நிஜம் – 6
மகேந்திரனின் உடல் சூட்டை தணிக்க அவனுக்காக மதியழகி சமையல் அறையில் கஷாயம் ஒன்றை தயார் செய்து கொண்டு இருந்தாள். நேரமோ பனிரெண்டு மணியை தாண்டி சென்றுக் கொண்டு இருந்தது. நேரம் காலம் என எதையும் பொருட்படுத்தாமல் மகேந்திரனுக்காக விழுந்து விழுந்து வேலை பார்த்தாள் அவள்.
“இந்த கசாயத்தை குடிச்சிட்டு படு. காலையிலேயே எல்லாம் காய்ச்சல் குறைஞ்சிடும்” என்று சொல்லிக் கொண்டே டம்ளரை எடுத்துக் கொண்டு அவன் அருகில் வந்தாள்.
அவள் இரவு, பகல் என பாராது இவனுக்காக அயராது உழைத்து பாசம் காட்டுவதை அவனால் தட்டிக் கழிக்கவும் முடியவில்லை. அதே சமயம் அவளை முழு மனதாகவும் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. கொண்டு வந்து விட்டாளே என்ற கடமைக்காக வேண்டா வெறுப்பாக அதை குடித்து விட்டு திரும்பிப் படுத்துக் கொண்டான். அவன் கஷாயத்தை வாங்கி பருகியதும் மதியழகிக்கு சந்தோஷம் தாளவில்லை! அன்றிலிருந்து அவனுக்கு பிடித்த ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தாள்.
“ஏன்டா முத்து, இன்னைக்கு என்ன காய்கறி பில் இவ்ளோ வந்திருக்கு. வழக்கமா இவ்வளவு வராதே? காய்கறிங்க இந்த வீட்டுக்கு வாங்குறது போக, நீயும் உங்க வீட்டுக்கு சாப்பிட வாங்கிட்டு போயிட்டியாக்கும்?” என்று வேலைக்காரன் முத்துவிடம் வம்பு இழுத்துக் கொண்டு இருந்தார் தங்கம்மா பாட்டி.
“நாங்க ஒன்னும் திருடிக் கொண்டு போய் வீட்ல கொடுக்கலைங்க. உங்க பேத்தி தான் இத்தனையும் வாங்கிட்டு வர சொன்னாங்க. வீட்ல உள்ளவங்க என்ன சொல்றாங்களோ அதத் தான நாங்க கேட்டாகணும். நீங்க ஒன்னு வாங்கிட்டு வர சொல்றீங்க அவங்க ஒன்னு வாங்கிட்டு வர சொல்றாங்க. எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது அம்மா! ரெண்டு பேர் சொன்னதையும் மொத்தமா வாங்கிட்டு வந்துட்டேன். இனிமே நீங்களாச்சு அவங்களாச்சு!” என்று தன் பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்லி விட்டு வழக்கம் போல் தேங்காய் உரிக்க தொடங்கினான் முத்து.
“ஏற்கனவே எல்லாருக்கும் சமைச்சாச்சு. இவ எதுக்கு இவ்வளவு காய்கறி வாங்கிட்டு வர சொல்லி இருக்கா? ஒரு வேளை மதி கூட படிச்ச பிள்ளைங்க யாரும் வீட்டுக்கு வராங்களோ?! நம்மகிட்ட அவ எதுவும் சொல்லலையே!” என்று தனக்கு தானே பேசிக் கொண்டு இருந்த பாட்டி, அவளிடம் நேரடியாக கேட்டு விடலாம் என்று சமையலறையை நோக்கி நடந்தார்.
“மதி கண்ணு! எதுக்கு இவ்ளோ காய்கறி வாங்கிட்டு வர சொல்லி இருக்க?”
