தூவானம் -5

 

“டிரைவர் அண்ணா, வேற எதுனா பிக்-அப் இருக்காண்ணா?”

கொட்டும் மழையின் இரைச்சலுக்கு நடுவே, அந்தச் காரின் கதவு திறக்கப்பட்டபோது ஒரு கவிதை போல அவனருகில் அமர்ந்தவளது குரல் அந்த மௌனமான மழையை மெல்ல கலைத்தது.

“இல்லம்மா, அவ்வளவுதான். இனி நேரா கம்பெனிக்குத் தான் போகணும்,” என்றார் டிரைவர்.

“அப்படிங்களா? சரிங்க அண்ணா…! அண்ணே, இன்னைக்கு எனக்குப் பிறந்தநாள்! இந்தாங்க சாக்லேட் எடுத்துக்கோங்க,” என்று தன் பையிலிருந்து ஒரு Dairy Milk எடுத்து டிரைவரிடம் நீட்டினாள்.

அந்த மழையிலும், களைப்பான சூழலிலும் அவளது அந்தச் செயல் ஒரு சிறு ஒளிக்கீற்றாகத் தெரிந்தது.

டிரைவரிடம் சாக்லெட்டைத் தந்துவிட்டு, மெல்லத் திரும்பியவள் அப்போதுதான் கவனித்தாள், தன் அருகிலேயே சிலையாக அமர்ந்து, தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த புது ஆசாமியை.

ஆகாஷ் அப்போது Astraவின் CEOவாகவோ, கோபக்காரனாகவோ இல்லை, ஒரு அழகிய ஓவியத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகனாக மாறிப்போயிருந்தான். அவள் ஒரு சாக்லெட்டை அவனிடம் நீட்ட, அவனோ அவளது முகத்தின் வசீகரத்திலும், அந்தக் கண்களில் இருந்த குறும்புத்தனத்திலும் மயங்கி, சாக்லெட் நீட்டிய கையைப் பார்க்கக்கூட மறந்து நின்றான்.

“ஹலோ… சாக்லேட் எடுத்துக்கோங்க! இன்னிக்கு எனக்குப் பர்த்டே,” என்று அவள் மீண்டும் கொஞ்சம் உரக்கச் சொல்லவும் தான், ஆகாஷ் இந்த உலகிற்கு வந்தான்.

சட்டென்று தன் வசீகரப் புன்னகையை மீட்டெடுத்தவன், அவள் தந்த சாக்லெட்டைத் தொட்டு வாங்கினான். “தேங்க்யூ… அண்ட், Happy Birthday,” என்றான் அவளது கண்களை ஆழமாகப் பார்த்தபடி.

“தேங்க்யூ…” என்று அவள் வெட்கத்துடன் சொல்லும்போது, அவளது கன்னத்தில் விழுந்த குழி ஆகாஷின் இதயத்தில் மற்றுமொரு skipபை  ஏற்படுத்தியது.

தன் பார்வையைச் சற்று மாற்றியவள், காரின் தரையை பார்க்கவும், “என்னண்ணா… காருக்குள்ள இவ்வளவு சேறா இருக்கு?” என வருத்தத்துடன் கேட்க

“என்னம்மா பண்றது? மழையில எல்லாரும் ஏறி இறங்குறாங்க. சுரங்கப்பாதையில எல்லாம் தண்ணி குளம் மாதிரி நிக்குது. கார் உள்ள முழுகி வர வேண்டியதா இருக்கு, அதான் தண்ணி எல்லாம் உள்ள வந்திடுது.” என டிரைவர் தன் இயலாமையை விளக்க. 

அவளின் முகம் வாடிப்போனது, “ஐயோ! இப்படிலாம் ஆனா கார் சீக்கிரம் வீணாயிடுமே அண்ணா. உங்களுக்குத் தான் வீண் செலவாகும்,” என்று அவள் அக்கறையாகச் சொல்ல,

“என்னம்மா பண்றது? பிழைப்புக்காகச் சவாரி எடுத்துத்தானே ஆகணும்?” என்றார் அவர் பெருமூச்சோடு.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆகாஷிற்குள் ஒரு மின்னல் வெட்டியது. ஒரு சாதாரண காரில் ஏறியதற்காகவும், தன் விலையுயர்ந்த ஷூவில் சேறு பட்டதற்காகவும் இவ்வளவு நேரம் கத்திக் கொண்டிருந்தோமே என்று அவன் முதன்முறையாக வெட்கப்பட்டான். அந்தப் பெண்ணின் சிறு அக்கறை, அவனது இரும்பு போன்ற இதயத்தை மெல்லக் கரைக்கத் தொடங்கியது.

