தூவானம் -26

26

கார் மெட்ரோ ரயில் நிலையத்தை கடந்து, ஒரு அமைதியான குடியிருப்புத் தெருவுக்குள் நுழைந்தது. இவ்வளவு நேரம் அகல்யாவுக்கு இருந்த அந்தப் பதற்றம், இப்போது அப்படியே ஆகாஷைத் தொற்றிக்கொண்டது.

அகல்யாவின் தவிப்பைத் தீர்க்க அவன் செய்த ஏற்பாடு, இப்போது அவனுக்கே ஒரு பெரிய பரீட்சையாக மாறியிருந்தது. ‘இந்தச் சித்தார்த் எங்கே வீடு பார்த்திருக்கிறான் என்று தெரியவில்லையே? இவன் பாட்டுக்கு ஏதாவது ஆடம்பரமான பங்களாவைப் பார்த்து வைத்து, என் மொத்த நாடகத்தையும் சொதப்பி விடுவானோ?’ என்ற தவிப்பு ஆகாஷின் முகத்தில் அப்பட்டமாகத் விழுந்திருந்தது.

ஆகாஷ் சீட்டின் முனையில் அமர்ந்து, முன் பக்கக் கண்ணாடி வழியாகத் தெருவின் ஒவ்வொரு வீட்டையும் ஆவலோடும் பயத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது முகம் ஒருவிதமான குழப்பத்தில் இருப்பதை உணர்ந்த அகல்யா, மெதுவாகத் தன் கரங்களால் அவனது தோள்களைப் பற்றினாள்.

அந்தத் தீண்டலில், அவள் பக்கம் திரும்பிய ஆகாஷின் கண்களில் தவிப்பு அலைபாய்வதைக் கண்டவள், “உங்க வீட்டுக்குத்தானே பாஸ் போறோம்? ஏன் இவ்வளவு தவிப்பா இருக்கீங்க? வழி தெரியலையா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

“ச்சே ச்சே… அதெல்லாம் ஒன்னும் இல்லையே… இது நம்ம ஏரியா தானே, வழியெல்லாம் நல்லாத் தெரியும்,” என்று சமாளித்தபடி, அவன் வேகவேகமாகத் தலையைத் திருப்பிக் கொண்டு மீண்டும் சாலையையே வெறித்தான்.

‘எங்கே அந்த வீடு?’ என்ற தேடல் அவனது இதயத்துடிப்பை எகிற வைத்தது.

அகல்யா விடவில்லை. “இன்னும் எவ்வளவு தூரம் ஆகாஷ்? ரொம்ப நேரமாத் தேடுற மாதிரி இருக்கு?” என அவள் அடுத்த கேள்வியைப் போட, திருதிருவென விழித்த ஆகாஷ்.

“இதோ… இதோ வந்துட்டோம் அகல்யா. டிரைவர்கிட்ட கரெக்டான இடத்துல நிறுத்தச் சொல்லலாம்னுதான் பார்த்துட்டு இருக்கேன். இந்தத் தெருவுல வந்து கொஞ்ச நாள் தானே ஆகுது, அதான் கொஞ்சம் கன்ஃபியூஷன் ஆகிடுச்சு,” என்று ஏதேதோ சொல்லி மழுப்பினான்.

அவனது பேச்சில் இருந்த தடுமாற்றத்தை அகல்யா ஒருவேளை ‘நாம வீட்டுக்கு வரும் சந்தோஷத்தில் இருக்கிறானோ’ என்று தவறாகப் புரிந்துகொண்டு நம்பிவிட்டாள்.

அவன் சொல்லி முடித்த அடுத்த கணமே, கார் ஒரு அழகான சிறிய தெருவின் ஓரமாக வந்து நின்றது. ஆகாஷ் உடனே டிரைவரைத் திரும்பிப் பார்த்தான். ‘இங்கதானா? தப்பா நிறுத்திடலையே?’ என்று அவனது கண்கள் கேள்வி கேட்க, அந்த டிரைவர் மிக நுணுக்கமாகத் தலையசைத்து “ஆமாம்” எனச் சைகை காட்டினார்.

