மழையும் அந்த ஈரமான தருணங்களும் தந்த சிலிர்ப்பு இன்னும் குறையாமல், ஆகாஷும் அகல்யாவும் மீண்டும் மருத்துவமனைக்குத் திரும்பினார்கள். ஆசிரம நிர்வாகி அவர்களைக் கண்டதும் ஓடி வந்து, “அகல்யா! கவிதாவைப் பொது வார்டுக்கு மாத்திட்டாங்கம்மா… இப்பதான் கண்ணைத் திறந்து பார்த்தா!” என்று மகிழ்ச்சியில் திணறினார்.
இருவரும் வார்டுக்குள் நுழைந்தபோது, படுக்கையில் சோர்வாகக் கிடந்த கவிதா, அவர்கள் வருவதைப் பார்த்தது மெல்லத் தலைசாய்த்தாள்.
அகல்யா ஓடிப் போய் அவள் கைகளைப் பற்றிக்கொள்ள, கவிதா எதுவும் பேசவில்லை. அவளது கண்கள் அகல்யாவைத் தாண்டி ஆகாஷையே பார்த்தன. தன் பலவீனமான கையை மெல்லத் தூக்கி, ஆகாஷைப் பார்த்து ஒரு சிறு புன்னகையுடன் தன் உள்ளங்கையை நீட்டினாள்.
“கவிதா… என்ன வேணும் சொல்லுடா? அக்கா கிட்ட சொல்லு,” என அகல்யா புரியாமல் கேட்க,
நிர்வாகி ஐயாவோ, “ஒருவேளை தண்ணி கேக்குறாளோ?” எனத் திகைத்து நின்றார்.
ஆனால் ஆகாஷ் எதையும் பேசவில்லை. அவளது அந்தக் கண்கள் எதைத் தேடுகிறது என்பதை அந்த நொடியே அவன் உணர்ந்தான். தன் ஈரமான சட்டைப் பாக்கெட்டுக்குள் கையை விட்டுத் தேடியவன், அதில் இருந்து ஒரு சிவப்பு நிறத் தேன் மிட்டாயை வெளியே எடுத்தான்.
வழியில் அகல்யாவிற்கு கொடுத்தது போக மீதியை அதே கவரில் போட்டு பாக்கெட்டில் வைத்திருந்தான், அது மழையில் நனையாமல் பத்திரமாக அவனது பாக்கெட்டிற்குள் ஒளிந்திருந்தது.
மிட்டாயின் மேலிருந்த உறையை மெதுவாகப் பிரித்தவன், கவிதாவின் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தவன். “உனக்கு இதுதான் வேணும்… அதானே?” என அவன் மென்மையாகக் கேட்க, கவிதா தன் சோர்வையும் மீறித் தலையசைத்தாள்.
அவன் அந்தத் தேன் மிட்டாயை மிக மென்மையாக அவளது வாயில் ஊட்டிவிட்டான். அந்த இனிப்பு அவள் நாவில் பட்டதும், வலியையும் மறந்து அந்தக் குழந்தையின் முகத்தில் ஒரு பேரொளி மின்னியது. ஆகாஷ் அவளது பிஞ்சு விரல்களைத் தன் விரல்களால் கோத்துக்கொண்டு, “சீக்கிரம் எழுந்து வா… உனக்காக ஒரு பெரிய மிட்டாய் கடையே நான் வாங்கித் தர்றேன்,” என ரகசியமாகச் சொன்னான்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அகல்யாவுக்குத் தொண்டை அடைத்தது. ஒரு பிஞ்சு குழந்தையின் சின்ன ஆசையை இவ்வளவு நுணுக்கமாகக் கவனித்து, அவளது தேவையை நிறைவேற்றும் அவன் குணத்தைப் பார்த்தபோது, அவளது காதலும் மரியாதையும் எல்லை கடந்து சென்றது.
