தூவானம் -17

அகல்யா ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்தபடி பேசத் தொடங்கினாள். “இந்த மாசம் எனக்கு PG-ல் ஏற்கனவே கொஞ்சம் செலவு பாக்கி இருக்கு பாஸ். அதுக்காக இந்த பணம் வந்தது எனக்கு ஒரு பெரிய விஷயம் தான். ஆனா அதைத் தாண்டி இன்னொரு முக்கியமான விஷயத்துக்கும் இந்த பணம் தேவைப்படுது… ஆனாலும், அந்த மலைக்கு இது ஒரு சிறு கல்லு தான்!” என ஒரு நீண்ட பெருமூச்சை வெளிப்படுத்தினாள்.

ஆகாஷிற்கு அவள் சொல்வது புரியவில்லை. “மலைக்குச் சிறு கல்லா? அப்படி என்ன உனக்கு முக்கியமான செலவு? உனக்குத்தான் யாரும் இல்லைன்னு சொன்னியே… அப்புறம் யாருக்காக இவ்வளவு யோசிக்கிற?” எனக் குழப்பத்துடன் கேட்டான்.

அவன் பக்கம் திரும்பிய அகல்யா, மெல்லிய குரலில், “பாஸ், நான் எனக்காக எதையும் பெருசா வாங்கிக்கப் போறது இல்லை. நான் வளர்ந்தது ஒரு ஆசிரமத்துல தான்னு ஏற்கனவே சொன்னேன் இல்லையா? அதனால நான் சம்பாதிக்கிற பணத்துல இருந்து ஒரு பங்கைக் கண்டிப்பா மாசம் மாசம் அங்க கொடுத்துடுவேன். அங்க இருக்கிற குழந்தைகளுக்கு ஒரு வேளை நல்ல சாப்பாடு வாங்கித் தருவேன். எனக்குத் தெரிஞ்ச எனக்குன்னு இருக்க ஒரே சொந்தம் அவங்க மட்டும்தான் பாஸ். ஆனா, இந்த முறை…” எனச் சொல்லும்போதே அவளது வார்த்தைகள் தடுமாறின.

“என்னாச்சு அகல்யா?” என ஆகாஷ் கேட்க 

“போன முறை நான் ஆசிரமத்துக்குப் போனப்போ… அங்க இருக்கிற ஒரு குழந்தைக்குத் திடீர்னு உடம்பு முடியாம போயிடுச்சு. அந்தப் பாப்பாவுக்கு இதயத்துல ஒரு ஓட்டை இருக்கு டாக்டர்ஸ் உடனே ஆபரேஷன் செய்யணும்னு சொல்லிட்டாங்க. அதுக்கு உண்மையிலேயே நிறையச் செலவு தேவைப்படுது பாஸ். என்னால முடிஞ்ச பணத்தைக் கொடுத்துட்டேன், ஆனா அது அந்த ஆபரேஷன் செலவுக்குக் கால்வாசி கூட இல்லை.

ஆபீஸ்ல மெடிக்கல் லோன் வாங்குறதுக்கு எவ்வளவோ முயற்சி பண்ணினேன்,  ஆனா என்னை நம்பி எப்படி லோன் தருவாங்க? ” என்று சொன்னவளின் முகத்தில் ஒரு சிறு புன்னகை பூத்தது. ஆனால் அந்தப் புன்னகை ஆகாஷின் இதயத்தில் முள்ளாகக் குத்தியது. தனக்காக எதையும் யோசிக்காமல், அடுத்த உயிரைக் காக்க அவள் காட்டும் அந்தத் துணிச்சல் அவனை வியக்க வைத்தது.

“அந்தப் பாப்பாவோட முகம் தான் எனக்குக் கண்ணு முன்னாடி வந்துட்டு இருக்கு, பாஸ்” எனத் தழுதழுத்தாள்.

ஆகாஷ் ஒரு நிமிடம் பேச்சற்றுப் போனான். தன் கண் முன்னால் இருப்பவள், தன் கம்பனியில் வேலை செய்யும் ஒரு ஊழியர் மட்டும் அல்ல, அவள் ஒரு நடமாடும் தேவதை என்றே அவனுக்குத் தோன்றியது. “லோன் கிடைக்கலைன்னா என்ன அகல்யா… உனக்குத்தான் இப்போ போனஸ் கிடைச்சிருக்கே?” என்றான்.

