காதல் – 8

“நல்லா தான பேசிட்டு இருந்தது இந்த புள்ள? இப்போ என்ன இப்படி அழுதுட்டு போகுது? என்னன்னு தெரியலயே…” என பாட்டியும் அவள் பின்னே சென்றார்.

 

“விக்ரம் நான் உனக்கு தகுதியானவ இல்லடா! இந்த பாவி நம்ம ஆசையில மண்ணள்ளி போட்டுட்டான்டா! நான் இனி உன் கிட்ட வரமாட்டேன்! உன் மனசுக்கும், அழகுக்கும் ஏத்த மாதிரி ஒரு நல்ல பொண்ணு கிடைப்பா! அவ கூட நீ நூறு வருஷம் சந்தோசமா வாழனும் விக்ரம்” என அவன் பெயர் பொறித்த மோதிரத்தை தன் கையில் வைத்துக் கொண்டு அழுதவாறே பேசிக் கொண்டு இருந்தாள் ஆத்வி. 

 

“என்ன போல ஒரு கறைப்பட்டவ கையில நீ இனிமே இருக்க வேண்டாம் விக்ரம்” எனக்கூறி அந்த மோதிரத்தை மேஜையில் உள்ள ட்ராவில் வைத்தாள். 

 

பாட்டி ஒன்றும் புரியாது, “என்னம்மா நடந்தது ஏன் இப்படி அழுற?” என்று கேட்டபடியே அப்போது தான் வந்தார் அங்கு.

 

“நீங்க நினைக்கிற அளவுக்கு ஒன்னும் உங்க பேரன் நல்லவன் இல்ல பாட்டி. அவனுக்கு என் வாழ்க்கைய அழிச்சிட்டதுல எவ்வளோ சந்தோஷம் தெரியுமா?”

 

“அவன் முரடன் தான்மா, ஆனா ரொம்ப நல்லவன். நீ ஏதோ அவனை தப்பா புரிஞ்சிகிட்டு இப்படி பேசுற”என்ற பாட்டியின் பதிலில் விரக்தியானவள், போலி புன்னகையை உதிர்த்தாள். 

 

“நானும் விக்ரம்னு ஒரு பையனும் மூணு வருசமா விரும்புனோம். அது அவனுக்கும் தெரியும். எப்படியோ வீட்ல எல்லாரையும் சம்மதிக்க வச்சு மேரேஜ் அரென்ஜ் பண்ணோம். ஆனா கடைசி நேரத்தில உங்க பேரன் வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டான். அவன் மட்டும் வராம இருந்திருந்தா இன்னிக்கு இப்படி ஒரு நிலைமை எனக்கு வந்துருக்காது. என் வாழ்க்கையவே நாசமாக்கிட்டான். ஏன்னு தெரியுமா? எல்லாம் என்ன பழிவாங்கதான்…” என்றாள் அழுது கொண்டே.

 

“பழி வாங்கவா? என்ன மா சொல்ற? இந்தர் அந்த அளவுக்கு ஒண்ணும் மோசமானவன் இல்லடா. உனக்கு தெரியாதா அவனப்பத்தி?” 

 

“தெரியும் பாட்டி. ஆனா இந்த இந்தர் நா சின்ன வயசுல இருந்து பார்க்குற இந்தர் கிடையாது. இவன் ஒரு சைக்கோ! சேடிஸ்ட்! ஒரு நாள் அவனுக்கு வர வேண்டிய வெளிநாட்டு கம்பெனி ஆர்டர் ஃபைல் எல்லாத்தையும் என் அப்பாகிட்ட காமிச்சிட்டு இருந்தான். பட் நான் அது என்னன்னு தெரியாம அவன்கிட்ட எப்பவும் போல சண்ட போட்டுட்டு அதுல காஃபிய கொட்டிட்டேன். அது ரொம்ப இம்பார்ட்டண்ட் ஃபைல்னு எனக்கு அப்பறம் தான் தெரியும் பாட்டி. பேப்பர்ஸ் கறை ஆனதால அந்த ஆர்டர் அவன் கம்பெனிய விட்டு போயிடுச்சு. அன்னிக்கு இந்தர் ரொம்ப கோவமா என்கிட்ட சொல்லிட்டு போனான், உன்னை பழி வாங்காம விட மாட்டேன்டின்னு. அதே மாதிரி பண்ணிட்டான். என் வாழ்க்கையவே நாசம் பண்ணிட்டான். இப்போ சொல்லுங்க பாட்டி உங்க பேரன் எவ்வளவு நல்லவன்னு” என்றவள் தேம்பி தேம்பி அழ பாட்டிக்கு என்ன கூறுவதென்றே தெரியவில்லை. 

