தூவானம் -25

 

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அந்த அதிகாலை வேளையிலும் மக்கள் கூட்டத்தாலும், பேருந்துகளின் இரைச்சலாலும் பரபரப்பாக இருந்தது. விடியலின் இளஞ்சிவப்பு வெளிச்சம் மெல்லப் படரத் தொடங்கியிருந்தது.

பேருந்தை விட்டு இறங்கிய அகல்யாவின் முகம், இரவு முழுதும் சிந்திய கண்ணீரால் சற்று வாடிப் போய், கன்னங்களில் வற்றிய கண்ணீர்த் தடங்களுடன் இருந்தது. அவளது கண்கள் தூக்கமின்மையாலும் கவலையாலும் சிவந்திருந்தன.

தன் முகத்தை ஒருமுறை துடைத்துக்கொண்டு, ஒரு நீண்ட பெருமூச்சோடு இயல்பு நிலைக்குத் திரும்ப முயன்றவள்.

“சரி ஆகாஷ்… உங்க அம்மா அப்பா வர இன்னும் நேரம் ஆகும். அதுவரைக்கும் நீங்க வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுங்க. நான் என் ஹாஸ்டலுக்குப் போறேன்,” எனச் சொன்னவள், அவன் பதில் சொல்வதற்குக்கூடக் காத்திருக்க மனமில்லாமல்

தன் மனதில் இருக்கும் பயமும், அவனது பெற்றோரைச் சந்தித்தால் எங்கே எல்லாம் கைமீறிப் போய்விடுமோ என்ற அச்சமும் அவளை அங்கிருந்து ஓடத் தூண்டியது. ஆகாஷின் கையில் இருந்த தன் துணிப் பையின் கைப்பிடியைப் பற்றி இழுத்துக்கொண்டு நகரப் பார்த்தாள்.

ஆனால், ஆகாஷின் பிடி தளரவில்லை. மாறாக, அவன் அந்தப் பையை இன்னும் பலமாக இழுக்க, அகல்யா ஒரு அடி கூட நகர முடியாமல் நின்று போனவள் திரும்பிப் பார்த்தாள்.

அவனது முகத்தில் இருந்த அந்த விடாப்பிடியான உறுதியைக் கண்டு மிரண்டவள். “என்ன பாஸ்?” எனக் கண்களால் கேட்க, ஆகாஷ் சற்றும் யோசிக்காமல் அந்தப் பையோட சேர்த்து அவளையும் தன் பக்கம் இழுத்தான்.

சற்றும் எதிர்பார்க்காத அந்த இழுப்பில், அகல்யா நிலைதடுமாறி வந்து அவனது அகன்ற மார்பில் மோதி நின்றாள். பேருந்து நிலையத்தின் பரபரப்பிற்கு நடுவே, அவனது இதயத் துடிப்பு அவளது நெற்றியில் அதிரும்படி அவ்வளவு நெருக்கம்!

“ப்ச், ஆகாஷ்… என்ன இது? பப்ளிக் பிளேஸ்… ப்ளீஸ், எல்லாரும் பார்க்குறாங்க, விடுங்க!” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தபடி அவன் பிடியில் இருந்து விலகப் போராடினாள்.

ஆனால் அவனோ அவளை விடவில்லை. அவளது தாடையை மெல்ல உயர்த்தி, நீர்த்துளி ததும்பும் அவளது கண்களை நேருக்கு நேராகப் பார்த்தவன். “உனக்கு இன்னும் என் மேல நம்பிக்கை வரலையா அகல்யா?” என அவன் கேட்ட குரலில் ஒருவிதமான வலியும் காதலும் கலந்திருந்தது.

அவள் பதில் சொல்லவில்லை, மௌனத்தையே விடையாகத் தந்துவிட்டுத் தலைகுனிந்து கொண்டாள். 

