தோளில் சாயும் நேரம் 07

இரு மருங்கிலும் கிருஷ்ண துளசியும், கற்பூர துளசியும், கற்பூரவள்ளியும் வரிசையாக நடப்பட்டிருக்க, அதன் முடிவில் ஒரு பெரிய சிவப்பு நிறச் செம்பருத்தி மரம் நின்றிருந்தது.

சாதாரணமான நாளாக இருந்தாலோ, அல்லது வேறு யாரையும் அங்கு அழைத்து வந்திருந்தாலோ அந்த இடத்தை ரசனையோடு பார்த்திருப்பாள் விஷ்ணுவர்தனி.

ஆனால் அவள் இன்று இருந்த நிலைக்கு, அவளால் அந்த அழகிய இடத்தை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியவில்லை என்பது தான் உண்மை.

கன்னப் பக்கம் லேசாக வீங்கிப் போய்ப் பார்ப்பதற்கே பாவமாகத் தான் அமர்ந்திருந்தாள் வர்தனி.

அவளுக்கு இரண்டு தினங்களாகவே சரியான பல்வலி, நல்லெண்ணெயை வாயில் வைத்துக் கொப்பளித்து, கன்னப் பக்கமாக ஐஸ் ஒத்தடம் கொடுத்து என்று எப்படியோ நெட்டித் தள்ளியவள், மூன்றாவது நாளான இன்று மாலை, பல் மருத்துவ நிலையத்துக்கு ஓடோடி வந்து விட்டாள்.

முதன் முதலாக இப்போது தான் அந்த நிலையத்துக்கு வந்திருந்தாள் அவள்.

கன்னத்தைத் தாங்கியபடி அமர்ந்திருந்த வர்தனியிடம், அந்தப் பல் மருத்துவ நிலையத்தின் பெயர் அச்சிட்ட டீசர்ட் அணிந்த பெண் ஒருத்தி வந்து நின்றாள்.

வந்து நின்ற பெண்ணை நிமிர்ந்து பார்க்கக் கூடத் திராணி இல்லாதது போல அமர்ந்திருந்த வர்தனி மீது அந்தப் பெண் பதித்த பார்வை லேசாகப் பொறாமை கலந்தது போலத் தான் இருந்தது.

“உங்களை டொக்டர் வரட்டாம்..”
என்று தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் அவள் சொல்ல, இவளோ பல் வலியின் வீரியத்தில் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள்.

“ஹலோ உங்களைத் தான்.. கூப்பிடுறது காதுல விழேல்லயோ..”
என்று அந்தப் பெண் கொஞ்சம் சத்தமாகக் கேட்க, முன்னால் நிற்பவள் யாருடன் பேசுகிறாள் என்பது போல, மெல்ல நிமிர்ந்து பார்த்தாள் வர்தனி.

அப்போது தான் அவள் தன்னுடன் தான் பேசுகிறாள் எனப் புரிந்து கொண்டவள், அதற்குள்ளாகத் தன்னுடைய முறை வந்து விட்டதோ என்பது போல முன்னால் எட்டிப் பார்த்தாள்.

வரிசை அனுமார் வால் போல நீளமாகத் தான் இருக்க, அப்படியானால் தன்னை ஏன் மருத்துவர் அழைக்கிறார் என்ற எண்ணத்தோடு எழுந்து நின்ற வர்தனி முன்னால் நின்றிருந் பெண்ணைக் கேள்வியாகப் பார்த்தாள்.

உடனே மருத்துவரை நாடி வந்தவர்கள் அமருவதற்கு என்று இருந்த அந்த விசாலமான அறையில் இருந்து, இடப் பக்கமாக அமைந்திருந்த கதவை நோக்கி நடந்தாள் மற்றப் பெண்.

வர்தனியும் அவளுக்குப் பின்னாலேயே தான் போனாள்.

அந்தக் கதவைத் திறந்ததும் அலுவலகம் போல ஒரு அறை தெரியவே, அங்கே கிடந்த சோபாவில் வர்தனியை அமரக் கூடச் செல்லாமல் மீண்டும் வெளியே போய் விட்டாள் மற்றவள்.

