தோளில் சாயும் நேரம் 03

கொன்றை மரங்களில் பூப் பூக்கும் காலம் முடிந்து போனதால், வெறும் இலைகளை மட்டுமே காற்றில் அசைய விட்டுக் கொண்டிருந்தன மரங்கள்.

மரத்து இலைகளில் தப்பித் தவறிக் கூட இருந்த தூசிகளை, மழை நீர் தூய்மையாகக் கழுவி விட்டிருக்க, சூரியக் கதிரின் வருடலில், இலைகள் கரும்பச்சை நிறத்தில் பளபளத்துக் கொண்டிருந்தன.

ஒரு கொன்றை மரத்தின் கீழே தான், ஆருதியைத் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சிய படியே, பிரேமகிருஷ்ணாவின் இறுகிய முகத்தைக் கேள்வியாக நோக்கியபடி நின்றிருந்தாள் விஷ்ணுவர்தனி.

“ஆருவைக் கொஞ்சம் கீழ இறக்கி விட முடியுமோ.. நிறைய வேலை கிடக்கு..”
என அங்கே நின்றிருந்த விஷ்ணுவின் யோசனையை உடைத்தது முன்னால் நின்றிருந்தவனின் அழுத்தமான குரல்.

‘துரை அப்புடி என்ன வெட்டிப் பிடுங்கிற வேலைக்குப் போகப் போறாராம்.. ஒரு அஞ்சு நிமிஷம் குழந்தையைக் கொஞ்ச விடுறானா பாரு..’
என மனதினுள் முணுமுணுத்தபடி குழந்தையை மெல்லக் கீழே இறக்கி விட்டாள் விஷ்ணு.

அவள் இறக்கி விட்டதும் தான் தாமதம், குழந்தையை இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டு அவன் போய் விட்டான்.

அவன் என்னவோ சாதாரணமாகத் தான் குழந்தையை அழைத்துக் கொண்டு போனான், ஆனால் அவளுக்குத் தான் தன்னிடம் இருந்து குழந்தையைப் பிடுங்கி இழுத்துக் கொண்டு போவது போல இருந்தது.

பெருமூச்சு விட்டுக் கொண்டே மெல்லத் திரும்பியவள், வந்தது தான் வந்து விட்டோம் நம்முடைய நல்லூர்க் கந்தனுக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டுப் போவோம் என்கிற எண்ணத்தில் கோவிலை நோக்கிப் போனாள்.

கோவில் நோக்கி நடந்தவளை மீண்டும்
“வர்தனீ..”
என்கிற குரல் தடுக்க, பரிச்சயமான அந்தக் குரலில் நின்று நிதானமாகத் திரும்பிப் பார்த்தவளை, அவளுடைய தோழி மதுவந்தியின் சிரித்த முகம் வரவேற்றது.

“வர்தனி.. இங்க என்னடி செய்றாய்.. நீ வேலைக்குப் போற நேரம் எல்லோ..”

“ஆ புடலங்காய் வாங்க வந்தனான்..”

“என்ன மேடம் ஏதவோ கடுப்புல இருக்கிற மாதிரிக் கிடக்குது..”

“சும்மா போ மது..”

“சரி சரி.. வா கோயிலுக்குள்ள போட்டு வந்து இருந்து ஆறுதலாக் கதைப்பம்..”

“என்னத்தைக் கதைக்கிறது..”

“முதல்ல கோயிலுக்குள்ள போவம் வா நீ..”
என்று கொண்டே தோழியை அழைத்துக் கொண்டு கோயிலுக்குள் சென்றாள் மதுவந்தி.

விஷ்ணுவர்தனிக்கு இஷ்ட தெய்வம் முருகன் தான், அவள் பெயரில் விஷ்ணு இருந்தாலும் சிறு வயதில் இருந்தே தீவிர முருக பக்தை அவள்.

எப்பேர்ப்பட்ட சங்கடங்களும் சஞ்சலங்களும் முருகனுடைய சந்நிதானத்தில் போய் அமரந்தால், தூள் தூளாகிப் போய் விடும் அவளுக்கு.

‘வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்லக் கலங்கிடுமே செந்தில்நகர் சேவகா’
இது தான் விஷணுவர்தனியின் தாரக மந்திரம்.

தன் தோழியோடு நல்லூர்க் கந்தனது சந்நிதானத்தின் வாசலினுள் காலடி எடுத்து வைத்தவளை, உள்ளிருந்து வந்த மெல்லிய காற்று சுகமாகத் தழுவிச் செல்லவே, நின்று அந்தச் சுகந்தத்தை மெல்ல உள் வாங்கிக் கொண்டாள் அவள்.

