பேருந்து ஈரோட்டைக் கடந்து, கோயம்புத்தூரின் சில்லென்ற காற்றைத் தழுவியபடி நெடுஞ்சாலையில் சீறிக்கொண்டிருந்தது. அதிகாலை நான்கு மணி. ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தால், தூரத்தில் நீலகிரி மலைகளின் நிழற்படங்கள் மங்கலாகத் தெரிந்தன.
ஆகாஷ் தூங்காமல் விழித்திருந்தான். அவன் தோளில் சாய்ந்திருந்த அகல்யா, ஏதோ ஒரு கனவில் இருப்பதைப் போல மெல்லியதாக முணுமுணுத்துவிட்டு மெல்லக் கண் விழித்தாள்.
“ம்ம்… விடிஞ்சிருச்சா?” என அகல்யா கண்களைக் கசக்கிக்கொண்டே நிமிர்ந்து அமர்ந்தாள்.
“விடியறதுக்கு முன்னாடியே நீ நாலு தடவை என் தோளைத் தலகாணி மாத்துற மாதிரி மாத்திட்ட அகல்யா! பாரு… என் சட்டை ஒரு பக்கம் அப்படியே கசங்கிப் போச்சு,” என ஆகாஷ் தன் தோள்பட்டையைக் காட்டிப் பொய் கோபம் காட்டினான்.
அகல்யா சட்டென அவன் சட்டையைச் சரிசெய்துவிட முயன்று, பின் கையை இழுத்துக்கொண்டாள். “சாரி பார்ட்னர்… நான் தான் சொன்னேன்ல, இது கொஞ்சம் காஸ்ட்லி தலகாணினு. அதுக்கு நீங்க வாடகை எதுவும் கேட்க மாட்டீங்களே?” எனச் சிரித்தாள்.
“வாடகையா? அப்படின்னா நீ வாங்கி வச்சிருக்கிற அந்தப் பழப் பாக்கெட்ல பாதி எனக்குத் தரணும். இதுதான் டீல்!” என்றான் ஆகாஷ்.
“ஏன் பாஸ் இவ்வளவு ‘ஸ்வீட்’?”
அகல்யா அந்தப் பழப் பாக்கெட்டைப் பிரித்து அவனுக்கு ஒரு துண்டு கொடுத்தாள். “நிஜமாவே கேக்குறேன் பாஸ்… உங்களுக்குப் போர் அடிக்கலையா? இப்படி ஒரு சாதாரணப் பஸ்ல, என்கூட தேன் மிட்டாய் சாப்பிட்டுட்டு வர்றது….”
ஆகாஷ் ஒரு நிமிடம் அமைதியானான். “அகல்யா, வசதிகள் தரும் சந்தோஷத்தை விட, நிம்மதி தரும் சந்தோஷம் ரொம்பப் பெருசு. இந்த பஸ் சீட்ல உன்கூடப் பேசிக்கிட்டு வர்றப்போ கிடைக்குது.” என்றான் ஒரு மெல்லிய புன்னகையுடன்.
“ஹலோ… ரொம்ப சீரியஸ் ஆகாதீங்க! அப்புறம் எனக்கு அழுகை வந்துடும்,” என சூழலையை மாற்றிய அகல்யா, “ஆமா, அங்க ஆசிரமத்துல பசங்க உங்களைப் பார்த்தா இது யாருக்கா?’னு கேட்பாங்க. நான் என்ன சொல்லட்டும்? ஆபீஸ்ல எனக்கு வேலை குடுக்குற ராட்சசன்’னு சொல்லவா? இல்ல பாவம்னு கூட்டிட்டு வந்த ஒரு வழிப்போக்கன்னு சொல்லவா?” என கண்ணாடிக்கவும்
ஆகாஷ் சிரித்துவிட்டான். “ராட்சசனா? அவ்வளவு கொடுமைக்காரனா நான்? சரி… நீ எதுவுமே சொல்ல வேண்டாம். உங்க அக்காவுக்குப் பஸ்ல சீட் பிடிச்சுத் தந்த ஒரு நல்ல மனுஷன்னு மட்டும் சொல்லு, போதும்!”
வண்டி கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்தை நெருங்கத் தொடங்கியது. அகல்யாவின் முகத்தில் இப்போது ஒருவிதமான பரவசம்.
