தூவானம் -6

தன் நிறுவனத்தின் புதிய CEOவாகத் தான் வரப்போவதே தெரியாமல், தன்னையே ஒரு வழிப்போக்கனைப் போல எண்ணி அவள் வாரி இறைக்கும் வார்த்தைகளைக் கேட்டு ஆகாஷிற்குள் ஒரு விசித்திரமான உணர்வு ஏற்பட.

“அப்போ… வர போற புது CEO, அந்த மங்கூஸை விடக் கொடுமையானவரா இருந்தா என்ன பண்ணுவ?” என்று ஆகாஷ் குறும்பாகக் கேட்டான்.

“ஆமா பாஸு… ஆனா அந்தப் புது CEO பத்தி யாருக்கும் எதுவும் தெரியாதே! அவன் வேற வந்து என்ன லொட்டு லொடக்கு சொல்லப்போறானோ?” என்று அவள் அங்கலாய்த்தாள்.

ஆகாஷ் விடாமல், “ஏன்… வெளிநாட்டுல படிச்சவங்கன்னா பெரிய படிப்புப் படிச்சிருப்பாங்க, நிறைய அனுபவம் இருக்கும்ல?” என்று தன்னைத் தானே தற்காத்துக் கொள்வது போல மெல்லக் கேட்டான்.

“அடப் போங்க பாஸு! இந்த டப்பாக் கம்பெனிக்கு வரவன் என்ன வெளிநாட்டுல படிச்சு, புதுசு புதுசா ப்ராஜெக்ட் கொடுத்து எங்களை அறுக்கப்போறான்! அவன் என்ன உங்களைப் போல ஒரு Young Manவா வரப்போறான்? அப்படி வந்தா கூட நாங்க சைட் அடிச்சுக்கிட்டே வேலை பார்க்கலாம்…” என சொல்லியவள், சட்டென்று ஒரு கண்ணை மட்டும் அவன் பக்கம் சிமிட்டி, மெல்ல சிரித்தாள்.

அந்த சிரிப்பில் அவள் கன்னத்தில் விழுந்த குழியில்… நம்ம பையன் முழுக்க விழுந்து தொலைஞ்சிடாத குறை தான்! 😄❤️

மேலும் தொடர்ந்தவள், “அந்த மவுசு மூக்கன் போனா, இன்னொரு மானிட்டர் மண்டையன் வரப்போறான். அவனுக்கு முதல்ல தமிழ் பேசத் தெரியுமான்னு தெரியல. கார்னர்ல நின்னுக்கிட்டு காட்ச் பூச்சுன்னு இங்கிலீஷ்ல பேசப்போறான். ஒரு மண்ணாங்கட்டியும் புரியாது! என்ன பாஸு… நான் சொல்றது சரிதானே?” என்று அவள் தன் வாதத்திற்கு அவனிடமே ஆமோதிப்பு கேட்டாள்.

ஆனால், ஆகாஷின் காதுகளில் அவள் சொன்ன “மண்ணாங்கட்டி” விழவே இல்லை. அவனது கவனம் முழுக்க அவளின் மீதே நிலைத்திருந்தது.

அவள் தலையை ஆட்டி ஆட்டித் தீவிரமாகப் பேசும்போது, அவளது குரலின் இசைக்கு ஏற்ப நடனமாடிய அந்தச் சிறிய ஜிமிக்கியின் அசைவுகளில் ஆகாஷ் தன்னைத் தொலைத்தான். எல்லாவற்றிற்கும் மேலாக, அவள் கவி பேசும் கண்களைச் சுருக்கி ஒரு நக்கல் சிரிப்பு சிரிக்கும்போது, அவளது கன்னத்தில் விழுந்த அந்தக் குழி… அதில் அல்லவா இந்த பிசினஸ் டைகூன் விழுந்து கிடந்தான்!

அவள் கம்பெனியைத் திட்டினாலும், அவளது அந்த வெள்ளந்தித் தனமும், மழையில் நனைந்த அழகும் ஆகாஷிற்குள் நெஞ்சின் அலையை எழுப்பியிருந்தது.

“பாஸு… உங்களை தான் கேக்குறேன்… பதில் சொல்லுங்க?” என்று அவள் மீண்டும் அவனைக் கலைத்தபோது தான், ஆகாஷ் தான் ஒரு CEO என்ற நினைவே இல்லாமல் ஒரு மெல்லிய புன்னகையை மட்டும் உதிர்த்தான்.

