தூவானம் -3

இன்று டிசம்பர் மாதத்தின் இறுதி.

சென்னையின் ஆகாயத்தை இடி முழக்கங்களுடன் கூடிய கனமழை ஆக்கிரமித்திருந்தது. லண்டனில் இருந்து கிளம்பிய அந்த விமானம், மழையின் பிடிவாதத்தால் காலதாமதமாக அதிகாலை 3 மணிக்குச் சென்னை விமான நிலையத்தைத் தொட்டது.

விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் அனைவரும் தங்கள் உறவுகளின் அரவணைப்பைத் தேடி அவசரமாக வாசலை நோக்கி ஓடிக்கொண்டிருக்க, அவன் மட்டும் அந்த அவசர உலகிற்குச் சம்பந்தமில்லாதவன் போலப் பொறுமையாக நடந்து வந்தான்.

அடர்ந்த கருநிறக் சுருள் முடி, வசீகரமான முகம், கையில் லேட்டஸ்ட் ஐபோன். ஒரு Floral Design Casual Shirt அணிந்து, காதில் ஹெட்செட் மாட்டி, தலையைத் தூக்காமல் FreeFire கேமில் மும்முரமாகத் தோட்டாக்களைத் தெறிக்கவிட்டுக்கொண்டிருந்தான்.

முன்னால் யார் வருகிறார்கள் என்பது கூடத் தெரியாமல் கேமிற்குள் மூழ்கியிருந்தவன், எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஒரு விமானப் பணிப்பெண் மீது மோதிவிட,

“ஓ! ஐம் சோ சாரி சார்… நான்தான் கவனிக்காம இடிச்சிட்டேன்,” என்று அந்தப் பெண்மணி பதற்றத்துடன் மன்னிப்புக் கேட்டாள்.

காதில் இருந்த ஹெட்செட்டை மெல்ல கழற்றியவன், அவள் முகத்தைப் பார்த்தான். வெள்ளை வெளேரென்ற தேகம், அடர் சிவப்பு நிறச் சாயம் பூசிய உதடுகள், அதில் ஒரு தயக்கமான சிரிப்பு. அந்த அழகில் ஒரு நொடி வழிந்தவன், அடுத்த நொடியே தன் ‘ப்ளேபாய்’ மோடிற்கு மாறினான்.

“இட்ஸ் ஓகே… ஆக்சுவலி மிஸ்டேக் என் மேலதான். இந்த மழையில நிஜமான தேவதைங்க எல்லாம் தரையிறங்கும்னு தெரியாம நான் கேம் விளையாடிட்டு வந்துட்டேன்,” என்றவனது இதழ்களில் ஒரு கள்ளச்சிரிப்பு மின்ன

அவன் சொன்ன விதத்தில் அந்தப் பெண்மணிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “தேவதையா? நீங்க ரொம்ப ஓவரா புகழ்றீங்க சார்!”

“புகழ்ச்சி எல்லாம் இல்ல… நிஜம்! பை த வே, ஐ அம் சித்தார்த்,” எனத் தன் கையை நீட்டினான்.

அவனது காந்தக் குரலிலும், அந்தச் வசீகரப் புன்னகையிலும் மயங்கிய அந்த வெள்ளைப்புறா, அவன் நீட்டிய கையை மென்மையாகப் பற்றி, “ஐ அம் ரீனா,” என்றாள்.

சித்தார்த் விடவில்லை. “ரீனா… அழகான பேரு. ஆனா ஒரு சின்னப் பிரச்சனை. நீங்க இடிச்ச வேகத்துல என் போன்ல இருந்த கேம் கேரக்டருக்கு அடிபட்டுடுச்சோ இல்லையோ, என் ஹார்ட்ல ஒரு சின்ன ஸ்கிராட்ச் விழுந்துடுச்சு போலயே!” என இதயத்தைத் தொட்டுச் சொல்ல.

ரீனா வெட்கத்துடன், “இப்போ அதுக்கு நான் என்ன பண்ணணும், சார்?” 