“பாஸ்… அங்க ஒரு குட்டிப் பையன் இருக்கான், பேரு அன்பு. அவனுக்குக் கார்ட்டூன் வரைறதுனா ரொம்பப் பிடிக்கும். அப்புறம் கவிதான்னு ஒரு பாப்பா… அவளுக்கு நீங்க இப்போ வச்சிருக்கீங்களே அந்த மாதிரி தேன் மிட்டாய்னா உயிர். நீங்க அதைக் கொண்டு வர்றது தெரிஞ்சா, அவ உங்களை விடவே மாட்டா!” என ஆர்வத்துடன் விவரித்தாள்.
“அப்படியா? அப்போ நான் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அவங்களுக்கு ஆகாஷ் அண்ணாவா’ இல்லாம, தேன் மிட்டாய் மாமாவா மாறிடுறேன்,” என்றான்
“மாமாவா? அந்த அளவுக்கு உங்களுக்கு வயசு ஆகலையே பாஸ்!” என அகல்யா கிண்டல் செய்ய,
“ஏன்… உனக்கு நான் அண்ணாவா தெரியலையா?” என ஆகாஷ் ஒரு கள்ளத்தனமான கேள்வியைக் கேட்க
அகல்யா ஒரு நிமிடம் திகைத்தாள். “ம்ஹூம்… அண்ணா மாதிரி எல்லாம் இல்லை பாஸ். நீங்க… நீங்க ஒரு பெஸ்ட் ஃப்ரெண்ட். அதுக்கும் மேல எதாவது சொல்லணும்னா, இப்போதைக்கு வார்த்தை இல்லை,” என வெட்கத்துடன் தலைகுனிந்தாள்.
பஸ் ஸ்டாண்டில் வண்டி நின்றது. வெளியே பனி மூட்டம் மறைத்துக்கொண்டிருக்க, டீக்கடைகளில் இருந்து தம் போடும் சத்தம் கேட்டது. ஆகாஷ் கீழே இறங்கி அவளது பேக்கைத் தோளில் மாட்டிக்கொண்டான்.
“வெல்கம் டு மை சிட்டி பாஸ்!” என அகல்யா கைகளை விரித்து வரவேற்க,
“உன் சிட்டி மட்டும் இல்ல அகல்யா… இது இனிமே நம்ம ரெண்டு பேரோட நினைவுகள் இருக்கப்போற சிட்டி!” என்றான் ஆகாஷ்.
இருவரும் ஒரு ஆட்டோவைப் பிடித்து ஆசிரமம் நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர். சிறிது நேரத்திலே அந்த ஆட்டோ ஆசிரமத்தின் முகப்பில் நின்றது. அந்த அதிகாலை நேரத்திலும், ஆசிரமத்தின் வேப்ப மரத்தடியில் சில குழந்தைகள் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அகல்யாவைப் பார்த்ததும், “அக்கா வந்துட்டாங்க! அகல்யா அக்கா வந்துட்டாங்க!” என்று கத்திக்கொண்டே ஒரு பட்டாளமே ஓடி வந்தது.
அகல்யா ஆட்டோவில் இருந்து இறங்கியதும், குழந்தைகள் அவளைச் சூழ்ந்துகொண்டனர். அன்பு, அனிதா, செல்வம் என ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்துத் தூக்கிக் கொஞ்சினாள். இதையெல்லாம் ஓரமாக நின்று ஒரு ரசனையான புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஆகாஷ்.
அப்போதுதான் அகல்யாவின் பின்னால் நின்றிருந்த ஆகாஷைக் குழந்தைகள் கவனித்தனர். கையில் பெரிய பேக், ஸ்டைலான லுக் என நின்றிருந்த அவனைப் பார்த்ததும் குழந்தைகள் அப்படியே நிசப்தமானார்கள்.
அகல்யாவின் சுடிதாரைப் பிடித்து இழுத்த அன்பு, மெல்லிய குரலில்.. “அக்கா… இவரு யாரு? உன் ஹஸ்பண்டா? இல்லன்னா உன்னைக் கட்டிக்கப்போற மாமாவா?” என ஆகாஷிற்குத் தெளிவாகக் கேட்கும்படி கேட்டான்,
அகல்யாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. “ஏய் அன்பு! என்ன பேச்சு இது? இவரு என் ஆபீஸ்ல வேலை செய்யுறவரு… என் ஃப்ரெண்ட்,” எனச் சமாளித்தாளும் அவளது முகம் தக்காளி போலச் சிவந்து போனது.
இதைப் பார்த்த ஆகாஷ் சத்தமாகச் சிரித்தவன் கீழே குனிந்து அன்புவின் கன்னத்தைக் கிள்ளி, “ஏன் தம்பி… நான் அக்காவுக்கு ஹஸ்பண்டா இருந்தா உனக்கு ஓகேவா?” எனக் கேட்க, அகல்யா ஆகாஷை முறைத்தாள்.
