தம்பி….
இங்கே இறங்கிக்கோங்க; பெட்ரோல் கம்மியா இருக்கு. வண்டி அடைக்குது. நாலு ஸ்டெப் வந்தா உங்க அப்பார்ட்மெண்ட் வந்துரும். பின்னாடி பெட்ரோல் பல்க் இருக்கு. என்னால அங்க போய் திருப்பி இங்க வரைக்கும் ஆட்டோவை கொண்டு வர முடியுமான்னு தெரியல; பெட்ரோல் ரொம்ப இல்ல போல.
தப்பா எடுத்துக்காதீங்க… ஹாஸ்பிடல்ல இருந்து வேற வந்து இருக்கீங்க; பெட்ரோல் போடுற இடத்துல கூட்டமா வேற இருக்கு. அங்க போயிட்டு உங்களை வெயிட் பண்ண வைக்க முடியாது. அதனால நீங்க இங்கேயே இறங்கிக் கொள்ளுங்க.
இப்படி அவர் சிரமத்தை சொன்னதும்,
ரெண்டு பேருமே “பரவாயில்ல; எவ்வளவு ஆச்சு?…” இப்படி கேட்டுகிட்டு அவன் பணத்தை கொடுத்துட்டு, இரண்டு பேரும் அவங்களுடைய அப்பார்ட்மெண்ட்டை நோக்கி நடந்தாங்க. ஒரு பத்தடி தூரம் தான்.
அவன் கால்ல சுழுக்கு மாதிரி இருந்தது நாளா, அவன் நடக்க கொஞ்சம் சிரமப்பட்டு, காலை தாங்கி தாங்கி நடக்க… இதை பார்த்ததுமே,
“நிலா… இருங்க, விக்ரம்…”
இப்படி சொல்லிட்டு அவனுடைய கைகள் மட்டும் பிடித்துக் கொள்ள,
நடக்க நடக்க இன்னும் வலி அதிகமானது. அவனுடைய முழு வெய்ட்டையுமே நிலா தான் தாங்கிக்கிட்டு, அவனை உள்ள கூட்டிட்டு வர,
ஸ்லீவ் லெஸ் பிளவுஸ்; முந்தானை தரையை உரசிக்கிட்டு; அங்கங்க அவளுடைய இடுப்பு, முதுகு பக்கம் எல்லாம் நல்லா தெரியுது. ரொம்ப டீப்பான நெக் வச்சு இறக்கமா தைத்து இருக்கிறார்கள்.
இதை போடும்போது அவளுக்கு இருந்த கூச்சம்… அதனால முழு புடவையை போர்வ மாதிரி போர்த்தி இருந்தவள். ஆனா இப்போ அந்த நினைப்பு கொஞ்சம் கூட இல்லாமல், அவனுக்கு உதவி பண்றதுக்காக அவன் மேலே முழு ஃபோக்கஸ்யும் வச்சு வந்துகிட்டு இருக்க,
அந்த வாட்ச் பண்ணி இவங்க ரெண்டு பேரும் ஜோடி போட்டு வர்றதை பார்த்ததுமே, வேகமாக போன் பண்ணினாரு செகரட்டரிக்கு; தலைவருக்கு; முக்கியமா சங்கருக்கு.
எல்லாரும் அறக்கப் பறக்க கீழ ஓடி வர.
அவங்க ரெண்டு பேரும் வர்றதை பார்த்ததுமே,
அதிர்ந்து போயிட்டாங்க….
அப்போ, அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சொன்னது எல்லாமே உண்மைதானா?…
இவங்க ரெண்டு பேருக்குள்ள ஏதோ ஒன்னு இருக்கு.
இத்தனை நாளாக வேஷம் போட்டுட்டு இருந்த அந்த பொண்ணு… இன்னைக்கு பாரு, எந்த கோலத்துல வீட்டுக்கு வர்றான்னு…
தலைமுடி எல்லாம் நல்லா களைந்து போய்; நேத்து போட்ட மேக்கப் அழிஞ்சு போய்; கண் மை எல்லாம் கீழ கசிந்து,
ரொம்ப நேரமாக அவனுடைய முழு வெய்ட்டையுமே அவள் தாங்கிக் கொண்டு வர்றதுனால, நல்லா வேர்த்து, ஒரு மாதிரியாக அவள் வர… அந்தக் கோலம் அனைத்துமே அங்கு வர்ற எல்லாருடைய கண்களையும், மனதையும், வேறு மாதிரியான நோக்கத்திற்கு கொண்டு சென்றது.