கண்கள் கலங்க, ஆகாஷையே இமைக்காமல் பார்த்தாள். மழை நனைத்த அவளது ஆடைகளை விட, அவனது இந்த ஈரமான செயல் அவளது இதயத்தை ஆழமாக நனைத்தது. ஆகாஷ் நிமிர்ந்து அவளைப் பார்க்க, அகல்யா தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே ஒரு அழகான புன்னகையை அவனுக்குப் பரிசாகத் தந்தாள். அந்த வார்டில் இருந்த மருந்து வாசனையைத் தாண்டி, அன்பின் நறுமணம் அங்கே வீசத் தொடங்கியது.
பின்னர் கவிதா நன்றாகத் தூங்க, அவர்கள், இருவரும் மருத்துவமனை வராண்டாவில் இருந்த நாற்காலியில் அருகருகே அமர்ந்தார்கள். காதலின் அந்த மென்மையான தீண்டலும், ஆகாஷ் மீது கொண்ட ஆழமான அன்பும் ஒன்றாக கலந்த தருணம் அது.
அவனின் கையை தன் கரங்களுக்குள் இறுக்கமாக கோர்த்துக்கொண்ட அகல்யா, மெதுவாக தன் தலையை அவன் தோள்பட்டையில் சாய்த்தாள். அந்த ஒரு அணைப்பே போதுமென, அவளின் உள்ளத்தில் அமைதி மெல்ல மெல்ல வேரூன்றியது. இமைகள் தானாகவே மூடிக்கொள்ள, அந்த காதல் நிமிடத்தில் அவள் முழுவதும் கரைந்தாள்.
ஆகாஷ் நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டான். அவனது மனசாட்சி இப்போது அவனைக் குத்தத் தொடங்கியது. அகல்யா தன் மீது வைத்திருக்கும் இந்தத் தூய்மையான அன்பு, தான் போர்த்தியிருக்கும் இந்த PA என்ற போலி வேடத்திற்குத் தானா? உண்மையைச் சொன்னால் அவள் தன்னை ஒரு ஏமாற்றுக்காரனாகப் பார்ப்பாளா?
மெதுவாக அவளது விழிகளை நேருக்கு நேராகப் பார்த்தவன். “அகல்யா… நான் உன்கிட்ட ஒரு பெரிய உண்மையைச் சொல்லணும். அதை இப்போ சொல்லலன்னா என் மனசு தாங்காது…” என அவன் கணத்த குரலில் ஆரம்பித்தான்.
அகல்யா எதோ கேட்க வந்த அந்த நொடியில், ஆகாஷின் சட்டைப் பையில் இருந்த மொபைல் போன் அதிர்ந்து கொண்டு அலறியது. அந்த நிசப்தமான சூழலில் அந்தச் சத்தம் சற்று அதிகமாகவே கேட்டது.
ஆகாஷ் போனை எடுத்துப் பார்த்தான். திரையில் ‘Dad’ என்ற பெயர் மின்னியது… அவர் எதற்காக இப்போது அழைக்கிறார்? ஒருவேளை சித்தார்த் அவரிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டானா? என ஆகாஷின் முகத்தில் ஒரு சிறு தயக்கம் படர்ந்தது.
அதை அவனது அருகிலிருந்த அகல்யா கவனித்துவிட, “ஆகாஷ்… அப்பா கூப்பிடுறாங்க போல. பேசுங்க,” என அவள் இயல்பாகச் சொல்ல.
ஆகாஷ் இன்னும் அந்தத் தயக்கத்துடனேயே போனைப் பார்த்துக் கொண்டிருக்க, அகல்யாவுக்குள் ஒரு எண்ணம் ஓடியது. ‘ஒருவேளை அவங்க வீட்ல என்னைப் பத்தித் தெரியக்கூடாதுன்னு நினைக்கிறாரோ? இல்லை இது ரொம்ப பர்சனலான விஷயமாக இருக்குமோ?’ என தனது இருப்பு அவனுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்று நினைத்தவள்,
“ம்ம்ம் நான் போய் பாப்பாவை ஒருமுறை பார்த்துட்டு வர்றேன்,” என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து நகர முயன்றாள்.
