இந்தர் தனது அறையில் யோசித்து கொண்டு நிற்க, “பேராண்டி, அவ இன்னும் தூங்கிட்டு தான் இருக்கா. நான் உனக்கு காஃபி போட்டு எடுத்துட்டு வரவா?” என்று கேட்டப்படியே வந்தார் பாட்டி.
“அவ அங்கையா தூங்குறா?” என்றான் தன் அதிர்வை மறைத்துக் கொண்டு.
“உனக்கு தெரியாதா?”
“தெரியும் பாட்டி! தூக்க கலக்கத்துல மறந்துட்டேன். சரி நான் ஜாக்கிங்க முடிச்சிட்டு வந்து காஃபி குடிச்சிக்கிறேன்” என்று கூறி பாட்டியை அனுப்பி வைத்து விட்டு பிரெஷ்ஷப் ஆகி கிளம்பி ஜாகிங் சென்றுவிட்டான்.
உடல் மட்டுமே ஜாக்கிங்கில் ஈடுபட்டிருந்தது. மனம் முழுவதையும் ஆத்விகாவே ஆக்கிரமித்து இருந்தாள்.
“ஏன் பாட்டி ரூமிற்கு உறங்க சென்றாள்? அதை அவளிடம் கேட்கவும் முடியாது! கேட்டால் சரியான பதிலும் வராது! அவகிட்ட போயி என்னத்த கேட்குறது? எல்லாம் என்னால தான்! ச்சை” என்று யோசித்துக் கொண்டே வீடு திரும்புகையில் ராகவன் எதிரில் வந்தான்.
ராகவன், “ஹாய் மாம்ஸ் குட் மார்னிங்.”
இந்தர், “குட் மார்னிங் டா. ஏன்டா உனக்கு கூட இந்த பழக்கமெல்லாம் இருக்கா?”
ராகவன், “என்ன பழக்கம் மாமா?”
இந்தர், “ஏர்லி மார்னிங் வேக்அப், ஜாகிங்.”
ராகவன், “அதுவா மாமா, எங்க அப்பா ஒரு சின்ன தப்பு பண்ணிட்டாரு அதுனால தான் இப்படி” என்றான்.
என்ன சொல்கிறான் இவன் என அவனை தீவிரமாக பார்க்க, “நீங்க நினைக்கிற அளவுக்குலாம் சீரியஸ்ஸா ஒண்ணுமில்ல மாம்ஸ். பொண்ணா வளக்க வேண்டியவளை பையன் மாதிரியும், பையனா வளர்க்க வேண்டிய என்ன பொண்ணு மாதிரி அடக்க ஒடுக்கமாவும் வளத்து விட்டுட்டாரு. அவ்ளோ தான்” என்றான் சாதாரணமாக.
“அதென்னமோ கரெக்ட்டு தான்டா.”
“அத விடுங்க மாம்ஸ்! எப்டி இருக்கா அந்த பஜாரி?” என்றவனின் காதை பிடித்து திருகிய இந்தர், “இனிமே மரியாதையா அக்கான்னு சொல்லுடா” என்றவாறே முறைத்தான்.
“ஐயோ! வலிக்குது மாம்ஸே…” என்று அவன் கத்தியதுமே அவனை விட்டான்.
“பொண்டாட்டிக்காக இந்த மச்சானையேவா…. அடிக்கிறீங்க! இதுக்குலாம் அவகிட்ட அனுபவிப்பீங்க” என்றான் ராகவன் தன் காதை தேய்த்துக் கொண்டே.
“ஏன்டா அவ அங்க தனியா தான இருக்கா? உங்க வீட்ல இருந்து அப்பப்போ யாராவது வந்து அவ எப்படி இருக்கான்னு பாத்துட்டு போகலாம்ல?” என்றவனிடம், “அம்மாட்ட சொல்றேன். நான் ஈவினிங் கட்டாயம் வரேன் மாம்ஸ், இப்போ கொஞ்சம் வேலை இருக்கு” என்று கூறி கிளம்பி விட்டான் ராகவன்.
அதன் பின் நேராக வீட்டிற்கு வந்த இந்தர் தோட்டத்தில் சிறிது நேரம் பராமரிப்பு வேலைகளை கவனித்து விட்டு ஹாலிற்குள் நுழைய அவனுக்கு காஃபி கொண்டு வந்து கொடுத்தார் பாட்டி.
“என்ன பாட்டி? இன்னும் எந்திரிக்கலயா அவ?”
“இல்லப்பா! அதுவும் இல்லாம இப்போவே எழுந்து என்ன செய்ய போறா அவ? நல்லா தூங்கட்டும்.” என்று கூறி விட்டு அவர் செல்ல இந்தருக்கு தான் தன்னவள் முகத்தை காணாமல் இருப்பது என்னவோ போல் இருந்தது.
நேராக பாட்டியின் அறைக்கு சென்றவன் எவ்வித சலனமுமின்றி ஆத்வி உறங்குவதை கண்களுக்குள் நிரப்பிக் கொண்டு சத்தமே இல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
குளித்து உடை மாற்றி ஹாலிற்கு வந்தவன், “பாட்டி சாப்பாடு எடுத்து வைங்க! ஆஃபிஸ் போணும்! அங்கப் போயே ரெண்டு நாளாகுது! இன்னிக்காவது போகணும் பாட்டி.” என்றான்.