சங்கர் வேகமாக வந்து,
“என்ன பண்ணிட்டு இருக்க?…”
இப்படி சொல்லி அவள் கைய புடிச்சு இழுத்து, ஓங்கி ஒரு அரை விட,
அவள் இரண்டு சுற்று சுற்றி, விக்ரம் மேலே விழுந்தாள்.
“சார்…
என்ன பண்ணிட்டு இருக்கீங்க, சார்?…
நிலா… உனக்கு ஒன்னும் இல்லைல்ல?… ஆர்யூ ஓகே?…”
இப்படி சொல்லி அவளுடைய முகத்தை அவன் தூக்கி பார்க்க,
“சார்… என்ன சார், உங்க பொண்ணு இப்படி இருக்கு. இத்தனை பேர் இருக்கிறோம்; அவங்க ரெண்டு பேரையும் பாருங்க. உங்க பொண்ண அடிச்சா அந்த பையனுக்கு கோபம் வருது.”
இப்படி சுத்தி, வாட்ச்மேன், பிளம்பர், சங்கர் பிடிக்காத சிலர் எல்லாரும் ஏத்தி விட,
அவள் பதறி கொண்டு,
“அப்பா… என்னாச்சு, அப்பா?…”
“இன்னும் எதுவும் பண்ணல… நான் என்ன சொல்றேன்னு கேளுங்க…”
இப்படி தன்னோட அப்பா கையை பிடிக்கும் போது,
“என்ன கேட்கணும்?…
அதான் நான் எல்லாத்தையும் பாத்துட்டேனே…
என்னோட மானத்தை வாங்கிட்டேல்ல…
நாலு பேருக்கு நான் புத்திமதி சொல்லிக்கிட்டு இருக்கேன். ஆனா மொத உன் வீட்ட பாருடா… எல்லாத்தையும் சொல்ல வச்சுட்டு பாத்தியா?… உன்னை நான் அப்படியா வளர்த்தேன்?…”
இப்படி அவர் பயங்கர கோபத்தோடு பேசும்போது, நிலாவுடைய அம்மா லட்சுமி வேகமாக கீழே இறங்கி ஓடி வந்தாங்க.
அவள் டிரஸ் எல்லாத்தையும் பாத்துட்டு,
“என்னடி கோலம் இது?… என்ன கோலம் இது?… மானத்தை வாங்கிட்டியே…
மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க; சீக்கிரம் வா ன்னு சொல்லி உன்ன நல்ல முறையில தான் அனுப்பி வச்சேன். உனக்கு இப்படிப்பட்ட கேடுகட்ட ஆசை இருந்தா, முன்னாடியே சொல்லி இருக்க வேண்டியதுதானே?…”
இப்படி அவங்க அம்மா பேசும்போது, இதை பார்த்த விக்ரம்,
“ஆண்ட்டி… ப்ளீஸ், ஸ்டாப்.
அந்த மாதிரி எதுவும் இல்லை. என்ன நடந்துச்சுன்னு தெரியாம, இந்த மாதிரி தப்பா பேசாதீங்க.”
“நீ வாய மூடுடா…
உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?…
சரியான குடிகார நாய் நீ… என்கிட்ட பேசுறியா?…
எதுவும் இல்லாம, இவ எதுக்குடா நாலு மணிக்கு உன் வீட்டுக்குள் வரணும்?…
கேக்குறதுக்கு ரொம்ப கேவலமா இருக்கு.
அப்படி என்னடி மகராசி, நாங்க உனக்கு குறை வச்சோம்?… நல்ல மாப்பிள்ளை தான் கொண்டு வந்து காட்டணும்; உனக்கு இப்படிப்பட்ட ஒரு ஆள் தான் தேவைப்படுதா?…
அதுவும் தினமும் நீ இவ்வளவு கூத்தடிச்சிட்டு இருக்க?… இது கூட தெரியாம நாங்க நல்லா தூங்கிட்டு இருந்திருக்கிறோம். நினைக்கும் போது அருவருப்பா இருக்குடி.