“இல்ல அண்ணா… இப்படிச் சவாரி மட்டுமே பார்த்தீங்கன்னா, கார் வீணாகி ஒன்னுக்கு ரெண்டாச் செலவு வைக்கும். பணத்துக்காக உடம்பையும் வண்டியையும் கெடுத்துக்காதீங்க. அப்புறம் பின்னாடி உங்களுக்குத்தான் கஷ்டம்,” என்று அவள் முதிர்ச்சியோடு சொல்லிக் கொண்டிருக்க, ஆகாஷ் அமைதியாக அதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

சற்று நேரத்திற்கு முன்பு இதே சேற்றுக்காகத் தான் ஒரு காட்டேரியைப் போலக் கத்தியது அவன் நினைவுக்கு வந்தது. ‘ஒரு Gucci ஷூவுக்காக ஒரு மனிதனின் உழைப்பையே கேவலப்படுத்தினோமே…’ என்று எண்ணியபோது, தன் அந்தஸ்தை நினைத்து அவனுக்கே சிறுமையாக இருந்தது. இந்த பெண்ணின் விசாலமான மனது, கோடீஸ்வரனான ஆகாஷை ஒரு நிமிடம் குறுகிப்போகச் செய்தது.

டிரைவரிடம் பேசி முடித்துவிட்டு, தன் கண்ணாடியைச் சரி செய்தபடி ஆகாஷின் பக்கம் திரும்பினாள் அந்த அழகி.

“ஹலோ பாஸு! நீங்க என்ன புதுசா? நம்ம கம்பெனிக்கு இன்னைக்குத்தான் வர்றீங்களா? உங்களை நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையே?” என்று அவள் சகஜமாகக் கேட்க, ஆகாஷ் ஒரு நொடி தடுமாறினான்.

தன்னை அடையாளம் கண்டுகொள்வாளோ என்று பயந்தவன், சட்டென்று சுதாரித்துக்கொண்டு, “ஆமாம்… புதுசுதான். இப்பதான் இந்தக் கம்பெனிக்கு ஜாயின் பண்ணப் போறேன்,” என்று ஒரு வேலையாளைப் போலவே பதிலளித்தான்.

“ஓ அப்படியா! சூப்பர்,” என்று பாராட்டியவள், அடுத்த நொடியே அவனை மேலிருந்து கீழாக அளவெடுத்தாள்.

“பார்க்கப் ரொம்ப படிச்சவர் மாதிரி இருக்கீங்க… போயும் போயும் இந்த டப்பாக் கம்பெனிக்கு ஏன் வந்தீங்க பாஸு?” என சொல்லவும் ஆகாஷ் அதிர்ந்து போனான்.

தன் உயிராக நினைக்கும் ‘ஆஸ்ட்ரா குளோபல்’ நிறுவனத்தையா இவள் டப்பா கம்பெனி என்கிறாளே?

“ஏன்… என்ன சொல்றீங்க?” என்று அவன் புருவத்தைச் சுருக்கினான்.

“என்னத்தைச் சொல்ல பாஸு! அதெல்லாம் ஒரு கம்பெனியா? ஒரு மங்கூஸ் மண்டையன் கிட்ட நாங்க மாட்டிட்டுப் படுற பாடு இருக்கே… ஐயோ ஐயோ!” என்று அவள் தலையில் கை வைக்க, ஆகாஷிற்குச் சிரிப்பு வருவதா அல்லது கோபம் வருவதா என்று தெரியவில்லை.

“யாரைச் சொல்றீங்க?” என ஆகாஷ் ஆர்வமாகக் கேட்க,

“வேற யாரைச் சொல்ல? அந்த மகா பிரபு எங்க மேனேஜர் மனோஜைத் தான் சொல்றேன்! எப்போ பார்த்தாலும் டார்கெட்… டார்கெட்னு உயிர் எடுப்பான்,” என்று அவள் அங்கலாய்க்க,

அவள் திட்டுவது தன் கம்பெனி மேனேஜரைத் தான் என்றாலும், அந்தச் சிகப்புச் சேலை தேவதை ‘மங்கூஸ் மண்டையன்’ என்று சொன்ன விதம் ஆகாஷிற்குள் ஒரு புதிய உற்சாகத்தை கூட்டவும் அவனது இறுக்கமான இதழ்கள் முதன்முறையாக ஒரு கள்ளத்தனமான புன்னகையை உதிர்த்தன.

