ராத்திரி நேரத்துக்கே உரிய குளிர் காற்று நிதானத்தைத் தத்தெடுத்துக் கொண்டு மெதுவாக வீசிச்செல்ல, இரவில் மொட்டவிழ்ந்த பூக்களின் சுகந்தம் காற்றோடு சேர்ந்து வந்து நாசி தீண்டிச் சென்றது.
இருளில் அசைந்தாடிக் கொண்டிருந்த வெண்ணிற மலர்களைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த பிரேமகிருஷ்ணாவிடம் வாயெல்லாம் சிரிப்பாக வந்து நின்றார் வர்தனியின் தாத்தா.
“வாங்கோ தம்பி.. எப்புடிச் சுகம்.. விஷ்ணு வந்து வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்திருக்கிறார் எண்டு சொல்ல.. நான் யாரெண்டு யோசிக்காத குறை..”
“வணக்கம் தாத்தா.. நான் நல்லா இருக்கிறன்.. நீங்கள் எப்புடி இருக்கிறீங்கள்.. வர்தனிய இறக்கி விட்டிட்டுப் போகத்தான் வந்தன்..”
“ஓம் ஓம் காலுல ஏதவோ காயமெண்டு இறக்கி விட வந்தனிங்களாம் எண்டு பிள்ளையும் சொன்னாள்..”
“உங்களுக்கும் மூட்டுவலி எண்டு கேள்விப் பட்டன்.. இப்ப எப்புடி இருக்குது..”
“வயசாகீடுத்து தானே தம்பி.. இனி இப்புடித்தான் எல்லா வியாதியும் வந்து தங்கிற சத்திரம் மாதிரி ஆயிடும் உடம்பு.. ஆனா இப்ப கொஞ்சம் பரவால்ல மூட்டுவலி..”
“ம்ம்.. நீங்கள் நித்திரை கொள்ளுற நேரம் வந்து தொந்திரவு செய்திட்டனோ..”
“அட நித்திரை என்ன தம்பி நித்திரை.. வீட்டுக்கு யாரும் இப்புடி வாறதே ஒரு தனி சந்தோசம் தானே.. பிள்ளையிந்த பிரென்டுப் பிள்ளை மட்டும் நேரம் கிடைக்கிற நேரம் வந்து இருந்து கதைச்சிட்டுப் போகும்.. மற்றும்படி என்னைத் தேடி இங்க ஒருத்தருமே வாரேல்லத் தம்பி.. இப்பத் தான் நீங்கள் வந்து இருக்கிறீங்கள்.. எனக்கு நிறைய்ய சந்தோசம்.. அடிக்கடி வாங்கோ தம்பி..”
“ஓ.. அதுக்கென்ன தாத்தா இனி அடிக்கடி வாறன்.. இதுல இருக்கக்
குளிரா இருக்காதோ உங்களுக்கு..”
“குளிர் தான் தம்பி.. ஆனாப் பழகிப் போச்சுது எனக்கு..”
என இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போதே, தேநீர்க் கோப்பையோடு வந்து விட்டாள் வர்தனி.
ஒரு தட்டில் இரண்டு தேநீர்க் குவளைகளோடு, காலை லேசாக நொண்டிக் கொண்டு வந்தவளையே பார்த்திருந்தவன், வேகமாக எழுந்து போய் அவளுடைய கைகளில் இருந்த தட்டை வாங்கி வந்து அங்கிருந்த மேசையில் வைக்க, வர்தனிக்கோ இனம் புரியாத ஒரு சந்தோஷம்.
அவன் தனக்காய்ச் செய்கின்ற சின்னச் சின்னச் செய்கைகளைக் கூட அவள் இப்போதெல்லாம் ரசிக்கத் தான் செய்கிறாள்.
ஆனாலும் உள்ளூர ஒரு பெரிய நெருடல் அவளுக்கு, தன் மனதுக்குள் புதைந்து கிடக்கும் ஒரு விடயத்தை அவனிடம் ஒப்புவித்த பின்னர் தான் அவனுடனான தன் வாழ்வைப் பற்றியே யோசனை செய்ய வேண்டும். அது வரை பொறு மனமே என மனதுக்கும் கடிவாளம் போடத் தான் முயல்கிறாள் அவள்.