“ஏன்டா உன்னை நானா போகாதன்னு பிடிச்சி வச்சிருந்தேன்? என் கிட்ட வந்து புலம்புற.”
“உங்க சேர்க்கை சரி இல்ல பாட்டி! ரொம்ப கெட்டு போய்ட்டீங்க” என்று அவன் கூறியதில் பாட்டி தான் வாய் விட்டு சிரித்து விட்டார்.
“பின்ன என்னடா வேலைக்கு போகணும்னா அப்படி சொல்லிட்டு கிளம்ப வேண்டியது தான! உன் பொண்டாட்டிக்காக லீவ் போட்டுட்டு என் கிட்ட வந்து பொலம்புனா என்ன அர்த்தம்?” என்றார் அந்த பெரிய மனுஷி.
அவர் பேச்சில் இருந்த உண்மையை வேண்டுமென்றே கண்டு கொள்ளாமல் உணவில் கவனம் செலுத்தி கொண்டிருந்தான் இந்தர். அவன் உண்டு முடித்து எழ போகும் கடைசி நேரம் ஆத்வி அங்கு வந்தாள். இந்தர் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். புத்தம் புது மலராய் வந்தவளின் மீதிருந்து தன் பார்வையை அகற்ற முடியவில்லை இந்தரால். நேராக அவன் அருகே வந்த ஆத்வி அவன் தட்டில் மேலும் மூன்று இட்லிகளை எடுத்து வைத்தாள்.
அவள் செய்கையை ஆச்சர்யமாக பார்த்தவன், ‘ஒரு வேளை திருந்திட்டாளோ? இவ்ளோ சீக்கிரமாவா? சடன்னா ஏன் இப்படிலாம் பண்றா?’ என்று யோசித்துக் கொண்டே, “நான் சாப்டுட்டேன்” என்றான் எதையும் காட்டாமல்.
“நேத்து நான் போதும் போதும்னு சொன்னப்போ எப்டி என் வாயில இட்லிய திணிச்ச? அதுக்கு பனிஷ்மென்ட் தான் இது! மூணையும் சாப்டுட்டு தான் எந்திரிக்கணும்” என்று மிரட்டினாள் ஆத்வி.
‘ஓஹ்… பழிவாங்குறாங்களா மேடம்? இருந்தாலும் இவ்வளவு மட்டமா இருந்திருக்க வேண்டாம்டி நீ…’ என நினைத்தவன் மென் சிரிப்புடன் டைனிங் டேபிளில் இருந்து எழுந்து கொண்டு, அதே நற்காலியில் அவளை இழுத்து அமர செய்தான்.
சரியாக அந்த நேரம் பாட்டியும் அங்கு வர அவருக்கு நேராக, அந்த தட்டை எடுத்து தன்னவள் புறம் வைத்தான். ஆத்வி அவனை அதிர்ந்து பார்த்தாள்…
“என்ன முழிக்கிற? புருஷன் சாப்ட்ட தட்டுல பொண்டாட்டி சாப்பிடறது தான் நம்ம நாட்டு பாரம்பரிய வழக்கம். எங்க பாட்டி கூட அப்படித்தான் சாப்பிடுவாங்க. சோ மிச்சம் வைக்காம எல்லாத்தையும் சாப்ட்ரு ஆத்வி…”என்று மென்மையாக அவள் கன்னம் தட்டி கூறிவிட்டு கை கழுவ சென்று விட்டான்.
ஒரே நொடியில் தான் இந்தரிடம் தோற்றுவிட்டோம் என்று புரிய, பெண்ணவள் பெரிதாய் திகைத்துப் போனாள்.
பாட்டிக்கு முன் இந்தரிடம் சண்டையிட விரும்பாதவள் பல்லைக் கடித்து கொண்டு அவன் வைத்த உணவை உண்ண ஆரம்பித்தாள். பாட்டி மேல் அவ்வளவு அன்புண்டு அவளுக்கு…
அவள் முகத்தை பேயறைந்ததை போல் வைத்திருப்பதை, வாஷ்பேஷின் கண்ணாடியில் கண்டவன் சிரிப்பை வெளிகாட்டாமல் அடக்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அதை அவளும் பார்த்துவிட, பெண்ணவள் மனதில் கோபம் கரைபுரண்டு ஓடியது.
‘ச்ச… எப்டி ஒரே நிமிசத்துல எல்லாத்தையும் மாத்தி நம்ம பக்கமே திருப்பிட்டானே? ஆண்டவா அவன் சாப்பிட முடியாம தவிக்குறத பார்த்து ரசிக்கணும்ன்னு நினைச்சேனே. இப்போ அவன் முன்னாடியே நான் அசிங்க பட்டு நிக்கிறேன். இவனை பழிவாங்கவே முடியாதா? நீயும் அவனுக்கு தான் சப்போர்ட்டா?’ என கடவுளுக்கும் சரமாரியாக வசை சொற்களால் அர்ச்சனை நிகழ்ந்தது அவள் மனதிற்குள்.