“சரி… உனக்கு ஒரு சந்தேகம் இருக்கு, எங்க அம்மா அப்பாவுக்கு உன்னைப் பிடிக்காதுன்னு நீ யோசிக்கிற. அது ஓகே. ஆனா, உன் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா? உன்னோட இந்த அன்பால, மத்தவங்களுக்காக உருகிற உன்னோட இந்த மனசால, யாரையும் வசீகரிக்கிற உன்னோட அந்தச் சிரிப்பால… எங்க அம்மா அப்பா மனசை மாத்தி, உன்னைப் பிடிக்க வைக்க உன்னால முடியும் இல்ல?” என்று அவன் ஆழமாகத் துளைக்கும் பார்வையுடன் கேட்டான்.

திடுக்கிட்டு அவனை ஏறிட்டுப் பார்த்தாள், அகல்யா. அவனது கேள்வி அவளது தன்னம்பிக்கையைத் தட்டியெழுப்பியது. ஆனாலும், ஒரு அனாதைப் பெண்ணாகச் சமூகம் தனக்கு இழைத்த காயங்கள் அவளைத் தடுத்தன.

“முடியுமா… முடியாதா?” என்ற அந்தத் தவிப்பு அவளது கண்களில் ஊசலாடியது. ‘ஒருவேளை என்னைத் தள்ளி வைத்தால் நான் என்ன செய்வேன்?’ என்ற தயக்கம் அவளது இமைகளை நனைத்தது.

ஆகாஷ் அவளது கைகளைத் தன் கைகளுக்குள் பொத்தி வைத்தபடி, அவளது மௌனத்தை உடைக்க முடிவெடுத்தவன்..

“முடியும்… உன்னால கண்டிப்பா முடியும் அகல்யா!” என்று அவன் உறுதியான குரலில் சொன்னவன்.

“என் அம்மா அப்பாவையே உனக்குச் சாதகமா மாத்திக்கிற அந்தச் சக்தி உன்கிட்ட மட்டும்தான் இருக்கு. உன்னோட அந்தத் துடிப்பான பேச்சு, எதையும் அழகாச் சொல்லுற விதம்… இதையெல்லாம் பார்த்தா அவங்க உன்னைச் சமாளிக்க முடியாமத் திணறிப் போய்டுவாங்க!” என அவன் ஒரு புதிரான சிரிப்புடன் சொல்ல, அகல்யா அவனைப் புரியாமல் ஆராய்ந்தாள்.

‘ஆகாஷ் எதைப்பற்றிப் பேசுகிறான்?’ என்ற குழப்பம் அவளது புருவங்களை உயர்த்தியது.

அவன் அவளது கைகளை விடாமல் மெல்லத் தன் பக்கம் சாய்த்தபடி, “அவங்க வர எப்படியும் சாயங்காலம் ஆகிடும் அகல்யா. அதுவரைக்கும் நான் வீட்ல தனியாத்தான் இருப்பேன்… நீயும் வரலாமே? வந்து அவங்களுக்குத் தேவையான சின்னச் சின்ன ஏற்பாடுகளைச் செய்யலாம்,” என்றான்.

அவன் “வீட்டில் தனியாகத்தான் இருப்பேன்” என்று சொன்ன அந்த வார்த்தைகளில் ஒருவிதமான காந்த ஈர்ப்புடன், மெல்லிய குறும்பும் கலந்திருந்ததை கவனித்த அகல்யாவின் கன்னங்களில் ஒரு மெல்லிய சிவப்புப் படர, தன் வெட்கத்தைச் சிரிப்பால் மறைத்தபடி…

“ஆகாஷ்… நீங்க வேற ஏதோ பிளான் போடுற மாதிரி தெரியுது! இதெல்லாம் சரிப்பட்டு வராது, முறையும் கிடையாது. நான் கிளம்புறேன்,” எனச் சொல்லிவிட்டுத் தன் கைகளை விடுவித்துக்கொண்டு நகர முயன்றாள்.