ஆனால் முயல மட்டும் தான் அவளால் முடிகிறதே தவிர, முயற்சி முடிவைத் தொடவே மாட்டேன் என்பது போல, தினம் தினம் பிரேமகிருஷ்ணா அவளது மனதில் உயர்ந்து கொண்டு தான் போகிறான்.
ஒரு வேளை தன் விடயம் அவனுக்குத் தெரிந்தால், இந்தக் கல்யாணம் நடக்காமல் கூடப் போகலாம் என்பதும் அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது.
ஆனாலும் உண்மையைச் சொல்லாது போனால் அவள் குற்றவுணர்வில் நிம்மதியற்ற வாழ்க்கை தான் வாழ வேண்டி வரும்.
“என்ன யோசனை பலமாக் கிடக்கு..”
பிரேமகிருஷ்ணா தான் கேட்டிருந்தான்.
திடுக்கிட்டுப் போய் அவனைத் திரும்பிப் பார்த்தவளுக்கு, நெற்றியோரம் லேசாக வியர்த்து விட்டிருந்தது.
அச்சோ இவன் ஒருத்தன் இங்கே இருக்கிறான் என்பது தெரியாமல் லூசு மாதிரி யோசனை செய்து கொண்டு நின்றிருக்கிறேனே என நினைத்தவள், சட்டென்று தாத்தாவின் பக்கம் திரும்பினாள்.
“தாத்தா போய் ரொம்ப நேரம் ஆச்சுது..”
மீண்டும் அவன் தான் பதில் சொன்னான்.
“ஒண்டும் யோசிக்கேல்ல..”
“ஒண்டும் யோசிக்காமல் தான் நான் கேட்டது கூடக் கேக்கேலையோ..”
“ஓ ஏதும் கேட்டீங்களோ.. எனக்குக் கேக்கேலையே..”
“ரெண்டு தடவை கேட்டனே.. ஏதவோ ரொம்பத் தீவிரமான யோசனையில இருந்த மாதிரி இருந்திச்சுது..”
“ஓ சொறீ.. என்ன கேட்டனீங்கள்..”
“இப்போ கால் நோவு எப்புடி இருக்குது எண்டு கேட்டன்..”
“கால் பரவால்ல.. கை தான் சரியா உளையுது..”
“கையும் அடி பட்டதால உளையுது எண்டு நினைக்கிறன்.. கொஞ்சம் சுடுதண்ணீல ஒத்தடம் குடுத்திட்டுப் படுத்தா நல்லா இருக்கும்..”
“ம்ம் செய்றன்..”
“அப்போ நான் வெளுக்கிடட்டுமோ..”
“ம்ம் போறீங்களோ..”
“போகத் தானே வேணும்..”
என்றவன் அவளுடைய முகத்தைத் தான் பார்த்தான்.
அவளுடைய முகத்தில் அவளின் வலி அப்பட்டமாகவே தெரிந்தது.
அந்த வலி அவளுடைய மனதின் வலி, ஆனால் அவன் அதை உடலின் வலி என்று புரிந்து கொண்டான் போலும், மெல்ல எழுந்து வாசல் பக்கம் திரும்பியவன், சில நொடிகள் அப்படியே நின்று விட்டான்.
அவன் அப்படி நிற்பதை யோசனையாகப் பார்த்தபடி வர்தனியும் அப்படியே தான் நின்றிருந்தாள்.
பிரேமகிருஷ்ணா என்ன நினைத்தானோ தெரியவில்லை, நிதானமாக அவளருகே வந்தவன், லேசாக அவளுடைய தலையை வருடி,
“ஒரு ரெண்டு நாள் சரி வேலைக்கு லீவு போட்டிட்டு ரெஸ்ட் எடுத்தால்.. நோவு எல்லாம் சரியாயிடும்டா.. நான் போயிட்டு வாறன்..”
என்று சொல்ல, வர்தனியின் கண்களில் முணுக்கென்று கண்ணீர் எட்டிப் பார்த்தது.
அவன் அதைக் காணாமல் பெரும்பாடு பட்டு அதை உள்ளிழுத்தவள், மெல்ல அவனை ஏறிட்டுப் பார்க்க, ஒரு தலையசைப்போடு அதற்குமேல் நிற்காமல் போய் விட்டான் அவன்.
