காற்றினிலே வரும் கீதம் 13

 

​அவளை திரும்பி பார்த்த ரஞ்சனின் பார்வையில் மயூரிக்கு பயம் ஏற்பட்டாலும்…இந்த சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைத்தே தீர வேண்டும் என்று முடிவு செய்தவளாக,

 “ஹலோ மிஸ்டர் ரஞ்சன்! ஓடிப்போனவதான், எதுக்காக ஓடினேன்னு கூட தெரிஞ்சுக்காம ஈகோவுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்ட உங்களுக்கு… நான் காரணத்தை சொன்னால் கூட புரியாது. அவ்ளோ பெரிய சேடிஸ்ட் நீங்க. நீங்க…!என் அறிவை பற்றி பேசுறீங்க..?என்றாள் இளக்காரமாக  அவன் முன் விரல்களை ஆட்டி 

அவள் சொடுக்கிட்டு அழைத்ததற்கே  கோபத்தில் இருந்தவனுக்கு, அவனை ஒரு சாடிஸ்ட் என்று கூறியதில் அவன் பொறுமை பறந்தது.

​நோட்டை எடுத்தபடி இறங்கக் கதவில் கைவைத்தவளின் மறு கையை பற்றி, அவள் முதுகின் பின் முறுக்கி அவன் பக்கம் இழுத்தான். கைகள் பின்னால் அவன் கைகளில் சிறைப்பட்டிருக்க, ‘ஆ’ என அவன் மேலேயே சாய்ந்து விழுந்தாள் மயூரி. 

அவள் கைகளில் இருந்த புத்தகங்கள் காரினுள் சிதறின. அவன் கைகளில் இருந்த வலிமை, அவன் முறுக்கிப் பிடித்திருந்த வேகம் அவளுக்கு வலிக்கச் செய்தது. முகத்தை சுருக்கி அவள் கண்களில் லேசாக கண்ணீர் சுரந்தது.

​அவன் தோளின் அருகே இருந்த அவள் காதருகே குனிந்தவன், “என்னடி குளிர் விட்டு போச்சா? என்ன சொன்ன? சாடிஸ்டா? உன் மேல இருக்க வெறிக்கு உன்ன சும்மா விட்டு வச்சிருக்கேன் இல்ல, நீ என்னை சாடிஸ்ட்னு தான் சொல்லுவ” என்றவன், 

ஒரு கை அவளின் கையை பற்றி இருக்க, மறுக்கையால் எட்டி அவள்புறம் இருந்த கதவின் லாக்கை போட்டவன் அவளை அந்த கதவின் மேலேயே உதறி தள்ளி விட்டான்.

​அவள் கைகளை தேய்த்து புத்தகங்களை சேகரிக்கும் முன் அவனும் இறங்கி காரின் சாவியை ஆனந்திடம் வாங்கி லாக் செய்தான். ‘சக்’ சத்தத்தில் சுய உணர்வு வந்து சுதாரித்த மயூரி, கதவினை திறந்து பார்க்க அனைத்து கதவுகளுமே பூட்டி இருந்தது. தவிப்பாக வெளியே நின்றவனை ஜன்னல் அருகே வந்து கெஞ்சலாக பார்த்தாள் மயூரி. 

ஆனந்த் அதிர்ச்சியாக “சார்!” என்று கத்தியது அனைத்து ஜன்னல் கதவுகளும் பூட்டி இருந்ததால் மெலிதாக கேட்க, ஆனந்தை திரும்பி முறைத்த ரஞ்சன் அவனிடம் ஏதோ கட்டளையிட, அவன் அமைதியாக தலையை குனிந்து வேதனையுடன் மயூரியை பார்த்தான்.

​இவர்களின் சத்தம் கேட்டு வந்த மரகதம் ஆனந்தை கேட்க, அதற்குள் ரஞ்சன் கார் சாவியுடன் வீட்டினுள்  சென்று விட்டான். மாமியாரை கலங்கிய விழிகளுடன் பார்த்து இருந்தாள் மயூரி. மரகதம் ஆனந்த் கூறிய தகவலில் கலவரத்துடன் வீட்டினுள் ரஞ்சனை தேடி சென்றார். 

மயூரி ஒரு நெடிய மூச்சுடன் காரினுள் இருக்கையில் சாய்ந்தாள்.