“சரி… இறங்கு அகல்யா,” என்று உற்சாகமாகச் சொல்லிவிட்டு இறங்கிய ஆகாஷுக்கு, அடுத்த நொடியே ஒரு சிக்கல் முளைத்தது. கார் நின்றாயிற்று, ஆனால் எந்த வீடு? கையில் மொபைலை எடுத்துக்கொண்டு, சித்தார்த் அனுப்பிய லொகேஷனைப் பார்த்தபடி அந்தத் தெருவில் அங்கும் இங்கும் அலைந்தான்.

தன் வீட்டுக்கே வழி தெரியாமல் தேடும் ஆகாஷைப் பார்த்த அகல்யாவுக்குச் சிரிப்பு ஒரு பக்கம் வந்தாலும், குழப்பம் அதிகமாகியது. “என்ன பாஸ்… உங்க வீட்டையே நீங்க தேடுறீங்க?” என அவள் கேட்க,

“இல்ல… அது வந்து… தூக்கம், அதான்… பெயிண்ட் எல்லாம் மாத்திட்டாங்க போல!” என எதோ ஒரு நொண்டிச் சாக்கைச் சொல்லிவிட்டு, ஒரு சிறிய இரும்புக் கேட் போடப்பட்ட வீட்டின் முன்னால் வந்து நின்றான்.

அப்போது, அந்த வீட்டின் கீழ் தளத்திலிருந்து வேட்டி சட்டையுடன் ஒரு பெரியவர் வெளியே வந்தார். ஆகாஷை நோக்கிய அவர், முகத்தில் ஒருவிதமான மிகைப்படுத்தப்பட்ட புன்னகையுடன், “என்ன தம்பி? இப்பதான் வர்றியா? நேரம் ஆகும்னு சொன்னியே… இவ்வளவு காலையில வந்துட்ட?” என நல்ல பழக்கம் உடையவர் போல பேச…

ஆகாஷ் ஒரு கணம் திகைத்துப்போய் அவரைப் பார்த்தான். அடுத்த நொடி அவனது ‘பிசினஸ் மூளை’ வேலை செய்தது. ‘ஓ… இதுதான் சித்தார்த் ஏற்பாடு செய்த ஆளா!’ என்று புரிந்து கொண்டான்.

அந்தப் பெரியவர் ஆகாஷின் திகைப்பைக் கவனித்துவிட்டு, அகல்யாவை ஒரு ஓரக்கண்ணால் பார்த்தபடி சத்தமாக, “சரி சரி… என் சம்சாரத்தைச் சாவி கொண்டுவரச் சொல்றேன். நீ மேல போ.” அவர் கண்களால் செய்த அந்தச் சிறு குறிப்பு, ‘எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று ஆகாஷுக்குச் சொல்வது போலிருந்தது.

ஆகாஷ் சுதாரித்துக் கொண்டு, “ஆமாங்கய்யா… அம்மாவும் அப்பாவும் வீட்டுக்கு வர்றதா சொன்னாங்க. அதான் இப்பவே வந்துட்டேன்,” என்று தானும் அந்த நாடகத்தில் இணைந்து கொண்டான்.

சிறிது நேரத்தில் உள்ளே இருந்து ஒரு வயதான பெண்மணி சாவியுடன் வந்து அந்தப் பெரியவரிடம் கொடுக்க, அவர் அதை வாங்கி ஆகாஷிடம் நீட்டியவர். “காலையில இருந்து கரண்ட் இல்லை தம்பி… மத்தியானம்தான் வரும்னு சொல்லியிருக்காங்க. தண்ணியைப் பார்த்துப் சிக்கனமாப் பண்ணுங்க,” என்று ஒரு நிஜமான வீட்டு உரிமையாளர் போலவே அறிவுரை சொல்லிவிட்டு, மேலே செல்லும் படிக்கட்டுகளைக் காட்டிவிட்டு நகர்ந்தார்.

