காற்றினிலே வரும் கீதம் 10

 

​தன் அறைக்கு சென்றவள் ஒளித்து வைக்க வேண்டிய உடைமைகளை சரியாக ஒளித்து வைத்தாள். உடைமாற்ற எண்ணி அலமாரியை திறந்தவளுக்கு எந்த உடையை எடுப்பது என்று நிதானம் இல்லாமல் தட்டு தடுமாறிக் கொண்டே தனக்குள் பேசிக்கொண்டு உடைகளை புரட்டிக் கொண்டிருந்தாள்.

 “எங்கே இருந்து வெடிக்குமோ தெரியலையே! அதுலயும் அத்தை அவர் முன்ன எதுவுமே நடக்காத மாதிரி பேசினதை பார்த்தா, கோக் கூட மென்டாசை சாப்பிட்ட மாதிரி வயித்துக்குள்ள என்னமோ பண்ணுது… உனக்கு மட்டும் ஏன் இப்படி சோதனை மயூரி?” என்றபடி துணியை எடுக்க, 

“அப்படி என்ன சோதனை?” என்ற குரலில் அவள் கைகள் அந்தரத்தில் நின்றது.

​அவள் இதயம் தொண்டைக்குள் அடைக்க மெல்ல திரும்பி பழகிய அந்த கூர்விழிகளை பார்த்தாள். 

“க்கும்….என்ன சோதனை? நான் அப்படி ஒண்னும் சொல்லலையே… நாளைக்கு பிரசன்டேஷன் இருக்கு, அதுல சாதனை படைக்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்” என்றாள். 

அவன் சந்தேக பார்வை தொடர, குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். “மயூரி..வாய்க்கு வர வொயர் கனக்க்ஷன கொஞ்சம் கட் பண்ணு” என்றவள், மீண்டும் வாய் வெளியே பேசுவதை உணர்ந்து, “தான் நிறுத்தப் போவதில்லை, தன் வாய் தான் தனக்கு எமன்” என்று எண்ணி ஓங்கி தலையில் அடித்துக் கொண்டாள். 

அவசரமாக உடைமாற்றியவள் கீழே மாமியாருடன் காபி அருந்த சென்றாள்.

​”வா ம்மா.. ஏன்…இவ்வளவு நேரம் இந்தா காபி?” என்றபடி மாலை சிற்றுண்டியுடன் நீட்ட, 

“அத்தை…” என்று அவள் துவங்க, 

“நாளைக்கு பேசிக்கலாம்” என்று பற்களின் ஊடே வார்த்தைகளை துப்பியவர், அவள் பின்னே கண்களை காட்ட அவளும் திரும்பி பார்த்தவள், ஒரு மென்புன்னகையை சிந்தியபடி காப்பியை அருந்தினாள். 

அவளை விட்டு கண் எடுக்காமல் ரஞ்சன் சோபாவில் அமர்ந்து முறைத்துக் கொண்டிருந்தான். அவள் அமைதியாக உணவு மேஜையில் அமர்ந்து காபியை அருந்தினாள். அப்படியே அமர்ந்து தன் கைகளை  பார்த்தபடி இருக்க, 

“இன்னைக்கு என்ன உனக்கு மௌன விரதமா என்ன?உன் வாய் இவ்வளவு நேரம் பேசாம இருக்கு? அதுலயும் எங்க அம்மா பக்கத்துல இருக்கும்போது?” என்றான் ரஞ்சன்.

​லேப்டாப்பில் வேலை பார்த்திருந்தவன் விழிகளை மட்டும் உயர்த்தி, அவள் விழித்தபடி அவனை பார்க்க, அவள் தோளை தொட்ட மரகதம்,

 “இன்னும் ரெண்டு நாள்ல ஏதோ செமினார்னு சொன்னா அந்த டென்ஷன்ல இருக்கா, அதான் அதையே யோசிச்சிட்டு இருப்பா..” என்றார் அவள் தோளை லேசாக அழுத்தி, 

“ஆமா..மைண்ட்ல ரிவைஸ் பண்ணிட்டு இருந்தேன்” என்றவள், சுய உணர்வுக்கு வந்தவளாக,

 “ஏன் அத்தை, உங்க பையனுக்கு நான் பேசாம இருக்கிறது கஷ்டமா இருக்கு போல?” என்றாள் அவனை கேலியாக பார்த்தபடி. 

