” கண்கள் இரண்டில் என் காதலை உணர்த்தி இதயத்தின் ஓசையை கொஞ்சம் சத்தமாக துடிக்க வைக்கிறேன் உனக்காக”
…. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…
பாகம் -16
நிதிஷா குடும்பத்தின் குல தெய்வக் கோவில் ஊரின் எல்லையில் இருக்கும் பச்சையம்மன். கோவிலைச் சுற்றி தோட்டங்கள் இருக்கும் முதலில் கோவில், கோவிலின் பின் பக்கம் என்று சுற்றி பார்த்து வந்தவன் “நிலா நிலா ” என்று பல முறை அழைத்துப் பார்த்தான். அவளின் குரல் எங்கேயும் கேட்கவில்லை. அங்கிருந்தவர்களிடம் கேட்க பார்க்கவில்லை என்றே பதில் அளித்தனர்.
என்ன செய்வது என்று புரியாமல் கருவறையில் வீற்றிருக்கும் அம்மன் முன் நின்றபடி கை கூப்பி அம்மனிடம் வேண்டுதல் வைத்தான்.
“என் நிலாவை நீ தான் மா கண்டுபுடிச்சு கொடுக்கணும். அவ இருக்குற இடத்தை எனக்கு காட்டு, நிதிஷா தான் அந்த இடியட் வருண் கிட்ட என்னமோ சொல்லி இப்டி பண்ணிட்டா, அவளுக்கு மட்டும் எதனா ஆச்சு நான் என்ன பண்ணுவேன்னே தெரியாது “
நிதிஷா மேல் உள்ள கோவத்தையும், நிலா மேல் இருக்கும் தன் அன்பையும் அம்மனிடம் சொல்லியவனுக்கு, தான் நிலாவை கடைசியாக எங்கு பார்த்தோம் என்று யோசித்தான்.
அவன் கண் மூடி இருக்க, அவன் தோளில் யாரோ தொடுவது இருக்க , நிலாவாக இருக்குமோ என்ற எண்ணத்தில் கண்கள் திறந்து பார்த்தான். கோவிலின் பூசாரி நின்று கொண்டிருந்தார்.
“கோவிலோட முன் பக்கமா பூந்தோட்டம் இருக்கு அங்க போய் பாரு, நீ தேடிட்டு இருக்குற பொண்ணு அங்க இருக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு ” சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்.
இவனுக்கும் அதே யோசனை தான், கோவிலின் முன் இருந்த போர்டில் நந்தவனத்திற்கு செல்லும் வழி என்று போடப் பட்டிருந்த இடத்தில் தான் நிலாவை பார்த்தது நியாபகம் வந்தது.
அங்கிருந்து நடந்தவன் கால்கள் கோவிலின் முன் பக்கம் இருந்த நந்தவனத்தின் முன்பு தான் நின்றது. கேட்டினைத் திறந்து உள்ளே சென்றான். பல வகையான பூக்கள் பல வண்ணங்களில் மாலை ஆகி விட்டதால் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொண்டே வந்தது.
சுற்றி ஒரு முறை பார்த்தவன் தான் நின்றிருந்த இடத்திலிருந்து பாதை தெரிய அப்படியே நடந்தான். அவன் இதயமோ “தடக் தடக் ” என ரயில் போல் ஓடிக் கொண்டிருந்தது.
இவன் இருக்கும் இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் பெரிய மரம் இருந்தது அதில் இருந்து சிவப்பு நிற பூக்கள் உதிர்ந்து கீழே மணல் போல் பரவி இருந்தது. மரத்தின் ஒரு பக்கத்தில் மஞ்சள் நிற ஆடை தெரிய, விழி விரித்து மீண்டும் பார்த்தான்.
யாரோ நின்றிருப்பது போல் தெரிகிறது. மறைந்து மறைந்து பார்ப்பது தெரிய “நிலா ” சத்தமாக அழைத்தான். மறைந்த உருவம் இவன் குரல் கேட்டதும் வெளியே நன்றாக தெரியும் படி முகத்தினைக் காட்டிட,
வெயிலில் அலைந்தவனுக்கு கிடைத்த மர நிழல் போல, யாரை இவ்வளவு நேரம் தேடினானோ அவள் பக்கம் தான் தன் நடையின் வேகத்தை அதிகரித்து அவளை நெருங்கும் நேரம் அவள் முகம் வாடி இருப்பது தெரிந்தது.
“நிலா ” அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே அழைத்தான்.
வாடி இருந்த முகம் தெளிவாக்க மியற்சி செய்தவள் “விஜய் ப்ளீஸ் கிட்ட வராதீங்க”
எதிர்பாரா அவள் வார்த்தையில் நின்றவன் “நிலா என்ன ஆச்சு ” பயத்துடன் கேட்டான்.
