காற்றினிலே வரும் கீதம் 7

 

​அனைவரும் திகைத்து பார்க்க பிரியாவோ, 

“மயூரி, உன் அண்ணன் சொல்றதுல என்ன தப்பு? நீ கிளம்பு. நீ நடந்துகுரத  பார்த்தா ஏதோ விபரீத முடிவு எடுத்த மாதிரி தெரியுது, எனக்கு பயமா இருக்குடி” என்றாள் லேசான தவிப்புடன் 

மாலினியும் முத்துவும் பிரியாவின் பேச்சில் அதிர்ந்து…மயூரியைப் பார்க்க, அவள் ஸ்திரமாக, 

“ஆமான்டி, நான் முடிவெடுத்துட்டேன். நான் அவனைத்தான்… அந்த ரஞ்சனைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்” என்று உறுதியாகக் கூறினாள்.

​மகேந்திரன் கோபமாக, “அறிவுகெட்டவளே! இந்த அவசர புத்தியினால்தான் நீ இப்படி நிக்கிற. அன்னைக்கே கல்யாணம்னு சொன்னப்ப நீ ஓடிப் போகாமல் இருந்திருந்தால், அந்த நொண்டி இவ்வளவு அவசரமா கல்யாணத்தை நடத்தச் சொல்லி இருக்க மாட்டான். இப்பவும் அவசர புத்தியினால் உன் வாழ்க்கையை அழிச்சுக்காத” என்றான்.

 அதற்கு மயூரி, “அண்ணா! இன்னொரு தடவை அவரை நொண்டின்னு சொன்னா அப்புறம் அவ்வளவுதான், உன் மரியாதை கெட்டுடும். அது என்ன ஒருத்தங்க ஊனத்தை வச்சுப் பேசுறது? இதே ரஞ்சன்.. என்னை அவசர கல்யாணம் பண்ணனும்னு சொன்னப்ப எல்லாரும் எனக்கு எதிரா தான இருந்தீங்க. என் விருப்பம் என்னன்னு கூட கேட்காமல் கல்யாணத்தை முடிவு பண்ணீங்க இல்ல? இன்னைக்கு அவர் ஊனம்னு தெரிஞ்சதும் என் மேல எல்லாருக்கும் அக்கறை வருதா? போதும் உங்க அக்கறை, என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன். இங்கே அவர் தலையில என்னைக் கட்டத்தானே நல்லா நீட்டா டிரஸ் பண்ணிக்கிட்டு வந்தீங்க? வாங்க போலாம்” என்று வேகமாகத் திரும்பி கல்யாணம் நடக்கும் சன்னதியை நோக்கி நடந்தாள்.

​சற்று தூரத்தில் நின்றிருந்த மரகதம் மற்றும் ரஞ்சனின் பி.ஏ ஆனந்த் இருவரும் அவளை மெச்சும் புன்னகையுடன் பார்த்தனர். 

ஆனந்த், “சாரி மேடம், நீங்க பாஸைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு தான் ஓடிப் போனீங்கன்னு நினைச்சேன். ஆனா இன்னைக்கு புரியுது மேடம் உங்களைப் பத்தி. நீங்க  கவலைப்படாதீங்க, எங்க பாஸ் ரொம்ப நல்லவர்” என்றான்.

 மரகதம் அவள் அருகே வந்து, அவள் தோளை வாஞ்சையுடன் பற்றி, “என் பையன் கொடுத்து வச்சவன்மா  வா..” என்று அவள் கையைப் பற்றி அழைத்துச் சென்றார்.

​கல்யாணம் நடக்கும் சன்னதியில் ரஞ்சன் நின்று இருக்க, அவன் அருகில் சென்று நின்றாள் மயூரி. ஐயர் மந்திரங்களை உச்சாடனம் செய்ய, 

அடுத்த ஐந்தாவது நிமிடம் ஒரு பொன் தாலி கோர்க்கப்பட்ட சங்கிலியை மயூரியின் கழுத்தில் தன் வலது கையினால் அணிவித்தான் ரஞ்சன். 

தாலியை அணிவித்தவன் கண்களை நேராக ஊடுருவி நோக்கினாள் மயூரி. அவன் ஒற்றை புருவத்தை தூக்கியபடி,இதழ்களில் ஒரு வெற்றி களிப்புடன் ஏளனப் புன்னகை செய்தான்.