“மகிக்கு சும்மா ஊத காத்து அடிச்சாலே சளி புடிச்சிக்குது. ஆனா ஊனா காய்ச்சல் வந்துடுது. உடம்புல சத்தே இல்ல… அதனால தான் வேளைக்கு நாலு வகையான பதார்த்தம் செஞ்சு சமைச்சு போடலாம்னு இருக்கேன். அதுக்கு தான் இத்தனையும் வாங்கிட்டு வர சொன்னேன். ஏன் நான் தனியா காய்கறி வாங்கிட்டு வந்து சமைக்க கூடாதா? எனக்கு அந்த உரிமை இல்லையா? இந்த காய்கறிக்கு எல்லாம் சேர்த்து காசு கொடுக்கணும்னா சொல்லுங்க என் புருஷன் சாயங்காலம் வந்ததும் வாங்கி கொடுத்துடறேன்!” என்று பாட்டியிடம் வம்பு இழுத்துக் கொண்டு இருந்தாள்.
பாட்டிக்கு சந்தோஷத்தில் கால்கள் காற்றில் மிதக்க, “நான் ஒன்னும் சொல்லலடி அம்மா! என்னனு தான் கேட்டேன். நீ உன் புருஷனுக்கு சமைச்சு போடுறதுக்கு எனக்கு எதுக்கு காசு கொடுக்கணும்? நீ வேலைய பாரு. ஏதாவது உதவி வேணும்னா கூப்பிடு, தனியா செஞ்சு கஷ்டப்படாத!” என்று மீண்டும் புலம்ப தொடங்கினார் தங்கம்மா பாட்டி.
“ஐயோ, போய் உங்க வேலைய பாருங்க பாட்டி. அவர் ஆபீஸ் கிளம்பறதுக்குள்ள நான் எல்லாத்தையும் சமைச்சு எடுத்து வைக்கணும். உங்களை சமாதானப்படுத்த நேரம் இல்லை எனக்கு!” என்று சொல்லி விட்டு வேக வேகமாக தனது சமையலை தொடங்கினாள்.
இவள் ஒரு புறம் சமைத்துக் கொண்டு இருக்க மறு புறம் மகேந்திரன் அலுவலகத்திற்கு செல்வதற்காக கிணற்றடியில் குளித்துக் கொண்டு இருந்தான். குளித்து விட்டு ஈரத் துண்டுடன் வந்தவன், பின் வாசலில் மதியழகி போட்டிருக்கும் கோலத்தை தெரியாமல் மிதித்து விட்டான். ஈரக் காலுடன் வந்ததால் அவன் கால்கள் முழுக்க கோலப் பொடியின் வண்ணங்கள் அப்படியே ஒட்டிக் கொண்டு விட்டது. அது ஒரு மாதிரியான நெருடலை அவனுக்கு ஏற்படுத்தியது.
“அறிவு இருக்கா? யாராவது பின் வாசல்ல இவ்வளவு பெரிய கோலம் போடுவாங்களா? அது மட்டும் இல்லாம கலர் பொடில போட்டு வச்சிருக்கா. கால் ஃபுல்லா கலர் கலரா ஒட்டிக்கிச்சு. ஆல்ரெடி இன்னைக்கு ஆபிஸ்க்கு லேட்டு. இதுல இது வேற… இவள என்னதான் பண்றது?” என்று தனக்குள் புலம்பிக் கொண்டே மீண்டும் கிணற்றடியை நோக்கி ஓடினான்.
அவன் காலை கழுவி விட்டு வருவதற்குள் சமைத்த உணவு பதார்த்தங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அவன் அறைக்கு வந்து விட்டாள் அவள். அவன் மீண்டும் வரும் பொழுது வாசல் முழுதாக வழிக்கப்பட்டு இருந்தது. கோலத்தை காணவில்லை. வேகவேகமாக தன் அறைக்குள் நுழைந்தவன், உள்ளே மதி அமர்ந்திருப்பதை பார்த்து சற்று அதிர்ந்து போனான்.
“இங்க என்ன பண்ற?”
“சாப்பாடு…”
“நீ செய்ய வேண்டாம்னு சொல்லி இருக்கேன்ல. உனக்கு வேற வேலையே இல்லையா? ஏன் என்னை டார்ச்சர் பண்ற? வாசல்ல வேற கலர் பொடியில கோலம் போட்டு வச்சிருக்க. உன்னால எனக்கு எப்பவும் இடைஞ்சல் தான்!”
