காற்றினிலே வரும் கீதம் 9

 

​காலையில் கண்களை விழித்த மயூரி சற்று திகைத்து, மீண்டும் நிதானத்திற்கு வந்தாள். சுற்றிலும் பார்க்க அறையில் ரஞ்சன் இல்லை. மெல்ல எழுந்து சோம்பல் முறித்தாள். எழுந்து சென்று தன் காலைக் கடன்களை முடித்து வெளியே வந்தவள் நேரத்தைப் பார்க்க, அது ஆறு முப்பது என்றது. 

இப்பொழுதே கீழே செல்ல மனமில்லாமல் பால்கனி கதவைத் திறந்து வெளியே சென்று, அந்த காலைத் தென்றலைக் கைகளை விரித்து முழுதாக உள்ளே இழுத்து, தன் சுவாசக் கூட்டினுள் நிரப்பிக் கொண்டாள்.

​குனிந்து கீழே இருந்த தோட்டத்தைக் காண, அங்கே வீட்டின் பின்புறத்தை நெருங்கி ஒரு சிறிய மரத்தடி போல் இருந்த இடத்தில், ரஞ்சன் ஆனந்தின் உதவியுடன் ஊன்றுகோல் இல்லாமல் உடற்பயிற்சிகளைச் செய்து கொண்டிருந்தான். 

அதைக் கண்டவளுக்கு ஆச்சரியம். உடல்நிலை நன்றாக இருப்பவர்களே உடற்பயிற்சி செய்வதில்லை; ஆனால் இவன்..!

அவன் தன் கால்களுக்குத் தனியே சில பயிற்சிகளைச் செய்தபோது, அவனின் வலி அவன் முகத்தில் பிரதிபலித்தது. இவ்வளவு கடினமானதைச் செய்வதன் காரணம் அறிய எண்ணினாள் மயூரி மாமியாரிடம் கேட்க வேண்டும் என்று மனதில் குறித்துக்கொண்டாள்.

​அடுத்து அவன் செய்ததைக் கண்டு அவள் திகைத்தே விட்டாள். தன் இரு கைகளிலும் தன் முழு உடலின் எடையைத் தாங்கி தலைகீழாக நின்றான். அவளை வாயைப் பிளக்க வைத்தான். மயூரி இவை அனைத்தையும் மாடியிலிருந்தே கண்டவள், அவன் நிற்பதை எண்ணிக் கொண்டிருந்தாள். “மொத்தமாக இருநூறு எண்ணிக்கை… அப்பா! அந்த கரங்களில் எவ்வளவு பலம்!” என்று எண்ணினாள். 

மீண்டும் கீழே இறங்கியவன்,ஊன்றுக்கோல் இல்லாமல் நடந்து கொண்டிருந்தான் சற்று விந்தி விந்தி. இதனைக் கண்டு மயூரிக்கு ஆச்சரியமே. “இவன் கூடிய சீக்கிரம் நேராக நடக்க இயலுமா?” என்று மேலும் வியந்தாள்.

​அவனுக்கு ஏன் இந்த நிலைமை என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனதில் பேரலையாகத் தோன்றியது. எப்படியாவது மாமியாரிடம் விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாள். விறுவிறுவென கீழே அவரைத் தேடிச் சென்றாள். அவரோ கிச்சனில் சரளாவுடன் ஏதோ பேசிக்கொண்டே அடுப்பில் வேலையாக இருக்க, இவள் பறந்து சென்றாள்.

​அவரிடம், “அத்தை உங்ககிட்ட முக்கியமாக சில விஷயங்களைத் தெரிஞ்சுக்கணும்,” என்றாள். பரபரப்புடன் 

திடீரென பரபரத்தவளை மேலிருந்து கீழ் பார்த்தவர், அவளுக்கு ஒரு காபியைக் கலந்தபடி, “காபி குடிச்சிட்டு எதுவானாலும் கேளு,” என்றார். 

காபியை ஒரு மிடறு விழுங்கியவள், “செம்ம அத்தை!” என்றவள், மீண்டும் “அத்தை நான் சொல்ல வந்ததையே மறக்க வச்சிருவீங்க போல,” என்றாள்.

