மாலை நேரம். அலுவலகத்தின் பார்க்கிங் பகுதியில் அந்த வெள்ளை நிற கேப் வந்து நின்றது. வானம் இன்னும் லேசாகத் தூறிக் கொண்டிருக்க, அகல்யா தன் பையை மடியில் வைத்தபடி ஜன்னல் ஓரம் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது கேப்பின் கதவு திறக்கப்பட, உள்ளே நுழைந்த ஆகாஷைப் பார்த்ததும் அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
“பாஸ்! நீங்க என்ன இங்க?” என அகல்யா பதற்றத்துடன் கேட்டுக்கொண்டே தள்ளி அமர
ஆகாஷ் ஒரு கூல் புன்னகையுடன் அவள் அருகில் அமர்ந்துக்கொண்டு கதவைச் சாத்தியவன், “ஏன் அகல்யா… நானும் இதே ரூட் தான்னு மதியம் தான் சொன்னேனே? டிரான்ஸ்போர்ட்ல கேட்டேன், அதே கேப்ல தான் சீட் கிடைச்சது,” என மிகவும் அப்பாவியாகப் பொய் சொன்னான்.
வண்டி நகரத் தொடங்கியது.
அகல்யாவுக்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், மறுபக்கம் ஒரு தர்மசங்கடம். மதியம் ஹேமாவிடம் சும்மா ஒரு சீண்டலுக்காகச் சொன்ன பொய், இப்படி நிஜமாகவே கண் முன்னால் வந்து அமரும் என்று அவள் நினைக்கவே இல்லை.
சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, அகல்யா மெதுவாகத் தன் மௌனத்தைக் கலைத்தாள். “பாஸ்… ஒரு விஷயம் கேட்கணும். மதியம் ஹேமா அந்த கேப் விஷயத்தைப் பத்தி உங்ககிட்ட கேட்டப்போ, நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணனும்னு தான் ஆமான்னு சொன்னீங்கன்னு நினைச்சேன். என் மானத்தைக் காப்பாத்த நீங்க பண்ணின ஒரு ஹெல்ப் அதுன்னு மனசுக்குள்ள உங்களுக்கு நன்றி கூடச் சொல்லிக்கிட்டேன்…”
அவள் சற்று இடைவெளி விட்டு, ஆகாஷின் கண்களைத் தேடிப் பார்த்தாள். “ஆனா… நிஜமாவே இப்படி உண்மையா என் கூடவே கேப்ல வருவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை பாஸ். இதை என்னால நம்பவே முடியல!” என்றாள் ஆச்சரியம் விலகாமல்.
அவளையே உற்றுப் பார்த்த ஆகாஷ், “சில பொய்கள் நிஜமானா நல்லா இருக்கும்னு தோணும் அகல்யா. நீ சொன்ன அந்தப் பொய் எனக்கும் பிடிச்சிருந்தது. அதான் அதை அப்படியே நிஜமாக்கிட்டேன். இதுல என்ன ஆச்சரியம்?” என அவன் மென்மையாகக் கேட்க, அகல்யாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.
“ஆனாலும் நீங்க CEOவோட PA. உங்களுக்கு CEO கூட போக அவர் கார் இருக்காதா பாஸ்? எதுக்கு இப்படி எங்க கூட கேப்ல கஷ்டப்பட்டு வரணும்?” என அவள் அடுத்த அஸ்திரத்தைப் போட்டாள்.
“அவர் கூட கார்ல போறதுல கிடைக்காத ஒரு சந்தோஷம், பிடிச்சவங்க கூட இந்த மாதிரி கேப்ல போறதுல கிடைக்கும்னு எனக்குத் தோணுது. இது கஷ்டம் இல்ல அகல்யா… எனக்கு இது ஒரு அழகான பயணம்,” என ஆகாஷ் கவித்துவமாகச் சொல்ல, அகல்யா பதில் சொல்ல முடியாமல் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள்.
மழைத் துளிகள் ஜன்னல் கண்ணாடியில் வழிவதைப் போல, அவளது மனதுக்குள் ஒரு புதிய காதல் உணர்வு மெல்ல வழியத் தொடங்கியது.