​உள்ளே சென்ற ரஞ்சன் தன் அறையில் புகுந்திருந்தான். அவனைப் பின்தொடர்ந்த மரகதம் கதவை ஆவேசமாக தட்டினார். குளியலறைக்குள் செல்ல இருந்த ரஞ்சன் கதவை நிதானமாக திறந்தான். 

அவனை முறைத்தபடி நின்று இருந்தார் அவன் தாய். அவரை சலிப்பாக ‘என்ன’ என்பது போல் பார்க்க, 

“ரஞ்சன் நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல” என்றார் கோபமாக.

​”ப்ச்…இப்ப என்ன?” என்றான் எதுவும் நடவாதது போல.

 “மரியாதையா கார் சாவியை கொடு ரஞ்சன். மயூரி கார்ல இருந்து வெளியே வரணும்” என்றார்.

 “ஹ்ம்..மரியாதையாவா? அது உங்க மருமகளுக்கு கொஞ்சமாவது இருக்கா?” என்றான் இளக்காரமாக.

​”ரஞ்சன் இப்ப என்ன பிரச்சனை உனக்கு? யாருமே உன்னை எதிர்த்து பேச கூடாதா?” என்றார் மரகதம் ஆதங்கமாக. 

“பேசலாம், ஆனா அவ பேசக்கூடாது” என்றான் புருவங்களை சுருக்கி. 

“சரி நான் அவ கிட்ட சொல்லி புரிய வைக்கிறேன், நீ சாவியை குடு” என்றார் கைகளை ஏந்தி.

​”உங்க பேச்சை கேட்கிற ஆளா அவ?” என்றவன் கடித்த பற்களின் நடுவே, “திமிர் புடிச்சவ” என்றான்.

 மீண்டும் தாயைப் பார்த்து, “ஒரு நாள் காருக்குள்ளையே தூங்கட்டும் ஒண்னும் தப்பில்ல, அப்பதான் அவளுக்கு புத்தி வரும்” என்றவன் உள்ளே சென்று குளியலறையில்  நுழைந்து கொள்ள மரகதத்திற்கு மலைப்பாக இருந்தது. 

மேலும் பத்து நிமிடம் அங்கேயே காத்திருந்தவர்,கீழே சென்று ஸ்பேர் சாவி ஏதாவது இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருந்தார்.

​சிறிது நேரத்தில் டைனிங் அறையை நோக்கி சென்ற ரஞ்சன், தாய் ஹாலில் அலமாரிகளை உருட்டிக் கொண்டிருப்பதை கண்டு, 

“எனக்கு காபி குடுப்பீங்களா மாட்டீங்களா?” என்றான்.

 அவர் அவனை திரும்பி முறைத்து விட்டு மீண்டும் தேட,தோளை குலுக்கி விட்டு..

 “ஓகே சரளா க்கா கிட்ட கேட்டு வாங்கிக்கிறேன்” என்று விட்டு செல்ல, 

“சரளா வீட்டுக்கு போயாச்சு” என்றபடி தேடிக் கொண்டே இருந்தார் மரகதம். 

“சரி நானே காபி போட்டுக்குறேன்” என்றவன் சமையலறையில் நுழைந்தான்.

​பொறுமை இழந்த மரகதம் விறுவிறுவென்று சமையலறைக்குள் நுழைந்து, 

“ஏன் ரஞ்சன் இவ்வளவு கொடூரமா நடந்துக்கிற? என் மகன் ரஞ்சன் இப்படி இல்லையே” என்றார் லேசாக குரல் தழுதழுக்க. 

காபி பாட்டிலை எடுத்தவன் அதை அடுப்பின் அருகே வைத்துவிட்டு திரும்பி அவரை பார்த்தவன் கண்களை மூடினான். அவன் விரல்கள் பிடித்திருந்த ஊன்று கோலை இறுகப்பற்றி கண்களைத் திறந்தவன், 

“அந்த ரஞ்சன் செத்து ரெண்டு வருஷம் ஆச்சு” என்றவன் 

திரும்பி காபியை கலக்கியவன், முறைத்துக் கொண்டிருந்த தாயைத் தாண்டி ஹாலுக்கு சென்று சோபாவில் அமர்ந்தான்.

