்பே! எந்தன் ஆருயிரே!
260 3 5
அரக்கனின் காதலி
447 0 0
காதல் வேரில் பூத்த துரோகப்பூக்கள்
1,271 17 0
உருகி தகிக்க உனதாக வருவேன்
307 3 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page