அனால், அவள் எழ முயன்ற அந்த விநாடி… ஆகாஷ் சட்டெனத் தன் வலது கையால் அவளது மணிக்கட்டைப் பற்றினான். அந்தத் திடீர் தீண்டலில் அகல்யா அதிர்ந்து போய் நின்றாள். அவனது கரங்களின் வெப்பம் அவளது நரம்புகளில் ஒரு புது சிலிர்ப்பை உண்டாக்கியது.
அவள் மெதுவாகத் திரும்பி அவனைப் பார்க்க, அவனது கண்களில் ஒருவிதமான உறுதியுடன், ‘என்னை விட்டுப் போகாதே’ என்ற கெஞ்சலும் கலந்திருந்தது. அவன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை, தன் கண்ணசைவிலேயே ‘உட்கார்’ என்று ஆணையிடுவது போல சைகை செய்தான்.
அவள் மேலும் தயங்கி நிற்க, ஆகாஷ் அவளது கையை மென்மையாகத் தன் பக்கம் இழுத்தான். அந்த இழுப்பில் நிலைதடுமாறிய அகல்யா, மீண்டும் அவனது அருகிலேயே அமர்ந்தாள். அவர்களுக்கிடையே இருந்த இடைவெளி இப்போது அறவே மறைந்திருந்தது. அவனது தோள் அவளது தோளை உரச, அகல்யாவின் இதயம் படபடவெனத் துடித்தது.
“இருக்கட்டும் அகல்யா… உன்கிட்ட மறைக்க வேண்டிய அளவுக்கு என் அப்பாகிட்ட நான் எதையும் பேசப்போறது இல்லை. நீ எங்கேயும் போக வேண்டாம். இங்கேயே என் பக்கத்துல இரு,” என அவன் மிக மெல்லிய குரலில் சொல்லிவிட்டு, போனை எடுத்து ‘அட்டெண்ட்’ செய்தான்.
ஆனலும், அகல்யாவின் கையை விடாமல் அப்படியே கோர்த்துப் பிடித்துக்கொண்டான். அந்தப் பிடியில், ‘இனி உன் வாழ்க்கையில் வரும் எல்லாப் பிரச்சினைகளையும் இந்தத் தந்தை மட்டுமல்ல, இந்த உலகமே பார்த்தாலும் நான் உன் கையை விடமாட்டேன்’ என்ற மௌனமான சத்தியம் இருந்தது.
ஆகாஷ் போனை காதில் வைத்திருந்தாலும், அவனது கவனம் முழுவதும் தன் கையை இறுகப் பற்றியிருந்த அகல்யாவின் மீதே இருந்தது.
“எஸ் டாட்..!” என ஆகாஷ் குரல் கொடுக்க, மறுமுனையில் அவனது தந்தை ராஜசேகரின் குரல் கணீரென்று கேட்டது. ஆனால் அந்தக்குரலில் அதிகாரத்திற்குப் பதில் ஒருவிதமான குறும்புத்தனமான கேலி இருந்தது.
“என்னடா மகனே… அந்தப் பக்கம் என்ன டிராமா எல்லாம் போட்டுகிட்டு இருக்கிறதா கேள்விப்பட்டேன்? என்ன நடக்குது அங்க? ஒரு பெரிய கம்பெனி CEOவா இருந்தவன், இப்போ ஒரு டிராவல் பஸ்ல PAவா சீன் போட்டுட்டு இருக்கியாமே?” என அவர் கிண்டலாகக் கேட்க, ஆகாஷின் நெற்றியில் வேர்வை துளிர்த்தது.
