தூவானம் -31

 

 “ஆகாஷுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதா? அப்போ இவ்வளவு நாள் என்னிடம் காட்டிய அந்த அன்பு, அந்த அக்கறை, அந்தச் சின்னச் சின்னக் குறும்புகள் எல்லாமே பொய்யா?” என்ற எண்ணம் அகல்யாவை கொன்று கொண்டிருந்தது.

அலுவலகத்தின் அந்தப் பிரம்மாண்டமான கண்ணாடிச் சுவர் அறைக்குள், அகல்யாவின் தேம்பல் சத்தம் மட்டும் எதிரொலித்துக் கொண்டிருக்க, அந்த ஏசி குளிர்ச்சியிலும் அகல்யாவின் கண்கள் தகித்துக்கொண்டிருந்தன. கணினித் திரையில் எழுத்துக்கள் மங்கலாகத் தெரிய, அவள் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் மெல்லத் திரண்டு கன்னங்களில் கோடுகளாக இறங்கியது. 

அருகில் இருந்த ஹேமாவுக்கோ வேலையில் கவனம் செல்லவில்லை. அகல்யாவின் இந்த நிலையை அவளால் தாங்கிக்கொள்ள முடியாமல், “ஏய்… என்னடி ஆச்சு? வந்ததுல இருந்து இப்படியே அழுதுட்டு இருந்தா என்ன அர்த்தம்? என்னன்னு சொன்னாத் தானே எனக்குத் தெரியும்?” என அகல்யாவின் தோளைப் பற்றி உலுக்கினாள் ஹேமா.

அகல்யா பதில் சொல்லவில்லை. ஹேமாவின் கைகளை மென்மையாகத் தட்டிவிட்டவள், மீண்டும் கீபோர்டில் விரல்களை ஓடவிட்டாள். ஆனால், அவளது மனம் அங்கே இல்லை. கண்களில் இருந்து தாரை தாரையாகக் கொட்டிய கண்ணீர், அவளது சுடிதார் துப்பட்டாவை நனைத்து ஈரமாக்கியது.

கலகலப்பான துருதுருவென ஓடும் அந்தச் சின்னஞ்சிறு சிட்டுக்குருவியா இது? எப்போதும் சிரிப்பும், கேலியும், கிண்டலுமாக அந்த இடத்தையே உயிர்ப்புடன் வைத்திருக்கும் அகல்யாவின் இன்றைய கோலத்தைக் காணக் காண, ஹேமாவின் இதயம் சுருங்கியது. கலைந்த கூந்தல், காய்ந்த கண்ணீர்த் தடம் படிந்த கன்னங்கள் என அகல்யா ஒரு உடைந்த சிலையாகத் தெரிந்தாள்.

அவளைப் பார்க்கப் பார்க்க ஹேமாவுக்குப் பாவமாக இருந்தது, அதே சமயம், எப்போதும் தைரியமாக இருக்கும் தன் தோழி இப்படி நிலைகுலைந்து நிற்பது ஹேமாவுக்குள் ஒரு இனம்புரியாத அச்சத்தையும் உண்டு பண்ண…

“சரி வாடி… இங்கேயே உட்கார்ந்து எதையும் யோசிக்காதே. மனசு ரொம்ப பாரமா இருக்குல்ல? நாம ஒரு காபி குடிக்கப் போலாம், வா…” என ஹேமா பிடிவாதமாக அழைக்க, முதலில் மறுத்த அகல்யா பின்னர் அவளின் வற்புறுத்தலால் ஒரு இயந்திரத்தைப் போலச் சலனமில்லாமல் எழுந்தவளது கால்கள் தரையில் பாடாமல் தள்ளாடின.

ஹேமாவின் தோள்களுக்குள் ஒரு சின்னக் குழந்தையைப் போல ஒடுங்கியபடி, மெதுவான நடையுடன் அந்தத் தனிமையான பால்கனியை நோக்கிச் சென்றாள்.

வெறிச்சோடி இருந்த அந்தப் பால்கனியில், மிதமானக் காற்று வீசினாலும், அந்தத் தென்றலால் அகல்யாவின் உள்ளுக்குள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த அந்த மனப்புயலை அணைக்க முடியவில்லை.

