ரஞ்சன் போனில் கூறியவற்றை கேட்ட மயூரியின் தந்தை முத்துவிற்கு மனம் லேசாகத் திகைக்கத் தான் செய்தது. பெண்ணைப் பெற்றவர் அல்லவா? அவனிடம் மயூரி வீட்டை விட்டு வெளியேறியதைச் சொல்லியிருக்கக் கூடாதோ என்று அச்சம் கொண்டார். அவர் மனதினுள் பயப் பந்து உருண்டது.
ஆனால் இது எதைப் பற்றியும் அறியாத மயூரியோ, அமைதியாகக் கிணற்றடியில் அமர்ந்திருந்தவள், மெல்ல எழுந்து சுற்றிலும் நடந்து கொண்டிருந்தாள். மணி என்ன இருக்கும் என்று எண்ணியபடி கைக்கடிகாரத்தைப் பார்க்க, அது ஒன்று என்று காட்டியது. வீட்டின் நிலையை எண்ணி மீண்டும் அமர்ந்தவள், யாரோ வரும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
பிரியாதான் பதட்டத்துடன் வந்து கொண்டிருந்தாள். அவளைக் கண்டவுடன் புன்னகையுடன்,
“வாடி, என்னடி… வேர்ல்ட் வார் ஒன்னு, ரெண்டு எல்லாம் முடிஞ்சிடுச்சா?” என்றாள் மயூரி.
“மண்ணாங்கட்டி லூசு, எனக்கு ரொம்பப் பயமா இருக்கு. நீ என்னன்னா இங்க ஜாலியாச் சிரிச்சுகிட்டு உட்கார்ந்திருக்க?” என்றாள் பிரியா அவள் தலையில் ‘நங்’ என கொட்டியபடி.
“ஸ்ஸ்….. வலிக்குது டி…எதுக்கு இப்படி கொட்டுற? என்ன நடந்துச்சுன்னு விளக்கமாச் சொல்லு. அதைக் கேட்கத்தானே இங்கு உட்கார்ந்திருக்கேன்?” என்றாள் மயூரி.கூற ஆரம்பித்தாள் பிரியா.
மயூரியிடம் பேசி முடித்து போனை வைத்துவிட்டு, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். ஒரு பத்து நிமிடம் கழித்து, மீண்டும் மயூரியின் வீட்டு வாயிலை எட்டிப் பார்க்க, மயூரியின் தந்தை வருவது தெரிந்தது. மெல்ல எழுந்து முன்வாயில் வராண்டாவில் அமர்ந்து, எழுதுவது போல் காதில் ப்ளூடூத்தை மாட்டிக்கொண்டு,மயூரியின் வீட்டு வாசலை நோட்டமிட்டபடி அமர்ந்திருந்தாள் பிரியா.
அடுத்த பத்து நிமிடத்தில் மகேந்திரன் வந்தான். அவன் பின்னாலேயே கருப்பு நிற ஸ்கோடா கார் ஒன்று வந்தது. அதிலிருந்து வாட்டசாட்டமாக ஒருவன் இறங்கி வேகமாக மகேந்திரனுடன் வீட்டிற்குள் சென்றான்.
பின் சற்று நேரம் கழித்து, மகேந்திரன் அவனுடன் வந்தவனுடன் பிரியாவின் வீடு நோக்கி வந்தான். அவர்கள்க் கண்டவுடன் பிரியா முழுவதுமாகத் தலையைக் குனிந்து எழுத ஆரம்பித்தாள். அவள் வீட்டு வாயிலுக்கு வந்த மகேந்திரன்,
“ஏய், பிரியா!” என்று அதட்டினான். அவன் குரல் கேட்டு, அப்பொழுதுதான் திரும்புவது போலப் ப்ளூடூத்தைக் கழட்டிவிட்டு எழுந்து வாசலருகே வந்தாள்.
அவன் குரல் கேட்டு அவள் தாயும் வெளியே வர,
“மயூரி எங்கன்னு உனக்குக் கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கும். மரியாதையாச் சொல்லிரு!” என்றான் மிரட்டலாக.
“ஹலோ, என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது? உங்கத் தங்கச்சியை நான் நேத்துதான் பார்த்தேன். நீங்க பண்ற கல்யாணம் பிடிக்காம அவ போனா, அதுக்கு நான் காரணமா? போய்த் தங்கச்சியைத் தேடுங்க, சார்!” என்றாள் தெனாவட்டாக.