ஆனால், இந்த முறை ஆகாஷ் விடவில்லை. அவளது இரு கரங்களையும் பற்றிக் குறுக்கே நின்று வழிமறித்தவன்.

“அய்யோ மேடம்! நான் எந்தத் தப்பான பிளானும் போடல. எங்க அம்மா அப்பாவை கன்வின்ஸ் பண்றதுக்கு உங்களை ஒரு பெர்பெக்ட் மருமகளா ரெடி பண்ணலாம்னுதான் சொல்றேன்,” எனச் சிரித்துக்கொண்டே சொன்னவன்..

“ப்ளீஸ் அகல்யா… என் வீட்டுக்கு வா. நான் ஒருத்தனாவே தங்கி இருக்கிற இடம் அது. எல்லாமே சிதறிக் கிடக்கும், கலைச்சுப் போட்ட மாதிரிதான் இருக்கும். சுத்தம் பண்ண வேண்டிய வேலை அடுக்கடுக்கா இருக்கு. அம்மா வந்தா வீட்டைப் பார்த்துட்டு என்னைத்தான் திட்டுவாங்க, அப்பாவுக்கும் சுத்தமில்லாத இடத்தைப் பிடிக்காது. எனக்கும் நேரமே இல்லை… நீயும் வந்து கொஞ்சம் வீட்டைச் சரி பண்ணிட்டு, மத்தியானத்துக்கு அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி சமையல் செய்யலாம்ல?”

அவள் எதோ சொல்ல வாயெடுக்க, அவளை இடைமறித்தவன். “ஒருவேளை நீ செய்யப்போற அந்தச் சமையலோட ருசியில மயங்கிப் போய், உன்னோட மாமனார் மாமியாரும்  முதல் சந்திப்புலயே ஓகே சொல்லிட்டா… அப்புறம் என்ன பண்றது?” எனச் சொல்லி அவளது கன்னத்தை தன் விரல்களால் மென்மையாக இடிக்க, அகல்யா அப்படியே சிலிர்த்துப் போனாள்.

அந்த மாமனார், மாமியார் என்ற வார்த்தைகள் அகல்யாவிற்குள் ஒரு புதுவிதமான உணர்வை உண்டாக்க, அதுவரை இருந்த பயம் மறைந்து, ஒரு காதலின் உரிமையும் அவளது முகத்தில் பிரகாசித்தது. வெட்கத்தில் தலைகுனிந்தவள், ஆகாஷின் கண்களை நேராகப் பார்க்க முடியாமல் நெளிந்தவள்.

“பாஸ்… ரொம்பப் பேசாதீங்க!” எனச் செல்லமாகக் கோபித்தவள்..

“எது… என் சமையலா? நீங்க வேற பாஸ்! நானே ஹாஸ்டல்லயும் ஆசிரமத்துலயும் வளர்ந்தவ. அங்க நாங்க சமைக்கிறதுக்கும், உங்க அம்மா அப்பாவை கவர மாதிரி சமைக்கிறதுக்கும் எவ்வளோ வித்தியாசம் இருக்கு? ம்ம்ஹூம்… ஏதாவது நடக்கிற காரியத்தைப் பேசுங்க பாஸ். அவங்க சாப்பிட்டுப் பார்த்துட்டு அப்புறம் என்னை ஆசிரமத்துக்கே திருப்பி அனுப்பிச்சிடப் போறாங்க!” என அவள் எதார்த்தமாகச் சொல்ல, ஆகாஷின் முகத்தில் ஒரு சிறு அதிர்ச்சி மின்னியது.

“ஹேய்! அப்போ உனக்குச் சமைக்கவே தெரியாதா அகல்யா?” என அவன் கண்கள் விரியக் கேட்க, அவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“ச்ச ச்ச… அப்படியெல்லாம் இல்லை பாஸ். எனக்கு எல்லாமே சமைக்கத் தெரியும். ஆனா நீங்க சொல்ற அந்த ‘மாமனார் மாமியார்’ கவர அளவுக்கு, ஒரு கல்யாண விருந்து மாதிரி என்னால இப்போதைக்குச் சமைக்க முடியாது… அதான் சொல்ல வந்தேன்,” என அவள் சொல்லும்போதே அந்த ‘மாமனார் மாமியார்’ என்ற வார்த்தையில் ஒரு மெல்லிய வெட்கம் அவளது கன்னங்களை வருடிச் சென்றது.

“அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் மேடம்! நீ வந்து கரண்டியைப் பிடிச்சா போதும், மத்தபடி காய்கறி நறுக்குறதுல இருந்து உப்புப் பார்க்குற வரைக்கும் நான் உனக்கு ஒத்தாசையா உதவி செய்றேன்,” என்றவன், அதற்கு மேல் அவளது பதிலை எதிர்பார்க்கமல், அவளது பையைத் தனது கைகளால் லாவகமாகத் தூக்கிக் கொண்டவன்,

“வா… சீக்கிரம் போலாம்!” எனச் சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் முன்னே நடந்தான்.

சிலையாக உறைந்து நின்ற, அகல்யா, “பாஸ்… சொன்னா கேளுங்க பாஸ்! இது விபரீத விளையாட்டு. உங்க வீட்ல போய் நான் தனியா இருக்கிறது சரியில்லை பாஸ்… பாஸ்!” என அவள் பின்னாலேயே கத்திக்கொண்டு ஓடினாள்.

ஆனால் ஆகாஷ் எதையும் காதில் வாங்கிக்கொள்வதாக இல்லை. கூட்ட நெரிசலுக்கு நடுவே, அவன் அவளது பையைச் சுமந்துகொண்டு செல்லும் அந்த வேகம், அவளுக்கு ஒரு பாதுகாப்பான பிடிவாதமாகத் தெரிந்தது.

“பாஸ்… மெதுவாப் போங்க! அங்க வந்து நான் சொதப்பிட்டா நீங்கதான் பொறுப்பு,” என அவள் மூச்சிரைக்க அவனது வேகத்திற்கு ஈடுகொடுத்து நடந்தாள்.

ஆகாஷ் முன்னால் நடக்க, அகல்யா ஒருவிதமான தவிப்புடன் அவனைப் பின்தொடர்ந்தாள்.

உண்மையில், நேற்று இரவு பேருந்தில் அகல்யா அழுத அழுகையும், அவள் சொன்ன அந்த வலி நிறைந்த வார்த்தைகளும் ஆகாஷின் மனதைச் சுக்குநூறாக உடைத்திருந்தது. அவளது பயத்தைப் போக்க வேண்டுமென்றால், அவளை அவனது அவனது பங்களாவிற்கு நேரடியாக அழைத்துச் செல்லக்கூடாது என்பதை அவன் உணர்ந்திருந்தான். அதனால்தான், அதிகாலையிலேயே சித்தார்த்துக்கு ரகசியமாகச் செய்தி அனுப்பி, அந்த மெட்ரோ அருகே ஒரு அமைதியான, நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் பாணியிலான வீட்டைத் தயார் செய்யச் சொல்லிவிட்டான்.

பேருந்து நிலையத்தின் நுழைவாயிலில் ஒரு வெள்ளை நிறச் சாதாரண கார் நின்று கொண்டிருந்தது. சித்தார்த் கச்சிதமாக ஏற்பாடு செய்திருந்த அந்த வாகனம், ஒரு வாடகை காப் போலவே தோற்றமளித்தது.

டிரைவர் சீட்டில் இருந்த நபர், ஆகாஷைப் பார்த்ததும் எழ முயல, ஆகாஷ் கண்களாலேயே அவரைத் தடுத்தவன். “கேப்… ஆகாஷ் நேம் தானே?” என அவன் ஏதும் தெரியாதவன் போலக் கேட்க, அந்த நபர் சுதாரித்துக்கொண்டு,

“ஆமாம் சார்… ஏறுங்க,” எனத் தலையாட்டினார்.