“ரொம்ப சிம்பிள்… இந்த டேமேஜை சரி பண்ண ஒரு பத்து நம்பர் கொண்ட ‘மெடிக்கல் கோட்’ மட்டும் கொடுத்தீங்கன்னா, நான் வீட்டுக்கு போய் அதைப் போட்டு சரி பண்ணிப்பேன். அப்புறம், அடுத்த முறை லண்டன் போகும்போது நான் கண்டிப்பா உங்க பிளைட்ல தான் வருவேன்… நீங்கதான் என்னை பத்திரமா பார்த்துக்கணும்!” என்று கண்ணடித்தபடி கேட்க,

அவனது அந்த சமயோசிதமான பேச்சிலும், குறும்புத்தனத்திலும் விழுந்த ரீனா, யோசிக்காமல் சிரித்துக்கொண்டே அவனது மொபைலை வாங்கித் தன் எண்ணைப் பதிவு செய்து கொடுத்தாள்.

“கால் மீ லேட்டர்… பை!” என அவள் விடைபெற, அவள் சென்ற திசையையே ஒரு கவிஞனைப் போல ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த், சட்டென்று நிகழ்காலத்திற்கு வந்தவன்.

“சரி, அந்த ஆந்தையைக் காணோமே?” என்று அவன் கண்கள் கூட்டத்தைத் துழாவின. 

செதுக்கிய சிற்பம் போன்ற தீர்க்கமான முகம், ஊடுருவிப் பார்க்கும் கூர்மையான கண்களும். சாம்பல் சட்டை, மெரூன் பிளேசரில் அதிகாரத்தின் உருவமாய், எதற்கும் அசையாத இறுக்கமான உதடுகளும் அவனது மர்மமான ஆளுமையை பறைசாற்ற..

கையில் ட்ராலியைத் தள்ளிக்கொண்டு பார்வை அங்கும் இங்கும் சிதறாமல், இலக்கை நோக்கிய அம்பைப் போல நேராக விமான நிலைய வாசலை நோக்கியே வேகமாக நடந்து வந்தான், Astra Global Group நிறுவனத்தின் ஒரே வாரிசு ஆகாஷ்.

அவனது நடையில் இருந்த அந்த அதிர்வு சித்தார்த்தை நெருங்க,  “டேய் ஆகாஷ்… நீ என்ன ரோபோவாடா? பிளைட்டை விட்டு இறங்கியதுல இருந்து லெப்ட்-ரைட்… லெப்ட்-ரைட்னு கமாண்டோ மாதிரி வர்ற? மனுஷன் கொஞ்சம் அப்படி இப்படித் திரும்பிப் பார்க்கக் கூட மாட்டியா?”

தன் நடையை நிறுத்தாமலே. “திரும்பி என்னத்தைப் பார்க்கணும்? நாம வந்த வேலை முடிஞ்சது, அடுத்த வேலையைப் பார்க்கப் போகணும். வா!” என கடிக்காத குறையாகப் பதிலளித்துக்கொண்டே அவன் முன்னே வேகமாக நடக்க,

தன் தலையில் அடித்துக்கொண்ட சித்தார்த். “ப்ச் இவன் கிட்ட வந்து மாட்டிக்கிட்டேன் பாரு… எல்லாம் என் தலையெழுத்து!” என்று புலம்பிக்கொண்டே அவனின் பின்னால் ஓடினான்.

விமான நிலையத்தின் வாசலுக்கு வந்த ஆகாஷின் முகத்தில் அந்த ஈரக் காற்று சிலுசிலுவென மோதியது. ஆனால், அந்த ரம்மியமான சூழலை ரசிக்க மறுத்த அவனது கண்கள், நேரத்தை வேகமாகக் கணக்கிட்டபடி கடிகாரத்தின் மீதே நிலைத்திருந்தன. பின், சற்றே கழுத்தைத் திருப்பி, இன்னும் உலகத்தையே மறந்து போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்த சித்தார்த்தை ஒரு கூர்மையான பார்வையால் அளவிட்டவன்

“சித்தா…” என்றான்.