லேப்டாப்பில் இருந்த கவனத்தை முழுதாக அவள் புறம் திருப்பியவன், அவளை மேலிருந்து கீழே ஒரு ஏளன பார்வை பார்த்தான்.

பின் அருகே இருந்த ஆனந்திடம் “நாளை காலை வந்தா போதும் கிளம்பு” என்றவன் எழுந்து அறைக்கு தன் லேப்டாப்புடன் சென்றான்.

​மயூரியை முறைத்துவிட்டுத்தான்..

அவன் சென்றதும் மயூரி மாமியாரை திரும்பிப் பார்க்க, அவரும் ஏதும் பேசாமல் தன் அறைக்கு சென்று விட, மயூரிக்கு வேதனையாக இருந்தது. தன் நிலையை எடுத்து கூற வாய்ப்பு கிடைக்காததை எண்ணி கலங்கினாள். 

நேரம் விரைவாக ஓட தோட்டத்திற்கு சென்று அமர்ந்திருந்தவளை இரவு உணவிற்கு அழைத்தார் சரளா. “இதோ வரேன் அக்கா” என்றபடி உணவு மேஜைக்கு செல்ல, 

அவளை உறுத்து விழித்தபடி ரஞ்சனும் அமர்ந்து இருந்தான். மயூரியின் மனதில் ஓடியது, “இவர் வேற குறுகுறுன்னு பாத்துக்கிட்டு…” என்று எண்ணியவள் கவனம் உணவு மேஜையில் உணவை கொண்டு வைத்த மாமியாரிடம் செல்ல, அவர் கண்களால் உணவு உண்ண அமர சொன்னார்.

​அமைதியாக ரஞ்சனுக்கு எதிராக அமர்ந்து கொண்டாள். “என்னம்மா, வழக்கத்துக்கு மாரா காபிக்கு பதில் ஃபெவிகால் கம் எதுவும் உங்க மருமகளுக்கு கொடுத்தீங்களா?” என்று மயூரியை கேள்வி பார்வை பார்த்தபடி கேட்டான். 

அவள் அவனை நிமிர்ந்து பார்த்து, “ஹலோ மிஸ்டர் புருஷன், ஏதோ ஒரு பிரசன்டேஷன் பிரிப்பர் பண்றதுக்காக ஐடியா பண்றதுக்கு திங்க் பண்ணிட்டு இருந்தா…ரொம்ப ஓவரா பேசுறீங்க. இப்ப என்ன நான் பேசணும் அவ்வளவுதானே?” என்றவள், 

“அத்தை நாளைக்கு என்ன டிபன்?” என்று ஆரம்பிக்க, ரஞ்சனின் சந்தேக பார்வை மட்டும் குறையவில்லை.

​அதை கவனித்த மரகதம், “என்ன மயூரி, நாளைக்கு லீவுன்னு சொன்ன, இப்ப டிபன் கேக்குற?” என்றார். 

சட்டென அவரை நிமிர்ந்து பார்த்தாள் மயூரி. அவர் ‘ஆம்’ என்று சொல்லுமாரு கண் ஜாடை செய்ய, அவளுக்கு மாமியார் தன்னிடம் பேச நினைப்பது புரிந்தது. 

“லீவு தான் அத்தை.. ஆனா…சாப்பிடாமல் இருக்க முடியுமா? உங்க மகன் மாதிரி இருந்தா முடியும்” என்றாள் அவனை கேலியாக பார்த்து. 

அவன் அவளை முறைத்து விட்டு உணவில் கவனத்தை செலுத்தினான். “சரி சரி, அப்போ ரஞ்சனுக்கு காலையிலேயே டிபன் பண்ணி அனுப்பிச்சிட்டு நாம வெளியே எங்கேயாவது போவோமா? நீயும் பிரசன்டேஷன் பிரசன்டேஷன்னு டென்ஷனாவே இருக்க” என்றார் மரகதம். 

