தூவானம் -27

 

அவங்க வந்தா போட மட்டும் ஒரு செட் இருக்கு, குளிச்சிட்டு போடா வேற மாற்று துணிக் கூட இல்ல” எனச் செல்லமாக அவள் கோபித்துக் கொள்ள.

“அதுக்கு எனக்கு ஒரு ஐடியா இருக்கே…” என அவளைப் பார்த்து ஒரு கள்ளச் சிரிப்பு சிரித்தான்.

அந்தச் சிரிப்பில் ஏதோ உள்நோக்கம் இருப்பதை உணர்ந்த அகல்யா, “என்ன… என்ன ஐடியா? அப்படி என்ன ஒரு கள்ளச் சிரிப்பு? ஒழுங்கா சொல்லிடு,” என மிரட்டலாகக் கேட்டாள்.

ஆகாஷ் மெதுவாக எழுந்து அங்கிருந்த அலமாரிக்குச் சென்றவன், அங்கிருந்து அவனுடைய மடிப்பு கலையாத ஒரு வெள்ளை நிறச் சட்டையையும், ஒரு வேட்டியையும் எடுத்தான்.

“இப்போதைக்கு என்கிட்ட இதுதான் இருக்கு. என்னோட இந்தச் சட்டையை நீ போட்டுக்கோ… உனக்கு இது லாங் டாப் மாதிரி கச்சிதமா இருக்கும். அப்புறம் இந்த வேட்டியை வேணும்னா அட்ஜஸ்ட் பண்ணி கட்டிக்கோ. ஒரு சேஞ்சுக்கு நல்லாத்தான் இருக்கும்,” என்று கிண்டல் சிரிப்புடன் சொல்லிக்கொண்டே அவளிடம் நீட்டினான்.

அந்தச் சட்டையைப் பார்த்ததும், அவனைப் பார்த்தும் விழித்தவள். “பாஸ் நிஜமாவா சொல்ற? உன் சட்டையையா நான் போடணும்?”

“பின்ன என்ன? வேற ஆப்ஷன் இல்லையே! என் சட்டையில உன்னைப் பார்க்க எனக்கும் ஆசையா இருக்கு. ” என ஒரு கண்ணை மட்டும் அடுத்தவன்,

“ம்ம் போ… போய் சீக்கிரம் குளிச்சிட்டு மாத்திட்டு வா,” என அவன் வற்புறுத்த, வேறு வழியின்றி அந்தச் சட்டையை வாங்கிக்கொண்டவள், 

ஒருமனதாக .. “ம்ம்ம் சரி ” என்றாள் 

“நீ குளிச்சிட்டு வா, நான் போய் மதியானத்துக்குத் தேவையான காய்கறி எல்லாம் வாங்கிட்டு வர்றேன். என்ன வேணும்னு மட்டும் ஒரு லிஸ்ட் போடு,” என ஆகாஷ் கேட்க, அகல்யாவும் சற்றும் தாமதிக்காமல் ஒரு துண்டுப் பேப்பரில் முத்து முத்தான எழுத்துக்களில் சிக்கன் மட்டனுடன், தேவையான சில காய்கறிகளும் எழுதிக் கொடுத்தாள். அந்தப் பேப்பரைச் சுருட்டிப் பையில் போட்டுக்கொண்டு ஆகாஷ் வெளியேறினான். 

அவன் சென்றதும் கதவை மெதுவாகத் தாளிட்டுவிட்டு, குளியலறைக்குள் தஞ்சம் புகுந்தாள் அகல்யா. அந்தச் சிறிய அறைக்குள் நுழைந்தபோது, இது வெறும் கட்டடம் அல்ல, “இனி இது என் அறை, அவன் வாழும் இந்த இடம் இனி எனக்கும் சொந்தம்” என்கிற எண்ணம் அவள் மனதிற்குள் ஒரு இனிய சிலிர்ப்பைத் தந்தது.

மெல்லத் தன் ஆடைகளைக் களைந்துவிட்டு, ஷவரைத் திறந்தாள். காலையின் அந்த இளங்குளிர் நீர் அவள் மேனியில் பட்டதும், உடலும் மனமும் ஒருசேரப் புத்துணர்ச்சி அடைந்தன. அந்த நீர்த்துளிகள் அவளைத் தழுவிச் செல்வதை ஒருவிதப் பரவசத்துடன் அனுபவித்தாள்.