அந்தக் கனமான குரலில் இருந்த அதிகாரத்தை உணர்ந்த சித்தார்த், சட்டென்று போனை பாக்கெட்டில் திணித்தவன். “சரி சரி… கோபப்படாதே! டிரைவருக்குப் போன் பண்றேன்,” என்று வேகமாக டயல் செய்யத் தொடங்கினான்.

சற்று தொலைவில் காத்திருந்த டிரைவர் இவர்களைக் கண்டதும் மழையில் நனைந்தபடி ஓடி வந்தார். ஆகாஷ் தனது சூட்கேஸை அவனிடம் தள்ள, அதனை மரியாதையுடன் பெற்றுக்கொண்டவர், இருவருக்கும் ஒரு சல்யூட் அடித்துவிட்டு கார் நோக்கி விரைந்தார்.

அங்கே நின்றிருந்த கருப்பு நிற BMW காரின் டிக்கியில் லக்கேஜ்களை ஏற்றிவிட்டு, ஆகாஷுக்காகப் பின்பக்கக் கதவைத் திறந்து பிடித்தார்.

ஆகாஷ் முதலில் ஏறி அமர, அவனைத் தொடர்ந்து சித்தார்த்தும் உள்ளே புகுந்துகொண்டான். கதவு அடைக்கப்பட்டதும், வெளியுலகின் இரைச்சலும் மழையின் சத்தமும் அடியோடு நின்றது.

மீனம்பாக்கத்தின் ஈரமான சாலைகளைக் கிழித்துக்கொண்டு, அந்த சொகுசு கார் அடையார் நோக்கிச் சீறிப்பாய்ந்தது. 

காரின் உள்ளே நிலவிய மௌனத்தை ஆகாஷின் லேப்டாப் கீபோர்டு தட்டும் சத்தம் மட்டுமே கலைத்தது. அவன் ஏதோ ஒரு பிசினஸ் ப்ராஜெக்ட்டில் தீவிரமாக இருக்க, சித்தார்த்தோ தன் உலகமே அந்தத் திரைதான் என்பது போல மொபைலில் மூழ்கியிருந்தான்.

“நாளைக்கு கிளைன்ட் அப்பாயிண்ட்மென்ட் எத்தனை மணிக்கு?” லேப்டாப்பிலிருந்து கண்களை எடுக்காமலேயே ஆகாஷ் கேட்க.

“பதினொரு மணிக்குத்தான்… நாம கெஸ்ட் ஹவுஸ் போய் ரெஸ்ட் எடுத்துட்டு நிதானமாப் போகலாம்,” பதில் சொன்னானே தவிர, சித்தார்த்தின் கண்கள் போனை விட்டு நகரவில்லை.

அவனது அலட்சியத்தைக் கண்டு பொறுமை இழந்த ஆகாஷ், சட்டென்று திரும்பி சித்தார்த்தின் பின் தலையிலேயே ‘டப்’ என்று ஒரு போடு போட்டான்.

அந்தத் திடுக்கிடும் அசைவில், சித்தார்த்தின் விரல்கள் திரையில் தடுமாறின. அடுத்த நொடி மொபைல் திரையில் “GAME OVER” என்ற வாசகம் ரத்தச் சிவப்பாய் மின்னியது.

“டேய்! என்னடா இது? எவ்வளவு சின்சியரா விளையாடிட்டு இருந்தேன் தெரியுமா? இப்படி தட்டிவிட்டு மொத்தத்தையும் காலி பண்ணிட்டியே!” 

அவனை முறைத்துப் பார்த்த ஆகாஷ். “டேய்… எனக்கு ஒரு விஷயம் புரியல. யாருக்கு யாருடா PA? உனக்கு நான் PAவா இல்ல எனக்கு நீ PAவா? பிசினஸ் பத்தி ஏதாவது கேட்டா இப்படித்தான் மொபைலைத் தேய்ச்சுக்கிட்டு இருப்பியா?”

