“என்ன செய்யணும்?” என சித்தார்த் ஆர்வமாகக் கேட்க..
“சித்தா, இப்போ அந்த மேனேஜர் மனோஜுக்கு போன் பண்ணு. ‘CEO-வோட PA இப்போ ஆபீஸ்க்கு வந்துட்டாரு, இன்னும் அவருக்கு அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் கைக்கு வரல, ஆனா அவர் செலக்ட் ஆயிட்டாரு’னு சொல்லு. அந்த PAவை நேரா CEO ரூமுக்கு கூட்டிட்டுப் போய் எல்லா வேலையையும் சொல்லிக் கொடுக்கச் சொல்லு. அவர் இனிமே CEOகூடவே ரொம்ப நெருக்கமா வேலை பார்ப்பாருன்னு அந்த மங்கூஸ் மண்டையன்கிட்ட ஸ்ட்ரிக்ட்டா சொல்லிடு!”
சித்தார்த் ஒரு நிமிடம் குழம்பிப்போனான். “PAவா? யாருடா அந்த புது PA? நாம யாரையும் அப்படி அப்பாயிண்ட் பண்ணலையே?”
ஆகாஷ் தன் சட்டைக் காலரைச் சரி செய்தபடி, சோபாவில் இன்னும் சௌகரியமாகச் சாய்ந்து அமர்ந்தவன். “அந்த PA… வேற யாரும் இல்ல சித்தா, அது நானே தான்!”
“வாட்?!” சித்தார்த்தின் குரல் லண்டன் வரை கேட்கும் போல அவ்வளவு சத்தமாக இருந்தது.
“டேய் உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? உனக்கே நீயே PAவா வேலை பார்க்கப்போறியா? உனக்கு நீயே எப்படிடா ஆர்டர் போட்டுப்ப?”
சிரித்த ஆகாஷ், “புரியலையா? இன்று முதல் இந்த ஆபீஸ்க்கு நான் CEO கிடையாது, இனி வெறும் PA தான். நான் CEOனு இப்போவே சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.”
“அப்போ… நீ PAன்னா, CEOயாரு?” சித்தார்த் குழப்பத்தின் உச்சியில் கேட்டான்.
ஆகாஷ் ஒரு மர்மப் புன்னகையுடன், “இப்போதைக்கு CEO… நீ தான் சித்தா! லண்டன்ல இருந்து வர்ற CEOவா நீயே ஆக்ட் பண்ணு. நான் உன் PAவா இருந்து இங்க எல்லாத்தையும் கவனிப்பேன்.”
“டேய்! இது எங்க போய் முடியப்போகுதோ தெரியல… நான் ஒரு பக்கம் சமாளிக்கிறேன். ஆனா அந்த மனோஜ் உன்னை PAனு நினைச்சு ஏதாவது வேலையை ஏவி விட்டுடப்போறான் பாத்துக்கோ!” எனச் சித்தார்த் எச்சரிக்க,
“அதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன். அவர் என்ன பண்றாருன்னு பார்ப்போமே,” என்றான் ஆகாஷ்.
“டேய் ஆகாஷ்! எதுக்குடா இவ்வளவு பெரிய டிராமா? எனக்கு என்னவோ இதுல ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுதே… உண்மையா சொல்லு… அந்த கேப்ல என்னதான் நடந்துச்சு? ஏன் திடீர்னு PAவா மாறணும்னு ஆசைப்படுற?”
தன் பிம்பத்தைப் பார்த்து ஒரு கணம் ரசித்த ஆகாஷ், “எல்லாத்தையும் சொல்றேன் சித்தா… ஆனா இப்போ இல்ல. நீ எப்போ இங்க CEOவா வந்து இறங்குறியோ, அப்போ மொத்த கதையையும் சொல்றேன். இப்போதைக்கு நான் சொன்னதை மட்டும் செய்,” என்றான்.
“சரிடா சாமி! உன் இஷ்டம் போலவே பண்றேன். ஆனா எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியல… நீ ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்குற?” என சித்தார்த் மீண்டும் கேட்க, இடைமறித்த ஆகாஷ்.