கோவிலினுள் நுழையும் போது, கோவிலுக்கேயுரிய விபூதி கலந்த ஒரு வாசனை வருமே, அதோடு உள்ளிருந்து சிறு சிறு மணி ஒலிகளும் ஒலித்து, தேவ சந்நிதானத்துக்குள் நுழைவது போன்றதொரு எண்ணத்தைக் கொடுத்தது.

கோவிலினுள் நுழைந்தவள் மூலஸ்தானத்தைத் தரிசித்த வேகத்தில், பழனியாண்டவரின் சந்நிதானத்துக்குப் போய் விட்டாள்.

அத்தனை பெரிய கோவிலில் அவளுக்கு மிகவும் பிடித்த இடம் அது தான்.

பழனியாண்டவரைத் தரிசித்தால் ஆண்டியும் அரசனாவான் என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கிறாள் விஷ்ணு.

‘நான் ஆண்டியும் ஆக வேண்டாம் அரசியும் ஆக வேண்டாம்.. ஓட்டாண்டி ஆகாமல் நிம்மதியாக இருந்தால் போதும்..’
என்று வேண்டிக் கொண்டே அங்கே சிறிது நேரம் நின்றவள், மதுவந்தியை மனதிற் கொண்டு பின்னர் வெளியே வந்து விட்டாள்.

இருவரும் முன்பக்கமாகக் கொஞ்சம் தள்ளி நின்றிருந்த வேப்பமரத்துக்குக் கீழே போய் அமர்ந்து கொண்டார்கள்.

“என்ன வர்தனி.. வடிவாக் கும்பிட்டனியோ உன்ரை முருகப்பெருமானை..”

“ம்ம்.. கும்பிட்டன் கும்பிட்டன்..”

“உனக்கு மட்டும் ரெண்டு கல்யாணம்.. எனக்கு மட்டும் இன்னும் ஒண்டு கூட நடக்கேலையே ஏன் எண்டு கேட்டியோ..”

“…………….”

“சொறி வர்தனி.. சும்மா ஒரு ஆர்வக்கோளாறுல அப்புடிச் சொல்லீட்டன்..”

“நீ அப்போ தாத்தாவைப் பாத்திருக்கிறாய்.. இல்லாட்டிக்கு நீ லேசுல கல்யாணக் கதை கதைக்க மாட்டியே..”

“ம்ம்.. பாத்தனான்..”

“சரி என்ன சொன்னார்..”

“உனக்கு ஒரு வரன் வந்திருக்குது எண்டு சொன்னார்..”

“வேறை..”

“மாப்பிள்ளைக்கு உன்னை விடப் பத்து வயசு அதிகமாம்.. தங்கட காலத்துல பதினைஞ்சு வயசிலயெல்லாம் கலியாணம் நடந்து இருக்குதாம்..”

“அப்புடி எண்டு தாத்தா சொன்னாரோ..”

“ம்ம்ம்..”

“சரி வேறை என்ன சொன்னார்..”

“மாப்பிள்ளைக்குத் தாயும் சித்தியும் அப்புறம் ஏதவோ சொன்னாரு மறந்திட்டன்.. “

“வேறை..”

“அவரு உத்தியோகமும் ஏதவோ ஒரு டொக்டர் எண்டாரே..”

“அதையும் மறந்துட்டியோ.. நடிக்காதேடி உனக்கு என்னவோ நிறையத் தெரிஞ்சிருக்குது.. ஆனா நீ மழுப்புறாய் என்ன..”

“கண்டுபிடிச்சிட்டாய் என்ன.. எப்புடிக் கண்டுபிடிச்சனீ..”

“முயல் பிடிக்கிற நாயை மூஞ்சியைப் பாக்கத் தெரியும் எண்டு சொல்லுவினம்..”

“என்னை அப்போ நாய் எண்டுறியோ..”

“நாய்க்கு என்னடி குறைச்சல்.. அது நன்றியுள்ள ஜீவன் தானே.. “

“சரி சரி இப்ப அதை விட்டிட்டு விசியத்துக்கு வருவம்.. பிறகு உன்னைப் பிடிக்க ஏலாது..”

“சரி என்ன விசியம்..”

“ஏன் வர்தனி.. ஏதவோ நீ கேக்க நினைக்கிறாய் எண்டு நினைக்கிறன்..”

“உன்னட்டச் சொல்லுறதுக்கு என்ன மது.. எனக்கு இந்தக் கல்யாணத்துல எல்லாம் பெருசா நம்பிக்கை இல்லை எண்டுறது உனக்குத் தெரியும் தானே..”