 அடுத்ததாக மாலை மாற்றிக் கொண்டனர். ரஞ்சன் தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்தே நின்றான். அவன் உயரத்திற்கு அவளால் எட்ட முடியவில்லை; அவன் ஏளனப் புன்னகையுடன் லேசாகக் குனிந்து தன் கழுத்தில் மாலையை ஏந்திக் கொண்டான். 

மயூரி அவனின் ஊனத்தைக் கண்டு ஏற்றுக் கொண்டாள், ஆனால் அவனோ அவள் தன்னை வெறுப்பதாகத் தான் எண்ணிக் கொண்டான். இப்படி இரு துருவங்களாக இருக்கும் இருவரும் இணைவது சாத்தியமா?

​திருமணம் முடிந்ததும் மயூரி முதலில் மரகதம் காலில் விழுந்து ஆசி பெற்றாள். அவர் அவளை முத்தமிட்டு, “நல்லா இரு கண்ணம்மா” என்று வாழ்த்தி, “அப்பா அம்மா காலில் விழுந்து ஆசி வாங்கிக்க மா” என்றார். 

அவள் தன் தந்தை அருகே செல்ல, அவர் தயக்கத்துடன், “நல்லாயிருமா. அப்பாவைத் தப்பா நினைக்காதம்மா, உனக்கு நல்லதுன்னு நினைச்சு தான் எல்லாமே செஞ்சேன்” என்று கூறியபடி ரஞ்சனைப் பார்த்தார். 

ரஞ்சன் ஒரு அனல் பார்வை பார்த்தான். அவன் பார்வையில் ஏதோ உணர்ந்த மயூரி, மனதை தைரியப்படுத்திக் கொண்டாள்.

​அனைவரும் கோவிலைச் சுற்றி வர, ரஞ்சன் ஆனந்தின் உதவியுடன் மெதுவாக நடந்தான். மயூரி மட்டும் அவன் பின்னோடு நடக்க, ரஞ்சன் சற்று நின்று மயூரியை திரும்பிப் பார்த்தவன் ஆனந்திடம், 

“எனக்காக யாரும் மெதுவா வர வேண்டாம். அவங்க கால் ஓடிப் போற அளவுக்கு நல்லாத்தானே இருக்கு? அவங்க முன்னாடி போகலாம். அதான் என்னை விட்டு எங்கேயும் போக முடியாதபடி அவ கழுத்துல  கட்டிட்டேனே! நான் ஒண்னும் கோவிச்சுக்க மாட்டேன், பயப்படாம முன்ன போகச் சொல்லு ஆனந்த்” என்றான் ஏளனமாக.

​மயூரி கோபத்துடன், ‘அட..டேய்! வளர்ந்து கெட்டவனே, உன்னை என்ன செய்றேன்னு பாரு’என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, 

“சச்.. ச்ச! நான் ஒண்னும் அவருக்காக வரல. அப்படி ஒரு ஆசை வேற இருக்கா..? மிஸ்டர் ஆனந்த், ச்சை நல்லாவே இல்ல உங்கள மிஸ்டர்ன்னு கூப்பிடுறது… அண்ணானு கூப்பிடுறேன்.. அண்ணா…உங்க பாஸ்கிட்ட சொல்லிருங்க, நான் ஒண்னும் அவருக்காக மெதுவா வரல. இங்கே இருக்கிற இயற்கையையும் சிற்பத்தையும் பாத்துட்டு தான் ஸ்லோவா வரேன். ஆனாலும் இவ்வளவு பேராசை கூடாது உங்க பாஸ்க்கு…” என்றாள் நக்கலாக. 

ரஞ்சன் கேலியாக, “எது? இந்த நாலு சுவரும்,அந்த ஒரு அரச மரமும் இவங்களுக்கு இயற்கை காட்சியும் சிற்பமுமா?” என்றான். 

லேசாக ஜெர்க் ஆன மயூரி விடாமல், “கலைக்கண்ணோடு பார்த்தால் இந்த நாலு சுவரும் சுவாரஸ்யமாக தான் இருக்கும். நெடுநெடுன்னு வளர்ந்தா மட்டும் பத்தாது, நேச்சரை ரசிக்கத் தெரியணும். அட மயூரி! ரைமிங் பிண்றியே…!நெடுநெடு நேச்சர்… வா வா” என்று தன் தோளைத் தட்டிக் கொண்டாள்.

