காற்றினிலே வரும் கீதம் 11

 

​மாமியாரின் தீவிரமான பேச்சிலும் பார்வையிலும் மயூரி திகைத்தாலும் ஏதோ தவறு என்று மனது மணி அடித்தது.

 “அத்தை இந்த வீட்டுக்குள்ள ஹாரி பாட்டர் படம் மாதிரி ஒரே புதிராக இருக்கே.. ஏன் அத்தை?”” என்றாள் விளையாட்டு போல 

சற்று நேரம் ஏதும் பேசாமல் அமைதியாக வெறித்துப் பார்த்தபடி இருந்த மரகதம் ஒரு பெருமூச்சுடன், “அது உனக்கு கூடிய சீக்கிரம் எல்லாமே தெரியவரும் மயூரி கொஞ்சம் பொறுமையா இரு” என்றார்.

 மீண்டும் மயூரிக்கு உள்ளே கோபம் தான். என்ன இது வீட்டை விட்டு இவ்வளவு தூரம் வந்த பிறகும் ஏன் பூடக பேச்சு..! என்று இருந்தாலும்.. சரி, நமக்கு ஏன் வீண்வம்பு இப்போதைக்கு,தன் ரகசியத்தை மாமியார் ஏற்றுக் கொண்டதே பெரிய விஷயம்.. 

தன் பிறந்த வீட்டில் கிடைக்காத சுதந்திரம் கிடைத்தது. அதை ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமைதி காத்தாள் மயூரி.

அன்று இருவரும் மீண்டும் காரில் ஏறி வீடு நோக்கி திரும்பினர். திரும்பும் போது இருவருமே மனதை லேசாக்கும் வண்ணம் பாடல்களுடன் உரையாடல்களுமாக கலகலத்தபடி வந்தனர். டிரைவர் இரண்டு மூன்று முறை திரும்பி பார்க்க மயூரி அவரிடம் கேட்டாள்,

 “என்ன அண்ணா ஏன் அப்படி பாக்குறீங்க..?” என்றாள்.

 “ஒண்னும் இல்லைங்கம்மா எங்க பெரியம்மா இப்படி சிரிச்சு.. பார்த்து ரொம்ப நாளாச்சு அதான்” என்றார்.

 மரகதத்திற்கு கண்கள் கலங்கின. “என்ன செய்ய கந்தசாமி மனசு விட்டு சிரிக்க இவ வந்து தான் எனக்கு கிச்சு கிச்சு காட்டணும்னு இருக்கு போல” என்றார் பூரிப்புடன் 

மகிழ்ச்சியாக வீடு வந்து சேர்ந்தனர்.

​பொருட்களை கலகலப்புடன் எடுத்து வந்தவர்கள்,ஹாலில் இருந்த ரஞ்சனை கண்டவுடன் தான் குதூகலம் குறைந்தது. அவன் முன் ஆனந்த் நிற்க இவர்களை உருத்து பார்த்துக் கொண்டிருந்தான். 

ஆனந்தை கண்டவுடன் மயூரி, “அண்ணா.. குட் ஈவினிங்..என்ன மணி ஏழு ஆகப்போகுது நீங்க இன்னும் வீட்டுக்கு போகலையா..?” என்றாள். 

அவளை ரஞ்சன் முறைத்தபடி இருக்க ஆனந்தோ,

 “இல்ல மயூரி… இன்னும் ஒரு வாரத்துல சார் வெளியூர் போக வேண்டி உள்ளது.. அதுக்கு முன்ன சில பிரிபரேஷன்ஸ்” என்று கூறிக் கொண்டிருந்தவன் அப்பொழுதுதான் ரஞ்சனின் அனல் பார்வையை பார்த்து பேச்சை நிறுத்தினான். 

“ஏன் நிறுத்திட்ட அவதான உனக்கு சம்பளம் கொடுக்கிறா.. அந்த அத்லெட் தான உனக்கு இப்ப முக்கியம்..!சொல்லு… எல்லாத்தையும் சொல்லு…!அப்பதான் அவங்க நாம ஊர்ல இல்லாதப்போ ஓடுறதுக்கு வசதியா இருக்கும்..” என்று மயூரியை முறைத்தபடி கூறினான் ரஞ்சன்.

 சட்டென கோபமுற்ற மயூரி, அவனை முறைத்தபடி பல்லை கடித்துக் கொண்டு, மனதினில் அவனை வடசட்டியில் எப்படி வறுக்கலாம் என்று யோசித்துக் கொண்டே கிச்சனை நோக்கி நகர தொடங்க. ரஞ்சன் சொடுக்கிட்டு அழைத்தான்..