​”சொல்லு நான் கேட்டுட்டு தானே இருக்கேன்,” என்றார் அவரும் காபியை அருந்தியபடி 

​”உங்க பையன்… ஏன் குரளி வித்தை எல்லாம் காட்டுறார்,” என்று சிரிக்க,

சரளா சிரிக்க அவளை முறைத்துவிட்டு மயூரியின் காதை லேசாகப் பிடித்து ஆட்டிய மரகதம் 

 “உன் வாய்தான் உனக்கு வினையாகப் போகுது… பாரு,” என்றவர் மீண்டும் புன்னகையுடன், “என் புள்ள அப்படி என்ன குரளி வித்தை காட்டிட்டான்?” என்றார்.

​”ஆமாம் அத்தை! பின்னாடி போய் பாருங்க, எல்லாரும் கால்ல நடந்தா அவர் கையில நடக்க ட்ரை பண்றார். பாவம், அது முடியாமல் மறுபடியும் கால்ல நடந்து எக்ஸசைஸ் பண்றார்,” என்றாள்.

​”நான் எப்படி நடந்தா உனக்கு என்ன?” என்ற குரலில் கண்களை இறுக மூடி நாக்கை கடித்தவள், முகத்தைச் சீர் செய்து கொண்டு திரும்பி வாயிலைப் பார்த்தாள், 

அவளை ருத்ரமூர்த்தியாக முறைத்தபடி நின்று இருந்தான் ரஞ்சன்.அவனை கண்டவள் சட்டென சுதாரித்து 

​”என்ன நீங்க? எப்ப பார்த்தாலும் ‘நான் சின்க்ல’  வந்து என்னைத் திட்டுறீங்க. இவ்வளவு நேரம்  எக்ஸசைஸ் பண்ணிட்டு இருந்தவர், இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு வர வேண்டியதுதானே?” என்றாள், அவன் செய்தது தவறு என்பது போல.

“வாட் “என்று புரியாமல் பார்த்தவன் பின் புரிய அவளை முறைத்தவன், “பிளடி…” என்று அந்த வார்த்தையை வாய்க்குள் முழுங்கி விட்டு அங்கிருந்து விலகிச் சென்றான்.

​மரகதம் தான் பதறிக்கொண்டே இருந்தார். விளையாட்டாகப் பேசும் இந்த சிறு பெண்ணின் வார்த்தைகள் என்று யோசித்தவர் முன் கையை அசைத்து,

 “அத்தை… அத்தை… என்ன ஆச்சு? மாமா கூட டூயட் பாட போயிட்டீங்களா?” என்றாள் மயூரி.

​”ம்ம்..உன் வாய்க்குப் பெரிய பூட்டு போடச் சொல்றார் உன் மாமனார்,” என்றார்.

​”அது தெரிஞ்ச விஷயம் தானே? மிஸ்டர் ரஞ்சன் மேனுஃபாக்சரிங் டிபக்ட்னு நெனச்சேன், அப்புறம் தான் புரிஞ்சுது மாமாவோட ஸ்கேன்னு அதை இன்னைக்கு தான் அலசி ஆராய்ஞ்சேன்,” என்றாள். புன்னகையுடன்,

 “கழுதை!” என்று அவள் காதை மீண்டும் திருகினார் மரகதம்.

​                   *********

​”ஹலோ மக்களே! எல்லாரும் எப்படி இருக்கீங்க? நான் ரொம்ப சூப்பரா இருக்கேன். அப்புறம் சாரி, சாரி, சாரி… ஒரு வாரம் சொல்லாமல் லீவ் போட்டுட்டேன். என்னை ரொம்ப மிஸ் பண்ணீங்களா பிரண்ட்ஸ்? நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன். அதான் மலை அளவு பிரச்சனையைப் பூன்னு ஊதி தள்ளிட்டு சீக்கிரமா ஓடி வந்துட்டேன்,” என்று தன் குதூகலக் குரலால் நிறைத்துக் கொண்டிருந்தாள் மயூரி 

ஆர்.ஜே.மீராவாக.

​இன்றோடு அவளுக்கும் ரஞ்சனுக்கும் திருமணம் நடந்து ஒரு வாரம் தான் ஆகியுள்ளது என்று மயூரியிடம் சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டாள். அந்த ஒரு வாரம் அவ்வளவு மன போராட்டமாக இருந்தது அவளுக்கு 

 மிஸ்டர் முத்துவை ஏமாற்றி வந்தது போல,அவளால் ரஞ்சனை ஏமாற்ற முடியவில்லை. முதல் காரணம், அவனின் அதிகாரம் எதுவரை என்று அவள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை.

 அடுத்தது, அவனின் ‘ஓடிப்போனவள்’ என்ற பேச்சு. இவை இரண்டையும் மீறி அவள் தன் வேலைக்கு மீண்டும் செல்ல இந்த ஒரு வாரம் ஆனது. 