மழை இப்போது சற்றே வேகம் குறைந்து, மெல்லிய தூவானமாக மாறியிருந்தது. காரின் ஜன்னல் கண்ணாடி வழியே தெறிக்கும் அந்தச் சிறு சாரல் துளிகளுடன் விரல்களால் விளையாடிக் கொண்டிருந்தவளின் கண்கள் சட்டென்று ஒரு இடத்தைப் பார்த்ததும் பிரகாசமானது.

அதிகாலை நேரத்து இளம்பனி, கூடவே இதமான மழை… அந்தச் சூழலில் சாலையோரம் ஒரு சிறிய டீக்கடை. அங்கிருந்த பெரிய பாய்லரில் இருந்து ஆவி பறக்கக் கொதித்துக் கொண்டிருந்த பாலும், இஞ்சித் தட்டிய தேநீரின் வாசனையும் அவளை ஆக்கிரமிக்க உடனே ..

“டிரைவர் அண்ணா! அந்த டீக்கடை ஓரமா கொஞ்சம் வண்டியை நிறுத்துங்கண்ணா… இந்த மழைக்கு இதமா ஒரு டீ குடிச்சிட்டுப் போகலாம்,” என்றவள், சட்டென்று உற்சாகத்தோடு ஆகாஷ் பக்கம் திரும்பி.

“ஹலோ பாஸ்! நீங்க டீ குடிப்பீங்களா? இந்த மாதிரி நேரத்துல சூடா ஒரு டீ குடிச்சா சூப்பரா இருக்கும்… குடிக்கலாமா?” என்று அவள் கண்கள் விரியக் கேட்க, ஆகாஷோ ஏதோ ஒரு கனவுலகில் இருப்பவன் போலப் பதிலேதும் சொல்லாமல் அவளையே மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் மௌனமாக இருக்கவும், “பாஸ்… உங்களைத் தான் கேட்கிறேன்!” என்று சொல்லி, உரிமையோடு அவனது தோளைப் பிடித்துச் செல்லமாக ஒரு உலுக்கல் உலுக்கினாள். அந்த ஒரு நொடி தீண்டலில் ஆகாஷின் உடல் சிலிர்த்தது.

“டீ குடிக்கலாமா?” என்று அவள் மீண்டும் சைகை செய்து வினவ, எப்போதும் அதிகாரத் தோரணையில் இருக்கும் ஆகாஷ், ஒரு பள்ளிச் சிறுவனைப் போலப் பணிவுடன் தலையசைத்து “ம்ம்ம்…” என்றான்.

அடுத்த நிமிடமே, ஓலை வேய்ந்த அந்தச் சிறிய டீக்கடையின் ஓரம் கார் நின்றது. கதவு திறந்ததும் துள்ளிக்குதித்து இறங்கியவள், மழையில் நனையாமல் இருக்கத் தன் சேலை முனையைத் தலைக்கு மேல் பிடித்தபடி அந்தச் சிறிய டீக்கடையின் உள்ளே புகுந்தவள், சட்டென்று பின்னால் திரும்பிப் பார்த்தாள்.

அங்கே ஆகாஷ், மழையைக் கண்டு மிரளும் ஒரு குழந்தையைப் போலக் காரின் கதவைத் திறந்து விட்டு, வெளியே இறங்கத் தயங்கி உள்ளேயே அமர்ந்திருந்தான்.

அவனது அந்தத் தயக்கத்தைக் கண்டவள், “வா…” என்பது போலத் தன் பிஞ்சு விரல்களை அசைத்து சைகை காட்டினாள். அவனோ, வானத்திலிருந்து கொட்டும் மழையைத் தன் கண்ணசைவிலேயே சுட்டிக்காட்டி, “மழை பெய்கிறதே…” என்பது போலப் பாவலா செய்தான்.

அவனது இந்த மென்மையான பயத்தைக் கண்டதும், அவளுக்குச் சிரிப்பும் கோபமும் ஒருசேர வந்தது. தன் இதழ்களைச் சுருக்கி, இடுப்பில் கை வைத்தபடி அங்கிருந்தே அவனை ஒரு முறை முறைத்தாள். அடுத்த விநாடி, சற்றும் தாமதிக்காமல் தன் சேலை முனையை ஒரு கையால் சுருட்டிப் பிடித்துக்கொண்டு, நீர் தேங்கிய சாலையில் ‘சலக் சலக்’ என்று சத்தமிட்டபடி ஓடி வந்தாள்.

