தூவானம் -22

அகல்யாவின் இதழ்களில் இருந்து முதன்முறையாகத் தன் பெயர் ‘ஆகாஷ்’ என உரிமையோடு உதித்த அந்த நொடி, அவனுக்குள் ஒரு பேரானந்தம் ஊற்றெடுத்தது. இத்தனை காலமும் அந்தப் பெயருக்குக் கிடைக்காத ஒரு தனித்துவம், அவளது மெல்லிய குரலில் ஒலிக்கும்போது கிடைத்ததாக அவன் உணர்ந்தான்.

“சொல்லு அகல்யா?” என அவன் ஒரு மெல்லிய புன்னகையோடு வினவ, அவள் பதில் ஏதும் பேசவில்லை. அவனது கை சட்டையை ஒரு குழந்தையைப் போலப் பற்றிக்கொண்டு இழுத்தாள்.

“நாம ஒரு இடத்துக்குப் போகணும், வா!” என்றவளின் குரலில் ஒருவிதமான அவசரமும், அதே சமயம் ஒரு பிடிவாதமும் கலந்திருந்தது.

“எங்கே? இப்போவா? இன்னும் பாப்பாவுக்கு நினைவு கூட வரலையே அகல்யா?” என அவன் புரியாமல் கேட்க, அவள் அவனை விடவில்லை. “இல்ல… நீங்க வரணும். இது எனக்கு ரொம்ப முக்கியமான இடம்,” எனச் சொல்லி அவனை அந்த ஆம்னி வண்டியை நோக்கி வற்புறுத்தி அழைத்துச் சென்றாள்.

ஆகாஷ் வண்டியை இயக்க, அகல்யா வழி சொல்லிக்கொண்டே வந்தாள். கோயம்புத்தூர் நகரத்தின் பரபரப்பைத் தாண்டி, வண்டி ஒரு ஒதுக்குப்புறமான மலைப்பாதையில் ஏறியது. அந்தச் சிறு குன்றின் மீது அமைந்திருந்த ஒரு பழமையான கோயிலின் முன் வண்டி வந்து நின்றது.

வண்டியை விட்டு இறங்கியதும், ஆகாஷை ஒரு சிலிர்ப்பு ஆட்கொண்டது. குன்றின் மீது காற்று அத்தனை ரம்யமாக ஒரு சங்கீதம் போல வீசிக்கொண்டிருந்தது. வானம் சட்டெனத் தன் நிறத்தை மாற்றிக் கொண்டது, கருமேகங்கள் கூட்டமாகத் திரண்டு, “இப்போதோ… அப்போதோ…” என மழை வரும் அறிகுறிகளுடன் பூமிக்கு முத்தம் கொடுக்கக் காத்திருந்தன.

அந்தப் பிரம்மாண்டமான அமைதியில், ஆகாஷ் அகல்யாவைப் பார்த்தான். அவளது கலைந்த கூந்தல் காற்றில் ஆடிக்கொண்டிருக்க, அந்தி நேரத்து வெளிச்சத்தில் அவள் ஒரு தேவதையைப் போலத் தெரிந்தாள்.

“ஏன் அகல்யா… இப்போ எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்த?” என ஆகாஷ் மெல்ல அவள் அருகே சென்று கேட்டான்.

“பாஸ்… இங்க பாருங்களேன்,” எனத் தூரத்தில் தெரியும் மலைகளைக் காட்டினாள். “நான் சின்ன வயசுல ரொம்ப அழுதுட்டு இருந்தப்போ, எங்க ஆசிரமத்துல அப்போ இருந்த ஒரு பாட்டி தான் என்னை இங்கதான் கூட்டிட்டு வருவாங்க. ‘இந்த மலையைப் பாரு… இது எவ்வளவு பெரிய பாரத்தைச் சுமந்தாலும் அசையாம அப்படியே நிக்குதுல? அதுபோல உன் கஷ்டத்தையும் பாரத்தையும் கடவுள் கிட்ட விட்டுடு’னு சொல்லுவாங்க.”

ஆகாஷ் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“இன்னைக்கு கவிதா குட்டி விஷயத்துல ஒரு மேஜிக் நடந்திருக்கு பாஸ். அந்தத் தொண்டு நிறுவனம் யாருன்னு எனக்குத் தெரியாது. ஆனா, அந்தப் பணத்தை விட, இந்த முழுப் பயணத்துல எனக்குத் துணையா ஒருத்தர் நின்னாரே… அந்தத் துணை தான் எனக்குப் பெரிய பலத்தைக் கொடுத்துச்சு,” எனச் சொல்லிக் கொண்டே ஆகாஷ் பக்கம் திரும்பியவள்.