“ஆமாண்டா… நான்தான் உனக்கு PA! அதுவும் உனக்கு மறந்து போச்சா? உன்கூட எல்லாம் PAவா இருக்கிறதுக்கு பதிலா, இப்படியே அடுத்த பிளைட்டைப் பிடிச்சு லண்டனுக்கே ஓடிடலாம். எப்பா சாமி! ஏன்டா இப்படி ரோபோ மாதிரி வேலை செஞ்சுகிட்டு இருக்க?” என சித்தார்த் சலிப்போடு கைகளை விரித்தான்.

ஒரு மெல்லிய ஏளனப் புன்னகையோடு அவனை முறைத்த ஆகாஷ், “ஏண்டா கேட்க மாட்ட? நீ ஊர் சுத்திட்டுத் திரியக்கூடாது, என்கூடவே இருக்கணும்ன்றதுக்காக உன்னை PAவா எனக்குப் போட்டாரு பாரு எங்க அப்பா… அவரைச் சொல்லணும்,” என்றான்.

“சொல்லு… சொல்லு! இப்போவே நான் அங்கிளுக்குப் போன் பண்ணி சொல்றேன். உங்க பையன் கூட என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியல, நான் லண்டனுக்கே போறேன்னு சொல்லிட்டு இப்பவே கிளம்புறேன்!” என சித்தார்த் போனை எடுப்பது போலப் பாவ்லா காட்ட,

ஆகாஷ் அவனை முறைத்துக்கொண்டே, “கொழுப்புடா உனக்கு! உன்னையெல்லாம் இந்த மழையில நடுவழியிலயே இறக்கி விட்டுட்டுப் போகணும்…” என்று சொல்லி முடித்த அதே விநாடி என்னவோ, அந்த சொகுசு கார் ஒரு சிறிய அதிர்வுடன் முனகிக் கொண்டு திடீரென நின்றது.

பதற்றமாக டிரைவரைப் பார்த்த சித்தார்த். “ஹலோ டிரைவர் சார்! இவன் ஏதோ விளையாட்டுக்குச் சொன்னா, நீங்க நிஜமாவே என்னை மழையில நடுரோட்டுல இறக்கி விடப் பாக்குறீங்களா? இது உங்களுக்கே நியாயமா இருக்கா?”

“சார் சார்… அப்படியெல்லாம் இல்லை. கார் ஏதோ ப்ராப்ளம் ஆகி பிரேக்-டவுன் ஆகிடுச்சு போல,” என பதற்றத்துடன் சொல்ல.

“வாட் நான்சென்ஸ்! கார் எடுக்கும்போதே அதெல்லாம் சரி பார்க்க மாட்டீங்களா? இந்த கனமழையில நடுவழியில எப்படி நிக்கிறது ?” என ஆகாஷின் முகம் கோபத்தில் சிவந்தது.  

“டேய் ஆகாஷ்! ஏன்டா இப்படிப் கத்திட்டு இருக்க? கொஞ்சம் அமைதியா இருடா,” என்று அவனை அடக்கிய சித்தார்த், டிரைவரிடம், “நீங்க போய் என்னனு பாருங்க,” என்றான்.

டிரைவர் அந்த கொட்டும் மழையில் நனைந்தபடியே வெளியே ஓடினார். காரின் முன்பக்கப் பகுதியைத் திறந்து ஏதேதோ செய்து பார்த்தார். மீண்டும் மீண்டும் காரை ஸ்டார்ட் செய்ய அவர் முயன்றார், ஆனால் “இங்கிருந்து ஒரு அங்குலம் கூட நகர மாட்டேன்” என்று பிடிவாதம் பிடித்து அந்த BMW.

“டிரைவர், என்னதான் ஆச்சு?” 