அருகில் இருந்த சோப்புப் பெட்டியைப் பார்த்தாள். அது புதியது போலத்தான் தெரிந்தது, ஆனாலும் அது ஆகாஷுடையது என்கிற எண்ணமே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. அவன் பயன்படுத்திய பொருளைத் தானும் பயன்படுத்துவதில் ஒரு ரகசிய மகிழ்ச்சி அவளுக்குள் ஊற்றெடுத்தது. மெல்ல அந்த சோப்பை எடுத்துத் தன் உடலில் தேய்த்தாள்.

அந்த சோப்பு அவள் மேனியின் எந்தெந்தப் பாகங்களைத் தீண்டுகிறதோ, அங்கெல்லாம் ஆகாஷின் விரல்களே தன்னை மென்மையாகத் தீண்டுவதாக எண்ணித் தவித்தாள். அவனது ஸ்பரிசத்தின் கதகதப்பை அந்த நுரைகளுக்குள் தேடினாள். விழிகளை மூடி அந்தத் தழுவலில் தன்னை மறந்திருந்தபோது, சட்டென அந்த வீட்டு உரிமையாளர் பெரியவரின் நினைவு வந்தது.

“மின்சாரம் இல்லாததால தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்” என்று அவர் சொன்ன அறிவுரை காதுக்குள் ஒலிக்க, சட்டெனத் தன் கற்பனையிலிருந்து மீண்டு, குளியலை வேகவேகமாக முடித்துக் கொண்டவள், 

அங்கு சுவற்றில் இருந்த அணியில் தொங்கிக்கொண்டிருந்த, ஆகாஷ் கொடுத்துச் சென்ற அந்த வெள்ளைச் சட்டையைத் கையில் எடுத்தாள். அதன் மென்மையை ரசித்தபடியே, அதன் கைப்பகுதியைத் தூக்கி ஆசையோடு முத்தமிட்டாள். அதில் எஞ்சியிருந்த அவனது வாசம் அவளை முழுமையாக ஆட்கொண்டது.

அந்தச் சட்டையை அணியும்போது, துணியை அணிவதாக அவள் உணரவில்லை, மாறாக, ஆகாஷே தன்னை இறுக்கக் கட்டி அணைத்துக் கொள்வதாக உணர்ந்தாள். அவனது அணைப்பின் கதகதப்போடு, கண்ணாடி முன் நின்று தன்னை ஒருமுறைப் பார்த்துக் கொண்டாள். அவனது சட்டை அவளுக்கு ஒரு கவசத்தைப் போலவும், பேரன்பின் அடையாளமாகவும் தெரிந்தது.

சிறிது நேரம் கழித்து, ஆகாஷின் பெரிய அளவிலான வெள்ளைச் சட்டையை அணிந்து, வேஷ்டியை முட்டி வரை மடித்து காட்டியபடி, ஈரக் கூந்தலைத் துடைத்துக் கொண்டே வெளியே வந்த அகல்யா, கிச்சனுக்குள் நுழைந்தாள்.

அங்கே ஜன்னல் வழியாக வந்த அதிகாலைச் சூரிய ஒளி, அங்கிருந்த பாத்திரங்களின் மீது பட்டுத் தெறித்தது. ஆகாஷ் சொன்னது போலவே அங்கும் சில பொருட்கள் கலைந்துதான் இருந்தன. ஆனால், அந்த இடத்தைப் பார்த்ததும் அகல்யாவிற்குள் ஒரு இனம் புரியாத உணர்வு தோன்றியது.

‘இங்கேதான் நான் அவனது பெற்றோருக்காகச் சமைக்கப் போகிறேனா?’ என்ற எண்ணம் அவளது இதயத் துடிப்பை மெல்லக் கூட்டியது. கரண்ட் இல்லாத அந்த அமைதியில், கிச்சன் மேடையைத் தன் விரல்களால் மெல்லத் தடவிப் பார்த்தாள். அந்தத் தொடுதலில் ஒரு வீட்டை உருவாக்கும் பெண்ணின் உரிமை மெல்லத் துளிர்விடத் தொடங்கியது.