“ஆனா வர்தனி இங்க பார்.. இதையே சொல்லிக் கொண்டு எவ்வளவு காலத்துக்கு நீ இருக்கப் போறாய்.. இப்பவே வயசு முப்பத்தாறு ஆயிட்டுது..”

“……………”

“என்ன அமைதியாயிட்டாய்.. உனக்கும் ஒரு துணை வேண்டாமோ சொல்லு..”

“நானும் ஒரு காலத்துல காதல் கல்யாணம் எண்டு ஆசைப்பட்டவள் தான் மது.. ஆனா சீதனம் அது இதெண்டு போகப் போக எல்லாமே வெறுத்திட்டுது..”

“இவ்வளவு காலமும் பாத்தவங்களை விடு.. இப்போ உனக்கு வந்த வரன் நல்ல வரன் வர்தனி..”

“அது எப்புடி உனக்குத் தெரியும்..”

“ரகு தான் இந்தச் சம்மந்தத்தைக் கொண்டு வந்ததே..”

“ஓ அண்ணாவுக்குத் தெரிஞ்சவரோ..”

“ரெண்டு பேரும் யுனிவர்சிட்டி படிச்ச காலத்துல இருந்து பிரெண்டு.. அதனால மற்றவை மாதிரி இவரு இருப்பார் எண்டு நீ பயப்பிடத் தேவையில்லை..”

“…………….”

“என்னைப் பார் வர்தனி.. மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைப் பிடிச்சுக் கொண்டு கிடந்த மாதிரி.. நீ எப்பவுமே முருகனுந்த காலடி தான் கதியெண்டு கிடக்கிறாய்.. அந்த முருகக்கடவுள் மனமுவந்து தான் இந்த வரனை உனக்காகக் கொண்டு வந்திருக்கிறார் எண்டு தான் நான் சொல்லுவன்..”

“…………….”

“என்ன வர்தனி கடுமையா யோசிக்கிறாய்..”

“அவருக்கு நான் தான் என்ரை தாத்தாவுக்குப் பொறுப்பு எண்டுறது தெரியுமோ.. நான் எங்க வாழப் போனாலும் தாத்தாவையும் கூட்டிக் கொண்டு போவன் மது.. அதுக்கு அவர் சம்மதம் சொன்னால்.. நான் கண்ணை மூடிக் கொண்டு அவருக்குக் கழுத்த நீட்டுவன்..”

“நீ இப்புடிச் சொன்னதே எனக்குப் பெரிய சந்தோசம்டி.. ஆனா நீ கண்ணைத் திறந்து கொண்டே கழுத்த நீட்டலாம்.. ஏன் எண்டால் அவருக்கும் பொறுப்பு இருக்கிறதால அவர் உன்னைப் புரிஞ்சு கொள்ளுவார்.. அதோட இதைப் பத்தி இண்டைக்கு ரகு அவரிட்டக் கதைக்கிறன் எண்டு சொன்னார்..”

“மது.. எனக்குப் பயமா இருக்குடி.. கொஞ்ச நாளாவே எனக்கு மனசு சரியில்லை.. கல்யாணமே வேண்டாம் எண்டு இருந்த தைரியம் எல்லாம் லேசா ஆட்டங் காணுது..”

“சீக்கிரமாவே இந்தச் சம்மந்தம் சரியா வந்து.. சீக்கிரமாவே உனக்கு அண்ணாவோட கல்யாணம் ஆகி.. சீக்கிரமாவே நீங்கள் ரெண்டு பேரும் ஜோடியா இங்க முருகனைப் பாக்க வருவீங்கள்.. இது இன்னும் ரெண்டு வருசத்துல நடக்குதா இல்லையா எண்டு பாரு..”
என மதுவந்தி மனதாறச் சொல்ல, மெல்லப் புன்னகைத்தாள் விஷ்ணு.

இருவரும் அதற்குப் பிறகு வேறு கதைகள் எல்லாம் கதைத்து விட்டு, எழுந்து கொள்ளும் நேரத்தில் அவர்களை நோக்கி வந்தான், மதுவந்தியின் கணவன் ரகு.

“என்ன கூட்டாளியள் ரெண்டு பேரும் என்ன கூட்டணி போட்டுக் கொண்டு இருக்கிறீங்கள்..”

“வாங்கோ ரகுவண்ணா எப்புடி இருக்கிறீங்கள்..”

“எனக்கென்னம்மா உன்ரை பிரெண்டைக் கட்டினதுல இருந்து ரொம்பச் சந்தோசமா நிம்மதியா இருக்கிறன்..”

“கேக்கவே சந்தோசமா இருக்குண்ணா..”

