தோளில் சாயும் நேரம் 11

மழை நாட்கள் லேசாகப் பின்னுக்குத் தள்ளப்பட, நண்பகல் எனும் பெயரில் சூரியன் பூமியைச் சுட்டெரித்துக் கொண்டிருந்தான்.

வெயிலும் கொஞ்சம் அதிகமாக இருந்ததால், மதிய உணவு உண்ணும் நேரம் வந்த போதும் கூட, வர்தனியால் சாப்பிடவே முடியவில்லை.

பிரேமகிருஷ்ணா எதைப் பற்றிக் கதைக்கப் போகிறானாக இருக்கும் என்கிற பரபரப்பு, அவளுக்குப் பசியுணர்வையே மந்திக்கச் செய்து விட்டிருந்தது.

அதோடு யாரேனும் நம்மிடம் வந்து உன்னிடம் கொஞ்சம் முக்கியமான விடயம் பேச வேண்டும் என்றால், என்னவாக இருக்கும் என்கிற பரபரப்பு இயல்பிலேயே நமக்குத் தோன்றும் அல்லவா.

தாத்தா சாப்பிட்ட பின்னர் பத்து நிமிடங்களில் எல்லாம் தூங்கப் போய் விடுவார் என்பதால், அவரைத் தொந்திரவு செய்யாமல் வந்து வாசலைப் பார்த்த வண்ணம் அமர்ந்து கொண்டாள் வர்தனி.

வாசலில் ஏதாவது வாகனச் சத்தம் கேட்டாலே அவளுள் ஒரு மெல்லிய படபடப்புத் தோன்றத் தான் செய்தது.

பிரேமகிருஷ்ணாவும் லஞ்ச் டைம் என்று சொல்லியிருந்தானே தவிர, குறிப்பாக இத்தனை மணிக்கு வருவேன் என்று சொல்லியிருக்கவில்லை.

அவளுக்கு ஒவ்வொரு கணமும் கனமாகக் கனத்துப் போய்க் கடக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்தது.

நேரமோ யாருக்காகவும் காத்திருக்காமல் ஓடி மறைய, மதிய உணவைத் தாண்டி நேரம் மெல்ல நகர்ந்து நான்கு மணியில் வந்து நின்றது.

‘லஞ்ச் டைமுக்கு வாறன் எண்டு தான சொன்னவர்.. இன்னும் வரேல்லயே வர்ர பாதையில ஏதும் பிரச்சினையா இருக்குமோ.. என்ன செய்யிறது எதுக்கும் ஒருக்கா ஃபோன் எடுத்துப் பாப்பமோ..’
என வர்தனி யோசனை செய்யும் போதே இங்கே பிரேமகிருஷ்ணாவின் இடத்தில் இன்னுமொரு விடயம் நடந்தேறிக் கொண்டிருந்தது.

வழமை போல இயல்பியேலேயே வெளியே கிடந்த ஊஞ்சாலில் ஆடிக் கொண்டிருந்தாள் ஆருதி.

குழந்தை அவ்வளவாக ஒருவருடனும் ஒட்டிக் கொள்ள மாட்டாள் என்பதோடு, அந்நிய சத்தங்களைக் கேட்டால், காதுகளைப் பொத்திக் கொண்டு அங்கிருந்து ஓடப் பார்ப்பாள் இல்லாது போனால் அப்படியே கீழே அமர்ந்து விடுவாள்.

வர்தனியிடம் லஞ்ச் டைமுக்கு வந்து அழைக்கிறேன் எனச் சொல்லியிருந்த பிரேமகிருஷ்ணா, அவளின் இல்லம் செல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் தான் அந்தச் சத்தங் கேட்டது.

ஆருதி வர மாட்டேன் என்பதை ‘போ மாட்டன் போ மாட்டேன்’ என்று இரண்டு முறை கூறுவாள்.

அதே போலவே அது வரையிலும் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையிடம் இருந்து “போ மாட்டன் போ மாட்டன்..”
என்ற சத்தம் வரவே, சிறு யோசனையோடு வேகமாக வெளியே வந்த பிருமகிருஷ்ணாவின் முகமோ, இரத்தப் பசை இல்லாமல் இறுகிப் போனது போல ஆகி விட்டிருந்தது.

யாரிடமும் இனிமேல் குழந்தையைக் காட்டக் கூடாது, யாருடைய நிழல் இனிமேல் குழந்தை மீது விழக் கூடாது என நினைத்திருந்தானோ அவர்களின் ஆட்கள் குழந்தையை வலுக்கட்டாயமாகத் தூக்க முயன்று கொண்டிருந்தார்கள்.