“ம்ம் ஆமா, இந்த ஒரு மாச போனஸ் அந்தப் பாப்பாவோட உயிரைக் காப்பாத்தப் போதுமானதா இருக்காது பாஸ். ஆனா, இதையும் கொண்டு போய் அங்க கொடுக்கணும்னு தான் நினைக்கிறேன்,” எனச் சொல்லிவிட்டு ஒரு சோகப் புன்னகையை உதிர்த்தாள்.

அகல்யா மெல்லச் சிரித்துக்கொண்டே சொன்ன அந்தப் பதிலில் இருந்த யதார்த்தம் ஆகாஷின் நெஞ்சில் சம்மட்டியால் அடித்தது போல இருந்தது.

மேலும் தொடர்ந்த அகல்யா, “பாஸ், அந்தப் பாப்பாவோட ஆபரேஷனுக்கு எப்படியும் நாலஞ்சு லட்சம் ரூபாய் தேவைப்படுது. இந்த இருபதாயிரம் ரூபா, அந்த லட்சங்களுக்கு முன்னாடி ஒரு சிறு கல்லு தான். ஆனா, இது போல இன்னும் சில கல்லைச் சேர்த்து அந்த மலையை உருவாக்கி, எப்படியாவது அந்த நாலஞ்சு லட்சத்தை நான் திரட்டிடுவேன்னு ஒரு நம்பிக்கை இருக்கு பாஸ்.”

அவள் சொல்லச் சொல்ல ஆகாஷின் உள்ளம் குமுறியது. “இதுவரைக்கும் அங்க இருக்கிறவங்க கொடுத்தது, நான் சேர்த்ததுன்னு ஒரு ஒன்றரை லட்சம் தேறி இருக்கு. இன்னும் கொஞ்ச நாள்ல மீதி பணத்தையும் எப்படியாவது கலெக்ட் பண்ணி அந்த உயிரைக் காப்பாத்தணும். அதுக்காகத்தான் நாளைக்கு லீவுல நான் அங்க போகணும்னு இருக்கேன்,” என்றாள்.

“எனக்கு Weekend கொண்டாட்டம்லாம் பெருசா ஒன்னும் இல்ல பாஸ். அங்க போய் அந்தப் பசங்க கூட இருக்கிற அந்தச் சந்தோஷம்தான் எனக்கு நிஜமான நிம்மதி,” என அவள் நெகிழ்ச்சியுடன் சொன்னபோது, ஆகாஷ் அவளையே இமைக்காமல் பார்த்தான்.

மெதுவாக அவள் பக்கம் திரும்பியவனது கை, கார் சீட்டின் மேல் இருந்த அவளது கரத்தை தொடப் போய்த் தயங்கித் தடுத்தவன்,

“அகல்யா… நான் ஒன்னு கேட்கவா?” என்றான்.

“கேளுங்க பாஸ்…”

“அப்போ நாளைக்கு நீ கோவை போகப் போறியா?”

“ம்ம்… ஆமா பாஸ். அங்கதான் அந்த ஆசிரமம் இருக்கு.”

“எதுல போவே?” எனக் கேட்டான் ஆகாஷ்.

ஒரு வெள்ளந்திச் சிரிப்பு சிரித்தவள், “நான் என்ன பிளைட்லயா போக முடியும் பாஸ்? அவ்வளவு வசதி நமக்கு ஏது? ”

அந்தச் சிரிப்பு ஆகாஷிற்கு ‘பட்’ என இருந்தது. சொடுக்கு போடும் நேரத்தில் உலகத்தின் எந்த மூலைக்கும் விமானத்தில் பறப்பவன் அவன். நினைத்த நேரமெல்லாம் பல ரக சொகுசு கார்கள் அவனுக்குப் பின்னால் வரிசைகட்டி நிற்கும். ஆனால், ஒரு உயிரைக் காப்பாற்றத் துடிக்கும் இந்தப் பெண், ஒரு இரவு முழுதும் பஸ்ஸில் அலைந்து செல்லப் போவதை நினைத்தபோது அவன் மனதுக்குள் ஏதோ ஒன்று உடைந்தது.

அவளது வறுமை அவளுக்கு ஒரு சுமையாகத் தெரியவில்லை, ஆனால் அவனது செல்வம் அவனுக்கு இப்போது ஒரு பாரமாகத் தெரிந்தது.