அவளைத்தான் அழைக்கிறான் என்று தெரிந்தாலும் திரும்பாமல் அப்படியே நின்றாள் மயூரி. அவன் மீண்டும் சொடக்கிட்டு, “ஹலோ மேடம்” என்றான். 

அவள் திரும்பாமல் இருக்க, “ஓ… உன் பிளான கண்டுபிடிச்சுட்டேன்னு கோபமா இருக்கியா…?” என்றான் இளக்காரமாக.

அதற்கு மேல் மயூரியால் பொறுக்க முடியவில்லை. கையில் இருந்த கூடையை அருகில் இருந்த டைனிங் டேபிளில் வைத்தவள், விறுவிறுவென அவன் அருகே வந்தாள்,

 “என்ன…என்ன எப்ப பார்த்தாலும் அதையே சொல்றீங்க? ஓடிப் போனேன் தான் ஆனா இழுத்து வந்து  கட்டிக்கிட்டது நீங்கதானே? ஓடி போனால் அப்படியே விட வேண்டியதுதானே” என்றாள் கோபமாக.

​”என்ன நீ ‘வேண்டான்னு’ சொல்ற அளவுக்கு பெரிய ஆளா? நீ எல்லாம் என்னை பிடிக்கலைன்னு ஓடிப்போவ…நான் பார்த்துட்டு சும்மா இருக்கணுமா? இனி நீயே நினைச்சாலும் இந்த வீட்டை விட்டுப் போக முடியாது” என்றான்.

 “நான் எதுக்கு வெளியே போகணும் நான் போறேன்னு சொல்லவே இல்லையே” என்றாள்.

 “இது உன்னோட இயலாமையை வீரம் மாதிரி பேசி உன் மனச நீயே ஆறுதல் படுத்துகிற… அவ்வளவுதான்” என்றான் மேலும் எள்ளலாக. 

“சோ…! என்னால இந்த வீட்டை விட்டு, உங்களை மீறி வெளியே போக முடியாதுன்னு சொல்றீங்க அப்படித்தானே..!” என்றாள்.

 அவன் முன் ஒற்றை விரலை நீட்டி அவளை முறைத்தவன், அவள் நீட்டிய விரலையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அவள் விழிகளை பார்த்தவன், 

“முடிஞ்சா… இந்த வீட்டை விட்டு வெளியே போய் பார்” என்றான் சவால் விடும் குரலில்.

​அனல் பார்வையுடன் இடுப்பில் கைவைத்து நெடிய மூச்சுகளுடன் அவனைப் பார்த்து முறைத்தவள்.. அவன் முன் சொடுக்கிட்டு கொண்டே கூறினாள், 

“இப்போ.. இந்த நிமிஷம்.. உங்க கண் முன்னாடியே நான் வீட்டை விட்டு வெளியே போறேன்.. பாருங்க” என்றவள் விறுவிறுவென வீட்டை விட்டு வெளியே சென்றாள்.

 அவள் பின்னேயே ஆனந்தும் மரகதமும்” மயூரி மயூரி” என்று அழைத்தபடி ஓடினர், ரஞ்சன் கோபமுற்றே அமர்ந்திருந்தான்.

”மயூரி “என்ற அழைப்பு சட்டென நிற்கவும் என்னவாயிற்று என்று புருவங்களை சுருக்கி ரஞ்சன் எழுந்து மெல்ல வாயிலை நோக்கி நடந்தான்.  

 அங்கே அவன் கண்ட காட்சியில்  அவனுக்கு முதலில் தோன்றியது புன்னகை தான்.. ஆனாலும் அவளின் திமிரில் சட்டென அதை மறைத்து பற்களை கடித்தபடி அவளை முறைத்தான். 

மயூரி கேட்டை தாண்டி வீட்டை நோக்கி நின்று இவனை முறைத்துக் கொண்டு இருந்தாள். ஆனந்த் வந்த சிரிப்பை அடக்கி வாயில் கை வைத்தபடி நிற்க,மரகதம் அவள் தோள் மேல் இரண்டு அடி போட்டு சிரித்துக் கொண்டிருந்தார்.

​ரஞ்சன் அசையாமல் அவளை முறைத்தபடி, “ஆனந்த்” என்ற குரலில் மரகதத்தின் சிரிப்பு நின்றுவிட,ஆனந்த் பதறி அடித்து அந்த பத்தடி நடைபாதையை கடந்து ஓடி வந்தான். 

