தோளில் சாயும் நேரம் 12

மதில் சுவரில் வரிசையாக அமர்ந்திருந்த புளுனிக் குருவிகள் ஒன்று சேரச் சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தன.

அன்று சனிக்கிழமை என்பதால், அந்தச் சத்தங்களை எல்லாம் கேட்டபடியே துவைத்த உடைகளைக் காயப் போட்டுக் கொண்டிருந்தாள் வர்தனி.

நேரம் சரியாக நண்பகலைத் தொட்டுக் கொண்டிருந்தது, வெளி வாசலில் வாகனச் சத்தம் கேட்க, என்ன ஏது என்று கூட எட்டிப் பார்க்காமல் தன் வேலையில் மூழ்கிப் போயிருந்தாள் அவள்.

வெளி வாசல் கதவு திறக்கப்பட்டு, யாரோ நடந்து வரும் ஓசை கூட அவளுடைய காதுகளை எட்டவில்லை.

அவள் தான் நேற்றைய தினத்திலேயே அப்படியே நின்று விட்டிருந்தாளே.

பிரேமகிருஷ்ணா வருவதாகச் சொன்ன, வந்து அழைத்துச் செல்வதாகச் சொன்ன அந்த லஞ்ச் டைமிலேயே ஸ்தம்பித்து நின்று விட்டது போல ஒரு உணர்வு.

‘அவர் ஏன் நேற்று வரவில்லை..’

‘ஒருவேளை என்னோட கதைக்கப் போறன் எண்டு சொன்னதைப் பத்திக் கதைக்க இஷ்டம் இல்லையோ.. ஒரு வேகத்தில சொல்லீட்டுப் பிறகு வேண்டாம் எண்டு நினைச்சிட்டாரோ..’

‘ஆனாலும் வராததுக்கு ஒரு மெசேஜ் ஆவது போட்டுச் சொல்லி இருக்கலாம்..’

‘அவருக்குத் ஏதும் ஆகி இருக்குமோ எண்டுற பயத்துல ரகுவண்ணாக்கு எடுத்துக் கதைச்சுப் பாத்தால்.. அவர் சாதாரணமாத் தான் கதைக்கிறார்.. அதுலயே தெரிஞ்சிட்டுது அவருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை எண்டு..’

‘பின்ன ஏன் அவர் வரவே இல்ல..’

‘ஃபோன் எடுத்துப் பாத்தால் சுவிட்ச் ஓப் எண்டு வேற வருகுது..’

‘சரி அவருக்கு இங்க வர விருப்பம் இல்லாமல் இருக்குமா இருக்கும்..’

‘என்ன இருந்தாலும் ஒரு தகவல் சொல்லி இருக்கலாம்.. மனசே ஒரு மாதிரிக் கிடக்குது..’

‘இனி அதைப் பத்தி யோசிக்கவே கூடாது..’

எண்ண ஓட்டங்கள் அப்படியும் இப்படியும் ஓடிக் கொண்டிருக்க, தன் முன்னால் நிழலாடவும் திடுக்கிட்டுப் போய் நிமிர்ந்து பார்த்தாள் வர்தனி.

அவளுடைய எண்ணங்களின் நாயகனே அங்கே வந்து நிற்பதைப் பார்த்தவளுக்கு, ஒரு கணம் காண்பது கனவா நனவா எண்கிற எண்ணம் தான் வந்து போனது.

விழிகளை வெட்டி வெட்டி முழிக்கும் முயல்குட்டி போல நின்றிருந்தவளை, விழியெடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்த பிரேமகிருஷ்ணாவுக்கு ஒரு கணம் அவளிடம் சொல்ல வந்த விடயமே மறந்து தான் போனது என்று கூடச் சொல்லலாம்.

அதற்குள் உள்ளே இருந்து எட்டிப் பார்த்த சிவஞானப்பிரகாசம், சிரித்துக் கொண்டே அவனிடம் வந்து விட்டார்.

“அடடே தம்பிக்கு நூறு ஆயுசு.. இப்பத் தான் கொஞ்சம் முதல் பிள்ளை உங்களைப் பத்திக் கதைச்சுக் கொண்டிருந்தவள்.. பாத்தால் நீங்களே வந்து நிக்கிறீங்கள்..”
என்று அவர் சொல்ல, அப்போது தான் தனக்கு முன்னால் உண்மையிலுமே பிரேமகிருஷ்ணா வந்து நிற்கிறான் என்பது வர்தனிக்கு உறைத்தது.

