மேற்கு வானத்தில் லேசாக முழுகிக் கொண்டிருந்த அந்திச் சூரியனது பொன்மஞ்சள் நிறத்து ஒளிக் கற்றைகள், பண்ணைக்கடல் நீரில் பட்டு, நீரை ஜொலிக்கச் செய்து கொண்டிருந்தன.
வரிசையாக இடைவெளி விட்டு நாட்டப்பட்டிருந்த மரங்கள் கடற்காற்றில் ஆடி அசைந்து, ஒரு விதமான குளிர்மையைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தன.
விஷ்ணுவர்தனி லேசாகக் கூந்தலை உயர்த்தி ஒரு கிளிப்பில் அடக்கியிருந்ததால், கடற்காற்றின் உந்துதலில் பாதி முடி காற்றில் பறந்து கொண்டிருந்தன.
காற்றில் பறந்த முடிகளை மெல்ல ஒதுக்கியபடி, மீண்டும் பிரேமகிருஷ்ணாவைத் தான் பார்த்தாள் அவள்.
அவனைப் பார்த்ததுமே பேசுவதற்கென்று உருப்போட்டுக் கொண்டு வந்த அத்தனை விடயங்களும் அவளுக்கு மறந்து போனது தான் மிச்சம்.
அவளுக்கு முன்பாகப் பிரேமகிருஷ்ணாவிடம் சென்ற ரகு,
“டேய் அந்தப் பிள்ளை தான்டா..”
என்று சொன்னதும், அவனோ சாதாரணமாக
“தெரியும்..”
என்றதும், வியப்போடு நண்பனைப் பார்த்தான் ரகு.
ரகுவின் வியந்த பார்வையில்
“அது தான் வீட்டுக்கு ஒரு படம் அனுப்பியிருந்தியே பிறகென்ன..”
என்றான் பிரேமகிருஷ்ணா மீண்டும் சாதாரணமான குரலில்.
“ஓ.. பாரன் அதை மறந்திட்டன்.. சரி சரி வா போவம்.. ஆரு அமைதியா இருப்பளோடா நீ கதைக்கும் மட்டும்..”
“அது கொஞ்சம் கஷ்டம் தான்.. ஆனா நான் கதைக்கப் போறதே ஆரு பத்தி தான்..”
“விளங்கேல்ல..”
“நான் எங்க இருந்தாலும் ஆரு என்னோடயே இருக்கோணும்..”
“அதாவது..”
“வெளிப் பார்வைக்குத் தான் நான் ஆருக்குப் பெரியப்பா.. மத்தபடி நான் அவளுக்கு அப்பா தான்.. சோ எனக்கு வரப் போற பொண்ணு ஆருக்கு அம்மாவா இருக்க வேணும் எண்டுறது தான் என்ர எதிர்பார்ப்பு..”
“ஹேய் அது எப்புடிடா முடியும்..”
“அது முடியும்கிற பொண்ணைக் காட்டு கல்யாணம் செஞ்சிக்கிறன்.. இல்லாட்டிக்கு நான் இப்புடியே போறன்..”
“அடேய் அடேய்.. ஏன்டா டேய்..”
தலையில் கை வைக்காத குறையாகி விட்டது ரகுவுக்கு.
ரகுவிடம் பிரேமகிருஷ்ணா சொன்ன
“நான் அந்தப் பிள்ளையோட கொஞ்சம் கதைக்க வேணும்..”
என்ற விசியத்தை ரகு எடுத்துக் கொண்ட விதம் வேறாகத் தான் இருந்தது.
அதாவது தன்னுடைய காதல் தோல்வி பற்றிச் சொல்லப் போகிறானாக இருக்கும் என்று தான் ரகு நினைத்திருந்தான்.
அது கூட இப்போதெல்லாம் ஒரு ஆண் ஏற்கனவே காதல் வயப்பட்டு அது தோல்வியில் முடிந்து போனால், அதையெல்லாம் ஒரு பெரிய விசியமாகவே சில பெண்கள் எடுத்துக் கொள்ளுவதில்லை தானே.
அதனால் கண்டிப்பாக இவன் சொல்லப் போகின்ற முந்தைய காதல் தோல்வி பற்றிய விவகாரம் ஒரு பக்கம் இருக்க, அந்த விசியம் பற்றி மது ஏற்கனவே வர்தனியிடம் சொல்லி விட்டாள் என்பதால் அது பெரிதாக வர்தனியைப் பாதிக்கப் போவதில்லை என்று தான் ரகு நினைத்திருந்தான்.