“ஏன் பாஸ்… எனக்காக எதுக்கு இவ்வளவு தூரம் வந்தீங்க? உங்க வேலை எல்லாத்தையும் விட்டுட்டு இந்தச் சாதாரணப் பொண்ணு கூட பஸ்ல வர்ற அளவுக்கு நான் உங்களுக்கு யாரு?” என அவள் நேரடியாக அவனது கண்களைப் பார்த்துப் பொளேரெனக் கேட்டாள்.

ஆகாஷ் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனது இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. காதலா அல்லது நட்பா என அவன் தத்தளித்துக் கொண்டிருந்த வேளையில், அகல்யாவே தொடர்ந்தாள்…

“நீங்க உதவினாலும் சரி, இல்ல அந்தத் தொண்டு நிறுவனம் உதவினாலும் சரி… ஆனா நீங்க என் பக்கத்துல நின்ன அந்த ஒரு நிமிஷம் தான், எனக்கு உயிர் பிழைச்ச உணர்வைக் கொடுத்துச்சு. தேங்க்ஸ் பாஸ்… இல்ல, தேங்க்ஸ் ‘ஆகாஷ்’!”

அவள் அவனது பெயரை உரிமையோடு சொன்னபோது, அந்த மலையடிவாரக் காற்றே ஒரு கவிதை போல மாற, அந்த அமைதியான பொழுது, அவர்களின் இருவரின் இதயத் துடிப்புகளுக்கு மட்டும் சாட்சியாக இருந்தது.

ஆகாஷ் அருகில் வந்து நின்ற அகல்யா, மிகுந்த உரிமையோடு அவனது விரல்களைத் தன்பற்றிக் கொண்டாள். அவளது கைகளின் மெல்லிய நடுக்கம், அவளது மனதிற்குள் நடக்கும் போராட்டத்தை ஆகாஷிற்குத் தெளிவுபடுத்தியது.

அவனது கண்களை ஏறிட்டுப் பார்த்தவள், தடுமாறும் குரலில், “எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல பாஸ்… மனசுக்குள்ள என்னென்னமோ தோணுது. இது தப்பா சரியான்னு கூட எனக்குப் பகுத்துப் பார்க்கத் தெரியல. ஆனா ஏதோ ஒரு உள்உணர்வு… அது என்னை உங்ககிட்ட இழுக்குது.”

“நம்ம பழக்கம் ஒன்னும் வருஷக்கணக்கானது கிடையாது பாஸ். நேத்துதான் நாம முதன்முதலா முறையாப் பேசினோம். இன்னைக்கு நீங்க என் கூட இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க. உங்க அந்தஸ்து என்ன, உங்க வாழ்க்கை முறை என்னன்னு ஏதும் தெரியாது, ஆனா உங்க மேல இருந்த ஒரு இனம் புரியாத நம்பிக்கையில தான் நான் உங்க கூடவே பயணிக்கத் துணிஞ்சேன்.”

“இப்போ இங்க நிக்கும்போது ஏதோ ஒன்னு தோணுது… ஆனா அதை என்ன வார்த்தை சொல்லி விவரிக்கிறதுன்னு தெரியல,” என்று அடுக்கடுக்காகத் தன் மனதைக் கொட்டினாள். அவளது ஒவ்வொரு சொல்லும் ஒரு தூய காதலின் வெளிப்பாடாக இருந்தது.

அகல்யாவின் வார்த்தைகள் ஆகாஷின் இதயத்தைச் சல்லடையாகத் துளைத்தன. அவளது கண்களில் தெரிந்த அந்தத் தூய்மையான அன்பும், தன் மீது அவள் வைத்திருக்கும் அளவற்ற நம்பிக்கையும் அவனுக்கு ஒரு பக்கம் இனிமையைத் தந்தாலும், மறுபக்கம் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தியது.

‘தன் கடந்த கால பகுதி மறைத்து அவளிடம் ஒரு சாதாரண PAவாக நடித்துக் கொண்டிருக்கிறோமே’ என்ற எண்ணம் அவன் மனசாட்சியைக் குத்தியது. அவள் காதலிப்பது தன்னையா அல்லது தான் போர்த்தியிருக்கும் இந்தச் சாதாரண வேடத்தையா என்ற கேள்வி அவனை வாட்டியது.