குதூகலமாக”ம்ம்.. போலாமே!” என்றாள் மயூரி.

​ரஞ்சன் எதுவும் பேசாமல் உணவை முடித்துவிட்டு எழுந்து செல்ல, பெருமூச்சு ஒன்றை விட்டாள் மயூரி. அவளையே பார்த்துக் கொண்டிருந்த மரகதம், “காலைல எப்பவும் போல ரெடியாகு. சுவருக்கு கூட காதுகள் இருக்கு” என்றவர், 

அவரும் அவர் அறைக்கு சென்று விட மயூரி தன் அறையை நோக்கி சென்றாள். அறையில் படுக்கையில் முகத்தை கையினால் மறைத்து படுத்திருந்தான் ரஞ்சன். சத்தம் இல்லாமல் அவன் அருகே திரும்பி படுத்து கொண்டாள் மயூரி. 

கைகளை விலக்கி அவளை ஒரு முறை பார்த்த ரஞ்சன் மீண்டும் முகத்தை மூடி தூங்கிப் போனான். மயூரிக்கு தான் தூக்கம் வர மறுத்தது. கண்ணாடி பால்கனி கதவு வழியே தெரிந்த இருண்ட வானை வெறித்தபடி இருந்தவள், அப்படியே உறங்கியும் போனாள்.

​காலை ரஞ்சனின் கோபமான ஃபோன் பேச்சுக் குரலில் தான் கண்விழித்தாள். மெதுவாக எழுந்து காலை கடன்களை முடித்து வெளியே வருவதற்கும் ரஞ்சன் கார் வீட்டை விட்டு வெளியே செல்லவும் சரியாக இருந்தது. அவன் காரை வெறித்து பார்த்தவளுக்கு மாமியார் வெளியே செல்ல வேண்டும் என்று கூறியது நினைவு வர, விரைந்து ஆயத்தமாகி கீழே வந்தாள். 

அவள் மாமியார் உணவு மேஜையில் அவளுக்காக காத்திருந்தார். எதுவும் பேசாமல் உணவை உண்ண  சொன்னார். மயூரி”அத்தை “என்று தொடங்கினாள். நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தார் மரகதம், மயூரிக்கு அப்பொழுது புரிந்தது ரஞ்சனின் கூர்மையான பார்வை எங்கே இருந்து வந்தது என்று! 

“முதல்ல சாப்பிடு. சரளா கிட்ட சாப்பாடு எடுத்து டிபன்ல கட்ட சொல்லி இருக்கேன். நாம அழகர்கோவில் போறோம் சீக்கிரம்” என்றார்.

​அவள் அமைதியாக உண்டு முடித்தவுடன் இருவரும் வீட்டில் இருந்த மற்றொரு காரில் டிரைவருடன் கிளம்பினார்கள். அழகர் கோவில் செல்லும் வரை காரில் அமைதி நிலவியது. 

கள்ளழகரை நிதானமாக தரிசித்தவர்கள் காரை பழமுதிர்சோலை சாலை வழியே போகச் சொல்லிவிட்டு, மலை பாதையில் இருவரும் நிதானமாக ஏற துவங்கினர். 

“ம்ம்..இப்ப சொல்லு” என்றார் மரகதம்.

 “அத்தை அது வந்து…” என்று தயங்கியவள், மரகதம் அமைதி காக்கவும் ஒரு பெருமூச்சுடன் தன் நிலையை மொத்தமாக சொல்லி முடித்தாள். 

“நான் ரேடியோ ஜாக்கியா வேலை பார்க்கிறேன். மீரா என்ற பெயரில் ஷோ பண்ணுவேன்” என்று முடிக்க, வியந்து அவளை பார்த்தவர் நின்றுவிட்டார்.

​”என்ன… த்தை…அப்படி பாக்குறீங்க? என்ன மன்னிச்சிடுங்க அத்தை. உங்ககிட்ட நான் முன்னையே சொல்லி இருக்கணும். எங்க அப்பா கிட்ட கூட சொல்லல, சாரி” என்று மென்மொழியில் கூற, 

“அட நீ வேற! நீ உண்மையா தான் சொல்றியா? ஆர் ஜே மீரா நீ தானா? சும்மா என்னை ஏமாத்துறதுக்காக சொல்றியா?” என்றார். 