“அது….” சொல்லத் தயங்கியவள் முகம் அசௌகரியத்தில் இருந்தது உணர்ந்தவன்
“நிலா வீட்ல இருக்குறவங்க எல்லாரும் கிளம்பி போய்ட்டாங்க, உன்னை காணோம்னு தேடி அலைஞ்சு வந்திருக்கேன். எதுவா இருந்தாலும் சொல்லிடு ப்ளீஸ் “
“எனக்கு மேல போட்டுக்க டிரஸ் வேணும் “
நொடியும் தாமதிக்காது “என் ஷர்ட் ஓகே வா உனக்கு, கையில் வேறு எதுவும் இல்லை, அதனால் தான், தான் அணிந்திருந்த சட்டையில் கழட்டி அவள் முன்பு நீட்டினான் .
அதை வாங்கிக் கொண்டவள் “விஜய்,” இது வரை அவள் அவன் பெயரை எப்போதாவது அழைத்திருக்கிறாள் தான் அதில் ஒரு கர்வம் இருக்கும் திமிர் இருக்கும். இப்போது அவள் அவன் பெயரை அழைத்தது மென்மையாக தயக்கமாக அதில் உதவி வேண்டும் என்ற நோக்கமும் அடங்கி இருப்பது புரிந்து கொள்ள முடிந்தது அவனால்,
எப்போதடா அழைப்பாள் என்று காத்துக் கொண்டிருந்தவன் போல, அவளின் மென்மையான அழைப்பில் “தயங்காத டா எதுவா இருந்தாலும் சொல்லு மா, நான் தானே இருக்கேன் வேற யாரும் இங்க இல்லை” குழந்தையிடம் பேசுவது போல் கேட்டவனின் முகம் பார்த்தாள்
அதில் இவளுக்கான பாதுகாப்பும், உண்மையும் இருப்பது உணர்ந்தவள் “என் டிரஸ் இந்த மரத்துல மாட்டிக்கிச்சு, நான் இழுத்ததுல கிழிஞ்சிடுச்சு”
என்ன செய்வது என்று புரியவில்லை. இந்த இடத்தில் யாரை அழைத்து வருவது, இப்போது வேறு வழி இல்லை, என் உதவி தான் அவளுக்கு, அவளிடமே கேட்டு விடுவோம் அவள் சம்மதித்தாள் அவளை பத்திரமாக மீட்டு வீட்டில் விட்டுவிடலாம் மனதில் நினைத்தவன்
“நிலா நான் போய் கூட்டிட்டு யாரையாவது வரவா “
நேரம் ஆக ஆக அவளுக்கு பயம் தொற்றிக் கொள்ள, “விஜய் நீங்களே ” கூச்சம் அவளின் வார்த்தைகளை விழுங்கிக் கொண்டது.
“நிலா நான் கேட்குறதுக்கு மட்டும் கரெக்ட்டா பதில் சொல்லு “
“ம்ம் ” நிலாவிடம் ஒற்றை வார்த்தை மட்டும் பதிலாக வந்தது.
“மரத்துல உன் சுடி மாட்டி இருக்கா, அதுல ஆணி இல்லை வேற ஏதாவது இருந்துச்சா, எப்படி மாட்டுச்சு சொன்னா தான் நான் வேற வழி யோசிக்க முடியும் “
“நான் கீழ இருந்த பூவை எடுத்துட்டு இருந்தேன். அப்போ ஏதோ சத்தம் கேட்டுச்சு இங்க இருந்தவங்க வெளிப்பக்கமா பயந்து ஓடிட்டாங்க, நான் வேகமாக திரும்புனத்துல கல்லுல இடிச்சிக்கிட்டு மரத்துல சாஞ்சிட்டேன் அதுல ஆணி இருந்திருக்கு, அது டிரஸ்ல நல்லா மாட்டிக்குச்சு, சுடி கிழிங்கிடுச்சு பட் ” அவளால் சொல்ல முடியாமல் போக, அவனுக்கு புரிந்து விட்டது
“சரி நிலா நான் கண்ணை மூடிட்டு ஆணில இருந்து எடுத்து விடுறேன், நீ என் ஷர்ட் போட்டுக்கிட்டு குரல் கொடு சரியா “
அவளும் சரி என்றாள், அவளிடம் நெருங்கி வந்தவன் கண்களை மூடிக் கொண்டு, அவளின் பின் பக்கம் சென்றான், மரத்தில் கையினை வைத்து சிறிது நகர்த்திக் கொண்டே வர அவளின் உடை மாட்டி இருந்தது உள்ளாடையும் சேர்ந்தே மாட்டி இருக்க அதனால் தான் அவளால் நகர முடியவில்லை, தன் பலம் கொண்டு எடுத்து விட்டவன்,
“இப்போ பாரு மா ” என்றான் கண்கள் மூடிய படி தான் இருந்தது. நகர்ந்து வந்தவள் விஜயின் சட்டையை போட்டுக் கொண்டவள்
“கண்ணை திறங்க ” என்று சொன்னதும்,
கண்கள் திறந்தவன் கண்டது தன் சிவப்பு நிற சட்டையை அணிந்து கொண்டு சிவப்பு நிற ரோஜாப்பூ போன்று நிற்பவளைத்தான் அவளின் உருவத்தை கண்களில் நிரப்பிக் கொண்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
ஆரண்யாவின் கைபேசி ஒலிக்க, அதை வர்மா தான் எடுத்தான். அவள் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் பார்வையை எதிர் கொண்டு அலைபேசியை காதில் வைத்து பேச
“நான் வருண் பேசுறேன் ஆரண்யா ” அந்த குரலைக் கேட்டவன், யார் இது என்பது போல யோசித்தான்.
