சரியாக காலை 11 மணி. சென்னை அலுவலகத்தின் போர்டிகோவே ஒருவித பரபரப்பில் உறைந்து போயிருந்தது. அந்த நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு, ஒரு கருப்பு நிற BMW கார் ராஜ கம்பீரத்துடன் வந்து நின்றது. டயர்கள் தரைத்தளத்தில் உராய்ந்த சத்தம் அடங்குவதற்குள், டிரைவர் ஓடிவந்து கதவைத் திறக்க, அங்கிருந்து இறங்கினான் நம்ம சித்தார்த்.
சித்தார்த் காரிலிருந்து வெளியே காலடி எடுத்து வைத்த அந்த நொடியே, மொத்த அலுவலகமும் ஒரு கணம் மூச்சைப் பிடித்துக் கொண்டது. லண்டன் ஸ்டைல் கோட்-சூட், கண்களில் கறுப்புக் கண்ணாடி, கையில் விலையுயர்ந்த கடிகாரம் என அவன் அப்படியே ஒரு பக்கா கார்ப்பரேட் ராஜாவாக காட்சியளித்தான். அவன் இறங்கிய தோரணையைப் பார்த்தால், அவன் ஒரு CEO என்பது போல அத்தனை நேர்த்தியான ஆக்டிங்!
மேனேஜர் மனோஜ், ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல், கையில் ஒரு பிரம்மாண்டமான ரோஜாப் பூங்கொத்துடன் ஓடிச் சென்றார். “வெல்கம் சார்! வெல்கம் டு சென்னை ஆபீஸ்! உங்களை நேர்ல பார்க்குறதுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் சார்!” என குனிந்து வினயமாகப் பல்லைக் காட்டினார்.
அவருக்குச் சற்றுப் பின்னாலேயே, ஒரு சாதாரண உதவியாளனைப் போல, கையில் சில ஃபைல்களை அணைத்துப் பிடித்துக்கொண்டு, மிகவும் அடக்கமாக நின்றிருந்தான் ஆகாஷ்.
“குட் மார்னிங் சார்!” என ஆகாஷ் மிகவும் வினயமாக, தன் குரலைச் சற்றே தாழ்த்திச் சொல்ல, சித்தார்த்தின் இதழ்களில் ஒரு மெல்லிய குறும்புச் சிரிப்பு அரும்பியது. தன் நண்பனை இந்தச் சாதாரண நிலையில் பார்த்த சித்தார்த்துக்குச் சிரிப்பு வந்தாலும், அதை லாவகமாக மறைத்துக்கொண்டு ஒரு CEO விறைப்போடு அவனைப் பார்த்தவன், தன் கண்ணாடியைக் கழற்றி, பக்கத்தில் நின்ற மனோஜைப் பார்த்து..
“மிஸ்டர் மனோஜ்… ஹூ இஸ் திஸ்?” என ஒன்றும் தெரியாதது போல ஆகாஷைச் சுட்டிக்காட்டிக் கேட்டான்.
மனோஜ் பதற்றத்துடன், “சார்… இவன் தான் ஆகாஷ். உங்களுக்காக அப்பாயிண்ட் பண்ண புது PA. இன்னைக்கு தான் ஜாயின் பண்ணியிருக்கான் சார்,” என விளக்கினான்.
சித்தார்த் ஒரு மர்மப் புன்னகையுடன் ஆகாஷின் அருகில் சென்று, அவனை மேலிருந்து கீழ் வரை ஒரு அதிகாரத் தோரணையில் அளவெடுத்தான். “ஹோ… அப்படியா? உன் நேம் என்னன்னு சொன்ன?” எனத் தெரிந்தே ஒரு ராகிங் செய்வது போல வினவினான்.
ஆகாஷ் தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு, “ஆகாஷ்… ஆகாஷ் சார்,” எனத் தலையைக் குனிந்து சொல்ல..
“ஆகாஷ்… ம்ம் நைஸ் நேம்! சரி, என்னோட ஷெட்யூல் எல்லாம் கரெக்டா இருக்கான்னு செக் பண்ணிக்கோ. ஃபாலோ மீ!” எனச் சித்தார்த் கட்டளையிட, ஆகாஷ் “எஸ் சார்!” என ஒரு கச்சிதமான அசிஸ்டென்ட் போல அவன் பின்னால் நடக்கத் தொடங்கினான்.
இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள், “புது PAவை பார்த்தாலே CEOவுக்குப் பிடிச்சிருக்கு போலயே!” என முணுமுணுத்தனர். ஆனால், உள்ளே நுழையும்போது ஆகாஷும் சித்தார்த்தும் பரிமாறிக்கொண்ட அந்த ரகசியப் பார்வை இருக்கிறதே… அது அந்த மங்கூஸ் மண்டையன் மனோஜுக்கு மட்டும் தெரிந்திருந்தால் அங்கேயே மயக்கம் போட்டு விழுந்திருப்பான்!
அலுவலகத்தின் உள்ளே லிஃப்ட்டில் இவர்கள் செல்லும்போது, சித்தார்த் ஆகாஷைப் பார்த்து, “டேய்! என்னடா இப்படி நிக்கிற? உன்னைப் போய் இப்படி பார்க்க வேண்டியிருக்கே!” என்பது போல ஒரு பார்வையை வீசினான்.
ஆகாஷோ கண்களாலேயே, “நடிச்சது போதும்… ஒழுங்கா ரூமுக்குள்ள போடா டுப்புக்கு CEO!” என மிரட்டினான்.
லிப்ட் ஏழாவது தளத்தில் நிற்கவும் அவர்கள் அனைவரும் CEO அறைக்குள் நுழைந்தனர். மனோஜ் மிகவும் பணிவாக, அந்த CEOநாற்காலியைக் காட்டி, “சார்… ப்ளீஸ், உட்காருங்க சார்,” என்றார்.
சித்தார்த் அந்த நாற்காலியின் முன் நின்றதும் ஒரு கணம் தயங்கினான். அதன் உண்மையான உரிமையாளன் ஆகாஷ் தன் முன்னால் சாதாரணமாக நிற்க, தான் அதில் அமர்வது அவனுக்குத் தர்மசங்கடமாக இருந்தது.
அவன் ஆகாஷைப் பார்க்க, ஆகாஷோ தன் கண்களைக் கூர்மையாக்கி, “மரியாதையா உட்காருடா!” என ஸ்ட்ரிக்ட்டாக ஆர்டர் போட, சித்தார்த் வேறு வழியின்றி, சட்டென அந்த இருக்கையில் அமர்ந்தான்.
நாற்காலியில் அமர்ந்ததும் சித்தார்த் ஒரு நிமிடம் CEOவாகவே மாறிவிட்டான். மனோஜ் உடனே சில ஃபைல்களை நீட்டி, “சார்… இந்த குவார்ட்டர்லி ரிப்போர்ட்ஸ்… அப்புறம் புது புராஜெக்ட்ஸ் பத்தி…” எனப் பேசத் தொடங்கினான்.
கையை உயர்த்தி அவனைத் தடுத்த சித்தார்த், “மிஸ்டர் மனோஜ்! எனக்கு இப்போ கொஞ்சம் Fresh Air வேணும். நான் உங்களை அப்பறம் கூப்பிடுறேன். நீங்க கிளம்பலாம். அந்தப் புது ஜாய்னி, PA.. ஆகாஷ் மட்டும் இங்க இருக்கட்டும், எனக்கு சில இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுக்க வேண்டியிருக்கு,” என்றான் அதிகாரமான குரலில்.
ஒரு நிமிடம் திடுக்கிட்ட மனோஜ், வந்தவுடனேயே நம்மை வெளியே போகச் சொல்கிறாரே என வருத்தப்பட்டாலும், “ஓகே சார்… கண்டிப்பா சார்!” என்று தலையசைத்தபடி திரும்பியவன்,
வெளியே போகும்போது, ஆகாஷைப் பார்த்தவன், ஒரு வஞ்சகப் புன்னகையுடன், “பாஸைப் பார்த்துக்கோ… ஜாக்கிரதை!” என்பது போலக் கண்ணாலேயே சிக்னல் கொடுத்துவிட்டு நகர்ந்தான்.
அறையின் கதவு ‘திக்’ என்ற சத்தத்துடன் மூடியதுதான் தாமதம், அதுவரை இறுக்கமான நாற்காலியில் அமர்ந்திருந்த சித்தார்த், ஸ்பிரிங் சுருள் போல எகிறி குதித்து எழுந்தான்.