இப்படி உடம்பு ஆசை இருந்துச்சுன்னா, முன்னாடியே சொல்லி தொலைய வேண்டியதுதானே?…
பெரிய இடத்து மாப்பிள்ளை, நல்ல மாப்பிள்ளை தான் வேணும்னு நாங்க நினைக்காமல், எவன் கையிலயாவது உன்னை பிடிச்சு கொடுத்திருப்போமே… இப்படி வந்து அசிங்கப்படுத்திட்டியே…”
இப்படி எல்லாம் அவங்க அம்மா வாய்க்கு வந்தபடி பேச,
“அம்மா… வீட்ல போய் பேசிக்கலாம். வெளிய நின்னு ஏன் பேசுறீங்க?… நான் சொல்றத முதல்ல கேளுங்க.
அந்த மாதிரி எதுவும் இல்லை.
என்னை அசிங்கப்படுத்தாதீங்க. வீட்டுக்குள்ள வச்சு பேசிக்கலாம்… வாங்க.”
இப்படி எல்லாம் சொல்லி அவள் கெஞ்சி, எல்லாரும் முன்னாடியும் அவமானப்பட்டு, கூனிக்குறிகிப் போய் நின்னா,
“உன்னை என் வீட்டுக்குள் இனி சேர்க்கவே மாட்டேன். அப்படியே எங்கேயாவது போய் தொல.
இப்படி கேவலப்படுத்தியதற்கு உன்ன நாங்க பெத்துக்காம இருந்திருக்கலாமுன்னு…”
இப்படி சொல்லிட்டு சங்கர்,
“எனக்கு பிறந்தது ஒரே ஒரு பொண்ணு தான். அது இரண்டாவது பொண்ணு மட்டும் தான்.
என் முதல் பொண்ணு செத்து தொலைஞ்சிட்டா.
இன்னைக்கு நான் உன்ன தலை முழுகிறேன்.”
இப்படி சொல்லிட்டு அவர் உள்ளே போக,
“அம்மா… நான் எந்த தப்பும் பண்ணல, அம்மா.
அப்பா கிட்ட நீங்க பேசுங்கம்மா. நான் எங்க போவேன்?…”
இப்படியெல்லாம் அவள் பேசிகிட்டு, தன் முகத்தை மூடி கதறி அழுக,
“நீ வந்திருக்கிற கோலத்தை பார்க்கும்போதே தெரியுது… நீ எப்படிப்பட்ட ஆள் என்று.
உன் தங்கச்சி மாடர்ன் டிரஸ் போடுவா. ஆனா அவ ஆரம்பத்துல இருந்து அதேபோலவே பழகிட்டா. எங்க பேச்சைக் கேட்டது கிடையாது; வழி மாறி போனது கிடையாது. அவள் கான்பிடண்டா எப்போதும் இருப்பா.
அவளை மாதிரி நீ இருக்கலாம் என்று சொல்லி நாங்க எத்தனை நாள் யோசித்து இருக்கோம். ஆனா அதை தாண்டி நீ இந்த மாதிரி எல்லாம் துணி உடுத்தி, இப்படி போய்ட்டு வருவேன்னு நான் கொஞ்சம் கூட யோசிக்கவே இல்ல.
உங்க அப்பா சொன்னது தான் நானும் சொல்றேன். எங்க மூஞ்சில நீ முழிக்காத. எங்களுக்கு பாரமா இனி இருக்காத. எங்கேயாவது போய் தொல. முடிஞ்சா செத்துப் போ.”
இப்படி சொல்ல,
“நம்ம இது… நீங்க கொடுத்த சாரீதானம்மா…”
“எதுக்குமா இப்படி பேசுறீங்க?…”
ன்னு அவள் சொல்லிகிட்டே இருக்கும்போதே, லட்சுமி அங்கிருந்து வேகமாக உள்ள போயிட்டாங்க.