எப்போதுமே ஆருதிக்குப் பக்கத்தில் யாரேனும் ஒருவர், ஏதாவது ஒரு வேலையைச் செய்தபடி அவளைக் கவனித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

வெளியே செல்வதற்காகத் தயாராகுவதற்குப் பிரேமகிருஷ்ணா உள்ளே வரும் போது, குழந்தையைப் பார்த்தபடி அருந்தவராணி தான் துணியைக் காயப் போட்டுக் கொண்டிருந்தார்.

இப்போதோ அவரையும் காணவில்லை, தாய் எங்கே தான் போய்த் தொலைந்தார் என்கிற கடுப்பு அவனுக்கு ஏகத்துக்கும் இருக்கவே,
“அம்மா..”
என அவன் அழைத்த சத்தத்தில் புவிநடுக்கம் வராதது தான் குறை.

மகனது உச்சஸ்தாயியான குரலில் அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்த அருந்தவராணிக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை.

பின்னர் தான் குழந்தையை வலுக்கட்டாயமாகத் தூக்கிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்தார்.

அவ்வளவு தான் சாந்த சொரூபியான பெண்ணின் உடம்பில் பத்திரகாளி குடி கொண்டது போல, ஆவேசமாகிப் போனவர் வேகமாகப் போய்க் குழந்தையை வாரியணைத்துக் கொண்டு, குழந்தையைத் தூக்க முயன்றவளை எட்டி ஒரு உதை விட்டார்.

குழந்தையை வலுக்கட்டாயமாகத் தூக்கி வர முயலும் போது, வீட்டில் இருக்கும் வயதான பெண்கள் ஏதாவது புலம்பிச் சத்தம் போடக் கூடும் எனத் தான் வந்தவள் நினைத்திருந்தாள்.

அதோடு இன்னொரு நினைப்பும் இருந்ததால் தான், இத்தனை தைரியமாக வீட்டினுள் நுழைந்ததும் கூட.

அதாவது பிரேமகிருஷ்ணா தன்னுடைய டியூட்டிக்குச் சென்றிருப்பான், அதனால் வயதான பெண்மணிகளை அதட்டி உருட்டிக் குழந்தையைத் தூக்கி வந்து விடலாம் என்கிற எண்ணம்.

ஆனால் இங்கே அனைத்துமே தலைகீழாகத் தான் இருந்தது.

அதிலும் வெறி வந்தவர் போல ஓடி வந்த அருந்தவராணி தன்னை அப்படித் தள்ளக் கூடும் என வந்தவள் சுத்தமாக எதிர்பார்க்கவே இல்லை.

அருந்தவராணி தள்ளி விட்ட வேகத்தில் பக்கத்தில் கிடந்த களிமண்ணுக்குள் போய் முகத்தை மோதிக் கொண்டு விழுந்தாள், அதுவரை குழந்தையைத் தூக்க முயன்றவள்.

ஒருவாறு சுதாரித்துக் கொண்டு எழுந்தவள் அருந்தவராணி மீது கைவைக்கப் போக, அவ்வளவு தான் அவளுடைய கைகள் நடுக்கத்தில் அந்தரத்தில அப்படியே நின்று விட்டிருந்தது.

எல்லையில் காவலுக்கு நிற்கும் ஐயனார் போல, கோப முகமாக வந்து குறுக்கே நின்றிருந்தான் பிரேமகிருஷ்ணா.

வந்திருந்தவளுக்குப் பிரேமகிருஷ்ணா பற்றி நன்கு தெரியும்.

அவன் எல்லாம் வாயைத் திறந்து எதுகுமே சொல்லத் தேவையில்லை, ஒற்றைப் பார்வை பார்த்தால் மட்டுமே போதும், அந்த இடமே கல்லெறி பட்ட காகக் கூட்டம் போலக் கணத்தில் ஆளில்லாத இடமாக ஆகி விடும் என்பது தான் உண்மை.

அதிலும் அவன் அங்கே நிற்கக் கூடும் எனக் கொஞ்சமும் எதிர்பாராமல் பெரிய இவள் போலத் துணைக்கு இருவரை மட்டுமே அழைத்து வந்தவளுக்கு, அவனுடைய பார்வையில் குளிர்க் காய்ச்சல் வராத குறை.