“டேய் ஆகாஷ்! என்னால முடியலடா… அந்த மங்கூஸ் மண்டையன் மனோஜ் என்னை ஒரு மாதிரி சார்.. சார்..னு பம்மிக்கிட்டுப் பார்க்குறதைப் பார்த்தா எனக்குச் சிரிப்பு முட்டிக்கிட்டு வருது. ஒரு நிமிஷம் இருந்தா அங்கேயே விழுந்து சிரிச்சிருப்பேன்!” எனப் புலம்பினான்.
ஆனால் ஆகாஷோ வேறு ஒரு உலகத்தில் இருந்தான். “ஓஹொய்!” என உற்சாகத்தில் கத்தியவன், அந்தப் பெரிய அறையினுள் ஒரு சிறுவனைப் போல ஓடினான்.
சித்தார்த்தின் கைகளைப் பற்றிக்கொண்டு ஜாலியாக ஒரு குட்டி ஆட்டம் போட்டவன், சட்டென அவனை இழுத்து தன் மார்போடு இறுக அணைத்துக்கொண்டான்.
இவனது செயல்களை பார்த்து குழப்பத்தில் உறைந்து போனான் சித்தார்த். “டேய்.. டேய்.. என்னாச்சு உனக்கு? சென்னை வெயில் மண்டையில ஏறிடுச்சா? இல்ல கார் பழுதான அதிர்ச்சியில இப்படிப் பண்ணிட்டு இருக்கியா? ஏன்டா இவ்வளவு சந்தோஷம்?” என வினவ.
ஆகாஷ் தன் நண்பனின் தோளைப் பிடித்துக் குலுக்கியவன். “இல்லடா சித்தா… இன்னைக்கு காலையில கார் நின்னது எனக்குக் கிடைச்ச ஒரு வரப்பிரசாதம்டா!”
“என்னடா சொல்ற?”
ஆகாஷ் கண்களில் மின்னல் தெறிக்க, இன்று காலை நடந்த அனைத்தையும் விவரித்தான். மழையில் நனைந்தபடி அகல்யா வண்டியில் ஏறியதும், அவளது அந்த வெள்ளந்திப் பேச்சும், அப்புறம் அந்த கேண்டீன் கலாட்டா என ஒவ்வொன்றையும் வர்ணித்தவன்.
“சித்தா… அவளைப் பத்தி என்னன்னு சொல்றது? பியூர் ஹார்ட் டா. நான் யாரு, என்னன்னு தெரியாமலேயே எனக்காக அந்த மனோஜ் கிட்ட பேசாதீங்கன்னு அட்வைஸ் பண்றா. அப்புறம் நான் ஹேமா கூடப் பேசும்போது அவளுக்கு வந்த அந்தப் பொறாமை இருக்கே… வாவ்! அவ ஒரு அக்மார்க் சென்னை பொண்ணுடா. துறுதுறுன்னு, அதே சமயம் மத்தவங்க மேல அவ்வளவு அக்கறையா இருக்கா. இந்த உலகத்துல இன்னும் இப்படிப்பட்ட மனுஷங்க இருக்காங்கன்னு அவளைப் பார்த்தப்புறம் தான்டா எனக்குத் தெரியுது!” எனப் பெருமையாகக் கூறினான்.
ஆச்சரியத்தில் வாயைப் பிளந்த சித்தார்த், “அப்போ நம்ம CEO சார், முதல் பார்வையிலேயே ஒரு பொண்ணுகிட்ட க்ளீன் போல்ட் ஆகிட்டீங்கன்னு சொல்லு!”
“போல்ட் எல்லாம் இல்லடா… இது எதோ ஒரு புது ஃபீலிங். அவகிட்ட நான் CEOன்னு இப்போதைக்கு சொல்லவே போறதில்லை. அவளோட இந்த உண்மையான அன்பையும், அந்தச் சின்னச் சின்னச் சீண்டல்களையும் நான் PAவாகவே இருந்து ரசிக்கப்போறேன்,” என ஆகாஷ் சொல்ல, அவனது முகம் காதலில் சிவந்தது.