அவன் வெளியே போய்க் காரில் ஏறி, காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து செல்லும் வரை கூட அப்படியே தான் நின்றிருந்தாள் வர்தனி.
மனதினுள் ஏகப்பட்ட எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்க, பெருமூச்சு விட்டபடி திரும்பியவள் சுவர்க்கடிகாரத்தைப் பார்த்து விட்டுத் திடுக்கிட்டுப் போனாள்.
அதே நேரத்தில் காரைச் செலுத்திக் கொண்டிருந்த பிரேமகிருஷ்ணாவும் தன் கைக்கடிகாரத்தைத் தான் பார்த்தான்.
அதில் பச்சை ஒளியில் தெரிந்த நேரம் அவனை மெல்லப் புன்னகைக்க வைத்திருந்தது.
இப்படி வெளியே ஒரு வீட்டில் நேரம் போவது கூடத் தெரியாமல் இருந்து பேசி விட்டு வருவது எல்லாம், எப்போதோ முடிந்து போன விடயங்களாக இருக்க, அது மீண்டும் புதுப்பிக்கப் படுகிறது.
புன்னகை முகம் மாறாமலேயே வீட்டினுள் நுழைந்த மகனை விசித்திரமாகப் பார்த்தார் அருந்தவராணி.
அப்போது தான் தூக்க கலக்கத்தோடு
“அக்கா நேரம் பத்தரையைத் தாண்டுது.. இந்தக் கிருஷ்ணாப் பெடியன் ஏன் இன்னும் வரேல்ல..”
என்று கொண்டு வந்த செல்வி, உள்ளே வந்து கொண்டிருந்த கிருஷ்ணாவோடு மோதிக் கொண்டு கீழே விழப் போக, சட்டென்று அவரைப் பிடித்து விட்டிருந்தான் அவன்.
“இந்தப் பொம்பிளைப் பிள்ளையளே இப்புடித் தான்.. நடக்கத் தெரியாம வந்து மோதிக் கொண்டு நிக்கிறது..”
என்று கொண்டே தன் சித்தியை நேராக நிறுத்தி விட்டு உள்ளே போனவனை, இரண்டு பெண்மணிகளும் ஒரே நேரத்தில் வித்தியாசமாகப் பார்த்து வைத்தார்கள்.
“ஏன்டி உவனுக்கு அப்புடி எத்தினை பொம்பிளைப் பிள்ளையளைத் தெரியுமாம் எண்டு கேள்.. அப்புடி எத்தினை பேர் வந்து மோதிச்சினம் எண்டு அதையும் கேள்..”
“அதை விடக்கா.. அவன்ர முகத்தைப் பாத்தியோ..”
“பாத்தன் பாத்தன்.. துரை சிரிச்சுக் கொண்டே போறாரு..”
“சிரிச்சா எவ்வளவு அழகா இருக்கிறான் இவன்.. சும்மாவே இவனுக்கு நாப்பத்தாறு வயசு எண்டு கற்பூரம் அடிச்சுச் சொன்னாலே ஒருத்தரும் நம்பாதுகள்.. பத்து வயசு இளமைக்காரன் மாதிரி இருப்பான்.. இப்ப பாக்க இன்னும் வடிவாக் கிடக்குது..”
“அது என்னவோ உண்மை தான்.. ஆனா அவன் சிரிக்கவே மாட்டன் எண்டுறானே..”
“வழமையா சிடுசிடெண்டு வாற பெடியன் இண்டைக்குச் சிரிச்சுக் கொண்டு வாறதே ஒரு மாற்றம் தானேக்கா..”
“நீ சொல்றதும் சரி தான்..”
“சரியக்கா வா.. நேரமாச்சு நித்திரையைக் கொள்ளுவம்.. கன நேரம் குளிருல நிக்காத எண்டு சொன்னாக் கேக்குறியோ நீ..”
எனத் தன் தமக்கையை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தார் செல்வி.
இங்கே தன்னுடைய அறைக்குள் புகுந்த பிரேமகிருஷ்ணா, அலுப்புத் தீரக் குளித்து விட்டு, இரவு நேர உடையணிந்து வெளியே வந்தான்.
அவனுடைய அறைக்குள் இருந்த சிறிய கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள் ஆருதிக்குட்டி.