பிரேமகிருஷ்ணா நிதானமாக அவர்களருகே நின்று தன் அலைபேசியில் யாரிடமோ பேச, அவன் யாரிடம் பேசுகிறான் எனப் புரிந்த அந்தப் பெண்ணோ, அடுத்து என்ன செய்வது என்பது போலப் பேயறைந்தபடி நின்றிருந்தாள்.

அவன் அலைபேசியில் அழைத்துப் பேசுவது காவல்துறையினரிடம் என்பதை அறியாத அளவுக்கு அவளும் ஒன்றும் சின்னப்பிள்ளை இல்லைத் தானே.

இப்போது வந்த அந்தப் புதியவளின் நிலை தான் படு மோசமாக இருந்தது.

இதே ஒரு மாதத்திற்கு முன்னால் வந்திருந்தால் பிரேமகிருஷ்ணாவின் பதிலடியே வேறாக இருந்திருக்கும்.

குழந்தையைத் தூக்கிச் செல்ல வந்த பெண்ணுக்குத் துணைக்கு வந்து ஆண்களை, இரண்டு தட்டுத் தட்டி மாவுக்கட்டுப் போடப் புத்தூருக்குத் தான் அனுப்பி வைத்திருப்பான்.

ஆனால் இப்போது இருக்கும் பிரேமகிருஷ்ணா அமைதி விரும்பி ஆகி விட்டதோடு, அவன் இப்போது தான் ஒருத்தியைப் பார்க்க மிகவும் ஆவலாகக் கிளம்பிக் கொண்டிருக்கிறானே, அதனால் அவன் அடிதடியை விரும்பவில்லை என்பது தான் உண்மை.

சீக்கிரமாக உள்ளே வந்த இந்த மூன்று பேர் கொண்ட குழுவை அப்புறப் படுத்தி விட்டு, அவன் பார்க்க வேண்டியவளைப் பார்க்கப் புறப்பட வேண்டும் அல்லவா.

ஆருதியின் பெரியப்பன் காவல்துறைக்கு அழைக்கிறானே, அவர்கள் வந்தால் தன் நிலமை என்ன ஆகும் என்ற பதட்டம் வந்திருந்தவளுக்கு மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.

இவன் காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்து விடுவான் என்கிற பயத்தில், இங்கிருந்து வெறுங் கையோடு போனால், அங்கே இருக்கின்ற குழந்தையின் சித்திக்காரி தன்னை உயிரோடே புதைத்து விடுவாளே என்கிற பயம் புதிய பெண்ணின் முகத்தில் அப்பட்டமாகவே தெரிந்தது.

அதற்குள் வெளியே கேட்ட சத்தத்தில் அருந்தவச்செல்வியும் அங்கே வந்து விட்டிருந்தார்.

“என்னக்கா சத்தம்.. யார் இது புதுசாக் கிடக்குது.. என்ன ஏன் ஒரு மாதிரி நிக்கினம் ஏதும் பிரச்சினையோ..”

“வா செல்வி வா.. ஆக்கள் யாரெண்டு தெரியுதோ கிருஷ்ணா வீட்டுல இல்ல எண்டு நினைச்சுக் கொண்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு போக வந்து இருக்கினம்..”

“என்னக்கா சொல்லுறாய் உண்மையாவோ.. அப்ப அவளோ ஆள் அனுப்பி இருக்கிறாள்..”

“அவா தான் அனுப்பியிருக்கிறா.. வேறை யார் அனுப்புறது..”

“அவள் இன்னுமோ திருந்தேல்ல.. இது என்ன பழக்கம் ஒருத்தரும் இல்லாத நேரம் ஆக்களை விட்டுக் குழந்தையைத் தூக்குறது.. இதைப் பாத்தாக் குழந்தைக் கடத்தல் மாதிரி எல்லோ கிடக்குது..”

“மாதிரி எல்லாம் இல்ல செல்வி.. குழந்தைக் கடத்தலே தான்.. இன்டைக்கு ரெண்டுல ஒண்டு பாக்கிறது தான்..”

“ஓம் இண்டைக்கு ஒரு முடிவு கட்டித் தான் ஆக வேணும்.. நாங்களும் சண்டை வேண்டாம் எண்டு ஒதுங்கி ஒதுங்கிப் போனால் அவளுக்கு ஒரு இளக்காரமோ எங்களில..”