போராட்டத்தை விட அவள் மனதைப் பாதித்தது, அவள் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் மாமியாரை ஏமாற்றுவதுதான். 

ஆனால் கூடிய விரைவில் அவரிடம் கூறிவிட வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தாள்.

தோழி பிரியாவுடன் மயூரி

​ஷோவை முடித்து வெளி வந்தவள், ரிசப்ஷனில் இருந்த பிரியாவுடன் இணைந்து கொண்டாள். பிரியா தான் அவளை நச்சரித்து கொண்டிருந்தாள் 

“காலையிலிருந்து என்னாச்சு, எல்லாம் ஓகேவான்னு கேட்டுட்டே இருக்கேன். என்னைப் பார்த்தா லூசு மாதிரி தெரியுதா உனக்கு?” என்றாள் பிரியா கோபமாக.

​”என்னடி சொல்லணும்? அதான் உனக்கு எல்லாமே தெரியுமே, பின்ன என்ன?” என்றாள் மயூரி.

​”ஏன் டி! நீ எனக்கு பாய் சொன்னதுக்கு அப்புறம் ஏழு நாள் முழுசா இருக்கு,இருப்பதினாலு இண்டு ஏழு…ச்ச..கணக்குல நான் கொஞ்சம் வீக். இத்தனை மணி நேரம் என்ன ஆச்சுன்னு தெரிய வேண்டாமா?” என்றவள், சுற்றும் முற்றும் யாரும் இல்லை என்று உறுதி செய்து கொண்டு மயூரி அருகில் சென்று,

 “அதோட உன் ஆளு கூட ஏதும் ஆச்சா?.. ம்ம்..புதுப்பொண்ணு… சொல்லு…ம்ம்..சொல்லு,” என்றாள் பல்லைக் காண்பித்து கண்ணை அடித்து.

​அவளைத் திரும்பி முறைத்த மயூரி, சட்டென புன்னகையுடன், “இன்னைக்கு நைட்டு சுவிட்சர்லாந்து ஹனிமூன் போறோம். உனக்கும் டிக்கெட் போடச் சொல்லவா? நீயும் வந்து என்ன நடக்குதுன்னு பார்த்தே தெரிஞ்சுக்கோ ,” என்றாள் நக்கலாக..

​”ஆனாலும் நான் அவ்வளவு இன்டீசன்ட் இல்ல டி…இருந்தாலும்… சுவிட்சர்லாந்தை சுத்தி பார்த்த மாதிரி இருக்கும். ஒரு வெள்ளைக்காரனை கரெக்ட் பண்ணி கட்டிக்கலாமான்னும் தோணுது..,” என்றவளை, 

“அடியே!” என்று தன் கையில் இருந்த நோட்டை வைத்து அவள் முதுகில் ‘மொத்து மொத்து’ என்று மொத்தினாள் மயூரி.

​”அய்யோ…வலிக்குதுடி! நீ கவுண்டர் அடித்ததற்கு நானும் திருப்பி கொடுத்தேன். பேச்சு பேச்சா இருக்கும்போது எதுக்கு டி ஆயுதம் யூஸ் பண்ற?” என்று விலகி நின்று திட்டினாள் பிரியா. 

இருவரும் பேருந்து நிறுத்தம் அருகே வந்திருக்க, “மயூரி, ஒரு பிரச்சனையும் இல்லைன்னு சொல்லித் தொலையேன் டி மறுபடியும் என்னை ஐ-விட்னஸ் ஆக்கிக் கொலை பண்ணிடாதே. மிஸ்டர் முத்துவும் உன் அண்ணனும் வாயிலதான் அல்வா கிண்டுவாங்க. ஆனா உன் ஆளு பேசாம இருந்தே ஆளை முடிச்சிடுவார் போல இருக்கு. ப்ளீஸ் டி, என் உயிரைக் காப்பாத்து!” என்றாள் கெஞ்சலாக.

​மயூரி அவளைப் பார்த்து புன்னகைத்தாள். மனதில், ‘அவரைச் சும்மா ஒரு மணி நேரம் பார்த்ததுக்கே இப்படி பீதியாகுறாளே… அவரோட சைனைடு பேச்சையும், சீரியல் கில்லர் பார்வையையும் பார்த்தா இவ அவ்வளவுதான்!’என்று எண்ணியவள், 

“ஒன்னும் பிரச்சனை இல்லடி. என் மாமியார் எனக்கு ஃபுல் சப்போர்ட். அவருக்கும் நான் ஓடிப்போனதுதான் பிரச்சனை. மித்தபடி எங்க வீட்ல இருந்ததை விட ஹேப்பியா தான் இருக்கேன்,” என்றாள்.