“ஐயோ அத்தை உண்மையா தான். அது… எப்படி உங்களுக்கு ப்ரூவ் பண்றது? இப்ப கூட நாம எப்எம் ஸ்டேஷன் போவோமா?” என்றாள். 

“அதெல்லாம் வேண்டாம். இந்த ஆர் ஜே கலக்கல் கதிர்கிட்ட போன் போட்டு குடு பாப்போம்” என்றார்.

​”என்ன?” என்று அவரைப் பார்த்து விழிக்க, 

“என்ன முழிக்கிற? நான் நம்பணும்னா போன் போடு” என்றார் கடுகடுப்பான முகத்துடன். 

அவரைப் பார்த்தவாரே அவள் அந்த கதிருக்கு போன் போட்டு, “ஹலோ கதிர் அண்ணா ஃப்ரீயா?” என்றாள் எதிர் முனையில் அவன் ஏதோ சொல்ல..

“ஐயோ கடிக்காதீங்க, என் மாமியார் தான் உங்ககிட்ட பேசணும்னு சொன்னாங்க” என்றபடி போனை மரகததிடம் கொடுக்க, 

அவர் கண்கள் வியப்பால் விரிய ஆர்வமாக போனை வாங்கி, “ஹலோ ஆர் ஜே கதிரா பேசுறது?” என்று கேட்க, அந்தப் பக்கம் அவன் ஷோவில் பேசுவது போல் பேச, 

“ஐயோ என்னால நம்பவே முடியல தம்பி! எத்தனை தடவை உங்க ரேடியோ ஸ்டேஷனுக்கு கால் பண்ணி இருப்பேன் தெரியுமா? ஒரு தடவை கூட லைன் கிடைத்ததே இல்லை. இந்த லூசு மயூரி இப்பதான் என்கிட்ட சொன்னா உங்க கூட தான் வேலை பாக்குறான்னு. தம்பி அடுத்த தடவை ஷோ ஸ்டார்ட் பண்ணும்போது இந்த ‘மைனா’ படத்துல வருமே ‘ஜிங்கு ஜிங்கு’ன்னுஒரு பாட்டு அதை போட்டு ஸ்டார்ட் பண்ணுங்க தம்பி” என்றார்.

​அந்தப் பக்கம் வந்த பதில் என்னவோ, “ஏன் தம்பி இந்த மயூரி தான் மீரான்னு பேசுறாளா உண்மையாவா சொல்றா?  அவதானா இவ?” என்று கேட்க,

 “ஓ சரி சரி தம்பி, அவகிட்ட போனை கொடுக்கிறேன்” என்று போனை கொடுத்தவர் குதூகல சிரிப்புடன் வானை பார்த்தபடி இருக்க 

அவரை விசித்திரமாக பார்த்த மயூரி கதிரிடம் சொல்லிவிட்டு போனை கட் செய்தாள். 

“அத்தை…” என்று கூப்பிட, அவளை ஆச்சரியமாக பார்த்தார். 

“லூசு லூசு! இத முதல்லயே சொல்ல கூடாதா? எனக்கு கதிரை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா? நான் மீராவோட ஷோலாம் கேட்கவே மாட்டேன், ஒரே மோட்டிவேஷனல் ஸ்பீச்! அதை தான் வீட்ல பெரிய மனுஷியா நானே பண்றேனே, நம்ம கதிர் ஷோ மாதிரி வருமா?” என்றார்.

​மயூரி வாயில் கை வைத்தபடி அவரைப் பார்க்க, “இத முன்னாடியே சொல்லியிருந்தா நானும் உனக்கு ஹெல்ப் பண்ணி இருப்பேன். இப்ப என்ன நீ பரதம் கத்துக்கணும் அவ்வளவுதானே? ஆனா ஒரு கண்டிஷன்… வீட்டில மட்டும் எந்த காரணத்தைக் கொண்டும் ஆடிடாத. எனக்கு தெரியாதப்ப எப்படி இருந்தியோ அதே மாதிரி நடந்துக்க சரியா? அப்புறம் இன்னொன்று…” என்றவர் குரலை தாழ்த்தி, 

“என்ன அத்தை?” என்றாள்.