வண்டி இரண்டு மூன்று சிக்னல்களைக் கடந்து மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. அதுவரை அகல்யா வெளியே வேடிக்கை பார்ப்பது போலவே அமர்ந்திருந்தாள். அவளது மௌனம் ஆகாஷிற்கு ஒருவிதமான தவிப்பைத் தர..
“ஏன் அகல்யா… வண்டி ஏறினதுல இருந்து அந்தப் பக்கமே திரும்பி இருக்க? நான் இப்படி உன் கூட கேப்ல வந்தது உனக்கு பிடிக்கலையா?” என ஆகாஷ் மெல்லிய குரலில் கேட்டான்.
சட்டெனத் திரும்பிய அகல்யா, “அப்படியெல்லாம் இல்லை பாஸ்! நானும் உங்களை எதிர்பார்த்து தான் தேடிட்டு …” எனத் துறுதுறுவெனச் சொல்லிவிட்டு, அடுத்த நொடியே தன் வாய் தவறியதை உணர்ந்து பதறியவள் நாக்கைக் கடித்துக்கொண்டு,
“சாரி பாஸ்… நான் என்ன சொல்ல வந்தேன்னா…” என இழுக்க, ஆகாஷ் அவளது அந்த எதிர்பார்த்த என்ற வார்த்தையில் அப்படியே சொக்கிப் போய், ஒரு கள்ளச்சிரிப்புடன் அவளையே பார்த்தான். “சொல்லு அகல்யா… எதிர்பார்த்து தான் தேடிட்டு அப்புறம்?”
அவள் நிலைமையைச் சமாளிக்க முயற்சித்தவள், “அப்படி இல்லை பாஸ்… வாழ்க்கையில மட்டும் இல்லை, இதுவரைக்கும் இந்த கேப்ல நான் தனியாவே போயிட்டு வந்து பழகிடுச்சு. எனக்குன்னு ஒரு தனி உலகம், ஒரு அமைதி அதுல இருக்கும். ஆனா இப்போ திடீர்னு ஒருத்தர் கூட வரும்போது… அதுவும் உங்களைப் போல ஒருத்தர் கூட வரும்போது எனக்கு என்னவோ போல இருக்கு. ஒரு சின்ன தயக்கம், ஒரு சின்ன நடுக்கம்… அதான் புரியாம இப்படி உட்கார்ந்திருக்கேன்,” என உண்மையை ஒருவாறு மறைத்துச் சமாளித்தாள்.
ஆகாஷ் அவள் சொல்வதைக் கேட்டு ரசித்தான். “தனிமையில போறது அமைதியா இருக்கலாம் அகல்யா. ஆனா ஒரு துணையோட போற பயணம் ரொம்ப அழகா இருக்கும். ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும், பழகிடும். எனக்கும் இது புதுசு தான்… ஆனா எனக்கு இந்த புதுசு ரொம்பப் பிடிச்சிருக்கு,” என்றான் அவளது கண்களை ஆழமாகப் பார்த்தபடி.
“சரி, அதை விடு… இன்னைக்கு ஆபீஸ்ல உனக்கு ஒரு மாசம் சம்பளம் போனஸா, ஒரு பெரிய கிப்ட் கிடைச்சதே! அதைப்பத்தி நீ என்கிட்ட எதுவுமே சொல்லல. உனக்கு உண்மையாவே ஹாப்பி தானே?” என அவன் அக்கறையுடன் வினவ.
அவன் கேட்ட பிறகுதான் அகல்யாவுக்கு அந்தப் பழைய நினைவே வந்தது. அவளது முகம் சட்டென ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போலப் பிரகாசமாக. “ஆமா பாஸ்! நான் தான் உங்ககிட்ட மறுபடியும் தேங்க்ஸ் சொல்லணும்னு நினைச்சேன். அந்த பயத்துல நான் இதை சுத்தமா மறந்துட்டேன் பாஸ். நிஜமாவே கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விஷயம் இது. எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு!” என்றாள் உற்சாகம் குறையாமல்.
“உங்களுக்குத் தெரியாது பாஸ்… அந்தப் பணம் இப்போ எனக்கு எவ்வளவு பெரிய உதவியா இருக்கும்னு. உண்மையிலேயே நான் உங்களுக்கு ரொம்ப நன்றி கடன் பட்டிருக்கேன்,” என நெகிழ்ச்சியுடன் அவன் கண்களைப் பார்த்தாள்.