ஆனால் இவன் என்ன புதுக்கதை சொல்கிறான் என்பது போல இருந்தது ரகுவுக்கு, அதோடு இலவச இணைப்பாக, ஒரு குழந்தையை, புதிதாகத் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
அப்படியே ஏற்றுக் கொள்ள முன் வந்தாலும் கூட, ஆருதி ஒரு விஷேட தேவை உடைய குழந்தை அல்லவா.
நிறைய எண்ணங்கள் ரகுவைப் பிடித்து அலைக்கழித்த போதும், சரி நடப்பது நடக்கட்டும் வந்தது தான் வந்து விட்டோம் இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வரட்டுக்கும் என அவனும் ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.
“சரி வா கிருஷ்ணா.. உனக்குத் தோணுறத அந்தப் பிள்ளையிட்டச் சொல்லு..”
“ம்ம்..”
“அந்தப் பிள்ளைக்குத் தோணுறத உன்னட்டச் சொல்லட்டும்..”
“ம்ம்ம்..”
“சில நேரங்களில உன்ர எதிர்பார்ப்பு நிறைவேறினாலும் நிறைவேறலாம் தானே.. நல்லது நடக்கும் எண்டு நினைப்பம்..”
என அரை மனதாக அவனை அழைத்துக் கொண்டு, விஷ்ணுவர்தனிக்குப் பக்கத்தில் போனான் ரகு.
இருவரும் தன்னருகே வருவதைப் பார்த்ததும், சம்பிரதாயமாக மெல்ல எழுந்து நின்று கொண்ட விஷ்ணுவை, எட்டிப் பிடித்திருந்தாள் ஆருதி.
குழந்தை தன் கரத்தைப் பிடித்ததும், முகம் மலர அவளைத் தூக்கிக் கல்லாசனத்தில் நிற்க வைத்தவளது இடுப்பைக் கட்டிக் கொண்டு, அங்குமிங்கும் தலையை ஆட்டி ஆட்டி வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள் குழந்தை.
குழந்தையை ஒரு கையால் அணைவாகப் பிடித்தபடி, இவர்களைத் திரும்பிப் பார்த்தாள் அவள்.
இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு முதல், இருவரையும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து வைத்தான் ரகு.
“தங்கச்சி.. இது தான் கிருஷ்ணா.. நாங்கள் உனக்குப் பாத்த மாப்பிள்ளை.. ஏற்கனவே தெரியும் எண்டு நினைக்கிறன்..”
என முதலில் விஷ்ணுவைக் கிருஷ்ணாவுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
“ம்ம்.. தெரியும் அண்ணா..”
என்றபடி கிருஷ்ணாவை மெல்ல நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
அதற்குள் ரகு அவன் பக்கம் திரும்பி
“கிருஷ்ணா.. இது வர்தனி.. உனக்குப் பாத்த பிள்ளை.. ஆருதிக்கு கிளாஸ் எடுக்கிறதால உனக்கும் தெரிஞ்சிருக்கும்..”
என்று சொல்ல,
“தெரியும் தான்.. இவங்களும் என்னட்ட ஏதவோ கதைக்க வேணும் எண்டு சொன்னியே.. சோ இவங்களை முதல்ல கதைக்கச் சொல்லு..”
என்றான் பிரேமகிருஷ்ணா தன்னுடைய வழமையான சாதாரண குரலில், ஆனால் அவன் விழிகள் விஷ்ணுவுக்கும் ஆருதிக்கும் இடையில் நுழைந்து வெளி வந்து கொண்டிருந்தது.
நீங்களே முதலில் சொல்லுங்கள், அதற்குப் பிறகு நான் சொல்ல வந்ததைச் சொல்லுகிறேன் என எந்த விதமான சுற்றிவளைப்பும் இல்லாமல், சொல்ல வந்ததைச் சொல்லத் தொடங்கினாள் விஷ்ணு.