‘டொக்டர் என்னை ஏன் கூப்பிட வேணும்.. இதென்ன அந்தப் பிள்ளை என்னைக் கூட்டிக்கொண்டு வந்து இங்க விட்டிட்டு போயிட்டுது.. இருக்கக் கூடச் சொல்லாமப் போட்டுது.. பல்லு வேற லேசாக் கொதிக்க வெளுக்கிட்டுது.. கன நேரம் நிக்க முடியுமோ தெரியேல்ல..’
எனத் திரும்பிப் பார்த்தவள் அப்போது தான் அதைக் கவனித்தாள்.

அது ஒரு மருத்துவர் உபயோகிக்கும் அலுவலகம் என்பது நன்றாகவே தெரிந்தது.

அந்த அலுவலக அறையின் வலது புறமாக இன்னொரு கதவும் இடது புறமாக இன்னொரு கதவும் இருந்தன.

அலுவலக மேசையில், மேசைக்கு அந்தப் பக்கம் பார்த்தபடி ஒரு குட்டிப் பிரேம் போட்ட புகைப்படம் கிடந்தது.

அந்தப் புகைப்படம் பாதி தெரிந்தும் பாதி தெரியாமலும் இருக்கவே, ஒரு எட்டு எடுத்து வைத்து அந்தப் படத்தை எட்டிப் பார்த்தவளது புருவங்கள் கேள்வியாக உயர்ந்தன.

ஏனென்றால் அந்தப் புகைப்படத்தில் நின்றிருந்தது குட்டிப்பெண் ஆருதிகா.

யோசனையோடு அப்படியே நின்றிருந்தவள் பின்னால்
“ஏன் நின்டு கொண்டு.. இருக்கலாமே..”
என்ற அழுத்தமான குரல் கேட்கவும் திடுக்கிட்டுப் போய்த் திரும்பிப் பார்த்தவள், அங்கே நின்றிருந்தவனைப் பார்த்ததும் விழிகளை விரித்தாள்.

மருத்துவர்கள் அணிந்து கொள்ளும் வெண்ணிட கோர்ட் அணிந்து, அங்கே நின்றிருந்தான் பிரேமகிருஷ்ணா.

அவன் நின்றிருந்த தோரணையே அவன் இங்கு தான் பணிபுரிகிறான் என்பதைச் சொல்லாமல் சொல்லியது.

பிரேமகிருஷ்ணா ஒரு வைத்தியன் என்பது வர்தனிக்குத் தெரியும் தான், ஆனாலும் எந்தத் துறையில் இருக்கிறான் என்பது அவளுக்குத் தெரியாது போலும், அப்படித் தான் இருந்தது அவளது பார்வை.

‘இவரு டென்டிஸ்ட் எண்டுறது நமக்குத் தெரியாதே.. இல்லாட்டிக்கு ரகுவண்ணா சொல்லியிருப்பாரோ என்னட்ட.. சில நேரம் சொல்லி இருப்பர் எண்டு நினைக்கிறன்.. நான் தான் இருந்த டென்ஷனுல மறந்திட்டன் போல.. ஏன் கூப்பிட்டு இருப்பாரு.. ஐயோ ஏதும் கதைக்கவோ.. நிண்டு நிதானமாக் கதைக்கிற அளவுக்கு என்ர நிலமை இல்லையே..’
என யோசனையோடு நின்றிருந்தவளைப் பிரேமகிருஷ்ணாவின் குரல் மீண்டும் அவளை அவனைப் பார்க்க வைத்தது.

“டியூட்டி நேரத்துல எனக்குக் கதைக்க நேரம் இருக்காதே.. அதனால டியூட்டி முடிஞ்சதும்..”
எனச் சொல்லிக் கொண்டு போனவனையே பார்த்திருந்தவளுக்கு அப்போது தான் ஒரு விசியம் விளங்கியது.

மூன்று தினங்களுக்கு முன்னால், தெருவில் அந்த அவனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிய நேரம், உங்களுடன் பேச வேண்டும் என்று சொன்னதும், வரும் ஞாயிறன்று பேசலாம் என இருவரும் முடிவெடுத்திருந்தனர்.

ஆனால் ஞாயிறு வரை காத்திருக்காமல் இனறே தான் இங்கே வந்து நின்றதும், ஒரு வேளை இன்றே பேசுவதற்காக வந்து விட்டாள் என அவன் நினைக்கிறானோ என்கிற யோசனை அவளுள் ஓடிக் கொண்டிருந்தது.