 

‘இவ்வளவு நடந்துருக்கு. இந்த பய ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லலையே!’ என நினைத்தவர், அப்போதும் தன் பேரனை விட்டு தரவில்லை.

 

“நீ அவனை புரிஞ்சிகிட்டது அவ்வளவு தான்மா. அவனுக்கு பிடிச்சவங்களுக்காக என்ன வேணும்னாலும் செய்றவன் அவன். கேவலம் ஒரு பேப்பர்க்காகவோ, தன் கம்பெனிக்காகவோ இந்த அளவுக்கு போற கொடூர குணம் என் பேரன் இந்தர் கிடையாது. இதுல வேற ஏதோ விஷயம் இருக்கு” என்று உறுதியாக கூறிய பாட்டியை வித்தியாசமாக பார்த்தாள் ஆத்வி.

 

“என்ன சொல்றீங்க பாட்டி? அப்போ அவனுக்கு என்னை பிடிக்கும், அதனாலதான் தாலி கட்டினான்னு சொல்ல வறீங்களா? அவன் இந்த உலகத்துலேயே ரொம்ப வெறுக்குற ஒருத்தி நானா தான் இருப்பேன். அதே மாதிரி இந்த உலகத்துலேயே நான் வெறுக்குற ஒருத்தனும் அவன் தான். அப்படியே நீங்க சொல்ற மாதிரி அவனுக்கு ஒருத்தங்கள பிடிச்சிருந்தா அவங்கள அவங்க இஷ்டத்துக்கு தான வாழ வச்சிருக்கணும்? இப்படியா கஷ்டப்படுத்துவாங்க?”என்று சரியாக பேசினாள்.

 

“உன்னை அவனுக்கு புடிக்குமான்னு எனக்கு தெரியாதுமா. ஆனா எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். நீ இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா நல்லாருக்குமேன்னு நான் தான் நிறைய தடவ அவன்கிட்ட சொல்லிருக்கேன்” என்றார் அவள் கண்களை துடைத்து விட்டு கொண்டே. 

 

“அப்போ உங்களுக்காக தான் என்னை கல்யாணம் பண்ணி அழச்சிட்டு வந்தானா?” 

 

இந்தரை பற்றி நன்கு அறிந்ததன் விளைவாக, “தெரியலமா… அவனா வாய திறந்து சொல்ற வரைக்கும் நம்மளால அவன்கிட்ட இருந்து ஒரு விசயத்த கூட வாங்க முடியாது. எனக்கும் இதப்பத்தி எதுவும் தெரியாது டா கண்ணு. கேட்டாலும் சொல்லமாட்டான் அந்த எமகாதகன்” என்றார் பாட்டி. 

 

ஆத்விக்கு தலை சுற்றியது. பாட்டியின் மடியில் தலை வைத்து படுத்து கொண்டாள். 

 

“எனக்கு இவன் பண்ணத விட எங்க வீட்ல உள்ளவங்க பண்றது தான் ரொம்பவே ஆச்சர்யமா இருக்கு பாட்டி. ஏன்டா இப்படி பண்ணுனன்னு ஒருத்தர் கூட இந்தர்கிட்ட கேக்கலயே. எவன் கூடனாலும் போய்த் தொல, எங்களுக்கு நீ வேண்டாம்னு சொல்லாம சொல்லிட்டாங்கள்ல?” என்று தேம்பினாள்.

 

“இல்லடா கண்ணு, அவன் என்ன பண்ணாலும் சரியா தான் இருக்கும்ன்னு ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை உங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும். அதான்…”

 

“பெத்த பொண்ண விடவா பாட்டி இவன் மேல நம்பிக்கை அவங்களுக்கு? ஈசியா என்ன தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க. இந்தர் பண்ணதுக்குலாம் அவங்களும் உடந்தையோன்னு தோணுது. யார நம்புறதுன்னே தெரியல பாட்டி. வாழ்க்கையே வெறுப்பா இருக்கு” என்றாள் வலி நிறைந்த குரலுடன்.