“காலைல உன் கண்ணுக்கு குளிர்ச்சியா அழகா இருக்கட்டும்ன்னு தான் போட்டேன். கண்ணு தெரியாத மாதிரி மிதிச்சுட்டு வருவனு யார் கண்டா? அதான் இப்ப எல்லாத்தையும் கிளீன் பண்ணிட்டேன்ல?”
“நல்லா கதை சொல்ற. எழுந்து வெளிய போ. நான் டிரஸ் மாத்தனும்.”
“அப்புறம் மாத்தலாம், உனக்கு புடிச்ச எல்லா சாப்பாடும் ரெடி பண்ணி வச்சிருக்கேன். வந்து சாப்பிட்டு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லு!” என்று சொல்லிக் கொண்டே தன் கையில் வைத்திருந்த தட்டில் சாதமும் ஐந்து வகையான பொறியலும் அள்ளி அள்ளி வைத்துக் கொண்டு இருந்தாள்.
“உன்ன யார் இவ்வளவு சமைக்க சொன்னது? காலைல யாராவது இவ்ளோ ஹெவி ஃபுட் எடுத்துக்குவாங்களா? எனக்கு இதெல்லாம் வேண்டாம் எடுத்துட்டு போ. மார்னிங் இவ்ளோ சாப்பிட்டா ஆபீஸ்க்கு போய் வேலை பார்க்க முடியாது. நல்லா படுத்து தூங்க தான் முடியும்.”
“காலைல அஞ்சு மணிக்கு எந்திரிச்சு உங்களுக்கு பிடிக்குமேன்னு ஆசை ஆசையா இதெல்லாம் ரெடி பண்ணேன். எல்லாத்தையும் சாப்பிட வேணாம். உங்களால எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு மட்டும் சாப்பிட்டா போதும்” என்று சொல்லிக் கொண்டே தட்டில் இருந்த சாப்பாட்டை மீண்டும் பாத்திரத்திற்கு மாற்றி வைத்துக் கொண்டு இருந்தாள் மதியழகி.
“சாப்பாடு போட்டுட்டு மறுபடி ஏன் அதை பாத்திரத்தில போட்டுட்டு இருக்க? போட்டது அப்படியே இருக்கட்டும். மீதி எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு இங்க இருந்து கிளம்பு. ஹான்… அப்புறம் சொல்ல மறந்துட்டேன். நான் உன்கிட்ட தலைக்கு தேய்க்கிறதுக்கு எண்ணெய் காய்ச்சி கொடுக்க சொல்லி கேட்டனா? மதியத்தில எண்ணெய் தேச்சா தான் உடம்புக்கு குளிர்ச்சி! நல்லா இருக்கும். இந்த மாதிரி காலங்காத்தால தலைக்கு தேச்சு கிணத்து தண்ணில குளிச்சனா ஜன்னி வந்து செத்துருவேன். இனிமே எனக்கு இந்த எண்ணெய் காய்ச்சி கொடுக்கிறது, அப்புறம் கசாயம் ரெடி பண்ணி குடுக்குற வேலை எல்லாம் வேண்டாம். உன் பொருளெல்லாம் எடுத்துட்டு சீக்கிரம் வெளிய போ. நான் ஆபீஸ்க்கு கிளம்பனும் லேட் ஆகுது” என்று அவளை வெளியே கிளப்பி விடுவதிலேயே குறியாய் செயல்பட்டான் மகேந்திரன்.
‘தான் செய்யும் காரியங்கள் அனைத்தும் தவறாகவே சென்று முடிந்து விடுகிறது!’ என்று நினைத்தவள், கொண்டு வந்திருந்த அனைத்து பாத்திரங்களையும் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு சமையல் அறையை நோக்கி நடந்தாள்.
அவள் சமைத்து எடுத்து வந்திருந்த உணவுகள் அனைத்தும் மகேந்திரனுக்கு மிகவும் பிடித்தமான உணவுகள். எப்படித்தான் இதையெல்லாம் சொல்லாமல் கண்டுபிடிக்கிறாள் என்று அவனுக்கே தெரியவில்லை. அதை வேண்டா வெறுப்பாக சாப்பிட முடியாமல், முழு மனதாகவும் சாப்பிட முடியாமல் ஏதோ ஒரு விதமான நெருடலான மன நிலையோடு சாப்பிட்டு முடித்தான். அங்கே அவளோ வேறு என்ன செய்து அவனை மகிழ்ச்சி படுத்தலாம் என்ற தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள்.