“ஓகே தான் மாமா! ஆனா அக்காவுக்கு நீங்க நிறைய சாக்லேட் வாங்கித் தரணும்… ஏன்னா அக்கா ரொம்ப பாவம்,” என்றான் அன்பு மிக மழலையாக.
“சாக்லேட் மட்டுமில்ல… இதோ பாருங்க!” என ஆகாஷ் தன் பேக்கைத் திறந்து, சென்னையில் வாங்கிய அந்தப் பெரிய தேன் மிட்டாய் பாக்கெட்டுகளை வெளியே எடுத்தான்.
“வாவ்! தேன் மிட்டாய்!” எனக் கவிதா கத்திக்கொண்டே ஓடி வர, ஆகாஷ் அவளைத் தூக்கினான். “இது யாருக்குத் தெரியுமா? யார் சமத்தா இருக்கீங்களோ அவங்களுக்குத் தான்!” எனச் சொல்லிவிட்டு அவன் தரையில் அமர்ந்து கொண்டான்.
நிமிடங்களில் ஆகாஷை ஒரு பத்து குழந்தைகள் சூழ்ந்து கொண்டனர். ஒருவன் அவனது வாட்சைப் பிடித்து இழுக்க, இன்னொருவன் அவனது தலைமுடியைக் கலைக்க, ஆகாஷ் அவர்களோடு ஒரு குழந்தையாகவே மாறிவிட்டான்.
அகல்யா இதைப் பார்த்து நெகிழ்ந்து போனாள். “பாஸ்… போதும் பசங்களை உசுப்பிவிட்டது! வாங்க உள்ள போவோம்,” என்றாள்.
“ஏய் அகல்யா… இப்போ நான் உனக்கு பாஸ் இல்ல, இவங்களுக்கு தேன் மிட்டாய் மாமா! அதனால நீ அமைதியா இரு,” என அவன் குழந்தைகளுடன் சேர்ந்து அவளையே கிண்டல் செய்தான்.
அன்பு தன் கையில் இருந்த ஒரு கசங்கிய பேப்பரை நீட்டி, “மாமா… நீங்க அழகா இருக்கீங்க, நான் உங்களை வரையவா?” எனக் கேட்டான்.
“வரைடா பார்க்கலாம்!” என ஆகாஷ் போஸ் கொடுக்க, அன்பு ஏதோ கோடுகளைக் கிறுக்கினான். கடைசியில் காட்டப்பட்ட அந்த ஓவியத்தில் ஆகாஷின் தலை ஒரு உருளைக்கிழங்கு போல இருந்தது.
ஆகாஷ் அந்த ஓவியத்தைப் பார்த்துவிட்டு, “ஏய் அன்பு! நான் என்ன உருளைக்கிழங்கு மாதிரியா இருக்கேன்?” எனக் கேட்க,
“இல்ல மாமா… அக்கா உங்களை உருளைக்கிழங்கு மாதிரிதான் திட்டுறாங்க, அதான் அப்படி வரைஞ்சேன்!” என அன்பு சொல்ல, அங்கே சிரிப்பலை வெடித்தது.
அகல்யா சிரித்துக்கொண்டே, “பாத்தீங்களா பாஸ்… உங்களுக்கு இங்க வந்த உடனே என்ன பட்டம் கிடைச்சிருக்குன்னு!” என்றாள்.
அவள் குழந்தைகளிடம் காட்டும் அந்தத் தாய்மை, அவளது வறுமையிலும் பிறருக்கு உதவும் அந்தப் பண்பு… ஆகாஷின் மனதில் அவளுக்கொரு தனி சிம்மாசனத்தைப் போட்டு அமர வைத்தது.
“அகல்யா… இந்தப் பசங்ககிட்ட நீ எவ்வளோ சந்தோஷமா இருக்கேன்னு இப்பதான் புரியுது. உன் உலகம் ரொம்ப அழகு,” என்றான் ஆகாஷ் மென்மையாக.
அகல்யா அவனை நிமிர்ந்து பார்த்து, “இந்த அழகை எனக்குக் கொடுத்ததே நீங்கதான் பாஸ்… நீங்க மட்டும் இன்னைக்கு வராம இருந்திருந்தா, இந்தச் சந்தோஷம் எனக்குக் கிடைச்சிருக்காது,” என நெகிழ்ச்சியுடன் சொன்னாள்.