காய்கறி கடைக்கு சென்றபோதுதான் ஆகாஷுக்கு தலை சுற்றியது. ‘வெண்டைக்காய் பிஞ்சா இருக்கணும்’, ‘முருங்கைக்காய் சதைப்பற்றா இருக்கணும்’ என அகல்யா சொன்னதெல்லாம் நினைவிருக்க, எதைத் தொடுவது என்று தெரியாமல் விழித்தான். கடைசியில் கடைக்காரர் கொடுத்ததை அப்படியே வாங்கிக்கொண்டு, ஏதோ ஒரு குழப்பத்துடன் வீட்டுக்குள் நுழைந்தான்.

வீட்டிற்குள் நுழையும்போது ஒரு நிசப்தம் நிலவியது. “அகல்யா…” என மெல்ல அழைத்தவாறே தேடி வந்தவன், சமையலறையின் நுழைவாயிலில் அப்படியே சிலையாக உறைந்து நின்றுவிட்டான்.

குளித்து முடித்துவிட்டு, ஈரத்தலையுடன் சமையலறையில் நின்றிருந்தாள் அகல்யா. அவளது கரிய கூந்தல் பின்னால் சரிந்து கிடக்க, அதிலிருந்து சொட்டிய நீர் துளிகள் அவளது வெண்ணிறக் கழுத்தில் மெல்ல உருண்டு ஓடின. அந்த நீர் மொட்டுகள், சூரிய ஒளியில் மின்னும் முத்துக்களைப் போல அவள் மேனியில் ஜொலித்தன.

மலையின் உச்சியிலிருந்து வழியும் ஒரு சிறு நீரோடை போல, அவளது கழுத்தின் பின்னாலிருந்து முதுகின் பள்ளம் நோக்கிப் பயணித்த அந்த நீர் துளிகள் அந்த சட்டையை ஈரமாக்கி இருந்ததை, ஆகாஷ் தூரத்திலிருந்து இமைக்காமல் ரசித்தான். அவளது ஒவ்வொரு அசைவிலும் அந்தத் துளிகள் சிதறி, அவனது மனதிற்குள் ஏதோ ஒரு ராகத்தை மீட்டியது.

கரண்ட் இல்லாததால் அந்தச் சிறிய அறைக்குள் காலை நேரத்து வெப்பம் மெல்லப் பரவத் தொடங்கியது. ஜன்னல் வழியாக வந்த மெல்லிய வெளிச்சத்தில், கிச்சன் மேடையைத் தடவிப் பார்த்துக்கொண்டிருந்த அகல்யாவின் பின்னால் அவளறியாமல் மெல்ல நெருங்கியவன், கையில் இருந்த காய்கறிப் பையை மேடையில் வைத்தான். அந்த ஓசையில் திடுக்கிட்டுத் திரும்பிய அகல்யா, “வந்துட்டீங்களா? என்ன இவ்வளவு லேட்டு?” என்றாள் ஈரக் கூந்தலை ஒரு பக்கமாக ஒதுக்கியபடி.

அவள் கழுத்தில் மின்னிய அந்த நீர் துளியையே பார்த்தபடி, தீடீரென அவளது இடுப்பைத் தன் இரு கரங்களால் மென்மையாக வளைத்துப் பற்றினான். சட்டென ஏற்பட்ட அந்தத் தீண்டலில் அகல்யா சிலிர்த்துப் போய் அப்படியே உறைந்து நின்றவள்.

“ஆகாஷ்… என்ன இது? கை விடுங்க… யாராவது பார்த்திடப் போறாங்க,” என அவள் பதற்றத்துடன் முணுமுணுக்க, ஆகாஷ் அவளது தோளில் முகம் புதைத்து, அவளது கழுத்தோரம் மெல்ல மூச்சை விட்டவன்.

“யாரு பார்ப்பாங்க அகல்யா? இங்கே நாம ரெண்டு பேர் மட்டும்தான் இருக்கோம். நேத்துல இருந்து பயந்துட்டே இருக்கிற என் அகல்யாவுக்கு ஒரு சின்ன ஆறுதல் தேவைப்படுதுன்னு எனக்குத் தோணுது,” என அவன் சொல்ல,

அகல்யாவின் எதிர்ப்பு மெல்ல மறைந்தது. அவனது மார்பின் கதகதப்பில் தன்னை அப்படியே ஒப்படைத்தவள், அவனது கைகளின் மேல் தன் கைகளை வைத்து மெல்ல அழுத்தியவளின் பிடி அவனை தள்ள முயற்சித்தாலும் இன்னும் இறுகவே அவளின் இதயம் தூண்டியது. 