“குழந்தை ஏலாமல் பிறந்திட்டுது.. இதொரு புத்தி சுவாதீனமான குழந்தை எண்டு சொல்லீட்டு.. இன்னும் கேவலமாச் சொல்லக் கூடாத வார்த்தைகள் கேட்கக் கூடாத வார்த்தைகள் எல்லாத்தையும் சொல்லீட்டு.. குழந்தையை நடுத் தெருவில விடாத குறையா விட்டிட்டுப் போயிட்டு இப்ப வருகினம்..”

“அதுகும் எந்த மூஞ்சையை வைச்சுக் கொண்டு வாறாளாம்.. நல்லா இருந்த பெடியன்ர வாழ்க்கையை நாசமாக்கிப் போட்டு.. நடுவுல அமைதியா இருந்த மாதிரி அப்ப நடிச்சுத் தானே இருக்கிறாள் அக்கா..”

“அது ஒரு விஷக் கிருமி எண்டு தெரியாமல் நாங்கள் தான் அமைதியா இருந்திட்டம் எண்டு நினைக்கிறன்..”

“ஓமக்கா.. இனிக் கனவுல கூட அவள் இந்தப் பக்கம் வாறதைப் பத்தி நினைக்கவே கூடாது.. கிருஷ்ணா நீ பொலிசுக்குக் கூப்பிடு..”

“அவன் பொலிசுக்குத் தான் கூப்பிட்டுக் கதைக்கிறான் செல்வி.. நல்ல காலம் நான் பயந்த மாதிரி அவன் கையைக்கியை வைக்கேல்ல.. இல்லாட்டிக்கு ஏதாவது கதைகதையாச் சோடிச்சு என்ர பிள்ளையை இன்னும் காயப் படுத்தி இருப்பாளுகள்..”

“என்ர கிருஷ்ணாவை அவளால ஒண்டும் அசைக்க ஏலாது அக்கா.. என்ன நேரம் என்ன செய்ய வேணும் எண்டுறது அவனுக்கு நல்லாவே தெரியும்..”
என்ற செல்வி அந்தக் கலவரத்திலும் தன் அக்கா மகனை ஆதுரத்தோடு திரும்பிப் பார்த்தார்.

“சரி செல்வி இனி அவன் பாப்பான் மிச்சத்த.. நீ ஆருக்குட்டியை உள்ள தூக்கிக் கொண்டு போ.. குழந்தை பயந்திட்டுது பாரன்..”

“ஓமக்கா தாங்கோ.. என்ன சந்தோசமாப் பாட்டுப் படிச்சுக் கொண்டு இருந்த பிள்ளையை என்ன பாடுபடுத்தி வைச்சிருக்கிறாள் இவள்..”

“அது தான் எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வருகுது.. என்ர வீட்டுக்குள்ள கேட்டுக் கேள்வி இல்லாம வந்து நிண்டு கொண்டு அவாந்த கூத்தைப் பாரன்..”
அருந்தவராணியிடம் இருந்து ஆதங்கமாக வார்த்தைகள் வந்து விழுந்தன.

நடக்கின்ற விசயங்களைப் பார்த்துக் கொண்டு, அடுத்து என்ன செய்வது என்கிற குழப்பம் கொஞ்சம் கூடத் தெளியாமல் அப்படியே தான் நின்றிருந்தாள் வந்தவள்.

அவளை இந்த நேரத்தில் இங்கே அனுப்பி வைத்தது கீதாஞ்சலி.

அதாவது ஆருதியின் தாயின் தங்கையும், பிரேமகிருஷ்ணாவின் வாழ்வைப் புரட்டிப் போட்ட அவளுடைய முன்னாள் காதலியும் ஆன கீதாஞ்சலி.

ஒரு விசேட தேவை உடைய குழந்தை மீது, என்ன தான் அக்காளின் குழந்தையாக இருந்தாலுமே கீதாஞ்சலிக்குத் துளி கூட அன்போ அக்கறையோ இருக்கவில்லை என்பது தான் உண்மை.

பிரேமகிருஷ்ணா அழைத்ததும் ஐந்து நிமிடங்களில் அங்கே வந்து விட்டிருந்தனர் காவல்துறையினர்.

வந்த காவல்துறை அங்கே நின்றிருந்த பெண்ணையும் மற்ற இருவரையும் ஏற்றிக் கொண்டு, தங்களுடைய காவல்துறை நிலையத்துக்குச் செல்லாமல், கீதாஞ்சலி வீட்டை நோக்கிச் சென்றனர்.
 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page