இதையெல்லாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த அகல்யா, ‘பாஸ் தங்கியிருக்கும் வீடு இதுதானா? கரண்ட் கூட இல்லையே…’ என்று அவளுக்குள் ஒரு மெல்லிய சங்கடம் ஓடியது.

“வா அகல்யா… மேலதான் நான் தங்கியிருக்கிற அறை,” என்று அவளை அழைத்தான் ஆகாஷ். அவன் முன்னால் நடக்க, அகல்யா ஒருவிதத் தயக்கத்துடன் அவனைப் பின்தொடர்ந்தாள்.

ஆனால், அவளை விட ஆகாஷுக்குத்தான் தவிப்பு அதிகமாக இருந்தது. உள்ளே நுழைந்தவுடன் ஏதாவது சொகுசு மெத்தையோ அல்லது நவீனத் தொழில்நுட்பக் கருவிகளோ இருந்து அவனது போலி அடையாளத்தை உடைத்துவிடுமோ என்ற பயம் அவனுக்குள் இருந்தது.

மாடிக்குச் சென்று அந்த மரக்கதவின் முன்னே நின்றவனது கைகள் லேசாக நடுங்கச் சாவியைப் பூட்டில் நுழைத்துத் திருப்பினான். ஒரு நீண்ட ‘கிரீச்’ சத்தத்துடன் கதவு திறந்தது.

கதவைத் திறந்த ஆகாஷின் கண்கள் மின்னல் வேகத்தில் வீட்டைச் சுற்றி வந்தன. அவன் எதிர்பார்த்தது போலவே, அந்த வீடு மிகவும் சாதாரணமாக இருந்தது.

ஒரு சிறிய ஹால், ஓரத்தில் ஒரு பழைய மரச் சோபா, கலைந்து கிடக்கும் சில புத்தகங்கள், சுவரில் ஒரு சாதாரணக் கடிகாரம்… சித்தார்த் மிகக் கச்சிதமாக ஒரு ‘நடுத்தர வர்க்கத்து பேச்சிலரின் அறை’யை உருவாக்கியிருந்தான். ஆடம்பரம் துளியும் இல்லாமல், எதார்த்தமாக இருந்த அந்த வீட்டைக் கண்டதும் ஆகாஷுக்குப் பெரும் நிம்மதி ஏற்பட்டது.  சித்தார்த்தின் இந்த நுணுக்கமான ஏற்பாட்டை எண்ணி மனதிற்குள் ஒரு பெரிய ‘ஓகே’ போட்டுக் கொண்டான்.

வெளியே தயக்கத்துடன் நின்றிருந்த அகல்யா, தன் அலைபேசியை மார்போடு அணைத்தபடி, அந்தச் சிறிய உலகத்தை விந்தையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது பார்வையில் ஒருவிதமான ஆச்சரியமும், கேள்வியும் கலந்திருந்தது.

உள்ளே நுழைந்துவிட்ட ஆகாஷ், அவள் இன்னும் வாசலிலேயே நிற்பதைக் கவனித்துத் திரும்பினான்.

“ஹலோ மேடம்… நீ இந்த வீட்டுக்கு வரப்போற மருமகள்தான், அதுல சந்தேகமே இல்லை. ஆனா, உனக்கு ஆர்த்தி எடுத்து உள்ளே அழைக்கிறதுக்கு இப்போதைக்கு இங்கே யாரும் இல்லை. அதனால, நீயே உன் வலது காலை எடுத்து வச்சு உள்ளே வா… அங்கேயே நின்னுகிட்டு வேடிக்கை பார்க்காதே, வா!” என அவன் ஒரு அழுத்தமான குறும்பச்சிரிப்புடன் அழைக்க, அகல்யாவின் கன்னங்களில் மீண்டும் ஒரு சிவந்த கோடு படர்ந்தது.