 

இந்த சிறு பெண்ணின் இந்நிலைக்கு தானும் ஒரு வகையில் காரணமாகி விட்டோமே என்று காமாட்சி பாட்டியின் கண்களிலும் நீர் துளிர்த்தன. முதல் முறையாக தன் பேரனை சரியாக வளர்க்காமல் விட்டுவிட்டோமோ என்று யோசித்தார். 

 

“பேத்தியா வளர்ப்பு, பேய் வளர்ப்புன்னு ஊருக்குள்ள ஒரு பழமொழி சொல்லுவாங்க! அது உண்மைங்குற மாதிரி என் பேரனை நான் வளர்த்து விட்டுட்டேனோன்னு தோணுது டா” என்றார் குரல் தழுதழுக்க. 

 

அவர் அழுகை ஆத்விகாவை ஏதோ செய்தது. சட்டென எழுந்தவள் தன் கண்களை துடைத்துக் கொண்டு அவரை சமாதானம் செய்ய வந்தாள். 

 

“பாட்டி அதெல்லாம் ஒன்னும் இல்ல. எங்க என்ன பழி வாங்க தான் கல்யாணம் பண்ணி கொடுமை படுத்த போறானோன்னு பயந்தேன். ஆனா இப்போ தான் தெரியுது, அவன் உங்களுக்காக தான் என்னை கல்யாணம் பண்ணிருக்கான்னு. இனி என்னை கொடுமை படுத்த முடியாதுல்ல பாட்டி? எனக்கு தான் நீங்க இருக்கீங்கல்ல” என்றாள் அவரின் கண்ணீரை துடைத்து கொண்டே.

 

அவளின் புன்னகை பாட்டிக்கும் நிம்மதியை தர, “ஆமா நான் இருக்கும் போது உன்னை ஏதாவது செஞ்சிருவானா அவன்? அவன் அவ்ளோ மோசம் எல்லாம் இல்லதான். இருந்தாலும் உன்ன இனிமே ஒரு வார்த்தை திட்டுனாலும் அவன நான் சும்மா விட மாட்டேன் கண்ணு” என்று கூறினார்.

 

முதலிரவு அன்று இந்தர் அவளிடம் நடந்து கொண்டதை பற்றி இப்போது ஏதாவது அவள் கூறினால் பாட்டி கண்டிப்பாக உடைந்து விடுவார் எனஉணர்ந்தவள் பதில் ஒன்றும் கூறாமல் புன்னகைத்து கொண்டாள்.

 

“சரிம்மா அவன் சாப்பிடறதுக்கு வந்துருவேன்னு சொல்லிருக்கான். நான் போய் சமைக்கிறேன்” எனக் கூறி எழுந்த பாட்டியிடம், “நானும் வரேன் பாட்டி, என் குக்கிங் திறமைய பத்திதான் உங்களுக்கே தெரியுமே. சோ நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேனாம். நீங்க குக் பண்ணுவீங்களாம்.”

 

“உனக்கு ஏன்மா சிரமம்? நான் பார்த்துக்கிறேன் நீ ரெஸ்ட் எடுடா தங்கம்.” 

 

“இங்க வந்ததுல இருந்து நான் ரெஸ்ட் மட்டும் தான் எடுத்துட்டு இருக்கேன். ரொம்ப போர் அடிக்குது பாட்டி…” என்று அவள் கூறியதும் அதற்கு மேல் மறுக்காமல் அவளையும் அழைத்துக் கொண்டு கிச்சனிற்குள் நுழைந்தார் பாட்டி. 

 

இருவரும் நிறைய கதைகள் பேசிக் கொண்டே சமையலை ஒரு வழியாக செய்து முடித்தனர். மணியோ இரண்டை எட்டி விட்டது.

 

“ஆத்வி கண்ணு உனக்கு பசிக்குதா டா? சாப்பிடுறியா?”

 

“நீங்க தான் பாட்டி நேரத்துக்கு சாப்பிடணும்‌. ஃபர்ஸ்ட் நீங்க சாப்பிடுங்க.”