மென்மையாக அகல்யாவின் நடுங்கும் கரங்களைப் பற்றிக்கொண்ட ஹேமா, அவளது கண்களை நேராகப் பார்த்வள், ஒரு அக்கறையான குரலில்

“ஹே இப்போ சொல்லுடி… என்னதான் ஆச்சு? கோவை போன இடத்துல ஏதாவது பிரச்சனையா? இவ்வளவு தூரம் உன்னைச் சிதைச்சுப் போடுற அளவுக்கு உண்னை யாராவது ஏதாவது தப்பா பேசிட்டாங்களா? இல்ல… நீ எதை மறைக்கிற? எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுடி,” என ஹேமா கேட்க, அகல்யா மௌனமாகத் தூரத்தில் தெரியும் அடிவானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளது மௌனம் ஆயிரம் கதைகளைச் சொல்லாமல் சொல்லியது. அந்தக் காபி கோப்பையின் சூட்டை விட, அகல்யாவின் இதயத்தில் எரிந்து கொண்டிருந்த கேள்விகளின் சூடு அதிகமாக இருந்தது.

“ஹேய் அந்த புதுசா வந்த PA ஆகாஷால எதாவது பிரச்சனையா டி ?” என ஹேமா கேட்டது தான் தாமதம்

‘ஆகாஷ்’ என்ற பெயர் அகல்யாவின் செவிகளில் விழுந்ததும், அடக்கி வைத்திருந்த துக்கம் பீறிட்டுக் கொண்டு வர, விம்மி விம்மி அழத் தொடங்கியவள், “எல்லாமே ஏமாத்துடி… இந்த உலகத்துல அன்புங்கிற பெயருல எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் ஏமாத்திட்டுதான் இருக்காங்க. யாருமே உண்மையில்லை ஹேமா! எல்லாரும் என்னை ஒரு பொம்மை மாதிரி யூஸ் பண்ணிக்கிறாங்களோனு தோணுது. என் வாழ்க்கையில முதல் முறையா நான் ஆழமா நேசிச்ச அந்த அன்பு… எல்லாமே ஒரு பெரிய பொய்யா போயிருச்சுடி!” என்று புலம்ப.

ஹேமா குழப்பத்தின் உச்சத்துக்கே சென்றாள். “என்னடி சொல்ற? எனக்கு ஒண்ணுமே புரியல. நீ அவன்கிட்ட காதலைச் சொல்லி அவன் ஏதும் மறுத்துட்டானா? இல்லை வேறென்ன?” என அவள் கண்களைக் கூர்ந்து நோக்க, அகல்யா பதில் சொல்லாமல் மௌனமாகச் சுவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளது மௌனம் ஆயிரம் வலிகளைச் சுமந்திருந்தது.

அதே நேரம், பால்கனியின் கதவு வேகமாகத் திறக்கப்பட்டது, முதல் நாள் பார்த்த வசீகரிக்கும் தோற்றமே இன்று தோற்று போயிருக்க, தலைமுடி கலைந்த நிலையில், மூச்சிரைக்க பதற்றத்துடன் உள்ளே நுழைந்த ஆகாஷின் கண்கள் அகல்யாவைத் தேடித் துடித்தன.

அவனைக் கண்டதும் ஹேமா இருக்கையை விட்டு எழ, அகல்யாவோ மெல்லத் தலையைத் தூக்கி அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் காதல் இல்லை, மாறாக, ஏமாற்றமும், தீராத கோபமும் தகித்தன. தன் கண்கள் வழியே அவனை எரித்துச் சாம்பலாக்கி விடுவது போல ஒரு பார்வையை வீசினாள்.

“அகல்யா… நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு… நீ தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்க…” என்று அவன் நெருங்க…

“கிட்ட வராதீங்க!” என்று அலறியபடி எழுந்த அகல்யா,.…

“ப்ளஸ் என்னைத் தொடாதீங்க! உங்களைப் பார்த்தாலே எனக்கு அருவருப்பா இருக்கு. ஒரு பொண்ணோட வாழ்க்கையில விளையாடுறது உங்களுக்கு அவ்வளவு வேடிக்கையா இருக்கா? வெளிய போங்க பாஸ்… இந்த ஆபீஸ்ல உங்க வேலை என்னமோ அது மட்டும் பாருங்க!” என கத்தினாள்.

சத்தம் கேட்ட, அலுவலக ஊழியர்கள் அனைவரும் என்ன நடக்கிறது என்று புரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆகாஷ் அவளைச் சமாதானப்படுத்த முயல, அகல்யாவோ வெறிபிடித்தவள் போல அவனை அங்கிருந்து துரத்துவதிலேயே குறியாக இருந்தாள். அலுவலகத்தில் ஒரு பெரிய கலவரமே வெடிப்பது போன்ற சூழல் உருவானது.

அதே நேரம் ஒருவிதத் தற்பெருமையுடன் அந்த இடத்திற்கு வந்த மனோஜ், ஆகாஷ் அகல்யாவைச் சமாதானப்படுத்த முயல்வதைப் பார்த்தவனுக்கு, அந்த இடத்தின் ஒழுங்குமுறை கெடுவது போலத் தோன்ற.