அகல்யா கவிதாவைத் தூக்கிக் கொஞ்சும் அழகை அவன் ரசித்துப் பார்த்தான். விளையாட்டு ஒரு பக்கம் இருந்தாலும், அந்தப் இதய அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தை தான் கவிதா என தெரிந்ததும், ஆகாஷின் முகம் சீரியஸானது.
அறையை விட்டு வெளியே வந்த அகல்யாவின் முகத்தில் இருந்த அந்தத் துள்ளல் மறைந்து, ஒரு விதமான இருள் படர்ந்திருந்தது. கைகளைக் கசக்கியபடி சுவரோரம் சாய்ந்து நின்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் முத்தாய்த் தெறித்தது.
“பாஸ்… அந்தப் கவிதா சிரிக்கிறதைப் பார்த்தா எனக்கு நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்கு. அந்தச் சின்ன இதயம் துடிக்கிறதுக்கே இவ்வளவு போராட்டமா? இன்னும் மூணு லட்சம் ரூபா… அதுக்கு நான் எங்கே போவேன்?” என அவள் விம்மி விம்மி அழ, ஆகாஷின் இதயம் அடியோடு நொறுங்கியது. கோடிக்கணக்கான ரூபாய்களை ஒரு கையெழுத்தில் புரட்டும் அவனுக்கு, தன் கண்முன்னே ஒரு உயிர் பணத்திற்காகத் தவிப்பதும், அதற்காகத் தன் தேவதை அழுவதும் தாங்க முடியாத வலியைக் கொடுத்தது.
அவன் அவளுக்கு ஆறுதல் சொல்லப் போன அந்த நொடி, ஆசிரமத்தின் நிர்வாகியான பெரியவர் அங்கே வந்தார்.
“அகல்யா… வந்துட்டியாமா?” என அவர் வாஞ்சையுடன் கேட்க, அகல்யா சட்டெனத் தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டவள்…
“ஆமா ஐயா. இப்போது தான் வந்தேன்.. இதோ… இவரு என் கூட வேலை செய்றவரு, ஆகாஷ். என் பிரண்டு,” என அறிமுகப்படுத்தியவள், தன் பையில் இருந்து அந்த 20,000 ரூபாயை எடுத்து அவர் கையில் திணித்தாள்.
“ஐயா… இது இப்போதைக்கு என்னால முடிஞ்சது. அந்தப் கவிதாவோட ஆபரேஷன் டெபாசிட்டுக்கு இதை வச்சுக்கோங்க. மீதி பணத்தை நான் எப்படியாவது ரெடி பண்ணிடுவேன்…” அகல்யாவின் கண்களில் ஒரு சிறு ஈரம் இருந்தாலும், அதைவிட அதிகமாகத் உறுதி திகழ்ந்தது.
பெரியவர் அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு ஆகாஷை நோக்கிப் பார்த்தார். உதட்டோரத்தில் மெதுவாக மலர்ந்த புன்னகை, நன்றி சொல்லும் வார்த்தைகளை விட அதிகம் பேசிக் கொண்டிருந்தது.
“ரொம்ப சந்தோஷம் தம்பி… அகல்யாவுக்கு துணையா ஒருத்தர் வந்தது எனக்கு நிம்மதியா இருக்கு,” என்று சொன்னபடியே, “வாங்க… ஆபீஸ் ரூமுக்கு போய் நிதானமா பேசலாம்,” என்று அழைத்தார்.
பெரியவருடன் பேசிக்கொண்டே அகல்யா முன்னால் நடக்க, அவளுக்குப் பின்னால் ஆகாஷ் நடந்தான்.
ஆபீஸ் அறைக்குள் நுழைந்ததும், ஜன்னல் வழியே புகுந்த சூரிய ஒளி, மேசையின் மீது சாய்ந்து இருந்த கோப்புகளின் மேல் மெல்ல விழுந்து, அறைக்கு ஒரு அமைதியான ஒளி நிறத்தை கொடுத்தது. அகல்யா ஒரு நாற்காலியை இழுத்து ஆகாஷுக்கு கண்களால் காட்டியவள், “உட்காரு,” என்பது போல மெல்ல சொன்னாள்.
ஆகாஷ் அமர்ந்தபடியே அவளை கவனித்தான்.
அதே நேரம்…
வெளியே இருந்து அவசர காலடி சத்தம் கேட்டது. கதவு திடீரென திறக்கப்பட்டு, வேலை செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருத்தி மூச்சு வாங்கியபடி அரக்கப்பறக்க ஓடி வந்து நின்றாள்.
“ஐயா … ஐயா …” என்று அவளது குரல் தடுமாறியது.
🌧️தூறல்கள் தொடரும்…