தன் கம்பெனியைப் பற்றி இன்னும் என்னென்ன ரகசியங்களை அவள் சொல்லப் போகிறாள்?  என ஆர்வம் அவனுக்கு கூடவும்  மேலும் அவளை தூண்ட நினைத்தவன் 

“ஏன்… அவருக்கு என்ன? அவர் நல்ல திறமையானவர் தானே?” என்று ஆகாஷ் மெல்லத் தூண்டில் போட்டான்.

“அடப் போங்க பாஸ்! திறமையை வெச்சிக் கம்பெனியைத் தான் நல்லா நடத்த முடியும். ஆனா எங்களோட நிலைமையைக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. அந்த ஆளுக்கு ஈவு இரக்கமே கிடையாது, அப்படி வேலை வாங்குவான்!” என்று அவள் கைகளை வீசிப் பேசினாள்.

“எங்களை அவ்ளோ டார்ச்சர் பண்ணி வேலை வாங்கிட்டு, கம்பெனி MD கிட்ட அவன் நல்ல பேரு வாங்கி அவார்ட் எல்லாம் வாங்குவான். ஆனா எங்களுக்கு ஒரு நாள் லீவு கூடத் தர மாட்டான். ஒரு டீ குடிக்கக் கூட விடாம வேலை வாங்குவான் அந்த மவுசு மூக்கன்…” என்று அவள் அந்த மேனேஜரைச் சகட்டு மேனிக்குத் திட்ட, ஆகாஷுக்கு சிரிப்பு பொங்கிக்கொண்டு வந்தது, அதே நேரம் தன் கம்பெனியின் இன்னொரு பக்கத்தை இப்போதுதான் நேரில் பார்க்கிறான்.

மேலும் தொடர்ந்தவள், “ஆனா நீ ரொம்ப லக்கி பாஸ்! சரியா இன்னைக்கு வந்து இருக்கே…” என்றாள் 

“ஏன்?” என புரியாமல் ஆகாஷ் புருவத்தை உயர்த்த.

“உனக்கு ஒன்னு தெரியுமா? அந்த மங்கூஸ் மண்டையன் இன்னைக்கு வரமாட்டான்! அவன் காலேஜ் பிரண்ட்ஸ் கூட ரீயூனியன் பண்றாங்களாம். அதுக்காக சார் கேரளா போயிடுவாரு. வர 4, 5 நாள் ஆகும். ஆனா, கம்பெனில என்ன சொல்லிருக்காரு தெரியுமா? அவங்க அம்மாக்கு உடம்பு சரியில்லைனு பொய் சொல்லிட்டு எஸ்கேப் ஆகிட்டாரு!” என்று அவள் அந்த ரகசியத்தைப் போட்டுடைக்க, ஆகாஷின் கண்கள் சிறுத்தன.

தன் கீழ் வேலை செய்யும் மேனேஜர் இவ்வளவு பெரிய பொய்யைச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான் என்பது அவனுக்கு இப்போதுதான் தெரிந்தது.

அப்போது டிரைவர் சிரித்துக்கொண்டே குறுக்கிட்டவர். “என்னடா தங்கச்சி… ஒரே குஷியா இருக்கே? பிறந்தநாள் தான் காரணம்னு பார்த்தா, நீ எப்பவும் கழுவி ஊத்துற உன் மேனேஜர் லீவுல போனதுனாலயா?” என்றார் 

“இல்ல அண்ணா! அந்த மங்கூஸ் மண்டையன் போனதுக்கு எதுக்கு ஸ்வீட்? மங்கூஸ் போனா என்ன… இன்னொரு மாங்கா மண்டையன் தான் வருவான்!” என்று அவள் அடித்துச் சொல்ல, ஆகாஷிற்கு இந்த முறை சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

அவள் தன்னை தான் ‘மாங்கா மண்டையன்’ என்று மறைமுகமாகச் சொல்கிறாளோ என்று ஆகாஷ் நினைத்தாலும், அவளது அந்த வெள்ளந்திப் பேச்சு அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

“ஏன்… புது மேனேஜர் வரப்போறாரா?” என்று டிரைவர் கேட்க,

“இல்லண்ணா… இன்னும் இரண்டு நாளில், புது பாஸ் வர்றார்னு சொல்றாங்க,” என்று அவள் குண்டைத் தூக்கிப் போட, ஆகாஷ் தன் காதுகளைத் தீட்டிக்கொண்டான்.