​அதைக் கண்ட ஆனந்த் புன்னகைக்க, அவனை முறைத்த ரஞ்சன், “போதும் கிளம்பலாம்,” என்று பற்களை கடித்தபடி கூறிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான். 

அவனை வெறுப்பேற்றிய திருப்தியுடன் சந்தோஷமாக பின் நடந்தாள் மயூரி. அனைவரும் கோவிலை சுற்றி பிரகாரத்திற்கு வந்து அமர, ரஞ்சன் ஒரு திண்ணையில் அமர்ந்தான். அவன் அருகில் நின்றாள் மயூரி.

​அப்பொழுது திருமணத்தை நடத்திய ஐயர் பிரசாதத்தை அனைவருக்கும் கொடுக்க, ஒரு தொண்ணையை மயூரி ரஞ்சனிடம் கொடுக்க, ஒரு ஏளன புன்னகையுடன்,

 “எனக்கு ஸ்வீட் பிடிக்காது,” என்றான் நக்கலாக, “இந்த புருஷன் பொண்டாட்டி சென்டிமென்ட் எல்லாம் என்கிட்ட வேண்டாம்,” என்றான் சற்று கடுமையாக.

​மயூரி களுக்கென சிரித்தாள். “ஆனந்த் அண்ணா, ஸ்கூல்ல சின்ன பசங்க… ஷேரிங் டே கொண்டாடுவாங்க. அப்போ ஷேர் பண்றவங்க எல்லாம் புருஷன் பொண்டாட்டியா? அப்படின்னா.. கோ-எட் ஓகே… ஆனா பாய்ஸ் ஸ்கூல், கேர்ள்ஸ் ஸ்கூல்ல… எப்படி? நம்ம கவர்மெண்ட்ல அதெல்லாம் தப்பாச்சே… என்ன செய்யலாம்?” என்று கேலியாக கேட்டவள்,அவனைப் பார்த்தபடி பொங்கலை உண்டாள்.

​ஆனந்த் சிரிப்பை அடக்க முடியாமல் விலகி சென்று விட, மரகதம் சிரித்தபடி, “வாயாடி!” என்றார்.

 ரஞ்சன் தான் கோபமாக அமைதி காக்க வேண்டியிருந்தது. ஆனால் அவன் தோல்வியை ஏற்றுக் கொள்பவன் அல்ல. அவன் மனதில் மயூரியின் மீதான ‘கிரைம் லிஸ்ட்’ ஏறிக்கொண்டே சென்றதை பாவம் அவள் அறியவில்லை. 

அவன் முறைத்தபடி இருக்க, அவள் சிரித்தபடி உண்டாள்.

​ரஞ்சன் கூறினான், “அம்மா, வீட்டுக்கு கிளம்பலாம்,” என்றபடி எழுந்தான்.

 ஆனந்த் அருகே வந்து அவனுக்கு உதவ, அவனது உறுதியான அனல் பார்வையை கண்ட மரகதம் ஏதோ நினைத்து அஞ்சினார்.

​அவர்கள் அருகே வந்து, “கிளம்பலாமா? உங்க அப்பா அம்மா கூட வராங்கள்ள?” என்றார் மரகதம்

​”தெரியல அத்தை,” என்றபடி மயூரி அவர்களைப் பார்க்க, 

மகேந்திரன் கோபமாக கோவிலை விட்டு சென்றான். அவள் தந்தையும்,தாயும்,பிரியாவும் அவர்கள் அருகே வந்தனர்.

 அவள் தந்தை முத்து கூறினார், “இல்ல சம்மந்தி, இப்ப இருக்க மனநிலையில நாங்க அங்க வரல. மனசுக்கு தான் கஷ்டமாகும்,” என்றவர்.

 மயூரியின் தலையை தடவி, “சம்பந்தி, என் பொண்ண பத்திரமா பாத்துக்கங்க,” என்றவர் சட்டென்று திரும்பி நடந்தார்.

​தாய் மாலினியும் மயூரியின் தலையை வாஞ்சையுடன் தடவி விட்டு, கன்னங்கள் தொட்டு, கண்கள் கலங்க விடைபெற்றார். பிரியா அவள் கைகளைப் பற்றி,

 “எப்படியோ ஹாப்பி மேரேஜ் லைப் மய்யூ!” என்றாள். மயூரி முறைக்க, பிரியா சூசகமான பார்வையுடன், 

“இன்னும் ரெண்டு மாசம் காலேஜ் இருக்கு ஆன்ட்டி, மயூரி வருவாளா?” என்று கேட்டாள். 