பக்கத்தில் இருக்கும் அகல்யாவை வைத்துக்கொண்டு எப்படிப் பேசுவது எனத் தடுமாறியவன், “டாட்.. அது வந்து..” என இழுத்தான்.
ராஜசேகர் சிரித்துக்கொண்டே, “என்னடா.. அந்தப் பொண்ணு உன் பக்கத்துலதான் இருக்காளா?” எனக் கேட்க, ஆகாஷ் அகல்யாவைப் பார்த்துவிட்டு மெல்லிய குரலில், “எஸ் டாட்..” என்றான். அதற்கு மேல் அவனால் எதையும் பேச முடியவில்லை.
“புரியுது புரியுது.. அதான் புருஷ லட்சணம்! இப்பவே ‘ஆமாம்’ போட ஆரம்பிச்சுட்ட. நீ பண்ற ட்ராமா எல்லாமே சித்தார்த் சொல்லிட்டான். நீ பண்றதெல்லாம் பார்த்தா எனக்கும் உங்க அம்மாவுக்கும் சிரிப்பாத்தான் இருக்கு. ஆனா உங்க அம்மாவுக்கு இதுல பெரிய ஆச்சரியம்.. எந்தப் பொண்ணு என் மகனை இப்படி மாத்தினான்னு அவ பார்த்தே ஆகணும்னு அவசர அவசரமா கிளம்பிட்டு இருக்கா,” என்று சொல்லச் சொல்ல ஆகாஷின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.
“டாட்.. என்ன சொல்றீங்க?” என அவன் பதற்றத்துடன் கேட்க, பக்கத்தில் இருந்த அகல்யா அவன் முகமாற்றத்தைக் கண்டு பயந்துபோனவள்.
“என்ன? என்ன ஆச்சு?” எனக் கண்களாலேயே வினவ.
ஆகாஷ் அவளிடம் “இரு” என்று கையை அசைவில் காட்டிவிட்டு, மீண்டும் போனில் கவனமானான்.
“டேட்.. எப்போ கிளம்புறீங்க?” என அவன் கேட்க,
“இன்னும் கொஞ்ச நேரத்துல! நாளைக்குக் காலையில பிளைட்.. நானும் சிவகாமியும் கிளம்பிட்டோம். சென்னைக்கு நாளைக்கு வந்திடுவோம்,” என்றார் அவர் உறுதியாக.
“டேட்.. என்ன இது? நானே இன்னும்..?” என அவன் முடிக்கும் முன்பே தடுத்த அவனது தந்தை, “அதெல்லாம் எனக்குத் தெரியாது. இதையும் எப்படியோ நீயே சமாளி! நீ உன்னுடைய லவ்வை சொல்றியோ இல்லையோ, அதுக்கு முன்னாடி நாங்க அந்தப் பொண்ணைப் பார்க்கணும். அவ்வளவுதான்.. நாளைக்குச் சந்திக்கலாம்!” என ஆகாஷின் பதிலை எதிர்பார்க்காமலே தொடர்பைத் துண்டித்தார்.
ஆகாஷ் போனை மெதுவாகக் கீழே இறக்கினான். அவனது முகம் இப்போது வெளிறிப் போய் இருந்தது. தன் அடையாளத்தை ஒரு அழகான தருணத்தில் மெதுவாகச் சொல்லலாம் என்று நினைத்தவனுக்கு, இப்போது ‘இடியாக’ விழுந்திருக்கிறது இந்தச் செய்தி.
அவன் சோகமாக அகல்யாவின் பக்கம் திரும்ப, அவனது பார்வையைப் பார்த்தவள் பதற்றமானாள். “ஆகாஷ் .. ஏதாவது பிரச்சனையா? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? அப்பா என்ன சொன்னாரு?” என அவள் அக்கறையுடன் அவன் கையைப் பிடித்துக் கேட்டாள்.