அங்க ஒரு மிகப்பெரிய கூட்டம்… அவங்க ரெண்டு பேரும் வேடிக்கை பார்த்துட்டு இருந்துச்சு.
அவளுக்கு என்ன பண்ணனும் தெரியல. வேகமா அவளுடைய முந்தானையை எடுத்து, உடல் முழுவதும் சுற்றிக் கொண்டாள்.
எல்லாரும் அவளை ரொம்ப அசிங்கமா பாக்கற மாதிரி அவள் உணர்ந்தாள்.
அந்த இடத்துல அவளால் ஒரு நிமிஷம் கூட நிக்க முடியல. வேகமா அங்கிருந்து நடக்க ஆரம்பிச்சுட்டா… அழுதுகிட்டே…
“நிலா… நில்லுங்க…
எங்க போறீங்க?…”
இப்படி விக்ரம் கேட்டுக்கிட்டே, காலை ஊன்ற முடியாமல், கஷ்டப்பட்டுக்கிட்டு அவள் பின்னாடியே அவன் ஓட,
அவள் வேகமாக ஒரு ஆட்டோ குள்ள ஏறிட்டா.
அவன் வருவதற்குள், அந்த ஆட்டோ போயிடுச்சு.
“நிலா… நிலா…” என்று… அவன் பின்னாடியே சத்தம் போட்டுட்டு, கஷ்டப்பட்டு ஓடினான்.
அந்த நேரத்தில் இன்னொரு ஆட்டோ வர; அதுல ஏறிக்கொண்டு, அந்த ஆட்டோவை ஃபாலோ பண்ணிக்கிட்டு போனான்.
இதற்கிடையில,
“நல்ல அமைதிக்கொட்டை மாதிரி இருந்துகிட்டு, என்ன வேலை பார்த்து இருக்குன்னு பாருங்க?…
இந்த சங்கர் இனிமேல் எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு வெளியில் வருவான் என்று நான் பார்க்கிறேன்.
எதுக்கெடுத்தாலும் ரூல்ஸ் பேசுவான்.
எனக்கே தோணும்… என்னடா, சின்ன பொண்ணு ஒரு டைப் ஆயிருக்கு; பெரிய பொண்ணு ஒரு டைப்பா இருக்குன்னு…
அந்த பொண்ணு பயங்கரமாக மேக்கப் போட்டுக்கிட்டு, மாடல் டிரஸ் போட்டுக்கிட்டு, அரைகுறையா சுத்தும்.
ஆனா இந்த பொண்ணு எப்ப பார்த்தாலும் அப்பா கூடவே சுத்தும். டிரஸ் பார்த்தா அந்த காலத்துல போட்ட மாதிரி இருக்கும். ஆனா ஐடி கம்பெனியில் எப்படி இந்த பொண்ணு வேலைக்கு எடுத்தாங்கன்னு தெரியல.
அப்படி அமுக்கணி மாதிரி இருந்துகிட்டு, எவ்வளவு வேலை பார்த்து இருக்குன்னு பாத்தீங்களா?…
எல்லாம் கலிகாலம்ங்க…
நம்ம பார்க்கிறது எல்லாம் உண்மை கிடையாது.”
இப்படி எல்லாரும் பேசிக்கிட்டே, அங்கிருந்த கூட்டம் அங்கிருந்து தனித்தனியாக புறப்பட,
அதே நேரத்தில் பிளம்பருக்கு பயங்கர பயமா போயிடுச்சு.
“அண்ணே… நம்ம என்னமோ சொல்ல போய், அது பெரிய அளவுல போயிருச்சு. அந்த பிள்ளையை பார்க்கும்போது எனக்கே சங்கடமா போச்சு. அது நல்ல புள்ள தான். ரொம்ப அமைதியா… அது உண்டு, அது வேலை உண்டுன்னு இருக்கும்.
ஒன்னு மட்டும் தெரிஞ்சுச்சு… அவ்வளவுதான். எனக்கு இப்பதான் பயமா இருக்குன்னு…”
சொல்லி அவன் வாட்ச்மேன் கிட்ட சொல்லும் போது,
“டேய்… இந்த விஷயத்தை நம்ம யாருகிட்ட சொன்னோம்னு ஞாபகம் இருக்கா?…
அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட.