வாசலில் நின்று காரினுள் இருக்கும் மயூரியை பார்த்து கையை பிசைந்து கொண்டிருந்த ஆனந்தை சொடுக்கிட்டு அழைத்தான் ரஞ்சன் அவன் திரும்பி பார்க்க 

“ நீ இன்னும் வீட்டுக்கு போகல? கிளம்பு” என்றான். 

“சார்” என்று ஆனந்த் ஏதோ சொல்ல வந்தவன், ரஞ்சனின் பார்வையில் தலையை குனிந்து அமைதியாக தன் வண்டியை எடுத்துக்கொண்டு சென்றான். 

மரகதம் வேகமாக வெளியே செல்வதை காப்பியை குடித்தபடி பார்த்தான் ரஞ்சன்.

​காரின் அருகே சென்று மயூரியை கண்கள் பனிக்க பார்த்தார். அவளோ இருக்கையில் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்தாள். 

சட்டென ஏதோ தோன்ற மரகதம் வீட்டினுள் சென்று தன் அலைபேசியில் சரளாவை அழைத்து,

 “சரளா உனக்கு தெரிஞ்ச கார் மெக்கானிக் யாரையாவது கூட்டிட்டு வரியா?” என்று அவர் கேட்பதை முறைத்து பார்த்த ரஞ்சன்,

 “என் காருக்கு சின்ன கீறல் விழுந்தாலும் உங்க மருமகள் நல்ல நிலைமையில வீட்டுக்குள்ள வரமாட்டாள்” என்றான் கொடூரமாக தன் லேப்டாப்பை திறந்தபடி.

​அவன் குரலில் விக்கித்து அவனை திரும்பிப் பார்த்தவர் சரளாவிடம் ‘ஒன்றுமில்லை ‘என்று கூறி அலைபேசியை அணைத்தார். அவன் எதிரே சோபாவில் அமர்ந்தவர் கண்களில் கண்ணீருடன் அவனை கெஞ்சுதலாக பார்த்தார். 

“ரஞ்சன் ஏன் இப்படி நடந்துக்கிற? பாவம்டா அவ. சிட்டுக்குருவி மாதிரி பறக்கிறவளை உடைச்சிராத. ஒரு பொண்ணோட சாபத்தை வாங்காதே” என்றார்.

​”இவ சாபம் விட்டு இழக்கிறதுக்கு என்கிட்ட எதுவும் இல்ல” என்றான் அழுத்தமாக லேப்டாப்பில் பார்வையை வைத்தவாறு. 

மரகதத்தினால் எதுவும் பேச இயலவில்லை. அமைதியாக தோட்டத்திற்கு சென்று அமர்ந்தவர் காரை பார்த்தபடி கண்ணீர் வடித்தார். இருள் சூழ்ந்து நெடுநேரம் வரை ரஞ்சன் அவன் வேலையை பார்த்து இருக்க, மரகதம் உள்ளே சென்று மீண்டும் அவனிடம் கெஞ்சினார்.

​லேப்டாப்பில் வேலை பார்த்திருந்தவன் தன் பாக்கெட்டில் இருந்த கார் சாவியை டேபிளில் வைத்துவிட்டு கையை காட்ட, புன்னகையுடன் அதை மரகதம் எடுக்க வர, 

“அவளை அப்படியே அவங்க அப்பா வீட்டுக்கு போக சொல்லுங்க. இந்த வீட்டுக்குள்ள வர்றதா இருந்தா நான் சொல்றப்ப தான் வரணும்” என்றான் 

எந்த சலனமும் இல்லாமல் லேப்டாப்பை மூடியபடி

 சாவியை எடுக்க சென்றவர் கைகள் அப்படியே நிற்க,அவனை கெஞ்சுதலாக பார்த்தார்.

​”எனக்கு பசிக்குது. நைட் சாப்பாடு போடுவீங்களா இல்லை உங்க மருமகளுக்காக நானும் பட்டினி தானா?” என்றான். 

அவன் வார்த்தைகளால் கோபமுற்றவர் அவனை முறைத்து விட்டு, ‘நான் உனக்கு தாய்’ என்பதை நிரூபிக்கும் வண்ணம் மீண்டும் தோட்டத்தில் சென்று அமர்ந்தார். 