“ஆகாஷ்! இது என்ன மீன் மார்க்கெட்னு நினைச்சீங்களா? ஒரு PA வேலையில இருந்துட்டு இவ்வளவு பெரிய பிரச்சனையை கிளப்புறீங்க? இது மேலதிகாரிங்களுக்குத் தெரிஞ்சா உங்க வேலை இப்போவே போயிடும்!” என்று கத்தினான்.

ஆனால் மனோஜை கண்டுக்காத ஆகாஷ், அகல்யாவிடம் பேச தொடர்ந்து முயற்சிக்க அவளோ பிடிவாதமாக கத்திக்கொண்டிருந்தாள். 

அடுத்த நொடி, தன் இன்டர்காமில் செக்யூரிட்டியை அழைத்த மனோஜ், “ஹலோ செக்யூரிட்டி! இப்போவே இங்க வாங்க. இந்த ஆகாஷை கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளுங்க. இனிமே இவனை கேபினுக்குள்ள விடக்கூடாது!” என உத்தரவிட்டு முடிப்பதற்குள்…

அலுவலகத்தின் பிரதான லிஃப்ட் ஒரு கம்பீரமான சத்தத்துடன் திறந்தது. கருப்பு நிறக் கோட்-சூட் அணிந்தபடி ஒரு கம்பீரமான உருவம் உள்ளே நுழைந்தது. நரைத்த முடி, அதிகாரமான பார்வை, அதிரடியான நடை… அது வேறு யாருமல்ல, ராஜசேகர் தான் .

அவரைப் பார்த்ததும் அங்கிருந்த மேனேஜர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் “சார்… சார்…” என்று பதறியபடி எழுந்து நின்று தலை வணங்கினார்கள். ஒரு நிமிடம் அந்த இடமே நிசப்தமானது.

அவர் உள்ளே நுழையும் போதே ஒரு பேரமைதி பரவியது. மனோஜ் ஓடிச் சென்று, “சார்! நீங்க இப்போ வருவீங்கன்னு எதிர்பார்க்கல சார். இதோ பாருங்க சார், இந்த PA ஆகாஷ் இங்க பெரிய பிரச்சனை பண்ணிட்டு இருக்கான். இப்போவே இவனை டிஸ்மிஸ் பண்ணிட்டு வெளியே தள்ளச் சொல்லிட்டேன்,” என்று திக்கித் திணறித் தன் விசுவாசத்தைக் காட்டினான்.

விக்கித்து நின்றாள் அகல்யா. நேற்று ஒரு சாதாரண மதுரைகாரனாக பார்த்த ஆகாஷின் தந்தை இன்று ஆளே வேற மாதிரி இருக்கிறாரே ..  ‘யார் இவர்? இவரைப் பார்த்து மனோஜ் நடுங்குகிறாரே?’ என்று அவள் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தபோது, 

மெதுவாகத் தன் பார்வையை மனோஜ் பக்கம் திருப்பிய ராஜசேகர். அந்தப் பார்வையில் இருந்த தீவிரம் மனோஜின் முதுகெலும்பைச் சில்லிட வைத்தது.

“மனோஜ்… நீ வெளியே தள்ளப் போறது என் கம்பெனி ஊழியரை இல்ல… இந்த மொத்த சாம்ராஜ்யத்துக்கும் அடுத்த வாரிசான என் பையனை!” என்று ராஜசேகர் கணீரென்று சொல்ல, மனோஜின் கையில் இருந்த ரிசீவர் நழுவி கீழே விழுந்தது.

“சார்… இது… ஆகாஷ் சார் உங்க பையனா?” என அவர் வாய் பிதற்ற, அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் சிலையாய் நின்றனர்.

அகல்யாவுக்கு மீண்டும் ஒரு பேரதிர்ச்சி. அப்போ ஆகாஷ் ஒரு சாதாரண PA கிடையாதா? இவ்வளவு பெரிய கோடீஸ்வரரின் மகனா? “அப்போ அந்தப் பழைய வீடு, அந்த மதுரைக்கார அப்பா அம்மா நாடகம்… எல்லாமே ஏமாற்றமா?” என்று அவள் இன்னும் சத்தமாக அழத் தொடங்கினாள்.

அகல்யாவின் அழுகுரல் கேட்டு, அவளருகே வந்த ராஜசேகரின் பார்வையில் எந்தக் கோபமும் இல்லை, மாறாக ஒரு தந்தையின் வாஞ்சை இருந்தது.