அதையும் விடத் தான் இவரைப் பற்றி என்ன பேசிக் கொண்டு இருந்தேன் என்பதைத் தாத்தா இவரிடமே சொல்லி விடுவாரோ என்கிற பதட்டம் தொற்றிக் கொள்ளவே, வர்தனி தன் தாத்தாவைக் கலவரத்தோடு பார்த்தாள்.

அவரோ பேர்த்தியின் நிலை புரியாது
“நீங்கள் நேத்து வாறன் எண்டு சொல்லிப் போட்டு வரவே இல்லையாம்.. அதுக்கு அவர் ஏதும் வேலையில மறந்திருப்பர் எண்டு நான் சொல்ல.. இல்லையாம் அவருக்குத் தன்னோட கதைக்க விருப்பம் இல்லையாம் அது தான் வர மாட்டன் எண்டு கூடச் சொல்லாமல் நிண்டிட்டாராம் எண்டு ஒரே புலம்பல்.. அது கூடப் பரவாயில்லை பிடிக்காத மனுசனுக்கு என்னை எப்புடித் தாத்தா கல்யாணம் செஞ்சு வைக்கப் போறீங்கள் எண்டு அழாத குறை வேற..”
என்று தாத்தா ஒன்றும் விடாமல் அவள் தன்னிடம் வந்து புலம்பியதை அப்படியே ஒப்புவிக்கவே, முன்னால் நின்றிருந்தவனுடைய முகத்தை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியாமல் கைகளைப் பிசைந்தபடி அப்படியே நிற்றிருந்தாள் வர்தனி.

என்னவொரு சங்கடமான சூழல் இது, 
‘ஐயையோ இந்தத் தாத்தா இதை எல்லாம் சொல்லுறாரே.. அவர் என்ன நினைப்பார் இப்ப எப்புடிச் சமாளிக்கிறது.. இந்தத் தாத்தாட்டப் புலம்பினது பெரிய பிழையாப் போச்சுதே.. இந்த நேரம் இவர் வந்து நிப்பார் எண்டு தெரியாமல் புலம்பீட்டனே..’
எனக் கைகளைப் பிசைந்து கொண்டு குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்தவளையே தான் அப்போதும் பார்த்துக் கொண்டிருந்தான் பிரேமகிருஷ்ணா.

“வெய்யில்ல நிக்கிறீங்களே தம்பி.. உள்ள வந்து இருங்கோவன்..”
என்று சிவஞானப்பிரகாசம் சொல்லவே, நிதானமாக அவரிடம் திரும்பியவனோ
“தாத்தா.. உங்கடை பேத்திய நான் கொஞ்சம் வெளியால கூட்டிக் கொண்டு போயிட்டு வரட்டுக்குமோ.. கன நேரம் எல்லாம் மினக்கெட மாட்டன்..”
என மனப்பாடம் செய்து வைத்ததை ஒப்புவிப்பது போலக் கேட்டான்.

தன்னுடைய பேர்த்திக்கு வரனாக வருவதற்கு முன்னரே, சிவஞானப்பிரகாசத்துக்குப் பிரேமகிருஷ்ணாவை ஏற்கனவே தெரியும்.

ஒரு நல்ல பல் மருத்துவனாக, ஒரு நல்ல மகனாக, ஒரு நல்ல பெரிய தந்தையாக, ஒரு நல்ல தோழனாக என அவனுடைய பல கோணங்களைக் கண்கூடாகப் பார்த்த மனிதர் அவர்.

அதனாலோ என்னவோ ஏற்கனவே பிரேமகிருஷ்ணா மீது நல்லதொரு அபிப்ராயம் அவருக்கு இருக்கிறது.

இப்போது பேர்த்தியை அவன் வெளியே அழைத்துச் செல்லக் கேட்ட போது அவருக்கு மறுக்க வேண்டும் என்று நெல்முனையளவு கூடத் தோன்றவில்லை என்பது தான் உண்மை.