நேராகக் காரின் அருகே வந்தவள், அவனது அனுமதியைக் கூடக் கேட்காமல், அவனது மணிக்கட்டைத் தன் ஈரமான உள்ளங்கையால் பிடித்து பலமாக இழுத்தாள்.

ஆகாஷின் தேகம் சுட்டெரிக்கும் கனலாய் இருக்க, மழையில் நனைந்த அவளது பிஞ்சு போன்ற உள்ளங்கையின் குளிர்ச்சி பட்டதும், அவனது உடலுக்குள் ஒரு மின்சாரம் பாய்ந்து மறைந்தது. அந்தத் தீண்டலில் உறைந்து போனவன், அவளது வேகத்திற்கு ஈடுகொடுத்து மெல்லக் காரிலிருந்து வெளியே வந்தான்.

அவனைத் தரதரவென இழுத்துக்கொண்டு அந்த ஓலைக்கூரை டீக்கடைக்குள் கொண்டு வந்து நிறுத்தியவள், “இவ்வளவுதான்… இதுக்குப்போய் சின்னப் புள்ளை மாதிரி பயந்துட்டு!” என்று அவனது தோளில் செல்லமாக ஒரு தட்டுத் தட்ட அவளது அதிகாரம் கலந்த உரிமையில் ஆகாஷ் அசடு வழிந்து நின்றான்.

“அண்ணா… மூணு ஸ்பெஷல் இஞ்சி டீ, அப்படியே போண்டா !” என்று அவள் ஆர்டர் செய்துவிட்டு, அங்கிருந்த ஒரு பழைய மர மேசையின் மீது அமர்ந்து கொண்டவள் மெதுவாக நிமிர்ந்து பார்க்க,

ஆகாஷ் அங்கே சிலையாக நின்று, மழையில் நனைந்த அவளது கூந்தலையும், முகத்தில் வழியும் நீர்த்துளிகளையும், அவளது அந்த அதட்டலான அழகையும் அப்படியே ரசித்துக்கொண்டிருந்தான்.

“பாஸ்… இங்கே வாங்க!” என்று கையசைத்து அழைத்தாள். அவன் தயங்கி நிற்கவும், தனக்கு அருகிலிருந்த மர நாற்காலியைத் தன் கைகளால் தட்டிக் காட்டி,

“இங்கே வந்து உட்காருங்க பாஸ்,” என்று அதிகாரம் கலந்த அன்போடு அழைத்தாள்.

வெளிநாடுகளில் விலையுயர்ந்த கஃபேக்களில் காபி குடித்த ஆகாஷிற்கு, ஓலைக்கூரைக்கு அடியில், ஒரு மர நாற்காலியில், அதுவும் ஒரு ‘இஞ்சி தின்ன குரங்கு’ எனத் தன் மேனேஜரைத் திட்டிய பெண்ணுடன் அமர்ந்திப்பது அவன் கற்பனையிலும் நினைக்காத ஒரு புதுமையான அனுபவமாக இருந்தாலும் அவளது அன்பான கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அவளுக்கு நேர் எதிரே இருந்த அந்த மர நாற்காலியில் அமர்ந்தான்.

அந்த அதிகாலைக் குளிருக்கு இதமாக, புகையெழுப்பும் இஞ்சி டீயும், பொன்னிறமாகப் பொரித்தெடுக்கப்பட்ட வெங்காய போண்டாக்களும் மேசைக்கு வந்தன. அவள் எதைப் பற்றியும் யோசிக்காமல், ஒரு சூடான போண்டாவை ஆவலோடு எடுத்தவள், அதன் ஓரங்களில் ஒட்டியிருந்த மொறுமொறுப்பை ரசித்தபடி, காரசாரமான சட்னியில் மெல்லத் தோய்த்து, ஒரு பெரிய கடியைக் கடித்தாள்.

வெங்காயத்தின் இனிப்பும், மிளகாயின் காரமும் அவள் நாவில் நடனமாட, கண்களை மூடி அந்த ருசியை அவள் அனுபவித்துக் கொண்டிருக்க, ஆகாஷோ, அந்தப் போண்டாவை விட அவளது முகபாவனைகள் தான் அதிக ருசி என்பது போல, அவளையே இமைக்காமல் ரசித்துக் கொண்டிருந்தான்.