“இந்தக் கார்தான் அகல்யா… ஏறு!” என ஆகாஷ் சொல்ல, அகல்யா அப்படியே ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றாள்.

“ஆகாஷ்… வேண்டாம்! எனக்கென்னவோ இது சரியாத் தோணல. நான் ஹாஸ்டலுக்கே போய்க்கிறேன் பாஸ்… ப்ளீஸ்,” என அவள் மீண்டும் கெஞ்சவும்…

“அகல்யா… எல்லாம் எனக்குத் தெரியும். இப்போ வண்டி ஏறுற… அவ்வளவுதான்!” என அவன் ஒரு மென்மையான அதிகாரத்துடன் சொல்ல, அவனது பிடிவாதத்திற்கு முன்னால் அவளது எதிர்ப்பு எடுபடவில்லை. மௌனமாக, ஒருவிதத் தவிப்புடன் காரின் பின் இருக்கையில் ஏறி அமர, மெல்லிய புன்னகையுடன் ஆகாஷும் அவளருகில் அமர்ந்தான்.

கார் நகரத் தொடங்கியது. ஜன்னல் வழியே விடியத் தொடங்கும் சென்னையின் சாலைகள் தெரிந்தன. ஆனால் அகல்யாவின் இதயத் துடிப்பு அந்த காரின் இன்ஜின் சத்தத்தை விட வேகமாக இருந்தது. அவளது கைகள் ஒன்றோடொன்று பிணைந்து நடுங்கிக் கொண்டிருந்தன.

அவள் மனதிற்குள் ஓராயிரம் எண்ணங்கள்.. “என்ன பண்ணப் போறேன்? இன்னும் அதே அழுக்கு உடையிலதான் இருக்கேன். கோயம்புத்தூர்ல மழையில நனைஞ்சு, அந்த மண் வாசனையும் வியர்வையும் அப்படியே இருக்கு. முகம் எல்லாம் வீங்கிப் போய் இப்படி ஒரு கோலத்துலயா அவங்களைச் சந்திக்கிறது? அதையும் தாண்டி இந்த மனுஷன் திடீர்னு சமைக்கச் சொல்றாரே… எதாவது பண்ணி என்னை இப்படிப் பழிவாங்குறானே! ஒருவேளை சமையல் சரியில்லைன்னா, அவங்க என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க?”

அவளது தவிப்பை ஆகாஷ் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். அவளது முகத்தில் ஓடும் அந்தப் பதற்றம் அவனுக்கு ஒரு பக்கம் ரசிக்க வைத்தாலும், அவளை எப்படிச் சமாதானப்படுத்துவது என்பது அவனுக்குப் பெரும் சவாலாக இருந்தது.

அவளது கையை மெல்லப் பற்றிய ஆகாஷ், “அகல்யா… ரொம்ப யோசிக்காதே. அந்த வீட்டுல உனக்குத் தேவையான எல்லாம் இருக்கும். நீ முதல்ல ஃப்ரெஷ் ஆகு… அப்புறம் மத்ததைச் சமைக்கலாம். நான் உன் கூடவே இருப்பேன் சரியா?” என அவன் ஆறுதலாகச் சொல்ல, அகல்யா அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவளது கண்களில் இருந்த அந்த அப்பாவித்தனமான பயம், ஆகாஷிற்குள் ஒரு பேரன்பை உருவாக்கியது. ஒரு சாதாரணப் பெண்ணாக அவள் படும் இந்த அவஸ்தை, அவனது அந்தஸ்தை விட அவளுக்கு அவன் காட்டும் இந்தச் சின்னச் சின்ன அக்கறையே பெரியது என்பதை அவளுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது.

கார் மெல்ல மெட்ரோ பகுதியை நெருங்கியது. அங்கே சித்தார்த் தயார் செய்து வைத்திருந்த அந்த வீடு, அவர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கக் காத்திருந்தது.

🌧️தூறல்கள் தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page