தூவானம் -2

ஈரமான சாலைகளில் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த அந்தப் Benz கார், மும்பையின் செல்வந்தர்கள் வாழும் மலபார் ஹில் பகுதியில் இருந்த ஒரு பிரம்மாண்டமான பங்களாவிற்குள் நுழைந்தது. அது ஒரு வீடு என்பதை விட, அதிகாரமும் பாரம்பரியமும் செறிந்த ஓர் அரண்மனை என்றே சொல்லலாம்.

காரை விட்டு இறங்கிய அவனுக்கு, அதன் கதவைச் சாத்தும் உணர்வு கூட இல்லை. மதுவின் போதை அவனது கால்களைப் பின்னிக் கொள்ள, தள்ளாடியபடியே அந்தப் பங்களாவின் வாயிலை நோக்கி நடந்தான். 10 அடி உயரத்தில் நின்ற அந்தப் பர்மா தேக்குக் கதவு, அவனது குடும்பப் பாரம்பரியத்தின் கம்பீரத்தைச் சாட்சியாகச் சொல்லிக் கொண்டிருந்தது.

அவன் அழைப்பு மணியை மெல்ல அழுத்த, அடுத்த நொடியே கதவை திறந்தான் வேலைக்காரன், அவன் இருந்த கோலத்தைப் பார்த்த அதிர்ச்சியில் “சின்ன ஐயா…” என தழுதழுத்த குரலில் அவன் சொல்ல

அதே சமயம் “கேசவ்…” என மாடியிலிருந்து ஒரு கம்பீரமான வேதனை நிறைந்த குரல் ஒலித்தது 

அங்கே பைஜாமாவில் நின்றிருந்தார் அந்த மாளிகையின் எஜமானர். ஒரு காலத்தில் சிங்கம் போல வலம் வந்த தன் மகன், இன்று போதையில் நிலைதடுமாறி நிற்பதைக் கண்ட அந்தத் தந்தையின் முகம் சுருங்க. “அவனை உள்ளே வரச் சொல்லு,” என்றார் சுருக்கமாக.

கேசவ் தாங்கிப் பிடிக்க, அவன் தடுமாற்றத்துடன் உள்ளே நுழைந்தான். மாடிப் படிகளிலிருந்து பதற்றத்துடன் இறங்கி வந்த தந்தை, தன் மகனின் நிலையைப் பார்த்து நிலை குலைந்து போனார்,

“எத்தனையோ சாம்ராஜ்யங்களை உருவாக்கியவன்… தொழில்துறையில் ஒரு புயலாக வலம் வந்தவன்..  இன்று ஒரு தவறான திருமண உறவினால் சிதைந்து போய், மதுவுக்கு இரையாகிக் கிடக்கிறானே!”

அவனது சிவந்த கண்கள், மதுவினால் மட்டுமல்ல, மனதின் வலியாலும் சிவந்திருந்தன என்பதை அவர் உணர்ந்தார். தந்தையைப் பார்த்ததும் அவனுள் இருந்த ஆக்ரோஷம் மறைந்து, ஒரு சிறு பிள்ளையை போல ஏக்கம் பிறக்க. “அப்பா…” என்று அவன் குரல் உடைந்தபோது, அவரது இதயம் சுக்குநூறாகியது.

மறுநொடியே ஓடி வந்து தன் மகனை மார்போடு அணைத்துக் கொண்டார். உலகமே அவனைத் தோற்கடிக்க நினைத்தாலும், அந்தத் தந்தையின் மார்பு அவனுக்குப் புகலிடமானது. அவனது முதுகைப் பொறுமையாகத் தட்டிக் கொடுத்து, “நான் இருக்கேன் டா …” என்பது போல ஆறுதல் படுத்தினார்.

போதை தலைக்கேறி இருந்ததால், அவனால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. தன் மகனின் பாரத்தைத் தன் தோளில் சுமந்தபடி, மெல்ல அவனை அறைக்குள் அழைத்துச் சென்றவர் அவனை மெத்தையில் படுக்க வைக்க அவர் முயன்றபோது, உடல் ஒத்துழைக்காமல் போதையின் கனத்தினால் அவன் அப்படியே கீழே சரிந்தான்.

கேசவன் பதற்றத்துடன் ஓடிவந்து உதவ, இருவரும் சேர்ந்து அவனை அந்த மென்மையான மெத்தையில் கிடத்தினார்கள். கேசவன் குனிந்து அவனது காலணிகளைக் கழற்றிவிட்டு, அறையின் ACயை இதமான நிலைக்கு மாற்றிவிட்டுப் பின்வாங்கினான்.