அவளிடம் இருந்த பார்வையை எடுக்காமலேயே “என்ன அவளுக்கு..?“என்ற கேள்வியை கேட்க,வாயிலில் இருந்து மயூரி வேகமாக உள்ளே வந்தாள். 

போர்டிகோவில் கிழே மயூரி நிற்க,   ஐந்து படிகளின் முடிவில் ரஞ்சன் நின்று அவளை முறைத்துக் கொண்டிருந்தான். 

“என்ன முறைக்கிறீங்க…?என்னால வீட்டுப் படியை தாண்டி போக முடியும்…நான்தான் பத்தினி படி தாண்ட கூடாதுன்னு அமைதியா இருக்கேன். சும்மா ஓடிப் போக போறேன் ஓடிப் போக போறேன்னு சொல்லிட்டே …இருந்தா அப்புறம் எனக்கு கெட்ட கோபம் வரும்” என்றவள் வீட்டினுள் செல்ல படி ஏறியபடி முணங்கினாள்.

​ரஞ்சன் காதில் விழும்படிதான், 

“இவர்கிட்ட நேரா நின்னு பேசினாலே கழுத்து வலிக்கும்.. இதுல அஞ்சு படி மேல வேற நின்னுக்கிட்டு.. என் கழுத்து வலிக்குது.. ச்சை..ஒரு பஞ்ச் டயலாக் கூட இந்த வீட்டுல பேச முடியாது” என்றாள் கோபமாக. 

பின்னே வந்து கொண்டிருந்த மரகதம் சிரிப்பை அடக்க முயன்றபடி அவள் பின்னே செல்ல, ஆனந்த் கீழே நின்றபடி வாயை பொத்திக்கொண்டு சிரித்திருந்தான்.

 உள்ளே  செல்பவர்களை கண்டவனுக்கு எரிச்சல் உண்டாகத்தான் செய்தது. திரும்பி ஆனந்தை முறைத்தவன், அவன் இன்னும் சிரிப்பை அடக்க முயற்சிக்க..,

 “கிளம்பு உன்னால தான் சிரிப்பை அடக்க முடியலையே,பல்ல காட்டிட்டு நீ ஒண்னும் வேலைய பாக்க வேணாம்” என்றவன் உள்ளே சென்றான். 

டைனிங்கில் சிரித்தபடி பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்த தாயைப் பார்த்தான் கோபம் இருந்தாலும் தாயின் மலர்ந்த முகம் மனதை பரவசப்படுத்தியது…

​மறுநாள் காலை மயூரி எப்பொழுதும் போல் கண் விழிக்க ரஞ்சன் அறையில் இல்லை. எழுந்தவள் முதலில் குளித்துவிட்டு வந்துவிடலாம் என்று முடிவு செய்தாள். 

இன்று அவள் கல்லூரியில் நிகழ்ச்சி அதற்கு தோழிகள் அனைவரும் ஒரே போல  சேலை எடுத்திருந்தனர். எப்பொழுதும் சுடிதார் என்பதால் குளியல் அறையிலேயே உடைமாற்றி வந்துவிடுவாள்.

 இன்று மாமியார் அறையில் சென்று உடைமாற்றிக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தாள். ஆனால் மாமியாரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்று மனது சலித்தது. 

ரஞ்சன் கீழே உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பதை உறுதி செய்தாள். மணியை பார்த்தாள் அது ஏழு என்று காட்டவும்..இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது ரஞ்சன் மேலே வர என்று முடிவு எடுத்தவள் வேகமாக குளியறையில் நுழைந்தாள்.

குளித்து முடித்தவள்

​பாவாடையையும் சட்டையையும் மட்டும் அணிந்து கொண்டவள், சேலையை கைகளில் பிடித்தவாறு கதவை திறக்க அதிர்ந்து நின்றாள். கட்டிலின் அருகே ஒரு பைலுடன் ரஞ்சன் நின்று இருந்தான். 

கதவுத் திறக்கும் சத்தத்தில் அவனும் திரும்பி பார்க்க கொஞ்சம் அதிர்ந்து தான் போனான். அவனின் பார்வை அவள் கண்களில் இருந்து கீழே இறங்க,சுய உணர்வுக்கு வந்த மயூரி சட்டென குளியலறை கதவை சாற்றினாள். 