சித்தார்த் அப்படியே திகைத்துப் போய் நின்றான். லண்டனில் பெரிய பெரிய பிசினஸ் டீல்களை அசால்ட்டாக முடிக்கும் ஆகாஷ், ஒரு பெண்ணைப் பற்றி இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவது அவனுக்குப் பெரும் வியப்பை அளித்தது.
“டேய் ஆகாஷ்… என்னடா சொல்ற? நிஜமாவே நீ அவளைக் காதலிக்கிறியா? ஆர் யு இன் லவ் வித் ஹர்?” என சித்தார்த் அதிர்ச்சியும் ஆர்வமும் கலந்து கேட்க…
அந்தக் கேள்விக்கு ஆகாஷிடம் உடனடி பதில் இல்லை, மெதுவாக அந்த அறையின் பெரிய கண்ணாடி ஜன்னல் அருகே சென்று நின்றவன், வெளியே பெய்து ஓய்ந்திருந்த மழையின் மிச்சங்கள் செடிகளில் மின்னிக் கொண்டிருந்தன.
“காதலான்னு கேட்டா எனக்குச் சொல்லத் தெரியலடா சித்தா…” என நீண்ட பெருமூச்சுடன் தொடங்கிய ஆகாஷ்.
“ஆனா, அவளை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இது ஏதோ சாதாரணப் பிடிப்பு இல்லை. அவ பக்கத்துல இருக்கும்போது மனசுக்குள்ள ஒரு இனம் புரியாத சந்தோஷம் வருது. என் லைஃப்ல இதுவரைக்கும் நான் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கேன், பழகியிருக்கேன்… ஆனா இப்படி ஒரு ஸ்பெஷல் ஃபீலிங் எனக்கு எப்பவுமே வந்தது இல்லடா.”
ஆகாஷ் ஒரு நிமிடம் அமைதியாகி, அகல்யா சிரித்த அந்த முகத்தை நினைத்துப் பார்த்தான். “அவ பேசுற அந்தச் சின்னச் சின்ன விஷயங்கள், அந்த வம்புப் பேச்சு, ஏன்… அவ என்னை அந்த மங்கூஸ் மண்டையன்கிட்ட இருந்து காப்பாத்தணும்னு நினைக்கிற அந்த அக்கறை கூட என்னை ஏதோ செய்யுதுடா. அவளோட அந்தத் துறுதுறுப்பும், கள்ளமில்லாத சிரிப்பும் எனக்குள்ள ஒரு இன்னர் ஹேப்பினஸ் கொடுக்குது.
இந்த உலகத்துல இருக்குற மத்த எல்லாப் பிரச்சனையும் மறந்துட்டு, அவ கூடவே பேசிட்டு இருக்கணும்னு தோணுது,” எனத் தன் உள்ளக்கிடக்கையைத் கொட்டினான்.
சித்தார்த் அவன் தோளில் தட்டி, “இதுதான்டா காதலோட ஆரம்பம் போல! ஆனா ஆகாஷ், நீ CEOவா அவ முன்னாடி நிக்கும்போது அவ எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு யோசிச்சியா? ஒருவேளை அவ பயந்துட்டா?” என எதார்த்தத்தைக் கேட்டான்.
“அதான் எனக்கும் பயமா இருக்கு. அதனாலதான் இந்த PA நாடகத்தைத் தொடரணும்னு நினைக்கிறேன். அவளோட உண்மையான ஆகாஷாவே அவ மனசுல இடம் பிடிக்கணும். பதவி, பணம் இதெல்லாம் இல்லாம வெறும் ஆகாஷ் மேல அவளுக்கு அன்பு வரணும். அதுக்கப்புறம் மத்ததைச் சொல்லிக்கலாம்,” என உறுதியாகச் சொன்னான் ஆகாஷ்.
அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே, அறையின் கதவு லேசாகத் தட்டப்படும் சத்தம் கேட்டது. இருவரும் சட்டென உஷாராகி, தங்கள் இடங்களை மாற்றிக் கொண்டனர். சித்தார்த் மீண்டும் அந்த CEO நாற்காலியில் அமர்ந்து முகத்தை விறைப்பாக வைத்துக் கொள்ள, ஆகாஷ் வினயமாக ஃபைல்களைப் பிடித்தபடி பக்கத்தில் நின்றான்.