ஆகாஷ் ஒரு குறும்புச் சிரிப்பை உதிர்த்தான். “அடிப்பாவி… நீ எனக்குத் தந்த அந்த பரிசுக்கு (அணைப்பு) முன்னாடி, இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல அகல்யா,” என மனதுக்குள் நினைத்தவன்,
“நன்றி கடன்லாம் இருக்கட்டும்… ஆனா உன் பர்த்டே-க்கு கம்பெனி உனக்கு மட்டும்தான் பணம் கொடுத்திருக்காங்க. எனக்கு ஒரு ரூபா கூடக் கொடுக்கல. அதனால, காலையில நீ வாங்கித் தந்த போண்டாவுக்கும் டீ-க்கும் இன்னும் நான் உனக்குக் கடன் பாக்கி தான் வச்சிருக்கேன். அதை எப்படித் தீர்க்கப் போறனோ?” என ஆகாஷ் கண்ணடித்ததும்.
அகல்யாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “என்ன பாஸ் நீங்க… அவ்வளவு பெரிய போனஸ் வாங்கித் தந்தவர், இந்த ஒரு டீ-யை போய் கணக்குக் கேக்குறீங்களே?”
“பின்ன… அது நீ ஆசையா வாங்கித் தந்தது இல்லையா? அந்தப் போண்டா டேஸ்ட் இன்னும் என் நாக்குலேயே இருக்கு. அந்த ஒரு டீ-யை வச்சு என்னால ஆயுசுக்கும் உன்னை ஓட்ட முடியும்!” என அவன் வம்பிழுக்க, அகல்யா முதன்முதலாகத் தயக்கம் நீங்கிச் சத்தமாகச் சிரித்தவளது முகம் மலர்ந்தது.
“அடப்போங்க பாஸ்… அந்த டீக்கு கடன் எல்லாம் நீங்க கொடுக்கவே வேண்டாம். அது என்னோட பர்த்டே ட்ரீடாகவே இருக்கட்டும். இவ்வளவு பெரிய போனஸ் நீங்க எனக்கு வாங்கித் தந்திருக்கீங்க… அதுக்கு முன்னாடி அந்த டீயும் போண்டாவும் ஒரு விஷயமே இல்லை. அதை நான் உங்களுக்குக் கொடுத்த ஒரு சின்ன அன்பா வச்சுக்கோங்க,” என்றாள் மனதார.
சற்று நேரம் நிலவிய மௌனத்திற்குப் பிறகு, அவன் பக்கம் திரும்பிய அகல்யா, “ஆமா பாஸ்… வண்டி ஏறினதுல இருந்து நான் என்னை பத்தி மட்டுமே பேசிக்கிட்டே வர்றேன். ஆனா உங்களைப் பத்தி எதுவுமே சொல்லவே இல்லையே! உங்க ஊர் எது? உங்க ஃபேமிலி பத்தி சொல்லுங்களேன்,” எனத் துருவித் துருவிப் பார்த்தாள்.
ஆகாஷ் ஒரு நிமிடம் திகைத்தான். லண்டன் பிசினஸ் ஸ்கூல், பல கோடி ரூபாய் சொத்துக்கள் எனத் தன் உண்மையான அடையாளத்தைச் சொன்னால், இந்தப் பயணம் இப்போதே முடிந்துவிடும் என்று அவனுக்குத் தெரியும். சட்டெனத் தன் நினைவுகளைச் சுழற்றினான்.
அவனுக்குத் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாகத் தெரிந்த ஒரே ஊர் மதுரை மட்டும்தான். அது அவனது தந்தையின் பூர்வீகம். அதுமட்டுமல்ல, அவனது வாழ்க்கையில் ஒரு பெரிய பிரளயத்தையே ஏற்படுத்திய, அவனால் மறக்க முடியாத நினைவுகளைக் கொண்ட ஊர் அது.