அதே நேரம் அகல்யாவின் விரல்களின் பிடி இறுகியது. ஆகாஷ் அவளைத் தன் பக்கம் மெதுவாகத் திருப்பினான். அவளது முகத்தில் தெரிந்த அந்த அப்பாவித்தனமான காதலைப் பார்த்தபோது, அவனது ரகசியங்களை விட அவளது உணர்வுகளே மேலானதாகத் தெரிந்தது.

அவளது ஒவ்வொரு வார்த்தையையும் தன் இதயத்தின் ஆழத்தில் சேமித்துக் கொண்டிருந்தான். “எனக்கும் அதே உணர்வுதான் அகல்யா…” என்று அவளது காதலை அங்கீகரிக்க அவன் துடித்த அந்த நொடி, வானம் அவர்களுக்கு ஒரு மாயாஜாலத்தைச் செய்யத் தொடங்கியது.

திடீரென அந்த மலையடிவாரத்தில் ஒரு குளிர்ந்த காற்று வீச, கருமேகங்கள் கூட்டமாகத் திரண்டு வந்தன. அகல்யா அடுக்கடுக்காகத் தன் மனக் குழப்பங்களைச் சொல்லிக்கொண்டே போக, அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல வானம் இடியுடன் மழையைத் தூவத் தொடங்கியது.

“ஐயோ! மழை பாஸ்!” என அகல்யா பதற, “வா… அங்கே ஒதுங்கலாம்!” என ஆகாஷ் அவளது கையைப் பற்றிக்கொண்டு அந்தக் கோயிலின் பழங்காலக் கற்றூண்கள் கொண்ட ஒரு மறைவான ஓரத்தில் ஒதுங்கினான்.

பெருமழை பூமியை நனைக்கத் தொடங்க, அந்த இடமே மழையின் வாசனையில் நனைந்தது. கோயிலின் அந்தச் சிறிய ஒதுக்கிடத்தில் இருவரும் மிக நெருக்கமாக நிற்க வேண்டிய சூழல். அகல்யாவின் தோள்களில் மழையின் துளிகள் பட்டுத் தெறிக்க, குளிரில் அவளது உடல் மெல்ல நடுங்கியது.

“குளிருதா அகல்யா?” என ஆகாஷ் கேட்க, அவள் இல்லை என்பது போலத் தலையசைத்தாள். ஆனால் அவளது விழிகளில் இருந்த தவிப்பு வேறு ஏதோ ஒன்றைச் சொன்னது.

அந்தப் பழைய தூணின் ஓரத்தில், ஒருபுறம் மழையின் சத்தம்… மறுபுறம் அவர்களின் மூச்சுக் காற்று. மழையின் சாரல் அவளது முகத்தில் பட்டு, நீர்த்துளிகள் கன்னங்களின் வழியே வழிந்து இதழோரம் வந்து நின்றன. அந்த ஈரமும், மந்தமான வெளிச்சமும் அவர்களுக்குள் ஒரு விவரிக்க முடியாத ஈர்ப்பை ஏற்படுத்தியது.

மழையின் சத்தம் அந்த மலையடிவாரத்தை ஒரு தனி உலகமாக மாற்றியிருந்தது. வானம் பிளந்து ஊற்றும் அந்தப் பெருமழைக்கு நடுவே, கோயிலின் அந்தச் சிறிய கல் மண்டபத்தின் ஓரம் அவர்கள் இருவருக்கும் ஒரு சொர்க்கமாக மாறியது.

காதல் என்ற வார்த்தையைத் தாண்டி, ஒரு உயிரும் இன்னொரு உயிரும் தங்களை முழுமையாக ஒப்படைக்கத் துடிக்கும் அந்த மௌனமான தருணம் அது. ஆகாஷ் மெதுவாகத் தன் கையை உயர்த்தி, அவளது நெற்றியில் வழிந்த அந்த மழைத் துளியை வழித்துவிட்டான், அந்தத் தீண்டலில் இருந்த வெப்பம் அவளது உடல் முழுக்க ஒரு சிலிர்ப்பை உண்டாக்கியது. அகல்யா மெல்லத் தன் கண்களை மூடிக்கொண்டாள். இமைப்பொழுதில் அவளது உலகமே அவனது கரங்களுக்குள் அடங்கிவிட்டது போலத் தோன்றியது.