“எனக்கு இப்ப வயசு முப்பத்தாறு.. அம்மாவோ அப்பாவோ கூடப் பிறந்தவங்களோ யாரும் இல்லை.. என்னை என்ர தாத்தா தான் வளத்துப் படிக்க வைச்சு இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டிருக்கிறார்.. எனக்கு இதுக்கு முதல் பத்துத் தடவைக்கும் மேல மாப்பிள்ளை பாத்திச்சினம்.. அவை தாத்தாட பொறுப்பைத் தங்களால ஏத்துக்க முடியாது எண்டதைக் காரணமாக் காட்ட முடியாமல்.. நிறைய சீதனம் கேட்டிச்சினம்.. அதனால நான் அவங்கள ரிஜெக்ட் பண்ணீட்டன்..”
என்று கொண்டே போனவள், அதில் ஒரு இடைவெளி விட்டு, கிருஷ்ணாவின் முகத்தை ஆராய்ச்சிப் பார்வை பார்த்து வைத்தாள்.
தான் பார்க்கும் போது, அதில் எந்த உணர்வுகளுமே இல்லை என்பதைக் கண்டவள், மேலே தொடர்ந்தாள்.
“என்னைக் கட்டிக்கப் போறவர்.. என்னோட என்ர தாத்தாவையும் ஏத்துக் கொண்டாலே எனக்குப் போதும்.. தாத்தா வரப் போறவருக்கு எந்த விதத்திலயும் பாரமா இருக்க மாட்டார்.. அதுக்கு நான் பொறுப்பு.. ஆனா என்ர தாத்தாட்ட வந்து.. உங்கட பேத்தி இருக்கிற இடத்துல தான் நீங்ளும் இருக்க வேணும் எண்டு சொல்லி.. அவரைக் கூப்பிட்டாலே போதும்.. இது மட்டும் தான் என்ர எதிர்பார்ப்பு..”
என்றவள் இப்போது கிருஷ்ணாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவில்லை என்றாலும், அவனுடைய விழிகள் அவள் மீது ஏதோ ஒரு யோசனையோடு ஆழமாகப் பதிந்திருந்தன.
“சோ.. தங்கச்சிக்கு தாத்தாவை ஏத்துக் கொள்ளுற மாப்பிள்ளை எண்டால்.. கல்யாணத்துக்குச் சம்மதம் அப்புடித் தானே..”
என்ற ரகுவுக்கு, ஆமாம் எனத் தலையை ஆட்டி வைத்தாள் அவள்.
“அதே மாதிரி கிருஷ்ணாவுக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்மா.. அது..”
என ரகு சொல்ல வந்ததைச் சொல்லுவதற்குள்
“ஆருதியை ஏத்துக் கொள்ளுற பொண்ணு..”
என்று சொல்லியிருந்தாள் விஷ்ணு.
சிறு வியப்போடு இருவரையும் பார்த்த ரகு
“அப்போ அதுல உனக்குச் சம்மதமோ தங்கச்சி..”
என்று கேட்க, எந்த விதமான தயக்கமுமின்றி, சம்மதம் எனச் சட்டென்று தலையாட்டிய விஷ்ணுவை பிரேமகிருஷ்ணாவின் விழிகள் இப்போது வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.
விஷ்ணுவின் சம்மதத்தைத் தெரிந்து கொண்டதும் மற்றவனை விடவும் ரகுவின் முகத்தில் தான் ஒளி வட்டம் ஒன்று சட்டென்று வந்து அமர்ந்து கொண்டது.
“பிறகென்ன கிருஷ்ணா.. ரெண்டு பேருக்குமே ரெண்டு பேரும் எதிர்பார்த்த விசியங்கள் சரியா அமைஞ்சிட்டுது.. இனிக் கல்யாண வேலையளை ஆரம்பிக்க வேண்டியது தானே..”
என மறைக்காத சந்தோஷத்தோடு சொன்னான் ரகு.
ரகுவுக்கு எத்தனையோ நண்பர்கள் இருந்தாலும், அவனுக்குப் பிரேமகிருஷ்ணா என்றாலே எப்போதும் தனி தான்.
என்ன இன்பமோ என்ன துன்பமோ எதுவாக இருந்தாலும் ரகுவுக்கு வடிகால் இவன் தான்.
ஒரு காலத்தில் கலகலப்பு என்றாலே அது பிரேமகிருஷ்ணா தான் என்கிற அளவுக்கு இருந்த நண்பன், இப்போது சிரி என்றால் ஏன்? எதற்கு? என ஆயிரம் கேள்வி கேட்டு விட்டு, உதடுகளை லேசாக இழுதது விட்டுப் போய் விடுபவனாக இருப்பது யாரைப் பாதித்ததோ இல்லையோ ரகுவை நன்றாகவே பாதித்தது.