“அதுக்கென்ன தம்பி தாராளமாக் கூட்டிக்கொண்டு போயிட்டு வாங்கோ.. நான் கொஞ்ச நேரம் படுக்கப் போறன்.. பிள்ளை நீ போட்டு வா.. தாத்தா நித்திரை கொள்ளப் போறன்..”
என்று சொல்லி விட்டுத் தன் வேலை முடிந்து விட்டது என்பது போல அவர் போய் விட, அப்போதும் குனிந்த தலை நிமிராமல் தான் நின்றிருந்தாள் வர்தனி.

“நேத்தைக்கு வீட்டுல ஒரு சின்னப் பிரச்சினை.. அந்த டென்ஷன்ல என்னால வர ஏலாமல் போட்டுது.. என்ன தான் நடந்திருந்தாலும் நான் ஒரு மெசேஜ் ஆச்சும் போட்டு இருக்கத் தான் வேணும்.. அது மை மிஸ்டேக் தான்.. வெரி சொறி..”
என நேரடியாகவே பிரேமகிருஷ்ணா மன்னிப்புக் கேட்கவும், அவளுக்கோ ஐயோடா என்றாகிப் போனது.

மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவள்
“சொறி எல்லாம் வேண்டாம்..”
என்றாள் தனக்கே கேட்காத குரலில், அவள் தன் கைகளையே பிசைந்து கொண்டு நிற்பதையே பார்த்திருந்தவனும் பதிலுக்கு
“என்ன ஆனாலும் இந்தக் கல்யாணம் நடக்கும் வர்தனி.. அதுல நான் உறுதியா இருக்கிறன்.. சோ..”
என்று விட்டு மீண்டும் அவளுடைய முகத்தைப் பார்த்தான்.

அவன் அப்படிச் சொல்லக் கூடும் என்பதை எதிர்பாராதவளோ அவனை நிமிர்ந்து பார்க்க
“சோ.. வெளியில போய்க் கதைக்கலாமோ..”
என்றான் கேள்வியாக, இந்தச் சுடும் வெயிலிலா என்பது போல மேலே சூரியனைப் பார்த்தவளுக்கு, அவனுடன் பேசி விடுவது நல்லது என்றே தான் தோன்றியது.

ஏற்கனவே வெளியில் செல்வதற்கு என்று அணிந்திருந்த சுடிதாரோடு தான், துணிகளைக் காயப் போட்டுக் கொண்டு நின்றதால், அவன் அழைத்ததும் அப்படியே புறப்பட்டுச் செல்ல அவளுக்குத் தோதாக இருந்தது.

காரில் வர்தனியை ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டவனோ, நேராகப் பண்ணைக் கடற்கரைக்குத் தான் சென்றான்.

சுட்டெரிக்கும் வெயில் அவ்வப்போது குறுக்கே வந்த மேகங்களால் தணிய வேண்டிய சூழல் ஏற்பட்டதால், இருவரும் பண்ணைக் கடற்கரைக்கு வந்ததுமே, அந்த இடம் கொஞ்சம் மப்பாகத் தான் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தது.

குடை பிடிப்பது போல நிழல் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு மரத்துக்குக் கீழே போய் அமர்ந்து கொண்டவனைத் தொடர்ந்து போய்த் தானும் இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டாள் வர்தனி.

“நமக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முதலே என்னைப் பத்திச் சொல்ல வேணும் எண்டு எனக்குத் தோணிச்சுது.. என்ன தான் என்னைப் பத்திச் சில விசியங்களை ரகு சொல்லி இருந்தாலுமே அது நானா சொல்ற மாதிரி வராது தானே..”
என்று விட்டு வர்தனியைப் பார்த்தான் பிரேமகிருஷ்ணா.

அவளோ நீ சொல்லு ராஜா நான் கேட்கிறேன் என்கிற பாணியில் அப்படியே அமர்ந்திருக்க, தான் அவளிடம் சொல்ல நினைத்ததில் அவளுக்குத் தெரிந்த விசயம் தெரியாத விசயம் என அனைத்தையும் சொல்லத் தொடங்கினான் அவன்.

அப்போது பிரேமகிருஷ்ணாவுக்கு வயது இருபத்தெட்டு ஆரம்பமாகியிருந்த நேரம்.