திடீரென அவள் நிமிர்ந்து பார்க்க, ஆகாஷின் கண்கள் தன் மீதே நிலைத்திருப்பதை உணர்ந்தாள். ஒரு நொடி அவள் கன்னங்களில் வெட்கம் படர, வாயில் இருந்த போண்டாவை அவசர அவசரமாக மென்று விழுங்கிவிட்டு, மீதியைக் கீழே வைத்தவளது விழிகளில் முளைத்த அந்தச் சின்னஞ்சிறு வெட்கம் ஆகாஷிற்குள் ஒரு புன்னகையை வரவழைத்தது..

தன் மூக்குக் கண்ணாடிக்கு பின்னால் இருந்த அந்த உருண்டையான, கோலி குண்டு போன்ற கண்களை உருட்டி, ஒரு சிறு குழந்தையை அதட்டுவது போல அவனைச் சாடியவள்.

“என்ன பாஸு அப்படியே வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க? சூடா இருக்கும்போதே சாப்பிடுங்க… அப்புறம் ஆறிப்போனா நல்லா இருக்காது!” என்று அவள் அதிரடியாக உத்தரவிட, அந்த அதட்டலான அன்பு, ஆகாஷின் இதயத்தில் ஒரு புதிய ராகத்தை மீட்ட, அந்த CEOவின் அதிகாரம் அவளது மழலைத்தனமான மிரட்டலுக்கு முன்னால் மண்டியிட்டது.

அவளது அந்த அழகான அதட்டலில் ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்த ஆகாஷ், மெல்ல குனிந்து தட்டில் இருந்த அந்தப் பொன்னிறப் போண்டாவை எடுக்க முயன்றான். லண்டனில் ஃபோர்க், நைப் கொண்டு நயமாகச் சாப்பிட்டுப் பழகிய அவனது விரல்கள், முதன்முறையாக ஒரு சாலையோரக் கடையின் எண்ணெய் ததும்பும் போண்டாவைத் தொடத் தயங்கின.

இருந்தாலும், எதிரே அமர்ந்து உலகையே மறந்து ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்த பிறகு, அவனுக்கு அந்த எண்ணெய் கறை ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அவளது கண்களில் தெரிந்த அந்த உயிரோட்டமான குறும்பு, அவனையும் அறியாமல் அவனை அந்தச் சூழலோடு ஒன்ற வைத்தது.

அவன் அந்தப் போண்டாவைப் பிட்டு எடுக்க முற்பட்டபோது, அவனது மென்மையான விரல்களில் எண்ணெய் வழிந்தது. சுத்தத்திற்கும் நேர்த்திக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அந்த CEOவின் முகம், இயல்பாகவே ஒருவித அருவருப்பில் கோணலாகப் போனது.

அதைப் பார்த்ததும் அவள் கலகலவெனச் சிரித்தாள். “ஹலோ பாஸு! ருசி இருக்கிற இடத்துல இந்த எண்ணெய், பிசுபிசுப்பு எல்லாம் பார்க்கக் கூடாது. இதையெல்லாம் கண்டுக்காமச் சாப்பிட்டாதான் அந்த டேஸ்ட் புரியும்!” என்று அட்வைஸ் செய்தபடி, அடுத்த கடியைத் தொடங்கினாள்.

அவளது பேச்சைக் கேட்டதும் ஆகாஷிற்குச் சிரிப்பு வந்தது. ‘சரிதான்’ என்பது போலத் தலையாட்டிவிட்டு, அந்தப் போண்டாவைப் பிய்த்து, அதன் உள்ளே இருந்த வெங்காய வாசனை நாசியைத் துளைக்க, மெல்ல வாயில் வைத்தவன், அதைத் தொடர்ந்து சூடான இஞ்சி டீயைத் தொண்டையில் இறக்கினான்.

அந்தச் சூடும், காரமும் அவனது நாவிற்குப் புதியதொரு அனுபவத்தைத் தர, அவனது கண்கள் தானாகவே விரிந்தன.