அவள் யோசனை செய்த விதம் சரியாகத் தான் இருந்தது.

வர்தனி பல் மருத்துவ நிலையத்தினுள் நுழையும் போதே, கிருஷ்ணா அவளைப் பார்த்து விட்டான்.

நிலையத்தின் உள்ளே இருந்து பார்க்கும் போது, வெளியே நடக்கும் விடயங்கள் உள்ளே தெரியும் படியும், உள்ளே நடப்பது வெளியே தெரியாத படியுமான கண்ணாடிகள் தான் அந்த இடம் முழுவதும் பொருத்தப் பட்டிருந்தன.

அப்படிப் பொருத்தப் பட்டு இருப்பதால், கஷ்டப் படாமல் வெகு ஈசியாக யார் வருகிறார்கள் யார் போகிறார்கள் என்பது உள்ளே இருந்து பார்க்கும் அவனுக்கு நன்றாகவே தெரியும்.

வர்தனியைக் கண்டதுமே தன்னிடம் தான் பேச வருகிறாள் என அவன் நினைத்து விட்டான் போல அதனால் தான் இப்படி வந்து நின்று பேசினான்.

அதனைப் புரிந்து கொண்டதுமே, வேகமாகக் கையைத் தூக்கிக் கன்னத்தைப் பொத்திக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள் வர்தனி.

அவளுக்கு இப்போது நிறையப் பேச முடியாத நிலை என்பதோடு, கொதிக்கும் கீழ்ப் பல்லை இறுக்கமாக மேல் பல்லால் அழுத்திப் பிடித்திருந்ததால் அவளால் வாயையும் திறக்க முடியவில்லை.

ஒரு முடிவோடு அங்கிருந்த மேசையைப் பார்த்தவள், அதில் ஓரமாகக் கிடந்த குறிப்புப் புத்தகத்தையும் பேனையையும் தூக்கி, அவனிடம் காட்டி இதில் எழுதலாமா எனச் சைகையில் கேட்டாள்.

அழுத்தமாக மூடியிருந்த அவளுடைய வாயைப் பார்த்துக் கொண்டே நின்றவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை, எழுதலாம் என்பது போலத் தலையை ஆட்டி வைக்க, அதில் எதையோ வேகமாக எழுதி விட்டு அவனிடம் நீட்டினாள் வர்தனி.

‘உங்கட டியூட்டி நேரத்தைக் குழப்ப நான் வரேல்ல.. எனக்குச் சரியான பல்லுக் கொதி.. அதைக் காட்டத் தான் வந்தனான்.. இங்க நீங்கள் வேலை செய்றீங்கள் எண்டு எனக்குத் தெரியாது..’
என அதில் எழுதி இருந்ததைப் பார்த்தவன், சட்டென நிமிர்ந்து அவள் முகம் பார்க்க, அவளோ அவனின் கரத்தில் கிடந்த குறிப்புப் புத்தகத்தை மீண்டும் பிடுங்காத குறையாக வாங்கி எழுதினாள்.

‘சுள் சுள்ளெண்டு வலிக்குது.. கொஞ்சம் என்னெண்டு பாத்துப் பல்லை அடைக்கிறதா இருந்தா அடைச்சு இல்லாட்டிக்கு பிடுங்கிறதா இருந்தாப் பிடுங்கி விடுங்கோ பிளீஸ்..’
அதைப் படித்தவனுக்கு அவளை அப்படியே விட மனமில்லை.

வெளியே அவளுக்கு முன்னால் வந்தவர்கள் நிறையப் பேர் வரிசையில் தான் நின்றிருந்தார்கள்.

இது அவனுடைய சொந்த மருத்துவ நிலையம் என்றாலும் கூட, இதுவரை தன் உறவு, நட்பு என யாருக்குமே அவன் சலுகை காட்டியதே இல்லை.

மூன்று கிழமைகளுக்கு முதல் பல் சம்மந்தமாகக் காட்டுவதற்கு இங்கே வந்திருந்த அவனுடைய தாயார் அருந்தவராணி கூட, வரிசையில் நின்று வரிசை ஒழுங்கில் தான் காட்டி விட்டுப் போயிருந்தார்.