பட்டப்படிப்பு எல்லாம் முடித்து விட்டு, அரச வைத்தியசாலையொன்றில் பல் மருத்துவனாக பணியில் அமர்ந்திருந்தான்.

அந்த நேரத்தில் அவனுக்கு நிறைய நண்பர்கள் இருந்தாலும், அவனுடைய மிகவும் நெருக்கமான நண்பனாக இருந்தவன் ரகு மட்டும் தான்.

இருவரும் பல்கலைக்கழகத்தில் அறிமுகமான நண்பர்கள் தான் என்றாலும் கூட அப்படி ஒரு நெருக்கம்.

இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் பழகியவர்களை விடவும், இரண்டு ஆண்டுகள் பழகியவர்களிடம் நல்லதொரு புரிதல் இருக்குமே,
சில உறவுகளுக்கு கால அளவு என்பது அத்தனை முக்கியம் இல்லை அல்லவா அப்படித் தான் இருவரதும் உறவும் நட்பும் இருந்தது.

பிரேமகிருஷ்ணாவுக்குப் புலம்புவதற்கு ரகு தேவையோ இல்லையோ, ரகு புலம்புவதற்குப் பிரேமகிருஷ்ணா கண்டிப்பாகத் தேவைப்பட்டிருந்தான் என்பது தான் உண்மை.

கிருஷ்ணா எப்போதாவது அபூர்வமாகத் தான் எதையாவது ரகுவிடம் பகிர்ந்து கொள்வான்.

அன்றும் அப்படித் தான் தன் நண்பனை அழைத்திருந்தான் கிருஷ்ணா.

“சொல்லுடா மச்சி.. புது ஹொஸ்பிடல் புது ஸ்டாப் எண்டு எப்புடிப் போகுது உனக்கு..”

“அதெல்லாம் பரவாயில்ல ரகு.. உனக்கு இப்ப நேரம் இருக்குதோ..”

“ஏன்டா கிருஷ்ணா என்ன விசியம்.. நேரம் இருக்குது தான்.. எனக்கு இப்ப பேஷன்ட் இல்ல..”

“நான் கொஞ்சம் உன்னோட கதைக்க வேணும் ரகு.. எனக்கு மண்டையே வெடிக்கிற மாதிரிக் கிடக்குது..”

“என்னடா ஏதும் பெரிய பிரச்சனையோ..”

“பெரிய பிரச்சனை எண்டு இல்ல.. ஆனாக் கொஞ்சம் குழப்பமாக் கிடக்குது.. ஒழுங்கா வேலையில எப்புடிச் சொல்லுறது போக்கஸ் பண்ண முடியல்ல..”

“சரி என்ன விசியம் எண்டு சொல்லு.. ஏதும் தீர்வு சொல்ல முடியுதோ எண்டு நான் பாக்கிறன்..”

“ரகு.. அது வந்து..”

“அட தயங்காமல் சொல்லு மச்சி..”

“எனக்கு ஒரு பிள்ளை புரபோஸ் பண்ணிச்சுடா..”

“வாவ் மச்சி வேற லெவல் போ.. அதிஷ்டக்காரன்டா நீ..”

“டேய் வந்தன் எண்டால் வெளுப்பன்டா உனக்கு.. அவனவனுக்கு இருக்கிற டென்ஷன் புரியாமல் லூசு மாதிரிக் கதைக்காத நீ..”
என்ற நண்பனது குரலில் என்னத்தை உணர்ந்தானோ ரகு அதற்கு மேல் தேவையற்ற பேச்சுக்கள் எதையும் பேசாமல், அவன் சொல்வதை மட்டும் காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தான்.

“சொறிடா கிருஷ்ணா.. இங்க எவளுமே நம்மளக் கண்டுக்கிறாளுங்க இல்லையா அது தான் உனக்கு ஒரு பிள்ளை வந்து புரபோஸ் பண்ணதும் கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டிட்டன்.. வெரி சொறிடா.. நீ சொல்ல வந்ததைச் சொல்லு.. நான் தேவையில்லாத கதை இனிக் கதைக்க மாட்டன்..”
என்று ரகு சொன்னதன் பின்னர் தான் பிரேமகிருஷ்ணா வாயையே திறந்தான்.
 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page