“ஏய், என்ன சொன்ன?” என்று அவன் ஒரு எட்டு முன் வைக்கும் முன்,
அவனோடு வந்திருந்த புதியவன் ப்ளூடூத்தில் ‘எஸ் சார்’ என்றுவிட்டு, “மிஸ்டர் மகேந்திரன், வாங்கப் போகலாம். உங்கத் தங்கச்சி எங்க இருக்காங்கன்னு கண்டுபிடிச்சாச்சு!” என்று கூறி அவன் கைப்பற்றி இழுத்தான்.
அவன் கூறியதில் மகேந்திரன் திரும்பி, “அப்படியா?” என்பதுபோல் பார்க்க, பிரியாவிற்கு ‘போச்சு, சோனமுத்தா, மாட்டிக்கிட்டியா?’ என்று திகில் அடைய…
ஆனால், அந்தப் புதியவன் அவளைப் பார்ப்பதைக் கவனித்தவள், சட்டென முகத்தை மாற்றிக்கொண்டு,
“போங்க, உங்கத் தங்கச்சியைக் கண்டுபிடிச்சுட்டாங்க!” என்றாள் நக்கலாக.
மகேந்திரன் அவளை முறைத்துவிட்டுப் புதியவனுடன் சென்று தன் வீட்டை அடைந்தவன், மீண்டும் வாயிலில் நின்று தன் தாய், தந்தையிடம் பேசிவிட்டுப் புதியவனுடன் காரில் அவன் மட்டும் ஏறிச் சென்றான்.
அவன் சென்றதைக் கண்ட பிரியா உள்ளே வந்தாள், பத்து நிமிடம் கழித்து ஜெராக்ஸ் எடுக்கச் செல்வதாகக் கூறி, கோவிலுக்கு வந்ததாகக் கூறி முடித்தாள் பிரியா.
“ஏய், அந்தத் தடியன் ஏதோ டிடெக்டிவ் மாதிரி தெரியுது. அவன் உன்னைக் கண்டுபிடிச்சாச்சுன்னு சொன்னதும் பதறிப் போயிட்டேன் தெரியுமா? எனக்கு என்னமோ நாம மாட்டிடோம்னு தோணுது!” என்றாள் பதட்டத்துடன்.
“அடப் போடி! எங்க வீட்ல இருக்கவங்களுக்கு அவ்வளவுல்லாம் புத்தி இல்ல. நான் இவ்வளவு தூரம் எல்லாம் வரத் தேவையில்லை. எங்க வீட்டு மொட்டை மாடியில தண்ணித் தொட்டி கடியில ஒளிஞ்சிகிட்டா கூட ஒரு வாரம் கழிச்சுதான் கண்டுபிடிப்பாங்க!” என்றாள் கேலியாக.
“அப்ப அங்கேயே ஒளிஞ்சு தொலைக்க வேண்டியதுதானே? என்னையும் ஏன் உன் பிரச்சனையில கோர்த்து விடுற? அதுலயும் அந்தத் தடியனைப் பார்த்தா, யப்பா!” என்று உடல் சிலிர்த்தாள்.
“அங்கே ஒளிஞ்சா சாப்பாட்டுக்கு என்ன செய்ய? அப்புறம் வேற எங்கே.. என்னன்னு முடிவு எப்படிச் செயல்படுத்துவது? அதான் வந்துட்டேன்!” என்றாள் மயூரி.
“சரி, இப்ப மட்டும் என்ன செய்யப் போற? கோயில்லயே கூட்டிப் பெருக்கித் திருப்பணி செய்யப் போறியா?” என்றாள் பிரியா கேலியாக.
“இல்லடி, இங்க ஒரு பிளஸ் பாயிண்ட் முன் கதவை தான் பூட்டுவாங்க, பேக் கேட்டைப் பூட்ட மாட்டாங்க. அதனால இங்கேயே இன்னைக்குச் சாயந்திரம் இருட்டுற வரைக்கும் இருந்துட்டு, சாயந்திரம்,இந்த மகளிருக்கான விடுதிக்குக் போய் செட்டில் ஆகிட்டு, அங்கிருந்து ரெண்டு மாசம் படிப்பையும், வேலை, டான்ஸ் கிளாஸையும் கண்டினியூ பண்ணனும்னு இருக்கேன்!” என்றாள் தான் குறித்த மகளிர் விடுதி முகவரியைக் காட்டி.
“ஓகே, ஆனா அதுவரைக்கும் மதியம் சாப்பிடணும், பாத்ரூம் போகணும். காலையில சாப்பிட்டியா?” என்று கேட்டாள் பிரியா.