அருகில் இருக்கும் அலங்கார பொருட்கள் விற்கும் கடைக்கு சென்றவள் லவ் பேர்ட்ஸ் ஸ்டிக்கர், மல்லிகை பூ மற்றும் இன்னும் சில அலங்கார பொருட்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு வந்து அவன் அறையை அலங்கரித்தாள். அந்த அறை மிகவும் சிறியது என்பதால் மல்லிகைப் பூவின் மணம் அந்த அறை எங்கும் பரவிக் கிடந்தது.
மாலை அலுவலகம் முடிந்து வீட்டுக்குள் நுழைந்தவன் அறை முழுவதும் பூ மற்றும் ஸ்டிக்கரால் அலங்கரிக்கப் பட்டிருப்பதை பார்த்துவிட்டு அப்படியே நின்று விட்டான். வெளியில் வேறு மழை விழத்துவங்க, அறைக்குள் இருக்க வேண்டிய சூழ்நிலை!
மல்லிகை மணத்தின் காரணமாக மகேந்திரனுக்கு தும்மல் வந்து கொண்டே இருந்தது. வெளியில் குளிர் வேறு கூடிக்கொண்டே இருக்க மீண்டும் காய்ச்சல் வருவது போல இருந்தது.
மதி தன்னை சுற்றி சுற்றி வருவதும், இருவரும் சந்தோஷமாக வாழ ஆரம்பித்து விட்டது போல மற்றவர்கள் முன்பு அவள் காட்டிக் கொள்வதும் அவனுக்கு எரிச்சல் விளைவிக்கக் கூடியதாகவே இருந்தது. இதற்கு எல்லாம் சீக்கிரம் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தான் மகேந்திரன். கூடவே மற்றவர்கள் பொறுமையின் எல்லையை சோதிப்பது என்றும் முடிவு கட்டுவிட்டான்!
மறுநாள் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவன் தனது அறையிலேயே வெகு நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தான். வழக்கமாக இரவு நேரத்தில், வீட்டில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து டைனிங் டேபிளில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். அவன் அந்த தருணத்திற்காகத்தான் காத்துக் கொண்டு இருந்தான்.
அவன் நினைத்துக் கொண்டு இருந்தது போலவே அந்த நேரமும் வந்தது. எல்லோரும் டைனிங் டேபிளில் அமர்ந்தவுடன், அங்கு வந்து சேர்ந்தான் மகேந்திரன்.
“வா மகேந்திரா, வழக்கமா முன்னாடியே வந்து சாப்பிட்டு போயிடுவ. இன்னைக்கு ஏன் இவ்வளவு நேரம் ஆச்சு? சரி பரவாயில்ல வந்து உட்காரு” என்று அவனுக்கென நாற்காலியை ஒதுக்கி தந்தார் பாட்டி.
அங்கிருந்த மற்றவர்களுக்கு இது ஒரு மாதிரியாக இருந்தது. தாத்தாவுக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. முகத்தில் முள்ளைக் கட்டியது போல அமர்ந்து இருந்தார். மற்றவர்களும் ஒரு விதமான முக சுழிப்போடு தான் அமர்ந்து இருந்தனர். ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை இவன் ஒதுக்கப்பட்டவன்.
அதை எல்லாம் சிறிது கூட பொருட் படுத்தாமல் நாற்காலியில் அமர்ந்து கொண்டான் இவன். பாட்டிக்கு மதியழகியும் அவனுக்கு பாசத்தோடு பரிமாற, தன் போக்கில் எதைப் பற்றியும் கவலைப் படாமல் சாப்பிட தொடங்கினான்.
மற்றவர்கள் எல்லோரும் சாப்பிடாமல் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவன் ஏதோ ஒரு விஷயத்திற்காக வந்திருக்கிறான் என்று சுற்றி இருந்த அனைவரும் ஓரளவிற்கு யூகித்து விட்டனர்.