அவன் நினைத்திருந்தால்
‘சொறி.. இந்த மாதிரி நடுவுல பாக்க ஏலாது.. வரிசையாத் தான் வர வேணும்..’
என்று சொல்லியிருக்கலாம் தான், ஆனால் அவளுடைய முகத்தை அப்படி அவனால் ஏனோ பார்க்க முடியவில்லை என்பதால் உள்ளே அழைத்துப் போய் விட்டான்.

பிரேமகிருஷ்ணா தவிரவும் இரண்டு வைத்தியர்கள் அங்கே பணி புரிவதால், அவன் அவளை அழைத்துப் போவதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் தான்.

ஆனாலும் அங்கே பணி புரியும் பெண்கள் ஒரு சிலர், அவனோடு சிகிச்சை நிலையத்துக்குள் போனவளைக் குறுகுறுவெனப் பார்த்து வைத்தார்கள்.

ஏனென்றால் அங்கு பணி புரியும் பல பெண்களுக்கு அவன் கனவுக்கண்ணனாக இருப்பது உண்மை.

அவன் சாதாரணமாகப் பெண்கள் யாரும் பல் விசயமாகச் சிகிச்சை பெற வந்தால், ஃபிரீயாக இருந்தால் கூட மற்றைய மருத்துவர்களிடம் தான் அனுப்பி வைப்பான்.

அவன் பெண்களோடு முகம் கொடுத்துக் கூடப் பேசுவதில்லை, யாரேனும் வலிய வந்து வணக்கம் வைத்தாலும், முகத்தைப் பார்க்காமலேயே தலையசைப்போடு கடந்து போய் விடுவான்.

அதிலும் அவனுக்குத் திருமணம் ஆகவில்லை என்பது வேறு அங்கிருந்த எல்லோருக்குமே தெரியும்.

அப்படி இருக்கையில் ஒரு பெண்ணை, அதுவும் கல்யாணம் ஆகாத பெண்ணை, இப்படி அழைத்துக் கொண்டு உள்ளே போனால் மற்றப் பெண்கள் வியப்பாகவும் குறுகுறுவெனவும் பார்ப்பார்கள் தானே.

அதிலும் கொஞ்சம் முதல் வர்தனியை அழைத்து வந்து உள்ளே விட்டுப் போன பெண், மற்றைய ஸ்டாப் ஒருத்தியிடம் ஆதங்கமாகப் பேசிக் கொண்டிருந்தது வேறு வர்தனியின் காதுகளில் விழுந்து விட்டது.

“யாருனே தெரியேல்லையடி.. டொக்டர் தான் கூட்டிக் கொண்டு வந்து உள்ள இருக்க வைக்கச் சொன்னவர்.. இப்ப பாத்தா வேற பொம்பிளைப் பிள்ளையள மறந்தும் உள்ள கூப்பிடாதவர்.. இவளைக் கூட்டிக் கொண்டு போறார்.. தப்பா நினைக்கவும் முடியேல்ல.. ஏனெண்டால் மனுஷன் முற்றும் துறந்த முனிவனாச்சே.. பொம்பிளையள நிமிந்தே பாக்காது.. என்னவோ தெரியேல்ல அவளுல எனக்குப் பொறாமையாக் கிடக்குது.. அவளோட போகும் போது மட்டும் அவரிந்த முகம் கடுகடுனு இல்ல..”
என்று சொல்ல, அந்தப் பல் வலியிலும் வர்தனியின் முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.

அவன் உள்ளே அழைத்துப் போய், சாய்வாகப் படுத்துக் கொள்ளும் அந்தப் படுக்கை போன்ற டென்டல் செயாரில் படுக்கச் சொன்னதும், புடைவை முந்தானையை இழுத்துச் செருகி விட்டு ஏறிப் படுத்துக் கொண்டவள், படுத்தவாக்கிலே அவனுடைய முகத்தைப் பார்த்தாள்.

இப்போது வலி இருக்கவில்லை என்பதால், அவளுடைய விழிகள் அவன் முகத்தை மேய்ந்தன.

அந்த விழிகளில் இது என்னுடைய உடைமை என்கிற அர்த்தம் பொதிந்து கிடந்ததா இல்லையா என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page