தன் ஒரே மகன்… ஒரு காலத்தில் கம்பீரமாக வலம் வந்தவன், இன்று சுயநினைவின்றிச் சுருண்டு கிடப்பதைப் பார்த்த தந்தையின் கண்கள் கலங்கின. கையில் கோடிக்கணக்கான செல்வம் இருந்தும், தன் மகனின் முகத்தில் இருக்கும் அந்த நிம்மதியற்ற ரேகைகளைத் துடைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் அவர் இதயத்தை இரணமாக்கியது.

கேசவனைப் பார்த்தவர், “அம்மாவுக்குத் தெரிய வேணாம்… அவ தாங்க மாட்டா,” என குரலைத் தாழ்த்தி கூற.

கேசவன் மௌனமாகத் தலையாட்டிவிட்டு வெளியேறினான். மகனின் நெற்றியை வருடிய அந்தத் தந்தை, “இதற்கெல்லாம் காரணம் அவள்தான்… என் மகனின் சிரிப்பைப் பறித்தவளுக்கு விரைவில் ஒரு முடிவு கட்டுகிறேன்,” என்ற உறுதியோடு அறையை விட்டு வெளியேறி கதவைச் சாத்தினார்.

அந்த இரவு அவருக்கு ஒரு யுகமாக நீடித்தது. விடியும் வரை தூக்கமின்றித் தவித்தவர், சூரியன் உதித்த பின்பே அசதியில் கண் அயர்ந்தார். ஆனால், அந்த உறக்கமும் நீடிக்கவில்லை. அறைக் கதவு “படபட.. ” என வேகமாகத் தட்டப்படும் சத்தம் கேட்டு, திடுக்கிட்டு எழுந்தவர் கதவைத் திறந்தபோது, அங்கே நின்றிருந்த கேசவனின் முகம் பதற்றத்தால் வெளுத்துப் போயிருந்தது.

“ஐயா… ஐயா… கீழே போ.. போலீஸ் வந்திருக்காங்க!” அவன் வார்த்தைகள் திக்கித் திணறி வந்தன.

புயலெனப் படிகளில் இறங்கி வந்தவர், வரவேற்பறையில் ஒரு இன்ஸ்பெக்டரும், இரண்டு கான்ஸ்டபிள்களும் நின்றிருந்த்தை கவனித்தார்.

அவர் கீழே வருவதைப் பார்த்த அந்த அதிகாரிகள், அவரது செல்வாக்கிற்கும் அதிகாரத்திற்கும் மரியாதை கொடுப்பது போல சட்டென்று நிமிர்ந்து நின்றவர்கள், பின் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு கைகளைக் கூப்பி வணக்கம் தெரிவித்தனர்.

இருப்பினும், அந்த இன்ஸ்பெக்டரின் கண்களில் ஒருவித தயக்கமும், அதே சமயம் கடமையைச் செய்ய வேண்டிய கட்டாயமும் தெரிந்தது. 

“என்ன விஷயம் இன்ஸ்பெக்டர்? காலையிலேயே போலீஸ் என் வாசல்ல நிக்கிற அளவுக்கு என்ன நடந்தது?”  என அழுத்தமான குரலில் கேட்டபடியே அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தவர், காலின் மேல் கால் போட்டபடி அதிகாரத்தோடு நிமிர்ந்து உட்கார்ந்தார். 

“சார் தான் …” என்று இன்ஸ்பெக்டர் இழுக்க, அவரோ இடைமறித்தார்.

“என் மகனைப் பத்தி சொல்ல என்ன… தயங்காம சொல்லுங்க,” என்றார் கம்பீரம் குறையாத அதே வெண்கலக் குரலில்.

அதிகாரிகள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவனின் தந்தை, கேசவனைப் பார்த்து, “அவனைக் கூப்பிடு,” என சைகை செய்தார்.

கேசவன் வேகமாக அந்த அறைக்குள் நுழைந்தபோது, அவன் இன்னும் அந்த மதுவின் பிடியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். “சின்ன ஐயா… சின்ன ஐயா…” எனத் தட்டி எழுப்ப, இமைகளின் பாரத்தைத் தாங்க முடியாமல் மெல்லக் கண்களைத் திறந்தான் அவன்.

உலகமே சுழல்வது போன்ற உணர்வு. “என்ன?” என்பது போலப் பார்வையாலேயே கேட்டவனை, “ஐயா உங்களை உடனே வரச் சொல்றாரு,” என கேசவன் துரிதப்படுத்தினான்.