அவனது ‘மருமகள்’ என்ற வார்த்தை அவளுக்குள் ஆயிரம் மின்னல்களைப் பாய்ச்சினாலும், வெளியே அதைக் காட்டிக்கொள்ளாமல் அவனை ஒரு முறை முறைத்தபடி உள்ளே நுழைந்தவள். “அதெல்லாம் எனக்கும் தெரியும் சார்! ஆனா என்ன வீடு இது? துணியெல்லாம் இப்படிச் சிதறிக் கிடக்குது… ஒரு மனுஷன் தங்குற இடமா இது?” எனத் தன் முகத்தைச் சுளித்துக்கொண்டே அங்கிருந்த ஒரு டி-ஷர்ட்டை நகர்த்தி வைத்தாள்.

“அதுதான் சொன்னேனே… இது பேச்சுலர் ரூம்னு!” என ஆகாஷ் சிரிக்க

அகல்யா தன் இடுப்பில் கை வைத்துக்கொண்டு, ஒரு போலி கோபத்துடன் அவனை ஏறிட்டுப் பார்த்தவள். “அப்போ என்ன… இதெல்லாம் சுத்தம் பண்றதுக்குதான் என்னைக் கூட்டிட்டு வந்தீங்களா? இதுதான் உங்க மாஸ்டர் பிளானா பாஸ்?”

“சுத்தம் பண்றது ஒரு பக்கம் இருந்தாலும், அதைவிட முக்கியம் நீ சமைக்கணும்!” என அவன் விடாப்பிடியாகச் சொல்ல, தன் நெற்றியில் அடித்துக்கொண்டவள். “மழையே விட்டாலும் நீங்க இந்தச் சமையலை விடமாட்டீங்க போலயே!” எனச் சலித்துக்கொண்டே அந்த அறையை நோட்டமிடத் தொடங்கினாள்.

“சரி… நீ வீட்டைப் பார்த்துட்டு இரு. நான் வெளிய போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வர்றேன்,” என்று அகல்யாவிடம் சொல்லிவிட்டு நகர முயன்றான் ஆகாஷ்.

அவன் மாடிப்படி இறங்கும் முன்பே, அந்தப் பெரியவர் அங்கே வந்து நின்றார். கையில் ஒரு Hotpack வைத்திருந்தார். எதிர்பாராவிதமாக அவரைக் கண்டதும் ஆகாஷ் சட்டென நின்றுவிட, ஒரு மரியாதையான சிறு புன்னகையை மட்டும் அவருக்குப் பரிசாக அளித்தான்.

அவரும் பதிலுக்கு கனிவோடு சிரித்தவர், மெதுவாகத் திரும்பிப் பார்த்து, அவன் அருகில் அகல்யா இல்லை என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டார். ஒரு ரகசியத்தைப் பகிர்வது போலக் குரலைத் தாழ்த்தி, “அந்தத் தம்பி எல்லாமே சொல்லுச்சுப்பா… இந்தா தம்பி, இதுல காலை வேளைக்குத் தேவையான சுடச்சுட இட்லி சட்னி இருக்கு. அப்புறம் மத்தியானம் சாப்பாட்டுக்கு…” என்று அவர் மேற்கொண்டு சொல்லத் தொடங்கும் முன்பே, வேகமாக அவரை தடுத்த ஆகாஷ்.

“இல்லங்க ஐயா… ரொம்ப நன்றி. மத்தியானத்துக்கு நாங்க பார்த்துக்கிறோம். உங்களுடைய இந்த உதவிக்கே பெரிய நன்றிகள்,” என்றான் ஆகாஷ் நெகிழ்வுடன்.

“பரவாயில்ல தம்பி,  ஏதாவது உதவி வேணும்னா தயங்காம வந்து சொல்லுங்க,” என்று கூறிவிட்டு, அந்த உணவுக் கலனை அவனிடம் கொடுத்துவிட்டு நிதானமாக அங்கிருந்து நகர்ந்ததும்.

சாப்பாட்டுப் பையுடன் ஆகாஷ் மீண்டும் அறைக்குள் நுழைந்தான். குளிக்கச் செல்லத் தயாராக இருந்த அகல்யா, அவன் கையில் இருந்த பையைப் பார்த்துவிட்டு அப்படியே நின்றுவிட்டாள்.