“அகல்யா… நீ எதுக்கு அழுவுறன்னு எனக்குத் தெரியும். என் பையன் உன்னை ஏமாத்தணும்னு எதையும் செய்யல. அவனுக்கு உன்னை முதன்முதலாப் பார்த்தப்பவே பிடிச்சுப் போச்சு. ஆனா, அவன் ஒரு கோடீஸ்வரன்னு தெரிஞ்சா, நீ அவனோட பணத்தை மட்டும் காதலிப்பியோன்னு அவன் பயந்தான். அந்தப் பணத்தைப் பார்த்து நீ பயந்துடுவியோ இல்ல அவனை ஒதுக்கிடுவியோன்னு ஒரு எண்ணம், அதுக்கு தான் இந்த நாடகமெல்லாம் ஆடினான், உன்னோட உண்மையான அன்பு வேணும்னு தான் இவ்வளவு தூரம் இறங்கி வந்தான்,” என சொல்லவும்  

“அதுக்குன்னு ஏற்கனவே கல்யாணம் ஆன விஷயத்தை மறைக்கணுமா சார்?” என்று விம்மினாள்.

புன்னகைத்த ராஜசேகர். “அகல்யா, அவனுக்குக் கல்யாணம் ஆனது உண்மைதான். ஆனா அந்த வாழ்க்கை எப்படி முடிஞ்சது, எதுக்காக அவன் இப்போ தனியா இருக்கான்னு உனக்குத் தெரியாது. என் பையன் மேல என்ன தப்பு இருக்குன்னு உனக்குத் புரியணும்னா, நீ அவன்கிட்ட கொஞ்ச நேரம் பேசு. அவன் சொல்றதைக் கேளு… அதுக்கப்புறம் நீ எடுக்கிற முடிவு எதுவானாலும் நான் ஏத்துக்கிறேன்,” என்று அழுத்தமாக அவர் சொல்ல .

“உன்கிட்ட நான் நிறையப் பேசணும் அகல்யா. நீ நினைக்கிற மாதிரி இது ஏமாற்றம் இல்ல,” என ஆகாஷும் அவளை நெருங்கினான்  

அகல்யாவின் தோளை தட்டிய ஹேமா, “அகல்யா, இப்போவாவது அவர் எதுக்காக இவ்வளவு செஞ்சாருன்னு புரிஞ்சிக்க முயற்சி பண்ணு. ஒரு நிமிஷம் அவரோட பேச்சை மட்டும் கேளு,” என்றாள்.

“வேண்டாம், எனக்கு எதுவும் வேண்டாம்… இந்த வேலையே வேண்டாம்!” என உதறிவிட்டு, அங்கிருக்கப் பிடிக்காமல் அகல்யா வாசலை நோக்கி ஓடினாள். அவளது கால்கள் தரையில் படாதது போல அத்தனை வேகம். அவள் இதயத் துடிப்பு அவளது காதுகளிலேயே இடி முழக்கமாய் ஒலித்தது.

ஆகாஷ் பதறிப்போய் அவளைத் துரத்த முயல, இடையில் மறித்த ராஜசேகர், “ஆகாஷ், நில்லுடா! இப்போ அவ இருக்கிற நிலைமையில நீ எதைச் சொன்னாலும் அவ காதுல ஏறாது. அவளைக் கொஞ்சம் தனியா விடு… அவளே நிதானிச்சுப் புரிஞ்சுக்கிட்டு வருவா,” என்று மகனைத் தடுக்க முயன்றார்.

ஆனால் அவர் கையை மென்மையாகத் தட்டிவிட்ட ஆகாஷின் கண்கள் அகல்யா மறையும் திசையையே வெறித்தனமாகப் பார்த்துக் கொண்டிருந்தன.

“இல்ல டாட்… இப்போ அவளைத் தனியா விட முடியாது. அவ ஒரு அனாதைங்கிற அந்த ஒரு விஷயம் அவளை இப்போ ரொம்பக் காயப்படுத்தும். எல்லாரும் என்னை ஏமாத்துறாங்கங்கிற அந்த எண்ணம் அவ மனசுல ஆழமா பதிஞ்சிருச்சுன்னா, அப்புறம் அவளை மீட்கவே முடியாது. எனக்கு அவளை இழந்திட பயமா இருக்கு டாட்!” என்று கத்தியவன், ஒரு நொடி கூட தாமதிக்காமல் சாலைக்கு ஓடி வந்தான்.

வெளியே கார்மேகங்கள் சூழ்ந்து இருட்டிக்கொண்டு வந்தது. அகல்யா சாலையின் ஓரத்தில் ஒரு திசையற்று ஓடிக்கொண்டிருந்தாள். அவளது துப்பட்டா காற்றில் பறக்க, கண்ணீர் அவள் பார்வையை மறைத்தது. பின்னால் ஆகாஷ் ஓடி வருவதைக் கவனித்தவள், இன்னும் வேகமெடுத்தாள்.

அவள் எங்கு செல்வாள்..  ?

🌧️தூறல்கள் தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page