தன் குரலை நிதானமாக்கியவன், “நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே மதுரை தான் அகல்யா. அம்மா, அப்பாக்கு நான் ஒரே பிள்ளை தான். இப்போ வேலை தேடித்தான் சென்னைக்கு வந்தேன். அப்பாவுக்குத் தெரிஞ்ச ஒருத்தர் மூலமா தான் இந்த வேலையை எனக்கு ஏற்பாடு செஞ்சு கொடுத்தாங்க. ஒரு வழியா PAவா செட்டில் ஆகிட்டேன். இனிமேல் தான் கொஞ்சம் கொஞ்சமா சம்பாதிச்சு, என் அம்மா அப்பாவை சென்னைக்குக் கூட்டிக்கிட்டு வரணும். அப்புறம் தான் வாழ்க்கையோட அடுத்த கட்டத்தைப் பத்தி யோசிக்கணும்,” எனத் தன் CEO முகத்தை மறைத்து, ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞனாகப் பேசி முடித்தான்.
அவன் சொல்லச் சொல்ல, அகல்யா கண்கள் இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனது பேச்சில் தெரிந்த ஒரு மெல்லிய ஏக்கம் அவளைப் பாதித்தது. “உங்களை மாதிரி ஒரு நல்ல பையனுக்கு எல்லாமே சீக்கிரம் நல்லபடியா நடக்கும் பாஸ். ஆனா ஒன்னு… உங்க அம்மா அப்பாவை நீங்க சென்னைக்குக் கூட்டிட்டு வர்றப்போ, நான் தான் முன்னாடி வந்து அவங்களை வரவேற்பேன். இது promise!” என்றாள் உணர்ச்சிவசப்பட்டு.
ஆகாஷ் அவளது அந்த நம்பிக்கையான பேச்சைக் கண்டு நெகிழ்ந்து போனான். பொய் சொன்னாலும், அந்தப் பொய்யால் அவளுக்குள் உருவான அந்த அக்கறை அவனுக்குள் ஒரு சூடான உணர்வைத் தந்தது.
“சரி அகல்யா, இப்போதான் கையில் ஒரு மாச சம்பளம் போனஸா கிடைச்சிருக்கே! நாளைக்கு Weekend லீவு வேற. என்ன பிளான் வச்சிருக்க? பிரண்ட்ஸ் கூட சேர்ந்து ஷாப்பிங், மூவின்னு ஒரே ரகளைதானே? இந்த மொத்தப் பணத்தையும் வச்சு என்ன அட்டகாசம் பண்ணப் போற?” எனக் கண்ணடித்துக் கேட்க
அவளது முகம் பிரகாசமாகும் என்று எதிர்பார்த்த ஆகாஷிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவன் கேட்ட அடுத்த நொடி, அகல்யாவின் முகத்தில் இருந்த அந்தப் புன்னகை மெல்ல மறைந்து, ஒருவிதமான வாட்டம் குடியேறியது. ஜன்னல் வழியே வெளியே பெய்து ஓய்ந்திருந்த சாலையை வெறித்துப் பார்த்தாள்.
“ஏன் அகல்யா? என்னாச்சு? நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா?” என ஆகாஷ் பதற்றத்துடன் வினவினான்.
அகல்யா ஒரு நீண்ட பெருமூச்சை வெளிப்படுத்தினாள். “அப்படியெல்லாம் இல்லை பாஸ். நீங்க சொன்னது போல ஷாப்பிங் போகவோ, ரகளை பண்ணவோ எனக்கு பிரண்ட்ஸும் யாரும் இல்லை… கூட்டிட்டுப் போகச் சொந்தக்காரங்களும் யாரும் இல்லை. இந்த உலகத்துல எனக்காக இருக்கிறது நான் மட்டும்தான்,” என வெண்மையாக சிரித்தாள்
அந்த சிரிப்பு ஆகாஷின் இதயத்தை ஒரு கணம் சுருங்கியது. அவளது தனிமையைப் பற்றித் தெரிந்திருந்தாலும், அவள் வாயாலேயே அதைக் கேட்கும்போது அவனுக்குள் ஏதோ ஒரு பாரம் ஏறியது.
“இந்த ஒரு மாச சம்பளத்தை வச்சு நான் எனக்காக எதையும் வாங்கிக்கப் போறது இல்லை பாஸ். ஆனா ஒரு முக்கிய விஷயத்துக்கு இந்த பணம் அவசியம் போகணும் … இன்னும் சொல்ல போனா இந்த பணம் அதுகவே கடவும் உங்க உருவத்தில் வந்து கொடுத்தது போல இருக்கு .. என்றவள் கண்கள் கலங்கியது..
🌧️தூறல்கள் தொடரும்…