ஜூஸ் போட்டு எடுத்து வந்து அவளருகே வைத்தான்.
“நான் இன்னும் காஃபி கூட குடிக்கல மேன்…” என்றாள் அவனை முறைத்தவாறே.
“அதானால என்ன? இப்போ சாப்பிடு, அப்றம் ஜூஸ் குடி. தென் காஃபி குடி” என சாதாரணமாக கூறி விட்டு சென்றான். அவளுக்குள் தான் மனதிற்குள் வன்மம் வளர்ந்து கொண்டே இருந்தது.
‘ஆத்வி இனி எத பண்ணாலும் ஒரு தடவைக்கு பல தடவ பிளான் பண்ணி பண்ணனும்! அப்போ தான் இவனை பழிவாங்க முடியும்’ என்று தன் ஆள்காட்டி விரலை தன் மூக்கு நேரே நீட்டி தனக்கு தானே பேசி கொண்டிருந்தாள் ஆத்வி.
அதை கண்டு அழகான நமுட்டு சிரிப்பு ஒன்றை சிரித்த இந்தர், யாரும் அதை பார்க்கும் முன் மறைத்துக் கொண்டு அலுவலகம் செல்ல ஆயத்தமானான்.
லைட் ப்ளு கலர் ஷர்ட்டை, ப்ளாக் பேண்ட்டிற்குள் டக் இன் செய்து கிளம்பி வந்தவனை, ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருந்தவள் ஓரக்கண்ணால் கவனித்தாள்.
“இதெல்லாம் எங்க உருப்பட போது?ஆபீஸ் போற மாதிரியா போறான்? ஏதோ பஸ் ஸ்டாண்ட்ல நின்னு சைட் அடிக்க போற மாதிரில போறான்?” என சத்தமின்றி முனுமுனுத்துக் கொண்டாள்.
வாசல் வரை சென்றவன் திரும்பி அவளருகே வந்து, “நான் இப்படி போறது நல்லா இல்லன்னா, எப்டி போனா ஆபீஸ் போற மாதிரி ஸ்மார்ட்டா தெரிவேனோ, அப்படி ஒரு டிரஸ் செலக்ட் பண்ணி கொடு. நான் அதையே போட்டுட்டு போறேன்” என்றவனை அதிர்ந்து பார்த்தாள் ஆத்விகா.
“எனக்கு வேற வேல இல்லையா? உனக்கு எப்டி தோணுதோ அப்படி போ! உனக்கு ஏன் நான் டிரஸ் செலக்ட் பண்ணி தரணும்?” என திக்கி திணறி வெளியே கத்தியவள், ‘அவ்ளோ சத்தமாவா பேசுனோம்? ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம கரெக்ட்டா சொல்றான்? ஐயோ இனி இவன் முன்னாடி வாயே திறக்க கூடாது’ என மனதிற்குள் நினைத்து கொண்டாள்.
அவளின் செய்கை ஒவ்வொன்றும் அவனுக்கு சிரிப்பை மட்டுமே வர வைத்தன. ஆனால் அதை வெளிக்காட்டாது அருகில் நின்ற பாட்டியிடம் மட்டும், “போய்ட்டு வரேன் பாட்டி, மதியம் சாப்பிட வந்துருவேன்” என கூறி விட்டு சென்றான்.
“போய்டு! வந்துடாத…” என்று மனதுக்குள் கருவிக் கொண்ட ஆத்வி அவன் சென்று விட்டான் என உறுதி செய்து கொண்டு, “பாட்டி… நான் என்ன அப்படியா சத்தமா பேசிட்டேன்? உங்க பேரன் கரெக்ட்டா சொல்லிட்டு போறான்? உண்மையிலயே மைண்ட் வாய்ஸ்ன்னு நெனச்சி நான் தான் சத்தமா பேசிட்டனோ? உங்களுக்கும் என் புலம்பல் கேட்டுச்சா” என்றாள் குழம்பியபடி.
பாட்டி சிரித்து கொண்டே, “இல்ல கண்ணு! நீ முனுமுனுக்குறதே அவனுக்கு சத்தமா தான் கேக்கும். அவன் காது அப்படி! நீ இனிமே கவனமா திட்டு அவன” என்று அறிவுரை கூறினார்.
“ஹ்ம்ம்.. எல்லாம் என் நேரம்.” என்று நினைத்துக் கொண்டவளின் கவனத்தை திசை திருப்பியது டிவியில் ஓடிய அந்த பாடல்.
என் அன்பே! நானும், நீயின்றி நானில்லை!!… என்று டிவியில் ஒலித்த பாடல் வரிகள் அவள் செவியை துளைத்தது. கண்கள் கலங்கியவள், டிவியை அணைத்து விட்டு கண்களை துடைத்தபடியே தனதறை நோக்கி ஓடினாள்.
“நல்லா தான பேசிட்டு இருந்தது இந்த புள்ள? இப்போ என்ன இப்படி அழுதுட்டு போகுது?”