 “என்னை ஒருநாள் ரேடியோ ஸ்டேஷன் கூட்டிட்டு போய் கதிரை எனக்கு பிரண்டாக்கி விடுறியா?” என்று கேட்க, ‘பக் ‘என்று சிரித்தவள்,

 “கண்டிப்பா அத்தை” என்றாள். மனம் லேசானது.

​அதன்பின் மாமியார் மருமகளின் வாய் ஓயவில்லை. பழமுதிர்சோலையில் முருகனை தரிசித்தவர்கள்,அர்ச்சனை தட்டில் இருந்த பழங்களை குரங்கிற்கு தானம் செய்துவிட்டு, அது உண்ணும் அழகை கண்டு ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

 “அத்தை உங்க மகன் ஏன் எப்ப பார்த்தாலும் உர்ருனு இருக்கார்?” என்றாள் புன்னகையுடன். 

“அதெல்லாம் பெரிய கதை மயூரி” என்று பெருமூச்சு விட்டவர், “ஏன் டி மருமகளே…சந்தோஷமா இருக்கும் போது எதுக்கு அவனை ஞாபகப்படுத்துற? உன் புருஷனைப் பத்தி தெரிஞ்சுக்கறதுக்கு எல்லாம் நிறைய நேரம் இருக்கு. வாழ்க்கை முழுசா அவனோட தான குப்பை கொட்ட போர, பின்ன என்ன?” என்றார்.

​”இல்ல கொஞ்சம் உங்க மகனோட ஹிஸ்டரி தெரிஞ்சா, நான் கொஞ்சம் பார்த்து நடந்துக்குவேன்ல அதான் கேட்டேன்” என்று இழுத்தாள். 

“நீ என்ன சரித்திரமா எழுதப்போற? நிதானமா… தெரிஞ்சுக்கோ” என்றார். 

குட்டி குரங்கு தாய் குரங்கை கொஞ்சுவதை பார்த்தபடி, “பாரு அந்த குரங்கு குட்டிக்கு இருக்க பாசம் கூட நான் போட்ட குட்டிக்கு இல்லை” என்று சலித்துக் கொண்டார். 

“அதுக்கு உங்க பிள்ளையை நீங்க குட்டியாவே இருக்க வச்சிருக்கணும்” என்றாள் புன்னகையுடன். 

அவளை முறைத்து விட்டு மீண்டும் குரங்கை பார்த்தார் மரகதம். அவர் மனதினுள் ரஞ்சனின் சிறுவயது காலம் ஓடி லேசாக புன்னகை அரும்பியது.

​”எனக்கு ஒரு சந்தேகம் அத்தை… எங்க வீட்ல தான் ஆர் ஜே வேலையும் பரதமும் தப்பு. உங்களுக்கு தான் பிடிச்சிருக்கே, பின்ன ஏன் எப்பவும் போல தெரியாத மாதிரி இருக்க சொல்றீங்க?” என்றாள் மயூரி. 

“எனக்கு மட்டும் பிடிச்சா போதாது மயூரி, அந்த வீட்ல நானும் நீயும் மட்டுமில்ல, மூணாவதா நான் பெத்த பிள்ளை.. உன் புருஷன் இருக்கான் மறந்துட்டியா? அவனுக்கு இதெல்லாம் பிடிக்காது” என்றவர், “அப்புறம் இன்னொன்னு உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன் மயூரி. மாடில உன் ரூம தாண்டி மூலையில இருக்க ரூமுக்கு மட்டும் போயிராத. அதை திறந்து பார்த்திராத சரியா?” என்றார் பயத்துடன்.

 “என்ன அத்தை, அந்த தெக்கால இருக்க ரூமுக்குள்ள சந்திரமுகியா இருக்கு? ஏன் அங்க போக கூடாது?” என்றாள் புன்னகையுடன். 

“இப்போதைக்கு சொல்றத மட்டும் கேளு, பின்னாடி உனக்கு விஷயம் தெரியும் போது தானா புரியும்” என்றவரை புதிராக பார்த்தாள் மயூரி.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page