“அதே சந்தோசத்தை உன்ரை முகத்துலயும் பாக்க வேணும் எண்டுறதுதான் எனக்கும் மதுவுக்கும் விருப்பம்..”

“நடக்கிறது தானே அண்ணா நடக்கும்..”

“நடக்கிறது நல்லதாவே நடக்கும் எண்டு நம்புவமே தங்கச்சி..”

“அந்த ஒரு நம்பிக்கை தான் அண்ணா எனக்கும்..”
என்ற விஷ்ணு, இருவரிடமும் சில நிமிடங்கள் சந்தோஷமாகப் பேசி விட்டு அங்கிருந்து புறப்பட்டாள்.

அவளுக்கு முதலில் வரும் போது இருந்த அழுத்தத்தில் பாதி இப்போது குறைந்து விட்டிருந்தது உண்மை.

விஷ்ணுவர்தனி அங்கிருந்து போன பின்னர் மனைவியிடம் திரும்பினான் ரகு.

“என்னப்பா.. அண்ணாட்டக் கதைச்சீங்களோ என்ன சொல்லுறார்..”

“கதைச்சனான் மது.. நான் கதைக்கும் வரைக்கும் அவனுக்குச் சுத்தமா விருப்பமில்லை..”

“அவருக்கு விருப்பம் எண்டால் தான் நாங்கள் ஆச்சரியப் பட வேணும்.. பிறகு..”

“பிறகு என்ன.. கொஞ்ச நேரத்துக்கு எனக்கு மண்டை வெடிக்காத குறை தான்..”

“இப்ப ஓம் சொல்லீட்டாரோ இல்லையோ அதைச் சொல்லுங்கோ முதல்ல..”

“பாதி ஓம் தான்.. ஆனா..”

“ஆனா என்ன..”

“பொம்பிளையோட தான் கொஞ்சம் கதைக்க வேணுமாம்.. தான் சொல்லுற சில விசியங்களுக்குச் சம்மதம் சொன்னால் தனக்கு ஓகே எண்டு சொன்னான்..”

“அப்பாடா.. இந்தளவுக்காச்சும் இறங்கி வந்தாரே..”

“இதுல என்னடி அப்பாடா.. பிடிக்காத ரெண்டையும் எப்புடிச் சேக்கப் போறம் எண்டு கிடக்குது எனக்கு..”

“ரெண்டு பேருமே வேறை வேறை துருவமா இருந்தாலும்.. ஒரு ஒற்றுமை இருக்குது..”

“என்ன ஒற்றுமை அது..”

“ரெண்டு பேருமே எப்பவுமே தங்கடை பொறுப்புகளைத் தட்டி விடுற ஆக்கள் இல்லை.. அதனால..”

“அதனால..”

“அதைக் காரணம் காட்டி இந்தக் கலயாணத்தை ஒப்பேற்றலாம் ரகுப்பா..”

“இது சரியா வருமோ மது..”

“கண்டிப்பா வரும் ரகுப்பா..”

“எப்புடி அவ்வளவு உறுதியாச் சொல்லுறாய்..”

“ரெண்டு பேருமே அடிப்படையில நல்ல மனசுக்காரங்கப்பா.. ஒருத்தர் மேல ஒருத்தர் பாசமோ நேசமோ வைச்சிட்டாப் பிறகு சொல்லவே தேவையில்லை..”

“அது உண்மை தான்..”

“அந்தப் பாசத்தையும் நேசத்தையும் ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் குடுக்க வேணுமண்டால்.. நாங்கள் அவையளை ஆளாளுக்கு அடையாளம் காட்டி விட வேணும் அவ்வளவு தான்..”

“திரும்பவும் கேக்கிறன்.. இது சரியா வருமா மது..”

“ஒவ்வாத முனைகள் தானே ஒண்டை ஒண்டு கவரும்.. சீக்கிரமாவே கவரும் பாருங்கோ.. நமக்கு வேலை கோடு போடுறது மட்டும் தான்.. சீக்கிரமாவே முருகன்..”

“அதுல ரோடு போடுவாரோ..”

“யெஸ்..”

“அது சரி கடைசியில முருகனை கன்ஸ்ரக்சன் வேர்க்கரா மாத்திட்டியளேடி..”
என ரகு சிரித்தாலும், தன்னுடைய தோழனது வாழ்வு மலர வேண்டும் என அவன் போட்ட கோடு தான் இந்தத் திருமணப் பேச்சு.

ஆனால் ஏற்கனவே இது கடவுள் போட்ட முடிச்சு என்பதை உரியவர்கள் சீக்கிரமாகவே உணரும் நாள் தூரமில்லை.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page