தன் நண்பனை மீண்டும் கலகலப்பாக்க வேண்டும் என்பது, கனன்று கொண்டிருக்கும் நெருப்புப் போல அவனுக்குள்ளும் கனன்று கொண்டுதான் இருந்தது.
அதற்கு முன்பாகக் கல்யாணமே வேண்டாம் எனக் கிட்டத்தட்ட முற்றும் துறந்த முனிவன் போல இருக்கும் தன் நண்பனுக்கு ஒரு கல்யாணத்தைச் செய்து வைக்க வேண்டும் என அவன் படாதபாடு இல்லை.
இப்போது தான் வறண்ட கிணத்துல திடீர்னு ஊத்தடிச்ச மாதிரி, ஒரு குளிர்ச்சியை மனதோரம் உணர்ந்தான் ரகு.
வர்தனி மாதிரி ஒரு நல்ல பெண்ணிற்குக் கிருஷ்ணா மாதிரி ஒரு பொறுப்பான பையன் கணவனாக அமைந்தால், கண்டிப்பாகக் காலப் போக்கில் இருவரும் ஒரு நல்ல காதல் தம்பதியர்களாக ஆவார்கள் என்பது, ரகுவின் அசைக்க முடியாத நம்பிக்கை.
ஒரு நல்ல நண்பனாக அவன் அந்த நம்பிக்கைக்கு மெல்ல மெல்ல நீரூற்றிக் கொண்டிருந்தான் என்பது தான் உண்மை.
இதற்குள் நண்பன் சொன்னதைக் கேட்டு, அப்போது தான் சுயநினைவுக்கு வந்தவன் போல பிரேமகிருஷ்ணா எதையோ சொல்ல வருவது போல இருந்தது.
அதைப் பார்த்ததம் போதும் நிறுத்து என்பது போலக் கையைக் காட்டிய ரகு
“உன்ர காதல் கதை எல்லாம் பிள்ளையிட்ட நாங்க ஏற்கனவே சொல்லீட்டம் கிருஷ்ணா.. உடன நெத்திக்கண்ணைத் திறக்காத.. நீ மறுப்புச் சொல்ல இனி ஒண்டுமே இல்லை..”
என்று சொல்ல, அதற்கு மேல் என்னத்தைப் பேசுவது என்பது போல அமைதியாகி விட்டான் பிரேமகிருஷ்ணா.
“சரி.. எல்லாம் முடிஞ்சுது தானே.. இனி ஏதும் கதை மிச்சம் இருந்தால்.. அதைக் கல்யாணத்துக்குப் பிறகு வைச்சுக் கொள்ளுங்கோ ரெண்டு பேரும்..”
என்று கொண்டே இருவரையும் பார்த்தான் ரகு.
இந்த இரண்டு ஜீவன்களும் இனிமேல் வாயைத் திறக்கப் போவதில்லை, அதனால் நாமே பேச வேண்டிய விடயங்களைப் பேசி விடலாம் என்கிற முடிவோடு தொடர்ந்து பேசினான் அவன்.
“நல்ல விசியத்தைத் தள்ளிப் போடக் கூடாது எண்டு பெரியவை சொல்லுவினம்.. கிருஷ்ணா வீட்டுல நான் நாளைக்கே உங்கட வீட்ட வந்து கதைக்கச் சொல்லுறன் தங்கச்சி..”
என்ற ரகு, அவள் ஏதும் சொல்லக் கூடுமோ என அவளைப் பார்க்க அவளோ பதிலுக்கு மெல்லப் புன்னகைக்க மட்டுமே செய்தாள்.
‘என்ன பொருத்தம் இருக்கோ இல்லையோ.. உந்தப் பொருத்தம் மட்டும் ரெண்டு பேருக்கும் நல்லாவே இருக்கு.. என்ன ஒண்டு அவனுக்கெல்லாம் இப்புடிச் சிரிக்கிறது சுட்டுப் போட்டாலும் வராது அவ்வளவு தான் வித்தியாசம்..’
என மனதினுள் நினைத்துக் கொண்ட ரகு, ஒருவாறு இருவரையும் வழியனுப்பி வைத்து விட்டு, மனைவியைத் தேடி ஓடினான்.
இருவரதும் சம்மதத்தையும் சந்தோஷமாய் மனைவியிடம் பகிர்ந்து கொள்ளவே அந்த ஓட்டம்.