சற்று நிதானம் வர, தள்ளாடியபடியே வாஷ்ரூம் சென்றவன், குளிர்ந்த நீரை முகத்தில் அள்ளித் தெளித்தபோது, ஓரளவுக்குப் போதை தெளிந்தது. ஈரமான முகத்தோடு, கலைந்த உடையைத் தேற்றிக் கொண்டு வெளியே வந்தான். அந்த வராண்டாவில், தன் தந்தை அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து நின்றவன், எதிரே நின்ற போலீஸாரைக் கண்டதும் அவனது புருவங்கள் சுருங்கின.

ஒரு சிறிய தலையசைப்பின் மூலம் “என்ன விஷயம்?” என்று அதிகாரத் தோரணையில் கேட்டான்.

இன்ஸ்பெக்டர் தொண்டையை நனைத்துக்கொண்டு, “Sir, sorry to say this… உங்களுடைய Mrs…” எனப் பீடிகை போட்டார்.

அவன் மனதில் உடனே நேற்றிரவு நடந்த சண்டைதான் நிழலாடியது. ‘அந்த அரைகுறை ஆடை, தாலியைக் கழற்றி வைத்த திமிர், தான் அறைந்த அறை…’ என அனைத்தும் வரிசையாக வந்து போயின.

“என்ன… அந்த சுபா ஏதாவது கம்ப்ளைன்ட் கொடுத்தாளா இல்ல அவளோட அப்பன் கொடுத்தானா ? ” என வெறுத்துப்போன குரலில் கேட்டான்.

அத்தனை நேரமும் தன் மகனின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருந்த அந்தத் தந்தையின் பார்வை, இப்போது கூர்மையான ஈட்டி போல இன்ஸ்பெக்டரின் பக்கம் திரும்பியது. அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிய அந்த இடமே நிசப்தத்தில் உறைந்திருந்தது.

அவன் கேட்ட அந்தக் கேள்விக்கு, இன்ஸ்பெக்டரிடமிருந்து பதில் வரவில்லை. மாறாக, அவரது முகத்தில் ஒருவிதமான அனுதாபம் படர, தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நிலவிய அந்தப் பாரமான மௌனத்தை உடைத்தார்.

“இல்ல சார்… உங்க Mrs. நேத்து நைட்டு உங்க வீட்டுல இறந்து கிடந்தாங்க.” என்றார் 

இன்ஸ்பெக்டர் சொல்லி முடிப்பதற்குள், போதையில் செருகிக் கிடந்த அவனது கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்தன. தூக்கம், போதை, சோர்வு என அனைத்தும் ஒரு நொடியில் காணாமல் போக, அவன் ஒரு கற்சிலையைப் போல நிமிர்ந்து நின்றான். இருக்கையில் அமர்ந்திருந்த அவனது தந்தையோ, மின்னல் தாக்கியது போலத் துள்ளி எழுந்தார்.

“வாட்! ஹவ் பாசிபிள்?” அவர் குரலில் நடுக்கமும் அதிர்ச்சியும் கலந்திருந்தது.

அவனின் மூளைக்குள் நேற்றிரவு நடந்த காட்சிகள் ரத்தச் சிவப்பாய் ஓடின. ஆத்திரத்தில் அவளை அறைந்தது, அவள் கட்டிலில் சரிந்தது, பின் தான் கதவைத் தள்ளிவிட்டு வெளியேறியது… ஒருவேளை தான் அடித்த அடியில் அவள் இறந்திருப்பாளோ? தான் தான் அவளைக் கொலை செய்துவிட்டேனோ? என்ற கொடூரமான எண்ணம் அவனது இதயத்தை ஒரு கணம் நிறுத்தியது.

அதே பயம் தந்தையின் கண்களிலும் நிழலாடியது. “கோபக்கார மகனாச்சே… போதையில் எதையும் யோசிக்காமல் அவளை ஏதேனும் செய்துவிட்டானோ?” என்ற தவிப்பு அவரை வாட்டியது. ஆனால், இன்ஸ்பெக்டரை நேராகப் பார்த்தவர், “இன்ஸ்பெக்டர்… இது எப்படி ? என்ன நடந்தது?” என்று கேட்டார்.

“சார், இது ஒரு கிளியர் ஆன தற்கொலை முயற்சி தான். அவங்க தங்கியிருந்த அந்த ரூமை உள் பக்கம் லாக் பண்ணிட்டு அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு அவங்களே உயிரை மாய்த்துக்கொண்டிருக்காங்க,” என்றார் இன்ஸ்பெக்டர்.

அந்த வார்த்தைகள் அவனது செவிகளில் விழுந்த தருணம், அவனது உலகம் அப்படியே தலைகீழாக மாறியது. அவள் மீது எவ்வளவுதான் கோபம் இருந்தாலும், அவளைத் தன் உயிராக நேசித்த அந்த பழைய நினைவுகள் அலைகளாய் வந்து மோதின. அவளது திமிர், அவளது நாகரீக மோகம் என அனைத்தும் மறைந்து, அவளது சிரித்த முகம் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது.