ஆகாஷ் இன்னும் அவளின் முகத்திற்கு நேராக நெருங்கியவன், அந்த வியர்வைத் துளிகள் அவளது நெற்றியில் அரும்பி இருக்க, ஈரம் படர்ந்த அவளது விழிகள் காதலில் தவித்தன. “ரொம்பப் பயமா இருக்கா?” என அவன் மெல்லிய குரலில் வினவ, அவள் இல்லை என்பது போலத் தலையசைத்தாள்.

அடுத்த நொடி, அவளது கன்னங்களை மென்மையாக ஏந்திய ஆகாஷ், மிக மெதுவாக அவளது இதழ்களைத் தன் இதழ்களால் சிறைபிடித்தான். அந்த முத்தம்… அதுவரை இருந்த அத்தனை தவிப்புகளையும், பயங்களையும் ஒரு நொடியில் மாயமாய் மறைத்தது. அகல்யா கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டவள் அவனது சட்டையை இறுகப் பற்றிக் கொண்டாள்.

அந்தச் சிறிய கிச்சனில் காதலின் நறுமணம் ஆக்கிரமித்தது. முத்தத்தின் ஆழத்தில் இருவரும் தங்களை மறந்திருந்த அந்த நொடி, காலம் அங்கே உறைந்து போனது. மழையின் குளிர்ச்சியை விட, அந்த வெப்பமான முத்தம் அவளுக்கு ஒரு பெரும் பாதுகாப்பைத் தந்தது.

சிறிது நேரத்தில் முத்தத்திலிருந்து மெல்ல விடுபட்டவள், வெட்கத்தில் முகம் சிவக்க அவனைப் பார்த்து, “ரொம்ப ஓவராப் போறீங்க பாஸ்! சமைக்கணும்னு கூப்பிட்டு வந்துட்டு இப்படிச் சில்மிஷம் பண்ணினா எப்படி?” எனச் செல்லமாகக் கடிந்து கொண்டாள்.

குரலைத் தாழ்த்தி, அவளருகில் மீண்டும் நெருங்கி, “சமையலை விடு… நீ இப்போ இந்த ஈரக்கூந்தலோட நிக்கிறியே, இது எந்த சமையலை விடவும் ரொம்ப அழகா இருக்கு. அந்த ஒரு சொட்டு தண்ணி உன் கழுத்துல இறங்குறதைப் பார்க்கிறதுக்கே நான் இன்னும் பத்து தரம் கடைக்குப் போய் வரலாம் போல.” என்றான் 

அகல்யாவின் முகம் சட்டெனச் சிவக்க. “போதும் போதும்… வர்ணனை பண்ணாமப் போய் ஒரு டவல் எடுத்துட்டு வாங்க. தலை காயலனா எனக்கு ஜலதோஷம் பிடிச்சுக்கும்,” எனச் செல்லமாக அவனைப் பின் தள்ளி விரட்டி விட்டாள்.

“இரு… நானே உனக்குத் தலை துடைச்சு விடுறேன்,” என்று சொல்லி அங்கிருந்த மெல்லிய துண்டை எடுத்தவன், அவளது கூந்தலின் ஈரத்தைப் போக்கினான். அவனது விரல்கள் அவளது தலையில் படும்போது, அகல்யாவுக்குள் ஒரு சிறு நடுக்கம் பரவியது. அவள் விழிகளை மூடி அந்த மென்மையை அனுபவித்தாள்.

மெல்லத் தலை துடைத்துக் கொண்டிருந்த ஆகாஷின் கைகள் ஒரு நிமிடம் நின்றன. துண்டை அப்படியே அவள் கழுத்தைச் சுற்றிப் போட்டவன், அவளைத் தன்பக்கம் மெதுவாகத் திருப்பினான். அவளது ஈரக் கூந்தலின் வாசம் அவன் நாசிகளைத் துளைக்க, அவளை இழுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

அந்தத் திடீர் அணைப்பில் அகல்யா திடுக்கிட்டாலும், அடுத்த நொடியே அவனது வியர்வையின் வாசத்தில் தன்னைத் தொலைத்தாள். அவனது இதயம் துடிக்கும் சத்தம் அவளது காதுகளில் ஒரு தாலாட்டாக ஒலித்தது.