​”ஹலோ மிஸ்ர்ஸ் ரஞ்சன்… நீ சுகமா இருக்கியான்னு கேட்கல. திருட்டுத்தனமா செய்றியே உன்னோட லட்சியம், அதைப் பத்தி சொல்லிட்டியான்னு கேட்கிறேன்,” என்றாள் பிரியா.

​மயூரி, ‘எப்படி சுத்துனாலும் பாயிண்டா பேசுறாளே! இவளுக்கு எப்படி இவ்வளவு அறிவு? நம்ம கூடவே இருக்கா… இல்ல… அதான்!’என்று மனதில் பெருமிதத்துடன் புன்னகைக்க, அவளை மீண்டும் இடித்து, 

“சொல்லுடி,” என்றாள் பிரியா.

​தட்டுத்தடுமாறி, “அ…அது.. எப்படி இப்பவே சொல்ல முடியும்? நான் கல்யாணம் வேணாம்னு சொன்னதுக்கே அவர் இன்னும் ரிவெண்ச் எடுத்து முடிக்கல, அதுக்குள்ள இதை எப்படிச் சொல்றது? கொஞ்ச நாள் வெயிட் பண்ணு. முதலில் என் மாமியார் கிட்ட தான் சொல்லணும்,” என்றாள் பஸ் வருகிறதா என்று பார்த்தபடி.

​”அடிப்பாவி! முதல்ல உன் பிரண்ட்ஷிப்பை கட் பண்ணனும். இல்லனா எனக்கு சமாதி கட்டாம நீ ஓய மாட்ட போல இருக்கே!” என்றாள் பதட்டத்துடன்.

​”அதெல்லாம் பார்த்து…க்கலா…ம்,” என்றவள் கண்களை உருட்டி ரோடைத் திரும்பிப் பார்த்தவள், “போச்சுடி! செத்தோம்… வில்லன் வர்றான்…டி!” என்றாள் பிரியாவின் முதுகின் பின்னே ஒளிந்தபடி.

​பிரியாவும் சற்று தொலைவில் வந்து கொண்டிருந்த அந்த பிளாக் ஸ்கோடாவைக் கவனித்தாள். 

மயூரி வீட்டு வாசலில் பார்த்த அதே கார்! 

“அடியே, நீயாவது ஆறு அடில ஒருத்தன கட்டிக்கிட்ட. நான் இன்னும் கண்ணுக்கு குளிர்ச்சியாக் கூட ஒருத்தனை முழுசா சைட் அடிச்சு முடிக்கல டி… அதுக்குள்ள என்னைக் கொலை பண்ணப் பார்க்குறியே.. பாவி.. கொலைகாரி!” என்றபடி அவளும் அவள் முகத்தைக் கையில் இருந்த புத்தகத்தைக் கொண்டு மூடிக்கொள்ளவும், அருகே அந்த கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

​பிரியாவின் பின்னாடி இருந்த மயூரியின் காலைப் பின்னோடு உதைத்து, 

“அதான் இரங்கல் போஸ்டர் ஒட்டப் போறாங்களே, முன்னாடி வந்து போஸ் கொடுத்துத் தொலை,” என்றாள் பிரியா.

​மயூரி முன்னே வர, டிரைவர் சீட்டின் அருகே இருந்த கண்ணாடி இறங்க, அங்கே கணவனை எதிர்பார்த்து நடுங்கிக் கொண்டிருந்த மயூரிக்குச் சந்தேகப் பார்வையுடன் மாமியாரே காட்சி கொடுத்தார்.

​மரகதம் அவரைப் பார்த்தவுடன், “அப்பா! அத்தை நீங்களா?” என்றவள், மறுபடியும் “அத்தை உங்க புள்ள உள்ள எதுவும் இருக்காரா?” என்று குனிந்து பின் சீட்டை ஆராய்ந்தாள். 

அங்கு யாரும் இல்லை என்று உறுதி செய்தவள் பெருமூச்சு விட்டாள். பிரியாவைப் பார்த்து, “வில்லன் இல்லடி, தப்பிச்சோம்!” என்றவள்.