“டைம் ஆகுது சித்தா… இப்போ உடனே மனோஜுக்கு கூப்பிடு. நான் இங்க ரிசப்ஷன் ஏரியால வெயிட் பண்றேன்னு சொல்லு. அப்புறம் முக்கியமான விஷயம்… மங்கூஸ் மண்டையனுக்கு என் மேல எந்த ஒரு ஸ்பெஷல் மரியாதையும் வரக்கூடாது. என்னை ஒரு சாதாரண புது ஊழியனா பார்க்கணும். ஏதோ தயவுல வேலைக்கு வந்தவன் மாதிரி என்னை அவன் நடத்தணும். அப்போதான் அந்த மங்கூஸ் மண்டையனோட உண்மையான முகம் எனக்குத் தெரியும். ஓகேவா?”
“எல்லாமே ஓகே ஆகாஷ்… ஆனா, ஒரு நிமிஷம் இரு. அது என்ன ‘மங்கூஸ் மண்டையன்’? யாரைப் அப்படிச் சொல்ற?” சித்தார்த் புரியாமல் கேட்டான்.
தன் வாயைப் பொத்திக்கொண்டு மெல்லிய குரலில் சிரித்த ஆகாஷ், “அது நம்ம மேனேஜர் மனோஜோட புதுப் பேருடா சித்தா!”
“என்னது? மனோஜோட பேரா? யாருடா இந்தப் பேர் வச்சது? நீயா?” எனச் சித்தார்த் அதிர்ச்சியில் வினவ, ஆகாஷ் சிரிப்பை அடக்கிக் கொண்டு…
“இல்லடா… இங்க இருக்க ஒரு பொண்ணுதான் அவருக்கு அந்தப் பேர் வச்சிருக்கா. ‘மங்கூஸ் மண்டையன்’னு அவ சொல்லும்போது கேட்கவே அவ்வளவு தமாஷா இருந்துச்சு.”
சித்தார்த் ஒரு கணம் வாயடைத்துப் போனான். “டேய்! உன்னோட மேனேஜரை ஒரு பொண்ணு மங்கூஸ்னு கூப்பிடுறா, அதை நீ ரசிச்சுட்டு இருக்கியா? என்னடா நடக்குது அங்க? யார் அந்தப் பொண்ணு? நீ கேப்ல வந்தேன்னு சொன்னியே, அங்க என்னதான் நடந்துச்சு? உண்மையைச் சொல்லு!”
“ஹேய் சித்தா… அது ஒரு பெரிய ஸ்டோரிடா. இப்போ சொன்னா உனக்கு புரியாது. நான் இங்க வந்ததுல இருந்து, அந்தப் பொண்ணு என்னை நியூ ஜாய்னின்னு நினைச்சு எனக்கு அட்வைஸ் பண்ணது வரைக்கும் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. நான் எல்லாத்தையும் நீ இங்க வந்தப்புறம் நிதானமா சொல்றேன். இப்போதைக்கு நான் சொன்ன வேலையை மட்டும் முடி,” என்றான் ரகசியமாக.
“புரிஞ்சுது பாஸ்! உன் மர்மம் சீக்கிரம் உடையட்டும். நான் இப்போவே மனோஜ்க்கு கால் பண்றேன். உன் மங்கூஸ் மண்டையன் இப்போ ரிசப்ஷனுக்கு ஓடி வருவாரு பாரு! ஆனா அந்த மனுஷன் உன்னை வச்சு என்ன செய்யப்போறாரோன்னு நினைச்சா தான் எனக்கு இப்போவே சிரிப்பு வருது,” எனச் சித்தார்த் போனை வைக்க, ஆகாஷ் தன் லேப்டாப்பை மூடிவிட்டுத் தயாரானான்.
சரியாக அடுத்த ஐந்தாவது நிமிடம்…
அங்கே, மனோஜ் தன் அறையில் பதற்றத்துடன் போனில் பேசிக்கொண்டிருந்தான், “ஆமா சார்… PAவா ? சரிங்க சார், நான் இப்போவே அந்த பையனை கூட்டிட்டு போய் CEO ரூம்ல உட்கார வைக்கிறேன். CEO சார் எப்போ வருவாரு? ஓகே… ஓகே சார்!”
போனை வைத்த மனோஜ், வியர்வையைத் துடைத்துக்கொண்டே அறையிலிருந்து, ஒரு மிரண்ட ஓணானைப் போல ஓடி வந்தார். போனில் சித்தார்த் கொடுத்த டோஸ் அப்படி!