“எப்படி இருக்கு பாஸு? அந்த மங்கூஸ் மண்டையன் கம்பெனில வேலை பார்க்கணும்னா, இந்த மாதிரி ஐட்டம் எல்லாம் சாப்பிட்டு உடம்பைத் தேத்திக்கணும்!” என்று அவள் மீண்டும் ஒரு கிண்டலை வீச, அந்தப் போண்டா துண்டு அவன் தொண்டையில் சிக்கப் பார்த்தது. சிரிப்பை அடக்கிக் கொண்டு அவளைப் பார்த்த ஆகாஷிற்கு, அந்த அதிகாலைப் பொழுது அவனது வாழ்நாள் பொக்கிஷமாகத் தெரிந்தது.

லண்டனில் தங்கியிருந்த காலங்களிலும் சரி, இந்தியாவில் வளர்ந்த நாட்களிலும் சரி… அதிகாலை நேரங்களில் ஏசி அறையில் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குவதுதான் ஆகாஷின் வழக்கம். ஆனால் இன்று, ஒரு மழையிரவின் இறுதியில், சாலையோரக் கடையின் ஓலைக் கூரைக்கு அடியில், ஒரு தேவதையைப் போன்ற மங்கையுடன் அமர்ந்து டீ குடிப்பது அவனுக்கு ஒரு புதிய உலகைக் காட்டியது.

அவனது விலை உயர்ந்த கௌரவத்தையும், CEO என்ற கம்பீரத்தையும் அந்தத் தேநீர் கோப்பையில் கரைத்துவிட்டான். சுற்றிலும் கொட்டும் மழை, நாவில் சுடச்சுட போண்டாவின் ருசி, எதிரே சிரித்துப் பேசும் ஒரு அழகான பெண்… ஆகாஷ் தன் வாழ்க்கையிலேயே முதன்முறையாக அந்த விநாடியை முழுமையாக வாழ்ந்தான்.

போண்டாவின் ருசியில் அவள் மூழ்கியிருக்க, அவளது கலகலப்பான பேச்சுக்கு இடமில்லாமல் இருந்தது.

அவளது அமைதி அவனுக்குள் ஒருவிதமான தவிப்பை ஏற்படுத்தியது. அந்தத் தவிப்பைத் தணிக்க, அவனே மெல்லப் பேச்சுக் கொடுத்தான்.

“ஆமா… நீ எந்த ஊரு?” ஆகாஷின் கேள்விக்கு, அவள் போண்டாவை மென்றபடியே 

“நேத்து வரைக்கும் கோயம்பத்தூர்… இன்னைக்குச் சென்னை… நாளைக்கு எந்த ஊரோ, அது யாருக்குத் தெரியும்!” என ஒரு ஏளனச் சிரிப்புடன் பதிலளித்தாள்.

அவளைப் புரியாமல் பார்த்த ஆகாஷ். “ஏன்… உங்க அப்பா போஸ்ட் ஆபீஸ்ல வொர்க் பண்றாரா?” என்று அவன் கிண்டலாக கேட்க, அவள் பதில் சொல்லாமல் மீண்டும் அமைதியானாள். 

“ஹலோ… உன்னைத்தான் கேட்டேன். போண்டா சாப்பிடும்போது பேச மாட்டியோ?” என்று அவன் கிண்டலாக மீண்டும் வற்புறுத்திக் கேட்க, அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“அப்படி இல்ல பாஸு… தெரிஞ்சாத்தானே சொல்ல முடியும்! விடை இல்லாத கேள்விக்கு மௌனம் மட்டும்தானே விடை,” என்றாள் ஒரு தத்துவத்தோடு.

ஆகாஷிற்கு அவள் சொல்வது புரியவில்லை. “புரியல… ஏன் உங்க அப்பா என்ன வேலை பார்க்கிறாருனு தெரியாதா?” என்று அவன் மறுபடியும் அழுத்தமாகக் கேட்க, அதுவரை கோலி குண்டுகளைப் போல உருண்டு கொண்டிருந்த அவளது கண்கள் சட்டென்று கலங்கத் தொடங்கின.

கண்ணாடிக்கு பின்னால் இருந்த அவளது இமைகளின் ஓரத்தில், மழையின் ஈரம் போலக் கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன. தன் பிறந்தநாளில், ஒரு புதிய மனிதனிடம் எதேச்சையாகப் பேசத் தொடங்கியவள், சட்டென்று ஒரு ரகசிய வலியைத் தொட்டுவிட்டது போலத் தெரிந்தாள்.

🌧️தூறல்கள் தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page