அவளது காதோரம் மிக மென்மையாக, “என் சட்டையை விட, அந்தச் சட்டைக்குள்ள இருக்கிற உன்னை அணைக்கிறது எவ்ளோ நிம்மதியா இருக்கு தெரியுமா அகல்யா? இந்த நிமிஷம் அப்படியே உறைஞ்சு போயிடக் கூடாதான்னு தோணுது…” என்றான் 

அகல்யா பதில் ஏதும் சொல்லாமல், அவனது முதுகில் தன் கைகளை இறுக்கிக் கொண்டாள். அவனது மார்பின் கதகதப்பு, குளித்த குளிர்ச்சியைத் துரத்திவிட்டு ஒரு புது வெப்பத்தை அவளுக்குள் ஊற்ற, அவனது தோளில் முகம் புதைத்தவள், ஒரு பூந்தென்றல் தீண்டுவதைப் போல மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“ஆகாஷ்…!”  அவளது குரலில் காதல் தேனாக வழிந்தது. அந்த ஒற்றை விளிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தன.

அவளின் உருண்டையான கருவிழிகள் காதலால் விரிந்திருக்க, அதனுள் தன்னையே தொலைத்துக் கொண்டிருந்த ஆகாஷ். மெல்ல குனிந்தவன், அவளது நெற்றியில் ஒரு அழுத்தமான இதழ் பதித்தான்.

அது ஒரு முத்தமல்ல, அவளது வாழ்நாள் முழுமைக்கும் தான் துணையிருப்பேன் என அவன் கொடுத்த மௌன வாக்குறுதி. நீண்ட நேரம் அந்த முத்தத்தைப் பதித்துவிட்டுப் பின்வாங்கியவன், பின் அவளை விட மனமில்லாமல் தன் ஒரு கையால் அவளது இடையை மெல்லப் பற்றினான்.

அவளது இடை அவனது கைக்குள் கச்சிதமாகப் பொருந்தியது. குறும்பு மின்ன அவளது இடுப்புச் சதையைத் தன் விரல்களால் மெல்லத் திருகினான். திடீரென ஏற்பட்ட அந்தச் சிறு சீண்டலில், அகல்யா உடல் சிலிர்த்துப் போனாள்.

அந்த மெல்லிய வலி கலந்த கூச்சம் அவளைச் சீண்ட, “ஆகாஷ்… என்ன இது?” எனத் துடித்தவள், அந்தச் சுகமான கூச்சத்தைத் தாங்க முடியாமல் மீண்டும் அவனது அகன்ற மார்பிலேயே தஞ்சமடைந்தாள்.

ஒரு கொடி மரத்தைச் சுற்றிக்கொள்வது போல அவனது கழுத்தை இறுக்கக் கட்டிக்கொண்டாள். அவனும் அவளைத் தன் உலகமாகக் கருதி இன்னும் இறுக அணைத்துக் கொண்டான். அவனது இதயத் துடிப்பு அவளது கன்னத்தில் தாளமிட, வெளியுலகின் இரைச்சல்கள் அனைத்தும் மறைந்து, அந்தச் சிறிய சமையலறையில் அவர்களின் மூச்சுக்காற்று மட்டுமே ரீங்காரமிட்டது.

ஈரக் கூந்தலின் வாசம், அவனது சட்டையில் படிந்த அவளது மேனியின் மணம், அனைத்தையும் தாண்டி அவர்களின் காதலின் ஆழம் அந்தத் தருணத்தைப் பொன்னிறமாக மாற்றியது.

“இப்படியே இருந்திடலாம் ஆகாஷ்… உன் அணைப்புல ஒரு தனி சுகம் இருக்கு,” என அவள் முணுமுணுக்க, அவளது உச்சி முகர்ந்தவன், “உனக்காகவே உருவாக்கப்பட்ட இடம் இது அகல்யா… இங்க எப்பவும் நீ மட்டும்தான்,” எனச் சொல்லி அவளது அணைப்புக்குள் கரைந்து போனான்.

🌧️தூறல்கள் தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page