தோளை குலுக்கியவன் பிரிட்ஜில் இருந்த பிரட் துண்டுகளை உண்டு விட்டு வந்து டிவி முன் அமர்ந்தான். வெகு நேரம் கழித்து மணியை பார்க்க அது பதினொன்று என்று காட்ட, எழுந்து சென்று மரகதத்தை அழைத்தான்.அவர் அவனை முறைத்து விட்டு எதுவும் பேசாமல் கைகளை கட்டிக் கொண்டு அமர்ந்து இருந்தார்.

 “பனியில சாப்பிடாம உங்களுக்கு மயக்கம் வந்தா என்னால உங்களை தூக்கிட்டு கூட போக முடியாது. இல்ல உங்க மருமக தூக்கிட்டு போவான்னு நினைச்சிட்டு இருக்கீங்களா?” என்றான். 

அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, ஒரு நெடிய மூச்சு ஒன்றை வெளியேற்றியவன்.,பாக்கெட்டில் இருந்த சாவியை எடுத்து திறக்கும் பட்டனை அழுத்தினான்.

​அது திறந்து கொள்ளும் ஒலியுடன் திறக்க, மரகதம் விரைந்து சென்று மயூரி அமர்ந்திருந்த பக்கம் கதவை திறந்தார். அவரை கண்களை திறந்து பார்த்தவள் கண்கள் கலங்க வெளியே இறங்கினாள்.

 காரினுள் இருந்த புழுக்கத்தில் அவள் மொத்தமாக வியர்வையில் நனைந்து இருந்தாள். வெளியே வந்தவள் கால்கள் மரத்து லேசாக தள்ளாடி காரை பற்றி நின்றவள், மரகதத்தின் பின்னே நின்ற ரஞ்சனை முறைத்து பார்த்து இளக்காரமாக புன்னகைத்தவள், 

உள்ளே இருந்து தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு மரகதத்துடன் வீட்டின் உள்ளே சென்றாள்.

​மரகதம் அவளை குளித்து வரச் சொல்லிவிட்டு அவளுக்கு உணவு தயார் செய்ய சமையலறைக்குள் சென்றார். 

 அறையிலுள் நுழைந்த மயூரி மாற்று உடைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவசரமாக குளியலறைக்குள் சென்றாள். காலையில் இதே குளியல் அறையில் இருந்து வெளியே செல்லும் முன் நடந்த நிகழ்வை நினைத்தவளுக்கு விரக்தி புன்னகை ஒன்றே தோன்றியது. 

உடைகளை களைந்தவள் ஷவரின் கீழே நின்றாள். அவள் கண்களில் இருந்தும் கண்ணீர் ஓடியது. நீர் துளி எது கண்ணீர் துளி எது என்று அறியாத வண்ணம் அசையாமல் நின்றிருந்தாள். 

அழுது கரைந்தவள் வெகு நேரம் கழித்து உடலை தேய்த்து குளித்து கண்களை கசக்கி நீரினை கண்களில் அடித்து கழுவினாள். கண்ணீர் மொத்தத்தையும் வழித்து எறிய முயன்று ஒரு நெடிய மூச்சுடன் அந்த கண்ணீரை நிறுத்திக் கொண்டாள்.

​உடைகளை மாற்றி வெளியே வந்தவள் கட்டிலில் படுத்திருந்த ரஞ்சனை பார்த்தாள்.

 ஒற்றை கையை தலையில் வைத்து படுத்திருந்தவன், கதவு திறக்கும் சத்தத்தில் கையை விலக்கி பார்த்தான். இருவரின் பார்வையும் மோதிக் கொண்டன. அந்த பார்வையில் என்ன இருந்தது..? என்று இருவராலுமே கணிக்க முடியவில்லை. 

மயூரி அறையை விட்டு வெளியேறினாள். அப்பொழுதுதான் ரஞ்சன் நேரத்தைப் பார்த்தான். இரண்டு மணி நேரம் நீரினடியில் நின்றிருந்தாள் மயூரி, அதுவும் இந்த இரவு நேரத்தில்..

அவனுக்கு லேசாக குற்ற உணர்வு வரத்தான் செய்தது. ஆனாலும் ரஞ்சன் ஆயிற்றே, அவனை எதிர்த்து பேசியவளுக்கு இந்த தண்டனை போதாது என்று மனது லேசாக எள்ளி நகையாடியது.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page