வழமை போலக் குழந்தையின் முகத்தை வாஞ்சையோடு சிறிது நேரம் பார்த்தவன், மெல்லப் படுக்கையில் விழுந்தான்.
வழமையாக ஒன்பது மணிக்கெல்லாம் படுக்கைக்கு வந்து விடுபவன், தூக்கம் வந்தாலும் வரா விட்டாலும் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு விடுவான்.
இன்று படுக்கைக்கு அவன் வந்த நேரம் பதினொரு மணியைத் தாண்டி விட்டிருந்தது.
மூடிய கண்களுக்குள் ஒருத்தியின் அந்த அமைதியே உருவான முகம் தான் வந்து போனது.
அப்படியே கிடந்தவன் எப்போது தூங்கினானோ தெரியவில்லை காலையில் எழுவதற்கு வழமையை விடவும் அதிக தாமதமாகி விட்டிருந்தது.
நேற்றைய நினைவுகளை மீட்டியபடி குளியலை முடித்து வெளியே வந்தவனுக்கு, இப்போது வர்தனிக்குக் காயம் எப்படி இருக்கிறது என்பதைக் கேட்க வேண்டும் போல ஒரு உந்துதல் ஏற்படவே, அலைபேசியை எடுக்க உள்ளே போனான்.
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல வர்தனியிடம் இருந்து அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.
வேறென்ன நன்றி என்று டைப் செய்து அனுப்பியிருந்தாள்.
சில நொடிகள் அப்படியே நின்றிருந்தவன், வர்தனிக்கு அழைத்து விட்டிருந்தான்.
எடுத்த எடுப்பிலேயே உடல்நிலையைத் தான் விசாரித்தான், அதன் பின்னர் தான் எதற்காக எடுத்தேன் என்பதைத் தெரிவித்தான்.
“இப்ப எப்புடி இருக்கு.. பெயின் குறைஞ்சிட்டுதோ.. குறையாட்டிக்கு டொக்டரை ஒருக்காப் பாப்பம்..”
“இப்ப பரவாயில்ல.. விடிய எழும்பவுமே கொஞ்சம் குறைஞ்ச மாதிரித் தான் இருக்கு..”
“சரி இன்டைக்கு டியூட்டிக்குப் போறதோ..”
“இன்டைக்கு லீவு.. நீங்கள்..”
“நானும் போகேல்ல..”
“ஏன் என்னாச்சு..”
“கொஞ்சம் கதைக்க வேணும்.. அது தான் லீவு போட்டிட்டன்.. சில விசியங்களைக் கதைச்சுத் தெளிவு படுத்திறது நல்லம் எண்டு நினைக்கிறன்.. அதோட ஃபோனில கதைக்கிறத விடவும் நேரில கதைக்கிறது பெட்டர்..”
“ஓ.. எங்க வரட்டும்..”
“வர எல்லாம் வேண்டாம்.. நானே லஞ்ச் டைம் வந்து கூட்டிக் கொண்டு போறன்..”
“அப்போ ஓகே.. நான் ரெடியாகி நிக்கிறன்..”
“ம்ம்.. ஓகே..”
என்றவன் அழைப்பைத் துண்டித்திருக்க, இங்கேயோ வர்தனிக்கு இருப்பே கொள்ளவில்லை.
அவள் பேச வேண்டும் என்று சொன்ன நாளும் நேரமும் அப்படியே தான் இருக்கிறது.
ஆனால் அவனோ பேசுவதற்கு விடுமுறை வரைக்கும் காத்திருக்காமல், லீவு போட்டே பேசுவதற்கு முயல்கிறானே, அது நல்ல விடயம் தான் பார்க்கலாம்.
பேசப் போகும் விடயம் என்னவாக இருக்கும், அது தான் ஏற்கனவே ஆருதி விசயமும் அந்தக் காதல் தோல்வி விசயமும் பற்றிச் சொல்லியாகி விட்டதே, வேறென்ன என யோசனை செய்தாள்.
அதே நேரம் தன் விசயத்தை எப்படிச் சொல்வது என்கிற அடுத்த யோசனை வந்து குந்திக் கொண்டது, கூடவே முடிவு என்னவாக இருக்கும் என்கிற கலக்கமும் ஒட்டிக் கொண்டது.