அதில் அவனுக்கும் சுய உணர்வு வந்தது. தலையில் அடித்துக் கொண்டு பைலை எடுத்து கொண்டு வெளியே சென்றான். கதவு பூட்டும் சத்தம் கேட்டு,மீண்டும் வெளியே வந்த மயூரி சுற்றும் முற்றும் பார்த்தவள் அவன் வெளியே சென்று விட்டான்.. என்று உறுதி செய்து கொண்டு வேகமாக சென்று அறையின் கதவில் தாழ்ப்பாளை போட்டாள்.

​கதவை சாற்றியவளுக்கு வெட்க புன்னகை வந்தது… தலையில் அடித்துக் கொண்டு சேலையை கட்ட துவங்கினாள். மனதில் மத்தாப்பு பூத்தாலும்,அவனின் கோப விழிகளும்  வெறுப்பும் பயம் காட்டியது. 

அவசரமாக சேலையை கட்டினாலும் நேர்த்தியாக கட்டி முடித்தவள்,  ஈர கூந்தலை தளர பின்னி, கை நிறைய வளையல்களை அடுக்கினாள். நெற்றியில் குங்குமத்தை வைக்கும் போது ரஞ்சனை நினைத்து புன்னகை அரும்பதான் செய்தது. 

ஓடும் மனதை அடக்கி கீழே இறங்கினாள்.

 கல்லூரி பையுடன் கீழே இறங்கியவள்,டைனிங்கில் இருந்து பைலை பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனை பார்த்து ரசித்துக்கொண்டே கீழே இறங்கினாள்.

​என்றும் இல்லாமல் ஏன் இந்த சலனம்? அதிலும் இந்த ஹிட்லரை கண்டு, ஒரு நாள் அவளை அரைகுறை உடையுடன் அவன் கண்டால் மனது மாறிவிடுமா? அவனுக்கும் பிரியம் வேண்டாமா அவள் மேல் என்று எண்ணியவளுக்கு…

 சற்று முன் அவள் மேல் விழுந்த அவன் பார்வை நினைவிற்கு வந்தது. அதில் கண்டிப்பாக வெறுப்பை காணவில்லை என்று மனது அடித்து சொன்னது. பின் என்ன இருந்தது என்று மனதினுள் கேள்வி கேட்கவும், அவள் சாப்பாட்டு அறையின் வாயிலை அடையவும் சரியாக இருந்தது. 

அவளை நிமிர்ந்து பார்த்த அந்த விழிகள் அவள் கழுத்துக்கும் சேலைக்கும் நடுவே இருந்த அந்த மச்சத்தில் வந்து நின்றது. மீண்டும் அவள் விழிகளை அவன் பார்க்க அவள் வெட்கத்தில் தலை குனிந்து இருந்தாள்.

​சட்டென அவன் பார்வை வெறுப்புக்கு மாறியது. எழுந்து பைலுடன் மெல்ல நடந்தவன் அவளை கடக்கும் போது அவன் விழிகள் தானாக மச்சத்தில் பதிந்தாலும் அவன் வார்த்தைகள் அவளை குதற துடித்தது. 

“அப்படி வந்து நின்னா…? நான் மயங்கிடுவேன்னு நினைச்சியா” என்றவன் விழிகளை சட்டென நிமிர்ந்து பார்த்தாள் மயூரி. 

இப்பொழுது விழிகளில் இருந்தது என்ன..? என்று அவள் கண்டறியும் முன் விலகி சென்றான் ரஞ்சன். 

மனதில் பற்றி பூத்திருந்த மத்தாப்பில்.. யாரோ ஒரு வாளி தண்ணீரை ஊற்றியது போல் இருந்தது மயூரிக்கு. திரும்பி நடந்து செல்லும் கணவனையே பார்த்து நின்றாள்.

அவனின் கம்பீரம்,விரல்களால் கோதிவிடச் சொல்லும் கருகருவென இருக்கும் சிகை, கூராக என்னை பிடித்து ஆட்டு என்று கூறும் நாசி, செதுக்கிய கிரேக்க சிலை போன்ற உதடுகள்..என்று அவளை மயக்க அத்தனை இருந்தும்…

 அந்த உதடுகளில் இருந்து வெளியே விழுந்த வார்த்தைகள், கண்களுக்குப் புலப்படாத அந்த வார்த்தைகள் அவளை உயிரோடு கொன்றது. 

ஆனாலும் செல்லும் அவனையும், ஒற்றை கை ஊன்று

கோலுடன் நடக்கும் அவன் கம்பீரத்தையும்,அவளின் மானங்கெட்ட மனது ரசிக்காமல் இல்லை…!

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page