தாங்க முடியாத துயரம் நெஞ்சை அடைக்க, “சுபா …!” என்ற அவனது கதறல் அந்த மாளிகையின் சுவர்களில் மோதி எதிரொலித்தது. நின்றிருந்த அவனது கால்களில் உயிர் பிரிவது போன்ற பலவீனம் எழ, நிலைதடுமாறி அப்படியே அந்தப் பளிங்குத் தரையில் மண்டியிட்டு விழுந்தான். 

தரையில் விழுந்து கிடந்த மகனைப் பார்த்த அந்தத் தந்தையின் கண்களில் ஒரு நொடி கூடப் பரிதாபம் நிழலாடவில்லை. மாறாக, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவே இருந்தது.

“கேசவ்… இவனை உள்ளே அழைச்சுட்டுப் போய்ப் படுக்க வை,” என்று கட்டளையிட, கேசவன் நிலைகுலைந்து போயிருந்த அவனைத் தாங்கிப் பிடித்து அறைக்குள் அழைத்துச் சென்றான்.

கதவு மூடியதும், அங்கிருந்த இன்ஸ்பெக்டரை நோக்கிய கூர்மையான பார்வையை வீசியவர், “இன்ஸ்பெக்டர், நீங்க கிளம்புங்க. மேற்கொண்டு என்ன ஃபார்மாலிட்டிஸ்  இருக்கோ அதை முடிங்க. நான் கமிஷனர் கிட்ட நேரடியா பேசிக்கிறேன்,” என அவர் சொல்லவும்

இன்ஸ்பெக்டரும் மேற்கொண்டு பேசாமல், தன் கடமை முடிந்தது என்ற திருப்தியுடன் அங்கிருந்து வெளியேறினார். அவர்கள் சென்ற அடுத்த நொடி, தனது தனி அறைக்குள் புகுந்த அவர், மொபைலை எடுத்து கமிஷனரை தொடர்பு கொண்டார்.

“ராஜ்… நான் சொல்றதைக் கவனி. நீ என்ன செய்வியோ எனக்குத் தெரியாது, இந்த விஷயம் மீடியா வரைக்கும் போகவே கூடாது. என் மகனுக்கும் இந்தத் தற்கொலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாத மாதிரி கேஸை முடிக்க வேண்டியது உன் பொறுப்பு. அதுக்கு என்ன விலையானாலும் நான் தரத் தயார்,” என்று அதிகாரத் தோரணையில் முடித்தார்.

மறுமுனையில் கமிஷனர், “சார், எல்லாமே நான் பார்த்துக்கிறேன். நீங்க எதற்கும் கவலைப்படாதீங்க. இப்போதைக்கு நீங்க வீட்டை விட்டு வெளிய வராதீங்க, மீடியாவுக்குப் பதில் சொல்லாதீங்க. நான் சொல்லும்போது மட்டும் உங்க மகனை அழைச்சுட்டு வந்தா போதும்,” என உறுதி கொடுத்தார்

இணைப்பைத் துண்டித்தவர், சோபாவில் மெல்லச் சாய்ந்தார். அவருக்கு எதிரே இருந்த பிரம்மாண்டமான நிலக்கண்ணாடி அவரது முகத்தைப் பிரதிபலித்தது.

அறையில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டவர், மெல்லச் சிரிக்கத் தொடங்கினார். முதலில் ஒரு மெல்லிய புன்னகையாகத் தொடங்கி, பின் அது ஒரு மர்மமான அட்டகாசமாக மாறியது.

பற்கள் தெரிய அவர் சிரித்த அந்தச் சிரிப்பு, ஒரு தந்தையின் துயரம் அல்ல, மாறாக ஒரு வேட்டைக்காரனின் வெற்றிக் களிப்பைப் போல இருந்தது.

“சனியன் ஒழிஞ்சது! இனிமேதான் என் மகனோட வாழ்க்கை ஆரம்பமாகுது. அந்தச் சிறையிலிருந்து அவனுக்கு இன்னைக்குத் தான் விடுதலை கிடைச்சிருக்கு,” என்று சொல்லும்போது அவர் கண்களில் ஒரு கொடூரமான நிம்மதி தெரிந்தது.

அந்தத் தற்கொலை வெறும் தற்செயலான ஒன்றா அல்லது அந்தத் தந்தையின் திரைமறைவுத் திட்டத்தின் ஒரு பகுதியா ?

🌧️தூறல்கள் தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page