ஆகாஷ் ஒரு நிமிடம் மௌனமாக இருந்துவிட்டு, “அகல்யா.. அப்பாவும் அம்மாவும் நாளைக்கு சென்னைக்கு வராங்களாம்,” என்றான்.
அகல்யாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. “என்னது? உங்க அப்பாவா? எதுக்கு பாஸ்? ஒருவேளை நீங்க இங்கே வந்தது அவங்களுக்குத் தெரிஞ்சுடுச்சா? என் கூட வந்தது தப்புன்னு நினைக்கிறாங்களா?” என அவள் அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்திருந்தவளின் மணிக்கட்டை இன்னும் உரிமையோடு ஆகாஷ் பற்றியிருந்தான், ஆனால் அகல்யாவின் மனமோ ஒரு புயலில் சிக்கிய காகிதமாக அலைபாய்ந்தது.
அவளது கண்கள் கலங்கி, பார்வை மங்கத் தொடங்கியது. இதுவரை ‘ஆகாஷ்’ என்ற மனிதனை ஒரு தோழனாக, ஒரு அன்பான வழிகாட்டியாக மட்டுமே பார்த்தவளுக்கு, இப்போது அவனது ‘பெற்றோர்கள்’ என்ற வார்த்தை ஒரு இனம் புரியாத அச்சத்தை விதைத்தது.
அவளது ஆழ்மனம் ஆயிரம் கேள்விகளை அடுக்கத் தொடங்கியது “நான் யார்? ஒரு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள்… எனக்கென்று ஒரு குலமோ, கோத்திரமோ, அடையாளமோ கிடையாது. ஆனால் ஆகாஷ்? அவன் ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம், ஆனால் அவன் படித்தவன், பண்பானவன். அழகிலும் குணத்திலும் அவன் யாருக்கும் குறைந்தவன் இல்லை. அவனது பெற்றோர்கள் என்னைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள்?
ஜாதி, அந்தஸ்து, கௌரவம் இந்தச் சமுதாயம் கட்டி வைத்திருக்கும் வேலிகள் எங்களை ஒன்று சேர விடுமா? காதல் என்று வரும்போது இந்தப் பேதங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லைதான்… ஆனால் ‘கல்யாணம்’ என்று வரும்போது, பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளும் ஒரு பெரும் மலையாய் வந்து நிற்குமே! என் பின்னணியைக் கேட்ட பிறகு, அவர்கள் அவனைத் தடுத்தால்… அவன் எனக்காக அவர்களை எதிர்ப்பானா? இல்லை, எனக்காக அவன் தன் குடும்பத்தைப் பிரிவதைக் காணும் சக்தி எனக்கு இருக்கிறதா?”
அவளது சிந்தனைகள் ஒரு இருண்ட குகைக்குள் செல்வது போல இருந்தது. அவனது கை தந்த அந்த இதமான கதகதப்பு, இப்போது அவளுக்கு ஒரு பாரமாகத் தோன்றியது. “இந்த உறவு ஒருவேளை அவனுக்குப் பின்னாளில் ஒரு சுமையாக மாறிவிடுமோ?” என்ற எண்ணம் அவளை வாட்டியது.
மனதிற்குள் எழுந்த அந்தப் போராட்டத்தின் விளைவாக, அகல்யா மெதுவாக ஆகாஷின் பிடியில் இருந்த தன் கையை உருவிக்கொண்டாள். அந்தத் திடீர் விலகல் ஆகாஷிற்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தது.
அவன் புரியாமல் அவளைப் பார்த்தான். அவனது பார்வையில் இருந்த அந்தத் தவிப்பு, “ஏன் கையை எடுக்கிறாய்?” என்று மௌனமாக வினவியது.
அகல்யா அவனது கண்களை நேராகப் பார்க்கத் துணிவின்றித் தலைகுனிந்து கொண்டவள்… நேராக கவிதாவின் அறையை நோக்கி நடத்தாள்.
🌧️தூறல்கள் தொடரும்…