“பஸ் தான் பாஸ்… இப்போ நேரா வீட்டுக்குப் போயிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டுட்டு, ராத்திரி கிளம்பினா காலையில அங்க போயிடலாம். விடியற்காலையில கோவையில இறங்குறப்போ அந்தப் பனித்துளியும், பசங்களோட சிரிப்புச் சத்தமும் கேட்கும் பாருங்களேன்… அது ஒரு வேற உலகம் பாஸ். ரெண்டு நாள் ஏதோ ஒரு சொர்க்கத்துல இருக்கிறது போல ஒரு உணர்வு இருக்கும்,” எனச் சொல்லும்போதே அவளது முகத்தில் அத்தனை மகிழ்ச்சி தாண்டவமாடியது.

பேசி முடித்தவள், ஆகாஷின் முகத்தில் இருந்த தீர்க்கமான யோசனையைப் பார்த்துவிட்டு, “ஏன் பாஸ் இவ்வளவு விவரமா கேட்குறீங்க? ஒருவேளை நீங்களும் என் கூட வரப்போறீங்களா என்ன?” என விளையாட்டுத்தனமாகக் கேட்டுச் சிரித்தாள். அவளது அந்தச் சிரிப்பு, “நிச்சயமா நீ வரமாட, ஆனா வந்தா எனக்கு அது ஒரு சொர்க்கம் தான்” என்பது போலவே இருந்தது.

ஆனால் ஆகாஷ் சற்றும் தயங்காமல், “அதான் நானும் யோசிக்கிறேன்…” என்றான்.

அந்த ஒரு வார்த்தையில் அகல்யாவின் சிரிப்புச் சத்தம் சட்டென நின்றது. அவள் இமைக்க மறந்து அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். ஒருவேளை அவன் கிண்டல் செய்கிறானோ என்று அவளது கண்கள் தேடின.

அவள் பக்கம் சாய்ந்த ஆகாஷ், அவளது கண்களை நேராகப் பார்த்தவன். “என்ன அப்படிப் பார்க்குற? நாளைக்கு அந்த இல்லத்துக்கு நீ போகும்போது, நானும் உன் கூட வரட்டுமா? உன் பாஸா இல்லாம, ஜஸ்ட் ஒரு பிரண்டா? எனக்கும் அங்க வரணும்னு ஆசைப்படுறேன். எனக்கும் அங்க இருக்கிற குழந்தைகளைப் பார்க்கணும் போல இருக்கு. என் வாழ்க்கை பூரா வெறும் கம்ப்யூட்டரையும் ஃபைலையும் பார்த்துட்டு இருந்த எனக்கு, உன் உலகத்தைப் பார்க்கணும்னு தோணுது அகல்யா,” என்றான் மிகுந்த நம்பிக்கையுடன்.

அகல்யாவின் இதயம் ஒரு கணம் துடிப்பதை நிறுத்தியது. இதுவரை அவளது தனிமைப் பயணங்களில் அவளுடன் ஒரு நிழலாகக்கூட யாரும் வந்தது இல்லை. முதல் முறையாக ஒருவன், தானாக முன்வந்து அவளது உலகத்திற்குள் நுழையக் கேட்பது அவளுக்குள் ஒரு புது வெளிச்சத்தைப் பாய்ச்சியது. அந்த ஒரு நொடியில், ஆகாஷ் அவளுக்கு ஒரு சாதாரணமாக தெரியவில்லை, ஏதோ ஒரு பிறவியில் விட்டுப்போன சொந்தமாகத் தெரிந்தான்.

அவள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்பதை அவளது விரிந்த கண்கள் காட்டிக் கொடுக்க, ஆகாஷ் மெதுவாக அவளை நெருங்கி, “என்ன அகல்யா… நான் வர்றது உனக்கு விருப்பம் இல்லையா? ஒருவேளை நான் கூட வர்றது உனக்குத் தொந்தரவா இருக்கும்னு நினைச்சா சொல்லு, நான் வரல,” என ஒருவித மென்மையுடன் கேட்டான்.

சில நொடிகள் பேச்சற்றுப் போன அகல்யாவின் மனம், “இது நிஜம்தானா?” என அவளையே கிள்ளிக் கேட்டுக் கொண்டது.

“பாஸ்… உண்மையாத்தான் சொல்றீங்களா? இல்ல என்கிட்ட எதாவது Prank பண்றீங்களா?” எனச் சந்தேகமாகக் கேட்டாள்.

அவள் கண்களை நேராகப் பார்த்த ஆகாஷ், “நிஜமாத்தான் சொல்றேன் அகல்யா… இது பிராங்க் இல்ல, என்னோட ஆசை. இப்போ சொல்லு, நான் வரவா?” என மீண்டும் கேட்டான்.