 

“அதில்லமா, நான் மட்டும் எப்டி தனியா சாப்பிடறது?”என்று அவர் கேட்கவும், “சரி வாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடுவோம்.” என்றாள் ஆத்வி. 

 

“இந்தர் வந்தான்னா… ?” என இழுத்தார் பாட்டி.

 

“லேட்டா வந்தா தனியா தான் சாப்பிடணும்ன்னு இன்னிக்கு ரூல்ஸ் போட்ருவோம் பாட்டி. அதென்ன அவனுக்கு மட்டும் தனி சட்டமா? நமக்கெல்லாம் பசிக்காதா என்ன?”

 

“இல்லமா அவனுக்காக சாப்பிடாம காத்திருக்கிறது அவனுக்கும் பிடிக்காது தான்.” 

 

“பேரன விட்டு குடுக்க மாட்டீங்களே” என செல்லமாக முறைத்து வைத்தாள். 

 

இருவரும் நண்பர்கள் போல் பல கதைகள் பேசிக்கொண்டு உணவருந்தி முடித்து எழ போகும் தருவாயில் வீட்டிற்குள் நுழைந்தான் இந்தர். தன் மனையாளும் பாட்டியும் சிரித்த முகத்துடன் கதை பேசிக் கொண்டு இருந்தது அவனுக்கு சற்றே நிம்மதியை கொடுத்தது.

 

“ஏன்ப்பா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்துருக்க கூடாதா? நாங்க இப்போ தான் சாப்பிட்டு முடிச்சோம்” என்றார் பாட்டி. 

 

“அதனால என்ன பாட்டி? நீங்க போய் கொஞ்ச நேரம் தூங்குங்க. நான் சாப்பிட்டுக்கிறேன்” என கூறி ப்ரஷாக தன் அறைக்குள் சென்றான் இந்தர்.

 

முகம், கை, கால்களை கழுவி விட்டு ஷார்ட்ஸ் அண்ட் டி ஷர்ட் அணிந்து கொண்டு வந்தவனை, ‘வந்துட்டான் ஆறடி ஜிம் பாடிய காட்டிட்டு’ என்று நினைத்திட, இந்தர் அவளை ஒற்றைப் புருவம் உயர்த்தி பார்த்தான்.

 

“ஐயோ இவனை பத்தி நினைக்கவும் முடியல, வாய திறந்து எதுவும் பேசவும் முடியல. எப்படி திட்டுவேன் நான்?…” என தனக்குள்ளே புலம்பிக் கொண்டாள் ஆத்வி.

 

அவன் முகத்தை எதையும் காட்டாமல் உணவருந்த அமரவும், அவளுக்கு மீண்டும் துணிச்சல் பிறந்தது.

 

‘மவனே காலைல எஸ்கேப் ஆகிட்ட. இப்போ மாட்னடா என் பம்பர கட்ட மண்டையா’ என்று நினைத்துக் கொண்டவள் அவன் தனக்கு தானே பரிமாறிக் கொள்வதை தடுத்து, “நான் பரிமாறுறேன், நீ சாப்பிடு.” என்று அவளே உணவை பரிமாற ஆரம்பித்தாள்.

 

“இவ ஒருத்தி எப்போ பாரு பழி வாங்குறேன், பால் ஊத்துறேன்னு வந்திடுறா. சும்மா சும்மா பக்கத்துல நின்னு இம்சை பண்ணிக்கிட்டு இருந்தா என்னால எப்படி நல்லவனா இருக்க முடியும்? அன்னைக்கு ராத்திரி பார்த்ததெல்லாம் நினைக்கக்கூடாதுடா இந்தர்…” என்று தனக்குள் மந்திரம் போல் சொல்லிக் கொண்டிருந்தான்.

 

அந்த விசுவாமித்திரனின் தவத்தை கலைப்பாளா ஆத்விகா?

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
231 40 0
இராவணின் வீணையவள்
45 0 0
ஆரெழில் தூரிகை
305 15 1
வேண்டினேன் நானுன்னை
537 6 0
நீ எந்தன் நிஜமா?
374 8 1
என்துணை நீயல்லவா?
455 12 0
கற்றது காதல்
214 1 0
நிழலென தொடர்கிறேன்
210 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page