அறையின் கதவு மெதுவாகத் திறக்கப்பட, உள்ளே நுழைந்தது வேறு யாருமல்ல, மனோஜ் தான். கையில் கோப்பையில் ஆவி பறக்கும் காபியுடன், மிகுந்த வினயத்துடன் உள்ளே வந்தான்.
காபியை மேஜை மீது வைத்துவிட்டு, தன் கைகளைக் கட்டிக்கொண்டு மிகவும் தயக்கத்துடன், “சார்… அது வந்து… ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு வந்தேன்.”
சித்தார்த் புருவத்தை உயர்த்தி, “சொல்லுங்க மனோஜ்,” என்றான்.
“சார், நான் லண்டன் ஆபீஸ்ல ஏற்கனவே பர்மிஷன் கேட்டு, ஊருக்குப் போக இன்னைக்கு சாயந்திரம் டிக்கெட் புக் பண்ணிட்டேன். அம்மாவைப் பார்க்கப் போகணும் சார். நீங்க திடீர்னு வந்ததுனால என்ன பண்றதுன்னு தெரியல… நீங்க அனுமதி கொடுத்தா…” என இழுத்தான்.
சித்தார்த் உடனே பக்கத்தில் நின்றிருந்த ஆகாஷைப் பார்க்க, அவன் தன் கண்களாலேயே, “விடுடா அவனை… அவன் போனாத்தான் நமக்கு இங்கே முழு சுதந்திரம் கிடைக்கும். நமக்குத் தேவை பிரைவசி!” என்று சிக்னல் கொடுத்தான்.
ஆகாஷின் சிக்னலைப் புரிந்துகொண்ட சித்தார்த், மனோஜைப் பார்த்து, “ஓ… ஃபேமிலி மேட்டர்னா கண்டிப்பா போயிட்டு வாங்க மனோஜ். மத்த விஷயங்களை புது PA ஆகாஷ் பார்த்துப்பான். நீங்க கிளம்பலாம்,” என்று தாராளமாக அனுமதி கொடுத்தான்.
“ரொம்ப தேங்க்ஸ் சார்! ரொம்ப தேங்க்ஸ்!” என மனோஜ் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து, ஆகாஷைப் பார்த்து ஒரு வெற்றிப் புன்னகையை வீசிவிட்டு வெளியேறினான்.
ஆகாஷிற்குச் சிரிப்பு வந்தது… ‘பாவம், CEOகிட்டயே என்னை வேலை பார்க்கச் சொல்லிட்டுப் போறானே!’ என்று.
மனோஜ் கதவை மூடியதும், “சித்தா… இப்பவே மேனேஜர் ரூமுக்கு கால் பண்ணு. மனோஜ் இன்னும் சீட்டை விட்டு எழுந்திருக்க மாட்டார். அவன்கிட்ட சொல்லி, அகல்யாவை உடனே CEO ரூமுக்கு வரச் சொல்ல ஆர்டர் போடு!”
வாயைப் பிளந்த சித்தார்த், “டேய்! இப்பதானே அவளைப் பார்த்துட்டு வந்த? அதுக்குள்ள மறுபடியுமா?”
“டேய்… ” என ஆகாஷ் அவசரப்படுத்த..
சித்தார்த் சிரித்துக்கொண்டே, “ஹலோ மனோஜ்… போறதுக்கு முன்னாடி ஒரு சின்ன வேலை. உங்க டிபார்ட்மென்ட்ல அகல்யான்னு ஒரு பொண்ணு இருக்காங்கள்ள? அவங்களை ஒரு முக்கியமான ஃபைலோட உடனே என் ரூமுக்கு வரச் சொல்லுங்க!”
மறுமுனையில் மனோஜ், “கண்டிப்பா சார், இதோ இப்போவே அனுப்பி வைக்கிறேன்!” எனப் பதற்றத்துடன் சொன்னான்.
ஆகாஷின் இதழ்களில் ஒரு கள்ளச் சிரிப்பு… அகல்யாவின் வருகைக்காக அவன் இதயம் ஆவலோடு துடிக்கத் தொடங்கியது.
🌧️தூறல்கள் தொடரும்…