“சார், தெரியல… ஏதோ பெரிய ப்ரோப்லேம் போல இருக்கு. இந்த மழையில காரை இனிமே நகர்த்துறது கஷ்டம் சார்,” என்று டிரைவர் தயங்கியபடியே சொல்ல,

ஆகாஷ் எரிமலையாய் வெடித்தான். “என்ன இப்படிப் பொறுப்பில்லாம பதில் சொல்றீங்க? ஒரு காரை முறையா மெயின்டைன் பண்ணத் தெரியாதா?”

“ஷப்பா… டேய், உன்கிட்ட பெரிய தொல்லையா போச்சு! எப்படியும் வீட்டுக்குப் போய் ரெஸ்ட் தானே எடுக்கப் போற? நான் வேற ஏதாவது கேப் புக் பண்றேன், நீ கிளம்பு. நான் கார் ரெடி ஆனதும் வர்றேன்,” என்றான்.

ஆகாஷ் அவனை ஒரு மிரட்டல் பார்வை பார்த்துவிட்டு, மீண்டும் லேப்டாப் திரையில் மூழ்கினான். ஆனால், டிரைவர் சொன்ன செய்தி இடியாய் இறங்கியது. “சார், மழை ரொம்பப் பலமா இருக்கு. இந்த நேரத்துல எந்தக் கேப்பும் வராது!”

ஆகாஷ் இப்போது சித்தார்த்தைத் திரும்பிப் பார்த்த பார்வை எரிமலையாய் இருக்க,  “இப்போ நான் என்ன செய்யணும்னு சொல்ற? அப்படியே அமைதியா புள்ளையார் மாதிரி இங்கேயே உட்கார்ந்து இருக்கணுமா?” என்று ஆகாஷ் கத்தினான்.

“டேய், வெளியே தான் மழை பெய்யுதுன்னா, நீ ஏன்டா இங்க காருக்குள்ள இடி மாதிரி இடிச்சுட்டு இருக்க? இரு, நான் கம்பெனிக்கு போன் பண்ணி வேற கார் அனுப்பச் சொல்றேன்,” என்று சித்தார்த் துரிதமாகச் செயல்பட்டான். சில நிமிடப் பேச்சிற்குப் பிறகு, கம்பெனியிலிருந்து கார் வருவதற்கான உறுதி கிடைத்தது.

“இன்னும் கொஞ்ச நேரத்துல கார் வந்திடும். அதுவரைக்கும் ஏன்டா இந்த லேப்டாப்ல மண்டையை உடைச்சுக்கிற?” என்று லேப்டாப்பை மூடிய சித்தார்த், ஜன்னல் வழியாக வெளியே தெரிந்த அந்தப் பேருந்து நிலையத்தை பார்த்தவன்.

“அங்க பாரு, அந்த பஸ் ஸ்டாண்ட் தான் கொஞ்சம் வெளிச்சமா இருக்கு. அங்க போய் நின்னா தான் நமக்கு வர்ற வண்டிக்கு அடையாளம் தெரியும், வா போலாம்!”

“வாட்? வெளியே மழை அவ்ளோ இருக்கு! நனையாம எப்படிப் போறது?”

“நனைஞ்சா நல்லாதானே இருக்கும்? இதுவும் ஒரு ஜாலி தானேடா!” என சித்தார்த் குதூகலமாகச் சொல்ல.

“உனக்கு என்ன பைத்தியமா? மழையில நனைஞ்சா புல்லி வெட் ஆகிடுவோம் மேன்!” என ஆகாஷ் பின்வாங்க, சித்தார்த் விடவில்லை. “அது எனக்குத் தெரியும். ஆனா அங்க நின்னா தான் வர வண்டிக்கு நாம தெரியுவோம். வாடா!” என்று அவனது கையைப் பிடித்து இழுக்க, வேறு வழியின்றி அந்த சொகுசு மாளிகையின் இளவரசன் ஆகாஷ், மழையில் குதித்தான்.

கார் வந்ததா? தேவதை வந்தாளா? 

🌧️தூறல்கள் தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page