“என்ன ஆரண்யா பார்ட்டில பார்த்தோம், நேத்து தான் உன் நம்பர் கிடைச்சது, பேசுனோமே, இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன கூட உனக்கு டெக் ஸ்ட் பண்ணேனே, நீ கூட எங்க பாஸ் பார்த்துட்டு வரேன் மீட் பண்ணலாம் சொன்னியே “
அவன் சொன்னதில் பார்ட்டியில் பார்த்தது மட்டுமே, மற்ற அனைத்தும் பொய், வர்மாவின் கண்கள் கோவத்தில் சிவந்தது.
அவனிடம் போனில் பேசி இருக்கிறாள், இங்கு வரப்போவதை கூட சொல்லி இருக்கிறாளா, கரை கடைந்த வெள்ளமாக அவள் மேல் பாய தயாராகியவன் இன்னும் என்ன பேசுகிறான் என்று கேட்போம் என்று நினைத்தவன் ” ம்ம் ‘ மட்டுமே மென்மையாய் சொல்ல
“சீக்கிரம் வந்துடு உன்கிட்ட முக்கியான விஷயம் பேசணும், அதுவும் இன்னைக்கே, நீ அங்க வெளிய வந்துட்டு எனக்கு போன் பண்ணு ” சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு அழைப்பத்தில் துண்டிக்க,
அவளை கை வளைவில் நிறுத்தி
அவள் பார்க்கும் போதே அவளின் கைபேசியை சுவற்றில் அடிக்க அது உடைந்து மூலையில் விழுந்தது.
“என்னைப் பார்த்தா எப்டி தெரியுது உனக்கு, அப்பாவியா முகத்தை வச்சு கிட்டு என்கிட்டயே நடிக்கிறியா ” அவன் பேசுவதும் புரியவில்லை, யார் போனில் பேசினார்கள் என்ன சொன்னார்கள், எதுவும் புரியாமல் நிற்பவளிடம்,
“அதான் வந்த வேலை சிறப்பா முடிஞ்சிடுச்சு ல கிளம்பு உனக்காக அங்க வெயிட் பண்றாங்க கிளம்பு போ “
அவனின் காய்ச்சிய ஈயம் சொட்டும் வார்த்தைகளில் தளர்ந்து போனவள் தாங்க முடியா வலியோடு வர்மாவைப் பார்த்தாள்.
அவளின் பார்வையை கண்டும் காணாதது போல் வெளியே செல்ல கையினை நீட்டிட,
உயிர் துடிக்கும் வலி கண்டவள் தளர்ந்த நடையுடன் டெபிளில் இருந்த கோப்பினை எடுத்துக் கொண்டு சென்றாள், கதவினை திறந்து அவன் பார்வையை மீண்டும் சந்தித்தவள் பார்வையில் உயிர்ப்பு இல்லை , அவனும் அதே நிலையில் இருந்தான்.
அவன் இதயத்தின் துடிக்கும் ஓசை அதிகரித்து அவனின் உடல் வெப்பதினை உயர்த்த, படுக்கையில் விழுந்தான் வெறுப்போடு,
பேக்டரி, அலுவலகம் என மாறி மாறி வேலையில் ஈடுபட்டவள் யாரிடமும் வேலையை தவிர்த்து பேசுவதில்லை. விஜய் எத்தனையோ முறை பேச முயற்சித்தும் இவள் பேசவே இல்லை.
வர்மாவோ முன்பு இருந்ததை விட கோவத்திலும், அதிகாரத்திலும் அவன் வார்த்தைகள் சாட்டை அடி போல் இருந்தது. அவனிடம் நெருங்கவே யோசித்தனர். கவர்ன்ட்மென்ட் காண்ட்ராக்ட் வேலை அதி வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
குறிப்பிட்ட நாளுக்கு முன்னரே முடித்திட ஆரண்யாவும் பெரும் முயற்சியில் இருந்தாள்.
வர்மாவின் வீட்டில் சந்தித்த பிறகு இருவரும் பார்த்துக் கொள்ளவே இல்லை. வர்மா அலுவலகம் என்றாள் ஆரண்யா பேக்டரி, சில சமயம் ஒரே இடத்தில் இருந்தாலும் ஆரண்யா அவனைப் பார்ப்பதை மிக கவனமாக தவிர்த்து வந்தாள்.வர்மாவும் அவளைப் பார்க்கவே இல்லை.
காண்ட்ராக்ட் வேலை குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாக முடிந்து விட, மனதில் திடமான முடிவுடன் வர்மாவின் அறையின் முன்பு நின்றவள், அவன் அனுமதிக்கு காத்திருக்க,
கதவினை திறந்து உள்ளே சென்றவள் கண்டது வர்மாவுடன், நிதிஷா நெருக்கமாக இருப்பது தான்…
என்ன நடக்கும் அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்….