“யாருமா அது?” என டிரைவரின் கேள்வியில் இருந்த அதே ஆர்வம் ஆகாஷின் கண்களிலும் இருந்தது.

“யாருக்குத் தெரியும்? நம்ம கம்பெனி Owner பையனாம். லண்டன்ல படிச்சிட்டு வர்றானாம்! தங்கத் தட்டுல சாப்பிட்டு வளர்ந்தவனுக்கு எங்களோட கஷ்டம் எப்படித் தெரியும்? அதெல்லாம் விடுங்க அண்ணா…  அதுக்காகவா நான் ஸ்வீட் கொண்டாடுறேன்? இன்னைக்கு என் பிறந்தநாள், அதான் இந்த ஹாப்பி! ஹாப்பி-ஓ-ஹாப்பி!” என்று அவள் உற்சாகமாகச் சொல்ல, ஆகாஷ் மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.

“ஏன் அந்த மேனேஜர் மேல அவ்வளவு கோபம்?” என  ஆகாஷ் மீண்டும் மெல்லக் கேட்டான்.

அவனைத் திரும்பி முறைத்தவள். “பின்ன… அவன் மனுஷனா பாஸு? ஒரு சின்னப் பாராட்டுக் கூட அவன்கிட்ட இருந்து வராது. எந்நேரமும் மூஞ்சியை GEM மாதிரி வச்சுட்டுத் திரிவான்!”

குழப்பமடைந்த ஆகாஷ். “அது என்ன GEM? வைரம் மாதிரி ஜொலிப்பானா?”

அவள் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு, “இது கூடத் தெரியாதா பாஸு உங்களுக்கு?” என்றாள்.

ஆகாஷ் “No” என்பது போலத் தலையாட்ட.

“GEM-னா… Ginger Eating Monkey! அதாவது… இஞ்சி தின்ன குரங்கு!” என்று அவள் விளக்கம் சொல்ல, டிரைவர் சத்தமாகச் சிரித்துவிட, ஆகாஷிற்குத் தூக்கி வாரிப் போட்டது. தன் கம்பெனி மேனேஜருக்கு இப்படியொரு பட்டப் பெயரா? என்று 

“சரி சரி… அந்த மனுஷன் இருக்கும்போதுதான் கலாய்ச்சுத் தள்ளுவ. இப்போதான் லீவுல போயிட்டார் இல்ல? அப்பவும் விடாம இப்படிக் கழுவி ஊத்திட்டு இருக்கே,” என்று டிரைவர் அவளை வாரினார்.

“பின்ன… அவன் பண்ணின டார்ச்சர் அப்படி அண்ணா! ஆனா இப்போ ஒரு வாரம் நிம்மதி. அந்த லண்டன் ரிட்டர்ன் துரை வர வரைக்கும் இந்த மங்கூஸ் மண்டையன் தொல்லை இருக்காது. அதுவரைக்கும் நான் ஜாலியா இருப்பேன்!” என்று அவள் கால்களை ஆட்டியபடி சொல்ல,

தன் தொண்டையைச் மெல்ல சரி செய்துகொண்ட ஆகாஷ், “அப்போ… உன் புது பாஸ் அந்த மங்கூஸை விடக் கொடுமையானவரா இருந்தா என்ன பண்ணுவ?” என்று குறும்பாகக் கேட்க,

அவள் தன் மூக்குக் கண்ணாடியைச் சரி செய்தபடி, “இருந்தா இருந்துட்டுப் போறாரு பாஸ்! அவரைச் சமாளிக்க எங்களுக்குத் தெரியாதா என்ன? ஆனா இன்னைக்கு என் பர்த்டே… அதனால யாரு வந்தாலும் எனக்குக் கவலை இல்லை!” என்று சொல்லிவிட்டுத் தன் கையில் இருந்த மற்றொரு சாக்லேட் கவரைப் பிரித்தாள்.

அவளது கள்ளமில்லாத பேச்சிலும், குறும்புத்தனமான வர்ணனைகளிலும் தன்னை முழுமையாகத் தொலைத்திருந்த ஆகாஷ் கம்பெனி பத்தியும் மேனேஜர் பத்தியும் இவ்வளவு சுவாரஸ்யமா சொல்றீங்க… அப்படியே இந்த ‘மங்கூஸ் மண்டையன்’ கிட்ட மாட்டிட்டுத் தவிக்கிற உங்க பெயரை தெரிஞ்சுக்கலாமா?” என்று அவன் மெல்லிய குரலில் வினவினான்.

அவள் பெயரென்ன?  

🌧️தூறல்கள் தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page