பிரியா காரை நோக்கி ஜாடை காட்ட, மரகதத்தைப் பார்க்க, அவர் மகனுக்குக் குறைச்சலில்லாத அதே கூர்மையான பார்வையை அவள் மேல் வீசிக்கொண்டிருந்தார்.

​அவள் அசடு வழிந்தபடி, 

“என்ன அத்தை… நீங்க.. இந்தப் பக்கம்?” என்றாள்.

​”இதை நான் உன்கிட்ட கேட்கணும். உன் காலேஜ் இந்தப் பக்கம் இல்லையே?” என்றார். 

அதோடு அவள் கழுத்துக்குக் கீழே தொங்கிய ஐடியை உற்றுப் பார்க்க, அதைத் தலையில் அடித்தபடி சட்டென கழற்றினாள். அதற்குள் அது ஏர் எப். எம். ஐடி ‘ என்று கண்டுகொண்டவர்,

 “நீ ஏன்.. ஏர் எப். எம்,ஐ.டி. கார்டு போட்டு இருக்க?” என்றார் அடுத்த கேள்வியாக.

​இப்பொழுது முழுதாகத் திணறியவள், 

“அத்தை அது வந்து…” என்று தலையைக் குனிந்தபடி தயங்கினாள். 

பிரியாவைப் பார்த்த மரகதம், “ஏம்மா, நீ தனியா வீட்டுக்கு போயிடுவல்ல?” என்றவர், அவள் பதில் கூறும் முன், “இந்த ஒரு வாரம் மயூரி இல்லாமல் தான போயிருப்ப, அதேபோல கிளம்பு,” என்றவர் மயூரியிடம், “நீ கார்ல ஏறு மயூரி,” என்றார் அதிகாரக் குரலில்.

​பிரியாவைத் தயக்கத்துடன் பார்த்தவள், அவள் செல்வதாகக் கண்காட்ட, தலையைக் குனிந்தபடி பின் சீட்டில் ஏறிக்கொண்டாள். 

வீட்டை நோக்கிப் பயணிக்க, மயூரியின் மனதில் ஸ்கோடா காரை விட வேகமாகப் மனக் குதிரை ஓடியது. 

‘அத்தை கார்ல வந்திருக்காங்க, அப்போ அவர் வீட்டில் இருக்காரா? போச்சு… போச்சு…மயூரி எல்லாம் போச்சு! ஒரு வாரமா உனக்கு சப்போர்ட் பண்ணவங்க கிட்ட அவங்க பையன கலாய்ச்சி தள்ளினியே, அப்பவே சொல்லி இருக்கலாம்…மயூரி.. சரியான யானை டி நீ..!’

கார் வீட்டில் நின்றதும் மாமியார் வேக நடையுடன் வீட்டினுள் செல்ல தயங்கியபடி மயூரி பின்னே சென்றாள். 

ஹாலில் ஏதோ லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் ரஞ்சன். அவன் கூரிய பார்வை இருவரும் ஒன்றாக வருவதைக் கண்டுகொண்டது.அவளை கூர் பார்வை பார்த்தபடி

​”நீங்க எப்படி இவளைக் கூட்டிட்டு வர்றீங்க? நீங்க ஹாஸ்பிட்டலுக்கு இல்ல போனீங்க? அது.. இவ காலேஜ் பக்கம் இல்லையே. அதோட…” என்று செல்லில் மணி பார்த்தவன், “அவ காலேஜ் முடிஞ்சு ரொம்ப நேரம் ஆகிருச்சே,” என்றான் மயூரியைத் துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தபடி.

​அவன் கேட்டவுடன்,அப்பொழுதுதான் மயூரியை பார்ப்பது போல் மரகதம் திரும்பி அவளைப் பார்த்துப் பேசினார். 

“அட மயூரி! பின்னாடியே வந்துட்டியா?” என்றவர், 

“டேய் அவ பஸ்ல இறங்கி நடந்து வர்றா. அதோட அவளுக்கு இன்னைக்கு ஏதோ செமினார்னு சொன்னா… இல்ல மயூரி?” என்றார் அவளை அழுத்தமாகப் பார்த்து.

​”சரி சரி போ, போய் ப்ரஷ் ஆகிட்டு வா. நானும் ஹாஸ்பிட்டல் போன அலுப்பு தீர குளிச்சிட்டு வரேன் ரெண்டு பேரும் காபி குடிக்கலாம்,” என்றார் இயல்பாக. 

மயூரிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவர் கூறியது போல் அவள் அறைக்குள் சென்றாள். ரஞ்சனின் பார்வை அவளைத் தொடரத்தான் செய்தது…

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page