“அதுக்குள்ள எப்படி வாங்கிட்டு வந்த? பறந்து போய் வாங்கிட்டு வந்தியா என்ன?” என வியப்புடன் கேட்க..

அதற்கு ஆகாஷ் சிரித்துக்கொண்டே, “இல்ல அகல்யா, வழக்கம் போல அந்தப் பெரியவர் தான் வந்து கொடுத்தாரு. நீயும் வந்திருக்க விஷயம் அவருக்குத் தெரிஞ்சிருக்கு போல… அதான் உனக்கும் சேர்த்து, நல்ல வீட்டுச் சாப்பாடா கொண்டு வந்திருக்காரு,” என்றான்.

“நிஜமாவா? இந்த காலத்துல கூட இப்படிப்பட்ட மனுஷங்களா?” என அகல்யா ஆச்சரியத்துடன் அந்த லஞ்ச் பாக்ஸை வாங்கிக்கொண்டாள்.

இருவரும் சோபாவில் அமர்ந்து அந்தப் பெட்டியைத் திறந்தனர். ஆவி பறக்கும் மல்லிகைப்பூ போன்ற இட்லிகளும், அதன் வாசனையும் அறையெங்கும் பரவியது.

“வாசனையே தூக்குது ஆகாஷ்! ஹோட்டல் சாப்பாட்டுல கிடைக்காத ஒரு நிம்மதி இந்த வீட்டுச் சாப்பாட்டுல இருக்குல்ல?”

“ஆமாம் அகல்யா, அந்தப் பெரியவர் முகம் பார்த்தாலே ஒரு தனித் திருப்தி தெரியுது. நமக்காக இவ்வளவு அக்கறையா செஞ்சு கொண்டு வர்றது பெரிய விஷயம்.” என்றான் 

ஒரு கவளம் சுவைத்தவள், “அப்பா… சட்னி கூட அவ்வளவு பிரமாதமா இருக்கு!..

ஏன் ஆகாஷ் பேசாம உன் அம்மா, அப்பா வரும்போது இவங்களையே சமைத்து கொடுக்க சொல்லிடலாமா?” என கண்ணடித்தபடி அகல்யா கேட்க. 

“ஏதே? இந்த எஸ்கேப் ஆகுற ஐடியா எல்லாம் வேண்டாம் மேடம்… நீ தான் சமைக்கணும், அதுதான் என்னோட ஆர்டர். எங்க அம்மா கையால சாப்பிட்டு வளர்ந்த எனக்கு, என் வருங்கால பொண்டாட்டி கையாலயும் சாப்பிடணும்னு ஆசை இருக்காதா?” என்று கண்ணடித்தான்.

உடனே உதட்டைப் பிதுக்கிய அகல்யா, “ஆர்டர் எல்லாம் நல்லாத்தான் பாஸ் போடுறீங்க… ஆனா அப்போ நான் என்ன டிரஸ் போடுறது? கொண்டு வந்த ஒரே ஒரு டிரஸ்ஸும் மழையில நனைஞ்சு ஈரமாகிடுச்சு. இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன், பேசாம ஹாஸ்டல் போயிடலாம்னு. இப்போ பாரு, அழுக்கு துணியோட நிக்கிறேன்,” எனச் செல்லமாகக் கோபித்துக் கொண்டாள்.

“அதுக்கு எனக்கு ஒரு ஐடியா இருக்கே…” என்று சொன்னவன், அவளைப் பார்த்து ஒரு கள்ளச் சிரிப்பு சிரித்தான்.

அந்தச் சிரிப்பில் ஏதோ உள்நோக்கம் இருப்பதை உணர்ந்த அகல்யா, “என்ன… என்ன ஐடியா? அப்படி என்ன ஒரு கள்ளச் சிரிப்பு? ஒழுங்கா சொல்லிடு,” என மிரட்டலாகக் கேட்டாள்.

🌧️தூறல்கள் தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page