“யார் தம்பி இங்கே ஆகாஷ்?” என அவர் மூச்சு வாங்கக் கேட்க, ஆகாஷ் மிகவும் சாதுவாக எழுந்து நின்று, “நான்தான் சார்,” என்றான்.
“நீ தான் ஆகாஷா?” என மனோஜ் மேலிருந்து கீழ் வரை ஒரு ஏளனப் பார்வையோடு கேட்டார்.
CEOவே சொல்லியிருக்கிறார் என்றால், இவனைச் சாதாரண ஆளாக நினைக்க முடியாது. ஆனா, சும்மா வேலை கத்துக்க வந்திருக்கான் இவனை வேலை வாங்கவும் வேண்டும்.” என்ற எண்ணமும் அவர் தலையில் ஏற்றப்பட்டிருந்தது.
“தம்பி… சார் உன்னைப்பத்தி சொன்னாரு. வா என் கூட!” என அவனைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றார். ஆகாஷ் பின்னாலேயே நடக்கும்போது,
“இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்! மங்கூஸ் மண்டையன் கிட்ட வேலை வாங்குறேனா இல்ல அவர் எனக்கு வேலை கொடுக்குறாரான்னு பார்ப்போம்!” என தனக்குள் நினைத்துக் கொண்டான்…
மனோஜ், ஒருவித சந்தேகத்துடன் ஆகாஷை, பிரம்மாண்டமான CEO அறைக்கு அழைத்துச் சென்றான். அந்த அறையின் கதவைத் திறந்ததும், ஏசியின் குளிர்ச்சியும், விலையுயர்ந்த மர சாமான்களின் வாசனையும் ஆகாஷை வரவேற்றன. தன் சொந்த அறைக்கே ஒரு விருந்தினரைப் போல நுழைந்த ஆகாஷிற்கு சிரிப்பு வந்தாலும், அதை அடக்கிக் கொண்டு ஒரு உதவியாளனைப் போல நின்றான்.
மனோஜ் மேஜையில் இருந்த சில கோப்புகளைச் சரி செய்தபடி மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தான். “தம்பி ஆகாஷ், இதான் CEO ரூம். அவர் வர்றதுக்குள்ள இந்த டேபிள் கிளீனா இருக்கணும், இந்த ஃபைல்ஸ் எல்லாம் ஆர்டரா இருக்கணும்,” என்று சில வேலைகளைச் சொல்லிக் கொடுத்தவன், அப்படியே குரலைத் தாழ்த்தி ஆகாஷின் அருகில் வந்து,
“ஆமா தம்பி… நம்ம CEOவை உனக்கு எப்படித் தெரியும்? அவர் எப்போ ஆபீஸ் வருவாரு? மனுஷன் எப்படி… ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா? இல்ல நம்மள மாதிரி ஆளுங்க சொல்றதக் கேப்பாரா?” எனப் பூசி மெழுகிப் பேசினார் மனோஜ்.
ஆகாஷ் நிலைமையைப் புரிந்து கொண்டான், மங்கூஸ் மண்டையன் இப்போதே தன்னிடம் CEOவை பற்றித் துப்பு துலக்குகிறான் என்பதை உணர்ந்தவன், ஒரு திகிலைக் கிளப்ப முடிவு செய்தான்.
“சார்… அவரைப் பத்தி கேட்கவே வேணாம்! செம ஸ்ட்ரிக்ட். சின்ன தப்பு நடந்தாலும் அவருக்குப் பிடிக்காது. யாராவது அவர்கிட்ட பொய் சொன்னா அவ்வளவுதான்… அன்னைக்கே அவங்களுக்கு லாஸ்ட் டே-வா இருக்கும். நான் கூட அவருகிட்ட பேசும் போது ரொம்பப் பார்த்துதான் பேசுவேன்,” என ஒரு போடு போட்டான் ஆகாஷ்.
ஏசி அறையின் குளுமையையும் மீறி மனோஜின் நெற்றியில் வியர்வை முத்துக்கள் அரும்பத் தொடங்கின. ஆகாஷின் அமைதியும், அவன் கையில் இருந்த அந்த ஃபைலும் மனோஜுக்குள் ஒருவித இனம்புரியாத நடுக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. தன் தவறை மறைக்க அவன் இப்போது ஆகாஷை வளைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.