“இந்தத் தவிப்புல எனக்குப் பசிக்கல பிரியா. மதியம் கோயில்ல பிரசாதத்தைச் சாப்பிட்டேன். சாயந்தரம் இருட்டானதுக்கு அப்புறம் மத்ததைப் பார்த்துக்கலாம்னு இருக்கேன். எனக்கு இந்த மகளிர் விடுதிக்குப்போய்ச் சேஃபா சேரணும், அதான் இப்ப முக்கியம்,” என்றாள் மயூரி தன் நெற்றியைத் தேய்த்தபடி.
அதைக் கேட்ட பிரியா, “அதை இப்பவே போய்ச் சேர்ந்து தொலைக்க வேண்டியதுதானே?” என்றாள்.
அதற்கு மயூரி, “இல்லடி, இப்ப நான் வெளியே போனேன்னா கண்டிப்பா மாட்டிக்குவேன். அதான் பரவால்ல, நீ போ. வீட்டு நிலைமை தெரியாதுன்னுதான் உன்னை வரச் சொன்னேன். ஃபோனையும் வீட்ல வச்சுட்டு வந்துட்டேன்,” என்றாள்.
பிரியாவிற்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. “ஒரு நிமிஷம் இரு,” என்று கூறிவிட்டு வெளியே சென்ற பிரியா,
அங்கிருந்த கடையில் கொஞ்சம் பிஸ்கட்களை வாங்கினாள். மீண்டும் கோயிலுக்குள் நுழையப் போனவளுக்கு, யாரோ தன்னைத் பின்தொடர்வது போலத் தோன்றியது. சட்டெனத் திரும்பிப் பார்த்தாள்; தெரிந்த முகம் யாரும் இல்லை. மீண்டும் கோயிலுக்குள் நுழையச் செருப்பைக் கழற்றும்போது, ஏதோ தோன்ற மீண்டும் திரும்பிப் பார்த்தாள்.
சற்றுத் தொலைவில், சாலையின் மறுபுறம் ஒரு கருப்பு நிற ஸ்கோடா கார் நின்றது. அதைக் கண்டதும் பிரியாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. மயூரியின் வீட்டு வாசலில் பார்த்த அதே கார்! தன்னை பின் தொடர்கிறார்கள் என்பது அவளுக்குப் புரிந்தது.
”ஐயையோ மாட்டிட்டோமா? என்ன செய்யறது யோசி பிரியா யோசி,” என்று செருப்புப் போடும் இடத்திலேயே நின்றபடி யோசித்தாள்.
அப்போது மதியப் பூஜைக்கு வேதம் ஓதும் சிறுவர்கள் ஒரு பத்து பேர் கோயிலுக்குள் சென்றனர். அவர்களில் ஒரு சிறுவனை அழைத்த பிரியா, கிணற்றடியில் இருக்கும் மயூரியிடம் பிஸ்கட்டை கொடுக்கச் சொன்னாள்.
“அந்த அக்காக்கிட்ட ‘மகேந்திரன்’ மட்டும் சொல்லிரு தம்பி,” என்று கூறிவிட்டு, கார் தன்னைத்தான் பின்தொடர்கிறது என்பதை உறுதி செய்தபடி நிம்மதிப் பெருமூச்சுடன் வீடு நோக்கி நடந்தாள்.
பிரியா அறியாத ஒன்று, இவர்களின் திட்டத்தைத் தகர்க்க ‘ரஞ்சன்’ என்னும் ஒரு வில்லன் அங்கு காத்திருந்ததுதான்.
அந்தச் சிறுவன் சென்று பிஸ்கட்டைக் கொடுத்துவிட்டு ‘மகேந்திரன்’ என்று சொன்னான். மயூரிக்கு விஷயம் புரிந்துவிட்டது. அவள் கிணற்றடியிலேயே மறைந்து அமர்ந்து கொண்டாள். பிஸ்கட்டையும் பிரசாதத்தையும் சாப்பிட்டவள், பையைத் தலைக்கு வைத்து அங்கேயே உறங்கிப் போனாள்.
மாலை ஐந்து மணிக்குக் கோயில் மணிச் சத்தம் கேட்டு மயூரி எழுந்தாள். கிணற்றடியில் இருந்த குழாயில் முகம் கழுவிவிட்டு, விடுதிக்குச் செல்லத் தயாரானாள்.
உள்ளே சன்னதிக்கு சென்று இறைவனை வணங்கிவிட்டுப் பின்புற வாசல் வழியாக வெளியே வந்தாள்.
அவள் சாலையை அடைந்தபோது, அதே கருப்பு நிற ஸ்கோடா கார் அவள் முன் வந்து நின்றது. கார் ஓட்டுநரை முறைத்தபடி அவள் நகர முயன்றபோது, கதவைத் திறந்து கொண்டு மகேந்திரன் இறங்கினான்.இறங்கிய மகேந்திரன் கண்கள் சிவக்க,
“மயூரி, ஒழுங்கா எந்தப் பிரச்சினையும் பண்ணாம வண்டில ஏறு,” என்று கூறினான் மகேந்திரன்.