 “கண்டிப்பா.. நான் அதைப் பார்த்துக்கிறேன்” என்றார் மரகதம். 

பிரியா பூடகமான பார்வையை மயூரியிடம் செலுத்தி விட்டு புன்னகையுடன் கிளம்பினாள். 

காரில் மயூரி நடுவில் அமர ஒருபுறம் மரகதமும், மறுபுறம் ரஞ்சனும் ஏறிக்கொண்டனர். ஆனந்த் ரஞ்சனுக்கு உதவி விட்டு முன் சீட்டில் அமர்ந்து கொண்டான்.

ரஞ்சனின் தோளும் மயூரியின் தோளும் உரசி கொண்டது. மயூரிக்கு சங்கடமாக இருந்தது. அவள் ஓர் வயதிற்கு மேல் தந்தை,தமையனின் அருகே கூட அமர்ந்ததில்லை இவ்வளவு நெருக்கமாக ஒரு வேற்று ஆடவனுடன் அவள் அமர்ந்ததே இல்லை.

 ரேடியோ ஸ்டேஷனில் கூட இவ்வளவு நெருக்கமாக எந்த ஒரு ஆடவனையும் அவள் அனுமதித்ததில்லை.இப்பொழுது கொஞ்சம் தயக்கமாக இருக்க அவள் மரகதத்தினை ஒட்டி அமர்ந்தாள் அவளின் விலகலை கண்ட ரஞ்சன் நக்கலாக,

 “அவ்வளவு வெறுப்பா இருந்தா.. உன் அண்ணன் சொன்ன மாதிரி கல்யாணத்தை நிறுத்திருக்க வேண்டியதுதானே? ஓடிப் போறது உனக்கு ஒண்னும் புதுசு இல்லையே!” என்றான்.

 மயூரிக்கு சுருக்கென மனது வலித்தாலும் அதை வெளிக்காட்டி அவனுக்கு வெற்றிகளிப்பை அளிக்கக்கூடாது, என்று மனதில் உறுதி கொண்டாள். அதனால் மரகதத்தை திரும்பிப் பார்த்த மயூரி, 

“அத்தை,உங்க பையன் பாவமே, அநியாயத்துக்கு வளர்ந்து காலு கையச் சுருட்டி உட்கார கஷ்டப்படுறாரேன்னு தள்ளி உக்காந்தா, அவருக்கு இருக்கிற வாயைப் பாத்தீங்களா? அதான் அத்தை..நல்லதுக்கு காலமில்லை. நீங்க என்ன சொல்றீங்க ஆனந்த் அண்ணா?” என்றாள். 

ஆனந்த் தயக்கத்துடன், ” அது.. அது.. வந்து… நோ கமெண்ட்ஸ் மேடம்” என்றான்.

 “ப்ச்… நீங்க என்ன அண்ணா…மேடம் மேடம்னு கிட்டு, என்னை மயூரின்னு கூப்பிடுங்க, நான் உங்க பாஸ் மாதிரி கெத்து காட்ட மாட்டேன்” என்றாள் ரஞ்சனை நக்கலாக பார்த்து 

மரகதமும் “ ஆமாண்டா… ஆனந்த்! அதான் அவளே சொல்றா இல்ல.. நீயும் எனக்கு ஒரு பிள்ளை மாதிரி தானே..!“ என்று கூறினார்.

 ஆனந்த் குரல் தழுதழுக்க “சரிங்கம்மா..தேங்க்ஸ் மயூரி..!” என்றான் கண்கள் கலங்க 

ரஞ்சன் மூவரையும் பார்த்து வெறுப்புடன் வெளியே திரும்பிக்கொண்டான். அவனுக்கு அவள் மேலும் மேலும் வெறுப்பை ஏற்றிக் கொண்டிருந்தாள் மயூரி.

 எப்பொழுதும் அவன் வார்த்தையே கடைசியாக இருக்கும். இதுவே முதல்முறை அவன் அமைதியாக இருக்க வேண்டிய நிலை.. 

 ரஞ்சன் மயூரியின் மீது கடும் கோபத்தில் இருந்தான். அவளை எப்படி வலிக்கச் செய்வது என்று அவன் மனம் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது.

 

❤️ Loading reactions...
1 Comment
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page