அவங்க எப்படி நம்ம சொன்னோம் இங்க வந்து சொல்ல போறாங்க?… அவங்களுக்கும் இவங்களுக்கு எந்த உறவும் இல்லாம போயிடுச்சு. இல்ல… பேசாம இருடா; கண்டுக்காத. அந்த ஆளோட திமிரு அங்கேயே நொறுங்கி போயிடுச்சு.
வேலைய பாரு… நெனச்சது நடந்துடுச்சு. அப்புறம் என்ன?…”
இப்படி ரெண்டு பேருமே அந்த விஷயத்தை சாதாரணமாக கடந்து போயிட்டாங்க.
ஆனா…
இனிமேல் நான் இந்த உலகத்துல இருந்து என்ன சாதிக்க போறேன்?…
என்ன பெத்தவங்களே என்ன புரிஞ்சுக்காத போ, நான் எதுக்கு உயிரோட இருக்கணும்?…
ன்னு தவறான முடிவோடு அவள் புறப்பட்டாள்.
பின்னாடி பாலோ பண்ணிட்டு வந்த விக்ரம், அந்த ஆட்டோவ மிஸ் பண்ணிட்டான்.
எங்க அந்த ஆட்டோ ஒன்னு தெரியாம, இரண்டு பேரும் அதே இடத்தில் நிற்கும் போது, ஒரு ஆட்டோ மட்டும் ரிட்டன் வந்துச்சு. உள்ள யாருமே இல்ல.
அதை பார்த்து ஆட்டோக்காரர்,
“அண்ணே… ஏதாவது ஒரு பொண்ணு நீங்க உங்க ஆட்டோவுல கூட்டிட்டு போனீங்களா?…”
இப்படி கேட்கும்போது,
“ஆமா… இப்பதான் அந்த ஆத்து கிட்ட விட்டுட்டு வர்றேன். ஒரு பொண்ணு அழுதுட்டே வந்துச்சு.”
“அண்ணே… ஒரு பொண்ணு அழுதுகிட்டு, ஆத்து கிட்ட கூட்டு போன்னு சொன்னா… என்ன இது?… விசாரிக்க மாட்டீங்களா என்ன, அண்ணே?…”
இப்படி சொல்லிக்கிட்டு ஆட்டோவை அவர் எடுக்க,
“அண்ணே… அண்ணே… சீக்கிரமா போங்க, ப்ளீஸ்…
ஏதாவது தப்பா நடக்குறதுக்குள்ளே போங்கண்ணே…”
இப்படி இப்ப ஆட்டோவை விரட்டி கொண்டு, ரெண்டு பேரும் அந்த இடத்திற்கு போக,
அவன் எது நடக்க கூடாதுன்னு நினைச்சானோ, அதே மாதிரி… அவள் அந்த பாலத்து மேல ஏறி நின்னுட்டு இருந்தா… அழுதபடி…
ஆட்டோக்காரர் கிட்ட காசு கொடுத்துட்டு,
“நீங்க வெயிட் பண்ணுங்க; நான் வந்து சொல்லிட்டு…”
அவன் ஓடினான்.
காலில் ஒரு பக்கம் இருந்த வேதனையை மறந்து போய், அவன் அவ்வளவு வேகமாக போய்,
குதிக்க போனவளுடைய கைய புடிச்சு, வேகமாக இழுத்து, தன்னோடு இருக்க அணைத்து கொண்டான்.
“என்ன பண்ற, நிலா?….
ஏன் இப்படி ஒரு முடிவு?…
அவங்க சொன்னத உண்மையாக்க போறியா?…”
இப்படி எல்லாம் அவளை கேட்டுக்கொண்டு, அவனுடைய இரு கைகளுக்குள் அவளை ஒரு பொக்கிஷம் போல அணைத்து கொண்டான். அவள் பயங்கரமாக கதறி அழுதாள்.
இனி என்ன நடக்குதுன்னு… அடுத்த எபிசோட்ல பார்க்கலாம்.