ஆகாஷ் அவளது முகத்தை இரு கைகளாலும் மென்மையாக ஏந்தினான். மழையின் ஜில்லென்ற சாரல் அவள் மீது பட்டுத் தெறிக்க, அவனது உள்ளங்கைகளின் கதகதப்போ அவளை உருக்கியது. அந்தத் தொடுதலில் ஒரு புனிதமான உரிமை இருந்தது, அது “நீ எனக்கானவள்” என்று வார்த்தையின்றிச் சொன்னது.

அவளது இதழ்கள் மௌனமாக எதையோ வேண்ட, அவன் மெல்லத் தன் முகத்தை அவளது முகத்திற்கு மிக அருகில் கொண்டு வந்தான். அவளது மூச்சுக் காற்று அவனது முகத்தில் பட, இருவரின் இதயத் துடிப்புகளும் ஒரே சீராக ஒலிக்கத் தொடங்கின.

அடுத்த நொடி, மழையின் ஈரம் அவர்களின் இதழ்களில் சங்கமித்தது. அந்த முத்தம்… அது வெறும் இதழ்களின் தீண்டல் மட்டுமல்ல, இரு ஆன்மாக்களின் நீண்ட காலத் தவிப்பின் முடிவு. மழையின் இரைச்சலில் உலகமே மறைந்து போக, அவர்களின் அணுக்கமான அந்தத் தீண்டல் ஒரு காவியமாக மலர்ந்தது. காதலைத் தாண்டி, ஒருவரை ஒருவர் முழுமையாகத் தமக்குள் கரைத்துக்கொள்ளத் துடித்த அந்தத் தருணம், காலத்தையே உறைய வைத்தது.

அவளைத் தன் வலிமையான அரவணைப்பிற்குள் இழுத்து அணைத்துக்கொண்டான் ஆகாஷ். அங்கே அவன் ஒரு மல்டி-நேஷனல் கம்பெனியின் சிஇஓ அல்ல, அவளோ ஒரு சாதாரணப் பெண் அல்ல. வெறும் மழையும், அதில் நனைந்து தவித்த இரு இதயங்களும் மட்டுமே எஞ்சியிருந்தன. அகல்யா அவனது மார்பில் முகம் புதைத்து, அந்தப் பாதுகாப்பான கதகதப்பை அனுபவித்தாள். அவனது இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் அவளுக்கு ஒரு புதிய நம்பிக்கையைத் தந்தது.

“பாஸ்… இந்த மழை இப்படியே நிக்காம இருக்கக் கூடாதா? காலமும் நேரமும் இங்கேயே உறைஞ்சுடக் கூடாதா?” என அவள் அவனது மார்புக்குள் இருந்தபடியே முணுமுணுத்தாள். அவளது குரலில் இருந்த அந்த நெகிழ்ச்சி அவனது ஆத்மாவையே தொட்டது.

ஆகாஷ் அவளது கூந்தலில் வழிந்த மழைநீரைத் தன் விரல்களால் கோதிவிட்டபடி, அவளது காதோரம் மிக மென்மையாக, “இந்த மழை ஒருவேளை நிக்கலாம் அகல்யா… ஆனா, உனக்காக என் மனசுக்குள்ள பொழியுற இந்தக் காதல் மழை, என் உயிர் இருக்குற வரைக்கும் நிக்காது,” என ரகசியமாகச் சொன்னான்.

மழையின் ஈரமும், ஆகாஷின் அந்தத் தீவிரமானத் தொடுதலும் அகல்யாவிற்குள் இதுவரை அறியாத ஒரு புதிய பெண்மையைத் தட்டி எழுப்பியது. அவனது அணைப்பில் அவள் ஒரு பூவைப் போல ஒடுங்கிக் கொண்டாள். கோயிலின் அந்த கருமேகங்களின் இருளில் சூழ்ந்த மூலை, மழையின் சங்கீதமும்,ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்ட அந்த வெப்பமும்… இவை அனைத்தும் சேர்ந்து அவர்களை ஒரு புதிய பிரபஞ்சத்திற்கு அழைத்துச் சென்றன.

அங்கே வேறு எதற்கும் இடமில்லை, சொற்களுக்கு அவசியமில்லை. மழையும், மௌனமும், அவர்களின் காதலும் மட்டுமே அந்த இரவின் பேரழகாக மாறியிருந்தது.

🌧️தூறல்கள் தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page