மயூரிக்கு அப்பொழுதுதான் கண்ணீர் துளித்தது.தான் ஒரு நாள் முழுக்க உணவை மற்ற தேவைகளை ஒதுக்கி தன் இலக்குக்காக தான் போராடுவதாக எண்ணி காத்திருந்தது அனைத்தும் ஒரு நிமிடத்தில் தோல்வியை சந்தித்தது, மிகவும் அவளுக்கு வலியை தந்தது.
கண்ணீருடன் தமயனை இறைஞ்சுதலோடு பார்க்க, அவனோ உக்கிரமாகப் பார்த்தான்.
“மயூரி, ஒழுங்கா வண்டில ஏறு… என்னை மிருகமாக்கிடாதே!” என்றான் மீண்டும்.
எதையும் செய்ய இயலாத கையாலாகாத மனதுடன் அமைதியாகக் காரில் ஏறி அமர்ந்தாள்.
அதன் பின் மயூரியின் மனது எதையும் உணரவில்லை. தமயனுடன் வீட்டிற்குக் காரில் ஏறி வந்ததையோ, தந்தை எந்த ஒரு வார்த்தையும் இன்றி அவளை உருத்துப் பார்த்ததையோ, தாய் அவளின் சோர்ந்த நிலையைக் கண்டு பதற்றத்துடன் அருகில் வந்ததையோ அவள் கவனிக்கவில்லை.
உடன் வந்த புதியவன் அவன் பாஸிற்கு போன் செய்து கூறியதையோ, பின் அவள் தந்தை அவர் மாப்பிள்ளையுடன் பேசியதையோ கூட அவள் உணரவில்லை.
ஏன், அவளின் சோர்வைக் கண்டு மாலினி அவளுக்காக ஊட்டி விட்ட உணவைக் கூட எந்த உணர்வும் இன்றியே விழுங்கினாள். பின் அவள் அறைக்குச் சென்று கட்டிலில் விழுந்தவள், விம்மி அழுத் துவங்கினாள்.
அழுதபடி இருந்தவள் எப்படி உறங்கினாள் என்பது அவளுக்கே தெரியவில்லை.
காலை நன்கு விடிந்த பின், தாய் வந்து மணி எட்டு என்று சொல்லி, அவளைக் காண மாப்பிள்ளையின் தாயார் ஒன்பது மணிக்கு வருவதாகக் கூறி, எழுந்து குளிக்கச் சொன்னபோதுதான் எழுந்தாள்.
அதன் பின்னும் ஒரு பதுமை போலவே அவள் நடந்து கொண்டாள். அவள் நடந்து கொண்ட விதம் அவள் தாயை மட்டுமல்லாமல், தந்தையையும் கூடப் பாதிக்கவே செய்தது.
ரஞ்சனின் அதிரடி முடிவில் அவர் சற்று பதறித்தான் போயிருந்தார். தான் அவசரப்பட்டு விட்டதாகக் கூட அவருக்குத் தோன்றியது. மயூரி வீட்டிலிருந்து சென்றுவிட்டாள் என்று அறிந்ததும் அவர் கோபப்பட்டார் தான்.
ஆனால், அவள் வேறு யாரையோ விரும்புகிறாள், அவனுடன் ஓடிவிட்டாள் என்றே அவர் எண்ணியிருந்தார். ஆனால், ரஞ்சனின் முடிவும், மயூரி எங்கும் யாரையும் காணாமல் கோயிலுக்குள் சரண் புகுந்திருந்ததும் அறிந்தபோது, தான் தவறு செய்துவிட்டோமோ என்று அஞ்சத் துவங்கினார்.
அதிலும் ரஞ்சன் விஷயத்தைக் கேட்டதும், அவள் எதனால் எங்கு சென்றாள் என்று அறியும் முன்னரே, தான் நான்கு மணி நேரத்தில் அவளைக் கண்டுபிடிப்பதாகவும் கூறி, அதை நிறைவேற்றி, இரண்டு நாளில் திருமணமும் செய்ய வேண்டும் என்று கூறிய போது…
அவனுக்கு இருந்த பிடிவாத குணமும் உக்கிரமும் மயூரியின் தந்தைக்கு லேசாகப் பயம் காட்டியது.
மகளின் வாழ்வு தன்னாலேயே அழிந்துவிடக் கூடாது என்று அவர் எண்ணினாலும், விதி தன் வேலையைச் சிறப்பாகவே செய்தது.