ஒரு போலியான புன்னகையை முகத்தில் ஒட்டிக்கொண்டு, நாற்காலியில் சற்றே முன்னால் சாய்ந்தவன், “அப்படியா தம்பி? சரி சரி… நாம எதுக்கு தேவையில்லாம முறைச்சுக்கணும்? நாம ரெண்டு பேரும் ஒரு டீமா இருப்போம். எனக்கு நீ சில விஷயங்களை முன்கூட்டியே சொல்லணும். அதாவது, மேல இருக்குறவங்களுக்குத் தெரியுறதுக்கு முன்னாடி எனக்குத் தெரியணும். அதுக்கு கைமாறா, CEO கிட்ட உன்னைப் பத்தி நாலு வார்த்தை நல்ல விதமா சொல்லி, உன்னை இங்கேயே பெர்மனன்ட் வேலைல போட்டு விடறேன். நம்ம ரெண்டு பேருக்கும் இடையில ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கணும், என்ன சொல்ற?” என ஒரு நரித்தந்திரச் சிரிப்புடன் தன் கையை நீட்டினான்.
தன் சொந்த நிறுவனத்திலேயே, தனக்கே வேலை வாங்கித் தருவதாகச் சொன்ன மனோஜின் அறியாமையைப் பார்த்தபோது ஆகாஷுக்குச் சிரிப்புதான் வந்தது. ஆனால், அந்த நாடகத்தை இப்போதே முடிக்க அவன் விரும்பவில்லை. பூனை எலியைப் பிடிப்பதற்கு முன்பு செய்யும் விளையாட்டைப் போல, இந்தச் சூழலை இன்னும் கொஞ்ச நேரம் ரசிக்க முடிவு செய்தான்.
“நிச்சயமா சார்… நீங்க சொல்றது சரிதான். நமக்குள்ள ஒரு நல்ல புரிதல் இருந்தா தான் இந்த ஆபீஸ்ல நிம்மதியா வேலை பார்க்க முடியும்,” என்று கூறியபடி, மனோஜ் நீட்டிய கையை அழுத்திப் பற்றிக்கொண்டான் ஆகாஷின் கண்கள் மர்மமாக மின்னின.
மனோஜ் உற்சாகத்துடன், “அப்படியே இரு தம்பி! வேகமா புரிஞ்சிக்கிட்டியே, புத்திசாலிப் பையன் தான் நீ. இங்கே திறமை இருக்கிறவனைக் காட்டிலும், யாரு யாருக்கு விசுவாசமா இருக்காங்கங்கிறதுதான் முக்கியம். உனக்கு நான் இருக்கேன், எனக்கு நீ இருக்கணும். புரியுதா?”
ஆகாஷ் நிதானமாக, “புரியுது சார். ஆனா ஒரு சந்தேகம்… ஒருவேளை CEOக்கு உண்மை தெரிஞ்சுட்டா? நீங்க என்னை எப்படிக் காப்பாத்துவீங்க?”
கர்வத்துடன் சிரித்த மனோஜ், “அந்த கவலை உனக்கு வேண்டாம். இந்த ஆபீஸ்ல தூசு தும்பு முதற்கொண்டு எல்லாம் என் விரல் நுனியில இருக்கு. சென்னையில் இருக்க வரை CEO கூட ஒரு பொம்மை மாதிரிதான், நான் சொல்றதைக் கேட்டாகனும், அவருக்கு வேற வழி இல்லை. அதனால நீ தைரியமா இருக்கலாம்.”
மனோஜின் ஒவ்வொரு வார்த்தையும் குழி தோண்டித் தன்னையே புதைத்துக் கொள்வது போல் இருப்பதை எண்ணி ஆகாஷ் உள்ளுக்குள் நகைத்துக் கொண்டான். “ரொம்ப சந்தோஷம் சார். அப்போ இன்னைக்கிலிருந்தே நம்ம டீம் வொர்க்கை ஆரம்பிச்சிடலாம்,” என மீண்டும் ஒருமுறை கை குலுக்கினான்.
🌧️தூறல்கள் தொடரும்…