அகல்யா மெதுவாகத் தன் தலையை அசைத்துச் சம்மதம் சொன்னாள். அதே நேரத்தில், அவளுக்கான இறங்க வேண்டிய இடமும் வந்துவிட்டது. வண்டி நிற்க, கதவைத் திறந்து கீழே இறங்கியவள், இன்னும் அந்த நம்பிக்கையில்லாத முகத்துடனேயே அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“பாஸ்… நீங்க வர்றது சந்தோஷம் தான், ஆனா மறந்துட மாட்டீங்களே?” எனத் தயக்கத்துடன் கேட்டாள்.

ஆகாஷ் ஒரு கள்ளச்சிரிப்புடன், “நீ அங்க வர்றதுக்கு முன்னாடியே, நான் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்ல இருப்பேன். சரியா? பஸ் ஏறுற வரைக்கும் உனக்கு நம்பிக்கை வராதுன்னு எனக்குத் தெரியும்… ஆனா நான் அங்க இருப்பேன், இது உறுதி!” என சத்தியம் செய்யாத குறையாக வாக்கு கொடுத்தான்.

அவள் விடைபெற்றுச் செல்லும்போது, அவளது நடையில் ஒரு புதுத் துள்ளல் இருப்பதை ஆகாஷ் கவனித்தான். அகல்யா சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த ஆகாஷிற்குள் இப்போது வான வேடிக்கையே நிகழ்ந்தது. “இதுவரை அவளுடன் ஒரு மணிநேரம், ரெண்டு மணிநேரம் இருந்ததே பெரிய விஷயமா இருந்தது… ஆனா அகல்யாவுடன் கழிக்கப்போகும் அந்த இரவு நேரப் பயணத்தை நினைத்து, ஆகாஷ் ஒரு அழகான கனவு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.

அவனது கற்பனைச் சிறகுகளைக் கலைப்பது போல, கேப் டிரைவரின் குரல் கேட்டது.

“சார்… உங்க பாயிண்ட் வந்திருச்சு சார்!”

ஆகாஷ் திடுக்கிட்டுத் தன் நினைவலைகளிலிருந்து மீண்டான். காரின் கண்ணாடி வழியாகக் குனிந்து வெளியே பார்த்தான். “ஓ… இதுதான் காலையில் நான் ஏறிய இடமோ?” என எண்ணிக் கொண்டே கதவைத் திறக்க முயன்றான். அப்போது, இன்று காலை இந்த டிரைவரிடம் தான் காட்டிய கோபமும், எரிச்சலும் அவனது மனசாட்சியை ஒரு நிமிடம் உலுக்கியது.

அவன் இறங்குவதற்கு முன் டிரைவரைப் பார்த்து, “அண்ணா… காலைல ஏதோ ஒரு சரியில்லாத மூட். அதான் உங்ககிட்ட கொஞ்சம் கோபத்துல பேசிட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க,” என்றான் மிகவும் தாழ்மையான குரலில்.

அந்த டிரைவர் ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தவர். “அட என்ன தம்பி இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? உங்களுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும், டென்ஷன் இருக்கும். எனக்கு இது ஒன்னு தானே வேலை? ஒரு பயணியா நீங்க கோவப்படுறது சகஜம் தான் தம்பி. ஒரு நாளைக்கு எத்தனையோ பேர் எங்களை வசவு பாடுறாங்க… அதையெல்லாம் பார்த்தா பொழப்பு ஓடுமா? ஆனா, நீங்க இப்போ இதைப் புரிஞ்சு பேசினதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு தம்பி,” என ஒரு மலர்ந்த சிரிப்புடன் சொன்னார்.

ஆகாஷின் உள்ளம் நெகிழ்ந்தது. சட்டெனத் தன் பாக்கெட்டில் கைவிட்டவன், ஒரு சில ஐந்நூறு ரூபாய் தாள்களை எடுத்து அவரிடம் நீட்டினான்.

“தம்பி… இதெல்லாம் எதுக்கு? வண்டி வாடகை தான் கம்பெனில இருந்து வந்துடுமே…” என அவர் மறுத்தும், ஆகாஷ் விடாப்பிடியாக அவரது கையில் அந்தப் பணத்தைத் திணித்தவன்.

“இது உங்களுக்கு நான் தர்ற ஒரு சின்ன அன்பு. வச்சுக்கோங்க,” என்று சொல்லிவிட்டு, அவர் மீண்டும் மறுப்பதற்குள் விறுவிறுவெனக் காரை விட்டு இறங்கித் திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.

ஆகாஷ் உண்மையிலே வருவானா ? 

🌧️தூறல்கள் தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page